Friday, January 25, 2013

அலறல்களின் பாடல்




வன்புணர்
முலைகளை வெட்டியெறி
பிறப்புறுப்பில் கடப்பாரையைச் செலுத்து
தெறிக்கும் குருதிச் சிவப்பு
உன் தெய்வங்கள் வீற்றிருக்கும்
கோயிலின் சுற்றுச்சுவருக்கு வண்ணமாகிறது

வன்புணர்
முந்திரிக் காட்டில்
நிர்வாணமாக்கு
அவள் உடைகள்
உன் கடவுளை அலங்கரிக்கின்றன

வன்புணர்
பள்ளிச்சீருடையில் ரத்தம் படரச் செய்
பின் முள்காட்டில் தூக்கியெறியுமுன்
அக்குழந்தையின் பால் மணத்தை
உன் மேனியில் வழித்து எடு
அதுவே
கோயிலின் தெய்வீக மணமாகிறது

வன்புணர்
மொட்டைமாடியில் இருந்து வீசியெறி
அவளின் அலறல்
பக்திப் பாடலாகிறது

வன்புணர்
அவள் கதறலை அணுஅணுவாய் ரசி
அவள் கண்ணீர்
புனிதத் தீர்த்தமாகிறது

வன்புணர்
அடையாளம் தெரியாமல்
அவளைச் சிதைத்து
சிதையில் இடு
அச்சாம்பல்
பிரசாதத் திருநீறாகிறது

வன்புணர்
அவள் மூச்சை நிறுத்து
இத்தனை காலம்
அவள் உதிர்த்த
புன்னகைகள் கோக்கப்பட்டு
உன் கடவுளின் கழுத்தில்
மலர்மாலையாகின்றன

இனி
நீ வல்லாங்கு செய்ய
சேரிவாழ் பெண்கள் எவரும் இலர்
காமுற்ற நீ
கோயிலுக்குள் நுழைகிறாய்

உன் முந்தைய வன்புணர்ச்சிகளின்
சாட்சியங்களைச் சுமக்கும்
அக்கோயிலுக்குள்
நீ அடியெடுத்து வைக்க வைக்க
பெண் கடவுளர்களின் கற்சிலைகள்
நடுங்கத் தொடங்குகின்றன!

Monday, January 21, 2013

சாத்தானும் சிறுமியும் - யூமாவாசுகியின் கவிதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை


எப்போதும் தனது கவிமனநிலையைத் தக்க வைத்துக் கொள்வது ஒரு கவிஞருக்கு சவாலானது. மனம் சஞ்சலம் அடையும்போதும், தாங்கவியலாத துயரத்தில் உழலும்போதும், காதலில் பொங்கும்போதும், அளவு கடந்த மகிழ்ச்சியில் துள்ளும்போதும், கோபம் கொண்டு அறச்சீற்றம் கொள்ளும்போதும் என உணர்வுகளால் உந்தப்படும்போதெல்லாம் ஓர் அருவிபோல் நுரைத்துக்கொண்டு கவிதை கொட்டும். கவிதை எழுதத்தூண்டும் இந்த உணர்வெழுச்சியை தக்கவைப்பது என்பது பெரும்பாடு. இந்தக் கவிதையை நான் தான் எழுதினேனா..என்று எண்ணி வியப்பதும், அத்தகைய மனநிலை மீண்டும் வாய்க்காதா என்று ஏங்கித்தவிப்பதுமான ஒரு சூழல் துயரமானது. கவிமனத்தை மீட்டெடுப்பதற்கான விருப்பம் எப்போதும் இருந்தாலும் நினைத்தபோதெல்லாம் அது முடிவதில்லை. ஆனால் இந்த மனிதர் மட்டும் எப்போதும் கவிமனநிலையைத் தக்கவைத்துக்கொண்டு வலம் வருவது எப்படி என்றெண்ணி நான் வியக்கும் மனிதர் யூமாவாசுகி.

