Thursday, September 09, 2010

தலைநகர் சென்ற கலைமகள்

புதுடில்லியில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா என்றழைக்கப்படும் தேசிய நாடகப் பள்ளி - நாடகத்துறையில் ஈடுபாடு கொண்ட அத்தனை பேரின் கனவுக் கல்லூரி. அத்தனை மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு நாடகப்பள்ளி. அனைத்து மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் வருவதால் ஒரு குட்டி இந்தியாவே அங்கிருக்கும். நாடு முழுவதும் விண்ணப்பிக்கும் மாணவர்களில் 30 பேர் மட்டும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்ந்தேடுக்கப்பட்டு இக்கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். இங்கு இந்தி மட்டுமே பயிற்று மொழி. இந்தி தெரியவில்லையென்றால் சிரமம்தான்.

தமிழ்நாட்டிலிருந்து பல பேர் இக்கல்லூரிக்குச் சென்று பயின்றிருந்தாலும், பெண்கள் யாரும் இது வரை சென்றதில்லை என்பது வியப்பான உண்மையாய் இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து தேசிய நாடகப் பள்ளிக்குச் சென்ற முதல் பெண் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழிக்கு அருகே உள்ள தேவசகாயம்மவுண்ட் என்கிற கிராமத்தைச் சேர்ந்த ஜானகி.



”ஒவ்வொரு மாணவருக்கும் 18 லட்ச ரூபாய் செலவு செய்கிறது அரசு. மாதந்தோறும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்குகிறது. 1963ல் இருந்து தேசிய நாடகப் பள்ளி செயல்படுகிறது. கர்நாடகா போன்ற மாநிலங்களிலெல்லாம் இதுவரை கிட்டத்தட்ட 45 பேர் இப்பள்ளியில் பயின்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிலிருந்து இதுவரை ராமானுஜம், கோபாலி, கே.எஸ்.ராஜேந்திரன், ராஜூ, சண்முகராஜா, பாரதி, ராஜேஷ் ஆகிய 7 பேர் மட்டுமே பயின்றிருக்கிறார்கள்  இத்தனை ஆண்டுகளில். தலித் சமூகத்தைச் சார்ந்த, மக்கள் மத்தியில் பணியாற்றக்கூடிய குழுவிலிருந்து செயல்பட்ட ஜானகி தமிழ்நாட்டிலிருந்து செல்லும் முதல் பெண்ணாகி இருப்பது தமிழ்நாட்டுக்கே பெருமை தரக்கூடிய விஷயம்.” என்கிறார் நாடகவியலாளர் பிரளயன்.

ஜானகியின் தந்தை செங்கல் சூளையில் கூலி வேலை செய்பவர். அம்மா விவசாயக்கூலி. “நான் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தேன். அதற்கு மேல் படிக்க வைக்க வீட்டில் வசதியில்லாததால் என்னை வேலைக்குப் போகச் சொன்னார்கள். அப்போது ’களரி’ கலைக்குழுவில் கோலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் என்று நிறைய ஆட்டக்கலைகளை வைத்து நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். இதையெல்லாம் பார்த்த எனக்கு அதையெல்லாம் கற்றுக்கொள்ளும் ஆர்வம் வந்தது. வீட்டில் சொல்லி அனுமதி பெற்று கலைக்குழுவில் சேர்ந்தேன். நிகழ்ச்சிகளுக்குச் செல்லுவதால் கிடைக்கும் பணமும் வீட்டிற்குக் கொஞ்சம் உதவியாக இருந்தது. அதன்பின் ‘முரசு’ கலைக்குழுவில் சேர்ந்தேன். கலைக்குழுக்களின் மூலம் எனக்கு சமூகம் குறித்த அக்கறையும் விரிந்த பார்வையும் வந்து சேர்ந்தன. சுற்றி நடப்பவற்றை கவனிக்க ஆரம்பித்தேன். கலைக்குழுவில் ஊர் ஊராகச் சென்று நிறைய வீதி நாடகங்கள் போடுவோம். அந்த அனுபவம் எனக்கு நிறைய கற்றுத்தந்தது. விசாலப் பார்வையை எனக்குள் ஏற்படுத்தியது. அதுதான் எனக்குள் நாடகம் குறித்த வேட்கையை உண்டுபண்ணியது.” என்கிறார்.

தேசிய நாடகப்பள்ளியில் சேருவதற்கான முதல் தகுதியே இந்தி தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஆங்கிலமாவது தெரிந்திருக்கவேண்டும். ஜானகிக்கு இந்தி சுத்தமாகத் தெரியாது. ஆங்கிலம் சரியாகப் பேச வராது. எப்படி சமாளித்தார்?

“நாடக் முகாம் ஒன்று நடந்த்து. அப்போதுதான் தேசிய நாடக பள்ளி பற்றி அறிந்துகொண்டேன். முகாமில் பயிற்சி பெற்ற பின் அதில் பயில்வதற்கு விண்ணப்பித்தேன். ஆனால் நேர்முகத்தேர்வில் என்னால் சரியாக பேச முடியவில்லை. எனக்கு விடை தெரிகிறது. தமிழில் சொல்லச் சொல்லி இருந்தால் கடகடவென்று சொல்லி இருப்பேன். ஆனால் ஆங்கிலத்தில் பேச வரவில்லை. அதில் நான் தேர்வாகவில்லை. அதன்பின் எங்கள் கலைக்குழு எனக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டு என்னை ஆங்கில வகுப்புக்கும் இந்தி வகுப்புக்கும் அனுப்பினார்கள். அடுத்த ஆண்டு விண்ணப்பிப்பதற்கு முன் இரண்டு மொழிகளையும் கற்றுக்கொள்ள என்னை எங்கள் முரசு கலைக்குழு ஊக்குவித்த்து. அடுத்த ஆண்டு விண்ணப்பித்து நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றபின் டெல்லிக்குச் செல்வதற்கு முன் நாடக இயக்குனர் அ.மங்கை என்னை அவரது வீட்டிலேயே தங்க வைத்து ஒரு மாதம் ஆங்கில இலக்கணம் கற்றுத்தந்தார். பிரளயன், பார்த்திபராஜா, சண்முகராஜா போன்ற பல பெரிய நாடக ஆளுமைகள் என்னை ஊக்குவித்தனர். கலைக்குழு தான் என்னை இப்போதும் என் படிப்புக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டு என்னை படிக்க வைக்கிறது.” என்கிறார் நெகிழ்ச்சியாக



