Thursday, October 31, 2013

’இணைய’ சாதிகள்

சமூக வலைத்தள ஊடகங்களாகிய ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை இன்றைக்கு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துபவை என்றும் ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக்கூடியதாகவும் உள்ளது. ஒரு திரைப்படம் வெளியானால் கூட ஃபேஸ்புக்கில் அதற்கு என்ன எதிர்வினை என்பதில் திரைத்துறையினர் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படி வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்ட சமூக வலைத்தளங்களில் உண்மையில் ஆக்கபூர்வமாக ஏதாவது நடைபெறுகிறதா அல்லது வெறும் பொழுதுபோக்குக்காக பயன்படுத்தப்படுகின்றவா என்கிற ஆராய்ச்சியில் இறங்கினால், இவற்றை ஆக்கபூர்வமாக பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவே உள்ளனர். குறிப்பாக சமூக வலைத்தளத்தில் இயங்கும் பெரும்பாலான தமிழர்களின் உளவியல் ஆபத்தானதாக உள்ளது.

முன்பொரு காலம் இருந்தது. தெருக்களிலும், ஊர்ப்பெயர்களிலும் உள்ள சாதிப் பெயர்களை அகற்றிய காலம் அது. நபர்களின் பெயருக்குப் பின்னாலும் சாதியைப் போடுவது இழிவென கருதப்படும் தமிழ்நாட்டின் இந்த நிலைக்கு பெரியார் உட்பட பல சீர்த்திருத்தவாதிகள் சாதி ஒழிப்புக்காக போராடியிருக்கின்றனர். அதன் காரணமாக வெளிப்படையாக சாதிவெறியைக் காட்டுவது தவறு என்றிருந்தது.ஆனால் இன்றைக்கு மிக பூதாகரமாக சாதிவுணர்வு வெளியே வர சமூக ஊடகங்கள்  ஒரு வாய்ப்பாக அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. நன்கு படித்த வேலையில் இருக்கும் ஓர் தமிழ் இளைஞன் ஓர் அரசியல் கட்சியின்பால், ஒரு சமூக இயக்கத்தின்பால், ஒரு திரைப்பட கலைஞரின்பால் ஈர்க்கப்படுவதை புரிந்துகொள்ள முடியும். தேடல் உருவாகும் வயதில் அந்தத் தேடலுக்கான ஒரு வடிகாலாய் ஏதோ ஒன்றை நினைத்து அதில் ஈடுபடுவதை புரிந்துகொள்ள முடியும். ஆனால் தன் சாதியின் பின்னால் அணிவகுக்கும் ஆபத்தான போக்கில் இளைஞர்கள் ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி குழுக்கள் வலைத்தளங்களில் இயங்குகின்றன. அவற்றில் உறுப்பினர்களாக எந்த கூச்சமும் இன்றி இந்த படித்த தலைமுறை இயங்குகிறது. . தன் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போட்டுக்கொள்கிறது. இப்படி எல்லாமும் செய்யும் இந்த இளைய தலைமுறை தனக்கான அடையாளமாய் சாதியைத் தாங்கிப் பிடிப்பது அதிர்ச்சிகரமானது. இந்த திடீர்ப் போக்குக்கு என்ன காரணம்?

சமூக வலைத்தளங்களை உற்றுநோக்குபவரும் திரைப்பட இயக்குநருமான  ராம் ‘’உலகமயமாக்கலின் வீழ்ச்சி இது. சாதி மதம் என்று நம்மை குழு குழுவாகப் பிரித்துவிட்டது உலகமயமாக்கல். பெரியாரை நவீனமயமாக்கலுடன் தொடர்புபடுத்தலாம். நவீனமயமாக்கல் உற்பத்தியை அதிகரித்தது. அது தொழிற்துறையுடன் தொடர்புடையாதகவும் இருந்தது. ஆனால் உலகமயமாக்கல் உற்பத்தியை விட சேவைத்துறைக்கு முன்னுரிமை கொடுக்கிறது. அது இயல்பாகவே தனி சாதி, தனிக்குழு , தனி மதம் என்பதில் போய் முடிகிறது. நிலவுடைமை சமுதாயத்தின் கூறுகளாகவே சாதி இன்றைக்கு இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாகவே சாதியை மீட்டுருவாக்க முனையும் முயற்சிகளைப் பார்க்கிறோம். இனி தேசம், தேசியம் என்கிற சொற்களுக்கு அர்த்தமில்லாமல் போகும்.  சாதி போன்ற தனித்தனி அடையாளங்கள்தான் கலாசாரம் என்று பார்க்கப்படும். நிலைமை இன்னும் மோசமாகும்’’ என்கிறார்.

