Wednesday, August 21, 2013

மணமாகி 17 ஆண்டுகள், 2 குழந்தைகள் - மறுபடியும் விளையாட்டுத்துறையில் பதக்கம் அள்ளும் கீர்த்தனா

திருமணம் பெண்களின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை உருவாக்குகிறது என்று வியப்பாக இருக்கிறது.  பல பெண்கள் தங்கள் திறமைகளை மறந்துவிட்டோ, மறைத்துக்கொண்டோ மணவாழ்க்கையில் ஈடுபடுகிறார்கள். குடும்பம், கணவன், குழந்தைகள் என்று வாழ்க்கை பாதையும் அப்படியே மாறிவிடுகிறது.  பலருக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் காலமும் தளமும் அதன்பின் வாய்ப்பதில்லை. அவற்றை தேடுவதுமில்லை. ஆனால் விதிவிலக்காக இதோ வந்திருக்கிறார் கீர்த்தனா. மணமாகி 17 ஆண்டுகளுக்குப் பின் மூத்த மகன் பொறியியல் கல்லூரியிலும், இளையமகன் பத்தாம் வகுப்பிலும் இருக்க மீண்டும் தன் பாதைக்குத் திரும்பியிருக்கிறார். அண்மையில் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த ஓபன் அத்லெடிக் போட்டிகளில் 100 மீட்டர் தடைதாண்டும் போட்டியில் இரண்டாமிடம் பெற்றார். அக்டோபர் 16 முதல் 27ம் தேதி வரை பிரேசில் நாட்டில் 35 - 90 வயதானவர்களுக்காக நடைபெறவுள்ள போட்டிகளில் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்கிறார்.  சீனாவில் நடந்த ஏசியாட் போட்டிகளுக்காக தேர்வு செய்யப்பட்ட கீர்த்தனாவுக்கு ஸ்பான்சர் கிடைக்காததால் கலந்துகொள்ளவில்லை. ‘’ஸ்பான்சர் பெறுவதுதான் மிகவும் கஷ்டமான காரியம். கொழும்பு செல்ல எனக்கு பெங்களூரைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் 20,000 அளித்தது. அதே நிறுவனம் பிரேசில் செல்வதற்கும் ஸ்பான்சர் செய்வதாகக் கூறியுள்ளது’’ என்கிறார்.கீர்த்தனா.  

பெங்களூருவில் வசிக்கும் கீர்த்தனா மதுரையில் தன் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தவர். படிக்கிற காலத்தில் விளையாட்டுத்துறையில் கால் பதித்து பல பதக்கங்களையும்  பரிசுகளையும் பெற்றவர். மதுரை இ.எம்.ஜி. யாதவா பெண்கள் கல்லூரியில் 1991-94ல் பி.ஏ.(வரலாறு) பயின்ற கீர்த்தனா மாவட்ட, மாநில, தேசிய அளவிலான தடைதாண்டும் போட்டிகள் பலவற்றில் பதக்கங்கள் பெற்றவர். 1995ல் பிஜிடிசிஏ முடித்தார். ஸ்ரீதருடனான அவருடைய காதல் பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன் கீர்த்தனாவின் பெயர் கிறிஸ்டினா. கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா, இந்துவான ஸ்ரீதரை மணந்துகொள்ள மதம் மாறி கீர்த்தனாவானார்.  கணவருடைய வீட்டில் அவர் விளையாட்டுத்துறையில் ஈடுபடுவதை விரும்பவில்லை. ஆகவே தன் கனவுகளை கைவிட்டுவிட்டு சாதாரண குடும்பத் தலைவியாக இரு குழந்தைகளுக்குத் தாயானார். இடையில் அவருக்கு ரயில்வேயில் வேலை கிடைத்தபோதும், அவர் கர்ப்பம் தரித்திருந்ததால் வேலைக்குச் செல்லமுடியவில்லை. வருமான வரித்துறையும் அவருக்கு வேலைதர முன்வந்தது. ஆனாலும் ஒரு சில காரணங்களால் கீர்த்தனா அந்த வேலைக்கும் செல்லவில்லை. 

