(நன்றி : புதிய தலைமுறை)
ஒரு நாளைக்கு எத்தனை கிலோமீட்டர் நாம் நடப்போம்? இரண்டு? மூன்று? சரி! நாம் நடப்பது நம் உடல்நலத்திற்காக! பழங்குடியின மலைவாழ் மக்கள் நலனுக்காக நடப்பவரைப் பார்த்திருக்கிறீர்களா? அதுவும் 18 ஆண்டுகளாக!
கிரண்.என்.மஸ்கி தன் சொந்த ஊரான கோவாவிலிருந்து தன் நடைபயணத்தை பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் 1991 ஜூன் மாதம் 5ம் தேதி துவக்கினார். இன்று வரை நடந்துகொண்டே இருக்கிறார். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பயணம் செய்தபின் இதோ இப்போது தமிழ்நாட்டில் தனது பயணத்தை கன்னியாகுமரியில் முடித்துவிட்டு கோவா சென்று கொண்டிருக்கிறார். இந்த நெடிய பயணத்தின் நோக்கம்தான் என்ன?
“நான் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் உள்ள மலைவாழ் பழங்குடியின மக்களை சந்திக்கிறேன். அவர்களோடு மாதக்கணக்கில் த்ங்கியிருந்து அவர்களது பிரச்சனைகளை கேட்டறிந்து என்னாலான உதவிகளை நான் செய்கிறேன். அரசாங்கத் தரப்பில் அவர்கள் சார்பில் யாரை சந்திக்க வேண்டுமோ அவர்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயற்சிகள் செய்கிறேன்.” என்கிறார் கிரண்.
42 வயதாகிறது. மெல்லிய உருவம். சரியாய் சாப்பிடாமல் நெடுநாள் பசியில் வாடியத்ன் பலனாய் கண்களின் கீழ் கருவளையம். கையில் ஒரு படுக்கை.மூன்று மாற்று உடுப்புகள் அவர் சந்தித்த அதிகாரிகள் அளித்த கடிதங்கள், கோப்புகள், மலைவாழ் மக்கள் குறித்த தகவல்கள் கொண்ட குறிப்புகள் அடங்கிய ஒரு பை. இவையே கிரண்.என்.மஸ்கியின் அடையாளங்கள். இப்படி ஒரு பயணம் செய்ய வேண்டும் என்று ஏன் தோன்றியது?
“நான் 8ஆம் வகுப்பு பயிலும்போது அஸ்ஸாமைச் சேர்ந்த ஒரு சைக்கிள் பயணியை சந்தித்தேன். அவர் தேச ஒற்றுமையை வலியுறுத்தி பயணம் மேற்கொண்டிருந்தார். அதுதான் முதல் பொறி. ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக ஏதாவது செய்தாக வேண்டுமென்ற துடிப்பு எனக்கிருந்த்து. மலைவாழ் மக்களும் நரிக்குறவர்களும் மிகவும் பின் த்ங்கிய நிலையில் இருக்கின்றனர். அவர்களின் நலனுக்காக என் பயணம் அமைய வேண்டும் என்று விரும்பினேன். அதன்படி பத்தாயிரம் ரூபாய் பணத்துடனும் ஒரு கேமிராவுடனும் புறப்பட்டேன். என் பெற்றோர் உட்பட அனைவரும் என்னை ஒரு மனநோயாளியைப் பார்ப்பது போல் பார்த்தனர். ஏனிந்த வேண்டாத வேலை என்பதே அனைவரின் எண்ணமாக இருந்த்து. ஆனாலும் நான் தீர்மானமாய் இருந்தேன். என் பயணம் ஏதாவதொரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்று எண்ணினேன். ஒவ்வொரு மாநிலத்திற்குச் செல்லும்போதும் அந்த மாநிலத்தின் மாவட்டங்கள், அவற்றின் தாலுகாக்கள், ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள மலைவாழ் பழங்குடி மக்கள், நரிக்குறவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்துக் கொள்வேன். எனக்கு தாலுகா அளவில் உள்ள தாசில்தார், பிடிஓ போன்ற அதிகாரிகள் உதவுகிறார்கள். அவர்க்ளுடைய உதவி கிடைக்காத இடங்களில் வனத்துறையினர் எனக்கு உதவுவார்கள்” என்கிறார் கிரண்.