சாதியரீதியான அணிதிரட்டலை சமூக வலைத்தளங்கள் மிக இயல்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்கின்றன. எப்படி பழைய நண்பர்களை, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒன்று திரட்ட முடிகிறதோ அதுபோலவே தன் சாதியைச் சார்ந்தவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவரை அடையாளம் காண்பதும், தன்னுடன் இணைத்துக்கொள்வதும் எளிதாக உள்ளது. முன்பெல்லாம் சாதிக்காரர்களை திரட்ட மாநாடுகளும் கூட்டங்களும் நடந்தன. இப்போது சமூக ஊடகங்கள் அவற்றை மிகவும் எளிதாக்குகின்றன. இணையதளத்தில் இயங்கும்  ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியே கூட்டங்கள் நடைபெறுகின்றன. சாதி வெறி அவர்களை தனிப்பட்ட தாக்குதல்களிலும், பாலியல்ரீதியான சொல்லாடல்களை பயன்படுத்துவதிலும் ஈடுபடவைக்கின்றன.

‘’வெளியில் சொல்ல வெட்கப்பட்ட சாதி அடையாளத்தை இன்றைக்கு தமிழர்கள் பெருமையாக போட்டுக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொருத்தவரை வேலை பார்க்கும் இடத்தில் அல்லது வேறு ஒரு பொதுவெளியில் சாதிப் பெயரைச் சொல்லி ஒருவரை திட்டிவிட்டுப் போய்விட முடியுமா? அப்படிச் செய்தால் பலருக்கு பதில் சொல்லவேண்டும். அது கேவலம் என்கிற பார்வை இங்கே ஆழமாக விதைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சாதி அடையாளத்தை வெளிப்படுத்தி சோதனை செய்துபார்க்கும் கடைசி முயற்சியாக சமூக ஊடகங்களை சாதியவாதிகள் பயன்படுத்துகிறார்கள். முகமூடிகளை பயன்படுத்திக்கொண்டு எந்த சாதியினரையும் மதத்தினரையும் இகழும் வசதி இங்கே இருக்கிறது. சமுதாயத்தின் உண்மை முகம் இங்கே வெளிப்படுகிறது’’  என்கிறார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்.

‘’ஒரு உதாரணம் சொல்கிறேன். பொது வாழ்க்கையில் தமிழ்த்தேசியவாதிகள் திராவிட இயக்கங்களை இணைத்துக்கொண்டுதான் எல்லா இயக்கங்களையும் முன்னெடுக்கின்றனர். ஆனால் சமூக ஊடகங்களில் மட்டும் தமிழ்தேசியவாதிகள் தொடர்ந்து திராவிட இயக்கங்களை திட்டுவதையும் தாக்குவதையும், அவர்களை ஒழித்துக்கட்டவேண்டும் என்று செயல்படுவதையும் பார்க்க முடிகிறது. ஆக வெளியில் வேறு மாதிரி செயல்பட்டாலும் அவர்களின் உள்ளத்தில் உள்ளதை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்திவிடுகிறார்கள். ஆக சமூக ஊடகங்கள் அடிமனதில் உள்ளவற்றை வெளிச்சம்போட்டுக் காண்பிக்க ஓர் இசைவான இடமாக இருக்கிறது. ஆணாதிக்கவாதிகள் பெண்களுக்கு எதிராகவும், சாதியவாதிகளும் தாழ்த்தப்பட்ட மக்களை ஒழித்துக்கட்டவேண்டும் என்கிற எண்ணத்தில் வெளியில் குறைவாகப் பேசினாலும் சமூக ஊடகங்களில் அதிகமாக எழுதுகின்றனர். சமூகத்தை பிரதிபலிப்பதை விட சமூக ஊடகங்கள் சமூகத்தின் அகமனதை திறந்து காட்டுகின்றன எனலாம். இது ஆரோக்கியமான போக்கு அல்ல.’’ என்கிறார்.