கீர்த்தனாவின் தந்தை மதுரையில் ஒரு தனியார் நிறுவனத்திலும் தாய் நர்ஸாகவும் பணிபுரிந்தனர். விளையாட்டுக்காக விசேஷ உணவுகள் எதையும் உட்கொண்டதில்லை என்கிறர் கீர்த்தனா. ‘தினமும் முட்டை எடுத்துக்கொள்வேன். மற்றபடி வழக்கமான உணவுதான்’ என்கிறார். புனித ஜோசப் பள்ளியில் பயின்றபோது அவருக்கு உடற்கல்வி ஆசிரியராக இருந்த அன்னத்தாய் இவரை மிகவும் ஊக்குவித்ததாகக் கூறுகிறார். ‘’என்னுடைய பயிற்சியாளர் அழகு மலை எனக்கு பெரும் உந்துசக்தியாக இருந்தார். அவர் தான் நான் விளையாட்டுத்துறையில் ஆர்வம் வர காரணமானவர். தினமும் மதுரை ரேஸ் கோர்ஸ் ஸ்டேடியத்தின் பயிற்சிக்குப் போய்விடுவேன். மைதானத்தை 10 முறை சுற்றிவருவது, ஸ்ட்ரெட்சிங், டைமிங் செக், பளு தூக்குதல் என்று விதவிதமான பயிற்சிகள் உண்டு. வாரம் ஒரு முறை, அருகில் இருக்கும் ஏதாவது  10 கி.மீ. தொலைவிலுள்ள இடத்துக்கு ஓடிச் சென்று திரும்பி வருவேன். எல்லோரும் உறங்கிக்கொண்டிருக்கும் அதிகாலையில் நான் மட்டும் ஆளரவமற்ற சாலையில் ஓடுவது சுகமாக இருக்கும். சில சமயம் மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் உள்ள கம்பிகளை ஸ்ட்ரெட்சிங் செய்ய பயன்படுத்துவேன்’’ என்கிறார் கீர்த்தனா.

இரு குழந்தைகளுக்குப் பின் தற்போது 39 வயதாகும் கீர்த்தனா தன்னுடைய மறுவரவுக்கு காரணம் தன் கணவரே என்கிறார். ‘’என் கணவர்தான் என் கனவுகள் நிறைவேற வேண்டுமென்று என்னை வற்புறுத்தி மீண்டும் மைதானத்துக்கு அழைத்து வந்தவர். என் நண்பர்களுக்கும் என் வளர்ச்சியில் பெரும்பங்கு உண்டு. உடல் பருமனை குறைக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருபபர். நான் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன். தினமும் காலை 5 மணிக்கு பயிற்சிக்கு சென்றுவிடுவேன். ஒருவேளை நான் தூங்கிவிட்டால் என்னை என் கணவர்தான் எழுப்புவார்.’’ என்கிறார்.  தற்போது ஸ்ரீதர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். 
17 ஆண்டுகள் கழித்து மைதானத்தில் இறங்கிய அனுபவம் எப்படி? ‘’படிக்கிற காலத்தில் இருந்ததுபோலவே இப்போதும் அதே வேகம் இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பல ஆண்டுகள் பயிற்சி இன்றி இருந்துவிட்டு பழைய வேகத்தை எதிர்ப்பார்ப்பது தவறு என்று புரிந்தது. 6 மாதங்கள் கடுமையாக உழைத்தேன். காலை 5 மணி முதல் 6.45 வரை மைதானத்தில் பயிற்சிகள் செய்வேன். என் பழைய பயிற்சியாளர் அழகு மலையிடம் அலைபேசியில் அழைத்து வழிகாட்டுதல்களை பெற்றுக்கொள்வேன். பெங்களூருவில் என் கணவருடன் பணிபுரிபவரும் தடகள் வீரருமான ஆண்டனியும் எனக்கு பெரும் உதவியாக இருக்கிறார். அவரும் பிரேசில் போட்டிகளில் கலந்துகொள்கிறார்.’’ என்கிறார். ஆனாலும் மாணவியாய் இருந்த காலத்தின் வேகத்தை பெறமுடியவில்லை என்று கூறும் கீர்த்தனா வீட்டுவேலைகளுக்கென்று பணியாளர் யாரையும் வைத்துக்கொள்ளவில்லை. எல்லா வேலைகளையும் அவரே செய்கிறார்.

பிரேசிலில் 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் தடைதாண்டும் போட்டியில் பங்குபெறுகிறார். ஏன் தடைதாண்டும் போட்டிகளில் இத்தனை ஆர்வம்? ‘’எனக்கு அதுதான் நன்றாக வரும். பயிற்சியும் உண்டு. அப்படியிருக்கையில் வேறு ஏதாவது பிரிவில் சென்று ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை’’ என்கிறார்.
தங்கமும் வெள்ளியும் குவிக்கும் தாயை பிள்ளைகள் எப்படிப் பார்க்கிறார்கள்? ‘’என் இரு மகன்களுக்கும் என் குறித்து பெருமை. கொழும்புவில் 100 மீட்டர் பிரிவில் பதக்கம் வென்றாலும் 400 மீட்டர் பிரிவில் பங்குகொள்ளவில்லை என்று என் மூத்த மகன் கோபப்பட்டான். எனக்கு ஓட முடியாத அளவுக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்ததைச் சொன்னவுடன் தான் சமாதானமானான். ‘பக் மில்கா பக்’ இந்திப் படத்தைப் பார்க்கச் சொல்லி கேட்டுக்கொண்டே இருக்கிறான்.  விளையாட்டு வீரர் குறித்த அந்தப் படத்தைப் பார்த்தால் எனக்கு உந்துதலாக இருக்கும் என்கிறார். பார்க்கவேண்டும்’’ என்கிறார்.