யூமாவின் கைகளில் மொழி விளையாடுகிறது. அதிலும் ஒரு மழலையாக விளையாடுகிறது. மழலையின் மொழி அறிவுப் போர்வையை வலிந்து  போர்த்திக்கொள்வதில்லை. தன்னளவில் உண்மையாய் குழந்தமையுடன் சிரிக்கும் மொழி அது. குழந்தையின் முகத்தில் தோன்றும் வசீகரப் புன்னகையை ஒத்த யூமாவின் மொழி, குழந்தைகள் குறித்த கவிதைகளில் உச்சத்தைத் தொடுகிறது. இந்தக் கவிதைகளை மேலும் உயர்வு செய்யும் விதமாக அமைந்திருக்கும் மணிவண்ணனின் ஒவியங்கள் தம்மளவிலேயே தனித்துவச் சிறப்புடன் பிரகாசிக்கின்றன

குழந்தைகளுக்காக எழுதுவது, குழந்தைகள் குறித்து எழுதுவது என்ற இரண்டில் குழந்தைகளுக்காக எழுதுவது மிக மிகச் சிரமம். குழந்தைகளின் மனவுலகுக்குள் நுழைந்துபார்க்கும் திறனும் உள்ளமும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. எவ்வளவு சிரமப்பட்டு எழுதினாலும் அது பெரியவர்களுக்கானதாக மாறிவிடும் அபாயத்தோடுதான் குழந்தைகளுக்காக எழுதவேண்டியிருக்கிறது. ஆனால் யூமாவாசுகி ஏராளமான நூல்கள் குழந்தைகளுக்காக எழுதி இருக்கிறார். வேற்றுமொழிகளில் குழந்தைகளுக்கென்று இருக்கும் எழுத்துக்களைத் தேடிப்பிடித்து தமிழில் அளித்து வருபவர்.

குழந்தைகள் குறித்த கவிதைகளில் குழந்தைகளை வியந்து நோக்குவது, அவர்கள் மேல் அன்பு காட்டுவதான கவிதைகள் ஒரு வகை. ஆனால் குழந்தையுடன் ஒரு சக பயணியாகவே தனது கவிதைகளில் கூட வருகிறார் யூமா. குழந்தைக்குத் தோழனாக, பாதுகாவலனாக, தந்தையாக, சேவகனாக, ரட்சகனாக, பார்வையாளனாக என்று தனது கவிதைகளில் பல அவதாரங்கள் எடுக்கும் யூமாவாசுகி பல சமயம் தானும் குழந்தையாகி விடுவதைக் காண முடிகிறது. ஆனால், இவற்றில் எந்த பாத்திரமும் வகிக்காமல், குழந்தைகள் மேல் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்ட யூமா உச்சம் தொடுவது குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த கவிதைகளில்தான். எழுதிப் பழக வேண்டிய கைகளிலால் கடுமையான வேலைகளைச் செய்யும் அவர்கள் அடையும் வேதனைகளை சொற்களால் வடித்த கவிதைகளில்தான். அதிகார மமதையுடன்  மீனா என்கிற வேலைக்காரச் சிறுமியிடம் ஏவல் செய்யும் முதலாளிக்கு நேர் எதிரான மனநிலையுடன் குற்றவுணர்வோடு பக்கத்து வீட்டில் குடியிருக்கிறார் கவிஞர். ஒவ்வொரு முறை தன் பிஞ்சுக் கரங்களால் கடினமான வேலைகளை அவள் செய்யும்போதும் அவள் தனக்குப் பிடித்தமான வேறொன்றைச் செய்ய தான் துணையிருப்பதாக கனவு காண்கிறார். ஒரு நாள் அவள் வீட்டுக்கு வெளியே துரத்தப்படுகிறாள்.

’கற்பனையல்லாது நிஜத்தில்
நான் அவளுக்குச் செய்த்தெல்லாம்
‘உன்னைப் பற்றி எப்போதாவது எழுதுவேன் மீனா’
என்று என் குறிப்பு நோட்டில் அந்த இரவில்
எழுதி வைத்ததுதான்’

என்கிறார். நம் வாழ்நாளில் நாம் பார்த்த குழந்தைத் தொழிலாளர்கள் கண்முன் வந்து போகிறார்கள். ஒரு கணமேனும் அவர்களை கருணையுடன் எண்ணிப் பார்க்கவைக்கும் கவிதை.

 ’’பெரு விழுதுகளில் இருத்தி நான் ஊஞ்சலாட்டும்போது
மேகத்தைத் தொட்டு வந்த ஈரத்தை
என் கரங்களில் அருளினாளோ..”

என்ற வரிகளின் பிரமிப்பிலிருந்து மீள வெகுநேரமாகிறது.

