Friday, January 17, 2014

தென் இந்திய நிர்பயா

தில்லி மாணவிக்கு நேர்ந்த பாலியல் கூட்டு வன்புணர்வு முடிந்து சரியாய் ஓராண்டு ஆகிவிட்டது. டிசம்பர் 16 அன்று ஓடும் பேருந்தில் அச்சமபவம் நடந்து சில நாட்கள் உடல்ரீதியாக சித்திரவதை அனுபவித்தபின்னர் டிசம்பர் 29ம் தேதி மரணமடைந்தார். தில்லி சம்பவம் பல பெண்களையும் இளைஞர்களையும் வீதிக்குக்கு வந்து போராடவைத்தது. அதே டிசம்பர் மாதம் ஊரெல்லாம் கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் காரைக்காலில் ஒரு பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார். ஒரு முறையல்ல..இரண்டு முறை சில மணி நேர இடைவெளியில். அதுவும் வெவ்வேறு கும்பல்களால் என்பது உச்சபட்ச  அதிர்ச்சி.

வன்புணர்வுக்கு ஆளான பெண் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்கள் அனைவரும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த காரைக்கால் நகரையும் அதைச் சுற்றிய பகுதியையும் சார்ந்தவர்கள். இந்தச் சம்பவத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்று காரணம் கூறி காரைக்கால் நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் வெங்கடாச்சலபதியும், ஏட்டு சபாபதியும் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையான காரணம் வேறு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 24ம் தேதி இரவு நடந்த நிகழ்வுக்கு 26 காலை 3 மணிக்குத்தான் முதல் தகவல் அறிக்கை போடப்பட்டது. அதிலும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டெண்ட் மோனிகா பரத்வாஜ் வந்தபின் தான் அதுவும் நடந்தது. முழுநாளும் ஓர் இரவும் காவல்துறை கட்டப் பஞ்சாயத்து செய்ய முனைந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. காவல்துறை தரப்பில் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது இக்குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கிறது. 

மோனிகா பரத்வாஜ் விரைந்து செயல்பட்டிருப்பதை பலரும் பாராட்டுகிறார்கள். இப்போது வன்புணர்வுக்கு ஆளான பெண் எப்படி இருக்கிறார்? “அவர் நலமாக இருக்கிறார். தைரியமாக இருக்கிறார். மருத்துவ சிகிச்சை முடிந்து தன் பெற்றோருடன் இருக்கிறார்” என்கிறார் மோனிகா. ஆனால் சமூகமோ அப்பெண்மீது பலவகையான குற்றச்சாட்டுகளைச் சொல்லி குற்றவாளிகளை காப்பாற்ற முனைகிறது. 

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் வசிக்கும் தெருவில்தான் இச்சம்பவம் நடந்த அறை உள்ளது. நாஜிம் அளித்த ஒரு பேட்டி சர்ச்சைக்குள்ளானது. அப்பேட்டியில் அவர் கூட்டு வன்புணர்வுக்கு ஆளான பெண்ணை பாலியல் தொழிலாளி என்றும் வழக்கு பதியுமுன் காவல்துறை இவற்றை கணக்கில் கொள்ளவேண்டும் என்றும் பேசியதாக செய்திகள் வெளியானது. இது குறித்து பெண்ணியவாதிகளும் பெண்ணிய இயக்கங்களும் தங்கள் கண்டனங்களையும் அதிருப்திகளையும் வெளியிட்டனர். ஆனால் நாஜிமிடம் இந்தியா டுடே தொடர்புகொண்டு பேசியபோது “நான் அப்படிச் சொல்லவில்லை. மற்றவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்றுதான் சொன்னேன். என் பேச்சு திரிக்கப்பட்டது” என்றார். காரைக்கால் காவல்நிலைய ஆய்வாளர் ராஜசேகரிடம் பேசியபோது “பாதிக்கப்பட்டவர் ஒரு பெண் என்றுதான் நாங்கள் பார்த்தோமேயொழிய அவர் யார் எப்படிப்பட்டவர் என்பது குறித்தெல்லாம் பார்க்கவில்லை. சட்டப்படி நாங்கள் செய்யவேண்டியதைத்தான் செய்தோம்.” என்றார்.

