Monday, January 17, 2011

தேசியத் தலைவர் அம்பேத்கர்

(தலித் முரசு டிசம்பர் 2010 இதழில் எழுதிய கட்டுரை)


ம்பேத்கர் யார் என்று சமூக அரசியல் பிரச்சனைகளில் நாட்டமில்லாத மாணவர்களிடமோ இளைய சமூகத்தினரிடமோ அல்லது பெரியவர்களிடமே கூட கேட்டால் வரும் பதில் என்னவாக இருக்கும்? அம்பேத்கர் நமது அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கியவர் என்பதைத் தாண்டி எதுவும் நமது வரலாற்றுப் பாடங்களில் கற்றுத்தரப்படவில்லை. அதையும் மீறிப் போனால் சட்ட அமைச்சராக இருந்தவர் என்பதுதான் வரலாற்றுப்பாடங்கள் கற்றுக்கொடுத்தவை.

அம்பேத்கர் என்கிற மாமனிதரின் மேன்மை, போராட்டமாகவே கழிந்த அவரது வாழ்க்கை, பெண்களின் முன்னேற்றத்தில் அவருடைய பங்கு, தீண்டத்தகாத மக்களின் அரசியல் உரிமைகளையும், சமூக அந்தஸ்தையும் நிலைநாட்ட தனது வாழ்நாளை ஒப்படைத்த அவருடைய அர்ப்பணிப்பு, ஆதிக்க சாதிகளின் அடிவேரை அசைத்துப் பார்த்த அவருடைய புரட்சிகர போராளித்தன்மை இவற்றையெல்லாம் முன்னிலைப்படுத்தாமல் அம்பேத்கரை அரசு என்கிற அதிகார வர்க்கத்திற்கும் அவருக்குமான தொடர்பை மட்டுமே முன்னிலைப்படுத்தி அவரது மற்றைய பணிகளை இருட்டடிப்பு செய்த தேசத்தில் வாழ்கிறோம் நாம்.

அம்பேத்கரின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டபோது முதன்முதலில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அம்பேத்கர் குறித்த பேச்சுப்போட்டிகளும் கட்டுரைப்போட்டிகளும் நடத்தப்பட்டன. அப்படியொரு கட்டுரைப்போட்டியில் கலந்து கொள்ள பள்ளிச் சிறுமியான நான் அம்பேத்கர் குறித்து நூல்கள் தேடியபோது அவரது வாழ்க்கை வரலாறை முதன்முறையாக அறிய நேர்ந்து அதிர்ந்து போனேன். இவையெல்லாம் என்னுடைய வரலாற்றுப்பாடத்திலோ வேறெதிலுமோ சொல்லப்படவில்லை. ஆனால் காந்தி தனது தாய்க்கு செய்து கொடுத்த வரலாற்றுக்கு எவ்விதத்திலும் சற்றும் தொடர்பில்லாத தனிநபர்விஷயமான மூன்று சத்தியங்களைக் கூட நான் பாடத்தில் படித்திருக்கிறேன். அம்பேத்கர் திட்டமிட்டு பாடத்திட்டம் உருவாக்கியவர்களால் மறைக்கப்பட்டிருக்கிறார் என்பதையெல்லாம் மிகத் தாமதமாகவே உணர்ந்துகொள்ள முடிந்தது.

பெண்களுக்கான சொத்துரிமை, விவாகரத்து, மறுமணம் போன்றவற்றைப் பற்றி அன்றைக்கு மிகத் தீவிரமான கருத்துகளைக் கொண்ட இந்து சட்ட மசோதாவை நிறைவேற்ற அம்பேத்கர் போராடினார். ஆனால் பார்ப்பன – பனியா கூட்டத்தின் சதியால் அவரால் அம்மசோதாவை நிறைவேற்ற இயலாத போது, மனம் வெறுத்து தனது அமைச்சர் பதவியை விட்டு விலகினார். இன்றைக்கும் பார்ப்பனப் பெண்கள் உட்ப்ட அனைத்துப் பெண்களுக்குமான உரிமைகளுக்கு அன்றே குரல் கொடுத்தவர் அம்பேத்கர். எனக்கு தேசமொன்று ஒன்று இல்லைஎன்று பிரகடனப்படுத்திய அம்பேத்கர் எல்லா ஏற்றத்தாழ்வுகளோடு இருந்தாலும் கூட இச்சமூகத்தை மிகவும் நேசித்தார்.

இந்தியத் துணைக்கண்டத்திற்கான  அரசமைப்புச் சட்டத்தினை உருவாக்க அவர் செலவழித்த காலமும் உழைப்பும் அளப்பரியவை. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க ஏற்படுத்தப்பட்ட குழுவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தினால் இப்பணியில் ஈடுபட இயலாத சூழலிருக்க, அம்பேத்கர் ஒற்றை மனிதராய் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியது இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற வரலாறு. .ஆக நாடு முழுமைக்கும் தனது அறிவாலும் ஆற்றலாலும் நிர்வாகத்திறனை வளர்க்கும் சட்டதிட்டங்களை உருவாக்கிய ஒரு தேசிய தலைவரை இன்று தலித் மக்களின் தலைவராக மட்டும் பார்க்கும் போக்கு நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் தலைகுனிவு.

தன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பன – பனியாக்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு தங்கள் செயல்பாடுகளை வடிவமைத்துக்கொண்ட காந்தி போன்றவர்கள் தேசம் முழுமைக்குமான தலைவர்களாகவும், அம்பேத்கர் தலித் மக்களுக்கு மட்டுமேயான தலைவராகவும் சுருக்கப்பட்டிருக்கிறார். அவர் அனைத்து மக்களுக்குமான தலைவர் என்பதை உரக்கச் சொல்ல வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. திட்டமிட்ட சதியின் மூலம் வட்டத்துக்குள் அடைபட்ட அம்பேத்கரின் பிம்பத்தை விடுவிக்க எடுக்கப்பட வேண்டிய பலகட்ட முயற்சிகளில் ஒரு பகுதியாகவே அம்பேத்கர்திரைப்படத்தை பார்க்க வேண்டும்.



இத்திரைப்படத்தை தமிழ்நாடு முழுதும் கொண்டுசெல்வதற்கான முயற்சிகள் செய்யப்பட வேண்டும். ‘காந்திதிரைப்படம் வெளியானபோது ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் அத்திரைப்படத்தை மாணவர்களுக்கு திரையரங்குகளுக்கு அழைத்துச் சென்று காண்பித்தார்கள். அப்படியெல்லாம் ‘அம்பேத்கர்திரைப்படத்திற்கு நடந்ததாகத் தெரியவில்லை. இத்திரைப்படத்தை எடுத்திருக்கும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் (NFDC) இப்படத்தை குறுந்தகடாகவோ டி.வி.டி.யாகவோ விரைவில் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். அதனை அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அளித்து மாணவர்கள் திரைப்படத்தைப் பார்க்க வழிவகை செய்யப்படவேண்டும். இதற்கு தமிழக அரசு ஆவன செய்யவேண்டும். நேரம் ஒதுக்கி பல்வேறு திரைப்படங்களையும், திரைப்பட விழாக்களையும் கண்டுகளிக்க்கும் தமிழக முதல்வர் இதுவரை அம்பேத்கர் படம் தமிழில் வந்த பின்னர் படத்தைப் பார்த்ததாகத் தெரியவில்லை.

அம்பேத்கர் குறித்து பெரிதும் அறியாதவர்களுக்கு அற்புதமான தகவல் களஞ்சியமாக வந்திருக்கிறது அம்பேத்கர் திரைப்படம். இதனை தமிழில் கொண்டுவருவதற்குத்தான் எத்தனை தடைகள்? தமிழ்நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி மாவட்டங்களில் படம் திரையிடப்படவில்லை என்று செய்தி வந்துள்ளது. தேனி மாவட்டத்தில் திரையரங்க உரிமையாளர்கள் படத்தைத் திரையிட்டால் பிரச்சனை வர வாய்ப்புண்டு என்று பயப்படுவதாக தகவல்கள் வருகின்றன. தொண்ணூறுகளில் நடந்த தென் மாவட்ட சாதிக்கலவரங்களின் தலைநகரமாக விளங்கியது தேனி என்பதை நாம் மறந்து விட இயலாது. இங்கே அம்பேத்கர் திரைப்படத்தை திரையிட இயலவில்லை என்பது ஒரு சமூக அவலம்.

இந்த ஆதஙகங்களெல்லாம் ஒருபுறமிருந்தாலும், சில மாவட்டங்களில் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் பேசும் அம்பேத்கரைப் பார்க்கவே மகிழ்ச்சியாகவே இருக்கிறது. பத்தாண்டுகள் காத்துக்கிடந்த பின்னல்லவா அம்பேத்கர் நம் முன் தோன்றி திரையில் தமிழ் பேசுகிறார்? மொழியாக்கம் செய்ததில் சில இடங்களில் சற்றே நெருடுகிறது. முதல் பத்து பதினைந்து நிமிடங்களுக்கு திரைப்படத்திற்குள் பயணிப்பதில் இதனால் சிக்கல் ஏற்படுகிறது. தூய தமிழில் அம்பேத்கரும் மற்றவர்களும் உரையாடுவது பொருத்தமின்றி உள்ளது.

வாழ்நாள் முழுதும் மக்களுக்காய் பேசியும் எழுதியும் உழைத்த அம்பேத்கரின் வாழ்க்கையை படமாக்கும்போது இயல்பாகவே அவர் மக்களிடையேயும் மேடையிலும் பேசுவதுபோன்ற காட்சியமைப்புகள் சில நேரங்களில் நீளமானதாகத் தோன்றுகின்றன. இன்னும் வசனங்களைக் குறைத்து காட்சிகளைப் பேசவைத்திருந்தால் இது ஒரு முழுமையான கலைப்படைப்பாக மாறியிருக்கும். ஆனால் இரண்டாம் பாதியில் காந்தி வந்தவுடன் காந்திக்கும் அம்பேத்கருக்குமான உரையாடல்களும், காட்சியமைப்புகளும் மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கின்றன. மேற்சொன்ன மிகச் சிறிய விமர்சனங்களெல்லாம் படம் பார்த்து முடிந்து வெளியே வருகையில் மனதில் நிற்காமல் அம்பேத்கர் என்கிற மிகப்பெரிய ஆளுமை கம்பீரமாக மனதில் மம்முட்டியின் வடிவில் வந்து குடியமர்ந்து நம் நினைவுகளை அலைக்கழிக்கிறார். அம்பேத்கர் மறு உருவெடுத்து வந்தது போல மம்முட்டிக்கு அத்தனை கச்சிதமாகப் பொருந்துகிறது வேடம்.

தன்னுடைய தகுதிகளையெல்லாம் சொல்லிவிட்டு என்னிடம் பாடம் கற்க விரும்பாதவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறலாம்என்று கம்பீரமாகச் சொல்லும்போதும், கூட பணியாற்றும் பேராசிரியர்கள் தான் குடிக்கும் தண்ணீரை குடிக்கமாட்டேனென்று சொல்லும்போது “உங்களுக்குத்தான் தீட்டுப்பட்ட நீரை புனிதமாக்கும் மந்திரம் தெரியுமே திரிவேதிஎன்று தீர்க்கமாகப் பார்த்துக்கொண்டே மந்திரத்தை உச்சரிக்கும்போதும், மனைவியிடம் பரிவு காட்டும்போதும், எப்போதும் கேலி இழையோடும் காந்தியுடனான உரையாடலிலும், வீறுகொண்டெழும் வேங்கையாக சீறும்போதும், “சங்கராச்சாரியின் இடத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவரை அமர்த்தி அவர் கால்களில் பார்ப்பனர்கள் விழுவார்களா?என்கிற கேள்வி கேட்கும்போதும் மம்முட்டி அம்பேத்கராகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்.




வட்டமேசை மாநாட்டில் கடுங்கோபமாக தன் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்துவிட்டு அணிந்திருக்கும் கோட்டை ஒரு முறை இழுக்கும் அந்த உடல்மொழி ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அடங்கிக்கிடந்த மக்களின் ஆவேசத்தை வெளிப்படுத்துகிறது..