அன்புகாட்ட எவருமின்றி தவிக்கும் குழந்தைகள், துடித்தழும் குழந்தைகள், ஏந்திக்கொள்ள கரங்களற்ற குழந்தைகள், யாசிக்கும் குழந்தைகள் என்று பல்வேறுபட்ட குழந்தைகளை சமீபிக்கும் வழியின்றி துடித்துத் தவிக்கும் வேதனையையும், அச்சத்தின் துடிப்புகளுக்குள் எப்படி என் ஆறுதலின் முத்தங்களைக் கடத்தும் வழியறியாமலும், விரும்பியதொன்றின் பெயர் ஏதென்று தெரியாமல் ஏங்கிச் சிணுங்கும் பிடிவாதத்தின் தேவையை பூர்த்தி செய்வது எப்படி என்றும், கொஞ்சிக்கொண்டாடுதற்கு ஆளின்றி சோம்பிய குழந்தைகளை எப்படி சமீபிப்பதென்றும் ஏங்கும் பரிதவிப்பையும் அவர் விளக்குகையில்...குழந்தைகளின்மீது பொங்கும் அன்பைப் போல கவிஞர் மேல் அன்பு பொங்குகிறது..

‘’வீடுகளில் வெள்ளையடித்து மறைக்கப்படுகிற
அவர்களின் கிறுக்கல்களை
என் சுவர்களில் தோன்றச் செய்யும் மந்திரம்தான் என்ன?’’

என்று கேட்கிறார் யூமா. எனக்கென்னவோ வெள்ளையடிக்கப்பட்டாலும் யூமாவின் கண்களுக்கு மட்டும் அந்தக் கிறுக்கல்கள் புலப்படும் என்றே தோன்றுகிறது.

உலகின் எந்த மூலையிலும் உள்ள குழந்தைக்கும் அதன் அன்னைக்கும் இடையேயான உறவு அற்புதமானது. குழந்தை பேசும் மழலை தாய்க்குத்தானே முதலில் புரிகிறது. நமக்குப் பொருள்விளங்கா குழந்தையின் மிழறல்கள் பூக்களுக்குச் சமம் என்கிறார்.

வாசித்த நாள் முதல் பலரிடம் சொல்லி, வியந்து, பல முறை ஈரம் கசிய வைத்த கவிதையொன்று இந்தத் தொகுப்பில் இருக்கிறது. ‘மதுக்கடையில் உருளும் கோலிக்குண்டுகள்’. சட்டைப்பையில் கோலிக்குண்டுகளைச் சுமந்து, மதுக்கடையில் குற்றேவல் புரியும் ஒரு சிறுவன் குறித்த கவிதை.. எப்போது வாசித்தாலும் நெஞ்சம் நெகிழ்ச்சியில் உருகி விழிகளில் நீர் பெருக்கெடுக்கவைக்கும் கவிதை. எத்தனை  குழந்தைகளின் விளையாட்டுநேரத்தை நாம் தட்டிப் பறித்திருக்கிறோம்? அச்சிறுவன் மதுக்கடையில் பணிபுரிந்தாலும் மனம் தன் வயதையொத்த சிறுவர்களுடன் விளையாட ஏங்குவதையும், அவன் மீது அன்புடன் நெகிழ்ந்த நெஞ்சங்களின் மனிதநேயத்தையும் அற்புதமாகப் படம் பிடித்துக்காட்டும் இந்தக் கவிதை எத்தகைய கல்மனதையும் அசைத்துப் பார்த்துவிடும். ‘என்னுடன் வந்துவிடு. நான் உன்னை விளையாட அழைத்துச் செல்கிறேன். இனி நீ வேலை செய்யவேண்டாம், விளையாடு, படி, உனக்குப்பிடித்தமானதைச் செய்’ என்று அச்சிறுவனை மனதளவில் மதுபானக்கடையிலிருந்து நாம் அழைத்துச் சென்றுவிடுகிறோம்..

உணவு விடுதி ஒன்றில் பணிபுரியும் இரு சிறுவர்கள் தங்கள் முதலாளிக்குத் தெரியாமல் ரகசியமாய்ப் பேசிக்கொள்ளும் கவிதையில் அஞ்சி அஞ்சிப் பேசும் சன்ன வார்த்தைகள் வண்ணத்துப் பூச்சிகளாகின்றன. எவருடையை அதட்டலுக்கோ பேச்சை நிறுத்திவிட்டு ஏவல் செய்ய ஓடுகையில் வண்ணத்துப்பூச்சிகளால் ஆன பால்வீதி அணைந்து கடைசியாய் உயிர்விடும் ஒன்றி இறகுத் துடிப்பு ஓய்கிறது அவர்களின் முகத்தில்.

