Tuesday, May 04, 2010

சினிமாவின் இலக்கியம்


ரு கதாநாயகன்-அவன் செய்யும் சாகசங்கள், வில்லனை வெற்றி கொள்வது, அவ்வபோது கதாநாயகியோடு டூயட் பாடுவது - இப்படி படங்களாகப் பார்த்து அலுத்துப் போயிருக்கும் மனங்களுக்கு அரிதாக ஆங்காங்கே மாற்று சினிமா எடுக்கும் சிலர் மட்டுமே நம்பிக்கையூட்டுகின்றனர். இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய ஃபியூச்சர் ஃபிலிம் என்று சொல்லக்கூடிய முழு நீள திரைப்படங்களுக்கு மத்தியில் சத்தமில்லாமல் சில தனிநபர்களின் முயற்சியில் குறும்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
                          ராஜாங்கத்தின் முடிவு.....

ஒரு சின்ன சம்பவத்தை வைத்துக்கொண்டு இரண்டு நிமிடங்களில் கூட நம் மனதைக் கவரும் வகையில் குறும்படமாக எடுக்கும் ஆற்றல் நம்மவர்களுக்கு இருக்கிறது. சிலர் இதில் முழுநீள திரைப்படம் எடுக்க மாட்டேன் என்று இருப்பவர்களும் உண்டு. வாய்ப்பு கிடைக்காமல் எடுக்காமல் இருப்பவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிலர் கோடம்பாக்கத்தில் அடியெடுத்து வைக்கும் கனவுகளோடு தயாரிப்பாளர்களுக்கு தங்கள் திறமையை நிரூபிப்பதற்காக விசிட்டிங் கார்டுக்காக குறும்படம் எடுக்கிறார்கள். இத்தகைய குறும்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வரவே வராது. தயாரிப்பாளர்களோடு முடங்கி விடுபவை. ஆனால் மக்களுக்காக எடுக்கப்படும் குறும்படங்கள் இன்று கவனிக்கப்படும் வகையில் உள்ளன. ஒரு கையடக்க கேமிரா இருந்தால் போதும். எளிதாக குறும்படம் எடுத்துவிடலாம். இப்போதெல்லாம் செல்போனில் கூட குறும்படங்கள் எடுக்கப்படுகின்றன. செல்போன் குறும்படங்களுக்கென்று தனியாக போட்டியே இப்போதெல்லாம் நடக்கிறது.

குறும்படங்கள் திரையரங்கங்களுக்கு வருவதில்லை. பின் எப்படித்தான் மக்களைச் சென்றடைகின்றன? பெரும்பாலும் டிவிடிக்கள், சிடிக்கள் மூலமாகத்தான். குறும்படங்களை எல்லோரும் பார்ப்பதில்லை. குறும்படங்களுக்கான மார்க்கெட் மிகவும் குறைவு. மசாலா படங்களை விரும்புபவர்கள் பெரும்பாலும் இத்தகைய குறும்படங்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. பத்திரிகையில் அவ்வபோது வெளியாகும் விமர்சனங்கள், குறிப்புகள் இவை மட்டுமே வெகுமக்களுக்கு குறும்படங்கள் சென்றடையும் வழியாக இருக்கிறது. இதைவிட்டால் வாய்மொழி மூலம் செய்தி பரவினால் உண்டு. இயக்கம் சார்ந்து செயல்படுபவர்களுக்கு ஓரளவிற்கு ஒரு குறிப்பிட்ட பகுதியினரை தங்கள் குறும்படங்கள் சென்றடைந்து விடுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

மார்க்கெட் குறைவு என்றாலும் கூட குறும்படங்களின் வரவு சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஒரு குறும்படத்தில் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோருமே தொழிற்முறை கலைஞர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் சில குறும்படங்கள் அமெச்சூர்த்தனத்தோடு இருப்பதை தவிர்க்க முடியாது. ஆனால் அப்படி எடுக்கப்படும் படங்களில் கூட சில சமயங்களில் நல்ல மெசேஜ் இருக்கும். நிறைய செலவு செய்து எடுக்கப்படும் குறும்படங்களும் இருக்கின்றன. கதையோடு கூடிய படங்கள், ஆவணப்படங்கள் என்று வகைவகையாக குறும்படங்கள் வருகின்றன.