டாக்டர் அம்பேத்கராக நடிக்க மம்முட்டியை தேர்வு செய்தது மிக பொருத்தமானது என்பதை நூற்றுக்கணக்கான தலித் மக்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு மம்முட்டி பேசும் போது, அவர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட போதும் அவர்களிடம் கண்ணீரை வர வழைத்த போதும் உணர்ந்தோம். இதுவே திறமைமிக்க நடிகருக்கு மகத்தான வெற்றியாக அமைந்ததுஎன்கிறார் இயக்குநர் ஜாஃபர் பட்டேல்

இந்தியா பல தளங்களைக் கொண்ட ஒரு கட்டிடம். அதில் பல தளங்கள் உண்டு. ஆனால் மாடிப்படிகள் இல்லை. ஒருவன் எந்த்த் தளத்தில் பிறக்கிறானோ அந்த்த் தளத்திலேதான் மடிந்துபோகிறான்என்பது போன்ற அம்பேத்கரின் கூரிய சிந்தனைகள் படத்தில் வசனங்களாக இடம்பெறுகின்றன. எத்தனையோ நூல்களை வாசித்து திரட்டிக்கொள்ள வேண்டிய அறிவையும் தகவல்களையும் மூன்று மணி நேரம் இத்திரைப்படத்தைப் பார்க்க செலவழிப்பதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

காந்தி எரிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு
“காந்தி துறவியென்று யார் சொன்னது. அவர் சமயத்துக்குத் தகுந்தமாதிரி மாறிக்கொள்ளும் சந்தர்ப்பவாத அரசியல்வாதி
“காந்தியின் உயிருக்காக என் மக்களுக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது
“பார்ப்பனர்கள் எவ்வளவு தந்திரமானவர்கள் என்பது உங்கள் பேச்சின் மூலம் தெரிகிறது
“மகாத்மாக்களின் மனதில் என்ன இருக்கிறது என்று சாதாரண மனிதர்களாகிய நமக்கெப்படித் தெரியும்?
என்பன போன்ற விமர்சனங்களையடக்கிய துணிச்சலான வசன்ங்களின்போது திரையரங்கில் எழும் ஆரவாரம் அடங்க நேரமாகிறது.

சாகு மகாராஜாவாக நடித்திருப்பவரின் முகத்தில் அம்பேத்கர் குறித்துப் பேசுகையில் தான் எத்தனை பெருமிதம்? அந்தப் பெருமிதம் நம்மையும் தொற்றிக்கொள்ளும் விதத்தில் அதனை வெளிப்படுத்துகிறார். அம்பேத்கரின் வாழ்க்கைத்துணைவியாய் வரும் சோனாலி குல்கர்னி தன் நுணுக்கமான முகபாவங்களால் தன் பாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.

அம்பேத்கர் உணவு உண்ணாமல் பாத்திரத்தை திருப்பி அனுப்பியதும் அதனை எடுத்துக்கொண்டு அவரைத் தேடிவருகிறார் அவரது மனைவி; அதே நேரம் “இந்நேரம் காந்தி உண்ணாவிரதம் தொடங்கியிருப்பார்என்ற வசனம் மிக நுணுக்கமான பொருளை உள்ளடக்கியது. அதுபோலவே காந்தியின் சிறிய அளவிலான உருவச்சிலையை அம்பேதகர் தன் கைகளால் உருட்டுவது போன்ற ஒரு சில நொடிகள் மட்டுமே வரும் அந்த குறியீட்டுக் காட்சியும் மிக முக்கியமானவை. ஆயிரம் பக்க வசனங்கள் சொல்லாத செய்தியை அந்த ஒரு காட்சி சொல்கிறது. அது போலவே உண்ணாவிரதப் படுக்கையில் அம்பேத்கரிடம் காந்தி “இனி என் வாழ்நாள் முழுவதையும் தீண்டாமையை ஒழிக்கவே பாடுபடுவேன்என்று கூறிவிட்டு காந்தி இருமுவதாய்க் காண்பிக்கும் காட்சி. இதுபோன்ற காட்சிகளை முற்பாதியிலும் அமைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

“பிறப்பால் மட்டுமல்ல கொண்ட கொள்கையாலும் விருப்பத்தாலும் கூட நானொரு இந்துதான்என்று காந்தி அம்பேத்கரிடம் தெளிவாகச் சொல்கிறார். வருணாசிரமத்தை ஆதரிக்கும் காந்தியை திரைப்படம் வெளிச்சம் போட்டுக்காண்பிக்கிறது. காந்தி குறித்த கதையாடல்களை அதிகம் கேட்டு வளர்ந்த ஒரு சாதாரண இந்தியக் குடிமகனுக்கு காந்தியின் மறுபக்கத்தை மிக நேர்மையுடனும் தெளிவாகவும் வரலாற்றின் துணைகொண்டு காட்டுகிறார் இயக்குநர் ஜாபர் பட்டேல். இப்படத்தின் மூலம் காந்தியின் பிம்பம் உடைபடுகின்றது. அதைக் காணச் சகியாமல் ஜெயமோகன்களும் சாவித்திரி கண்ணன்களும் காந்தியின் அருமையென்ன பெருமையென்ன என்று கூவிக்கொண்டிருக்கிறார்கள்..



படம் முழுவதிலும் பிராமணர் என்கிற சொல்லே பயன்படுத்தப்படுகின்றது. தமிழுக்கு மாற்றுகையில் பார்ப்பனர் என்கிற சொல்லை பயன்படுத்தியிருந்தால் அதில் கிடைக்கும் அடர்த்தி வேறுமாதிரியானதாக இருந்திருக்கும். படம் முழுவதிலும் அம்பேத்கரை பொது மக்கள் பல தருணங்களில் தேசத்துரோகிஎன்றும் “அம்பேத்கர் ஒழிகஎன்றும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அன்றைக்கு இருந்த நிலையில் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் ஒன்றுதான் முதல் குறிக்கோள் என்று மக்கள் இருந்த நிலையில் தாழ்த்தப்பட்ட தலித் மக்களின் விடுதலையை மனதில் வைத்து போராடிய ஒப்பற்ற தலைவரை சமூகம் எப்படிப் பார்த்தது அன்று; எத்தனை எதிர்ப்புகளையும் காழ்ப்புணர்ச்சிகளையும்  தாண்டி அவர் அந்த நம் அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கும் நிலையை அடைந்திருப்பார் என்பதை இக்காட்சிகள் பார்வையாளருக்கு நன்றாக உணர்த்துகின்றன.

அதிகாரமும் பார்ப்பனியமும் என்றென்றைக்கும் கூட்டாளிகளாகவே இருப்பவைதான். அது அடிமை பிரிட்டிஷ் இந்தியாவானாலும், சுதந்திர இந்தியாவானாலும் சரி.  தேரிழுக்கும் காட்சியில் தலித் மக்களை தேரிழுக்க விடாமல், பூணூல் அணிந்த பார்ப்பனர்களும் காவல்துறையும் இணைந்து அவர்க்ளை அடித்து நொறுக்கும் காட்சி இதனை மிகச்சரியாய் சித்தரிக்கிறது.

அம்பேத்கர் தனது வாழ்வின் பல்வேறு காலகட்டத்தில் விட்டுக்கொடுத்தும் அனுசரித்தும் போக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததையும் திரைப்படம் நேர்மையோடு பதிவு செய்கிறது. தனது ஆய்வுக்கட்டுரையை திருத்தச் சொல்லும் பேராசிரியரைப் பற்றி தோழியிடம் இரைந்து கோபமாகப் பேசிய அடுத்த நொடியே “என்ன செய்யப்போகிறீர்கள்?என்கிற தோழியின் கேள்விக்கு “திருத்துவேன்என்று வெறுப்புடன் கூறும் இடம் ஒரு எடுத்துக்காட்டு.

காந்தியாக நடித்த மோகன்கோகலேவிற்கும், காந்தியின் பாத்திரமுணர்ந்து மிகப் பொருத்தமாக காந்திக்கு தமிழில் குரல் கொடுத்தவருக்கும் முக்கியமாய் பாராட்டுதல்களை தெரிவிக்கவேண்டும். எந்த இடத்திலும் உறுத்தாத அளவான ஒளியமைப்பைக் கொண்ட ஒரு வரலாற்றுப் படத்துக்கேயுரிய பொருத்தமான அஷோக் மேத்தாவின் ஒளிப்பதிவு, உணர்வுகளுக்குத் தகுந்த ஆனந்த் மோடக்கின் இசை, காலகட்டத்தை கண்முன் நிறுத்தும் விருது பெற்ற நிதின் சந்திரகாந்த் தேசாயின் கலை இயக்கம என அனைத்தும் மிகச்சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது.

சவுதார் குளத்தில் இறங்குவதற்காக அம்பேத்கர் படகில் வந்திறங்கும் காட்சியின் பின்னணியில் வரும் பாடலும், அம்பேத்கர் தபேலா வாசிக்க, அவர் வாழும் பகுதியிலிருக்கும் மக்களிடையே பாடப்படும் பாடலும் மொழி புரியாவிட்டாலும் கூட மனதைக் கவர்கின்றன. பாடலில் பொருள் தேடச் சொல்கின்றன.

அம்பேத்கர் வாழ்நாள் முழுதும் நெடுங்காலம் பல மதங்களை அலசி ஆராய்ந்து அவற்றிலிருந்து தான் பவுத்தத்தை தனது நெறியாகத் தேர்ந்தெடுக்கிறார். இதற்கு அவர் எடுத்துக்கொண்ட காலமும் முயற்சிகளும், மிக அழகாக படத்தில் கூறப்பட்டுள்ளது.  பொதுவாக ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்கும்போது அவருடைய இறப்புக்காட்சியே உச்சகட்ட காட்சியாய அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் அம்பேத்கர் திரைப்படத்தில் லட்சோபலட்சம் மக்களுடன் அவர் பவுத்தத்தைத் தழுவும் காட்சியே இறுதிக்காட்சியாக்கப்பட்டு, அம்பேத்கரின் மறைவை எழுத்துக்களில் சொல்லி முடிப்பது மிகச் சரியான வித்தியாசமான அணுகுமுறை. காலத்தின் தேவையும் கூட.

காலமெல்லாம் சாதி ஒழிப்புக்காக அரும்பாடுபட்ட, இந்துவாகப் பிறந்துவிட்டேன். ஆனால் இந்துவாக சாகமாட்டேன் என்று சூளுரைத்த அம்பேத்கர் இந்து மதத்தைத் துற்ந்து பவுத்தம் தழுவும் சிலிர்க்க வைக்கும் காட்சியோடு நிறைவடைகிற்து படம்.

அம்பேத்கர் – தன் வாழ்நாளை சமூகத்திற்கென அர்ப்பணித்த பெருந்தலைவனின் வாழ்க்கை காவியம் இதுவரை அறியப்பட்ட வரலாற்று நூலை புரட்டுகையில் ஒன்றோடொன்று ஒட்டிகொண்டு நின்ற அல்லது ஒட்டவைக்கப்பட்ட பல தாள்களை பிரித்து, அறியப்படாத அந்தப் பக்கங்களை  மக்களுக்கு எளிதில் புரியும் வடிவத்தில் அளித்த மாயக்கரங்களுக்கு சொந்தக்காரர் இயக்குநர் ஜாஃபர் பட்டேல். அம்பேத்கரின் எழுத்துக்களூடே, அவர் வாழ்க்கை குறித்த குறிப்புகளூடே பயணப்பட்டு எவற்றையெல்லாம் நமக்கு காட்டவேண்டுமோ அவற்றையெல்லாம் நம்மை கைபிடித்து அழைத்துச் சென்று காட்டிய ஜாஃபர் பட்டேல் மற்றும் அவரது குழுவினருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.


Saturday, January 08, 2011

இரவைக் கொண்டாடுவோம்

(புத்தகச்சந்தையை ஒட்டி 7.1.2011 அன்று மாலை வெளியிடப்பட்ட “இரவு” நூலிற்காக எழுதப்பட்ட கட்டுரை இது. கவிஞர் மதுமிதா தொகுத்த இந்நூலில் 36 எழுத்தாளர்கள் தங்களுடைய இரவு குறித்த கருத்துகள், மனப்பதிவுகள், அனுபவங்கள், கதை, கவிதை ஆகியவற்றை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்கள். சந்தியா பதிப்பம் இதனை வெளியிட்டுள்ளது)



ரவு 10 மணியானால் என் தந்தை இப்படி சொல்வார்

“என் சாம்ராஜ்ய நேரம் தொடங்கிசிடுச்சு

உண்மைதான். எனக்கும் அப்படியே. ஊரெல்லாம் உறங்கத் தயாராய் இருக்கும் பொழுதில் நாம் மட்டும் ஏதோ ஒரு வேலைக்காக தயாராவது ஒரு வித கர்வத்தையளிக்கும். படிக்கிற காலத்தில் நான் படிக்க அமருகிற நேரம் இரவு 10 மணியாய் இருக்கும். விடிய விடிய என்னால் அதிகாலை 4 மணி வரை கூட படிக்க முடியும். ஆனால் 10 மணிக்குத் தூங்கி காலை 4 மணிக்கு எழ மட்டும் என்னால் முடியாது.