‘தீராத கணக்கு’ கவிதையில் வரும் அந்த்த் தாயிடம் பேசும் வார்த்தைகள்..என்ன சொல்ல? குழந்தையைக் காட்டிப் பிச்சையெடுக்கும் தாயிடம் ’என் முகத்தில் உமிழ்ந்து கேட்டிருக்கலாம் அல்லது என்னை அடித்துப் பிடுங்கியிருக்கலாமே. அந்தக் குழந்தை என்ன பாடுபட்டது’ என்று கேட்கும் யூமா இறுதியில் ‘தாயே என்னைக் கொன்று பழி தீர்க்க ஏன் உனக்குத் தெரியவில்லை?’ என்கிறார். குழந்தையின் உயிருக்காக தன் உயிரை ஒப்புக்கொடுக்க துணியும் கவி உள்ளம் பின் வேறென்ன சொல்லும்?

‘‘எங்கே யாருக்கு அவர்கள் கையசைத்தாலும்
அங்கே நானும் நின்று ஏற்றுக்கொள்வதெப்படி’’

என்று இவ்வுலகின் எல்லா தேசங்களிலும் உள்ள குழந்தைகள் யாருக்காக்க் கையசைத்தாலும் அதை அங்கே சென்று ஏற்றுக்கொள்ளும் வித்தையை யாசிக்கிறார் கவிஞர். அத்தனை குழந்தைகளின் கையசைப்பும் கவிஞருக்குத் தானாக வந்து சேர்ப்பித்துவிடும் வல்லமை இந்தக் கவிதைக்கு உண்டு. கவிஞரை நோக்கி கையசைக்கும் ஒரு சிறு குழந்தையாக நாமும் உருமாறிப்போகிறோம்..இந்தத் தொகுப்பை வாசித்து முடித்ததும்.

’இதை எழுதும்போது எவ்வளவு சுலபமாக
எவ்வளவு இசைவாக எவ்வளவு அழகாக
இதயத்திலிருந்து ரத்தத்தைத் தாள் மீது
மசியாக விட்டுக்கொடுக்கிறது பேனாமுனை’’

என்கிறார். இவை கவிதைக்காக எழுதப்பட்ட வார்த்தைகளாகத் தோன்றவில்லை. உண்மைதான். இதயத்தின் குருதியே பேனாமுனை வழியே கொட்டியதுபோன்ற கவிதைகளே இத்தொகுப்பு முழுக்கக் வாசிக்கக் கிடைக்கின்றன.

உயிரை உலுக்கும் வரிகளை எழுதிவிட்டு யூமாவாசுகி அவர் பாட்டுக்குத் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். எப்போதும் கிரீடத்தை கீழே வைக்காமல் சுமந்துகொண்டு திரிகிறவர்கள் இருக்கும் உலகில், நான் எழுத்தாளன் என்கிற கர்வமோ, கவிஞன் என்கிற செருக்கோ அற்ற எளிமையான மனிதராகவே எப்போதும் இருக்கிற யூமாவை வாழ்த்தும் தகுதி எனக்கில்லை. வாசிப்பின் மீது தீராத தாகத்தை ஏற்படுத்திய யூமாவாசுகி என்கிற அற்புத மனிதருக்கு, அவருடைய எழுத்துக்கு, அவர் அளித்திருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பிற்குப் பரிசாக அல்ல...கைம்மாறாக.. பெரும் அன்பும், முத்தங்களும் தவிர வேறெதுவும் கைவசம் இல்லை.

-கவின் மலர்,
சென்னை                                                                                                                    
04.08.2012

Thursday, January 10, 2013

அன்பானவர்களுக்கு ஒரு கடிதம்


ன்பானவர்களுக்கு...

 இந்தக் கடிதம் ஆண்களுக்கு மட்டுமே அல்ல. அனைத்துப் பாலினத்தவரை யும் உள்ளடக்கிய பொது சமூகத் துக்கு! துரதிர்ஷ்டவசமாகப் பெரும்  பாலான பெண்களின் அடிமனதிலும் ஆணாதிக்கம் பொதிந்துகிடக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆகவே, இது அத்தகைய பெண்களுக்கும் சேர்த்துதான்.

