Friday, September 27, 2013

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தமிழகத்தில் சாத்தியமா?

நரேந்திர தபோல்கர் கொலை செய்யப்பட்டபின், மஹாராஷ்டிர அரசு மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. அரசு கொண்டுவரும் சட்டங்கள் பலவற்றில் பொதுமக்களின் கருத்தை ஒட்டியே இருக்கும். ஆனால் இந்த சட்டத்தைப் பொறுத்தவரை பொதுக்கருத்துக்கு மாறாகவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.  ஜோதிராவ் பூலே, அம்பேத்கர் போன்ற முன்னோடிகளின் சீர்த்திருத்தக் கருத்துக்களும், தபோல்கரின் உயிர்த்தியாகமும் இந்த சட்டத்தை அங்கே சாத்தியமாக்கி இருக்கின்றன. ‘’தமிழக மக்கள் மஹாராஷ்டிர மக்களை விட முற்போக்கானவர்கள்தான். அங்கேயே மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் சாத்தியமென்றால் இங்கே ஏன் முடியாது?’’ என்கிறார் திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி.

கடவுள் மறுப்புக்கொள்கையும் மூடநம்பிக்கைகளுக்கும் சாதியத்துக்கும் எதிரான பெரியாரின் பிரச்சாரமும் தமிழகத்தை ஒரு முற்போக்கு மாநிலமாக்கியது. அவருடைய சுயமரியாதை இயக்கம் ஜோசியம், ஜாதகம் உட்பட பல மூடநம்பிக்கைகளுக்கு எதிராக களமிறங்கி போராடியது. ஆகவே பெரியார் இயக்கங்கள் தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் வரவேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றன. ‘’மாநில அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். அரசியலமைப்புச் சட்டத்தின் 51ஏ - எச் பிரிவு மக்களின் விஞ்ஞான மனோபாவத்தையும், மனிதத்தன்மையையும், கேள்விகேட்கும் திறனையும், சீர்த்திருத்தத்தையும் வளர்க்கவேண்டும் என்கிறது. ஆகவே மத்திய மாநில அரசுகளுக்கு இத்தகைய சட்டத்தைக் கொண்டுவரும் கடமை இருக்கிறது. மேலும் மூடநம்பிக்கைகளால் மக்கள் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். பொருள், பணம், நேரம் என்று இழந்திருக் கிறார்கள். ஆகவே இதுவே சரியான நேரம்’’ என்கிறார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கலிபூங்குன்றன்.  2009ல் தி.மு.க. ஆட்சியிலிருந்தபொது பேராசிரியர் மா.நன்னன் தலைமையிலான சமூக சீர்த்திருத்தக்குழுவில் பங்கேற்றிருந்ததாகவும் மூடநம்பிக்கை ஒழிப்பு உட்பட பல திட்டங்களை அரசுக்கு அப்போது அளித்ததாகவும் ஆனால் அதற்குள் அ.தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்றுவிட்டதாகவும் தெரிவித்தார்   கலிபூங்குன்ற ன்.

இடதுசாரிகளும் இந்தச் சட்டத்திற்காக பிரச்சாரம் செய்யத் தொடங்கி இருக்கின்றனர். ‘’மாவட்ட அளவில் கூட்டங்கள் நடத்தி இது குறித்த விழிப்புணர்வை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம்’’ என்கிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் ஸ்டீபன் நாதன். ஆனால் வலதுசாரிகளிடமிருந்து இச்சட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு வரக்கூடும். பெரியார் இயக்கங்கள், இடதுசாரிகள், தி.மு.க. ஆகியவை இச்சட்டம் தமிழ கத்தில் வரவேண்டும் என்கின்றன."மத்திய மாநில அரசுகள் இச்சட்டத்தை இயற்றவேண்டும். அறிவியல் மனப்பான்மை பற்றிய பாடத் திட்டம் பள்ளி - கல்லூரிப் படிப்பில் இணைக்கப்பட வேண்டும்’’ என்று கோரியிருக்கும் கருணாநிதி அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 51ஏ-எச் குறித்தும் குறிப்பிட் டிருக்கிறார்.