ஊரே விழிக்கும் வேளையில் தூங்குகிறாய். என்று அதிகாலையில் விழித்து விடும் என்னுடைய நண்பர்கள் கேட்பார்கள். இந்த தலைகீழ்த்தன்மை எனக்குப் பிடித்திருக்கிறது. இரவு எப்போதும் என்னை தாலாட்டியதில்லை. மாறாக உற்சாகம் கொள்ள வைக்கிறது.

இசை கேட்கும் இரவு, இலக்கியம் வாசிக்கும் இரவு, நண்பர்களுடன் பொழுதுபோக்கும் இரவு, மேடையில் கழியும் இரவு, தனிமை கனத்திருக்கும் இரவு, உற்சாகம் பொங்கும் இரவு, எழுதத் தூண்டும் இரவு என்று பல இரவுகளை கடந்து வந்திருக்கிறேன். ஆனால் பொதுவாகவே எழுத்துக்களில் இரவு என்பதை இருளாகவும், இருளை கருப்பாகவும், கருப்பை துக்கத்தின் அல்லது ஒரு நெகடிவ் தன்மைக்கான குறியீடாகவும் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.  பகல் ஒளி மிகுந்தது. வெளிச்சமானது; அதில் தவறுகள் நிகழ வாய்ப்பில்லை; எல்லோருடைய கண்களும் பார்க்கும் வண்ணம் பகலில் தவறுகள் நிகழாது என்கிற மாயத்தோற்றம் உண்டு. உண்மையில் தவறு செய்ய நினைப்பவருக்கு பகலென்ன இரவென்ன? சொல்லப்போனால் இரவுகளில் வீட்டில் காத்திருக்கும் துணையோ, உறவோ ஏதோ ஒன்றிற்காக வீட்டிற்குத் திரும்பும் நெருக்கடி நிறைய பேருக்குண்டு. ஆகவே தவறுகள் அல்லது தவறுகள் என்று கருதப்படுபவையெல்லாம்  அதிகமாக பகலில் நிகழவே வாய்ப்பு அதிகம்.

மனிதன் தூங்கும்போதுதான் தப்பு செய்யாமலிருக்கிறான் என்று யாரோ சொன்ன பொன்மொழி உண்டு. ஆகவே ஊர் உறங்கும் இரவில் நிகழும் தவறுகளை விட பகலில் நிகழும் தவறுகள் அதிகமாக இருக்கக் கூடும். இரவு என்பதை துக்கத்தின் குறியீடாகவும், தவறுகளின் குறியீடாகவும் திரைப்படங்களிலும், கதைகளிலும், கவிதைகளிலும் காண்கிறோம். என்னைப் பொறுத்தவரை இரவு கொண்டாட்டத்திற்குரியது. இரவை நான் கொண்டாடுகிறேன்.

ஊர் அடங்கிய பின்னர் எங்கிருந்தோ காற்றில் மிதந்து வரும் சன்னமான இசை ஆளை மயக்கும். என் சிறுவயதில் பள்ளிப் பிராயத்தில் இசையில்லாத இரவுகளே இல்லை எனலாம். ஒரு வானொலிப்பெட்டி வீட்டில் இருந்தது. நான் படித்தாலும், எழுதினாலும், அந்த வானொலியில் திரைப்படப்பாடல் ஒலித்துகொண்டேயிருக்கும். பகல் பூராவும் துள்ளல் இசைப்பாடல்களை ஒலிபரப்பினாலும், இரவுகளில் மட்டும் வானொலியில் எனக்கு மிகவும் விருப்பமான மெலடி பாடல்கள் ஒலிபரப்பாகும்போது அதை விட மனசிருக்காது. வானொலியைக் கேட்டுக்கொண்டே எல்லாவற்றையும் செய்வேன். ரேடியோ கேட்டுக்கிட்டே படிக்கிறியே? எப்படி மனசில் பதியும்என்று அம்மா திட்டிக்கொண்டே இருப்பது இன்னமும் காதில் ரீங்காரமிடுகிறது. ஆனாலும் விடமாட்டேன். இரவுகளிலும் இது தொடரும்.  அதிகாலையில் எழுந்து படித்தால் நன்றாக மனதில் பதியும் என்று பிறர் சொன்னதைக் கேட்டு நான் சிலநாட்கள் அதையும் முயன்றிருக்கிறேன். ஆனால் அதிகாலை கண்விழிப்பு எனக்கு தூக்கத்தையே கொடுத்தது. என் உடல் அப்படி பழகியிருந்தது எனக்கு மிகப்பெரும் பிரச்சனையிருந்த்து. அதனால் வழக்கம் போலவே இரவுகளையே தேர்ந்தெடுத்தேன் படிப்பதற்கு. உறங்கச் செல்லும் வேளையில் இளையராஜாவின் இசை எனக்கு கைகொடுத்திருக்கின்றது.

என் நண்பர்கள் என்னை ‘ராப்பிசாசுஎன்றும் ‘ராக்கோழிஎன்றும் செல்லமாய் அழைப்பார்கள். இரவில் படிக்கும் பழக்கமே பின்னாளில் என் பணிகளையும் இரவுகளில் செய்ய வைத்தது. பணிநிமித்தம் முக்கியமான கட்டுரை எழுதவேண்டுமென்றால் அவ்வபோது அதை இரவுக்குத் தள்ளிப்போட்டு எழுதுவேன். என்னுடைய பயணங்கள் அனைத்துமே இரவில் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன். இரவுப்பயணம் அலாதியானது. அதிலும் ரயிலில் இரவுப் பயணம் அற்புதம்.

ஒரு நொடி கூட உறங்காமல் விழித்திருந்த இரவுகள் நிறைய உண்டு. அவை பெரும்பாலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய கலை இரவுகள் தான். “சிவராத்திரிக்கு கண்விழிக்கும் நீங்கள் ஒரே ஒரு நாள் இந்த கலை இரவுக்காக கண்விழியுங்கள்என்று பிரசாரம் நடக்கும்.  நாகப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கூட கலை இரவுகள் களைகட்டும். நான் கலை இரவுகளில் இயக்கப் பாடல்களைப் பாடுவேன். விடிய விடிய கண்விழித்து கலை நிகழ்வுகளைக் காண வரும் மக்கள் கூட்டத்தைப் பார்க்க வியப்பாகவே இருக்கும். அதிலும் நாகப்பட்டினம் நகரில் நடக்கும் கலை இரவு ஊர்த்திருவிழா போல. சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தெல்லாம் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் டிராக்டர்களிலும், வேன்களிலும் மாலை 6 மணியிலிருந்தே வந்து அவுரித்திடலை நிரப்பி விடுவார்கள். வங்கக்கடலே திடலில் வந்து சங்கமமானதைப் போல பார்க்க அத்தனை ஆனந்தமாயிருக்கும். அத்தனை கூட்டத்திற்கு மத்தியில் இந்த கலை இரவில் பாடுவது அதிலும் மக்கள் பாடல்களை அவர்களுக்காக பாடுவது என்பது மிகுந்த மனநிறைவையும் உற்சாகத்தையும் கொடுக்கும். நான் முதலில் ஒரு பார்வையாளராகத்தான் கலை இரவிற்குச் செல்லத் தொடங்கினேன்.  என்னை மாற்றிய பெருமையும் இந்த கலை இரவிற்கு உண்டு.

எத்தனையோ கற்றுக்கொண்டேன் அந்த கலை இரவுகளில். வாழ்க்கையை, மக்கள் பிரச்சனைகளை, நம்மை மீறிய ஒரு உலகமிருப்பதை எனக்கு என் பள்ளிப்பருவத்திலேயே அடையாளம் காட்டியது கலை இரவுகள் தான். கலை இரவுகளை நான் அதிகம் நேசிக்கிறேன். இந்த இருபதாண்டுகளில் கலை இரவு என்னும் வடிவம் பழகிப்போய் அது பழையதாகி இருக்கலாம். மக்களிடம் பேச ஒரு புது வடிவத்தை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயமிருக்கலாம். ஆனால் என் வயதையொத்தவர்களிடம் கலை இரவுகள் ஏற்படுத்திய தாக்கத்தை நேரடியாக நான் கண்டிருக்கிறேன். கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், தேவராட்டம் என்று எல்லாவிதமான ஆட்டக்கலைகளையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தது கலை இரவு. மண்ணின் கலைகளை ரசிக்கக் கற்றுக்கொடுத்தது. மக்கள் பாடல்களை கரிசல் குயில் கிருஷ்ணசாமி அண்ணனின் குரலில் இரவெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். பாரதி கிருஷ்ணகுமார் போன்ற எத்தனையோ சிறந்த உரை வீச்சாளர்களின் பேச்சுக்களைக் கேட்டு என் பள்ளிப்பருவத்தில் கண்ணீர் விட்டிருக்கிறேன். இந்த இரவுகள் தான் என்னை ஆளாக்கின. சமூகத்தை நேசிக்க வைத்தன. என் சுயநலத்தைப் பொசுக்கின. என் வாசிப்பை அதிகப்படுத்தின. அரசியலில் ஆர்வம் கொள்ள வைத்தன. மக்களுக்காய் யோசிக்க, ஒரு சொட்டாவது விழிநீரை வெளியேற்ற வைத்தன, என் கலையை வளர்த்தன. நானும் ஓரிரவில் இரவு 11 மணி வாக்கில் முதன் முதலில் நாகை அருகே திருக்குவளையில் நடந்த கலைஇரவில் மேடையேறிப் பாடினேன். அன்றைக்குக் கிடைத்த மகிழ்ச்சி என் வாழ்நாளில் இனி கிட்டுமா என்று தெரியவில்லை. அன்றையிலிருந்து நிறைய மேடைகள், எத்தனையோ நகரங்களில் கிராமங்களில் என்று இயக்கப்பாடல்களைப் பாடியாகி விட்ட்து.

இன்று ஒரு பத்திரிகையாளராய் நானிருக்கிறேன். எழுதுகையில் இரவுகளில் எழுதினாலும் அது என்றைக்கு யாரை எப்போது எப்படி சென்றடைகிறது என்பது நமக்குத் தெரியாது. இதைவிடவும் எனக்கு ஒரு கலைஞராய் கலை இரவில் மக்களிடையே பாடுவது அதிக மனநிறைவையும், மகிழ்வையும் அளித்தது. இந்த இரவு வீணாகவில்லை. உருப்படியாய் எதோ செய்கிறோம் என்கிற நிறைவை அளித்தது.

ஒவ்வொரு கலை இரவை முடித்துவிட்டு வந்தபின்னும், பல இரவுகள் நானும் என் பெற்றோரும் அதுகுறித்து சிலாகித்துப் பேசியவண்ணம் இருப்பதெல்லாம் இப்போதும் மனக்கண்ணில் நிழலாடுகின்றன. என் தந்தை தமுஎகசவின் மாவட்டச் செயலாளராய் இருந்தார். அதனால் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வார். அவரும் ஒரு ராக்கோழி என்பதால் எல்லா வேலைகளையும் இரவுகளில் தான் செய்வார். அம்மா “அப்பாவுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்குஎன்று என்னை கேலி பேசுவார்.

என் படிப்பை முடித்துவிட்டு பணிநிமித்தம் நான் செனைக்கு வந்தபோது சென்னை சட்டென்று இரவு 10 மணிக்கெல்லாம் உறங்கும் நகரமாகிவிடுவதைப் பார்க்க வியப்பாய் இருந்தது. எங்கள் ஊரில் திரைப்படத்திற்குச் செல்வதென்றால் பெரும்பாலும் இரண்டாவது காட்சிக்குத்தான் செல்வோம் இங்கே 10 மணிக்கு நகரம் உறங்கிவிடுவதைப் பார்க்க ஆச்சர்யமாய் இருந்தது. தூங்கா நகரம் என்ற பெயருக்காகவே மதுரையை மிகவும் பிடிக்கும்.