சமூக ஊடகங்களில் சாதிரீதியான அணிதிரட்டல் என்பதை ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் ஒடுக்கும் சாதியினருக்கும் ஒரே அளவுகோல் வைத்துப் பார்க்ககூடாது என்கிறார் எழுத்தாளர் பாமரன். ‘’அச்சத்திலும் பாதுகாப்பின்மை காரணமாகவும் ஒன்றாகச் சேரும் ஒடுக்கப்படும் சாதியினரையும், அச்சுறுத்த ஒன்றாக சேரும் ஆதிக்க சாதிக்காரர்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது. இது மதங்களுக்கும் பொருந்தும். உளவுத்துறைக்கு சமூக ஊடகங்கள் மிகப்பெரிய உதவி புரிகின்றன. ஆதிக்க சாதி அடையாளத்துடன் நூறு பேர் வந்தால், அதில் பாதி உளவுத்துறையின் வேலை என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏற்கனவே சாதிரீதியாக பிரிந்துகிடக்கும் தமிழ்ச்சமூகத்தை மேலும் பிரித்தாளும் சூழ்ச்சியை அதிகாரம் செய்யும். என்னை கோபப்படுத்தவேண்டுமென்றால் எந்தப் பெயரில் வரவேண்டும், என்ன சொல்லி திட்டவேண்டும் என்பதையும் உளவுத்துறை அறியும். சாதியவாதிகள் பாதி உளவுத்துறை பாதி என்றுதான் சமூக ஊடகங்களின் சாதிய மோதல்களை பார்க்கவேண்டும். அப்படிப் பார்க்க நாம் தவறுகிறோம் என்று நினைக்கிறேன்’’ என்கிறார் பாமரன்.

”இணையத்தில் இருக்கிறார்கள் என்பதாலேயே அவர்கள் அறிவால் நவீனமானவர்கள் என்று கூறமுடியாது. கௌரவக் கொலைகளை, சாதிய வன்முறைகளை ஆதரிப்பவர்களாகவும், சாதிமறுப்பு திருமணங்களை எதிர்ப்பவர்களாகவும் இருக்கிறார்கள். நமக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது என்ற எண்ணம் வேறு. சாதிக்கு எதிரானவர்களை இழிவு செய்கிறார்கள். அவர்களை நட்புப் பட்டியலில் இருந்து நிக்கி ப்ளாக் செய்யவேண்டும். நிலைமை மோசமானால் காவல்துறைக்கும் செல்லலாம். அனைவரும் சமம் என்னும் ஜனநாயக நாட்டில் அவர்கள் செயல்பட இடமில்லை. நாஜிக்களுக்கு எதிராக ஐரோப்பாஅவில் எழுச்சி உண்டானது போல இங்கும் உருவாக வேண்டும்’’ என்கிறார் தலித் ஆதரவு கருத்துக்காக ட்விட்டரில் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டதால் காவல்துறையில் புகார் அளித்த எழுத்தாளர் மீனா கந்தசாமி. அவரது புகார் மீது இதுவரை நடவடிக்கை ஏதுமில்லை.