'என் வீடு... என் மக்கள்’ என்று வாழும் நம்மில் பலரையும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த டெல்லி மாணவியின் மரணம் அசைத்துப் பார்த்திருக்கிறது. பக்கத்து வீட்டில் இடி விழுந்தாலும் எனக்கென்ன என்றிருக்கும் மனோபாவத்துடன் இருப்பவர்களைக்கூட, தெருவில் இறங்கிப் போராடவோ அல்லது ஒரு சொட்டுக் கண்ணீர் விடவோ அல்லது கணநேரம் கவனிக்கவோ வைத்திருக்கிறது மிகக் கொடூரமாக நிகழ்ந்த அந்த வன்முறை வெறியாட்டம். டெல்லியில் 23 வயது மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, இரும்புத் தடிகொண்டு தாக்கப்பட்டு, வீசி எறியப்பட்டு குற்றுயிரும் கொலையிருமாகக் கிடக்கும் செய்தி வெளியானவுடன் பதறும் நாம், இத்தனை நாட்களும் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகளை வெற்றுச் செய்திகளாகக் கடந்துகொண்டுதானே இருந்தோம்? நம்மை சிந்திக்கவைக்க, நம்மைச் சமூகத்தின் மேல் அக்கறை கொள்ளவைக்க ஒரு பெண் தன்னுயிரை ஈந்திருக்கிறாள். இவ்வளவு கொடூரம் நடந்தால்தான் நான் திரும்பிப் பார்ப்பேன் என்கிற நம் மனநிலை சரிதானா? டெல்லியில் மட்டும் அல்ல... தமிழ்நாட்டில், நமக்கு மிக அருகே, நம் ஊரில் நடக்கும் பாலியல் கொடுமைகள்குறித்து நாம் கவலைப்பட்டு இருப்போமா?



டெல்லி மாணவியின் உண்மையான பெயர் எதுவாகவும் இருக்கட்டும். ஆனால், இந்தியப் பெண் களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாக உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் சித்ரவதை அனுபவித்த அந்த மாணவியை நான் 'அவள்’ என்றே உரிமையுடன் அழைக்க எண்ணுகிறேன். அவள் மீது இரும்புத் தடியால் விழுந்த ஒவ்வோர் அடியும் ஒவ்வோர் இந்தியப் பெண்ணின் மீதும் விழுந்த அடி. அந்தக் கதறல் நாடெங்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வெளியில் கூற இயலாமல் உள்ளுக்குள் மருகிக்கொண்டு இருக்கும் எண்ணற்ற பெண்களின் கதறல். மருத்துவ மாணவி அவள். ஒருவேளை இந்தக் கொடூரம் நிகழாமல் இருந்திருந்து, அவள் சகஜ வாழ்க்கை வாழ்ந்திருந்தால், அவள் ஒரு பிசியோ தெரபி மருத்துவர் ஆகியிருப்பாள். ராம்சிங்குக் குக்கூட பின்னாளில் அவள் மருத்துவ சிகிச்சை அளித்திருக்கக்கூடும். ராம்சிங் அவளைச் சிதைத்த ஆறு பேர்களில் ஒருவர். என்ன செய்வது?


மரணப்படுக்கையில் இருந்தபோது அவள் வாழ விரும்பியதாக அவளுடைய தாய் தெரிவிக் கிறார். என்னென்ன எண்ணியிருக்கும் அந்த மனம்? அவளுடைய சிந்தனை, கனவுகள், கற்பனைகள், எதிர்காலம், வாழ்க்கை எல்லாமும் அவளை எரித்த சிதையிலேயே சாம்பலாகிவிட்டன. ஆனால், அவள் இறப்பு பல  விவாதங் களுக்கு வழிவகுத்து இருக்கிறது.

நாகரிகம், கலாசாரம்குறித்த மதிப்பீடுகளை வைத்திருக்கும் சாதாரண மக்களை நோக்கியே இந்தக் கடிதம்!