ஒரு நேரத்தில் என் வேலை போய், வீட்டிற்கு வாடகை கொடுக்க இயலாத சூழலில் வீட்டை காலி செய்து பொருட்களையெல்லாம் நாகையில் உள்ள பெற்றோர் வீட்டில் கொண்டு வைத்துவிட்டு நான் மட்டும் தோழர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கத் தொடங்கினேன். ஒவ்வொரு நாளும் ஒரு வீடு. ஏராளமான நண்பர்களைப் பெற்றிருக்கும் நான் ஓரிடத்தில் தங்க இயலாமல் போகும்போது இன்னொரு தோழியோ தோழனோ கைகொடுத்த நிலைமை இருந்தது. தோழர்கள் ஓவியா, நீலகண்டன், அமுதா, ரேவதி, நீதிராஜன், ஜாஃபர், நா.வே.அருள், அ.குமரேசன், லட்சுமி, கலைமுகில், ராஜன்குறை, மோனிகா, மலர்விழி, மல்லிகா, கல்பனா, பாரதி புத்தகாலயம் சிராஜுதீன், அ.மங்கை போன்ற பலருடைய வீடுகளிலும், தமுஎகசவின் மாநிலக்குழு அலுவலகத்திலும் குறைந்தபட்சம் ஒரு இரவாவது தங்கியிருக்கிறேன்.

மாலை அரை அலுவலகம், அதன்பின்னர் கூட்டங்கள் அல்லது தோழர்களை சந்தித்தல் என்று இரவு வரை தாக்குபிடித்தாலும் இரவு 9 மணிக்கு எங்கு போவது என்ற கேள்வி எழும். யார் அந்த நேரத்தில் ஊரில் அல்லது வீட்டில் இருக்கிறார்கள் என்று கைபேசியில் பேசிவிட்டு அங்கே போய்விடுவது வழக்கம். எனக்கென்று ஒரு டி.வி.எஸ். சாம்ப் இருக்கிறது. அதனால் எத்தனை மணியானாலும் இரவில் எங்கு வேண்டுமானாலும் போய்விடும் வசதி இருந்த்து. “டான் குயிக்ஸாட்டின் குதிரை போன்றது உங்கள் வாகனம். டான் குயிக்ஸாட் தனது குதிரை இரவு எங்கே களைத்து நிற்கிறதோ அங்கே தங்கி விடுவான். அது போல்வே இரவு இறுதியாக உங்கள் வண்டி நிற்கிறதோ அங்கே தங்கி விடுகிறீர்கள்என்று ஒரு முறை கவிஞர் லீனா மணிமேகலை என்னிடம் கூறியதை அவ்வபோது நினைத்துக்கொள்வேன்..

தோழர்கள் நீலகண்டன், அமுதா, மலர்விழி – இவர்களோடுதான் அதிக இரவுகளை கழித்திருக்கிறேன் அந்த காலகட்டத்தில். அப்போது மலர்விழிக்கு சொந்தமான அச்சகம் ஒன்றில் நீண்டநாள் தங்கியிருந்தேன். மறக்க முடியாத இரவுகள் அவை.

நான் நேசிக்கும் இரவுகள் எனக்கு பெரும் சோதனையாய் அமைந்த காலமும் வந்தது. அப்போதுதான் ஈழத்தின் பேரவலமும், நெஞ்சில் நீங்காத காயத்தை உண்டாக்கிய இறுதிப் போரின் நேரம். அந்த செய்திகளும் காட்சிகளும் கண்டு விம்மி வெடிக்கும் அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு அந்த அச்சகத்தில் தான் நான் பல இரவுகளை மலர்விழியோடு கழித்தேன். பிரபாகரனின் உடல் என்ற ஒன்றை தொலைக்காட்சியில் கண்டபோது என் சிறுவயதிலிருந்து நேசித்த ஒரு பிம்பம் இப்போதில்லை என்கிற உண்மையை நம்ப மறுத்தது மனம். இரவுகளில் இணையத்தில் மூழ்கி பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்று குழம்பித் தவித்து ஒவ்வொரு புகைப்படமும் வெளியாக வெளியாக உறைந்து போனேன். புலிகள் மேலிருந்த விமர்சனமெல்லாம் மறந்து போய் பித்து மனநிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன் அந்த சமயத்தில்.

அன்றாடம் இரவுகளில் இரண்டு மூன்று மணி வரை நானும் மலர்விழியும் அமர்ந்து இணையத்தில் ஈழம் குறித்த செய்திகளை வாசிப்பது படங்களை சேகரிப்பது என்பதை வாடிக்கையாக வைத்திருந்தோம். கோடரிகொண்டு பிளக்கப்பட்ட பிரபாகரனின் கபாலமும், எண்ணற்ற மக்கள கொத்து கொத்தாய் மடிந்த அவலமும் உறங்கவிடாமல் என் இரவுகளை இம்சித்தன. நான் இரவுகளில் வேலை செய்பவளாதலால் என்னால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் போனது. இணையத்தில் கிடைக்கப்பெறும் அத்தனை காணொளிகளையும் படங்களையும் பார்த்துப் பார்த்து குழம்பி பித்து நிலையில் இருந்தேன் எனலாம். இரவுகள் எல்லாமே இணையத்தில் வீணாகின. ஒரு கட்டத்தில் இவற்றில் எந்த புகைப்படத்தையோ காணொளியையோ இனி பார்க்கக்கூடாது என்று முடிவு செய்து தவிர்க்கத் தொடங்கினேன். இது என் இரவுகளை மீண்டும் எனதாக்கிக் கொள்ளும் ஒரு யுக்தி. மீளாத் துயரிலிருந்து என்னை நானே மீட்டெடுக்க நிர்பந்தித்துக்கொண்டேன். இன்று வரை ஈழம் என்ற பெயரில் வரும் எந்த காணொளியையும் படத்தையும் பார்ப்பதேயில்லை நான். இந்த முயற்சி ஓரளவிற்கு கைகொடுத்தது. மீண்டும் என் இரவுகள் எனக்குச் சொந்தமாயின. மீண்டும் இரவுகளில் வேலை செய்யத் தொடங்கினேன். அதன்பின் தான் அதிகமாக எழுத்த் தொடங்கினேன் என்று நினைக்கிறேன்.

ஐஸ்ஹவுஸ் மசூதி போகும் வழியில் ராயப்பேட்டையில் இருந்தது நாங்கள் இருந்த அச்சகத்தின் அலுவலகம். ஒரு கட்டிடத்தின் சின்ன சந்திற்குள் நுழைந்து உள்ளே வந்தால் அச்சகம். அந்த சின்ன சந்தில் இரவில் மட்டும் படுக்க வரும் இரண்டு வயதான் பாட்டிகள் இருந்தார்கள். நான் ஒவ்வொரு நாளும் அவர்களைத் தாண்டித்தான் அச்சகத்திற்குள் வருவேன். ஒவ்வொரு முறையும் இருட்டில் அவர்களை மிதித்து விடக்கூடாதே என்று ஜாக்கிரதையாக வருவேன். சிலசமயம் மிதித்துவிடுவதும் உண்டு. அந்த பாட்டிகள் எங்களுக்கு காவல் போலிருந்தார்கள். அவர்களைத் தாண்டித்தான் யாராயிருந்தாலும் உள்ளே வரவேண்டும். ஒரு நாள் விசாரித்தபோது ஒரு பாட்டி சொன்னார் “பகலில் எங்காவது போயிடுவேன். நாலு காசு வேணும்ல சாப்பிட.. நைட்டு எங்கே போறது. தூங்கணுமே. அதான் இந்த சந்துக்கு வந்து படுத்துடுவேன்.என்றது பாட்டி. அவருடைய மகனும் மகளும் இதே ஊரில் இருப்பதாகவும் ஆனால் இவரை கைவிட்டுவிட்டதாகவும் சொன்னபோது வேதனை அதிகமானது. இன்னொரு பாட்டிக்கும் கிட்டத்தட்ட இதே கதைதான். இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருந்தார்கள். இந்த தள்ளாத வயதில் அந்தப் பாட்டிகளின் நடைபாதை வாழ்க்கை துயரமானது.

ஒரு இரவு நான் அலுவலகத்திலிருந்து என் வண்டியில் வந்துகொண்டிருந்தேன். பீட்டர்ஸ் சாலையோர நடைபாதையில் புதிதாய் பளீர் விளக்கொளியில் ஒரு ஷாமியானா பந்தல் போடப்பட்டு கூட்டமாக இருந்தது. சரியாய் கவனிக்காமல் வந்து அச்சகத்தில் புகுந்தேன். திடீரென்று உறைத்தது. இரண்டு நாளைக்கு முன்புதான் நான் வழக்கம்போல இரவு வரும்போது பாட்டி முனகிக்கொண்டிருந்தது. வயிறை வலிக்குதுஎன்றது. மறுநாள் காலையில் பாட்டி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. இரண்டு நாளாயிற்று..அவசரமாய் வெளியே வந்தேன். விளக்கு வெளிச்சத்தை நோக்கி நடந்தேன். நடைபாதையிலேயே ஷாமியானா போடப்பட்டு, பளீர் விளக்கொளியில் பாட்டி சவப்பெட்டிக்குள் கிடந்ததைப் பார்த்தேன். இன்னொரு பாட்டி என்னைக் கணடதும் ஓடி வந்து கண்ணீர் விட்டது. நான் ஒரு வார்த்தையும் பேசாமல் அச்சகத்தில் நுழைந்தேன். நடைபாதையில் வாழ்ந்து நடைபாதையிலேயே மறுநாள்  பாட்டிக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட இருக்கிறது. தாங்க இயலாமல் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினேன். மலர்விழிக்கு கைபேசியில் அழைத்து தகவல் சொல்ல முடியாமல் விம்ம, அவள் உடனே கிளம்பி வந்தாள். அதற்கு முன் நீலகண்டனும், அமுதாவும் வந்து நின்றார்கள். பாட்டியின் உடல் இருக்கும் இட்த்திற்குப் போவோம் என்றார்கள். எனக்கென்னவோ அங்கு போகவேண்டுமென்று தோன்றவில்லை. போகவும் இல்லை. பாட்டியின் சடலம் நடைபாதையில் அன்று இன்னொரு பாட்டி இன்னும் சிலரின் துணையுடனும் இரவு முழுதும் இருந்த்து. அந்த இரவு முழுதும் சவப்பெட்டிக்குள் கிடந்த பாட்டியைப் போலவே நானும் கிடந்தேன் அச்சகத்தினுள்.

நமக்காவது அச்சகம் இருக்கிறது. நண்பர்கள் இருக்கிறார்கள். நடைபாதைவாசிகளுக்கு யாரிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ளும் எனக்கு பாட்டியின் உடலோடு இரவைக் கழித்து இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய இன்னொரு பாட்டியின் உருவம் நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிகிறது.

நட்சத்திரங்கள் பகலில் விழிகளுக்குப் புலப்படுவதில்லை. அவை மனிதர்களுக்குக் காட்சி தர தேவைப்படுவதும் ஒரு இரவுதானே?

இரவைக் கொண்டாடுவோம்!


Saturday, December 18, 2010

வாத்சாயனாரின் காமசூத்திரத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கோயில்களை தரைமட்டமாக்க வேண்டும்


தலித் முரசு - காஞ்சா அய்லய்யா நேர்காணல் - பகுதி IV



நீங்கள் பல தடைகளைக் கடந்து, உலக அளவில் உங்களை நிரூபித்திருக்கிறீர்கள். இளம் ஆய்வாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் முன்மாதிரியாகவும் திகழ்கிறீர்கள். அவர்கள் அறிவுத்தளத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?

இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை என்பது, இன்னமும் உலகத்தால் விளங்கிக் கொள்ளப்படாத, அறியப்படாத ஓர் அறிவுக் களஞ்சியமாகவே இருக்கிறது. இந்திய மக்களின் மனங்களில் உலகத்திற்கான அறிவு கொட்டிக் கிடக்கிறது. நான் கிராமங்களை கூறுகிறேன். அறிவியல், தொழில்நுட்பம், உற்பத்தி, இந்து மத எதிர்ப்பு ஆகியவை நூல்களில் கொண்டுவரப் படுவதில்லை; பதிவு செய்யப்படுவதில்லை. என்னைப் பொருத்தவரை, அய்ரோப்பா, சீனா போன்றவை சோர்ந்து விட்டன. நல்லவேளையாக சுயநலமிக்க பார்ப்பனியத்தால் – படைப்பாற்றலையும், அறிவாற்றலையும் தரமுடியாமல் போனதால், இன்னும் இந்தியாவின் கிராமங்களிலுள்ள தலித் – பெரும்பான்மை சமூகங்களில் அறிவுச் சுரங்கங்கள் இருக்கின்றன. பார்ப்பனியத்தையும், இந்து மதத்தையும் வென்று விட்டால் மிஞ்சுவது எதிர்காலத்தில் அறிவியலே. உங்கள் கிராமத்தில் அமர்ந்தோ, அறிவியல் சோதனைக்கூடத்தில் அமர்ந்தோ இவ்வுலகை மாற்ற முடியும். இதைத்தான் இணையம் சாத்தியமாக்கியிருக்கிறது. இருப்பினும், உலக அறிவியலின் பார்வையில் படாமல் இன்னமும் மறைவாக இருக்கும் ஒரு பகுதி இருக்கிறது. அதுதான் இந்தியா. தலித் – பெரும்பான்மை இந்தியா! இதைத்தான் நான் இந்நூலில் சொல்லியிருக்கிறேன்.