சரி! அரசு தரப்பில் இவருக்கு எப்படி உதவிகள் கிடைக்கின்றன? இவர் சொல் எடுபடுகிற்தா? ஒரு சாமானியனாக இருந்துகொண்டு இவர் சொல்வதை அரசு எந்திரம் காது கொடுத்து கேட்கிறதா? இவரது மனுக்களும் கோரிக்கைகளும் எந்தளவு வெற்றி பெறுகின்றன?
“ஐம்பது சதவிகித வெற்றி என்று சொல்லலாம். நூறு சதவிகித வெற்றி என சொல்ல முடியாது.என்னால் முடிந்த வரை என் மக்களுக்கு நான் செய்திருக்கிறேன்.” என்கிறார் கிரண் நேர்மையாக.
கொன்கனியை தாய்மொழியாக்க் கொண்ட கிரணுக்கு ஆங்கிலம், இந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, அஸ்ஸாமி, கன்னடம் ஆகிய மொழிகள் தெரிந்திருக்கின்றன. தமிழ கொஞ்சம் புரிகிறது. பேசத் தெரியவில்லை. மொழி தனக்கு தடையாக ஒருபோதும் இருந்ததில்லை என்கிறார் கிரண்.
கிரண் இரவுகளில் பயணம் செய்வதில்லை. பகலில் மட்டுமே பயணிக்கிறார். இரவில் சிறிய நகரத்தில் ஏதாவதொரு நடுத்தர விடுதியில் தங்குவது போல தனது பயணத்திட்ட்த்தை வகுத்துக்கொள்கிறார். பெரும்பாலும் நகரத்தில் தங்குவதை கிரண் விரும்புவதில்லை. கிராமங்களில் தங்குகிறார். மலைவாழ் மக்களும் நரிக்குறவர்களும் இருக்கும் இடங்களுக்குச் சென்றுவிட்டால் அங்கேயே ஐக்கியமாகிவிடுகிறார். அவர்கள் தரும் உணவை உண்கிறார். ” நகரங்களைவிட இந்த மனிதர்களின் இருப்பிடம் ஆயிரம் மடங்கு மேல். அஸ்ஸாமில் ஒரே ஒரு முறை காட்டுப்பகுதியில் நடந்தபோது மிருகங்களிடம் சிக்கி தப்பித்தேன் பீகாரில் ஐந்து முறையும் உத்தரப் பிரதேசத்தில் இரண்டு முறையும் கொள்ளையர்களிடம் சிக்கினேன். என் உடைமைகள் அனைத்தும் பறிபோயின.” என்கிறார் கிரண்.
பின் எப்படி தன் பயணத்தை தொடர்ந்தார் கிரண்?
“நல்லவர்கள் எங்கும் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு உதவுகிறார்கள். பயணத்தைத் தொடங்கும்போது என் கையிலிருந்த பத்தாயிரம் ரூபாய் தீர்ந்தபின் இன்று வரை நான் சந்திக்கும் மனிதர்கள் எனக்கு உதவுகிறார்கள். அவர்கள் கொடுக்கும் பணத்தில்தான் நான் என் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறேன்” என்று சிரிக்கிறார் கிரண். ஒரு மணிநேரத்திற்கு 5.5 கிலோமீட்டரிலிருந்து 8 கிலோமீட்டர் வேகம் வரை நடக்கிறார். அதன்பின் ஒரு தேனீர். பின் திரும்ப நடை. இப்படித்தான் பதினெட்டு வருடங்களாக தனது நெடும்பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறார் கிரண். அரிசி, காய்கறிகள், மீன் இவற்றை விரும்பி உண்ணும் இவருக்கு தினமும் நடப்பதால் ஒருபோதும் எந்த நோயும் வந்த்தில்லை.
