Thursday, September 29, 2011

அண்ணன்

அண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இருக்காது. அண்ணன் என்று தான் நினைக்கத்தோன்றும் எப்போதும். ‘அண்ணன் இப்ப என்ன பண்ணிக்கிட்டுருப்பான்?’, ‘சாப்பிட்டிருப்பானா?’, ‘நான் தினமும் நினைச்சுப் பார்க்குற மாதிரி அண்ணனும் நினைச்சுப் பார்ப்பானா?’ இப்படி பல எண்ணஙக்ள் ஓடும் உள்ளுக்குள். 

அவன் தான் எனக்கு ஒரே ஆறுதல். என்ன கஷ்டம் வந்தாலும் சொல்லி அழ, ஆறுதல் தர அவன் ஒருவன் தான் இருந்தான் எனக்கு. தோழிகளோடு சண்டை, ஆசிரியர் திட்டுகிறார், அம்மாவோடு பிரச்சனை, அப்பா பேசுவதில்லை என்று எல்லா கஷ்டங்களுக்கும் உடனுக்குடன் தீர்வு சொல்கிறானோ இல்லையோ, எனக்கு ஆறுதலாவது சொல்வான் அண்ணன். என்  தோழிகளுக்கும் அவன் அண்ணனாகிப் போனான். அவர்களும் அவனை முத்து அண்ணன் முத்து அண்ணன் என்று சுற்றி வருவது எனக்கு எரிச்சலாக இருக்கும். ஆனாலும் பொறுத்துக் கொள்வேன்..

ஊருக்கே தெரிந்திருந்த்து எங்கள் நட்பு. இல்லை...இதை நட்பு என்று சொன்னால் அதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. இது நட்பு இல்லை. அண்ணன் மேல் வைத்திருக்கும் அன்பு ரொம்பவே புனிதமானது.. என்னுடன் கூடப் படிக்கும் கார்த்திக்கின் மீது உள்ளது நட்பு என்பதையும், அது போன்றதல்ல அண்ணனின் மீதான அன்பு என்பதையும் நான் உணர்ந்தே வந்திருக்கிறேன்.

”என் மேல் ஏன் உனக்கு இத்தனை பாசம்?” – இது அடிக்கடி அண்ணன் கேட்கும் கேள்வி. நான் சிரித்துக்கொள்வேன். சும்மா வந்துவிடுமா இந்தப் பாசம்? சின்ன வயதிலிருந்தே அண்ணன் இல்லையே என்கிற என்னுடைய ஏக்கம் என்னை விட வேகமாக வளர்ந்த்து. அண்ணன் உள்ள தங்கைமார்களைப் பார்க்கும்போதெல்லாம் பொறாமையா ஏக்கமா என்று புரியாத ஒரு உணர்வு என்னை ஆட்கொள்ளும். பள்ளிக்கு ஒன்றாக வரும் அண்ணன் – தங்கையைப் பார்க்கும்போதும், சைக்கிளில், வண்டியில் வைத்து ஊரில் ஏதோ ஒரு அண்ணன் தன் தஙகையைக் கூட்டிச் செல்லும்போதும் எனக்கு மனதைப் பிசையும். எனக்கு ஒரு அண்ணன் இல்லாமல் போயிட்டானே? சின்ன வயதில் அம்மாவிடம் போய் ஒரு நாள் கேட்டிருக்கிறேன் “எனக்கு ஒரு அண்ணன் பெத்துக் குடும்மா”  அம்மா சிரிக்கத் தொடங்கி விட்டது. நான் கோபித்துக்கொண்டு சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடித்தேன். “அண்ணனையெல்லாம் பெத்துத்தர முடியாது. உனக்கு முன்னாடியே பிறந்தாத்தான் அண்ணன். உனக்கு அப்புறம் பிறந்தா தம்பி தங்கச்சி தான் பொறக்கும்” என்று அம்மா விளக்க ஏமாற்றத்தில் முகம் சுண்டிப் போக சாப்பிட மாட்டேன் என்று அன்றைக்கு அழுது அடம் பிடித்தது இன்னமும் நினைவிருக்கிறது.

சினிமாவில் அண்ணன் – தங்கை பாசம் தொடர்பான பாச மலர், பாசப்பறவைகள் என்று படங்களையெல்லாம் பார்த்துவிட்டு அண்ணன் இல்லாத ஏக்கத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் தனிமையில் நான் அழுததுண்டு. எனக்கு ஒரு அண்ணன் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பதுண்டு. அவனோடு விளையாடி, சண்டை போட்டு, சினிமாவுக்குப் போய், அவன் பாடம் சொல்லிக் கொடுத்து படித்து, ஒன்றாகவே திரிந்து, பாட்டு கேட்டு – இப்படி என்னவெல்லாம் செய்திருக்க முடியும்? ஏக்கத்தில் எத்தனையோ நாட்கள் பெருமூச்சு விட்டிருக்கிறேன். இந்த ஏக்கத்தையெல்லாம் தீர்க்க வந்தவனாகவே முத்து தெரிந்தான் எனக்கு. கார்த்திக்கின் நண்பனாய் வந்தான் முத்து. ஆனால் கார்த்திக்கை விட வயதில் பெரியவன். முதலில் சாதாரணமாகப் பேச ஆரம்பித்த நான் என்னைப் போலவே அவனுக்கும் கவிதை பிடிக்கும் என்று அறிந்தபோது ஆச்சரியப்பட்டேன். அதன் பிறகு கவிதை நூல்கள் பரிமாறிக்கொள்ளத் தொடங்கினோம். எங்கள் புத்தகங்களை ஒருவர் மாற்றி ஒருவருக்குக் கொடுப்பதில் கார்த்திக் தான் தூது. அவன் மூலமாகவே புத்தகஙக்ள் போய்ச் சேர்ந்தன. இடையில் கார்த்திக் சில நாட்கள் புத்தகத்தை வைத்து அவன் படித்துவிட்டு அப்புறம் மெதுவாக்க் கொண்டுச் சேர்ப்பான்.


“எனக்கு வேற வேலையில்லைன்னு நெனைச்சீங்களா ரெண்டு பேரும்?” என்று அவ்வபோது அலுத்துக்கொண்டாலும் தொடர்ந்து புத்தகத்தூது அவன் மூலமாகவே நடந்தது. நானும் அண்ணனும் வாரத்தில் ஒரு நாள் தான் சந்தித்துக்கொள்ள முடிந்தது. ஏனெனில் ஊரின் அந்தக் கடைசியில் என் வீடும், இந்தக் கடைசியில் அண்ணனின் வீடும் இருந்தது.

ஒரு நாள் கார்த்திக் என்னை அண்ணனின் வீட்டுக்கு அழைத்துப் போனான். அண்ணன் அப்படியொன்றும் வசதியானவன் இல்லை. என் அப்பா அரசாங்க வேலையில் இருக்கிறார். அவனுக்கு அப்படியில்லை. வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு அவனுக்கிருந்த்து. அவன் வீட்டில் பெரும்பாலும் புத்தகங்கள் நிறைய வைத்திருந்தான். அத்தனையையும் அள்ளிக்கொண்டு வந்து விடலாமா என்று வெறி வந்தது எனக்கு. அத்தனையும் கவிதைத் தொகுப்புகள். ஒருசிலவற்றை எடுத்து வாசித்தபோது எனக்குச் சற்றுப் புரியாத மாதிரி இருந்த்து. என்ன இருந்தாலும் அண்ணன் என்னை விட புத்திசாலி என்பது என்னுடைய திடமான எண்ணமாக இருந்தது. அண்ணனின் கையெழுத்து முத்து முத்தாக மிக அழகாக இருக்கும். எந்த அடித்தல் திருத்தல் இல்லாமல் அண்ணன் எழுதுவதைப் பார்க்க பிரமிப்பாக இருக்கும். 