ஆனால், தி.மு.க. இப்படி கோரியிருந்தாலும், அதன் சொந்த கட்சி உறுப்பினர்களே மூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்டு உள்ளனர். மாநில மாவட்ட தலைவர்கள் அளவில் இலலை என்றாலும் கீழ்மட்டத்தில் உள்ள் தொண்டர் களிடையே அத்தகைய மனப்பாங்கு காணப்படுகிறது. அண்ணா துரையும் கருணாநிதியும் தங்கள் பகுத்தறிவுப் பேச்சுக்கள், திரைப்படங்கள்-நாடகங்கள், எழுத்துக்கள் என்று சாத்தியபப்பட்ட அனைத்து வழிகளிலும் பிரச்சாரம் செய்தனர்.  இப்போதுகூட நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கான பிரச்சாரம் அது.  தி.மு.க. தன் பகுத்தறிவு பிரச்சாரத்தால் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இப்போது கருணாநிதி குடும்பத்தில் உள்ளவர்களே கடவுளை வழிபட கோவிலுக்குச் செல்கிறார்கள். அவருடைய மஞ்சள் துண்டு குறித்து பலரும் விமர்சித்தும் அதை எடுக்கவில்லை. தி.மு.க.வின் தொலைக்காட்சி சேனல்களில் அறிவியலுக்கு எதிரான புராணங்கள் எல்லாம் ஒளிபரப்பாகின்றன. தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் அண்மையில் அளித்த பேட்டியொன்றில் அவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்று கூறியிருக்கிறார். முன்பெல்லாம் தி.மு.க.வின் அடிப்படை உறுப் பினர்கள்கூட கடவுள் நம்பிக்கை உண்டு என்று சொல்வதற்குக் கூட தயங்கிய காலம் ஒன்று இருந்தது. புட்டபர்த்தி சாய்பாபா சென்னை வந்தபோது தன் வாயிலிருந்து லிங்கம் எடுத்து திமுக தலைவர் துரைமுருகனுக்குத் தந்தார். தயாளு அம்மாள் சாய்பாபாவின் கால்களைத் தொட்டு வணங்கியது சர்ச்சைக்குள்ளானது.

முதல்வர் ஜெயலலிதா மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை கொண்டுவருவாரா? ‘’ஜெயலலிதாவின் சொந்த நம்பிக்கைகள் அவரை அதற்கு அனுமதிக்காது. ஆனால் அவர் என்ன செய்வார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதிரடியாக ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காக கொண்டுவந்தாலும் வரலாம். அவருடைய குணநலனை அடிப்படையாக வைத்துச் சொல்கிறேன். ஆர்வத்தை வைத்து அல்ல’’ என்கிறார் கொளத்தூர் மணி. பெரியாரின் கொள்கைகளில் இருந்து விலகிப்போய்விட்டதாக தி.மு.க. மீது விமர்சனங்கள் இருந்தாலும் அது வெகுதூரம் போய்விடவில்லை என்பதற்கான சான்றுகள் சில உண்டு. முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் கோயில் திருவிழா ஒன்றில் தீமித்ததை ‘காட்டுமிராண்டித்தனம்’ என்று வர்ணித்தார் கருணாநிதி. தி.மு.க.காரர்கள் யாரும் நெற்றியில் திருநீறு இடக்கூடாது என்றார். 

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அதன் பகுத்தறிவுக்கு ஒவ்வாத தன்மைக்குப் பெயர் போனது. சில மாதங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சகம் தமிழகத்தின் முக்கிய கோயில்களில் மழைவேண்டி யாகம் நடத்தச் சொல்லி உத்தரவிட்டது. அதன்படியே பல கோயில்களிலும் யாகம் நடந்ததை பகுத்தறிவு இயக்கங்கள் கண்டித்தன. ‘’மாணவர்களுக்கு தொடக்கப்பள்ளியிலேயே மரம் வளர்த்தால் மழை வரும் என்று சொல்லிக்கொடுத்துவிட்டு இங்கே அரசு தன் குடிமக்களை தவறாக வழிநடத்துகிறது. இது அறிவியலுக்கு ஒவ்வாத செயல்’ என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.