”நாஜிம் அப்படிச் சொன்னாரா இல்லையா என்பது நமக்கு நிச்சயமாகத் தெரியாததால் நான் அவர் சொன்னது சரியா என்கிற வாதத்துக்குள் போக விரும்பவில்லை. ஆனால் பலர் அப்படிச் சொல்வதைப் பார்க்கிறேன். எப்போதுமே பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது குற்றச்சாட்டுகளை வைத்து குற்றவாளிகளை தப்பிக்கச் செய்யும் போக்கு இங்கே இருக்கிறது. தில்லி சம்பவத்திலும் அந்தப் பெண் ஏன் இரவு நேரத்தில் ஓர் ஆணுடன் போனாள் என்று கேட்டார்கள்? இப்படி எல்லாம் கருத்துக்களை முன்வைத்து நடந்த பலாத்காரத்துக்கு நியாயம் கற்பிக்க முனைவதில் மறைமுக வன்மம் அடிமனதில் ஒளிந்திருக்கிறது. இப்படி ஒரு பெண் இருந்தால் அவளை இப்படி நடத்தலாம் என்கிற அதிகாரத்தை இவர்களுக்குத் தந்தது யார்? ஒரு பெண் ஆபாசமாக உடையணிந்திருந்தான் அவளை பலாத்காரம் செய்யலாம் என்கிற கொடூர மனம் இருப்பது சமூகத்தின் மோசமான குறியீடு” என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி. மூத்த அரசியல்வாதியும் சி.பி.ஐ. கட்சியின் தலைவருமான நல்லகண்ணு “இது ஒரு மோசமான போக்கு. பாலியல் தொழிலாளி என்று பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிக் கூறுவது அபாண்டம். அப்படியே இருந்தாலும் வன்புணர்வு நியாயமாகிவிடுமா என்ன?” என்கிறார். ”தில்லி சம்பவம்போலவே இதிலும் அப்பெண்ணின் ஒழுக்கம் குறித்து பலர் சொல்ல கேட்கிறோம். அப்படியெல்லாம் கூறுவது கண்டிக்கத்தக்கது” என்கிறார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் சுகந்தி.

சட்டம் என்ன சொல்கிறது? 10 ஆண்டுகளுக்கு முன்னால் மும்பையில் சுமன் ராணி என்கிற பெண் தன் காதலருடன் வீட்டைவிட்டு வெளியேறினார். அவர் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தபோது ரயில்வே போலீசார் விசாரணை என்கிற பெயரில் அவரை அழைத்துப்போய் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கினார்கள். இந்த வழக்கில் அவர்களுக்கு கிடைத்த தண்டனையின் அளவைக் குறைக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்தபோது நீதிபதிகள் “இந்தப் பெண் இன்னொரு ஆடவனுடன் ஓடிவந்தவள். அவள் பலமுறை தன் காதலனுடன் உறவுகொண்டிருக்கிறாள். அவள் ஒன்றும் கன்னித்தன்மையுடன் இல்லை” என்றுகூறி குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைத்தனர். இந்த வழக்கை நினைவுகூர்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி. 