எல்லா வயசுப்பசங்களுக்கும் போல அண்ணனுக்கு ஒரு காதலி இருந்தாள்.  இருவருக்கும் தீவிரமான காதல். நானும் கூட அவ்வபோது அவர்கள் இருவருக்கும் இடையே தூது போயிருக்கிறேன். நல்ல எலுமிச்சை நிறத்தில் இருக்கும் அந்தப் பெண். அண்ணனோ கருப்பு. சேர்ந்து நடந்தால் தி.மு.க. கொடி போலிருக்கும் என்று நான் கிண்டல் செய்வேன்.

‘’ரொம்ப கிண்டல் பண்ணாதே! உனக்கு எவன் வர்றான்னு நான் பார்க்கத்தானே போறேன்’’ என்று அண்ணன் கிண்டல் பண்ணினான். ஏனோ எனக்கு கார்த்திக்கின் முகம் மனக்கண்ணில் வந்து போனது. அண்ணனிடம் நான் ஒரு விஷயத்தைச் சொல்ல்வேயில்லை. கொஞ்ச நாளாக கார்த்திக்கைப் நினைத்தால் வித்தியாசமான ஏதோ ஒன்று தோன்றுகிறது. ஒருவேளை இதுதான் காதலோ? அண்ணனிடம் கேட்டாலென்ன? ஒரு டாக்டர் போல, எனக்கு என்ன செய்கிறது என்று பொறுமையாக்க் கேட்டுவிட்டு இது காதல் தான் என்று அடித்து சொன்னான்.

எனக்கு கார்த்திக் என்கிற பெயர் கொடுக்கும் இன்பம் வேறெதுவும் தரவில்லை. அவன் தூரத்தில் வந்தாலே படபடப்பாகி விடும். கிட்ட நெருங்கிப் பேசுகையில் வியர்த்தது. அவன் எப்போதும் போல தோளில் தட்டிச் சிரிக்கும்போது நரம்புகளுக்குள் ஏதோ ஒன்று பாய்ந்து பரவி ஓடி சிலிர்த்தது உடல். ஆனால் கார்த்திக் வெகு சீக்கிரமே என்னுள் நடந்த மாற்றத்தை உணர்ந்து கொண்டு விட்டது போல் தெரிந்தது. என் கண்களை ஒரு நாள் உற்றுப் பார்த்தான். எந்த வார்த்தையும் பேசாமலேயே என் விழிகளின் ஓரத்தில் மின்னிய காதலை அவன் கண்டுகொண்டு விட்டான். ஒரே ஒரு நொடி அவன் கண்களும் ஒளிர்ந்ததைப் பார்த்தேன். இது போதும்! அவனும் என்னைக் காதலிக்கிறான். அண்ணனிடம் சொல்லவேண்டும்.

உடனே ஓடினேன். சொன்னேன். ‘நான் பேசட்டுமா?’ என்றான். வேண்டாம் என்றேன். அன்றைக்கு அண்ணன் என் கையை எடுத்து தன் கைகளில் பொத்திக்கொண்டான். ‘கார்த்திக் நல்ல பையன். நல்ல சாய்ஸ்’ என்றவாறே என் கைகளில் மென்மையாக முத்தமிட்டு ‘எது வந்தாலும் பார்த்துக்கலாம். கவலைப்படாதே!’ என்றான்.

அன்றைக்கு பூராவும் மிதந்து கொண்டேயிருந்தேன். ஒரு வனாந்திரத்தில் இரண்டு பற்வைகள் பறந்துகொண்டிருக்கின்றன. ஒன்று நான். இன்னொன்று கார்த்திக். இப்படியெல்லாம் கனவு வந்த்து. மறுநாள் அவனைப் பார்க்கப் போனபோது இனம் புரியாத பயமும், கலக்கமும் எனக்குள் தளும்பிக்கொண்டிருந்தன. அதையும்மீறி ஒரு குறுகுறுப்பும், சந்தோஷமும் எட்டிப்பார்த்தன. என்னைப் பார்த்ததும் அவன் கண்கள் மீண்டும் ஒளிர்ந்தன. விழிகள் மின்னினாலும் அவன் இதழ்கள் என்னிடம் சரியாகப் பேசவில்லை. எனக்குக் குழப்பமாக இருந்தது. ஏன் என்பது புரியவில்லை. என்னாலும் முன்பு போல அவனிடம் இயல்பாக இருக்க முடியவில்லை. அவனுடன் இருக்க வேண்டும் போலிருந்தாலும் உடனே கிளம்பினேன். வழக்கமாக தோளில் தட்டி விடைகொடுக்கும் கார்த்திக் அன்று பேசாமல் இருந்தான். நான் இரண்டே இரண்டு நொடிகள் அவன் கைகள் என் தோளில் படுவதற்காய்க் காத்திருந்தேன். ஆனால் அது நிகழவில்லை. விருட்டென்று கிளம்பினேன். ஒருவேளை தப்பு செய்கிறேனா நான்? இது என்ன கொடுமை?  கார்த்திக் என் நண்பன். அவன் எனக்குக் கடைசி வரை வேண்டும். இந்த சனியன் பிடித்த காதலால் ஒருவேளை அவன் என்னுடன் பேசாமலிருந்து விடுவானா? இல்லை.. அவனுக்கு என்னைப் பிடித்திருக்கிறது. அவன் கண்களின் அந்த விருப்பத்தை நான் பார்த்தேன். ஆனால் அவன் இயல்பாக இல்லை. என்ன செய்யலாம்?

அண்ணனிடம் போய் நின்றேன். புலம்பினேன். ‘விடு! சொல்லிட்டே இல்ல. நான் பார்த்துக்குறேன்’ என்றான். மறுநாள் கார்த்திக் என்னைத் தேடி வந்தான். ’வா கார்த்திக்’ என்று நான் சொன்னது எனக்கே கேட்கவில்லை. அவன் முகத்தைப்பார்த்தேன். எனக்கு பெரும் ஏமாற்றமாய் இருந்த்து. அவன் கண்கள் ஒளிரவில்லை. எங்கே? கண்களைச் சுற்றிலும் வெள்ளி இழை போல மின்னும் அவன் காதல் எங்கே? தேடினேன். கருமை படர்ந்திருந்தன அவன் கண்கள். இரவு வெகுநேரம் தூங்காததன் அறிகுறியாய் இருந்தது அந்தக் கருமை. ‘உன்கிட்ட பேசணும்’ என்றான். ‘சொல்லு’ என்றேன். இதயம் நின்று பின் துடித்தது. ‘பாவி! என்ன சொல்லப் போகிறாய்!’ 


‘நான் கொஞ்ச நாளா வித்தியாசமா உணர்றேன். நீயும் தான் இல்லையா?’ என்றான்.