சாதியவாதிகள் ஒருபுறம் சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தினாலும் தொடர்ந்து ஜனநாயகவாதிகளும் முற்போக்கு இயக்கங்களும் எதிர்வினை ஆற்றுவதையும் காண முடிகிறது. ஆனால் இவர்களின் உரையாடலில் உள்ள நாகரிகமும் பண்பும் சாதிய அடையாளங்களுடன் வருபவர்களிடம் இல்லை. கெட்டவார்த்தைகள் மூலம் ஒருவரை கோபமடையச் செய்யும்போது உரையாடலின் தரம் குறைகிறது. எதிர்வினை ஆற்றுபவர்கள் பலர் அத்துடன் உரையாடுவதை நிறுத்திக்கொள்வதால் சாதியவாதிகள் சுதந்திரமாகவும் எதிர்க்குரலற்றும் சுதந்திரமாக உலவுவதைக் காணமுடிகிறது. சாதிகொரு குழு உள்ளதுபோன்றே சாதி ஒழிப்புக்கென்றும் குழுக்கள் உள்ளன என்றாலும் அப்படிப்பட்ட குழுக்களும், தனிநபர்களும் குறைவானவர்களே. 
சமூக ஊடகத்தில் எழுத, எழுத்தாளராகவோ, அறிவுஜீவியாகவோ, அறிவாளியாகவோ இருக்கவேண்டுமென்கிற அவசியம் இல்லை. சாமானிய மக்களும் எழுதலாம் என்பதே சமூக ஊடகங்களின் சிறப்பு. ஆனால் அது தவறாக பயன்படுத்தப்படும்போது அதற்கென சட்டங்கள் தேவை என்கிறார் திண்டுக்கல் எம்.எல்.ஏ. பாலபாரதி. ’’ஒரு பொதுமேடையில் ஒரு தலித் குறித்து தவறாக சாதிப்பெயர் சொல்லித் திட்டினால் எப்படி பி.சி.ஆர். வழக்கு போடமுடியுமோ அதுபோலவே சமூக ஊடகத்தில் எழுதினாலும் போடவேண்டும். கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் எதைவேண்டுமானாலும் எழுத முடியுமா என்ன? ’’ என்கிறார் பாலபாரதி.

நன்றி: இந்தியா டுடே

Thursday, October 10, 2013

மறைக்கப்பட்ட சகாப்தங்கள் - இந்திய சினிமா நூற்றாண்டு விழா

சினிமா நூற்றாண்டு விழா நடந்து முடிந்திருக்கிறது. பல்வேறு முணுமுணுப்புகள், சர்ச்சைகள், கருத்துவேறுபாடுகள் இவற்றுடன் கடந்த இந்த விழாவின் காட்சிகள் அனைத்தையும் தமிழக மக்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். திரைத்துறை பிரபலங்கள் பலரையும், சினிமா வரலாற்றில் மிக முக்கியமானவர்கள் பலரையும் விட்டுவிட்டதாகவும் சரியான முறையில் கௌரவப்படுத்தவில்லை என்பதும் பலருடைய வாதமாக இருக்கிறது. முழுவதும அரசியல் விழாவாக நடந்த இவ்விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டார். கேரள முதல்வர் உம்மன் சாண்டி கலந்துகொண்டார். கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் வரவில்லை. 1916ம் ஆண்டு தமிழின் முதல் சினிமாவான கீசகவதம் வெளியானதை வைத்து கணக்கிட்டால் 2016ல்தான் தமிழ்சினிமா நூற்றாண்டு வரும். இப்போது கொண்டாடப்பட்டது இந்திய சினிமாவின் நூற்றாண்டு. ஆனால் இந்திய சினிமாவை இவ்விழா பிரநிதித்துவப்படுத்தியதா என்பது கேள்விக்குறி. குறைந்தபட்சம் தமிழ் சினிமாவை சரியான முறையில் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை என்பதே பலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. 