நாம் நம் மக்களின் மனங்களிலிருந்து பார்ப்பனியத்தை களைந்தெறிய வேண்டி இருக்கிறது. பார்ப்பனியத்தைவிட, இந்து மதத்தையே தூக்கியெறிய வேண்டியிருக்கிறது. நம் நாட்டை இந்து மதத்திலிருந்து விடுவிக்க வேண்டும். இதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இந்தியா ஒரு கிறித்துவ நாடாகவோ, பவுத்த நாடாகவோ, இஸ்லாமிய நாடாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். எனக்குக் கவலையில்லை. ஆனால், அது ஓர் இந்து நாடாக மட்டும் இருக்கக் கூடாது என்பதே முக்கியமானது. ஏனெனில், இந்து மதம் அறிவியலுக்கெதிரானது. மனித இனத்திற்கெதிரானது. உற்பத்திக்கெதிரானது.

மதச்சார்பற்ற இந்துக்களையும் நாம் கையாள வேண்டியிருக்கிறது. வகுப்புவாத இந்துக்களிடம்கூட அத்தனை பிரச்சனையில்லை. ஆனால், மதச்சார்பற்ற இந்துக்கள்தான் இந்து மதத்தை காப்பாற்றுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத்காரர்கள் கூட இந்து மதத்தைக் காப்பாற்ற முடியாது. எடுத்துக்காட்டாக, "தேசிய இந்து மதசார்பற்ற உதவித் தொகை'யை எடுத்துக் கொள்ளுங்கள். அவை மேற்கு வங்கத்திலிருந்து, மகாராட்டிராவிலிருந்து, தமிழ் நாட்டிலிருந்து வருகின்றன. மகாராட்டிரா பவுத்தத்தோடு தொடர்புடையது. தமிழ் நாடு பெரியாரோடு தொடர்புடையது. மேற்கு வங்கம் கம்யூனிஸ்டுகளோடு தொடர்புடையது. ஆனால், வங்கம் இன்று உலகின் மிக ஏழ்மையான பகுதியாகிவிட்டது. ஆப்பிரிக்காவிலுள்ள நாடுகளை விட வங்கம் இன்று ஏழ்மையான இடமாகிவிட்டது. வங்கத்தில் தலித் அறிவுஜீவி என்று எவரும் கிடையாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்துகூட ஓர் அறிவுஜீவிகூட இல்லை. இந்த மதச்சார்பற்ற இந்துக்களை, மிதவாத இந்துக்களை கையாளாமல் விட்டால், இந்து மதத்தை ஒழிக்க முடியாது. அவர்கள் இந்து மதத்தை காப்பவர்களாக மாறிவிட்டனர். ""வகுப்புவாத இந்து மதம் நல்லதல்ல. ஆனால், இதற்கு இந்து மதத்தை குற்றம் சொல்ல முடியாது'' என்கின்றனர்.

இந்து மதத்தில் உள்ளவற்றைப் பாருங்கள். கொலை செய்யும் தெய்வங்களெல்லாம்கூட இருக்கின்றன. தெய்வீகம் என்று சொல்லப்படக்கூடிய இடத்திலிருந்து வரும் நேர்மறையான அன்பைக்கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒழுக்கத்தை அறிவுறுத்துபவையாக அவை மாறும்போது – நான் இந்த இந்து தெய்வங்களைவிட புத்தர், ஏசு, நபிகள் ஆகியோர் அறிவுறுத்திய ஒழுக்கங்களையே பரிந்துரைப்பேன். நிச்சயமாக பிரம்மன், இந்திரன், ராமன், கிருஷ்ணன் ஆகியோர் செய்த கொலைகள், பாலியல் வன்முறைகள், திருட்டுத்தனங்கள் ஆகியவற்றை அல்ல. நான் வாத்சாயனாரின் காமசூத்திரத்தை பரிந்துரைக்க மாட்டேன். 64 வகைகளில் பாலியல் தொழிலாளியுடன் பாலுறவு கொள்வது எப்படி என்பதை விளக்கும் இவைகளை கற்றுக் கொடுத்தால், எய்ட்ஸ்தான் பரவும். ஆண் – பெண் உறவு நிலைமைகள் ஏசு கூறியதைப் போல இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். புத்தரைப் பொருத்தவரை, இந்த விஷயத்தில் அவருடைய கருத்து என்னவாக இருந்தது என்பது குறித்து போதுமான தகவல்கள் இல்லை. ஆனால், ஏசு என்ன சொல்கிறார் என்றால், ""கடவுள் கணவனையும் மனைவியையும் சரிபாதியாக ஓருடலில் படைத்தார்'' என்கிறார். இதில் ஒரு நீதி இருக்கிறது. அதனால்தான் அய்ரோப்பாவிலும், அமெரிக்காவிலும் தங்கள் துணையை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறையுள்ளது.
ஆனால், இந்தியாவில் உள்ள இந்து மதத்தில், சாதியை அடிப்படையாகக் கொண்டு நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்தான் நடக்கின்றன. காதல் திருமணங்களும், இந்து மதமும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க முடியாது. என்னுடைய போர், இனி மதச்சார்பற்ற இந்துக்களிடம்தான். இந்து மதத்தை தோற்கடிக்கவில்லையெனில், அதை அழிக்க முடியாது. கிறித்துவத்தைப் பரப்புவதை சுதந்திரமான மனித உரிமையாக விரிவுபடுத்த வேண்டும். நல்ல மதங்கள் மக்களிடையே போட்டி போட வேண்டும். போட்டி என்பது அடிப்படை உரிமை. இந்த இடத்தில் மார்க்சிஸ்டுகளோடு  நான் ஒத்துப்போகவில்லை. நமக்கு இந்தியாவில் உலகளாவிய ஆன்மிகப் போட்டி ஒன்று தேவை.

உங்களுடைய இந்தக் கூற்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. கொஞ்சம் விளக்குவீர்களா?

நான் ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன். இந்தியாவிலும், இந்தியாவிற்கு வெளியிலும் மக்களை பணம் கொடுத்து கிறித்துவத்திற்கு மதமாற்றம் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. மதம் பரப்புதல் என்றாலே கிறித்துவம் மட்டும்தான் செய்கிறது என்று நினைக்கிறார்கள். முஸ்லிம்கள் தங்கள் மதத்தைப் பரப்புவதில்லை. சூபி இனத்தவரே தங்கள் மதத்தைப் பரப்புகிறார்கள். பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் உள்ள தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் மதத்தைப் பரப்புவதில் ஈடுபட்ட சூபியிஸத்தினால் இஸ்லாமுக்கு மாறினார்கள். அவர்கள் குரானோடு மக்களிடம் போனார்கள். அதனால்தான் மக்கள் மதம் மாறினார்கள். ஆனால் எங்கே முதலில் மதப் பரப்புரை நடந்திருக்கும்? உலகின் முதல் மதப்பரப்புரையாளர் அசோகர்தான். தன் மகனை, மகளை, தன் படைகளை புத்த மதத்திற்கு மாற்ற – அவர்களை சீனாவுக்கும், இலங்கைக்கும் அனுப்பவில்லையா? ஆகவே, கிறித்துவம் தான் முதலில் மதப் பரப்புரை செய்யப்பட்ட மதம் என்று ஏன் நினைக்க வேண்டும்? இந்தியாவில் வாழும் மதச்சார்பற்ற இந்துக்கள், இந்திய வரலாற்றை சரியாகத் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.

அசோகரின் மதம் பரப்பும் நடவடிக்கைகள் குறித்து ஒரு முழுநீளப் படம் எடுக்க வேண்டும். வெகுமக்கள் ரசனைக்கேற்ற வகையில் ஒரு நல்ல படம் அசோகரைப் பற்றி எடுக்க வேண்டும். ஹாலிவுட் ஆட்களிடம் இந்த கோரிக்கையை வைக்கப் போகிறேன். ஹாலிவுட் ஆட்கள் எடுத்தால் அது ஹிட் தான். சீனா, இலங்கை, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் உள்ள மக்களை யார் புத்த மதத்திற்கு மாற்றியது? அசோகர்தான். பார்ப்பனியத்திற்கு படைப்பாற்றால் கொண்ட மூளை கிடையாது. பார்ப்பானின் மூளை பாறை போன்றது. அதிலிருந்து படைப்பாற்றல் வராது. தலித் – பெரும்பான்மை மக்களின் மூளை பச்சை மண் போன்றது. அதிலிருந்து என்ன வேண்டுமானாலும் விளையும்.

புத்த மதம், கிறித்துவ மதம், சூபியிசம் ஆகியவை போட்டியில் இருக்கட்டும். மக்கள் தேர்ந்தெடுக்கட்டும் தங்கள் மதத்தை. சந்தையில் நல்ல பொருளை வாங்குவதை மார்க்சியம் ஆதரிக்கிறது. பின் ஏன் அது மத விஷயத்திலும் நடக்கக் கூடாது? இந்து மதம் தோற்றுப் போய் நிற்கிறது. அது தலித்துகளையோ, பிற்படுத்தப்பட்டவர்களையோ கவரவில்லை. நேர்மறையான பிரதிகளே அதில் இல்லை. மனிதத் தன்மையுடைய கடவுள்களே இந்து மதத்தில் இல்லை. இருக்கும் எல்லா கடவுளர்களும் – பெண்ணை பாலியல் வன்முறை செய்பவர்களாகவும், கொலை செய்பவர்களாகவும்தான் இருக்கிறார்கள்.

ஆகவே என் மக்கள் ஏசு, புத்தர், நபிகள், மார்க்ஸ், அம்பேத்கர் ஆகியோரில் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்தத் தேர்வின் மூலம் மார்க்சிஸ்டுகளாக சிலர் மாறலாம். அவர்களுக்கு மதமில்லை. பெரியார் இருந்தார். நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், பெரும்பான்மையான மக்கள் மதத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இது, மதங்களின் காலம். முதலாளித்துவமும், முதலாளித்துவத்திற்குப் பிந்தைய காலகட்டமும் மதங்களை அழிக்கவில்லை. இன்னமும் இஸ்லாமும் கிறித்துவமும் தங்கள் மதத்தை விரிவாக்கம் செய்ய வும், ஜனநாயகப்படுத்தவும் போட்டியிடுகின்றன. புத்த மதமும் போட்டியில் இருக்கிறது. ஆகவே, இளம் ஆய்வாளர்களுக்கு நான் கூற விரும்புவதெல்லாம் இந்தியா மற்றும் இந்திய கிராமங்களில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் ஆன்மிகம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு கவனம் செலுத்துங்கள் என்பதே.