நான் பதிலேதும் சொல்லவில்லை.’இல்லை’ என்பதா?’ஆமாம்’ என்பதா?
‘இல்லைன்னு சொல்லாதே! நான் பாத்தேன். உன் கண்ல பாத்தேன்.’ என்றான். ஒரு வார்த்தை பேசாமல் கண்கள் பார்த்து காதல் உணர்வது சாத்தியம்தானா? 
அடுத்து சொன்னான்...’இது வேணாம்னு தோணுது. நாம் ஃபிரண்ட்ஸா இருக்கலாம்’  ஆயிரம் ஈட்டிகள் பாய்ந்தன எனக்குள். ‘உன் சாதிக்காரங்களப் பத்தித் தெரியுமில்ல..! வெட்டிக்கொன்னுடுவாங்க...அதனால் படிக்கிற வழியப் பாரு. இது நடக்காது. வீணா ஆசைய வளர்த்துக்கிட்டு கஷ்டப்படவேணாம்’ என்றான்.

நான் அழுதேன். அவன் பிடிவாதம் பிடித்தான். எத்தனை தடை வந்தாலும் நான் அவனோடு சேரத் தயாராய் இருந்தேன். அவனோ முரண்டுபிடித்தான் ‘லூஸா நீ? தைரியம் இல்லையா உனக்கு?. நான் வந்துடறேன்’ என்று கத்தினேன். என்னைப் பார்த்துச் சொன்னான்..


 ‘உன்கிட்ட இனி பேசமாட்டேன்’ 


நான் அதிர்ந்து நிற்க, அவன் போய்விட்டான்.

நான் கண்ணீர் வற்றிய ஜீவனாய் பித்துப் பிடித்துத் திரிந்தேன். வீட்டில் என்னை விநோதமாய்ப் பார்த்தார்கள். கார்த்திக் என்னைப் பார்க்கவேயில்லை. அடுத்து வந்த ஒருவாரம் வெறுமையாய்க் கழிந்தது. அண்ணன் தான் என் ஒரே ஆறுதல். அண்ணன் வருத்தப்பட்டான். ஆனால் மறுநாளே அண்ணனுக்காய் நான் வருத்தப்படும்படியானது. அண்ணனின் காதலிக்கு அவசரம் அவசரமாய் நிச்சயம் செய்து விட்டார்கள். அண்ணன் இடிந்து போனான். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அதன்பின் அண்ணனின் காதலியும், கார்த்திக்கும் எங்கள் கண்களுக்குப் படவே இல்லை. அண்ணனின் நிலையைக் கண்டு அண்ணனின் அம்மா ஒரு  பெண்ணைப்பார்த்து கல்யாணம் செய்துகொள்ளச் சொன்னது. அண்ணன் அன்று என்னைத் தேடி வந்தான். ‘என்ன செய்ய நான்?’ என்றான். ‘கட்டிக்கோ!’ என்றேன். மறுவார்த்தை பேசாமல் எழுந்து சென்றான். அடுத்தநாள் அண்ணனின் அம்மா என்னிடம் வந்து ‘உன்னாலதான் இந்தக் கல்யாணமே நடக்குது. ராசாத்தி’ என்று கொஞ்சியது.

எல்லாம் நன்றாகவே போனாலும் கார்த்திக்கை மட்டும் என் மனதிலிருந்து தூக்கியெறிய முடியவில்லை. தூரத்தில் என்னை எங்காவது பார்க்க நேர்ந்தாலும் அவன் என் பார்வை படாத தொலைவிற்குப் போய்விடுகிறான். அவனை அண்ணன் கல்யாணத்திற்கு வரும்போது கிட்டேயாவது பார்த்துவிடவேண்டும் என்பதில் குறியாயிருநதேன். கார்த்திக் என் உயிருக்குள் ஊடுருவி இருந்தான். விழிகளை மூடினாலே அவன் கண்களைச் சுற்றி படர்ந்து மின்னிய காதல் தான் பிம்பமாய்த் தெரிந்தது. விழிகளைத் திறக்கையில் அவன் இல்லாத வெறுமை வந்து தாக்கியது. ‘நான் வரேன்னு சொல்றேன். அவனுக்கு தைரியமில்லயே! படுபாவி’ – மனசு அரற்றியது. கண்ணீர் வழிந்தது எனக்கு. துடைத்துக்கொண்டேன். தினமும் இதுவே வாடிக்கையாகிப் போனது. இரவு மணி பன்னிரண்டு. நான் விறுவிறுவென்று அண்ணனுக்கு கடிதம் எழுதத் தொடங்கினேன். என் கண்ணீர் முழுவதையும் காகிதத்தில் இறக்கி வைத்தேன். உறங்கிப் போனேன். மறுநாள் அண்ணனிடம் காகிதத்தை நீட்டினேன். வாங்கி வாசித்தான். ‘நீ இவ்வளவு நேசிக்கிறியா அவனை?’ என்றான். நான் தலையாட்டினேன். ’அவன் தான் வேணாம்னு சொல்றான்ல..ஏன் இப்படி உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கிறே’ என்றான். நான் விசும்பினேன்.


அண்ணனின கல்யாணம் நெருங்கிக் கொண்டிருந்தது. நான் எழுத நினைத்த டி.என்.பி.எஸ்.சி தேர்வும் அண்ணனின் கல்யாணமும் ஒரே நேரத்தில்  நடக்கவிருக்கின்றன. அம்மா என்னிடம் “என்ன செய்யப் போறே?” என்றது. “அண்ணன் கல்யாணம் இருக்கையில் பரிட்சை என்ன பெரிய பரிட்சை. போ... நான் கல்யாணத்துக்கு வருவேன். பரிட்சை எழுதலை” என்றேன். அம்மா திட்ட த் தொடங்கியது. “அண்ணன் கல்யாணம் தான் எனக்கு முக்கியம்” என்றேன். அம்மா முகத்தைச் சுளித்துக்கொண்டே போனது.

அண்ணன் கல்யாணத்துக்கு முதல்நாள் அவன் வீட்டுக்குப் போனேன். அவன் முகம் வாடி இருந்தது. நான் காரணம் கேட்டேன். ‘தெரியலை’ என்று உதட்டைப் பிதுக்கினான். அருகில் அழைத்து என் கைகளைப் பற்றிக்கொண்டான். அவன் கைகள் கொதித்தன. ‘என்னாச்சு? காய்ச்சலா?’ என்றேன் பதறியபடி. அவன் இல்லையென்று தலையாட்டினான். வெறித்த பார்வை பார்த்தபடி நின்றிருந்தான். நான் சமையலறைக்குச் சென்று அவனுக்கு தேநீர் தயாரித்து வந்து கொடுத்தேன். தேநீர் குவளையை வாங்கி அருகில் வைத்தவன் “எனக்கு உன் ஆறுதல் வேணும்!” என்றான். நான் அவனை நெருங்கினேன். அண்ணனின் கைகளைப் பற்றிக்கொண்டேன்.  ‘என்ன கஷ்டம்னாலும் சரியாயிடும்..நாளைக்குக் கல்யாணம். சந்தோஷமா இருங்க.சரியா?’ என்றேன். அவனைப் பார்க்கவே பாவமாய் இருந்தது எனக்கு.

