தமிழகத்தில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடும் இந்தத் தேர்தலை அக்கட்சிகள் மிக முக்கியமானதாகக் கருதுகின்றன. கட்சியின் தொண்டர்களிடம் மிகப்பெரிய உற்சாகம் காணப்படுவதை தேர்தல் களத்தில் காண முடிகிறது. பல ஆண்டுகளாகவே இடதுசாரிகள் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கட்சிகளுடன் இணைந்தே தேர்தலை சந்தித்திருக்கின்றன. இந்த முறை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அலட்சியப் போக்கு அவர்களை தனித்து முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளியது. தொங்கு நாடாளுமன்றம் அல்லது மாநிலக் கட்சிகளின் பங்கு அதிகமாக உள்ள நாடாளுமன்றம் அமையும்பட்சத்தில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலும்கூட அதற்கான மதிப்பு என்பது தனி.
சி.பி.ஐ(எம்) 9 தொகுதிகளிலும், சி.பி.ஐ. 9 தொகுதிகளிலும் என இடதுசாரிகள் 18 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறார்கள். வெற்றிவாய்ப்பு குறித்து கேட்கும்போது திண்டுக்கல் எம்.எல்.ஏ.வான பாலபாரதி “முன்பு ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து வாக்கு சேகரிக்கச் செல்லும்போது இருந்ததற்கும் இப்போது எங்களுக்குக் கிடைக்கும் வரவேற்புக்கும் வித்தியாசம் உள்ளது. மிகுந்த உற்சாகமாக வரவேற்கிறார்கள்.” என்கிறார்.
நாகப்பட்டினம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பழனிச்சாமி போட்டியிடுகிறார். இத்தொகுதியை கைப்பற்றுவது என்பது கம்யூனிஸ்ட்டுகளின் கௌரவப் பிரச்சனை. ஏனெனில் நாகை தொகுதிக்குட்பட்ட பல கிராமங்களில் செங்கொடி இயக்கம் வேரூன்றி விவசாயிகளுடன் இணைந்து வேலைசெய்த இடம். சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்) ஆகிய இரு கட்சிகளுமே முழுமூச்சுடன் நாகையை எப்படியாவது தி.மு.க.வின் ஏ.கே.எஸ். விஜயனிடமிருந்து கைப்பற்ற முனைகின்றனர். பொதுத் தொகுதியான விருதுநகரில் வைகோவை எதிர்த்துப் போட்டியிடுகிறார் தலித் வேட்பாளரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளருமான சாமுவேல்ராஜன். இத்தொகுதியில் புதிய தமிழகம், ஆதி தமிழர் பேரவை ஆகியவை தி.மு.க. கூட்டணியை ஆதரித்தாலும் பல கிராமங்களில் சாமுவேலுக்கு வாக்களிப்பதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை சுட்டிக்காட்டுகிறார்கள் இடதுசாரிகள். சாமுவேலின் களப்பணி அவருக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறார்கள்.
“எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எங்கள் தரப்பு அரசியலை, மோடி ஒரு மாயை என்பதை கட்சிப் பிரச்சாரத்தில் மிகத் திவிரமாக மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறோம். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து பேசினோம். கூட்டணிக் கட்சிகளை நம்ப வைத்து இறுதிநேரத்தில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு அவற்றை ஏமாற்றியதைக் குறித்து எடுத்துச் சொல்கிறோம். நாங்கள் வெல்வோம்” என்கிறார் சி;பி.ஐ. கட்சியின் மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு.
வடசென்னையில் போட்டியிடும் உ.வாசுகியின் வெற்றிக்காக இடதுசாரிகள் கடுமையான தேர்தல் வேலைகளைச் செய்கின்றனர். மயிலாடுதுறை தொகுதியில் சி.பி.ஐ (எம்.எல்) கட்சி போட்டியிடுகிறது. எல்லோரும் வியப்படையும்வண்ணம், இரண்டு இடதுசாரி கட்சிகளும் அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்கிறார்கள்.இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் இடதுசாரிகள் மத்தியில் உற்சாகமும் உத்வேகமும் இருந்தாலும் இவையெல்லாம் வாக்குகளை சேகரித்துக் கொடுக்குமா என்பது கேள்விக்குறி. ஒரு பிரச்சனை என்றால் மக்கள் பெரிய கட்சிகளிடம் செல்வதில்லை.கருத்தியல்ரீதியில் செயல்படும் கட்சிகளையே நம்புகின்றனர். ஆனால் அந்த நம்பிக்கை, ஊழலற்ற நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை போன்ற தகுதிகளைவைத்துத்தான் நம் மக்கள் வாக்களிக்கிறார்களா என்பது மிகப்பெரிய கேள்வி. பணத்துக்கு மயங்கும் , புகழைக்கண்டு, செல்வாக்கைக்கண்டு பிரமித்து பயப்படும் , ஆய்ந்தறியத் தெரியாதவர்கள் என்று வாக்காளர்கள் மிகத் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். சமூகத்தை இப்படி வைத்துக்கொண்டு இடதுசாரிகளுக்கு வாக்களிக்க வைப்பதென்பது இயலாத காரியம். பலருக்கு இந்த உண்மை தெரிந்தே உள்ளது “தனித்து நின்றோம். இத்தனை வாக்குகளைப் பெற்றோம்” என்கிற சுய பரிசீலனைக்கு இவை நிச்சயம் உதவும். மற்றபடி வெற்றிபெறுவோம் என்றெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை” என்கிறார் இடதுசாரியான ஒரு களப்பணியாளர். ஆக, 2014 பொதுத்தேர்தல் தமிழக இடதுசாரிகளுக்கு பிற கட்சிகளுடனான பலப்பரீட்சை அல்ல், அசலான சுய பலத்தை அறியும் பரீட்சை.
(நன்றி : இந்தியா டுடே)
No comments:
Post a Comment