Tuesday, January 28, 2014

ஒரு தந்தையின் எதிர்ப்பார்ப்பு


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 22 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் இருக்கிறார் நளினி. அவரது தந்தை 88 வயது பி.சங்கரநாராயணம் உடல்நலமின்றி இருக்கிறார். தன் தந்தையைப் பார்க்கவும் அவர் அருகில் ஒரு மாதம் இருந்து அவருடைய தேவைகளை கவனித்துக்கொள்ளவும் வேண்டி நளினி ஒரு மாத விடுப்பு கேடு கூடுதல் காவல்துறை டைரக்டர் ஜெனரல் மற்றும் சிறைத் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு விண்ணப்பித்திருக்கிறார். தன் மகள் தன்னைப் பார்க்க வருவதற்காக எப்படியும் அனுமதி கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் சங்கர நாராயாணன் மகளின் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறார்.

தலையில் அடர்த்தியான வெள்ளை முடி. சவரம் செய்யப்படாத தாடியிலும் வெள்ளிக்கம்பிகள் மினுமினுக்கின்றன. கூரிய மூக்கு, வெள்ளை நிறத் தோலுடன் நல்ல உயரமாக இருக்கிறார் சங்கர நாராயணன். முகத்தில் காவல்துறையில் பணிபுரிந்ததன் அடையாளமாய் ஒரு கம்பீரம். இத்தனை இருந்தாலும் கண்களில் துயரம் வழிகிறது. அவரின் உடலில் வயோதிகம் தளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பேச்சில் விரக்தி, கோபம், இயலாமை, நம்பிக்கை என்று எல்லாம் கலந்த கலவையாய் வெளிப்படுகின்றன உணர்வுகள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு வேலூர் சிறையில் இருக்கும் நளினியின் தந்தை சங்கர நாராயணன்.

திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் செல்லும் சாலையில் உள்ள விக்கிரமசிங்கபுரத்தை அடுத்த அம்பலவாணபுரத்தில் இருக்கிறது அந்த வீடு. ஹால் முழுவதும் கடவுளர் படங்களும் சிலைகளும். உள்ளே ஓர் அறை. அங்கேயுள்ள படுக்கையில் படுத்திருக்கிறார் சங்கர நாராயணன். முன்னாள் காவல்துறை ஆய்வாளர். சென்னையில் பணியாற்றிவிட்டு, 1985ல் ஓய்வு பெற்றவர். இந்தியா டுடே சார்பில் அவரை சந்திக்கச் சென்றபோது கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்து பேசத் தொடங்கினார். நளினி குறித்து சொல்லும்போது பெருமிதம் தெறிக்கும் குரலில் பேசுகிறார்.

“நளினி – எங்கள் செல்லப் பெண். நல்ல அறிவாளி. பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி, அவள்தான் வகுப்பில் முதல் மாணவி. நல்ல ஆங்கிலப் புலமை உண்டு. சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றாள். வழக்கு விசாரணையின்போது அவள் பேசிய ஆங்கிலம் எந்த போலீஸ்காரருக்கும் புரிந்திருக்காது” என்று சிரித்தவாறே தொடர்கிறார்.

”நளினிக்கு இசையிலும் நாட்டியத்திலும் மிகவும் ஆர்வம் உண்டு.  நன்றாக சமைப்பாள். சைவம்தான் சமைப்பாள். அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பதெல்லாம் எனக்கு சரியாகத் தெரியவில்லை. நான் என் போலீஸ் வேலையில் எப்போதும் கவனம் செலுத்தயதால் இதெல்லாம் அவளுடைய அம்மா வள்ளியம்மாளுக்குத்தான் தெரியும். அவளும் உடல் நலமில்லாமல் போய்ச் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.” என்று பெருமூச்சு விடுகிறார்.

சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. கனத்த மௌனத்தைக் கலைத்தவாறே மீண்டும் அவரே பேசுகிறார். “இப்படியெல்லாம் ஆகுமென்று யாரும் நினைக்கவில்லை. அவள் சிறைக்குச் செல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் ஒரு கல்லூரிப் பேராசிரியையாகவோ அல்லது வேறு ஏதோ ஒரு நல்ல பதவியிலோ இருந்திருப்பாள். சிறைக்குச் செல்வதற்கு முன்னால் சென்னை அடையாரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தாள். அந்த நிறுவனத்தில் உள்ளவர்கள் அவளுக்கு நேர்ந்த்தை நினைத்து மிகவும் வருத்தப்பட்டார்கள். நல்ல அறிவாளிப் பெண் அவள். சிறை அவள் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிட்டது. அவளுக்கு சோனியா மரண தண்டனை வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். மரண தண்டனை இல்லை என்றானவுடன் அவ்வளவு சந்தோஷப்பட்டேன். ஆனால் இப்போது தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் சிறையில் அநியாயமாக கழிப்பதற்கு பதில் தூக்கிலேயே போட்டிருக்கலாம். ஆயுள் தண்டனை என்றால் கூட இத்தனை ஆண்டுகள் சிறையில் வைத்திருக்க மாட்டார்கள். அதிலும் நளினிக்கும் இந்தக் கொலைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. விசாரணையின்போது அவள் அசராமல் ‘எனக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை’ என்று வாதாடியிருக்கிறாள். போலீஸிடம் அவள் வாதாடலாம். ஆனால் போலீஸ் என்ன சொல்கிறதோ அதுதானே மக்கள் மத்தியில் நிற்கும். அப்படித்தான் ஆகிவிட்டது. நான் சென்னையில் காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றினேன். நான் நன்றாக வேலை செய்கிறேன் என்று என்னை மாற்றல் செய்ததுகூட கிடையாது. சென்னையில் எனக்கு வெளியில் யாரிடம் பேசக்கூட முடியவில்லை.  என் போலீஸ்காரன் வேலைதான் என்னைக் கேள்விகளிலிருந்து காப்பாற்றியது. இவன் கண்டிப்பானவன் என்று எனக்காக பயந்து என்னிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் என் மனைவி, குடும்பத்தாரிடம் எல்லோரும் கேள்வி கேட்டுத் துளைத்தார்கள். நான் எப்போதும் பிறருடன் அதிகமாக பழகாதவன் என்பதால் நான் தப்பிதேன். அதன்பின் என் சொந்த ஊரான அம்பலவாணபுரத்துக்கு வந்துவிட்டேன்.

இப்போது பேரறிவாளனின் வாக்குமூலத்தை மாற்றி எழுதியதாக தியாகராஜன் சொல்லி இருக்கிறாரே. சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன் கூட இப்போது அவர்களை விடுவிக்கவேண்டும் என்கிறார். ஆனால் அன்றைக்கு ராஜீவ் வழக்கில் சாமானியர்களை சிக்கவைத்தது ஏன்? அன்றைக்கிருந்த காங்கிரஸ் தலைவர்களை ஏன் விசாரிக்கவில்லை?
இந்த சிறைவாசத்தால் நளினி இழந்தது அதிகம். ஒரு சாதாரணப் பெண்ணுக்கான எதையும் அவள் அனுபவிக்கவில்லை. உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஒரே ஒருமுறை என் மகனின் திருமணத்துக்காக அனுமதி பெற்று வந்தாள். நான் போலீஸ்காரன் தானே? எனக்குத் தெரியும் போலீஸ் எப்படி பிரச்சனை செய்யும் என்று. அதையெல்லாம் பார்க்க முடியாது என்னால். என்னையும் கேள்விகளால் துளைத்து எடுப்பார்கள். இதன் காரணமாகவே சென்னையில் நடந்த நான் பெற்ற மகனின் திருமணத்துக்குப் போகவில்லை. என்னைத் தவிர என் குடும்பத்தார் அனைவரும் சென்றார்கள். எதிர்ப்பார்த்தது மாதிரியே நளினி திருமணத்துக்கு வந்தபோது போலீஸ் அத்தனை பிரச்சனை செய்தது. இந்த ஒரு சம்பவம் ஏற்படுத்திய தாக்கத்தாலேயே நளினியின் அம்மா இறந்தபோது நளினிக்குச் சொல்லாமலேயே இறுதிச் சடங்கெல்லாம் முடிந்தபின் தான் விஷயத்தைச் சொன்னோம். தாயின் முகத்தைக் கூட இறுதியாக பார்க்கவில்லை நளினி.

நான் நளினியைப் பார்த்து பத்தாண்டுகள் இருக்கும். சென்னையில் இருக்கும்போது வேலூருக்குச் சென்று சிறையில் பார்ப்பேன். இந்த ஊருக்கு வந்தபின்னால் ஒரே யொரு முறை போனேன். நான் போனது ஒரு சனிக்கிழமை. அன்று பார்க்கமுடியாது என்று அனுமதி மறுத்தார்கள். இரண்டு நாட்கள் கழித்துதான் பார்க்க முடியும் என்றார்கள். நான் எங்கே தங்குவது என்று தெரியாமல் திரும்பிவிட்டேன். நளினிக்கு நான் வந்த தகவலைச் சொல்லியனுப்பினார்கள். ‘என் அப்பா வந்திருக்கிறார். நான் பார்க்கவேண்டும். பார்க்கமுடியாவிட்டாலும் அவருக்குப் பணம் ஏதும் தேவைப்பட்டால் கொடுக்கவேண்டும்’ என்று சொல்லியிருக்கிறாள்.  சிறையில் வேலை பார்த்து சேர்த்த பணம் போலிருக்கிறது. நான் தான் பணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு பார்க்க முடியாமல் திரும்பி வந்துவிட்டேன்.