திரையில் தோன்றும் முகங்களுக்கு மட்டுமே இங்கே மதிப்பு அளிக்கப்படுகிறது; திரைக்குப் பின்னாலிருக்கும் கலைஞர்களை புறக்கணிப்பது சரியல்ல என்கிறார் திரைப்பட விமர்சகர் தியோடர் பாஸ்கரன்.  ’’இதுவும் இன்னொரு சினிமா கலை நிகழ்வாக மட்டும் முடிந்துபோனது. சினிமாவின் தரத்தை மேம்படுத்த அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. சினிமாவை பாதுகாக்க திட்டங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை. சினிமாவின் மிகச் சிறந்த முன்னோடிகளை மறந்து, சிறந்த தமிழ்ப் படங்களை மறந்து வெறும் அரசியல் விழா எதற்கு? ஏதாவது விமர்சித்தால் இந்தக்கட்சிக்கு ஆதரவானவர் என்று முத்திரைகள் வேறு குத்தப்படுகிறது. கட்சிக்கு அப்பாற்பட்டு, தன் வசனம் மூலம் சினிமாவுக்கு புத்துணர்ச்சி ஊட்டிய கருணாநிதியை ஏன் மறந்தார்கள்? வெறும் நடிகர்கள் மேல் மட்டும்தான் கவனம் இருக்கிறது. ஆரம்பகால இயக்குநர்கள் ஒரு படத்தை எடுக்க என்ன பாடுபட்டிருப்பார்கள் தெரியுமா?’’ என்று வினவும் தியோடர் பாஸ்கரன் பிரிட்டிஷ் காலத்தில் ஆங்கிலேயர்களின் ஒடுக்குமுறையையும் தணிக்கையையும் தாண்டி படமெடுத்து தமிழ் சினிமாவை வளர்த்ததில் அன்றைய இயக்குநரகளுக்கு இருக்கும் பங்கை யாரும் அங்கீகரிக்கவில்லை என்று வருத்தப்படுகிறார். ராஜா சாண்டோ, நடராஜ முதலியார், ஏ.நாராயணன் போன்றோரின் சிறப்புகளை இந்த நூற்றாண்டுவிழாவின் மூலம் இன்றைய தலைமுறை அறிந்துகொள்ளச் செய்திருக்கவேண்டாமா என்கிறார். ’’இத்தனை ஆண்டுகளில் தேசிய விருது கிடைத்தது காஞ்சிவரம், மறுபக்கம் ஆகிய படங்களுக்குத்தான். சிறந்த இயக்குநர் விருது அகத்தியனுக்கும் லெனினுக்கும்தான் கிடைத்தது. ஆனால் இதுகுறித்து ஒரு குறிப்பும் இல்லை. அஞ்சல் துறை தமிழ் சினிமாவில் இதுவரை 50 பேருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது. இதுபோன்ற அரிய தகவல்களை எல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டிய விழாவாக நடந்திருக்கவேண்டிய விழா இது. நடனம், பாடல்கள் எல்லாம் சினிமாவின் கூறுகள்தான். ஆனால் அவை மட்டும் சினிமா அல்ல எனும்போது ஏன் இந்த விழாவில் இவற்றுக்கு மட்டும் முக்கியத்துவம்?’’ என்கிறார் தியோடர் பாஸ்கரன். இதையே எடிட்டர் லெனினும் கேட்கிறார். ‘’சினிமாவில்தான் நடனமும் பாடல்களும் வருகிறதே. இந்த மேடையிலும் அதேதானா? 20 நாட்கள் ரிகர்சலுக்கு ஆகும் செலவு எவ்வளவு? ஏன் இப்படி வீணாக செலவழிக்கவேண்டும்? அரசு அளித்த 10 கோடியில் என்ன செலவுகள் செய்யப்பட்டன என்று கணக்கு யாராவது சொல்வார்களா என்ன?’’ என்கிறார் கோபமாக.