“அப்போது இந்தியா முழுவதும் இந்தத் தீர்ப்பு வாசகங்களை பெண்ணியவாதிகளும் இயக்கங்களும் கடுமையாக எதிர்த்தன. உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு, இப்படியான பெண்களுக்கெதிரான மோசமான கருத்த்துக்களை நீதிபதிகள் சொல்லக்கூடாது. அது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்றது. மாவட்ட நீதிபதிகள், சில சமயங்களில் உயர் நீதிமன்ற நீதிபதிகளுமேகூட பெண்கள் குறித்து மோசமாக கருத்து தெரிவிப்பது தொடர்கிறது. தில்லி கீழ் நீதிமன்றத்தில் பெண்கள் எப்படியெல்லாம் நடந்துகொள்ளவேண்டும் என்பது குறித்து ஒரு பட்டியலை வெளியிட்டார் அண்மையில் ஒரு நீதிபதி. தில்லி உயர் நீதிமன்றம் இப்படி பெண்களுக்கு அறிவுரைகள் வழங்குவதையும் தீர்ப்பு சொல்லும்போது வழக்குக்கு தொடர்பே இல்லாமல் பொதுமக்களுக்கு கருத்து சொல்வதையும் நீதிபதிகள் நிறுத்தவேண்டுமென்று அறிவுறுத்தியது. இப்படி கற்றுணர்ந்த நீதிபதிகளே இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும்போது சாதாரண மக்கள் குறித்து கேட்கவா வேண்டும்? மேலை நாடுகளில் கணவன் - மனைவி உறவில் கூட விருப்பமில்லாமல் மனைவியிடம் கணவன் உறவுகொண்டால் அது marital rape என்கிற வகையின்கீழ் வரும். ஆனால் இந்தியாவிலோ ஊடலில் சமாதானத்துக்கு கூடல்தான் என்கிற கலாசார மனோபாவம் இருக்கிறது. இது மணவாழ்க்கையின் ஒரு சுவையான பகுதியாக இருக்கக்கூடும். ஈவு இரக்கமில்லாததாகவும் இருக்கக்கூடும். அது இலக்கிய ஊடலா வன்முறையா என்பதை சம்பந்தப்பட்ட பெண் தான் சொல்ல வேண்டும். ஆகவே இது ஒரு சிக்கலான விஷயம். சட்டம் சொல்வதென்னவென்றால் பாலியல் தொழிலாளியாகவே இருந்தாலும்கூட பணம் கொடுத்திருந்தாலும்கூட ஒரு பெண்ணின் விருப்பமின்றி அவளை நெருங்குவது குற்றம்தான். அது மனித பண்பாட்டுக்கே எதிரானது. ஆனால் அதையும் செய்யத் துணியும் கூட்டம் இங்கே இருக்கிறது. எல்லாவற்றையும் செய்துவிட்டு அவள் பாலியல் தொழிலாளி என்று குற்றம்சாட்டி நியாயப்படுத்தும் இச்சமூகத்துக்கு மனநல மருத்துவம் தேவைப்படுகிறது” என்று தன் கருத்துக்களை முன்வைக்கிறார் அருள்மொழி.

உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரனும் அண்மையில் ராமநாதபுரத்தில் ஒரு மகளிர் காவல்நிலையத்தைத் தொடங்கிவைத்து உரையாற்றுகையில் தில்லி சம்பவம் குறித்து குறிப்பிட்டுப் பேசுகையில் ‘இரவில் பெண்கள் வெளியில் செல்லக்கூடாது’ என்கிற கருத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். ஆஸ்ராம்பாபுவும் தன்னை குற்றம்சாட்டிய சிறுமிக்கு ஆண்களை ஈர்க்கும் வியாதி இருக்கிறது என்றார். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய தருண் தேஜ்பால், ஏ.கே. கங்குலி ஆகியோர் இதையேதான் செய்தனர். ஆகவே பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் இல்லையெனில் நாங்கள் ஏதாவது செய்வோம் என்கிற மனநிலையில்தான் உயர்பொறுப்பில் உள்ளவர்களே இருக்கிறார்கள் எனும்போது சாதாரண மக்களும் அவர்கள் வழியையே பின்பற்றுகின்றனர். 

காரைக்கால் சம்பவத்தைப் பொறுத்தவரை சம்பவம் நடந்தது புதுச்சேரி மாநிலத்தில். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஆனாலும் அவருக்கு இழப்பீடு வழங்குவது உட்பட எல்லா விஷயங்களுக்கும் புதுச்சேரி அரசுதான் பொறுப்பேற்கவேண்டியிருக்கும். புதுச்சேரியில் வசிக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர் சுகுமாறனிடம் பேசியபோது “ முதலில் இந்தச் செய்தி எனக்கு வந்து சேர்ந்தபோது நான் நம்பவில்லை. இவ்வளவு பெரிய விஷயத்தை காவல்துறை மூடி மறைக்குமா என்று நினைத்தோம். ஆனால் காரைக்கால் நண்பர்கள் பலரை தொடர்புகொண்டு கேட்டபோது அவர்கள் விஷயத்தை உறுதிப்படுத்தினார்கள். மோனிகா பரத்வாஜிடம் விஷயத்தைக் கொண்டுசென்றபின் அவர் துரிதமாக நடவடிக்கை எடுத்தார். உள்ளூர் காவல் நிலையத்தில் வைத்து சமாதானம் பேச முயன்ற இருவரை அவர் இடைநீக்கம் செய்தார். அவர் வந்தபிறகே முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது.  வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இடைநீக்கம் செய்யப்பட்டது என்பது துறைரீதியான நடவடிக்கை. ஆனால் 15 பேரில் நான்கு பேரின் மீது குற்றம் நடந்தபின் தகவல் தெரிவிக்கவில்லை என்று 202 பிரிவின் கீழ் வழக்கு பதிந்திருப்பதைப் போல காவல்துறையினர் மீதும் பதியவேண்டும். இதற்கான அழுத்தங்களை நாங்கள் தொடர்ந்து கொடுப்போம். அந்தப் பெண்ணின் குடும்பம் ஏழைக்குடும்பம். இதுவரை இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை. உடனடியாக அரசு அவருக்கு 5 லட்சம் இழப்பீடு தர ஏற்பாடு செய்யவேண்டும்.” என்கிறார். ”