டெல்லி மாணவி, ஏன் இரவு 9 மணிக்கு மேல் ஆண் நண்பருடன் வெளியில் சென்றாள் என்றும், பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் அத்துமீறல்களுக்கெல்லாம் பெண்கள் உடுத்தும் உடைதான் காரணம் என்றும் கருத்துக் கூறுபவர்களை நோக்கி ஒன்று கேட்க விரும்புகிறேன். சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவி சரிகாஷாவின் துப்பட்டாவைப் பிடித்து இழுத்து அவள் உயிரைப் பறித்தனர். சிறைக்குள்ளேயே பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார் ரீட்டா மேரி. மகாராஷ்டிராவில் கயர்லாஞ்சியில் நடு வீதியில்... குடும்பத்தினரின் கண் எதிரே அணுஅணுவாகச் சிதைக்கப்பட்டார் பிரியங்கா. உத்தர்காண்ட் மாநிலத்தில் சோனாலி முகர்ஜியின் பொலிவான முகம் திராவகம் வீசிச் சிதைக்கப்பட்டது. திருக்கோவிலூரில் இருளர் பெண்கள் நான்கு பேரைக் காவல் துறையினர் வன்புணர்ச்சி செய்தனர். வாச்சாத்தி கிராமத்தில் வனத் துறை யினரும், காவல் துறையினரும் இணைந்து பெண்கள் மீது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டனர். காதலை மறுத்த காரணத்தால் காரைக்கால் விநோதினியின் பொலிவான முகம் மீது திராவகம் வீசப்பட்டது. இவர்களெல்லாம் அரைகுறை ஆடை உடுத்தியிருந்தனரா? அல்லது இரவு 9 மணிக்கு மேல் ஆண் நண்பருடன் வெளியில் சென்றனரா? தூத்துக்குடி அருகே ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஒரு பள்ளிச் சிறுமி வல்லூறுகளால்சிதைக்கப் பட்டு கொல்லப்பட்டாள். சிதம்பரம் முட்லூர் அருகே சந்தியா என்ற பெண், தான் வேலை பார்த்த ஸ்டுடியோவிலேயே அண்மையில் மூன்று பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். ப்ரியா என்கிற மாணவி விழுப்புரம் அருகே அண்மையில் கொலை செய்யப்பட்டார். இவர்கள் மூவருமே தலித் பெண்கள். சரிகாஷா, விநோதினி மீது ஏவப்பட்டது ஆணாதிக்கம் என்றால், திருக்கோவிலூர், வாச்சாத்தியில் நிகழ்ந்தவை அதிகார வர்க்கத்துடன் இணைந்த ஆணாதிக்கம். கயர்லாஞ்சி, தூத்துக்குடி, சிதம்பரம், விழுப்புரத்தில் அது சாதிய ஆணாதிக்கம்.

இன்றும் இந்தியக் கிராமப்புறங்களில் குளியலறை வசதி இல்லாத வீட்டுப் பெண்கள் குளங்களிலும் மற்ற நீர்நிலைகளிலும்தான் குளிக்கிறார்கள். அவர்கள் கட்டிய பாவாடையுடன்தான் குளிக்கிறார்கள். உடை தான் காரணம் என்றால், அவர்கள் அனைவரும் தினமும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு இருக்க வேண்டுமே? உங்கள் வீட்டுப் பெண்ணுக்கு வெளியில் சென்றபோது இப்படியான கொடூரம் நிகழ்ந்தால், அவள் குறைவாகவே உடுத்தி இருந்தாலும், அவள் உடுத்திய உடைதான் காரணம் என்று சொல்லி இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுவீர்களா?

இந்த 21-ம் நூற்றாண்டிலும் பொழுதுபோன பின்னால் பெண்களை வீட்டுக்குள்ளேயே பூட்டிவைப்போம் என்று கூறும் விந்தை மனிதர்களாக இங்கே பலர் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் என்று பல பெண்கள் விண்வெளிக்குச் சென்றார்கள். அவர்கள் வெளிநாடுகளில் வசித்தாலும், இந்தியாவின் சார்பாக விண்வெளிக்குச் செல்லவில்லையெனினும், பல தலைமுறைகளுக்கு முன்னரே அமெரிக்காவில் சென்று தங்கிவிட்டவர்களாகவே இருந்தாலும், 'எங்கள் இந்திய வம்சாவளிப் பெண் சாதித்துவிட்டாள்’ என்று கொண்டாடுகிறீர்களே? விளையாட்டுத் துறையில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்த பி.டி.உஷா, ஷைனி வில்சன், சானியா மிர்சா, சாய்னா நேவால், மேரிகோம் என்று அத்தனை பேரையும் உச்சி முகர்ந்து வரவேற்கிறீர்களே? உங்கள் சிலாகிப்புக்கு ஆளாகும் இவர்களுக்கு, விளக்கு வைத்த பின் வெளியில் செல்லக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டு இருந்தால், இந்தச் சாதனையை அவர்களால் நிகழ்த்தியிருக்க முடியுமா? இன்றைக்கு அபார சம்பளத்தை வாரி வழங்கும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் பெண்களில் பலர் இரவு நேரங்களில் பணியாற்றுகிறார்கள். அவர்களைப் பணிக்குச் செல்லக் கூடாது என்று தடுக்க முடியுமா? அந்த சம்பளத்தை அவர்கள் தத்தமதுக் குடும்ப நலனுக்குத்தானே செலவழிக்கிறார்கள்? உயிர் காக்கும் மருத்துவச் சேவையில் ஈடுபடும் செவிலியர் கள் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வந்து மருத்துவமனைகளில் பணி யாற்றக் கூடாது என்று சொல்லும் தைரியம் உங்களுக்கு உண்டா?