தமிழ்சினிமா எப்போதுமே நாயக பிம்பத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்த விழாவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அதற்குள்ளும் கூட பழைய நடிகர்களுக்கு உரிய முக்கியத்துவம் இல்லை என்கிறார் தியோடர் பாஸ்கரன். ‘’நடிப்புத் தொழிலை கேவலமாக நினைத்த காலத்தில் இந்தத் தொழிலை ஏற்றுக்கொண்டு சினிமாவின் வளர்ச்சிக்கு உதவியவர்களுக்கு உரிய மரியாதை தரவேண்டாமா?’’ என்கிறார். கலை இயக்குநர் டிராட்ஸ்கி மருதுவும் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கு உரிய கௌரவம் வழங்கப்படவில்லை என்று ஆதங்கப்படுகிறார்.  ‘’இந்த சினிமா விழா தன்னிச்சையாக நடக்கவில்லை.  நடிகர்களை மட்டும் முன்னிறுத்துவது சரியான முறை அல்ல. திரைக்குப் பின்னால் உழைக்கும் மற்ற துறையினரை ஏன் கண்டுகொள்ளவே இல்லை. சினிமா என்றால் நடிகர்கள் மட்டும் இல்லையே? ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், கலை இயக்குநர்கள் என்று ஒரு படத்தின் வெற்றிக்கு உழைப்பவர்களை மறந்துவிட்டு இது என்ன விழா? ‘’ என்கிற டிராட்ஸ்கி மருது புதுமைப்பித்தன், வாசன் போல திரைத்துறைக்கு பங்களிப்பு செய்தவர்களையும் ஏதோ ஒரு வகையில் கௌரவித்திருக்கவேண்டும் என்கிறார். ”சினிமாவுக்கு வந்து சிறப்பான பங்களிப்பைச் செய்த ஜெயகாந்தன் போன்றோரை ஏன் அழைக்கவில்லை? சிறந்த படங்களை பாதுகாத்து வைக்க இங்கே எந்த ஏற்பாடும் இல்லை. அதற்காக ஏதாவது திட்டங்கள் இந்த நூற்றாண்டு விழாவில் அறிவிக்கப்பட்டதா? சினிமா குறித்த புத்தகங்களை சேமிக்கும் ஒரு அருங்காட்சியகம் இல்லை. சங்கீதத்துக்கும் இலக்கியத்துக்கும் இருப்பது போன்றதொரு ஆவணப்படுத்தும் ஏற்பாடு ஏன் சினிமாவுக்கு இல்லை?’’ என்று கேட்கிறார் தியோடார் பாஸ்கரன். உண்மையில் சினிமாவை ஆவணப்படுத்தி வைக்க அரசு எந்த ஈடுபாடும் காட்டவில்லை. பாலுமகேந்திராவின் வீடு, சந்தியாராகம் போன்ற படங்களின் மாஸ்டர் காப்பி வீணாகிவிட்டதாகக் கூறினார் பாலுமகேந்திரா. புத்தகங்களைக் காப்பாற்ற இருக்கும் நூலகங்கள் போல திரைப்படங்களைக் காப்பாற்ற எந்த ஏற்பாடும் இல்லை. சிறை படத்தின் இயக்குநர் ஆர்.சி.சக்தியை அண்மையில் சந்தித்த தியோடர் பாஸ்கரன் அவருடைய தற்போதைய நிலை குறித்து கவலைப்பட யாருமில்லை என்கிற சூழலில் இந்தக் கொண்டாட்டங்களுக்கு பதில் அவர்களுக்கான திட்டங்கள் எதையாவது இந்த 10 கோடியை வைத்து செய்திருக்கலாம் என்று ஆதங்கப்படுகிறார். அண்மையில் இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் துணை இயக்குநர்களுக்கு ஊதியத்தை முறைப்படுத்த பரிந்துரைக்கப் போவதாக அறிவித்திருந்ததையடுத்து வறுமையில் வாடும் துணை இயக்குநர்களின் மீட்சிக்கும் வழி ஏதும் அறிவிக்கப்படும் என்கிற எதிர்ப்பார்ப்பும் பொய்யானது. திரைப்பட ஆய்வு நூல்களை எழுதி தேசிய விருது பெற்ற அறந்தை நாராயணன், தியோடர் பாஸ்கரன், ஜீவானந்தன், ரூபா சுவாமிநாதன் ஆகியோரையும் இவ்விழா புறக்கணித்திருக்கிறது.

