கடந்த தி.மு.க. ஆட்சியில் சமச்சீர்க் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டபோது, 'ஆசிரியர்-மாணவர் விகிதம், பள்ளிக் கட்டடம், உள்கட்ட மைப்பு வசதிகள் உள்ளிட்ட எல்லாமே சமமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது சமச்சீர்க் கல்வி. இதைப் பொதுப் பாடத்திட்டம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, சமச்சீர்க் கல்வி என்று சொல்லக் கூடாது. அனைத்து வசதிகளை யும் அரசு செய்துவிட்டு, முழுமையான சமச்சீர்க் கல்வியை அமல்படுத்த வேண்டும்’ என்று தொடக்கத்தில் கல்வியாளர்கள் குரல் எழுப்பினர். அதன் பின்னர், 'சமச்சீர்க் கல்விக்கான முதல் படி’ என்ற வகையில், இந்தத் திட்டத்துக்குத் தங்கள் ஆதரவை வழங்கினர்.
ஆனால், இப்போதைய அ.தி.மு.க. அரசு இந்த முதல் படியையே நிறுத்திவிட்ட காரணத்தால் சமச்சீர்க் கல்விக்கான மற்ற வசதிகளையும் கேட்டு கோரிக்கை வைத்தால், அவையெல்லாம் நிறைவேறும் சாத்தியமே இல்லை என்ற கசக்கும் உண்மை தெளிவா கத் தெரிகிறது. சமச்சீர்க் கல்வியை நிறுத்தி வைக்கும் சட்டத் திருத்தம் முதல் சுப்ரீம் கோர்ட் அப்பீல் வரை தொடர்ச்சியாக அ.தி.மு.க. அரசு மாணவர்களுக்குத் துரோகம் இழைத்தே வந்திருக்கிறது.
ஜெயலலிதாவின் பிடிவாதக் குணம் மாறவே இல்லை என்பதற்குச் சாட்சி இந்த சமச்சீர்க் கல்வி விவகாரம். 'அவர் மாறிவிட்டார்; திருந்திவிட்டார்’ என்று கட்டியம் கூறியவர்களின் முகத்தில் கரியைப் பூசிவிட்டார் ஜெயலலிதா. டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், வைகோ, நெடுமாறன், ஜி.ராமகிருஷ்ணன், தா.பாண்டியன், கி.வீரமணி போன்ற தலைவர்களும், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உட்பட பல அமைப்புகளும் கேட்டுக்கொண்ட பின்னும், மேல்முறையீட்டுக்குச் சென்றது தமிழக அரசு. ஆனால், உச்ச நீதிமன்றமோ தமிழக அரசின் முகத்தில் கரி பூசிவிட்டது. அதே சமயத்தில், தி.மு.க-வினர் மீது நில அபகரிப்பு வழக்குகள் போடப்படுவதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டம் அறிவித்த தி.மு.க., மாணவர் நலனில் அக்கறை இருந்தால், தனது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஒரு நல்ல திட்டத் துக்குச் சமாதி கட்டப்படுவதை எதிர்த்துப் போராட்டம் அறிவித்து இருக்க வேண்டாமா?
இதுநாள் வரை இது குறித்து ஆசிரியர் சங்கங்கள் காத்து வந்த மௌனத்தைக் கலைத்து, சமச்சீர்க் கல்வியை வலியுறுத்தி யும், முத்துக்குமரன் கமிட்டியின் 109 பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரியும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவித்தது.
ஆகஸ்ட் 2 வரை புத்தகங்கள் வழங்க காலக்கெடுவை நீட்டித்து இருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆனால், இன்னமும் ஒரு பள்ளியில்கூட பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டதாகத் தகவல் இல்லை. இது குறித்து ஆசிரியர்களிடம் பேசியபோது, ''புத்தகம் எப்போது வரும் என்று எதுவுமே தெரியவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்கவும்கூட எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. அரசுக்கு எதிரான ஆள் என்ற முத்திரை விழுந்துவிட்டால், டிரான்ஸ்ஃபர் மாதிரி ஏதாவது நடவடிக்கை எடுக்குமோ அரசு என்கிற பயம் எல்லோருக்கும் இருக்கிறது. சமச்சீர்க் கல்வி பற்றி மாணவர்களிடம் பேசக் கூடாது என்று அரசு சுற்றறிக்கை அனுப்பி இருப்பதால், நீதிமன்ற உத்தரவை மாணவர்களிடமோ மற்றவர்களிடமோ சந்தோஷமாகப் பகிர்ந்து கொள்ளக்கூட முடியவில்லை. ஆசிரியர்கள் மத்தியில் அறிவிக்கப்படாத ஒரு எமர்ஜென்சி காலச் சூழல் நிலவுகிறது. ஆட்சியாளர்களின் விருப்பங்களையும் கொள்கை களையும் பள்ளிக்கூடத்தில் பின்பற்றும் இழிநிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டு விட்டது'' என்று வேதனைப்பட்டார் ஓர் ஆசிரியர்.