மீண்டும் தடகளத்துக்கு வந்தபின் மாநில அளவிலும், தேசிய அளவிலும் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றார். கர்நாடகா சார்பாக விளையாடும் கீர்த்தனா கோலாரில் நடந்த மாநில தடகள போட்டிகலில் 100 மீட்டர் நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கமும், 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார். பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் கீர்த்தனா 100 மீட்டர் தடைதாண்டும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார்.  4க்ஷ்400 மீட்டர் ரிலே போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

39 வயது பெண் போல் இல்லாமல் இளமையாக இருக்கிறார் கீர்த்தனா. இவரது இளமைத் தோற்றத்தைப் பார்த்த போட்டி ஏற்பாட்டாளர்கள் கொழும்புவில் இவரைப் பார்த்து ‘’தலைமுடிக்கு டை அடிக்கிறீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார்கள். ‘’எனக்கு ஒரு முடி கூட நரைக்காதது அவர்களுக்கு சந்தேகத்தை உண்டுபண்ணிவிட்டது. நான் இளையவளாக இருப்பேனோ என்று எண்ணி என்னை விசாரித்தனர். என்னுடைய பாஸ்போர்ட்டைக் காண்பித்தும், என் போனில் எப்போதுமிருக்கும் என் மகன்களின் படங்களையும் காண்பித்தபின் தான் நம்பினார்கள்.’’ என்கிறார்.

மாணவ பருவத்தில் இவருடைய வழிகாட்டியாக இருந்த பழம்பெரும் தடகள வீரர் பார்த்தசாரதி அண்மையில் பெங்களூருக்கு ஒரு போட்டிக்கு வந்திருந்தபோது கீர்த்தனா என்று அழைக்கப்பட்டதால் அடையாளம் தெரியாமல் பேசாமலிருந்திருக்கிறார். ‘’நான் அவரிடம் சென்று பழைய கிறிஸ்டினா தான் நான் என்று சொல்ல அவருக்கு ஒரே ஆச்சரியம். மேலும் பல வெற்றிகளை நான் பெறவேண்டும் என்று வாழ்த்தினார்.  சீக்கிரமே கல்யாணம் செய்துகொண்டதால் நான் பல சாதனைகளை செய்யமுடியாமல் போய்விட்டது என்று இப்போதெல்லாம் அடிக்கடி தோன்றுகிறது. சாதித்தபின் திருமணம் செய்துகொண்டிருக்கலாம். ‘’ என்று ஆதங்கப்படுகிறார். சிறுவயது நினைவுகளில் மூழ்கும்போது கீர்த்தனாவின் பேச்சில் மின்னல் தெறிக்கிறது.  ‘’1988ல் திமுகவின் மாநாடு ஒன்று திருச்சியில் நடந்தது. அப்போது மதுரையிலிருந்து திருச்சி வரை நானும் இன்னும் சில நண்பர்களும் மாநாட்டு ஜோதியை ஏந்தியவாறு ஓடி கலைஞர் கையில் கொடுத்தோம். என் அப்பா இதுபோன்ற பல வாய்ப்புகளை எனக்கு உருவாக்கித் தந்திருக்கிறார். அம்மாவுக்கு விளையாடு, பதக்கம் குறித்து அவ்வளவாகத் தெரியாது. ஆனாலும் நான் பதக்கம் வாங்கினால் சந்தோஷப்படுவார்’’ என்கிறார்.

ஷைனி வில்சன், அஸ்வினி நாச்சப்பா, பி.டி.உஷா ஆகியோர் இவருடைய முன்மாதிரிகள். கீர்த்தனாவின் உறவினர்களும், அவருடைய கணவரின் உறவினர்களும் பிரேசில் போட்டிகளில் வெற்றிபெற வாழ்த்து கூறுகிறார்கள். இப்போது கீர்த்தனா கர்நாடகாவின் சொத்து. அவருடைய வார்த்தைகளில் சொல்வதானால் கீர்த்தனா கர்நாடகாவின் செல்லப்பிள்ளை.  இப்போதைக்கு கீர்த்தனாவின் ஒரே இலக்கு பிரேசில் போட்டிகள்தான். அதன்மூலம் தன் மகன்கள் தாய் குறித்து காணும் தங்கக் கனவுகளை நிஜமாக்குவதே அவருடைய குறிக்கோள்.

நன்றி : இந்தியா டுடே

1 comment:

  1. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பெண்தான்...

    ReplyDelete