அதிமுக அமைச்சர்களும் தொண்டர்களும் மதம் தொடர்பான சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அதிகரிக்கும்போது தமிழக மக்களும் ஊடகங்களும் அதற்கு தகுந்த எதிர்வினை புரிந்திருக்கின்றன. முதல்வரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது ஒவ்வோர் ஆண்டும் அமைச்சர்களே மண்சோறு சாப்பிடுவது, தேர் இழுப்பது, அலகு குத்திக்கொள்வது, காவடி எடுப்பது, தீச்சட்டி ஏந்துவது போன்றவற்றில் ஒவ்வோர் பிப்ரவரி 24ம் முதல்வர் பிறந்தநாளின்போது ஈடுபடுவது சகஜமான காட்சிகள்.  அமைச் சர்களான கோகுல இந்திரா மண்சோறு உண்டதும், ப.வளர்மதி தீச்சட்டி ஏந்தியதும் தமிழ்நாட்டில் அதிசயங்கள் இல்லை. அதுபோலவே ஜெயலலிதா குருவாயூர் கோயிலுக்கு குட்டி யானையை காணிக்கையாய் அளித்ததும். ஜெயலலிதா தன் ஜோசியரைக் கேட்காமல் எதுவும் செய்வ தில்லை என்று சொல்லப்படுகிறது. முன்பு ஆட்சியிலிருந்தபோது, மகாமக குளத்தில் குளித்தால் நல்லது என்கிற மூடநம்பிக்கையில் லட்சம் மக்கள் கூடும் கும்பகோணத்துக்குச் சென்று, நெருக்கடியால் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதை தமிழக மக்கள் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது.

தான் மீண்டும் பதவிக்கு வந்ததால் கோயிலுக்குக் காணிக்கையாய் தன் நாக்கை வெட்டி நேர்த்திக்கடன் நிறைவேற்றிய  தன்னுடைய ’பக்தை’க்கு அரசு வேலை அளித்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது. சென்ற வாரத்தில் வெளியிடப்பட்ட இந்து சமய அறநிலையத்துறையின் ஆணை ஒன்று வியப்பை அளிப்பதாய் இருந்தது. கோயில் சொத்துக்களில் நாத்திகர்களுக்கு உரிமையில்லை என்றது அந்த ஆணை. அதாவது கோயில் நிர்வகிக்கும் சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றில் நாத்திகர்களின் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கிடையாது என்பதே அந்த ஆணை. சுய மரியாதை திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாநிலத்தில் இப்படியொரு ஆணை!  ‘’இந்து சமய அறநிலையத்துறை என்பது நீதிக்கட்சி ஆட்சியில் கோயிலின் கணக்குவழக்குகளைப் பார்த்துக்கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு துறை. அதற்கு மேல் அதற்கு எந்த அதிகாரமும் இல்லை. இப்படியொரு ஆணையை பிறப்பிப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கே விரோதமானது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இது ஒன்றும் நேபால் போல இந்து நாடு அல்ல’’ என்கிறது திராவிடர் கழகம்.

‘திராவிட இயக்கங்களுக்கும் திராவிடக் கட்சிகளுக்கும் வேறுபாடு உள்ளது’’ என்கிறார் எழுத்தாளர் பாமரன். திராவிட கட்சிகள் மட்டுமல்ல, பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதில் எல்லா கட்சிகளூம் போட்டி போடுகின்றன. எதிர்க்கட்சியான தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்த் பெரியார் பிறந்தநாளில் அவருடைய படத்துக்கு பூஜை செய்த செய்திகள் வந்தன. இந்து மக்கள் கட்சி, அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளர் சுப. உதயக்குமார் ‘நாசமாய் போக வேண்டும்’ என்று மிளகாய் அரைத்து செய்வினை வைத்தது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கூச்சனூர் சனீஸ்வரர் கோயிலுக்கு சனிப்பெயர்ச்சிக்காகச் சென்று வழிபட்டார்.