தில்லி சம்பவத்துக்குப்பின் விரைவு நீதிமன்றம் மூலம் விரைவாக வழக்கு நடத்திமுடித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதுபோலவே இந்தச் சம்பவத்திலும் விரைந்து வழக்கை முடிக்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஏனெனில் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என்கிறார் சுகுமாறன். வழக்குகள் எந்தளவுக்கு விரைந்து முடிக்கப்படும். தடய அறிவியல் துறையின் முடிவு வெளிவர கொஞ்சம் தாமதமாகும். அதுவந்தவுடன் வழக்கு விரைவாக விசாரிக்கப்படும்” என்கிறார் மோனிகா.

இச்சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளும் ஒருபக்கம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. “பா.ஜ.க. இன்று ஆளுநரை சந்தித்து இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரியது. அதுபோலவே இந்துமுனணியும் டி.ஜி.பி.யிடம் மனு அளித்தது. இவர்களுக்கு என்ன திடீர் அக்கறை என்று பார்த்தால் இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் இஸ்லாமியர்களும் இருப்பதால் அதை பயன்படுத்தி இஸ்லாமிய சமூகத்தின்மீது சேறுபூசப் பார்க்கிறார்கள்” என்கிறார் சுகுமாறன். 

இதற்கிடையே சமூக ஊடகங்களில் காரைக்கால் சம்பவம் தொடர்பாக மதரீதியாகவும் சாதிரீதியாகவும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தலித்துகளும் இஸ்லாமியர்களும்தான் என்று திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்யப்பட்டு வருவது குறித்து காவல்துறையிடம் கேட்டபோது “இதில் மற்ற பிற்படுத்தப்பட்ட சாதியினரும் இருக்கிறார்கள்” என்கிறார் ஆய்வாளர் ராஜசேகர். “இது ஒரு கொடூரமான குற்றம். இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களை மதம் மற்றும் சாதிய ரீதியில் அணுகுவது. இந்த சாதி, இந்த மதம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்றெல்லாம் பிரச்சாரம் செய்வது தேவையில்லாதது. அது வழக்கின் போக்கை திசைதிருப்பும் செயல். வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்கிறார் சுகந்தி. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக டிசம்பர் 31 அன்று காரைக்காலில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. “இதற்கும் முந்தைய வழக்குகளில் புதுச்சேரி சிபிசிஐடி விசாரணை குறித்து எங்களுக்கு திருப்தி இல்லை. ஆகவே இந்த வழக்கும் அப்படி ஆகிவிடக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். இது மிக முக்கியமான வழக்கு. விசாரணை நாகரிமகான முறையில் இருக்கவேண்டும். அந்தப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்துக்கு தக்க தண்டனையை உடனடியாக வாங்கித் தந்து அவருக்கு நீதிகிடைக்கவேண்டும்.” என்கிறார் சுகந்தி.