அவன் தன் கைகளை என் கைகளிலிருந்து விடுவித்துக் கொண்டான். மெல்ல என்னை நெருங்கினான். அவன் விழிகள் என்னை உற்றுப் பார்த்தன. மெதுவாய் என் தோளில் கை வைத்தான். எனக்கு கார்த்திக் நினைவு வந்தது. இப்படித்தான் அவனும் கை வைத்து விடைபெறுவான். அண்ணன் தொட்டால் எனக்கு சாதாரணமாகவும் கார்த்திக் தொட்டால் மட்டும் ஏன் நான் இப்படி செத்துப் பிழைக்கிறேன்?  யோசித்துக் கொண்டிருந்தபோதே சடாரென்று என்னை அண்ணன் அணைத்துக் கொண்டான். மெதுமெதுவாக அவன் பிடி இறுகியது. என்ன இது..? வழக்கமாய் இப்படிச் செய்ய மாட்டானே? எனக்குப் புரியவில்லை. குழப்பமாய் நின்றேன். இரண்டே நொடிகளில் எனக்கும் அவனுக்குமிடையே காற்று கூட புக முடியாத இடைவெளி மட்டுமே மிச்சமிருந்த்து. அவன் கரங்கள் என் முதுகைச் சுற்றியும் கழுத்தைச் சுற்றியுமிருந்த்து. நான் செய்வதறியாது திகைத்தேன். ‘விடுங்க. என்னாச்சு உங்களுக்கு?’ என்றேன். சடாரென்று கழுத்தில் முத்தமிட்டான். அதிர்ச்சியில் உறைந்து போய் நிலைகுத்தி நின்றன என் கண்கள். உலகம் தலைகீழாய்ச் சுற்றுவது போலிருந்தது. இதற்கு முன் அண்ணனின் ஸ்பரிசத்தில் இல்லாத ஏதோ ஒன்றை உணர்ந்தேன். பாதாளத்திற்குள் பாய்ந்து நான் கீழே கீழே செல்லத் தொடங்கி இருந்தேன். மயக்கம் வரும்போலிருந்தது. கை கால்களை அசைக்க முடியாத அளவிற்கு அவன் பிடிக்குள் நான் திமிறினேன். கத்த நினைத்து வாய் திறந்தேன். வார்த்தை வரவில்லை. பிளிறலாய் ஒரு சத்தம் எனக்குள்ளிருந்து வெளிப்பட்டது. அடுத்த நொடி...என் இதழ்களை அவன் இதழ்கள் மூடிவிட்டன. நான் அவன் கரங்களில் சிறைபட்ட பறவையானேன். அவன் வலிமைக்கும் பலத்துக்கும் முன்னால் வலுவிழந்து நான் திமிறிக்கொண்டிருந்தேன். என் இதழ்களை அவன் விடுவித்தபோது நான் நிலைகுலைந்து போயிருந்தேன். அவன் கைகள் மெதுவாக என் உடலில் இருந்து எடுத்து என்னை விடுவிக்க, நான் நிற்க முடியாமல் தள்ளாடினேன். கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. அருகில் இருந்த சுவற்றைப் பிடித்துக்கொண்டேன். என்ன நடந்தது? ஒரு சில விநாடிகளில் என்ன நடந்தது? மனசுக்குள் பெரிதான ஓலம். அவன் இருந்த திசையைப் பார்க்கவே திகிலாக இருந்தது. சன்னமாய் அவன் குரல் எனக்குப் பின்னாலிருந்து கேட்டது. “என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. ப்ளீஸ்..போகாதே!”. நான் கீழே விழுந்து விடாமலிருக்க சிரமப்பட்டேன். திரும்பிப் பார்க்காமல் தட்டுத்தடுமாறி வெளியேறினேன்.

எப்போது வீடு வந்தேன் எப்படி வந்தேன் எதுவும் நினைவில் இல்லை. அம்மா வந்து என்னை எழுப்பும்போது விழித்தேன். ’இந்த நேரத்துல தூங்குற...என்ன மூஞ்சி பேயறஞ்ச மாதிரி இருக்கு. என்னாச்சு?’ என்றது. ‘தலைவலி’ என்று சன்னமாய் முனகினேன். அம்மா அறைக் கதவை சாத்திவிட்டு வெளியே சென்றது.

நான் கதறத் தொடங்கினேன். என் கண்ணீருக்கு அளவில்லாமல் இருந்தது. இரவு எனக்கு கொடுமையாதாகக் கழிந்தது. ஒரு நொடியும் உறக்கம் வராமல் அண்ணனின் முகம் வாட்டியது, இன்றைக்கு பார்த்த அவனுடைய வித்தியாசமான பாவத்தையும் மறக்க முடியவில்லை. அந்த நொடிகளை நினைத்தாலே கைகால்கள் நடுங்கின. நான் என்ன செய்யப் போகிறேன்? என்ன ஆனது அவனுக்கு? நன்றாகத்தானே  இருந்தான்? பொங்கிப்பொங்கி அழுதேன். வாய்க்குள் துணியை வைத்துக்கொண்டு சத்தம் வராமல் அழுதேன். “என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. ப்ளீஸ்..போகாதே!” என்கிற அவனுடைய குரல் எனக்கு பூதாகரமாய்க் கேட்டது. அறையின் சுவர்கள் நான்கும் பெரிதாகிப் பெரிதாகி என்னை நோக்கி வந்தன. நான் கத்த நினைத்து வார்த்தைகள் வராமல் மூர்ச்சையானேன். விடியற்காலையில் யாரோ என்னை அழுத்துவது போல கனவு கண்டு அலறினேன். கனவில் அண்ணனின் கைகள் என் கழுத்தைச் சுற்றின. அவை பாம்பாக மாறி என் உடலெங்கும் கொத்துகின்றன. அப்போது கார்த்திக் வருகிறான். வந்து பாம்பை எடுத்து தரையில் வீசியடிக்கிறான். என் தோளில் தட்டி சிரித்து விடைபெற்றுச் செல்கிறான். நான் விழித்துக்கொண்டேன்.

அண்ணனுக்கு இன்றைக்குக் கல்யாணம்! நான் போகவில்லையென்றால் ஊரே ஏனென்று கேள்வி கேட்கும். போனால் அவன் முகத்தைப்பார்க்க வேண்டும். என்ன செய்யலாம்? எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.


போகணுமா? இனி எப்படி அவன் என் முகத்தில் விழிப்பான்? நான் எப்படி அவன் முன்னால் நிற்பேன்? யோசித்துக்கொண்டே வாசலுக்கு வந்தேன். சரேலென வாகனத்தில் என்னைக் கடந்து செல்வது யார்? அவன் தான். இன்னும் இரண்டு மணி நேரத்தில் கல்யாணம். இங்கே என்ன செய்கிறான்? என் இதயம் நின்று மீண்டும் இயங்கியது. வியர்த்துக்கொட்டியது. போகும்போது ஏதோ போட்டு விட்டுப் போனது போலிருந்த்து. குனிந்து பார்த்தேன். முத்து முத்தான அவன் கையெழுத்து தான். நடுங்கும் விரல்களால் பிரித்தேன்.
நான்கு வரிகள் மட்டுமே எழுதப்பட்டிருந்த்து.