மலைவாழ்மக்களின் கல்வித்தரம், அவர்களின் வாழ்க்கைதரம், அடிப்படை தேவைகள், சாலை வசதிகள், குடிநீர் வசதி என எது அவர்களுக்கு கிடைக்காமலிருந்தாலும் அவர்களுக்காக அரசின் உதவியை நாடி பெற்றுத்தருகிறார். குறிப்பாக பெண்களை பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்பதை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிறார். மிக அதிக காலமாக சட்டிஸ்கரில் உள்ள பஸ்டர் மலைப்பகுதியில் எட்டுமாதங்களும் 20 நாட்களும் தங்கியிருந்திருக்கிறார் கிரண்.
தனது பயணத்தில் இதுவரை ஒரு அரசியல்வாதியைக் கூட கிரண் சந்திக்கவில்லை என்பது மிகப்பெரிய விஷயம். அரசியல்வாதிகளின் பொய் வாக்குறுதிகளை நம்புவதில்லை கிரண். எங்கு சென்றாலும் அரசு அதிகாரிகளை மட்டுமே சந்திக்கிறார். அவர்களிடமே மனு கொடுக்கிறார். பேசுகிறார். தன்னால் முடிந்த உதவிகளை பெற்றுத் தருகிறார். இந்தியா முழுவதிலும் பயணித்திருக்கும் கிரண் தமிழ்நாடு குறித்து என்ன கூறுகிறார்?
“ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டில் உள்ளது போன்ற சலுகைகள் வேறு மாநிலத்தில் இல்லை. இதன் காரணமாக மலைவாழ் மக்களிடையே படிப்பறிவு அதிகரித்திருக்கிறது .நீலகிரியில் உள்ள தோடர்கள், இருளர்கள், படுகர்கள் இனத்தாரிடையே நன்கு கல்வி கற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல நீங்கள் பார்க்க முடியாது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் மலைவாழ் மக்களின் நலனுக்காக பல திட்டங்களை கொண்டு வருகிறார்கள். ஆனால் ஏட்டளவில் அவை நின்று விடுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமே ஓரளவிற்கு அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மிக அதிக அளவில் என்.ஜி.ஓக்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. கடலூர், சிவகங்கை போன்ற ஊர்களில் நரிக்குறவர்களுக்கென்று தொண்டு நிறுவனங்கள் இருந்தன. நரிக்குறவர்கள் பேருந்து நிலையங்களிலும் மற்ற மக்கள் கூடும் இடங்களிலும் ஊசிபாசி விற்றுக் கொண்டிருந்தவர்கள். அவர்களுக்கு கல்வி தருகிறோம் என்று அவர்களை அழைத்து 90 நாட்கள் மட்டும் வைத்திருந்துவிட்டு அவர்களை விரட்டிவிட்ட கதைகளையும் மக்கள் என்னிடம் விவரித்தார்கள். ” என்கிறார் கிரண்.
தேனி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின்போது ஒரு விபத்தில் சிக்கி தன் சிகிச்சைக்காக ஏராளமாக செலவு செய்ய நேர்ந்தபோது உத்தமபாளையம் தாசில்தாரும், அந்தப் பகுதி மக்களும் தனக்கு உதவியதை நன்றியோடு நினைவு கூர்கிறார் கிரண்.
“நான் இயற்கையில் காதலன். இயற்கையை பாழ்படுத்துவதில் இன்றைய நவீன சமூகம் முன்னிலையில் இருக்கிறது. இச்சூழலில் காடுகளையும் அவற்றின் வளங்களையும் காப்பாற்றிக் கொண்டிருப்பது பழங்குடி மக்களே. இதுவே நான் அவர்களை அதிகம் நேசிக்க காரணம்” என்கிறார் கிரண்.
கையில் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமலிருந்தாலும் மாறாத புன்னகையோடும் நம்பிக்கையோடும் இருக்கும் கிரண் விடும் சவாலை எதிர்கொள்ள எந்த இந்திய குடிமகனாலும் முடியுமா என்பது சந்தேகமே! ”என் அளவிற்கு இந்தியாவின் மூலைமுடுக்குகளிலெல்லாம் பயணம் செய்த ஒரு மனிதர் இருக்க முடியாது. என்னால் சவால் விட்டு சொல்ல முடியும்” எனும் கிரண் அதே பெருமையோடு புன்னகை மாறாமல் சொல்கிறார்.. ”இந்த வயதிலேயே என் தாய்நாட்டை நான் யாரை விடவும் மிக நெருக்கமாகக் கண்டிருக்கிறேன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.”