“இதில் குற்றம்சாட்டப்பட்ட நாசர் என்பவர் முன்னாள் பா.ம.க. காரர். இப்போது தி.மு.க.வில் இருக்கிறார். அதனால் உள்ளூர் பா.ம.க. தலைவர் தேவமணி ஒருபக்கம் முதல்வருக்கு தன் கட்சித்தலைவர் மூலம் அழுத்தம் கொடுக்கிறார். பாதிப்புக்குள்ளான பெண்ணுடைய தோழியின் காதலர் மதனுடைய உறவினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருக்கிறார். இவ்விவிஷயத்தை உடனே காவல்துறைக்கு தெரிவிக்கவில்லை என்று மதன் மீதும் 202 பிரிவு வழக்கு இருக்கிறது. எனவே இந்த விஷயத்தை விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக பயன்படுத்த எண்ணுகிறது பா.ம.க. நாசர் உட்பட பலர் நாஜிமுக்கு பணியாற்றுபவர்கள் என்பதால் தி.மு.க. ஒருபுறம் அழுத்தம் கொடுக்கிறது. அரசியல் கட்சிகள் இதில் தலையிடுகின்றன” என அரசியல் தொடர்புகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

புதுவை மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச் சங்கத்தின் தலைவரும் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கும் பாலச்சந்திரனிடம் பேசியபோது, “உண்மையாகவே இதில் தலையிடவேண்டிய புதுச்சேரி மகளிர் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இதில் தலையிடாமல் மௌனம் ” என்கிறார். நாசர் ஏற்கனவே 1994ல் ஒரு வன்புணர்வு வழக்கோடு தொடர்புடையவர் என்று காரைக்கால் காவல்நிலைய தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் நாசர் ஏற்கனவே பா.ம.க.வில் இருந்து இப்போது தி.மு.க.வில் இருக்கிறார் என்பதையும் காவல்நிலையத்தில் உறுதிப்படுத்துகிறார்கள். இதுகுறித்து இந்தியா டுடே நாஜிமிடம் கேட்டபோது “இந்த வழக்கில் தொடர்புடைய யாரும் தி.மு.க.வில் உறுப்பினர்கள் இல்லை. இதில் யாரும் என் உறவினர்கள் கிடையாது” என்று இந்தியா  டுடேயிடம் தெரிவித்தார்.  

”இவ்வழக்கில் தொடர்புடைய ஒரேயொருவர் 16 வயது. அவர் காவல்துறையின் பாதுகாப்பில் இருக்கிறார். ஒருவர் ஜனவரி 3 அன்று சரணடைந்தார். அடையாளம் காணும் அணிவகுப்பு நடந்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். ஒருவரை இன்னமும் காவல்துறை தனிப்படை அமைத்துத் தேடுகிறது” என்கிறார் சிபிசிஐடி புதுச்சேரிக் குழுவைச் சேர்ந்த செல்வம். 

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் எந்த பத்திரிகையாளரையும் சந்திக்கவில்லை. “நாங்கள் அவரை சந்திக்க விரும்பினோம். ஆனால் அவர் யாரையும் பார்க்கும் மனநிலையில் இல்லை என்று கூறிவிட்டனர் அவரது பெற்றோர். அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை” என்கிறார் சுகந்தி.

இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் 21 வயதுக்குட்பட்டவர்கள். மிக இளம் வயதில் இப்படியான குற்றச்செயல்களில் ஈடுபடும் இவர்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். காலம் முழுவதும் சிறையில் கழிக்கவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகிறார்கள். தில்லி பாலியல் வன்புணர்வில் தொடர்புடைய ராம் சிங் சிறைக்குள் தற்கொலை செய்துகொண்டதை அறிவோம். இப்படிப்பட்ட குற்றங்களை செய்பவர்கள் அடுத்தவர் வாழ்க்கையை சிதைப்பதுடன் தன் வாழ்க்கையையும் சேர்த்து சிதைத்துக்கொள்கின்றனர். 