இந்திய மக்களிடையே போதுமான வாசிப்புத் திறன் இல்லை. பார்ப்பனியம் மக்களுக்கு வாசிப்பை மறைத்தும் மறுத்தும் வைத்திருந்தது. அதோடு பார்ப்பனியம் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும். ஒருபோதும் வாசிக்காது. திருமணமாக இருந்தாலும், ஏரோபிளேன் முதன்முதலில் விடும் பூஜையாக இருந்தாலும் சரி, அங்கே போய் மந்திரங்களை ஒப்பித்துவிட்டு வருவார்கள் புரோகிதர்கள். பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் இவர் என்ன சொல்கிறார் என்றே தெரியாது. "சமர்ப்பயாமே' என்றும் "ஸ்வாகா' என்றும் சொல்லி, அவர்களின் சொத்தை சுருட்டிக் கொள்வார்கள். அவர்களை ஒன்றாக வாழச் சொல்கிறாரா அல்லது நாளைக்கே விவாகரத்து பெற்றுக் கொள்ளச் சொல்கிறாரா அல்லது குழந்தை பெற்றுக் கொள்ளச் சொல்கிறாரா என்றுகூட நமக்குத் தெரியாது.
பவுத்தத்திலும்கூட பெரிதாக வாசிக்கும் பழக்கம் இருப்பதாக சொல்ல முடியாது. கிறித்துவமும், இஸ்லாமும் அப்படியல்ல. வாசிக்க வைப்பவை. அதனால்தான் கிறித்துவ உலகத்தில் கல்வி பரவுகிறது. அரசாங்கங்களால் அல்ல, தேவாலயங்களால் பரவுகிறது. சொல்லப் போனால், அரசைவிட தேவாலயங்கள்தான் அதிக மக்களுக்கு கல்வியறிவு அளித்திருக்கிறது. இஸ்லாமில் மதரசாக்கள் மசூதிகளால் கட்டப்பட்டன. ஆனால் நாம் இதில் கோட்டை விட்டோம். வாசிப்பதில் உள்ள முக்கியத்துவத்தை உணரத் தவறினோம். இன்றைக்கு இந்தியாவில் யாரும் வாசிப்பதேயில்லை. இது, மிகவும் வருத்தத்திற்குரியது. எனவே, வாசிப்புப் பழக்கத்தை மக்களிடையே அதிகரிப்பதற்கான செயலில் ஈடுபட வேண்டும். பைபிள் அனுபவங்கள் வழி நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. முதல் அச்சு எந்திரம் உருவானதே பைபிளை அச்சிடுவதற்காகத்தான். அச்சுத் தொழில்நுட்பம் வளர்ந்ததே பைபிள்களை வெவ்வேறு முறைகளில் அச்சிடுவதற்காகத்தான். கத்தோலிக்க பெண் துறவிகளும், அருட்தந்தைகளும் மதவுணர்வினால் செய்த தியாகத்தில் விளைந்தவைதான் இவையெல்லாம். எழுதுபவர் ஒருவராக இருக்கலாம்; ஆனால் விநியோகித்தவர்கள் பலர்.

நான், "போஸ்ட் இந்து இந்தியா' (இந்து இந்தியாவுக்குப் பிறகு) அல்லது "நான் ஏன் இந்து அல்ல' போன்ற நூல்களை எழுதும்போது, அதை வாசிக்க ஆளில்லையென்றால் நான் எழுதி என்ன பயன்? மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த ஊழியர்களை நியமித்தால் மட்டும் போதாது. வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுவதற்கான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். அம்பேத்கரின் "சாதி ஒழிப்பு', புலேவின் "குலாம்கிரி', "நான் ஏன் இந்து அல்ல', "போஸ்ட் இந்து இந்தியா' போன்ற சில குறிப்பிட்ட நூல்களை எடுத்து, ஒரு பத்து லட்சம் மக்களையாவது வாசிக்க வைக்க வேண்டும். இதோடு சேர்த்து தலித் – பெரும்பான்மை மக்களில் ஒரு பகுதியினரை ஆங்கிலம் வாசிக்கவும், எழுதவும் கற்றுக் கொடுக்க வேண்டும். பிராந்திய மொழிகளில் உள்ள அறிவு என்பது ஒரு பகுதி அறிவுதான். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள மக்களுக்கு இது பயனளிக்காது. இந்தியாவை ஆங்கிலமயப்படுத்த வேண்டும்.

பிராந்திய மொழிகளின் ஆதிக்கத்தைப் பார்த்தோ, பார்ப்பனியத்தைப் பார்த்தோ நாம் அச்சப்படத் தேவையில்லை. ஏனெனில், அவை ஏற்கனவே சமஸ்கிருதமயமாகி இருக்கின்றன. நாம் நம்முடைய இந்திய ஆங்கிலத்தை வளர்ப்போம். அமெரிக்க ஆங்கிலமும் அய்ரோப்பிய ஆங்கிலமும் வெவ்வேறானவை. ஆங்கிலம் ஏற்கனவே நம்முடைய தேசிய மொழி. ஆகவே, ஆங்கிலத்தை நமது தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள நாம் அச்சப்படக் கூடாது. நம் பழங்குடியின மக்களின் மொழிக்கு மீண்டும் நாம் போவது என்பது சாத்தியப்படாது. நாம் முற்போக்காகவும், உலக நடப்புகளை, அறிவியல் வளர்ச்சிகளை அறிந்து கொள்ளவும் ஆங்கிலத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும். ஆங்கிலம் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சொற்களைக் கொண்டுள்ளது. வருங்காலத்தில் குழந்தைகள், அரசுப் பள்ளிகளில் ஏன் ஆங்கில வழிக் கல்வி கற்றுக் கொடுக்கப்படவில்லை என்று கேள்வி கேட்கத் தொடங்குவார்கள்.

ஆகவே "பாம்செப்' போன்ற அமைப்புகள் பிரச்சாரம் செய்தால், 25 ஆண்டுகளில் இந்தியாவை தலித் மயமாக்கலாம். ஆங்கிலமயமாக்கலாம். எந்த மாதிரியான அறிவாளிகள் உலகில் உருவாவார்கள் என்று யாரும் முன்கூட்டியே கணிக்க முடியாது. ஒரு குக்கிராமத்திலிருந்து ஒரு காஞ்சா அய்லைய்யா இதுபோன்றதொரு ஆங்கிலப் புலமையையும், எழுத்துத் திறனும் கொண்டு உருவாவாரென்று அம்பேத்கர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். மார்டின் லூதர் கிங், ஒபாமாவைப் பற்றி நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஆனால், அவர்கள் அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். கல்வித் துறையில் பாடத் திட்டத்தில் நம்முடையவை வரவேண்டும். அதனால்தான் கல்வியில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்கிறேன். என்னுடைய “Turning the pot Tilling the Land” என்ற நூல்தான் இலக்கியப் பின்னணியில் வந்த கல்வி தொடர்பான நூல். நம்மிடம் நிறைய நூல்கள் வேண்டும். கதை நூல்கள் வேண்டும். அதன்பிறகுதான் நாம் பாடத்திட்டத்தில் நம்மைப் பற்றிய பாடங்களை சேர்க்க முடியும். எல்.கே.ஜி. முதல் சொல்லித்தரப்படும் A for Apple கதை, A for Ant என்றாக வேண்டும். B for Buffalo, C for Cattle என்றாக வேண்டும். C for Cow நீக்கப்பட வேண்டும். நமக்கான சொற்களை அந்த கட்டத்திலிருந்தே உருவாக்க வேண்டும்.

பார்ப்பன இலக்கணங்களை ஒழிக்க வேண்டும். அவை subject, object, predication என்று தான் இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்கின்றன. அதை எப்படி சொல்லித் தருகிறார்கள் என்று பாருங்கள். Rama killed Raavana இதில் ராமன் Object, ராவணன் subject. செய்யும் செயல் கொல்வது இளம் வயதிலேயே கொலை செய்வதையா சொல்லித் தருவார்கள்? அதற்கு பதில், அவை இப்படி மாற்றப்பட வேண்டும். Farmer is Tilling the land அல்லது Mother is cooking the food, Father is looking after the Cattle என்பது இப்படி மாற வேண்டும் : Father should also cook the food and Mother should also look after the Cattle. நாம் இப்போது ஆண் இருக்கும் இடத்தில் பெண்ணையும், பெண் இருக்கும் இடத்தில் ஆணையும் மாற்றிக் கற்றுக் கொடுக்க வேண்டும். இது, மிகவும் முக்கியம். Rama killed Raavana என்று இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்கும் இந்த தேசம் மாற வேண்டும். Krishna has stolen the butter. ஆக, கடவுளே திருடுகிறார் என்று தொடக்கத்திலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள். இதுவா தேவை? இல்லை. இந்தியாவிலிருந்து இந்த கடவுளர்களை முற்றாக நீக்க வேண்டும்.

வாத்சாயனாரின் காமசூத்திரத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சிலைகளைக் கொண்ட கோயில்களை தரைமட்டமாக்க வேண்டும். இது, நமது குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய பண்பாடு அல்ல. பாலுறவு என்பது இயல்பானதாக இருக்க வேண்டும். இந்த பாழாய்ப்போன வாத்சாயனாருக்கு முன்பிருந்தே தலித் – பெரும்பான்மையினர் மத்தியில் மகிழ்ச்சியான பாலுறவு வாழ்க்கை பல நூற்றாண்டுகளாக நீடித்து இருந்து வந்தது தானே? நாம் பாலுறவை அறிவியலாகக் கற்றுக் கொள்ளலாம். அதை எதற்கு வாத்சாயனõரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்? பாலுறவு குறித்த நமது பிரதிநிதிகளை நாம் உருவாக்குவோம். அம்பேத்கரை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். காந்தி இளம் பெண்களுடன் ஆடையின்றி நிர்வாணமாக உறங்கினார். அம்பேத்கரோ இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதுதான் இயல்பான வாழ்க்கை. ஆக, ஒவ்வொரு விஷயத்திலும் நாம் சாத்தியமான மாற்று ஒன்றை உருவாக்க வேண்டி இருக்கிறது.

ஆன்மிகப் பாசிசத்தின் (இந்து மதம்) உருவாக்கம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நான் பின்னோக்கிப் பார்க்கிறேன். பாசிசம் என்றால் என்ன? ஒடுக்கும் தன்மையுடைய, அழிக்கக்கூடிய ஒன்று எனலாம், உலகளாவிய அளவில் எடுத்துக் கொண்டால், போருக்கு இட்டுச் செல்வது பாசிசம் என்று பிரதிகள் நமக்கு பாசிசம் பற்றிக் கூறுகின்றன. ஜெர்மனியிலிருந்தும், இத்தாலியிலிருந்தும் இது தோன்றியதாக நாம் அறிகிறோம். ஹிட்லரும், முசோலினியும் எடுத்துக்காட்டுகள். உற்று நோக்கினால், இந்து மதத்திற்கும் நாஜிக்களின் தத்துவத்திற்கும் "ஸ்வஸ்திக்' சின்னம் உட்பட நிறைய தொடர்பிருக்கிறது.

ஹிட்லரே நாஜிக்களை ஆரியர்கள் என்றுதான் குறிப்பிட்டார். நான் இந்திய ஆரியர்களை நாஜிக்களோடு பொருத்திப் பார்த்தேன். ஜெர்மனியில் ஆரியர்களுக்கு தொன்மையான வேர்கள் கிடையாது. ஆனால், இந்தியாவில் உள்ளது. பார்ப்பனர்கள் ஜெர்மனியிலிருந்து வந்தார்களா அல்லது ஈரானிலிருந்தா என்பது குறித்து குழப்பம் நிலவுகிறது. பாசிசத்தின் தன்மைகளாக அடக்குவதையும் ஒடுக்குவதையும், போருக்கு இட்டுச் செல்வதையும், பாலியல் வல்லாங்கு செய்வதையும் வைத்துப் பார்க்கும்போது, இவையெல்லாம் ரிக்வேதத்திலும் இருக்கின்றன. "ஏற்றத்தாழ்வுகளோடு மனிதர்களைப் படைக்கிறார் கடவுள்' என்கிறது ரிக்வேதம். இது எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்றும் சொல்கிறது வேதம். அதுமட்டுமல்ல, சிலர் காலில் பிறந்தார்களாம். சிலர் தலையில் பிறந்தார்களாம். சிலர் பிறக்கவேயில்லையாம்! ஆகவே மதத்தின் பெயரால், ஆன்மிகத்தின் பெயரால் கடவுளே ஒரு பெரிய ஒடுக்குமுறையை கடைப்பிடிக்கிறார்.

புருஷசுத்தம் என்பது சமமற்ற தன்மை எனும்போது, அது எப்படியெல்லாம் இந்து மதத்தோடு பொருந்திப் போகிறது என்பது மிகவும் முக்கியம். ஆகவே, இந்து மதத்தின் இந்தத் தன்மையை எப்படி விளக்குவது என்று நான் யோசித்தேன். அப்போது ஒரு விஷயம் புரிந்தது. நாஜியிசமோ, பாசிசமோ அரசியலோடு தொடர்புடையது என்பது புரிந்தது. அங்கே ஆன்மிகமோ, மதமோ வரவேயில்லை. ஏனெனில், அங்கு கிறித்துவப் பின்னணி இருந்தது. இது குறித்து ஆழ்ந்து யோசிக்கையில் இங்கிருப்பது ஆன்மிகப் பாசிசம் என்று புலப்பட்டது. பாசிசத்தின் மீது ஆன்மிகத்தை கட்டியெழுப்பினால், அதற்கு வலிமை அதிகமாகி, நீண்டகாலம் நீடிக்கும். இந்த ஆன்மிக பாசிசத்தன்மையினால் தான் இந்து மதம் இத்தனை காலம் தாக்குப்பிடித்து வந்திருக்கிறது. பெரிய அளவு இழப்புகளோடு குறுகிய காலத்தில் அய்ரோப்பாவில் அரசியல் ரீதியான பாசிசத்தை ஒழித்துவிட முடியும்.