தமிழகத்தின் இப்படியான அத்தனை மூடநம்பிக்கைகளையும் பார்த்துக் கொண்டிருந்தாலும் பெரியார் இயக்கங்களும் இடதுசாரி இயக்கங்களும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவரவேண்டும் என முனைப்புடன் இருக்கின்றன. ‘’ஒத்த கருத்துடைய இயக்கங்களை ஒன்று திரட்டி தமிழக அரசை நிர்பந்திப்போம்’’ என்கிறார் ஸ்டீபன் நாதன். ‘’தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்’’ என்கிறார் கொளத்தூர் மணி. ‘’தமிழக அரசு செய்யுமா என்பதைவிட, செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துவோம்’’ என்கிறார் கலிபூங்குன்றன்.

திமுகவின் கருத்தையறிய முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியத்தை தொடர்புகொண்டபோது "இயல்பாகவே பகுத்தறிவாளர்கள் மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்படவேண்டும் என்று விரும்புவார்கள். பெரும்பாலான ஆத்திகர்களுக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஏனெனில் கடவுள் நம்பிக்கையும் மூடநம்பிக்கையும் வெவ்வேறானவை. நரபலி போல இன்னொரு உயிரை சித்தரவதை செய்யும் மூடநம்பிக்கைகளை ஆத்திகவாதிகூட ஏற்றுக்கொள்ளமாட்டார். இதுபோன்றவற்றையெல்லாம் தடுக்கும் சட்டம் கொண்டு வருவது நல்லதுதானே? ஆனால் அது அதிமுக ஆட்சியில் நடக்காது. கோயில் சொத்துக்களில் நாத்திகர்களுக்கு பங்கில்லை என்று அறிவித்த அ.தி.மு.க. அரசா கொண்டுவரும்? பெரியாரின் சீர்த்திருத்தக் கருத்துக்களான பெண்களுக்கு சொத்துரிமை, சுயமரியாதை திருமணங்களை அங்கீகரித்தது போன்றவற்றை தி.மு.க. தான் செய்தது. அதுபோலவே கலைஞர் விதைத்திருக்கும் இந்த விதையை அவரே மரமாக்குவார் என்று நம்புகிறேன்’’ என்றார்.

அ.தி.மு.க. வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சமரசத்திடம் பேசியபோது ‘’ போன ஆட்சியில் ஆடு-கோழி பலியிட தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தோம். ஆனால் அதை பெரியாரிஸ்டுகளே ஏற்றுக் கொள்ளவில்லை. மக்களின் நம்பிக்கையில் கைவைக்கிறார்கள் என்று எதிர்த்தார்கள். இரணியன் - பிரகலாதன் காலத்திலிருந்தே சமூகம் இரண்டு தரப்பாகத்தான் இருக்கிறது. பெரியாரும் ஆன்மீகவாதிகளும் ஒரே சமூகத்தில் இருந்தனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் புத்தர் மாதிரி யாராவது வந்து அவர்கள் கருத்தைச் சொல்வார்கள். ஒரு சிலர் அவர்களை பின்பற்றுவார்கள். மூடநம்பிக்கை எது என்பது அவரவர்தான் தீர்மானிக்கமுடியும். ஒவ்வொருவருக்கும் மூடநம்பிக்கை மாறும். இதையெல்லாம் சட்டம் போட்டு தடுக்க முடியாது. அப்படிப் போடவேண்டிய அவசியமும் இல்லை’’ என்கிறார்.

நன்றி : (இந்தியா டுடே)

No comments:

Post a Comment