உலகம் எங்கோ சென்றுகொண்டு இருக்கிறது நண்பர்களே! ஆனால், நாம் இந்தப் புள்ளியில் தேங்கி நிற்கிறோம் என்பதை நினைக்க வேதனையாக இருக்கிறது. குற்றம் செய்தவர்களை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிகளாக்கும் விநோதம் இங்கே நிகழ்கிறது. இப்படிப்பட்ட விநோதத்தை நிகழ்த்துபவர்கள் உங்களில் சரிபாதியினர் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனம் இருக்கிறதா உங்களிடம்?

பாலியல் குற்றங்கள் வீடுகளிலும், குடும்பங் களிலும் நிகழ்கின்றன. எத்தனையோ பெண்கள் இவற்றை வெளியில் சொல்லா மல் தங்களுக்குள் புதைத்துக்கொள்கின்றனர். நெருங்கிய சொந்தங்கள்கூட பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழக அரசின் குற்ற ஆவண அமைப்பின் புள்ளி விவரப்படி 2011-ம் ஆண்டில் 677 பாலியல் வன்கொடுமை வழக்குகள் தமிழ்நாட்டில் மட்டும் பதிவாகி இருக்கின்றன. இந்தப் புள்ளிவிவரம் கூறுவது என்ன?

பெண்கள் மீதான பார்வை நமக்கு எப்படி இருக்கிறது? இந்தக் கேள்வி, பாலினப் பாகுபாடு இன்றி அத்தனை பேரின் முன்னரும் வைக்கப்படும் கேள்வி. பெண்கள் என்றால் யார்? இந்தக் குடும்ப அமைப்பும் சமூகமும் பெண்கள்குறித்து என்ன பார்வையை வளரும் குழந்தையின் மனதில் பதியவைக்கிறது? கள்ளங்கபடம் இன்றிப் பழகும் குழந்தைகளில், பெண் குழந்தை பெரியவளானதும், ஆண்களுடன் பேசத் தடை விதிப்பது, அவளை விளையாட அனுப்பாமல் வீட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்வது போன்ற நடைமுறைகள் இன்றும் தொடரத்தான் செய் கின்றன. ஒரு குழந்தை அதிக நேரத்தைச் செலவழிப்பது பள்ளியிலும் வீட்டிலும்தான். இந்த இரண்டு இடங்களிலுமே பெண்கள் குறித்து நாம் என்ன போதிக்கிறோம்? நம் வீடு களில் எத்தனை வீடுகளில் ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் சமமாகப் பாவித்து வளர்க்கிறோம்? வளரும்போது காட்டும் பாகு பாடு, ஓர் ஆண் குழந்தையின் மனதில் பெண் என்பவள் ஆணுக்கும் கீழே என்கிற கருத்தை மிக ஆழமாகப் பதிவுசெய்கிறது. இதன் நீட்சி யாகவே இன்றைக்குப் பெண்களுக்குப் பாலியல் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

