சீனிவாசன் - பிரதிபா ஜோடிக்கு திருமணமானது 2012 அக்டோபரில். ஒடிஷாவில் வாழ்ந்த அவர்களை ஆட்கொணர்வு மனு ஒன்றைப் போட்டு பிரதிபாவின் பெற்றோர் சென்ற வாரம் மதுரை நீதிமன்றத்துக்கு வரவத்தனர். தர்மபுரி திவ்யாவைப் போலவே பிரதிபா கணவனுடன் தான் இருப்பேன் என்று கூறிவிட, நீதிமன்றம் பிரதிபாவின் பெற்றோரிடம் தம்பதியின் வாழ்க்கையில் தலையிடக்கூடாது என்று உத்தரவிட்டு அனுப்பினர். திவ்யா வழக்கை நீட்டித்தது போல் நீட்டிக்காமல் உடனடியாக தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
காதல் திருமணங்கள் தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. ஆனால் அண்மைக் காலமாக காதலர்களும், புதுமண தம்பதிகளும் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். தனிமனித உணர்வான காதலையும், மண வாழ்க்கையையும் காப்பாற்றிக்கொள்ள சட்டத்தையும், காவல்துறையையும், நீதிமன்றங்களையும் எதிர்நோக்கி இருக்கும் அவல நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது. பெண்ணின் வீட்டிலிருந்து ஆட்கொணர்வு மனு போடுவதும் பெண் நீதிமன்றத்தில் வந்து ஆஜராவதும் காதலர்கள் காவல்துறையில் பாதுகாப்பு கோருவதும் சர்வசாதாரண காட்சிகளாகிவிட்டன.
தனிமனித உணர்வில் நீதிமன்றத்தின் தலையீடு கட்டாயம் என்று உண்டாக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழல் ஆரோக்கியமானதுதானா? காதல் இப்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நீதிதேவதையின் கட்டப்பட்ட கண்களுக்குள்ளாக ஒளியைத் தேடிக்கொண்டிருக்கிறது. இப்போது சேரனின் மகள் தாமினி விஷயமும் நீதிமன்றத்தில் உள்ளது. 18 வயதுக்குட்பட்ட காதலர்கள் தொடர்பான வழக்குகளை நீதிமன்றம் கையாளலாம்; ஆனால் 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் காதல் குறித்த வழக்குகளை நீதிமன்றம் இனி எடுக்கப்போவதில்லை என்று அறிவிப்பது நல்லது என்கிறார் அஜிதா. ‘’ஒரு பெண் காதலிக்கட்டுமே என்ன தவறு என்று பெற்றோரும் விடுவதில்லை. ஆறு மாதமோ, ஒரு வருடமோ கழிந்தால் அவன் சரியானவனா என்று அவளே கணிப்பாள். ஆனால் அதற்கு வாய்ப்பு தராமல் ‘நீங்கள் இருவரும் பேசக்கூடாது’’ என்று தடைவிதிப்பது சரியல்ல. அதுதான் பிரச்சனையை சிக்கலாக்கும். ஒருவனையே காதலிக்கவேண்டும், அவனையே கைபிடிக்கவேண்டும், கற்போடு இருக்கவேண்டும் என்கிற கருத்தின் அடிப்படையிலேயே பெண் காதலித்தால் பதறுகிறார்கள்.அவளுக்கு ஒரு காதலுக்கு மேல் வர வாய்ப்பில்லை என்று அவர்களாகவே முடிவு செய்துகொள்கிறார்கள். எல்லா பிரச்சனைகளும் இதிலிருந்துதான் துவங்குகின்றன’’ என்கிறார் அஜிதா.
இளவரசன் - திவ்யா விவகாரத்துக்குப் பின் மட்டும் தமிழகத்தில் பல காதல்கள் நீதிமன்றத்துகு வந்திருக்கின்றன. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச் செல்வி - விமல்ராஜ் தம்பதி தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சை காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். கடலூரை சேர்ந்த சௌமியா - அம்பேத்ராஜன் தம்பதி, விழுப்புரம் மாவட்டம் பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி - வேல்முருகன் தம்பதியும், நீடாமங்கலத்தைச் சேர்ந்த கீதா - ராமச்சந்திரன் தம்பதியும் பாதுகாப்பு கேட்டு காவல்துறையை நாடியவர்கள். இவை எல்லாமே இளவரசன் - திவ்யா பிரிவுக்குப் பின்னர் நிகழ்ந்தவை. தர்மபுரி மாவட்டம் வேப்பமரத்தூரு சுரேஷ் - சுதா தம்பதிக்கு வித்தியாசமான பிரச்சனை. மணமாகி ஒரு குழந்தையும் ஆனபின் ஊரில் உள்ள சாதி பஞ்சாயத்தில் சுதாவின் சாதிச் சான்றிதழைக் கேட்டிருக்கிறார்கள். தர மறுத்திருக்கிறார் சுரேஷ். சுதா ஒரு தலித் என்கிற தகவலை வேறு வழிகளில் பெற்றுக்கொண்டவர்கள் இவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருக்கின்றனர். இப்போது பாதுகாப்பு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர்.
‘’சாதிய உணர்வு கொண்டவர்கள் முன்பு அடக்கி வாசித்தார்கள். இப்போது ராமதாஸ் போன்றவர்கள் கொடுத்த தைரியத்தில் மிக வெளிப்படையாக தங்கள் சாதிய உணர்வை முன்னிறுத்துகிறார்கள். சாதி பஞ்சாயத்துக்களை கட்டுப்படுத்தும் சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வரவேண்டும். அப்போதுதான் அச்சம் இருக்கும். இப்போது ராமதாஸ் மீது அரசு நடவடிக்கை எடுத்ததால், சாதியவாதிகள் வெளிப்படையான செயல்பாடுகளில் ஈடுபடாமல் தம்பதிகளை அச்சுறுத்துவது போன்ற ரகசிய செயல்பாடுகளில் ஈடுபடுவதைக் காண முடிகிறது. இப்படி சாதி மறுப்பு மணம் புரிந்தவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதும் நீதிமன்றம், காவல்துறை தலையிட வேண்டியிருப்பதும் வருந்தத்தக்க நிலைதான். நம் சமூகத்தை 50 ஆண்டுகள் பின்னிழுத்துச் சென்றது போல் உள்ளது’’ என்கிறார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி.
(நன்றி : இந்தியா டுடே)
No comments:
Post a Comment