Tuesday, March 23, 2010

வீடு....


நன்றி : உயிர் மெய் சிறப்பிதழ் (2009-2010)

நாற்புறமும் சுவர்கள்தான்
ஆனாலும் நீ வெறும் சுவரல்ல!
உணர்வுகளின் கோர நர்த்தனத்தில்
நான் திக்குமுக்காடியபோது
அக்கறையாக அனுதாபமாக
அவ்வபோது இளக்காரமாக
என்னை ஆற்றுப்படுத்தியது
நீ மட்டும்தான்!

என் மகிழ்ச்சி... பொங்கிப் பிரவாகமெடுத்து...
அழகிய வண்ணப்பூச்சாக... உன் சுவர்களில்...!
என் கண்ணீர்... மழைநாளின் ஈரமாக
உன் சுவற்று கசியலாய்...!
என் கோபம்... கோடையில் அனலாய் தகித்திருக்கிறது உன்னில்..!
என் பைத்தியக்காரத்தனம்... உன் அழகிய வண்ணப்பூச்சின் இடையே..
தெறிப்பாய்... சுவரின் நடுவே..!
என் விரக்தியின் உச்சக்கட்ட எண்ணங்கள்...
உன் விட்டம் பூராவும் நிறைந்திருக்கின்றன...
என் உயிரைத் தாங்கிப் பிடித்தவாறு...!
என் மனதின் விசாலம்... உன் வாசலாய்..!
அவ்வபோது என்னுள் தோன்றும் வெறுமை...
உன் குழாய்களில்..!
எங்கிருந்தாலும் இவ்வுலகை நோக்கும் என் கவனம்...
உன் சாளரங்களாய்..!
என் மன அழுக்குகள்.. உன் சமையலறையின்
எண்ணை பிசுபிசுப்பாய்..!
என் நினைவலைகள்...
உன் பரணாக..!
என் மன இறுக்கம்... அவ்வபோது
காற்றை மறுத்த உன் புழுக்கமாய்..!
என் மன அதிர்வுகள் கூட...
பூகம்ப நடுக்கமாய்..!

அதிர்ச்சியை தாங்காமல் நொறுங்கும் என் மனதாய்..
ஒரு குண்டுவீச்சில் நீ தரைமட்டமாய்..!

இப்போது...
எவருமற்ற என் தனிமை.. உன் வெற்றிடமாய்..!

- கவின் மலர்

8 comments:

 1. GREAT EXPRESSION...SAD MEMORIES..!!!

  ReplyDelete
 2. பாராட்டுதலுக்குரிய கவித்திறன்!
  அருமையான சிந்தனை!
  வாழ்த்துக்கள் கவின் மலர்!
  வெங்கட் ராஜ்

  ReplyDelete
 3. Anonymous7:59 pm

  Good ...wonderful...keep on post..

  ReplyDelete
 4. கவின், உங்கள் கவிதையில் நாங்கள் முகம் பார்த்துக் கொள்கின்றோம்! வேறென்ன சொல்ல! அழகாக இருப்பதாக எண்ணிக் கொண்டுதான் கண்ணாடியை பார்க்கின்றோம், ஆனால் அது நமது அழுக்குகளையெல்லாம் காட்டி கேலி செய்து விடுகின்றது, கண நேரமேனும்.
  வேதனையாகவும் வெட்கப்படவும் வைக்கின்றன உங்கள் வரிகள்! சில வரிகள் நடுங்க செய்கின்றன! சில வரிகள் 'இதற்கு மேலும் நீ வாசிக்கப் போகின்றாயா?' என்று கேலி செய்கின்றன. நிச்சயமாய் சொல்வேன், வாசித்த நாளில் வேறொரு வேலையிலும் மனசு ஒன்றாது.
  இக்பால்

  ReplyDelete
 5. Anonymous12:38 pm

  good kavithiyil oueir erukirathu

  <>

  ReplyDelete
 6. pekarunakaran12:42 pm

  இனிய கவின்.
  நல்ல கவிதை. வீடு பற்றி மாலன் சார் ஒரு கவிதை எழுதியிருப்பார். ‘வீடென்று எதனைச் சொல்வீர்? இது அல்ல எனது வீடு’ என்று ஆரம்பிக்கும் அந்தக் கவிதை. வீட்டைப் பற்றி வந்த கவிதைகளில் எனக்குப் பிடித்தது. உங்கள் கவிதையும் மனதின் பல்வேறு மூலைகளிலும் நுழைந்து சில ரசவாதங்களைச் செய்து விட்டது. நான் வாழ்ந்த வீடுகளின் பல்வேறு ஞாபகங்கள் குமிழியிட்டன. குண்டு விழுந்து வீடு இடிந்து போனது பற்றி எழுதியிருந்தீர்கள். குண்டுகளாலும், இயற்கைப் பேரழிவுகளாலும் எந்த வீடும் அழிவதில்லை. அவை என்றும் வாழும் நம் மனங்களில்.
  அன்புடன்,
  பெ. கருணாகரன்

  ReplyDelete
 7. ARAIKALIN VAZHIYEA UNARVUKALIN PALVERU KOLANGALAI URUVAKAP PADUTHI ULLEERKAL. ARUMAI.

  ReplyDelete
 8. நேற்று சென்னை வரும் வழியில் ஒரு மிகப்பெரிய பழைய வீட்டை இடிப்பதை பார்த்தேன். எத்தனை தலைமுறைகளின் சுவாசத்தை, கண்ணீரை, மகிழ்வை சுமந்து நின்றதோ அந்த வீடு. இந்த கவிதை அதை நினைவு படுத்தியது கவின். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுக

  ReplyDelete