"மாற்று தேடுபவர்களும், காட்சி ஊடகத்தின் உண்மையான போதையை உணர்ந்தவர்களும், இலக்கியம் தொடர்பானவர்களும், சமூக அக்கறையுள்ளவர்களும் குறும்படம் எடுக்க வருகிறார்கள்.ஆனால் அதையே தொழிலாக இன்றுள்ள சூழலில் வைத்துக்கொள்ள முடியாது. முன்பெல்லாம் ஒரு குறும்படம் எடுக்க எண்பதாயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை செலவு செய்வார்கள். இப்போது ஐயாயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் இருந்தால் போதும். செலவு குறைந்தது குறும்படங்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஒரு காரணமாக இருந்தாலும் சிடிக்கள் டிவிடிக்கள் கொண்ட இந்த டிஜிட்டல் யுகம் ஒரு முக்கியமான காரணம்.ஆரம்பத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்காக குறும்படங்கள் இயக்க ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை எழுபதுக்கும் மேற்பட்ட குறும்படங்களும் ஆவணப்படங்களும் எடுத்து விட்டேன். இந்த பதினைந்து ஆண்டுகளில் விஞ்ஞான வளர்ச்சியினால் இந்த துறையில் மிகப் பெரிய மாற்றம் உண்டாகி இருக்கிறது என்கிறார் எல்.வி.பிரசாத் அகடமியில் வகுப்பெடுக்கும் எம்.சிவகுமார்.

இந்தக் குறும்படங்கள் தயாரிப்பு செலவுக்கான பணம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால் முக்கால்வாசி பேர் கையிலிருந்துதான் பணம் போடுகின்றனர். பிறரிடம் நன்கொடை பெற்றும் சில படங்கள் தயாரிக்கப்படுகின்றன. என்னுடைய நண்பர்கள் எனக்கு உதவுகிறார்கள். இப்போது நிறைய பேர் படம் எடுக்கிறார்கள். ஆனால் சமூகத்தை தத்துவார்த்தமாக புரிந்து கொண்டு, மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போக்கு இல்லாமல் வரும் குறும்படங்கள் திருப்தியளிப்பதில்லை. திருவண்ணாமலையைச் சேர்ந்த அமுதா இயக்கிய ‘திருகாணி என்ற படமும் கர்ணமோட்சம் என்கிற படமும் நான் ச்மீபத்தில் பார்த்த்வைகளில் மிக முக்கியமான படங்கள்என்கிறார் அருள் எழிலன்.

சரி! செலவு செய்து குறும்படம் எடுத்து போட்ட முதலுக்கு லாபம் கிடைக்கிறதா என்று பார்த்தால் அதுவும் கூட பெரிதாகச் சொல்ல முடியாதுதான். நல்ல படம் என்று தெரிந்துவிட்டால் அதிலும் திருட்டு சிடி வந்து விடுகிறது. அப்புறம் எங்கே லாபம் கிடைப்பது? ஆனால் குறும்படம் எடுப்பவர்கள் பணத்திற்காக பெரும்பாலும் எடுப்பதில்லை என்பதால் தங்கள் படைப்பு அதிகம் பேரைச் சென்றடையட்டும் என்று எண்ணி விட்டுவிடுகின்றனர். இத்தனை சிரமப்பட்டு குறும்படம் எடுக்கும் காரணம் என்ன?

சினிமா மேல் ஒரு ஈர்ப்பு இருப்பவர்கள் தங்கள் சினிமா மோகத்தை தீர்த்துக் கொள்ள இத்துறைக்கு வருகிறார்கள். சில உதவி இயக்குநர்களும் தங்கள் முதல் படத்திற்குமுன் சிறிய அளவில் செய்து பார்க்கவேண்டும் என்ற தகிப்பு இருப்பதால் குறும்படம் எடுக்கிறார்கள். சிலர் தங்கள் கலைதாகத்தை தணித்துக் கொள்ள படம் எடுக்கின்றனர். நிறைய என்.ஜி.ஓ.க்களும் இன்று குறும்படங்கள் எடுக்கின்றன. எனக்குத் தெரிந்து எச்.ஐ.வி. குறித்து மட்டும் 500 படங்களுக்கும் மேல் வந்திருக்கும்.சினிமாவில் செய்ய முடியாத விஷயங்க்ளை இங்கே நாம் செய்யலாம். சினிமா கேமிராவை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்ல முடியாது. அப்படி சினிமா கேமிரா பார்க்க முடியாத இடங்களை கையடக்க கேமிரா மூலம் பார்க்கவேண்டும். என்னளவில் நான் ஒரு பரிசோதனை முயற்சியாகவே என் படங்களை எடுத்தேன் என்கிறார் அஜயன்பாலா.