“வேறு எந்தப் பெண்ணிடமும் நான் இத்தனை சுகத்தை உணர்ந்ததில்லை. நான் என் வசமில்லை. இது எனக்குத் திருமணமானாலும் தொடரவேண்டும். இது எனக்காக அல்ல..உனக்காக..கார்த்திக்கைத் தவிர வேறு யாரையும் மனதால் நினைக்க மாட்டேன் என்று அடம்பிடித்த உனக்கு வாழ்க்கையில் இப்படியுமொரு சுகம் இருக்கிறது என்று காட்ட நினைத்தேன். அதனால் தான் நேற்றைக்கு அப்படியானது. அது உனக்காக! நீ அவனை மறந்துவிட வேண்டும் என்பதற்காக! ஒரு வேண்டுகோள். இனி நீ என்னை அண்ணா என்றழைக்க்க்கூடாது. “

படித்த வேகத்தில் அதனைக் சுக்குநூறாகக் கிழித்து எறிந்தேன். விழிகளில் நீர்முட்டிக்கொண்டு நின்றது. குளியலறைக்குச் சென்று தண்ணீர்க்குழாயைத் திறந்து வைத்துவிட்டு அழுதேன்.வெளியேவந்து அம்மாவிடம் சொன்னேன்
“அம்மா! கல்யாணத்துக்கு நான் வரலை. பஸ்ஸுக்கு பணம் தா. நான் டி.என்.பி.எஸ்.சி எக்ஸாம் எழுதப் போறேன்..” என்றேன்.


அம்மா என்னை விநோதமாய்ப் பார்த்துக்கொண்டே பணத்தைத் தந்தது. அதைப் பெற்றுக்கொண்டு சாலையில் இறங்கி நிதானமாய் நடந்து, எதிர்ப்புறம் வந்த பேருந்தைக் கைகாட்டி ஏறி “காலேஜ் ஸ்டாப் ஒண்ணு” என்று டிக்கெட் எடுத்து அமர்ந்தேன்.

பேருந்து என்னை சுமந்தவாறு விரைந்து கொண்டிருந்தத்து. பேருந்தில் இருவர் அமரும் இருக்கை ஒன்றில் ஒரு இளைஞன் மட்டும் உட்கார்ந்திருந்தான். என்னைப் பார்த்துச் சொன்னான் “அட சும்மா உட்காரும்மா! அண்ணனா நினைச்சு உட்காரு’’ என்றான். அவனருகில் சென்று அமர்ந்தவாறே சொன்னேன்.. ”நன்றிங்க! அண்ணனா ஏன் நினைக்கணும்? ஃபிரண்டா நினைச்சு உட்காந்துக்குறேன்’’ என்றவாறே ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். மரங்களும், வீடுகளுமாக பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தன.

Friday, September 09, 2011

செங்கொடிக்கு ஒரு கடிதம்


தோழி செங்கொடிக்கு!

எப்படி இருக்கிறாய் என்று நான் இனி உன்னைக் கேட்க முடியாது. எங்கே இருக்கிறாய் என்பது மட்டுமே தெரியும். காஞ்சி மக்கள் மன்றத்தில், நீ வளர்ந்த கம்யூனில் இருக்கிறாய். மண்ணில் புதைக்கப்பட்டு இருக்கிறாய் நீ. இன்னும் சில நாட்களில் உன் உடல் புழுக்களுக்கு இரையாகக் கூடும். புன்னகை தவழ்ந்த உன் முகம் செல்லரித்துப் போகக் கூடும். பறையெடுத்து ஆடிய உன் கைகள் இற்றுப்போய் வெறும் எலும்புகளாக மட்டுமே மிஞ்சக் கூடும். ஆனாலும் நீ வாழ்கிறாய்!

அன்புத் தோழி செங்கொடி! நான் உன்னை அறிந்தவளில்லை. நமக்குள் அறிமுகம் இல்லை. ஆனால் எனக்குத் தெரியும். நீ சாதாரணமானவள் அல்ல. அதை உன் பெயரே பறைசாற்றும். செங்கொடி...பட்டொளி வீசிப் பறக்க வேண்டும். ஆனால் எம்மை விட்டுப் பிரிந்து பறந்து சென்றுவிட்டது நியாயமா தோழி?

மூன்று உயிர்கள் மரித்துப் போய்விடக்கூடாது என்று தமிழகமே திரண்டு போராடுகையில், நீயும் போராடி இருக்கிறாய். போராட்டத்தில் உன்னை இணைத்துக் கொண்டிருக்கிறாய். .

உன் மரணத்தை கோழைத்தனம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் வீரமரணம் என்றும் நான் சொல்ல மாட்டேன். வெறும் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் நீ முடிவெடுக்கவில்லை. உன் முடிவை முட்டாள்த்தனம் என்றும் என்னால் போகிறபோக்கில் சொல்லிவிட முடியவில்லை. முதல் நாள் முத்துக்குமாரின் கடிதத்தை நீ வாசித்திருக்கிறாய். ‘முத்துக்குமார் போல இன்னொருவர் இன்றைய சூழலில் தன்னைத் தானே மாய்த்துக்கொண்டால் அன்று எழுந்த எழுச்சி போல இன்றைக்கு ஏற்படுமா?’ என்று நீ உன் தோழிகளிடம் கேட்டிருக்கிறாய் என்று அவர்கள் இப்போது சொல்கிறார்கள்.


நீ நினைத்ததை செய்து முடித்த திருப்தியோடு இப்போது உறங்கிக்கொண்டிருக்கிறாய். ஆனால் உன்னைப் பிரிந்து வாடும் நெஞ்சங்கள்?

உன் உடல் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்த அந்த இரவு, வெளியே கூட்டம் அலைமோதியது. அனைவர் கரங்களிலும் நீ எழுதிய கடித்த்தின் நகல் உன் கையெழுத்தில்! சுதந்திரத்திற்குப் பின்னான இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் காரணத்துக்காக உயிர் நீத்த முதல் பெண் நீ தான் என்பதை திருமாவளவன் ஊடகங்களுக்கு எடுத்துரைத்தார். அப்போது என் உடல் சிலிர்த்தது. ஆனால் அதையும் மீறி உன் மரணம் எத்தகைய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது, அதிர்ச்சியளித்தது என்பதை நீ அறிய மாட்டாய். உனக்குத் தெரிந்திருக்கும் செங்கொடி! சிவகங்கைச் சீமை வெள்ளையனிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது, உடலெங்கும் வெடிமருந்தைக் கட்டிக்கொண்டு வெள்ளையர்களின் ராணுவக்கிடங்கில் குதித்து ஆயுதங்களை அழித்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த குயிலியின் கதையை நீ அறிந்திருப்பாய்.  உன் மரணத்தை நீயே தேடிக்கொண்டது பற்றிய விமர்சனங்கள் ஆயிரம் இருந்தாலும், நீ நம்பிய உன் கொள்கைக்கு நீ உண்மையாய் இருந்திருக்கிறாய். அந்த உண்மைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உன் உடலைக் காண நான் உள்ளே செல்லவில்லை. என்னைப் போலவே பலரும் உன்னை அப்படியொரு கோலத்தில் பார்க்க மனது வராமல் நின்றிருந்தனர். அந்த இரவு பூராவும் காஞ்சி அரசு மருத்துவமனை வளாகம் மனிதத்தால் நிரம்பியது.