ஆனால் ஆன்மிகப் பாசிசத்தை அழித்துவிட முடியாது. அதன் முக்கியமான பரிமாணங்களை மக்கள் புரிந்து கொள்வதும் கடினம்தான். ஒரு மதத்தை அல்லது அரசை புரிந்து கொள்ள ஒரு காலகட்டம் தேவை. நமது காலத்தில்தான் இந்த ஆன்மிகப் பாசிசம் என்கிற சொல் பிடிபட்டிருக்கிறது. ஏனெனில், பாசிசத்தின் பல கோணங்களை நாம் உணர்ந்திருக்கிறோம். அன்று தேசியம், காலனித்துவம் போன்றவை முக்கியப் பங்கு வகித்தன. காலனியாதிக்கத்திற்கெதிரான போராட்ட காலத்தில் அம்பேத்கரால் கிறித்துவம் குறித்த ஒரு சாதகமான பார்வையை வைத்திருக்க முடியாது. இப்போது செய்தாலே குற்றவாளியாக்குகிறார்கள். அன்றைக்கு அப்படி அவர் செய்திருந்தால், அவரையும் குற்றவாளியாக்கி இருப்பார்கள்.

ஆனால் எந்த விருப்பு வெறுப்புமின்றி, என்னால் பவுத்தத்தை வெளியிலிருந்து ஆராய முடிகிறது. ஆனால், நான் அம்பேத்கரின் தோள்களில் நின்று கொண்டு பார்க்கிறேன் என்பதுதான் முக்கியமானது. ஒவ்வொரு காலகட்டமும் அந்த காலத்திற்கேற்ப ஒரு சிந்தனையாளரை உருவாக்குகிறது. அம்பேத்கரின் "நவயான' பவுத்தத்திற்குப் பிறகு, இந்து மதத்திற்கு சவாலாக கிறித்துவமும், இஸ்லாமும்தான் இருக்கின்றன. இஸ்லாத்தைப் பொருத்தவரை சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் போல விமர்சிப்பவர்களும் உண்டு. ஆனால் இந்து மதத்திற்கு சவால் விட ஒரே ஒரு நூல் "நான் ஏன் இந்து அல்ல' மட்டுமே வந்திருக்கிறது. ஆனால், இஸ்லாத்திற்குள்ளேயே அதற்கு சவால் விட்டு நிறைய நூல்கள் வந்திருக்கின்றன. கிறித்துவத்திற்கும் இது பொருந்தும். இந்த நிலைமையில்தான் ஒரு கருத்தியல் ரீதியான முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. ஆன்மிக ஜனநாயகம் என்கிற புதிய சொல்லாடல் இங்கே சாத்தியமாகிறது. பவுத்தம், கிறித்துவம், இஸ்லாம் ஆகியவற்றை ஒரு செவ்வகத்திற்குள் அடைக்கலாம். இவற்றுக்கிடையே வேறுபாடுகளும் உண்டு. அது குறித்த விவாதங்களும் உண்டு. இந்த விவாதங்கள் தொடர வேண்டியது அவசியம். 

- முற்றும்

சந்திப்பு : டாக்டர் பி.டி. சத்யபால், ஆர்.ஆர். சீனிவாசன்
தமிழில் : கவின் மலர்


Wednesday, December 08, 2010

மக்களின் அறிவைக் கொண்டு உருவான நூல்கள் அதிகமாக வெளிவர வேண்டும்

கடந்த இரு இதழ்களில் வெளிவந்த பேராசிரியர் காஞ்சா
அய்லைய்யா அவர்களின் பேட்டி, இந்த இதழிலும் தொடர்கிறது


தலித்முரசு காஞ்சா அய்லய்யா நேர்காணல் பகுதி III

இந்தியாவின் அறிவுத்தளம் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து சொல்லுங்கள்.

இந்தியாவின் அறிவுத்தளம் என்பது, மேற்கோள்களாகச் சுருங்கிவிட்டது. நாம் மக்களின் வாழ்க்கையிலிருந்து ஆய்வுகளைச் செய்யும்போது, மேற்கோள் காட்ட வேண்டிய அவசியமில்லை. அம்பேத்கர், புலே போன்றோரின் மேற்கோள்களை எடுத்தாளலாம். ஆனால், எப்போதும் மக்களிடமிருந்துதான் முதன்முதலில் நிரப்பப்பட வேண்டும். அதனால்தான் நான் மேற்கோள்களை அடிப்படையாகக் கொண்ட எழுத்துகளை நிராகரித்தேன். பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஹெகல், ஏன்? மார்க்ஸ், அம்பேத்கர் இவர்களில் யாருடைய அனுபவங்களையாவது வரித்துக் கொண்டு எழுதப்படும் எழுத்துகளையும் நிராகரித்தேன். இவர்களில்யாருடைய நூல்களையாவது பாருங்கள்! மேற்கோள்களை அடிப்படையாகக் கொண்டா எழுதியிருக்கிறார்கள்? மார்க்ஸின் "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை'யோ, அம்பேத்கரின் "சாதி ஒழிப்பு' நூலோ மேற்கோள் சார்ந்தவை அல்ல. எனவே, மக்களின் மனங்களுக்குள் சென்று அவற்றிலிருந்து ஒரு தத்துவார்த்த பிரதி உருவாவதையே நான் விரும்புகிறேன்.
மக்களின் வாழ்க்கை முறை, உற்பத்தி, அறிவியல், தொழில்நுட்பம், உணவுப் பண்பாடு ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. மரக்கறி உணவையே இந்திய உணவு என இந்து மதம் கட்டமைத்தபோது, நாம் ஆற்றலிழந்து போனோம். நம்மிடையே கால்பந்து வீரர்கள் இல்லை. ஏன்? மரக்கறி உணவை மட்டும் உண்பவர் கால்பந்து வீரராக முடியாது; ஒலிம்பிக் சாம்பியனாக முடியாது. ஆக, உணவுப் பண்பாடு  ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. தலித் – பெரும்பான்மை உணவுப் பண்பாடு, சங்கராச்சாரியின் வருகைக்குப் பிறகு இந்து மதத்தால் அழிக்கப்பட்டது. ஆகவே, மக்களின்  அனுபவங்களின் மூலம் இந்து மதம் தகர்க்கப்பட வேண்டும் என்று நினைத்தேன்.

எனவே, கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் உழைத்து Post Hindu India என்ற நூலை  உருவாக்கினேன். பார்ப்பன அறிவாளிகள் கூறும் தேசியம் என்கிற கருத்துருவாக்கத்தையும் அழிக்க விரும்பினேன். ஏனென்றால், பார்ப்பனியம் ஒரே வடிவத்தில் இல்லை. அது மார்க்சியம், தேசியம், பெண்ணியம் உட்பட பல்வேறு வடிவங்களில் வருகிறது. நம்மிடையே போதுமான பெண் அறிவாளிகள் இல்லை. நானேகூட கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்று விட்டு வரவில்லை. மாறாக, உள்ளூர் சரக்குதான். இதுவே என் பலமும் பலவீனமுமாக இருக்கிறது. ஆனால், என் பலவீனத்தை நான் பலமாக மாற்றிக் கொள்ள வேண்டுமென விரும்பினேன்.

ஆகவே, "பாப்புலர் பிரஸ்ஸி'ல் பல மணி நேரங்களை எழுதுவதிலும், படிப்பதிலும் செலவழித்தேன். மேலும், கிராமங்களுக்குச் செல்வதன் மூலம், மக்களின் உற்பத்தி வாழ்க்கை குறித்த பெரும் தகவல்களை சேகரித்து வந்தேன். கருவிகளின் பெயர்கள், மக்களிடையே புழங்கும் பழமொழிகள், உணவுப் பழக்க வழக்கங்கள், பண்பாட்டுப் பின்னணி போன்ற பல தகவல்களை சேகரித்தேன். அதிலிருந்து சிந்திக்கத் தொடங்கினேன். என்னுடைய சமீபத்திய நூல் Weapon of the other இது குறித்ததே. இப்படித்தான் தலித்தியம் # பார்ப்பனியம் என்கிற கருத்தாடலுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தேன். ராஜாராம் மோகன்ராயின் தேசியத்திற்கு எதிராக புலேயின் தேசியம், கவுடில்யருக்கும் மநுவுக்கும் எதிரான புத்தரின் தேசியம் போன்றவற்றை நீங்கள் அறிவீர்கள்.
நேரு நினைவு அருங்காட்சியகத்தையும் நூலகத்தையும் பார்வையிட்டபோது நேரு, காந்தி, ராஜாராம் மோகன்ராய் எல்லோரும் அங்கே இருக்கிறார்கள். ஆனால் அம்பேத்கர், புலே, பசவா, பெரியார் ஆகியோர் இல்லை. இந்த அறிவுஜீவி வாழ்க்கை ஒரு துன்புறுத்தலாகவும், ஓய்வற்றதாக வும் இருந்தாலும்  – நான் அதை கடின உழைப்புக்குரியதாகவும், முடிந்தவரை வெகுமக்களுக்குரியதாகவும் ஆக்கிக் கொள்ள முனைந்தேன். ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக அறிவாளிகளுக்காகவும், வெகுமக்களுக்காகவும் எழுதுவது என்பது கடினமானது. எடுத்துக்காட்டாக, என்னுடைய Buffalo Nationalism என்கிற தலைப்பை நான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஷ்வ இந்து பரிஷத்தின் பசு தேசியத்தை எதிர்த்துதான் வைத்தேன். ஆனால் என்னுடைய நண்பர்களே, ""இதென்ன தலைப்பு?'' என்று சிரித்தார்கள். ""நான் ஏன் இந்து அல்ல'' எழுதியபோது அதைக் கொஞ்சம் போல ரசித்தவர்கள்கூட, இந்தத் தலைப்பைப் பிடிக்கவில்லை என்றார்கள்.

அவர்களிடம் நான் சொன்னேன் : இது என்னுடைய மூளையில் உதித்ததல்ல. எருமைøய ஒவ்வொரு வீட்டின் விலங்கு என்று சொல்லலாம். இந்தியாவில் பால் உற்பத்தி, எருமை மாடுகளிடமிருந்துதான் வருகிறது; பசுக்களிடமிருந்து அல்ல. இந்த பாழாய்ப்போன படைப்பாற்றலற்ற பார்ப்பனிய மூளையோ – ஒன்றுக்கும் உதவாத ஒரு விலங்கை தெய்வமாக்கியும், கருப்பாக இருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக – உற்பத்திக்கு உதவும் ஒரு விலங்கை எமனுக்கு வாகனமாகவும் மாற்றி விட்டிருக்கிறது. ஆனால், அது கொடுக்கும் பாலின் நிறம் வெள்ளை என்பதால் மட்டும் பருகுகிறார்கள் என்றேன்.

ஆகவே, புதியதாய் எதையாவது செய்ய வேண்டி இருக்கிறது. சில வேளைகளில் அதற்காக எள்ளி நகையாடப்படுவதையும் சந்திக்க வேண்டி இருக்கிறது. என்னுடைய நண்பர்கள் சிலருக்கு இருக்கும் பார்ப்பனிய தாக்கம்; கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் பயின்று விட்டுத் திரும்பியவர்களிடம் இருக்கும் மேற்கோள்களால் நிரப்பப்பட்ட ஆய்வு மனப்பான்மை மற்றும் மேலைநாட்டு சிந்தனைகள் ஆகிய எல்லாவற்றோடும் போராட வேண்டி இருக்கிறது. சிலர் நம்மை ஏற்றுக் கொள்வார்கள். சிலர் நம்மை மறுப் பார்கள். ஆனால் இறுதித் தீர்ப்பு மக்கள் கையில் உள்ளது. இயக்கங்கள்தான் இத்தகைய பணிகளை கைக்கொள்ள வேண்டும். என்னுடைய நூல்களைப் பொருத்தவரையில் வெகுமக்கள் இயக்கங்கள், அறிவுத்தளம் இரண்டிலுமே நல்ல வரவேற்பைப் பெற்றன. பிராந்திய மொழிகளில் எழுதப்பட்டவையெல்லாம் சூடான விவாதங்களைக் கிளப்பவில்லை.