நாடக இயக்குநர் அ.மங்கை “ஜானகியிடம் தமிழ்நாட்டு நாடகச்சூழல் மிகவும் எதிர்பார்க்கிறது. மக்கள் கலைகள், மக்கள் பிரச்சனைகளின் அடிப்படையில் நாடகங்களைக் கையாளும் ஒரு குழுவிலிருந்து ஒரு பெண்ணுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் பெருமைப்படத்தக்க விஷயம். ஜானகியின் குடும்பம் ஒன்றும் கலைக்குடும்பம் அல்ல. பொருளாதாரத்திலும் பின் தங்கிய குடும்பம் தான். ஆகவே இப்படி ஒரு பின்னணியிலிருந்து ஒருவர் நாடகப்பள்ளிக்கு தேர்வானதில் இரட்டிப்பு சந்தோஷம். மொழி ஜானகிக்கு பிரச்சனையாக இருந்தது. ஆனாலும் ஓராண்டு மொழியை கற்றுக்கொள்ளும்போது அவர் தனது ஆர்வத்தையும் உற்சாகத்தையும் இழக்காமல் இருந்த்து பெரிய விஷயம். தேசிய நாடகப்பள்ளி என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதாக இருக்கும்போது இந்தியும் ஆங்கிலமும் தெரிந்தால் தான் அங்கு செல்ல முடியும் என்ற நிலை இருக்கிறது. இந்தப் பிரச்சனை நெடுங்காலமாக நீடித்துக்கொண்டே இருக்கிறது” என்கிறார்.

ஏற்கனவே ஒரு தமிழ்ப்பெண் தேசிய நாடகப் பள்ளியில் படித்திருக்கிறார். ஆனாலும் அவர் டெல்லி வாழ் தமிழர். ஆக, தமிழ்நாட்டிலிருந்து நம் பெண் ஒருவர் தேசிய நாடகப்ப்பள்ளியில் சென்று சேர்ந்திருக்கிறார். இப்போது இரண்டாம் ஆண்டு படிக்கிறார் ஜானகி.

கல்லூரி வாழ்க்கை குறித்து உற்சாகமாக பேசத் தொடங்குகிறார்.
“அங்கு வெவ்வேறு மாநிலங்களிலிருந்து மாணவர்கள் வந்திருப்பதால் முதலில் மொழி பிரச்சனை இருந்த்து. எனக்குத் தெரிந்த அரைகுறை இந்தியால் கடும் சிரம்மாய் இருந்த்து. எனக்கு சில சமயம் இந்தியில் நட்த்தும் பாடங்கள் புரியாது. அப்போதெல்லாம் வகுப்பில் இடையில் நிறுத்தி அது என்ன என்று கேட்டு தெரிந்து கொள்ளாமல் அடுத்த வார்த்தை பேச ஆசிரியரை விட மாட்டேன். மாணவர்களிடமும் அப்படித்தான். என்னைப் பார்த்தாலே வகுப்பு மாணவர்கள் கொஞ்ச நாள் அய்யோ இவள் அது என்ன் இது என்ன என்று கேள்வி கேட்பாள் என்று பயந்து ஓடினார்கள். என்னைப் பார்த்து இவளுக்கு என்ன தெரியும் என்று நினைத்தவர்களும் உண்டு. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு வகுப்பிலும் நான் என்னை வெளிப்ப்டுத்த்த் துவங்கினேன். Body movements வகுப்பில் நான் தான் முதல் எப்போதும். எனக்கு ஏற்கனவே ஆட்டக்கலைகள் அத்தனையும் அத்துப்படி என்பதால் மிக எளிதாக எல்லாவற்றையும் கற்றுக்கொள்வேன். சில சமயங்களில் ஆசிரியர் வரவில்லையென்றால் என்னையே வகுப்பெடுக்கச் சொல்கிறார் இப்போதெல்லாம். இரண்டு இந்தி நாடகங்களிலும் நடித்துவிட்டேன்.” எனும் ஜானகி இப்போது தேசிய நாடகப் பள்ளியின் செல்லப் பிள்ளையாகி விட்டார்.

“நாங்களெல்லாம் துறைக்கு வந்த புதிதில் எங்களுக்கு வழிகாட்ட யாருமில்லை. எங்களுக்கெல்லாம் தேசிய நாடகப் பள்ளி என்று ஒன்றிருப்பதே தெரியாது. எங்கள் ஏக்கத்தையும் கனவையும் ஜானகி மூலம் நாங்கள் தீர்த்துக்கொள்கிறோம். ஜானகியின் திறமை மேல் நம்பிக்கை இருக்கிறது. ஒரு மிகப்பெரிய ஆளுமையாக ஜானகி தமிழ் நாடகத்துறையில் வரும் நாள் விரைவில் வரும்” என்கிறார் ஜானகி சார்ந்திருக்கும் முரசு கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த்.

- கவின் மலர்


நன்றி : புதிய தலைமுறை

1 comment:

  1. உண்மையில் நல்ல படைப்பு பெண்கள் உயரவேண்டும்

    ReplyDelete