மறுநாள் மதியம் உன் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு காஞ்சி மக்கள் மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நீ வாழ்ந்த இடத்திற்குப் பயணமானது உன் உடல். பத்து கிலோமீட்டர் தொலைவை உன் உடலைச் சுமந்த வாகனம் கடந்து சென்றது. பல்வேறு இயக்கத்தினர் கலந்து கொண்ட அந்த ஊர்வலம் காஞ்சி நகரத்தின் வீதிகளில் சென்றபோது காஞ்சி நகர மக்கள் வீதியின் இருமருங்கிலும் நின்றனர். நகர எல்லையைக் கடந்து ஒரு வயல்பகுதியில் உன் உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது, தொலைவில் ஒரு பெண் வயற்காட்டினிடையே உன்னைப் பார்க்க ஓட்டமாய் ஓடிவந்தார். கூட்டமாய் ஓரிடத்தில் பெண்கள் திரண்டு உன் அழகோவியமான உருவத்தை வரைந்த பதாகையை உயர்த்திப் பிடித்து வந்த தோழர்களிடம் சொல்லி அந்த பதாகையை கையில் வாங்கித் தொட்டுப் பார்த்து கண்ணீர் விட்டு கதறியதை எப்படி நாங்கள் மறப்பது?

வழியெங்கும் மக்கள் எழுப்பிய உணர்ச்சிமிகு முழக்கங்கள் விண்ணைப்பிளந்தன. ஆனால் கேட்பதற்கு உன் செவிகள் செயலிழந்திருந்தன. பத்து கிலோமீட்டர் தொலைவைக் கடந்து நீ வாழ்ந்த ஊரான மங்ககலப்பாடிக்கு உயிரற்ற உடலாய் சென்று சேர்ந்தாய. உன்னோடு வாழ்ந்த மக்களின் கதறலுக்கிடையே உன் உடல் இறக்கப்பட்டது.

அந்த இடத்தில் தானே நீ நடமாடியிருப்பாய்? அந்த இடத்தில் தானே நீ உன் ஆட்டக்கலைப் பயிற்சிகளையும் ஒத்திகைகளையும் மேற்கொண்டிருப்பாய்? அந்த இடத்தில்தானே உன் அரசியல் அறிவை நீ வளர்த்துக் கொண்டிருப்பாய்? அந்த இடத்தில் தானே உன் கனவுகள் அலைந்து கொண்டிருக்கும்? நீ வாழ்ந்த வாழ்க்கை எல்லோருக்கும் வாய்க்காது. கம்யூன் வாழ்க்கை என்றால் நம்மில் பலருக்குத் தெரியாது. குடும்பத்தை விட்டு நீங்கி ஒரு பொதுவான இடத்தில் பொதுவான செயல்பாட்டுத் திட்டத்தோடு இணைந்து கூட்டாக வாழும் வாழ்க்கை உனக்கு வாய்த்திருந்தது. பாலின பேதமின்றி வாழும் அந்த வாழ்க்கை வாழ்ந்த நீ கொடுத்து வைத்தவள். ஆனால் அந்த வாழ்க்கையை நீ முழுதுவதுமாக வாழாமல் போய்விட்டதில் தான் எங்களுக்கு வருத்தம்!

உன் உடல் கீழ்த்தளத்தில் வைக்கப்பட்டு உன்னை உன் தோழர்கள் வந்துப் பார்த்து உனக்கு அஞ்சலி செலுத்தியவண்ணம் இருக்க, நீ அமைதியாய் கண்ணாடிப் பேழைக்குள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாய். மேல்தளத்தில் உன் உடலை என்ன செய்வது என்கிற விவாதம் நடந்துகொண்டிருந்தது. பொதுமக்கள் அஞ்சலிக்காக உன் உடல் சென்னையில் வைக்கப்படவேண்டும் என்பது பலரது கோரிக்கையாக இருந்தது. உன்னோடிருந்த காஞ்சி மக்கள் மன்றத்தின் மகேஷும், ஜெஸ்ஸியும், காவல்துறை அனுமதியளித்தால் எடுத்துச்செல்லுங்கள் என்றனர். ஆனால் காவல்துறை அனுமதியளிக்குமா? பல இயக்கங்களின் பிரதிநிதிகள், தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் கூடியிருந்தனர் செங்கொடி!. அரசியல் கட்சித்தலைவர்கள், தலித் தலைவர்கள், இடதுசாரித் தலைவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என்று ஒரு முப்பது பேர் வரை அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டோம் தோழி!



உன் உடலை எங்கே புதைப்பது? என்ன செய்வது? என்று முடிவு செய்வதற்காக கூட்டப்பட்டக் கூட்டம் கிட்டத்தட்ட  இரண்டு மணிநேரம் நடந்தது. வெளியே வந்திருந்த கூட்டம் பதைபதைப்பாகக் காத்திருக்க, அவரவர் கருத்தை அவரவர் முன்வைக்க சூடான விவாதங்கள் தொடங்கின. இளைஞர்கள் ஒருபுறம் உன் உடலை சென்னைக்கு எடுத்துச் சென்று பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டும் என்று கடுமையாக வாதிட்டனர். ஒரு கட்டத்தில் கடும் வாக்குவாதம் நடக்க, சென்னைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களை எடுத்துச் சொன்னார்கள் தலைவர்கள். எத்தனை சிக்கல்கள் வந்தாலும், குண்டடிப்பட்டாலும் அதைத் தாங்கத்தயாராக இருப்பதாக இவர்கள் சொன்னார்கள். ஆனால் தலைவர்களோ அதனை வேண்டாமென்றனர். “எங்களுக்கு வழிகாட்டுங்கள். உங்கள் வழிகாட்டுதல் படி நாங்கள் செயல்படுகிறோம். நீங்கள் மனது வைத்தால் காவல்துறையிடம் பேசி அனுமதி வாங்க முடியும்” என்று அரசியல் கட்சித் தலைவர்களிடம் கேட்டனர் பல்வேறு அமைப்பினர். ஆனால் அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை மீண்டும் மீண்டும் எடுத்துரைத்தனர் தலைவர்கள். ஒரு கட்டத்தில் இளைஞர்கள் உணர்ச்சி வேகத்தில் பேசுவதாக தலைவர்கள் கூறினார்கள். நீ எழுதிய கடிதத்தைச் சுட்டிக்காட்டி “செங்கொடியின் கடிதத்துக்கு என்ன பொருள்? அவள் கூறிய போராட்டத்தை நாம் முன்னெடுக்கப் போவதில்லையா?” என்று கேட்டனர் சிலர். இறுதியில் முடிவு நீ சார்ந்த காஞ்சி மக்கள் மன்றத்தின் கைகளில் விடப்பட்டது.  நீ வாழ்ந்த அந்த வீட்டில்தான் உன்னைப் புதைக்க வேண்டுமென்று ஏற்கனவே நீ கூறியிருந்ததை சுட்டிக்காட்டிய மகேஷ் உன் உடலை எடுத்துப் போவது குறித்து எந்த ஆட்சேபணையும் இல்லையென்றும், ஆனால் எந்த சிக்கலும் இல்லாமல், காவல்துறையின் அனுமதியோடுதான் எடுத்துப் போக வேண்டும். எங்கு எடுத்துச் சென்றாலும் மீண்டும் இங்கே, இதே வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்து ஒப்படைத்துவிட வேண்டும் என்று கூறிவிட, அதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டன. இறுதியில் காவல்துறையின் அனுமதி பெறும் அளவுக்கு இன்னமும் சக்தி பெறாத சிறிய இயக்கத்தினரும், தனிநபர்களும் தங்கள் கோரிக்கையை ஏமாற்றத்தோடு கைவிட்டனர். உன் உடலை அங்கேயே அடுத்த நாள் முழுதும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைப்பதென்றும், அதற்கடுத்த நாள் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் முடிவானது. இத்தனையும் மேலே மாடியில் நடக்கையில் நீ கீழே உன் சுற்றத்தார் புடைசூழக் கிடந்தாய்.