இந்தியாவில் தற்பொழுது ஆங்கிலம் பேசக்கூடிய அறிவாளிகள் குழு ஒன்று உருவாகியுள்ளது. இத்தகைய ஓர் ஆக்கம் வெளிவரும்போது, ஆதிக்க சாதிகளிலிருந்து மிகப்பெரிய அளவில், கலவையான எதிர்வினைகள் வந்தன. சிலர் அதனை வரவேற்றாலும், பார்ப்பனர்கள் மிகவும் எரிச்சலுக்குள்ளானார்கள் என்று சொல்லலாம். "நான் ஏன் இந்த அல்ல?' நூல் வெளிவந்தபோது, நூல் குறித்து நிறைய திறனாய்வுகள் வந்தன. தற்போதைய பதிப்பில் அனைத்து திறனாய்வு களையும் இணைத்துள்ளேன்.  என்னுடைய நூலுக்கு ராஜ்தீப் சர்தேசாய், ஒரு விமர்சனம் எழுதியிருந்தார். அவருடைய மனைவி சகரிகா கோஷ், இந்நூலால் கவரப்பட்டு என்னை ஒரு நீண்ட நேர்காணல் எடுத்தார். குடும்பத்தில் ஒரு தத்துவப் போரே நடைபெற்றது அப்போது. இந்நூல் பல குடும்பங்களிற்குள் சண்டையை உண்டாக்கியது. எனக்கு நிறைய கொலை மிரட்டல்கள் வந்தன. ஆனால், இந்நூல் ஒரு விவாதத்தை தோற்றுவித்தது.

Post Hindu India வந்தபோது ஒரு பெரிய தாவல் நடந்தது. எடுத்துக்காட்டாக, ""இந்நூலில் தீவிரத்தன்மை இல்லை. ஆய்வுத்தன்மை இல்லை. முடிவுக்கு வர உதவிய தரவுகள் குறித்த குறிப்புகள் இல்லை'' என்று "ஹிமால்' இதழில் மீரா நந்தா எழுதியிருந்தார். அதற்கு நான் ஒரு பதில் எழுதினேன் : ஆய்வுத்தன்மை, தரவுகள் என்று நீங்கள் எதனைக் குறிப்பிடுகிறீர்கள்? என்னுடைய நூலில் அடிக்குறிப்புகளும், தரவுகளும் இல்லையென்பதற்காக நீங்கள் அதன் தீவிரத்தன்மையை குறைத்து மதிப்பிடுவீர்களானால் – பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஹெகல், மார்க்ஸ் போன்றவர்களுடையதையும் நீங்கள் அப்படி சொல்லிவிட முடியுமா? பார்ப்பனிய அறிவுஜீவி குண்டர்த்தனம் எதை நிராகரிக்கச் சொல்கிறதோ, அதனை நிராகரிக்க வேண்டுமாம். எதைப் புகழ வேண்டுமெனச் சொல்கிறதோ அதை மற்றவர்களும் புகழ வேண்டுமாம். இது என்ன நியாயம்? எந்தவொரு மானுடவியலாளரின் நூலிலாவது, அவர்களை ஒரு முடிவுக்கு வரவைத்த தரவுகள் குறித்த குறிப்புகள் இருக்கின்றனவா?

மானுடவியல் என்பது, ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவின் உணவுப் பழக்கம், கருவிகள், உற்பத்தி உறவுகள் குறித்தான ஆய்வுகள் தானே? அவற்றை எல்லாம் எங்காவது போய் இதெல்லாம் உண்மைதானா என்று கள ஆய்வு செய்து பார்த்துதான் ஒப்புக் கொள்கிறார்களா? வெறும் பார்ப்பனியத்திற்கும் தலித்தியத்திற்கும் இடையேயானதல்ல இது. இதில் அறிவியல், தொழில்நுட்பம், மதங்கள் எல்லாமே கலந்திருக்கின்றன. இந்து, முஸ்லிம், தலித் – பெரும்பான்மை மக்கள், பழங்குடியினர் ஆகியோரிடையே அறிவியலும் தொழில்நுட்பமும் உள்ளன. ஆனால், இந்து மதம் இதனை அழித்துவிட்டது. இதனாலேயே நாம் அறிவியலுக்கு உலகளவிலான எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை என்றாகிப் போனது.

பவுத்த உலகமான சீனா, அறிவியல் துறையில் உலகத்தின் அங்கீகாரத்தைப் பெற்று விட்டது. கோபர் நிக்கஸ் முதல் சிப் உருவாக்கம் வரை, கிறித்துவ உலகம் நிறையவே பங்களித்து விட்டது. இவற்றில் "சர்ச்சு'கள் பெரிய பங்கு வகித்தன. இஸ்லாமிய உலகத்தை எடுத்துக் கொண்டால், நபிகள்கூட அறிவியல் அறிவுடன் இருந்தவர். துணிகளைத் தைப்பது, ஆண் – பெண் உறவுகள் குறித்த கருத்தாக்கங்கள், மணற்பாங்கான பகுதிகளில் எண்ணெய் வளத்தைக் கண்டுபிடித்தது போன்ற பல விஷயங்களைச் சொல்லலாம். இதுபோன்ற எதையாவது இந்து உலகம் தந்திருக்கிறதா? ஆர்யபட்டாவைச் சொல்வார்கள். பூஜ்யத்தை கண்டு பிடித்ததை, இந்து மதத்தின் பங்களிப்பாகச் சொல்வார்கள். நான் என்னுடைய நூலில் இதை ஒரு "நான்சென்ஸ்' என்று நிரூபித்திருக்கிறேன். இடையர்கள்தான் பூஜ்யத்தை கண்டுபிடித்தார்கள். ஆர்யபட்டா 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். நம் இடையர்கள் ஆடுகளையும், மாடுகளையும் அதற்கு முன்னரே கணக்கு வைத்து எண்ணிக் கொண்டுதானே இருந்தார்கள், அதுவும் நூற்றுக்கணக்கில்! பூஜ்யம் இல்லாமல் எப்படி நூறு வரும், 5 ஆம் நூற்றாண்டுக்கு முன்னால்?

இதனைத் தவறு என்றால் ராமாயணம், மகாபாரதம் எல்லாமே தவறுதான். அதில் தலைகளின் எண்ணிக்கை, நபர்களின் எண் ணிக்கை, ஆடுகளின் எண்ணிக்கை எல்லாம் வருகிறதே? என்ன கொடுமையென்றால் இடையர்கள் இவற்றைப் பற்றி எழுதுவதற்கான அனுமதி இன்றி இருந்தனர். அவர்களுடைய விரல்கள் துண்டிக்கப்பட்டன. அறிவியல், தொழில்நுட்ப, கணித சூத்திரங்களை எல்லாம் ஒரு நூலாகப் பதிவு செய்ய முடியாமல் போனதன் விளைவு, ஆர்யபட்டா பூஜ்யத்தை கண்டுபிடித்தவராகிவிட்டார். இவர் ஒரு பார்ப்பனர் என்பதால், ""நான்தான் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தேன்'' என்று முந்திக் கொண்டார்.

நம்மிடையே இன்று மிகப்பெரிய பண்பாட்டு அரசியல் இயக்கங்கள் இருக்கின்றன. மக்களின் அறிவைக் கொண்டு உருவான நூல்கள் அதிகமõக வெளிவர இயக்கங்கள் முயல வேண்டும். இவற்றை சிறந்த முறையில் செய்ய வேண்டும். இல்லையெனில், ஆக்ஸ்போர்டு, ஹார்வார்ட், கேம்பிரிட்ஜிலிருந்து வரும் பார்ப்பனர்கள் நம்மைப் பின்னுக்குத் தள்ளி விடுவார்கள். நான் இப்படிச் சொல்வதால், நம் பிள்ளைகள் இப்பல்கலைக் கழகங்களுக்குச் சென்று பயிலக்கூடாது என்பதில்லை. எனக்கெல்லாம் அந்த வாய்ப்பு நிச்சயமாக இல்லை. டெல்லிக்குச் சென்று பயில்வதைக்கூட என்னால் கற்பனை செய்து பார்க்க இயலாத நிலையில் இருந்தேன்.

அறிவு சார்ந்த விஷயங்களைப் புதிய முறையில் கூறுவது, புதிய சொற்களை உருவாக்குவது, தத்துவம் சார்ந்த கருத்துருவாக்கம். பல்கலைக்கழக கல்வியையும், மக்கள் போராட்டங்களையும் இணைப்பது போன்றவை மக்கள் போராட்டங்களிலிருந்தே சாத்தியப்படும். எடுத்துக்காட்டாக, ""இந்தியா தலித்மயமானது; சமஸ்கிருதமயமானதல்ல'' என்று சொன்னபோது, எம்.என். சீனிவாசன் போன்றவர்கள், கேம்பிரிட்ஜ் வரை சென்று பயின்றுவிட்டு இந்தியாவுக்கு வந்து இந்திய கிராமங்கள் பார்ப்பனமயமாக்கப்பட்டிருக்கின்றன என்றார். பார்ப்பனர்கள் வெளியே சொல்லாமல் தங்கள் கொல்லைப்புறத்தில் மாமிச உணவு உண்ண முயற்சி செய்து கொண் டிருப்பதை அறியாமல் அவர்கள் இப்படி சொல்லிக் கொண்டிருந்தார்கள். விஸ்கி, பிராந்தி மற்றும் இன்னபிற குடிவகைகள் அனைத்தையும் வெளியே தெரியாமல் குடிக்கும் பார்ப்பனர்கள் இல்லையா என்ன? பார்ப்பனப் பெண்களிடையே புகைக்கும் பழக்கமும்கூட அந்த சமயத்தில் இருந்தது. இவையெல்லாம் தலித்துகளின் பழக்கங்கள் என்று நீங்கள் சொல்வதானால், பார்ப்பன குலம் தலித்மயமாகி விட்டது என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்? ஆனால் அவரோ, இந்திய கிராமங்கள் பார்ப்பன மயமாகி விட்டன என்றார். ஆகவே நான், "இந்தியா தலித்மயமாகியிருக்கிறது' என்று கூறியது உலகின் கவனத்தை ஈர்த்தது. ரவுட்லட்ஜ் பதிப்பகம், பின் – காலனிய இலக்கியங்களை தொகுத்தபோது, அதில் என்னுடைய அத்தியாயம் ஒன்று இருந்தது. அய்லைய்யா இருந்தார். மார்க்ஸ் இருந்தார். மாவோ இருந்தார். பிராங் பனான் இருந்தார் ஆனால் எம்.என். சீனிவாசன் இல்லை!
இந்திய பார்ப்பனர்கள் எங்களை ஓரங்கட்ட நினைத்தனர். ஆனால் அங்கீகாரமளிக்க உலகம் தயாராக இருக்கிறது.

ஆக, இந்த போர்க்களமே மிகுந்த மன அழுத்தத்தைத் தரக்கூடியது. அதிலும் கல்விப்புலத்தில் தேர்ந்தெடுத்தவர்களைத்தான் முன்னேற அனுமதிப்பார்கள். நம்முடைய நூல்களைப் புறக்கணிப்பார்கள். அவர்கள் நினைப்பதையெல்லாம் பாடமாக்க வேண்டும் என்று நினைப்பார்கள். வரலாறை எடுத்துக் கொண்டால், இப்போது இருவகை வரலாற்று நூல்கள் நம்மிடையே உள்ளன. புத்தர் முதல் இன்று வரையிலான தலித் – பெரும்பான்மை மக்களின் போராட்டங்கள் அடங்கிய வரலாறு ஒன்று; கவுடில்யர் முதல் இன்று வரையிலான அவர்களின் வரலாறு மற்றொன்று. ஆனால், நம்முடைய வரலாறை பாடமாக நடத்துவதற்கு அவர்கள் தயாராக இல்லை. ஆகவே, பார்ப்பனியத்திலிருந்து இந்தியாவை விடுவிக்க மிக கவனமாகவும், போட்டி மனப்பான்மையுடனும் நாம் இலக்கியங்களை உருவாக்க வேண்டும். போட்டி மனப்பான்மை மிகவும் முக்கியமானது.

– அடுத்த இதழிலும்

சந்திப்பு : டாக்டர் பி.டி. சத்யபால்,
ஆர்.ஆர். சீனிவாசன்
தமிழில் : கவின் மலர்