இந்தியாவின் முதல் பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட அனிமேஷன் படம் என்கிற பெருமையுடன் வெளிவந்திருக்கிறது கோச்சடையான். இந்தியாவுக்கும் தமிழுக்கும் புதிய விஷயம் என்கிற வகையில் அதன் இயக்குநர் சௌந்தர்யாவுக்கு வாழ்த்துகளை முதலில் சொல்லலாம்.
கோச்சடையானின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரஜினியே கோலோச்சுகிறார். முதலில் பாத்திரங்களின் விழிகளில் உயிர்ப்பு இல்லாமல் இருப்பதால் சிறிதுநேரத்துக்கு படத்தின் உருவங்களை நெருக்கமாக உணரமுடியாமல் அந்நியப்பட்டு, பின் மெதுவாக அனிமேஷன் உருவங்கள் மறைந்துபோய் நிஜமான ரஜினி, நாசர் என்று நம்பத் தொடங்குகிறோம். இந்த நம்பிக்கையைக் கொண்டுவருவதில் பெரும்பங்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய கே.எஸ்.ரவிக்குமாரையே சாரும். ஆனால் உருவங்களின் ஒற்றுமை எனப்பார்த்தால் ரஜினிக்கும் நாசருக்கும் பொருந்துவதுபோல தீபிகா படுகோனே, சண்முகராஜா, ஜாக்கி ஷெராஃப், சரத்குமார் போன்றோரின் உருவங்களும்கூட சரியாக திரையில் வரவில்லை என்கிற எண்ணமே எழுகிறது. தொண்ணூறுகளின் சரத்குமாரை வார்த்தெடுத்தார்களோ என்கிற சந்தேகம் வருகிறது.
ஒரு படத்தின் திகிலைக் கூட்டும் வகையிலும் மர்மங்கள் அவிழாமலும் பார்த்துக்கொள்ளவேண்டிய திரைக்கதை அதில் சறுக்கியிருக்கிறது. படத்தின் தொடக்கத்திலேயே சிறுவயது ரஜினியான ராணா கோட்டைப்பட்டினத்திலிருந்து கலிங்கபுரிக்கு வந்துசேர்வதாகக் காண்பிப்பதாலேயே வரப்போகும் காட்சிகளில் ரஜினி என்ன செய்யப்போகிறார் என்பதை யூகிக்க முடிகிறது. கோட்ட்டைப்பட்டினம் வீரர்களை அவர்கள் நாட்டின்மீதே படையெடுக்க பயன்படுத்தும் திட்டம்போடும்போதே அதில் ஏதோ இருக்கிறது என்று தெரிகிறது. அப்புறம் ‘மீண்டும் ஒரு கோச்சடையானா?’ என நாசர் கேட்கும் காட்சியும், ‘நான் இருக்கும்வரை மன்னரை யாரும் கொல்ல முடியாது’ என ரஜினி சொல்லும் வசனமும் அப்படியே பின் நிகழ்வதை கட்டியம் கூறுகின்றன. மன்னரைக் கொல்லும் ரஜினியின் முயற்சிகளும் எளிதில் யூகிக்கக்கூடியவையாக இருப்பதே சுவாரஸ்யத்தைக் குறைக்கின்றன. ஆங்காங்கே பல ஓட்டைகள் உண்டு. சிறுவயதிலிருந்தே ரஜினிக்கும் தீபிகாவுக்கும் பழக்கம் உண்டு எனும்போது ராணா ரஜினியின் தந்தை கோச்சடையானுக்கு அளித்த மரண தண்டனையை ஊரே பார்த்தபோது தீபிகாவுக்குத் தெரியாதா என்ன? ரஜினி புதிதாக சொல்வதுபோல் ஃபிளாஷ் பேக்கை தீபிகாவுக்குச் சொல்கிறார். இதில் தீபிகா பால்யத்தில் நிகழ்ந்ததைக்கூட நன்றாக நினைவில் வைத்திருப்பவர் என்று வசனம் வேறு வருகிறது. அப்புறம் கோச்சடையானின் மகன் என்று தெரிந்தும் தளபதியாக ராணா ரஜினியை .நாசர் வைத்துக்கொள்வது, கோச்சடையான் கலிங்கபுரிக்கு விஷமுறிவு மருந்து நாடி வருகையில் வீரர்களின் உடல்மொழியில் தெரியும் நாடகத்தனம் என சில பிரச்சனைகள் உண்டு. ஆனாலும் ரஜினியின் ஆளுமையான குரலும், அவர் உச்சரிக்கும் வசனங்களும், பிரமாதமான நாசரின் பின்னணிக் குரலும், நாகேஷை மீண்டும் திரையில் கொண்டுவந்திருப்பதும் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.
காட்சியமைப்பில் உள்ள கோளாறுகளை ஏ.ஆர்.ரஹ்மானின் இசை சரிசெய்கிறது. பாடல்களாகட்டும் பின்னணி இசையாகட்டும் ரஹ்மான் மிக நிறைவாகவே தன் பங்கை ஆற்றியிருக்கிறார். நீண்ட நாட்கள் கழித்து எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் ஒலிக்கிறது. ஷோபனாவும் ரஜினியும் ஆடுவதாக வரும் அந்த ருத்ரதாண்டவம் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக சில வசனங்கள் ஈர்க்கின்றன ‘கோச்சடையான் தனிமனிதன் அல்ல; அவன் ஒரு நாடு”, ”மண்ணை ஆள்பவன் மன்னன் அல்ல; மக்களின் மனங்களை ஆள்பவனே மன்னன்” என்பது போன்ற வசனங்களில் கே.எஸ்.ரவிக்குமார் தனித்துத் தெரிகிறார். திடீரென்று காரல் மார்க்ஸின் ‘மாற்றம் ஒன்றே மாறாதது” போன்ற வசனங்களும் வருகின்றன. ரசூல் பூக்குட்டியின் சவுண்ட் இன் ஜினியரிங் படத்தின் இன்னொரு சிறப்பம்சம். அதுபோலவே ராஜீவ் மேனனில் ஒளிப்பதிவும். படத்தொகுப்பு செய்த ஆண்டனி இரண்டாம் பாதியில் போர்க்காட்சிகளை கொஞ்சம் வெட்டியிருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும்.
ஒரு மாயாஜாலக் கதையாகவும் இல்லாமல், வரலாற்றுக் கதையாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடையே பயணிக்கிறது கதை. குழந்தைகளுக்கு பிடிக்கக்கூடும். பெரும்பொருட்செலவில் எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களின் தரத்துடன் கோச்சடையானை ஒருபோதும் ஒப்பிட முடியாது என்றாலும், இனி இந்தியாவில் இதுபோன்ற முயற்சிகளுக்கு முன்னோடியாக கோச்சடையான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.