அன்றைக்கு மங்கலப்பாடி கிராமத்தை விட்டுக் கிளம்புகையில் மனம் கனத்துக் கிடந்தது. அதற்கடுத்த முழு நாளும் நீ அங்கேயே நீ வாழ்ந்த வீட்டிலேயே இருந்தாய். உன் சிரிப்பொலி அலங்கரித்த அந்த வீட்டில் உன் கனத்த மௌனம் காற்றில் பரவியிருந்த்து. உன் இறுதி நிகழ்வுக்காகக் காத்திருந்தாய். 31 ஆகஸ்ட் அன்று காலை, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரணதண்டனைக்கு நீதிமன்றம் எட்டுவார காலத்தடை விதித்தது. மகிழ்ச்சியில் துள்ளிய பலரும் “செங்கொடி ஒரு நாள் பொறுத்திருந்து பார்த்திருக்கலாமே” என்று ஆதங்கப்பட்டதைக் காண முடிந்தது. உன் இறுதிச்சடங்கிற்கு பல ஊர்களில் இருந்தும் வந்திருந்த மக்கள் திரளுக்கு நடுவே உன் உடல் புதைக்கப்பட்டதாக செய்தி வந்தது..

உன் உடலை என்ன செய்வது என்று முடிவெடுக்கும் கூட்டத்தில் நான் கேட்ட ஒரு குரல் இப்படிச் சொன்னது “சரியான வழிகாட்டுதல் இல்லாத, சரியான தலைமை இல்லாத ஒரு சமூகத்தில் தற்கொலைகளை தவிர்க்கமுடியாது. ஆனால் அது தற்கொலை அல்ல. கொலைதான். செங்கொடியின் மரணம் தற்கொலை அல்ல. அது கொலைதான்” என்றது அந்தக் குரல்.
ஆமாம் செங்கொடி! கையறு நிலையில் ஒரு சமூகமே நின்றுகொண்டிருக்கையில் வேறு வழியின்றிதான் இந்த நிலைக்கு நீ வந்திருப்பாய்.  உன் மரணம் தமிழக அரசிற்கு விடப்பட்ட எச்சரிக்கை மணியென்பதை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சொல்கிறது. முதல்நாள் குடியரசுத்தலைவரின் ஆணையை மாற்ற முதல்வருக்கு அதிகாரமில்லை என்றவர் மறுநாளே இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றியதில் உன் மரணத்திற்கும், உன் உடலைச் சுமந்து காஞ்சி நகர் வீதிகளில் வந்த அந்த ஊர்வலத்திற்கும் பங்கிருக்கிறது. ஒரு வகையில் நீ நினைத்ததை சாதித்துவிட்டாய். ஆனால் நீ எங்களுக்குத் திரும்பக் கிடைப்பாயா? தலித்-பழங்குடி சமூகமான இருளர் சமூகத்திலிருந்து  சமூகத்திற்காகப் போராட வந்த, போராட்ட குணம் கொண்ட,  உன்னை நாங்கள் இழந்து விட்டோமே! இந்த இழப்பை ஈடுசெய்ய முடியுமா? உன் மரணத்திற்குப் பின் உன் பாதையை பலர் தேர்ந்தெடுத்துவிடக்கூடாதே என்கிற பதைபதைப்பு தந்த பலரின் மரண அவஸ்தையை வார்த்தைகளில் விவரிக்க இயலாது செங்கொடி! நீ போய்விட்டாய். ஆனால் உன்னை யாரும் பின் தொடர்ந்து விடக்கூடாது என்பதே எங்கள் கவலை. உயிரின் மதிப்பு உன்னை இழந்த பின் அதிகம் தெரிகிறது செங்கொடி! மூவர் உயிர்காக்க நடந்த போராட்டத்தில் உன் உயிரை நீ மாய்த்துக் கொளவதை எப்படிச் சகிப்பது? பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் உன் மரணச்செய்தி கேட்டபோது துடித்துக் கதறினார். “வேண்டாம் பிள்ளைகளா! நான் என் மகனின் உயிரைக் காப்பாற்றத்தானே 21 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கிறேன். இன்னொரு உயிரைக் கொடுத்தா என் மகன் உயிரைக் காக்க வேண்டும். ஏன் இப்படிச் செய்தாய் செங்கொடி?” என்று கதறினார். தீராத துன்பத்தை உன் மரணம் அவருக்குத் தந்து விட்டதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

செங்கொடி! இப்படி போராட்டக்களத்தில் ஒவ்வொருவரும் உயிர் நீக்க நினைத்தால்...போராடயாரிருப்பார்? உன்னோடு போகட்டும் இந்த உயிர் நீக்கும் போராட்டம். வேறொருவர் இப்படி உயிர்நீத்து “ஆமாம்! எங்கள் சமூகம் வழிகாட்டுதலின்றித்தான் இருக்கிறது.” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வேண்டாம்! இது எங்கள் கனவு. ஆனால் கனவுகள் அனைத்தும் உண்மையாகி விடுவதில்லை.

போராட்டத்தன்மை மற்றும் போராட்டக் களத்தின் மீதான விமர்சனமாய் உன் மரணத்தை நீ அளிக்க, அதைக் கொச்சைப்படுத்தி ஆதாயம் தேடும் ஊடகங்களின் பார்ப்பன ஆணாதிக்கத் திமிரை அடக்க பல கோடி செங்கொடிகள் உருவாகி, உயிர் நீக்காமல் போராட வேண்டும்!

செங்கொடி! உனக்குப் பிரியாவிடை கொடுத்தனுப்பினோம். நீ வாழ்கிறாய் எங்கள் நெஞ்சங்களில்! ஆனால், எங்கள் நெஞ்சங்களில் வாழ்வதை விட, எங்களோடு நீ வாழ்ந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்போம். இந்த மகிழ்ச்சியை தமிழ்ச்சமூகம் எங்களுக்கு விட்டு வைக்குமா? இனியாவது?
இந்தக் கேள்விக்கு விடை உன்னைப்போன்ற, என்னைப்போன்ற யார் கையிலும் இல்லை. ஒரு தலைமையோ, வழிகாட்டுதலோ இல்லாத இச்சமூகம் என்ன செய்யப் போகிறது?  தற்கொலைகளால் போராட்டக்களத்தை நிரப்பப் போகிறதா? நம் வரலாறு தற்கொலைத் தேதிகளால் எழுதப்படுமா?

சாதியை கணக்கிலெடுக்காத தமிழ்த்தேசியமும்,  மக்களின் விருப்பத்தை அல்ல இயக்கத் தொண்டர்களின் விருப்பத்தைக்கூட அறியாத இடது அரசியலும்,  தங்களுக்கான அரசியலை முன்னெடுக்க முடியமல் தொடர்ந்து தங்களின் இருப்புக்காய் போராடும் தலித் அரசியலும்,  தொடங்கிய பாதையை விட்டு வெகுதூரம் போய்விட்ட திராவிட அரசியலும், எங்கனம் எங்களுக்குத் வழிகாட்டக் கூடும்? இந்த உண்மையை உரக்கச் சொல்வதற்காக நீ மாய்த்துக்கொண்டாயோ?