பேருந்துக்களிலும் இன்னபிற பொது இடங்களிலும் ஆண்கள் பெண்கள் தொந்தரவுக்குள்ளாகும்படி பார்வையால் அல்லது கைகளால் சீண்டுவதும் அத்துமீறுவதுமான செயல்களில் ஈடுபடுவதுதான் தொடக்கம். காரைக்கால் சம்பவம் இதன் உச்சகட்டம். இவற்றின் பின்னாலுள்ள உளவியல் யோசிக்கப்படவேண்டியது. பிற பெண்கள் அனைவருமே தன்னுடையை உடைமைகள் என்கிற மனோபாவம் அது. இன்னொருவருடைய பொருள் என்றால் எடுத்து பயன்படுத்த தயங்கும் கைகள் தன்னுடையது என்றால் உரிமையுடன் எடுப்பதுபோல, எல்லா பெண்களின் உடலும் தன் சுகிப்புக்குரியது என்று எண்ணும் ஆண்தனம்தான் ஓர் ஆணை, அடுத்தவர் உடலென்றாலும் பெண்ணை தீண்டவும் முறைக்கவும் உற்றுப் பார்க்கவும் வைக்கிறது. பெண் என்பவள் ஒரு தனியான ஜீவன். அவள் உடல் அவளுக்குத்தான் சொந்தம் என்கிற உணர்வும் புரிதலும் எள்ளளவும் இங்கே இல்லை. அது ஒரு பண்டம். ஆண்களுக்கான ஒரு நுகர்வுபொருள் அது. அந்த நுகர்வு பொருளை ஆண் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த அவனுக்கு உரிமை இருப்பதாக நினைத்துக்கொள்கிறான். ‘இது இன்னொரு உடல், இன்னொரு ஜீவனுடைய உடல்’ என்கிற உணர்வின்றி காம வேட்கையை பார்வையால் தணித்துக்கொள்ளுபவர்களிலிருந்து காரைக்கால் கூட்டு வன்புணர்வில் சிக்கியிருப்பவர்கள்வரை எல்லொருக்கும் ஒரே ஒரு பார்வைதான் இருக்கிறது. அது பெண்ணுடல் தன் சுகிப்புக்குரியது என்கிற உடைமை உணர்வுதான். இந்த உடைமை உணர்வுக்குத்தான் நிர்பயாக்கள் பலியாகிறார்கள். வட இந்தியாவின் தில்லியாக இருந்தாலும் தென்னிந்தியாவின் காரைக்காலாக இருந்தாலும் நிர்பயாக்கள் இந்தியாவில் முழுவதும் சிதறிக்கிடக்கிறார்கள்.

(நன்றி : இந்தியா டுடே)

4 comments:

 1. நல்ல பதிவு...எனக்கென்னவோ ஒவ்வொரு ஆண் மகனையும், பெண்ணை மதிக்கும் மனிதனாக வார்த்தெடுக்கும் பொறுப்பு பெற்றோரின் கையில் தான் உள்ளது எனத் தோன்றுகிறது...ஏனென்றால் இப்போதைய கல்விக்கூடங்களும்,ஊடகங்களும் அதற்கான பொறுப்பற்றத் தன்மையோடுதான் நடந்து கொள்கிறார்கள்.

  ReplyDelete
 2. உலக மயமாக்கல் கொள்கையை கொண்டு வருவார்களாம், அதே சமயம் கலாச்சாரத்தையும் காப்பத்தனும் , எப்படி? கலாசாரம் என்ற முகமூடியை அவிழ்க்கும் வரை பாலியல் வறட்சி இருக்கும், கர்பழிபுகலும் தொடரும்.

  ReplyDelete
 3. மிகச்சரியான பதிவு.. சுமன் ராணி வழக்கு நடந்தது 1970-ம் ஆண்டுகளில் .. அப்போது வெளிவந்த ஒரு ஆங்கில மாத இதழில் படித்த ஞாபகம்..சுமன்ராணி காவல் நிலையத்தில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது, அவர் உடம்பில் எந்த விதமான காயங்களும் இல்லை.. அதனால் அவர் காவல் நிலையத்தில் விருப்பத்துடன் தான் உடன்பட்டே காவலர்களின் விருப்பத்தை நிறைவேற்றினார்” என்பது போல தீர்ப்பளித்தது. பின் இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றபிந்தான் தீர்ப்பு மாறியது. சீதைக்கும், பாஞ்சாலிக்கும் நடந்த கொடுமைகளுக்குக்கூட இவர்கள் மீதுதான் குற்றம் சாட்டப்பட்டது என்பதில் இருந்தே ஆண் ஆதிக்கம் இன்றும் தொடர்கிறது. அதனுடைய வெளிப்பாடுதான் பெண்களின் மீது நடைபெறும் அத்துமீறல்களுக்கு, அந்தப்பெண்ணின் உடை, நடத்தையை குறை கூர்வது
  ஆ.ஈசுவரன்/திருப்பூர்

  ReplyDelete
 4. உங்களுக்குள் இருக்கும் சாதீயத்தை மனதில் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டுள்லது

  ReplyDelete