2002 ம் ஆண்டு சென்னையில் முதன்முறையாக “சிலம்பு 2002என்ற பெயரில் மூன்று நாட்கள் குறும்படவிழாவை நடத்தினார் அஜயன் பாலா. “நான் அப்போது மூன்று நாட்கள் என்று அறிவித்து விட்டேன். 54 குறும்படங்கள் தேவைப்பட்டன. ஆனால் அவற்றை தேடிப் பிடிப்பதற்கு சிரமப்பட்டேன். இப்போது நிலைமை அப்படி அல்ல. ஏராளமான குறும்படங்கள் வருகின்றனஎன்கிறார் அஜயன்பாலா.
அஜயன் பாலா

சினிமா என்பது விஞ்ஞானம் திறந்து வைத்த மூன்றாவது கண். அது அநீதிகளை சுட்டுப் பொசுக்குவதற்காக மட்டுமே திறக்கவேண்டும். அவற்றைக் கண்டு கண்ணடிக்கக் கூடாது. வணிகப் படங்கள் வியாபாரரீதியாக வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அநீதிகளைச் சொல்வதில் குறும்படங்கள் சாதித்திருக்கின்றன. இவற்றின் வரவு அதிகரித்திருப்பது ஆரோக்கியமானது, வரவேற்கத்தக்கது. என் படங்கள் அனைத்தும் என் 17 ஆண்டு கால வங்கிப் பணியில் நான் சம்பாதித்ததைக் கொண்டு தயாரித்தவை. தற்போது சமச்சீர் கல்வி குறித்த படம் ஒன்றையும், ராமையாவின் குடிசையின் இரண்டையும் உருவாக்கும் பணியில் இருக்கிறேன். என்கிறார் பாரதி கிருஷ்ணகுமாரின் “ராமையாவின் குடிசைஆயிரம் பிரதிகளுக்கு மேல் விறபனையாகியிருக்கிறது.

புதியவர்களும் இளைஞர்களும் மட்டும்தான் குறும்படங்கள் எடுக்க வேண்டுமா என்ன? பாலுமகேந்திரா போன்றவர்களும் தொலைக்காட்சிக்காக நிறைய குறும்படங்கள் எடுத்திருக்கின்றனர். பாலுமகேந்திராவின் பெயர் பரிச்சயமும், திறமையும் காரணமாக குறும்படங்கள் பார்க்காத ஒரு சாதாரண ரசிகனும் பாலுமகேந்திராவின் ஆறு குறும்படங்கள் சிடியை வாங்கிச் செல்வதை பார்க்கமுடிகிறது. சந்தோஷ் சிவன் ‘மல்லி ‘தி டெர்ரரிஸ்ட் போன்ற சற்று நீண்ட மாற்றுபடங்களை எடுக்கிறார்.

பெண்களை இந்த துறையில் எப்படி பார்க்கிறார்கள்?

தொடக்கத்தில் ஒரு டீமாக பணியாற்றும்போது பெண் தலைமைக்கு சற்று சிக்கல்கள் இருக்கும்தான். ஆனால் உங்களை நிரூபித்து விட்டால் அதன்பின் பெண் என்பது சாதகமான விஷயமாக இருக்கும். பெண்கள், குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை குறும்படங்களாக்கும்போது ஆணை விட பெண்ணிடம் அதிக நம்பிக்கை வைத்து தங்கள் பிரச்சனைகளை சொல்வார்கள்என்கிறார் லீனா மணிமேகலை.

