முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் நடப்பதை தமிழ்மக்கள் தொடர்ந்து உலகுக்கு எடுத்துக்கூறி வருகிறார்கள். என்றாலும் ராஜபக்சா அரசு தொடர்ந்து தமிழர் பகுதிகளில் சிங்களர்களின் அடையாளங்களை புகுத்துவதை செய்துவருகிறது. கண்கூடாக நடக்கும் குடியேற்றங்கள் திட்டமிடப்பட்டவை என்பதை நிரூபிக்க இதுவரை ஆவணம் எதுவும் கிடைக்காமல் இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 28 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் மே 17 இயக்கம் வெளியிட்ட முக்கியமான ஆவணம் ஒன்று, குடியேற்றங்களை இலங்கை அரசு திட்டமிட்டு செய்கிறது என்பதை நிரூபிக்கிறது.
இலங்கையின் மன்னார் மாவட்டச் செயலகத்தின் சார்பில் அரசப் பிரதிநிதி எம்.ஒய்.எஸ். தேஷாப்ரியா கையெழுத்திட்டு முசலி என்கிற பகுதியின் பிரிவு செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் தெளிவாக பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. ‘’இன்று (18.07.2013) பிரிகேடியர் மெர்வின் சில்வா, பிரிகேட் கமாண்டர் 542 பிரிகேட் மற்றும் சிலர் முன்னிலையில் உங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவின்படி இந்த உத்தரவுகளை நீங்கள் பின்பற்றவேண்டும்:
1. 500 குடும்பங்களை குடியமர்த்துவதற்குரிய பொருத்தமான நிலப்பரப்பை கண்டறியவேண்டும்
2. ஒரு வார காலத்திற்குள் நிலம் சர்வே செய்யப்படவேண்டும்
3. இடம்பெயர்ந்தவர்களை பதிவு செய்யும் பணியை ஒரு வாரத்துக்குள் முடிக்க வேண்டும்.’’
மேற்கண்டவை உள்ளிட்ட பல உத்தரவுகள் அக்கடிதத்தில் உள்ளன. அரசாங்க அலுவல்ரீதியான இக்கடிதம் இலங்கை அரசு நடத்தும் குடியேற்றங்கள் குறித்த முக்கியமான ஆதாரமாக விளங்குகிறது என்று மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் கூறுகிறார்.
இலங்கை அரசு தனது கடிதத்தில் உள்நாட்டில் ஏற்கனவே இடம்பெயர்ந்தவர்கள் என்கிற பெயரில் அவர்களை மீள் குடியேற்றம் செய்வதாகக் கூறியே சிங்கள மக்களை தமிழர் பகுதிகளில் குடியமர்த்துகிறது. ஆனால் அவை தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள். அங்கே புதிதாக குடியேற்றம் செய்துவிட்டு அதை மீள்குடியேற்றம் என்பதாகக் கூறி தப்பிக்கிறது இலங்கை அரசு. முகாம்களில் வாழும் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்யவேண்டிய அரசு, அரைகுறையாக அவர்களை அனுப்பிவிட்டு, சிங்கள குடியேற்றத்தை செய்து வருகிறது.
இதற்கிடையே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரான நவநீதம் பிள்ளை இலங்கையில் பயணம் மேற்கொண்டு இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை குறித்தும், போரின்போது நடந்த மனித உரிமைமீறல்கள் குறித்தும் விசாரணை செய்ய தமிழர் பகுதிகளை பார்வையிட்டு தமிழர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். உலகம் முழுவதிலும் இருந்து 30க்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டு அனுப்பிய நவநீதம் பிள்ளைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் இலங்கையில் தமிழர் பகுதிகளை ராணுவமயமாக்குவது, சிங்களர்களை குடியேற்றுவது, தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் போன்றவற்றை அவர் விசாரணை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நவநீதம் பிள்ளை இலங்கையின் காணாமல் போன உறவினர்களை தேடும் அமைப்பு ஒன்று யாழ்ப்பாணத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. மக்கள் அவரிடம் கதறி அழுத காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்தன. முள்ளி வாய்க்கால் கிராமத்துக்குச் சென்ற போது அங்கு மீள் குடியேற்றம் செய்யப்பட்ட தமிழ்ப் பெண்கள், தங்களுக்கு இன்னும் வீட்டு வசதிகள், வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்றும், சில இடங்களில் தங்களது வயல் மற்றும் விவசாய நிலங்களை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றை தங்களுக்கு பெற்றுத்தருமாறும் கேட்டுக் கொண்டனர் என்றும் இலங்கையிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த இடங்களை சிங்கள அடையாளங்களாலும் சிங்கள மக்களை குடியேற்றம் செய்வதாலும் தமிழர் நிலங்கள் அவர்களுக்கு இல்லாமல் செய்வதும், அச்சத்தில் ஊரைவிட்டு அவர்களாகவே வெளியேறச் செய்வதுமே இலங்கை அரசின் நோக்கம்; வெளியாகியுள்ள ஆவணத்தின் மூலம் சிங்கள ராணுவத்தின் துணையுடன் அரச நிர்வாகம் சிங்கள குடியேற்றங்களை நடத்துகிறது என்பதை உணரலாம் என மே 17 இயக்கம் கூறுகிறது.
(நன்றி: இந்தியா டுடே)
No comments:
Post a Comment