‘’தமிழர் வாழ்வியலை தமிழ் சினிமா எப்படி எல்லா காலத்திலும் காண்பித்தது என்பது குறித்த புரிதலை இந்த விழாவின் மூலம் இச்சமூகத்திற்கு விளக்க கிடைத்த வாய்ப்பு தவறவிடப்பட்டது. ஒருவருக்கு ஒருவர் தாஜா செய்வதுதான் இங்கே நடந்திருக்கிறது. திமுக, அதிமுக என்று மட்டுமே சுருக்கிப் பார்க்க முடியுமா சினிமாவை?’’ என்கிறார் டிராட்ஸ்கி மருது.

’’இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. பாரபட்சமாக நடக்கிறது. சினிமாவுக்காக கடுமையாக உழைத்த நாங்கள் என்ன முட்டாள்களா? என் தாத்தா இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.சுப்பிரமணியம். அவர் பிலிம் சேம்பரை தோற்றுவித்தவர்களில் ஒருவர். என் தந்தை புகழ்பெற்ற நடன இயக்குநர். 50 ஆண்டுகளாக 1600 படங்கள் வரை நடன இயக்கம் செய்திருக்கிறார். அவருடைய பெயரை நடன இயக்குநர்கள் சங்கம் விருதுக்காக பரிந்துரை செய்து அனுப்பியதாக விழா ஏற்பாட்டாளர்களிடமிருந்து கடிதம் வந்தது. விருது பெற தயாராக வருமாறு தகவல் வேறு வந்தது. ஆனால், விழாவுக்கு அழைப்பு கூட இல்லை’’ என்று தன் ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக தன் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார் காயத்ரி ரகுராம். நடன இயக்குநர்கள் பிருந்தா, கலா ஆகியோரும் இவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. கலா கலைஞர் தொலைக்காட்சியில் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சி நடத்துவதுதான் புறக்கணிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது

‘’கோளாறுகள் அனைத்திற்கும் பிலிம் சேம்பரையும், தயாரிப்பாளர் கவுன்சிலையும்தான் கேள்வி கேட்கவேண்டும்.  இந்த வயதிலும் கருணாநிதி எழுதுகிறார். வைரமுத்து, பா.விஜய், அப்துல் ரகுமான் போன்ற அவருக்கு நெருக்கமானவர்கள் கூட அவரை புறக்கணித்தது குறித்து கேள்வி கேட்கவில்லை. நான் கேயாரிடம் கேட்டால், அந்த ஆட்சியிலும்தான் விழா நடந்தது என்கிறார். அது ஒன்றும் நூற்றாண்டு விழா இல்லையே? ஆட்டம் பாட்டம் என்று  10 கோடி அரசுப்பணம் வீணானதுதான் மிச்சம். நான் சினிமாக்காரன் மட்டுமில்லை. பொறுப்புள்ள மனிதனாக என்னால் பல கேள்விகளைக்கேட்க முடியும். 10 கோடியை இதற்குத் தந்ததற்கு ஏதாவது ஒரு பகுதியில் சரியான முறையில் சாலைகளைப்போட செலவு செய்திருந்தால் உருப்படியாய் இருந்திருக்கும்’’ என்கிறார் லெனின்.

(நன்றி : இந்தியா டுடே)