மீப காலமாக குறும்படங்கள் தொடர்பான பயிற்சி முகாம்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. அரசியல் இயக்கங்களும், பண்பாட்டுத்தளத்தில் செயல்படும் இயக்கங்களும் தங்கள் உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்களை நடத்துகின்றன. நிழல் சஞ்சிகையின் சார்பில் திருநாவுக்கரசு பயிற்சி முகாம்கள் நடத்துகிறார். சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே ஒருகாலத்தில் இருந்த பிலிம் சொஸைட்டிகள் இப்போது சிறிய நகரங்களுக்கும் பரவி விட்டன. மாற்று சினிமாவின்பால் ஈர்க்கப்படும் இளைஞர்கள் பலர் பிலிம் சொஸைட்டிகளில் உறுப்பினர்களாக ஆகிறார்கள். உலக சினிமா மட்டுமல்ல தமிழின் சிறந்த குறும்படங்களை அவர்களுக்கு பிலிம் சொஸைட்டிகள் அறிமுகப்படுத்துகின்றன. கருத்தரங்கங்களிலும் கூட ஒரு அமர்வாக இன்று குறும்படங்களை அறிமுகப்படுத்தி விமர்சனம் செய்கிறார்கள்

குறும்படங்கள் ஒருவகையில் ரசனையை வளர்க்கின்றன. வழக்கமான தமிழ்சினிமாவின் மசாலாத்தனங்களிலிருந்து விலகி ஒரு கலைப்படைப்பை படைக்க முடியும் என்று குறும்படங்கள் நிரூபித்திருக்கின்றன. அவற்றிற்கு ஒரு ஆரோக்கியமான சிந்தனையை வளர்த்தெடுக்கும் சக்தி இருக்கின்றது. முக்கியமாக சில குறும்படங்கள் வரலாற்று ஆவணங்களாகவும் மாறிவிட்டிருக்கின்றன. கீழ்வெண்மணி குறித்து விவரம் வேண்டுமா? பாரதி கிருஷ்ணகுமாரின் ராமையாவின் குடிசை பார்க்கலாம். கல்லுடைக்கும் தொழிலாளர்கள் குறித்த விவரம் வேண்டுமா? குட்டிரேவதியின் கல்மனிதர்கள் பார்க்கலாம். கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் பெண்கள் போன்ற வித்தியாசமான தொழில் புரியும் பெண்களை லீனா மணிமேகலையின் தேவதைகள் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். சாலைப்பணியாளர் குறித்த பதிவா? மாதவராஜின் இரவுகள் உடையும் இருக்கிறது. என் பெயர் பாலாறு என்கிற பாலாற்றைக் குறித்த காஞ்சனை சீனிவாசனின் படைப்பு இருக்கிறது. அற்புதமான காணொளி அனுபவத்தைத் தரும் அருள் எழிலனின் ஒரு ராஜாங்கத்தின் முடிவு- ஒரு தொலைபேசியும் ஒரு மனிதனும் மட்டுமே இப்படத்தில் திரையில் தோன்றுகிறார்கள்.

பனைமரமேறிப் பிழைக்கும் ஒரு கண்பார்வையற்றவரைக் குறித்த படம் 'அகவிழி'. ஒரு இளம்பெண் தன்னை அலங்கரித்துக் கொள்வதை ஒரு நிமடம் வரை காட்டிவிட்டு இறுதியில் அவள் தன் எல்லா அலங்காரங்களையும் பர்தா அணிந்து மறைத்துக்கொள்வதைக் காட்டுகிறது மறைபொருள். ஒரு சிறுமியின் அறிவியல் தாகத்தை தணிக்க இயலாமல் நம் கல்விமுறை அவளைக் கொல்வதை வலியோடு சொன்னது 'ஆயிஷா'. ஒரு தெருக்கூத்து கலைஞனின் வாழ்வைச் சொன்னது ஏழுமலை ஜமா. கொகோகோலா கம்பெனியால் குறைந்து போன நெல்லைச் சீமையின் தாமிரபரணி ஆற்றின் குறைந்து போன நீர்வளம் குறித்த கதிரின் மூழ்கும் நதி குறும்படம் தடை செய்யப்பட்டு பின்னர் தடையை மீறி திரையிடப்பட்டது. குறும்படங்களின் வீச்சு பெருகிவிட்டிருப்பதையே இந்தத் தடை காட்டுகிறது.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு சிற்றூரிலும்கூட குறும்படங்கள் அறிமுகமாகத் தொடங்கி இருக்கின்றன. மக்கள்தொலைக்காட்சியில் ஒரு குறிப்பிட்ட நேரம் குறும்படங்களுக்காகவென்றே ஒதுக்கப்பட்டிருப்பதோடு ஆண்டுதோறும் குறும்படப் போட்டியையும் வைத்து பரிசும் தருகின்றது.