ஓர் ஆண் வலுக்கட்டாயமாக ஒரு பெண்ணை வல்லாங்கு செய்துவிட முடிகிற ஒரு சமூகத்தில், திருமணத்தில்கூட ஒரு பெண்ணுக்கான சுதந்திரம் மறுக்கப்படுகிறது. அவளுடைய பாலியல் சுதந்திரத்தைக் கேள்வி கேட்கும் ஆணாதிக்கம்தான் தர்மபுரியில் மூன்று கிராமங்களின் மீது நடந்த தாக்குதலுக்கு அடிப்படைக் காரணம். திவ்யா என்கிற ஆதிக்க சாதிப் பெண் இளவரசன் என்கிற ஒரு தலித் இளைஞனைத் தன் துணையாகத் தேர்ந்தெடுக்கிறார். அப்படித் தேர்வு செய்யும் சுதந்திரத்தை அவளுக்கு மறுத்தவர்கள், சாதி உணர்வுடன் கூடிய ஆணாதிக்கத்தால்தான் மூன்று ஊர்களைக் கொளுத்தினார்கள். ஓர் ஆதிக்க சாதி ஆண், தன்னைவிட சமூக அடுக்கில் கீழே வைக்கப்பட்டுள்ள சாதியிலோ அல்லது தலித் சாதியிலோ துணையைத் தேர்ந்தெடுத்தால் அதற்காக இத்தகைய கொடூரத் தாக்குதல்கள் நிகழ்ந்திருக்கின்றனவா? நம் வீடுகளிலும் குடும்பங்களிலும் காணப்படும் பாலினப் பாகுபாடுதான் தர்மபுரி, டெல்லி வரை பயணிக்கிறது.

வீடுகளில் நிலைமை இப்படியென்றால், நம் கல்விக்கூடங்கள்? ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக பள்ளிகளும் கல்லூரிகளும் நடத்துவதே அடிப்படையில் மிகத் தவறானது. வளரிளம் பருவத்தில் இரு பாலினத்தவரையும் பிரித்துவைப்பதால், எதிர்பாலினத்தவரை ஏதோ கிடைப்பதற்கரிய பொருள் என்று இரு பாலினத்தாருமே நினைத்துக்கொள்வதற்கே வழிவகை செய்கிறது.
பாலினம் கடந்த நட்பு என்கிற ஒன்றுக்கு சாத்தியம் இல்லாமல் செய்யும் இந்தப் பிரிவினை கள், பெண்ணை ஒரு போகப் பொருளாகப் பார்க்கச் செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிக் கின்றன. வீடுகளிலும் கல்விக்கூடங்களிலும்

மட்டும் அல்ல; பொழுதுபோக்கச் செல்லும் திரையரங்குகளில் காட்டப்படும் திரைப்படங் களும், விளம்பரங்களும் பெண்களை நுகர்வுப்பொருளாகச் சித்திரிக்கின்றன. பெரும்பாலும் ஆண்களின் கைகளில் இருக்கும் இத்தகைய துறைகளில் பெண்களைச் சித்திரிக்கும் விதம் குழந்தைகளின் மனங்களில் ஆழமாகப் பதி கின்றன. இவற்றையெல்லாம் பார்த்து வளரும் பெண் குழந்தை, தன்னை ஆணைவிடப் பலவீன மானவள் என்றும், ஆண் குழந்தை தன்னைப் பெண்ணைவிடப் பலமானதாகவும் எண்ணிக் கொள்ளும் அபாயம் நிகழ்கிறது. ஆகவே, வாய்ப்பு கிடைக்கும்போது பாலியல் குற்றங்களில் ஈடுபட இவையெல்லாம் ஏற்கெனவே அடித்தளம் அமைத்துக்கொடுத்திருக்கின்றன.

நம் வீட்டுக் குழந்தைகளிடம் பாலினப் பாகுபாடு காட்டி வளர்ப்போம்; ஆனால், டெல்லியில் நிகழும் ஒரு வன்கொடுமைக்காக வருத்தப்படுவோம் என்று இருப்பதில் நியாயமே இல்லை. பெண் குழந்தைகளுக்கு 'குட் டச், பேட் டச்’ சொல்லிக்கொடுப்பதோடும், தற்காப்புக் கலைகள் கற்றுக்கொடுப்பதோடும் நின்றுவிடுவதல்ல இந்தச் சமூகத்தின் கடமை. ஆண் குழந்தைகளின் மனதில் எதிர்பாலினத்தவரைத் தோழமையுடன் அணுகக் கற்றுத்தர வேண்டும். குழந்தைகளை இருபாலினத்தவரும் படிக்கும் பள்ளியில் படிக்கவைப்போம். எதிர்பாலினத்தவருடன் நட்புகொள்ள அனுமதிப்போம்.

மாற்றங்கள் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும். நம் துறையில் இருந்து தொடங்க வேண்டும். நம் வீடுகளில் இருந்து தொடங்க வேண்டும்!


இப்படிக்கு,
உங்களில் ஒருத்தி.

(நன்றி - ஆனந்த விகடன்)