கூடுமானவரையில் புத்தகங்கள் வழங்குவதைக் கால தாமதம் செய்கிறது அரசு. உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி இந்நேரம் அனைத்துப் புத்தகங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், ஆகஸ்ட் 2 வரை புத்தகங்கள் வழங்க உச்ச நீதிமன்றம் காலக்கெடுவை நீட்டித்து உள்ளது. ஏன் அரசு இன்னும் புத்தகங்கள் வழங்கும் பணியைத் தொடங்கவில்லை?
''இணையத்தில் இருந்து சமச்சீர்க் கல்வி புத்தகங்களை முன்பே பதிவிறக்கம் செய்து வைத்து இருக்கிறோம். ஆனாலும், உத்தரவு வரும் வரை பாடம் நடத்த முடியாது என்பதால், குழப்பத்துடன் காத்திருக்கிறோம்'' என்கிறார்கள் சில ஆசிரியர்கள். இதற்கிடையே ஏற்கெனவே அச்சிடக் கொடுத்த பழைய பாடப் புத்தகங்களுக்கான ஆர்டரை அரசு இன்னும் ரத்து செய்யவில்லை. அச்சடிக்கும் வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
www.textbooksonline.tn.nic.in என்கிற அரசு இணையதளத்தில் இருந்த சமச்சீர்க் கல்வி நூல்களை இப்போது காணவில்லை. ஏற்கெனவே சமச்சீர்க் கல்வி அமலில் இருக்கும் 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கான நூல்களையும் சேர்த்து நீக்கி இருக்கிறது அரசு. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, சமச்சீர்க் கல்விக்கு உச்ச நீதிமன்றத் தின் இறுதித் தீர்ப்பில் தடை வாங்கி விடலாம் என்று அரசு எதிர்பார்க்கிறதோ என்பது ஆசிரியர்களின் அச்சமாக இருக் கிறது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், ''உடனடியாகப் புத்தகங்களை வழங்காவிட்டால், இது நாள் வரை
பொறுமையாக இருந்ததுபோல இனியும் இருக்க மாட்டோம்'' என்று அரசை எச்சரித்து உள்ளது. விருத்தாசலம் அருகே பள்ளி மாணவர்கள் அரசைக் கண்டித்து வகுப்புகளைப் புறக் கணித்துப் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். உச்சகட்டமாக, நீதிமன்ற உத்தரவை அவமதித்த தாக தமிழக அரசுக்கு வக்கீல் நோட்டீஸும் அனுப்பப்பட்டு உள்ளது.இந்தப் பிரச்னைகள் ஒருபுறம் இருக்க... தமிழக அரசு செய்த இன்னொரு காரியமும் மிகுந்த கண்டனத்துக்கு உரியது. சென்னை உயர் நீதிமன்ற விசாரணையின் போது நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை தவிர, ஒவ்வொரு உறுப்பினரும் தனித் தனியே கொடுத்த கருத்துகளையும் சமர்ப் பிக்க வேண்டும் என்று ஆணை யிட்டது நீதிமன்றம். அதன்படி சமர்ப்பிக்கப்பட்ட தனித் தனி அறிக்கைகளையும், இறுதி அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தனர் நீதிபதிகள்.
''நிபுணர் குழு அறிக்கை, ஒவ்வொரு உறுப்பினரின் கருத்தையும் பிரதிபலிக்க வில்லை. சமச்சீர்ப் பாடத்தில் பல திருத் தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், அதைப் படிப்படியாகச் செய்ய வேண்டும் என்றும் நிபுணர் குழுவில் ஒரு சிலர் கூறி உள்ளனர். ஆனாலும், சமச்சீர்க் கல்வியை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று அவர்கள் ஒட்டுமொத்தமாகக் கருதவில்லை. அதோடு, பழைய 2004-ம் ஆண்டு பாடத் திட்டங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் கூறவில்லை. ஆனால், அறிக் கையோ தமிழக அரசு எடுத்துள்ள நிலையைத் தான் பிரதிபலிக்கிறது. அதுமட்டுமல்ல, வரைவு அறிக்கை முதல் இறுதி அறிக்கை வரை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபீதாதான் முடிவு எடுத்து உள்ளார். சமச்சீர்க் கல்வித் திட்டம் சிறப்பானது என்றும், அது தேவையானது என்றும் நிபுணர் குழுவின் பெண் உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கிறார். அவரது முழு கருத்தும் எங்களிடம் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையில் இடம்பெறவில்லை. சமச்சீர்க் கல்வியின் ஆக்கபூர்வமான விஷயங்களையும் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். ஆனால், இவையெல்லாம் இல்லா மல் அரசின் கருத்து மட்டுமே இறுதி அறிக்கையாக வந்திருக்கிறது'' என்று தனது 81 பக்க தீர்ப்பில் கூறியிருக்கிறது நீதிமன்றம்.ஆக, நிபுணர் குழு, உறுப்பினர்களின் கருத்துகளைப் பிரதிபலிக்காமல், தன் இஷ்டத்துக்கு ஓர் அறிக்கையைத் தயார் செய்திருக்கிறது அரசு. இது மக்களையும் நீதிமன்றத்தையுமேகூட ஏமாற்றும் வேலை. நேர்மையற்ற இந்தச் செயலை நீதிமன்றம் மன்னித்தாலும், மக்கள் மன்றம் மன்னிக்கப் போவது இல்லை!
நன்றி : ஆனந்த விகடன்