ஆனால் இந்த குறும்படங்கள் எல்லாம் குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுழன்று அங்கேயே முடங்கி விடாமலிருக்க இங்கே எந்த ஏற்பாடும் இல்லை. திரைப்படங்களை பதிவு செய்வது போல குறும்படங்களை பதிவு செய்ய வேண்டியதில்லை என்பதால் ஆண்டுதோறும் வெளியாகும் குறும்படங்களின் எண்ணிக்கை தெரிவதில்லை. ஒரு அமைப்பு ஏற்படுத்தி குறும்படங்களைக் குறித்த பதிவு செய்யவேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை முயன்றேன். அன்றைக்கு மிகக்குறைந்த அளவு குறும்படங்களே வந்து கொண்டிருந்ததால் அந்த வேலை சற்று எளிதாக இருந்தது. ஆனாலும்கூட அதை தொடர முடியவில்லை இப்போது தமிழ்நாட்டில் மட்டும் ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து குறும்படங்கள் வெளியிடப்படுகின்றன. எனவே கணக்கிடுவது அத்தனை சுலபம் கிடையாது என்கிறார் எம்.சிவகுமார்.

“வெளிநாடுகளின் தயாரிக்கப்படும் குறும்படங்களுக்கு இருப்பது போல தமிழில் வெளியாகும் குறும்படங்களுக்கு உலக மார்க்கெட்டும் அங்கீகாரமும் இல்லை. இதற்கு சந்தையும் திரையரங்கங்களும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். சமூக நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டும் என்கிற தாகம் இருந்தால் ஆர்டீசியன் ஊற்று போல எல்லா தடைகளையும் மீறி குறும்படங்கள் வரும்என்று நம்பிக்கையூட்டுகிறார் பாரதி கிருஷ்ணகுமார்.

க்யூபா நாட்டில் அருகிலிருக்கும் அமெரிக்காவில் தொலைக்காட்சியான ‘வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ச்க்கைபோடு போட்டது. மக்கள் அந்த சேனலை பார்க்க ஆரம்பித்து விட்டால் ஆபத்து என்று யோசித்த ஃபிடல் காஸ்ட்ரோ ஒரே ஒரு விஷயம்தான் செய்தார். பிளார்பாரத்தில் கூட கிடைக்கும் அளவிற்கு கையடக்க கேமிராக்களை மலிவாக்கினார். குறும்படங்கள் நிறைய வர ஆரம்பித்தன. மக்களின் கவனம் திசை திரும்பியது. கலாசார படையெடுப்பை குறும்படங்கள் மூலம் தடுத்த முயற்சி இது.  ஜனரஞ்சக இதழ்களுக்கு மாற்றாக எப்படி சிற்றிதழ்கள் இருக்கின்றனவோ அதுபோலவே வணிக சினிமாவுக்கான ஒரு இலக்கியமே குறும்படங்கள் என்கிறார் அஜயன்பாலா.

மாற்றுபடங்கள் குறித்து வெகுகாலமாக வலியுறுத்திவரும் இயக்குநர் பாலு மகேந்திரா என்ன சொல்கிறார்?

குறும்படங்கள் அதிகமாக வருவது சந்தோஷமளிக்கிறது. இங்கே படிப்பறிவற்றவர்கள் அதிகம். யாருக்காக எழுத்தாளர்கள் எழுதுகிறார்களோ அது அவர்களைப் போய் சேராது. ஆகவே பேனாவை தூக்கியெறிந்துவிட்டு காமிராவை கையில் எடுங்கள் என்று ஒருமுறை முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் சொன்னேன். அதன்பிறகு அவர்கள் குறும்பட இயக்கம் தொடங்கி எழுச்சியாய் செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு நானும் ஒரு காரணம் என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இப்படி போகுமிடங்களிளெல்லாம் திரைமொழியின் மகத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன். விளம்பரப் படங்கள் கூட ஒரு வகையில் குறும்படங்கள்தான். விழிப்புணர்வை ஏற்படுத்த இன்று குறும்படங்கள் ஒரு காரணமாக இருக்கின்றன.