அதன்பின் உங்களுக்கு என்ன தெரியுமோதான் அப்படித்தான் எனக்கும் நளினி குறித்த செய்திகள் தெரியும். தினமும் செய்தித்தாள் படிக்கிறேன். அதில் என்ன வருகிறதோ அதுதான். பிரியங்கா நளினியை சந்தித்தது குறித்தும் நாளிதழ்களில் படித்துத்தான் தெரிந்துகொண்டேன். ‘என் அப்பாவை ஏன் கொன்றீர்கள்?” என்று கேட்டதாகவும் நளினி ‘எனக்கும் அதற்கும் ஒரு தொடர்பும் இல்லை” என்று தெரிவித்ததாகவும் பின்னாளில் தெரிந்துகொண்டேன். இருவரும் நன்றாகவே பேசிக்கொண்டிருந்தார்களாம். நளினிக்கு சமைத்து சாப்பிட சிறையில் சிறப்பு அனுமதி பெறப்பட்டிருக்கிறது. பிரியங்காவிடம் ’சாப்பாடு சமைத்துத்தருகிறேன். சாப்பிட்டுப் போக வேண்டும்’ என்று கூறியதாகவும், ’காபி மட்டும் போதும்’ என்று சொல்லி, காபி சாப்பிட்டுச் சென்றதாகவும் கேள்விப்பட்டேன்.
நளினியை நேரில் போய்ப் பார்க்க ஆசைதான். வயதாகிவிட்டதே. அலைய முடியவில்லை. என்ன செய்ய? இப்போது என்னுடன் ஒரு மாதம் இருக்கவேண்டும் என்று அனுமதி கேட்டிருக்கிறாள். வந்தால் சந்தோஷம். ஆனால் கூடவே போலீசும் வருவாங்களோ?” என்று கேட்டு யோசனையில் ஆழ்கிறார்.

“வரட்டும். பரவாயில்லை. இந்த ஊரில் யாருக்கும் எதுவும் தெரியாமல்தான் இருந்தது. ஒரு வாரத்துக்கு முன் தமிழ் செய்தித்தாள் ஒன்றில் என் பேட்டி வந்தவுடன் இந்த ஊரில் தெருவில் இருப்பவர்களுக்குத் தெரிந்தது. என் குடும்பத்தாரிடம் ஏதாவது கேட்டார்களோ தெரியவில்லை. ஆனால் நான் ஒரு போலீஸ்காரன் என்பது எல்லோருக்கும் தெரியும். கொஞ்சம் கண்டிப்பானவன் என்று பலருக்குத் தெரியும் என்பதால் என்னிடம் நேராக எதையும் கேட்பதில்லை.

எனக்கு ஓய்வூதியம் வருகிறது. அதற்குள்தான் எல்லா செலவுகளையும் சமாளிக்கிறோம். வீடு சொந்தவீடு என்பதால் கொஞ்சம் பரவாயில்லை. இளைய மகன் பால்பண்ணை வைத்திருந்தான் இங்கே. ஆனால் மாடுகள் திடீர் திடீரென்று காணாமல் போயின. காவல்துறையில் புகார் கொடுத்தாலும் ஒன்றும் நடக்கவில்லை. நஷ்டமாகிவிட்டது. இப்போது அந்தத் தொழிலை விட்டாயிற்று. மூத்த மகன் சென்னையில் இருக்கிறான். அவ்வபோது வந்து பார்ப்பான்.

சிறையிலேயே நளினிக்குத் திருமணம் நடந்தது. இதுவரை நளினியின் கணவர் முருகனை பார்த்ததில்லை. அவர்கள் குழந்தையையும் பார்த்ததில்லை. குழந்தை லண்டனில் வளர்கிறது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எப்படியாவது நளினியின் விடுதலை விரைவில் நிகழும். மூன்றுபேருக்கான தூக்குதண்டனையும் ரத்தாகும் என்று நம்புகிறேன். எல்லோரையும் பார்க்கவேண்டும். குறைந்தபட்சம் நளினிக்கு என்னைப் பார்க்க ஒரு மாதம் அனுமதி கிடைத்தால் நளினியையாவது பார்க்கலாம். நான் வசதி படைத்தவன் இல்லை. உயர் பதவியிலும் இருந்ததில்லை. ஏழை சொல் அம்பலம் ஏறாதுதான். ஆனால் அதற்காக நான் அரசாங்கத்திடம் கெஞ்சக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். உரிமையை எப்படி கெஞ்சிப் பெறமுடியும்? நான் வயதானவன் இல்லையா? மகளைப் பார்க்கவேண்டும் பேசவேண்டும் என்று தோன்றும். அதற்காகவாது இந்த அப்பாவைப் பார்க்க அவளை அனுமதிக்கவேண்டும். வந்து நளினி கையால் சமைத்த சாப்பாடு சாப்பிடவேண்டும்” என்று கூறி கைகூப்பி. விடைபெறும்போது அவர் கண்களில் தெரிந்த ஏக்கமும் கம்பீரமும் கலந்த கலவை அவர் நம்பிக்கையுடன் இருப்பதைக் காட்டியது.

நன்றி : இந்தியா டுடேNo comments:

Post a Comment