கிரண் இந்திய நாட்டின் மலைப்பகுதிகள் குறித்த அரிய தகவல்களை தன்னகத்தே வைத்திருக்கிறார். அவர் பகிர்ந்துகொண்ட ஏராளமான தகவல்களில் சில இதோ:
“என் அனுபவத்தில் சிக்கிம் மாநிலமே மிகவும் அமைதியான மாநிலம். மக்கள் இரவுகளில் கூட த்ங்கள் வீடுகளைப் பூட்டுவதில்லை. அந்த்ளவு திருட்டு போன்ற விஷயங்கள் அங்கே குறைவு. பாஞ்சாபிலும், ஹரியானாவிலும் மலைவாழ் மக்களும் காடுகளும் கிடையாது. மிசோரமும் மேகாலயாவும் பெண்க்ளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் மாநிலங்களாக இருக்கின்றன. ஆனால் ஆண்களும் பெண்களும் சம்மானவர்களாக இருப்பது கேரளாவில் மட்டுமே. மலைவாழ் மக்கள் சமூகத்தைப் பொறுத்தவரை பெண் தான் அந்த சமூகத்தின் முதுகெலும்பே.
ஆந்திரப்பிரதேசத்தின் கர்னூல் மாவட்ட்த்தில் சென்சியூ என்றழைக்கப்படும் பழங்குடியினர் சமூகத்தில் ஏதாவதொரு குற்றம் புரிந்து சிறைக்குச் சென்று வந்த இளைஞர்கள் மட்டுமே திருமணம் செய்து கொள்ள தகுதியானவர்கள். அவர்களை மட்டுமே பெண்கள் மணம் செய்துகொள்கின்ற்னர் கர்நாடகாவில் ஆக்கிபீக்கி என்ற மலைவாழ் சமூகத்தினர் குழந்தை பிறந்தபிறகு முதலில் தந்தையின் மனதில் தோன்றும் எந்த ஒரு சொல்லையும் தங்கள் குழந்தைகளுக்கு பெயராக வைப்பார்கள். போஸ்ட் ஆபீஸ், எக்ஸ்பிரஸ் என்று வித்தியாசமான பெயர்களெல்லாம் கூட இச்சமூகத்தில் காணப்படும்.
அந்தமான் நிகோபர் தீவுகளில் கற்கால மனிதர்கள் போன்ற மனிதர்கள் இன்னும் வாழ்கிறார்கள். சுனாமியின்போது அவர்களில் ஒருவர் கூட இறக்கவில்லை. எல்லோருமே தப்பித்தார்கள். ஏனெனில் அவர்களுக்கு பறவைகளின் பாஷை புரியும். அவற்றின் குறிப்பறிந்து முன்பே அவர்கள் தப்பிவிட்டனர். அருணாச்சலப்பிரதேசத்தில் ஆபாதானி என்றழைக்கப்படும் ஒரு வகையான பழங்குடியினர் இருக்கிறார்கள். அவர்கள் எந்த மத்த்தையும் சார்ந்தவர்களில்லை. மனித ஜாதி ஒன்று மட்டுமே அவர்கள் அறிந்த ஜாதி. சூரியனையும் சந்திரனையும் மட்டுமே வழிபடுகிறார்கள். என் இறுதிக்காலத்தில் அந்த மக்களோடு சென்று என்னை நான் மதமற்றவனாக்கிக்கொள்ள ஆசைப்படுகிறேன்”
ஹேட்ஸ் ஆஃப் டு யூ கிரண்!!!
Really a different thrilling story of a walker man-vimalavidya
ReplyDeleteஎல்வின் பற்றிப் பெரிதாகப்பேசும் நம் சமூகம் கண்டிப்பாக இந்தக் கிரண் பற்றியும் பேச வேண்டும்
ReplyDeleteGREAT...!WONDERFUL PERSON! GREETINGS FROM NORWAY!
ReplyDeleteஅருமையான மனிதர். நல்ல கட்டுரை.
ReplyDeleteஉங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.