 குறும்படங்கள் எடுப்பவர்களுக்கு சினிமா பயிற்சியும், வாசிப்பும், இலக்கிய பரிச்சயமும் மிகவும் முக்கியம். நிறைய பேருக்கு இவை இல்லாததால் அவர்கள் எடுக்கும் படங்கள் முழுமை பெறுவதில்லை. நிறைய பயிற்சி வகுப்புகள் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு நடக்கின்றன. சினிமா குறித்து முழுமையாக இந்த மூன்று நாட்களில் கற்றுக் கொடுப்பது சாத்தியமில்லாதது. இத்தகைய முகாம்களில் சினிமா குறித்த ஒரு பரிச்சயமும் நம்பிக்கையும் கிடைக்கும். அவற்றை வைத்துக்கொண்டு மேலும் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டால் இத்துறையில் மிளிர முடியும். 

எனக்கு 40 வருட அனுபவமிருப்பதாலேயோ என்னவோ எடுக்கப்படும் குறும்படங்களில் பெரும்பாலானவை எனக்கு வருகின்றன. பெரும்பாலான குறும்படங்கள் தேறுவதில்லை. எப்படி ஒரு கிறுக்கலை கவிதை என்றோ, சிறுகதை என்றோ ஒத்துக்கொள்ள முடியாதோ அப்படித்தான் இதுவும். மொழிக்கு இலக்கணம் இருப்பது போல் சினிமா மொழிக்கும் இலக்கணம் இருக்கிறது. அதைக் கற்றுக்கொண்டு குறும்படங்கள் எடுத்தால் நன்றாக இருக்கும்.

 99 ல் நான் கதைநேரத்திற்காக 6 சிறுகதைகளை தேர்வு செய்து அவற்றை படங்களாக்கினேன். எனக்கு வாசிப்பு பழக்கமிருப்பதால்தான் அந்தக் கதைகளைப் படித்து அதில் ஏதோ ஒன்று என்னை பாதித்ததனால் அவற்றை படமாக்கினேன். ஜனரஞ்சக சினிமாவில் இருக்கும் என்னைச் சுற்றியுள்ள இளைஞர்களுக்கு நவீன இலக்கியப் பரிச்சயம் குறைவு. குறும்படம் எடுப்பவர்களாவது இலக்கியத்தோடு தங்களை நெருக்கமாக்கிக்கொள்ள வேண்டும். ஆகவேதான் நான் நடத்தும் பள்ளியில் உள்ள பிலிம் மேக்கிங் பயிற்சியில் தினமும் ஒரு சிறுகதையைப் படித்து அதன் சுருக்கத்தை எழுதச் சொல்கிறேன். அவர்களை நவீன இலக்கியத்தைப் படித்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறேன்.

நன்றி: புதிய தலைமுறை

4 comments:

 1. இன்றைய காலத்திற்கு மிகத் தேவையான அனுபவப்பூர்வமான கட்டுரை..!

  நன்றி கவின்மலர்..!

  ReplyDelete
 2. சிறந்த தொகுப்பு கவின்.....

  குறும்பட உலகம் குறித்த ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், முக்கிய செய்திகள், முக்கிய முயற்சிகள், முக்கிய மனிதர்கள் குறித்த அறிமுகமாகவும் கட்டுரை திறம்பட வழங்கப்பட்டிருக்கிறது....

  த மு எ க ச பற்றி பாலு மகேந்திராவை வைத்துப் பேசவைத்தது நேர்த்தி. ஆனால், மாற்றுத் திரை இயக்கம் பற்றி, மக்களிடம் இந்தக் குறும்படங்களைக் கொண்டு போகவேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருப்பது பற்றி நீங்கள் குறிப்பிட்டிருக்கலாம். அல்லது தமிழிடமோ வேறு பொறுப்பாளரிடமோ கேட்டு அதையும் கொண்டு வந்திருக்கலாம்.

  வாழ்த்துக்கள்..