Wednesday, October 02, 2013

இறந்தபின்னும் துயரம்

மனிதக் கழிவுகளை மனிதனே சுமக்கும் அவலம் நீடித்துவரும் நிலையில், அந்த துப்புரவுப் பணியை அருந்ததியின தலித் மக்கள்தான் செய்துவருகிறார்கள். அவர்களில் யாரேனும் இறந்தால் அடக்கம் செய்ய இடுகாடு கூட இல்லாமல் அல்லாடுவது ஒரு சமூக வன்முறை. 40 ஆண்டுகாலமாக இடுகாட்டுக்கான போராட்டத்தில் இருக்கின்றனர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வடுகபாளையம் கிராமத்தில் வசிக்கும்  சுமார் 70 குடும்பங்கள். மாவட்ட நிர்வாகம் தொடங்கி தலைமைச் செயலகம் வரை அரசிடம் பல முறை புகார் மனுக்கள் அளித்தும் இடுகாடு வசதி ஏற்படுத்தப்படவில்லை என்று கூறி வடுகபாளையம் கிராமமக்கள் சென்னிமலை பேருந்து நிலையம் முன்பு  செப் 13 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இத்தனை நாட்களாக அங்கிருந்த ஒரு புறம்போக்கு நிலத்தையே இடுகாடாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அந்த இடம் ஊரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. மழைக் காலங்களில் அந்த இடத்தை பயன்படுத்தமுடியாது. அருகில் உள்ள கால்வாயிலிருந்து தண்ணீர் ஊறி அங்கே கால்வைக்க முடியாது. அந்த சமயங்களில் 8 கி.மீ. சுற்றிக்கொண்டுதான் இடத்தைச் சென்றடைய முடியும். அதற்கும் வந்தது வினை. அரசு இனி அந்த இடத்தை பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டது. அப்படியென்றால் இடுகாட்டுக்கென்று தனியே இடம் ஒதுக்கித் தாருங்கள் என்று கேட்டபின், தலித் மக்கள் குடியிருப்புக்கு அருகிலேயே ஓரிடத்தை இடுகாட்டுக்கென ஒதுக்கியது. ’’ஆனால் தலித் மக்கள் அந்த இடத்தை இடுகாடாக பயன்படுத்துவதை ஆதிக்கசாதியான கவுண்டர் சாதியில் உள்ள சிலர் அனுமதிக்கவில்லை.’’ என்கிறார் போராட்டக்குழுவில் இருக்கும் லோகநாதன். பிரச்சனை ஆனவுடன் பெருந்துறை வருவாய் வட்டாட்சியர், காங்கேயம் சட்டமன்ற உறுப்பினரும் வந்து இடத்தை பார்வையிட்டு மறு உத்தரவு வரும்வரை யாரும் இடத்தை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்துவிட்டுச் சென்றனர். ’’ஆனால் ஆதிக்கசாதி தரப்பைச் சேர்ந்த டி.கே.பெரியசாமி என்பவரின் தூண்டுதலின்பேரில் அந்த இடத்தில் சாமிக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் அந்த இடத்தை குளமாக மாற்றவும் முயற்சி நடக்கிறது. அப்படியென்றால் நாங்கள் இடுகாட்டுக்கு எங்கே செல்வது’’என கேட்கின்றனர் தலித் மக்கள்.

மே மாதம் 15ம் தேதியன்று முருகன் என்பவர் இறந்துவிட, அவரை புதைக்கக்கூடாது என்று தகராறு ஆகிவிட, தலித் மக்கள் பிணத்துடன் சென்று சாலை மறியலில் அமர்ந்தனர். காவல்துறை பிணத்தை கைப்பற்றி முன்பு பயன்படுத்திவந்த இடுகாட்டில் வைத்து அடக்கம் செய்துவிட்டு ஒரு பெண் உட்பட தலித் மக்கள் 35 பேர் மீது அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக குற்றம் சாட்டி முதல் தகவல் அறிக்கை போடப்பட்டதாக ஊர்மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதில் 26 பேரை விசாரணை செய்ய அழைத்துச் சென்று சிறையில் அடைத்தது காவல்துறை.

இந்த வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும், இடுகாட்டு வசதி செய்து தருமாறும் கோரியே மக்கள் பலவிதத்திலும் போராடிவருகின்றனர். இது குறித்து காவல்துறை ஆய்வாளர் சிவகுமாரிடம் பேசியபோது ‘’வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து நான் முடுவெடுக்கமுடியாது. அரசாங்க மேலதிகாரிகள் உத்தரவு போட்டால் வாபஸ் பெற தயார்.’’ என்கிறார். சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆனபின்னும் தலித் மக்களுக்கு மட்டும் செத்தால் புதைக்க நாதியில்லாத நாடாகவே இந்தியா இருக்கிறது என்பது மட்டும் முகத்தில் அறையும் உண்மை.