  எஸ் வி வி

  ReplyDelete
 3. குறும்படங்களின் ஆக்கக் கூறுகள் குறித்துக் கட்டுரையில் உள்ள அனைத்துக் குறிப்புகளோடும் உடன்படுகிறேன். கக்கூசு கழுவுகிறவனையும் கழுவுகிறவளையும் பெரிய திரை இதுவரையில் நகைச்சுவைக்கு உரியவர்களாகவே சித்தரித்து வந்துள்ளது - கொஞ்சமும் உறுத்தல் இல்லாமல். குறுந்திரைதான் பீ அள்ளுவது முதல், கழிவுநீர்த்தொட்டியில் இறங்கி வேலை செய்வது வரையில் அவர்களது வலிகளையும், அவர்களை அசூயையுடன் அவர்களைப் புறக்கணிக்கிற பெருஞ்சமூக அசிங்கத்தையும் அதற்கான கோபத்தின் வெப்பத்தோடு வெளிப்படுத்தத் தொடங்கியது.
  அதே வேளையில், நான் பார்த்த பல குறும்படங்களில் ஒரு விதமான எளிமை மறுப்புத் தன்மை இருப்பதாகக் கருதுகிறேன். அறிவார்ந்த மட்டத்தோடு சுருங்கிக்கொள்கிற, தேர்ந்தெடுக்கப்பட்ட ரசிகர்கள் வட்டம் ஏற்றுக்கொண்டால் போதும் என்கிற அந்தக் கால சுத்த இலக்கியவாதிகளின் நோயில் குறும்படப் படைப்பாளிகள் பலரும் சிக்கிக்கொண்டுவிட்டார்கள். எளிய மக்களை ஈர்க்க முடியாத பலவீனத்திற்கு பல இசங்களின் கூடாரங்களுக்குள் பதுங்கிக்கொண்டார்கள். குறும்பட இயக்கம் மக்களுக்கான மாற்று சினிமா இயக்கமாக மாற வேண்டுமானால், அது உண்மையிலேயே பெரும்பகுதி மக்களைச் சென்றடையத் தக்க வகையில் படைக்கப்பட வேண்டும். இதன் அர்த்தம் மலிவான சரக்குகளைச் சேர்க்க வேண்டும் என்பதல்ல. இதுவரையில் பெரிய திரையும் சின்னத்திரையும் நம் மக்களை ஒரு மாதிரியாக வார்த்து வந்துள்ளன. அதை உடைக்க வேண்டுமானால் முதலில் மக்களோடு தோள் சேர்ந்து, அவர்களது பொழுதுபோக்கு ரசனைத் தேவையை மதித்து, குறும்படங்களை உருவாக்க வேண்டும். மசாலா என்று எளிதாகத்தள்ளிவிட முடிகிற பெரிய திரைப்படங்கள், ஒரு முறை பார்த்து கதை என்னவென்பது தெரிந்துவிட்டாலும் கூட மீண்டும் மீண்டும் பார்க்கத் தக்கனவாக இருப்பதன் சூக்குமத்தைப் புரிந்துகொண்டாக வேண்டும். படைப்புகள் மக்களுக்காக, சமூக மாற்றத்திற்காக என்பதில் உண்மையான அக்கறை உள்ளவர்கள், தனிமைப்படும் வாதங்களில் உறைந்துபோகாமல், இதைப் பற்றி ஆராயவும், குறும்படத்திற்குள்ளேயே சரியான மாற்றுக்கு முயலவும் முன்வர வேண்டும்.
  உள்ளடக்கத்தில் மட்டுமல்லாமல், உருவ வெளிப்பாட்டின் அடிப்படையிலும் குறும்படம் மக்கள் படமாக அமைய வேண்டும்.
  இப்படியொரு விவாதத்தைக் கிளறிவிட்டிருப்பதில் கட்டுரை வெற்றிபெற்றிருக்கிறது.
  -அ. குமரேசன்

  ReplyDelete
 4. நன்றாக இருக்கின்றது உங்கள் கட்டுரை. குறும்படம் பற்றிய செய்திகளும் குறும்படத்தின் ஆக்கங்கள் குறித்தும் எழுதியிருப்பது சிறப்பு

  யாழன் ஆதி

  ReplyDelete