செங்கொடி! உன்னை யாரும் பின் தொடர்கிறார்களா என்று திரும்பிப் பார்த்துக்கொண்டே உன் பாதையில் செல்! பின் தொடர்ந்தால் கொலைகள் தொடர்கின்றன என்று பொருள். அது தனிமனிதக் கொலை அல்ல. ஒரு சமூகக் கொலை. சித்தாந்தங்களை கற்பித்தவர்களின் தோல்வி. கற்றுக்கொண்டவர்களின் தோல்வி. கையறு நிலையின் வெற்றி.

ஏதாவது செய்யச் சொல்கிறது உணர்வு. என்னவென்று கேட்கிறது அறிவு. உணர்வுக்கும், அறிவுக்குமான ஊடாட்டத்தில் மெல்ல விலகுகிறது பனித்திரை. எதிரே பிரம்மாண்டமாய் நிற்கிறது என் கையறு நிலை. கிழித்துச்செல்ல எத்தனிக்கிறேன். கிழிபட்டுப் போகிறேன். கிழிசல் ஓட்டைகளுக்கு இடையே நம்பிக்கை கண் சிமிட்டுகிறது நட்சத்திரங்களின் வடிவில்! – இப்படித்தான் முடிக்க நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை தோழி! கிழிபட்டுப் போவதுதான் தற்போதைய அரசியல் சூழலில் சாத்தியம். உனக்கு நேர்ந்ததும் இதுவே.

அனைத்துக் கதவுகளும் இறுக மூடிக்கொண்ட ஒரு வீட்டினுள், வெளியேற இயலாமல், மீட்பருக்காகக் காத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் ஒரு சின்னஞ்சிறு குழந்தையைப் போல இன்னும் எத்தனை காலம் கழியப்போகிறது? விடைகாண இயலாத இப்படியான பல கேள்விகளால் நிறைந்திருக்கிறது மனம். கேள்விகளின் கனம் போலவே துயரத்தின் கனமும்,  இப்பூமியில் காற்று நிரம்பியிருப்பது போல மனமெங்கும் நிரம்பியிருக்கின்றது தோழி!

இப்படிக்கு,
உன் தோழி

Friday, August 19, 2011

நிராகரிப்பு



அனைத்து உயிரினங்களிலும்
ஆணும் பெண்ணுமாய்
ஒரு ஜோடி
நோவாவின் கப்பலில்.
நீராலழிந்த புவிக்கோளத்தின்
மீட்டுருவாக்கத்தின்பின்
திகைத்து நிற்கிறான் நோவா
கப்பலில் இடம் மறுக்கப்பட்டும்
பேரழிவுக்குப் பின்னும் உயிர்த்தெழுந்த
மூன்றாம் பாலினம் நோக்கி!

Monday, August 08, 2011

எதிரொலிக்கும் கரவொலிகள்!




ஆண்களால், பெண்களால் நுழைய முடியாதது திருநங்கைகளின் உலகம். சமூகத்தில் திருநங்கைகள் குறித்த பார்வை முற்றாக மாறிவிடவில்லை. எனினும், ஆங்காங்கே நடக்கும் சில அபூர்வ நிகழ்வுகள் மாற்றம் குறித்த நம்பிக்கைத் தருகின்றன. அதில் ஒன்றுதான் கடந்த வாரம் கன்னிமரா நூலக அண்ணா சிற்றரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்து இருந்த 'திருநங்கையர் படைப்புலகம்’ என்ற நிகழ்வு. திருநங்கைகளின் எழுத்துக்கள், அவர்களைப் பற்றிய பதிவுகள் குறித்து ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்ட இந்நிகழ்ச்சி, தமிழ்ச் சூழலில் முதல் முயற்சி.
 நிகழ்ச்சியில் சுபாஷ் இயக்கிய 'காந்தள் மலர்கள்’, சி.ஜெ.முத்துக்குமார் இயக்கிய 'கோத்தி’ ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன. திருநங்கை என்ற ஒரே காரணத்துக்காக வேலை தர மறுக்கும் நிறுவனங்களின் போக்கை காந்தள் மலர்களும், பெற்றோர் வெறுத்து ஒதுக்கிய நிலையில், வாழ வழியின்றி கடைகளில் காசு கேட்கச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுவதை கோத்தியும் படம் பிடித்துக்காட்டின.

மறைந்த எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய 'வாடாமல்லி’ நாவல் குறித்தும், நாடக இயக்குநர் அ.மங்கை எழுதிய 'எதிரொலிக்கும் கரவொலிகள்’ நூல் குறித்தும் பிரியா பாபு ஆய்வுரை நிகழ்த்தினார். தமிழ் இலக்கியத்தில் ஒரு திருநங்கையை முக்கியக் கதாபாத்திரமாக வைத்துப் படைக்கப்பட்ட முதல் நாவல் 'வாடாமல்லி’. சு.சமுத்திரம் அந்த நாவலை எழுதக் காரணமாக இருந்த மூத்த திருநங்கை நூரியும் நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார்.

'அ.மங்கை 'கண்ணாடிக் கலைக் குழு’ என்று திருநங்கைகளைக்கொண்டு ஒரு கலைக் குழுவைத் தொடங்கி 'மனசின் அழைப்பு’ என்கிற நாடகத்தின் மூலம் திருநங்கைகள் குறித்த விழிப்பு உணர்வை உண்டாக்கியவர். அவருடைய நூலில் சமபாலின ஈர்ப்புகொண்டவர்களுக்கும் திருநங்கைகளுக்கும் இடையேயான வேறுபாடு நுட்பமாக விளக்கப்பட்டு இருக்கிறது. திருநங்கைகள் குறித்து அறிந்துகொள்ள நினைப்பவர்கள் அந்த நூலை அவசியம் வாசிக்க வேண்டும்!'' என்றார் பிரியா பாபு.
திருநங்கைகள் குறித்து தமிழ் இலக்கியத்தில் உள்ள பதிவுகள் குறித்துப் பேசிய கவிஞரும், அரங்கக் கலைஞருமாகிய 'லிவிங் ஸ்மைல்’ வித்யா, சங்க காலத்தில் இருந்தே திருநங்கையர் குறித்த பதிவுகள் தமிழ் இலக்கியத்தில் உள்ளதைச் சுட்டிக்காட்டினார். ''எஸ்.பாலபாரதியின் 'அவன்-அது=அவள்’ நாவல் முதன்முதலில் திருநங்கைகளின் காதல் குறித்து நுட்பமாகப் பேசியது. கி.ராஜநாராயணன் 1960-ல் எழுதிய 'கோமதி’ திருநங்கைகள் குறித்தான முதல் சிறுகதை. 1995-ல் ஹவி எழுதிய 'தீட்டு’, இரா.நடராசனின் 'மதி என்னும் மனிதனின் மரணம்’, திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் 'ஆச்சிமுத்து’, லட்சுமண பெருமாளின் 'ஊமாங்கொட்டை’, 1997-ல் வெளியான 'வக்கிரம்’, 2009-ல் வெளியான பாரதி தம்பியின் 'தீராக் கனவு’ ஆகிய கதைகள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை.

திருநங்கைகளோடு ஒப்பிடுகையில் திருநம்பிகள் குறித்தான பதிவுகள் கிட்டத்தட்ட இல்லவே இல்லை. (பெண் உணர்வுகொண்டு பெண்ணாக மாறும் ஆணை திருநங்கை என்பதுபோல, பெண் ஆணாக உணர்ந்து மாறினால் அவர்கள் திருநம்பிகள்!) இது மிகவும் வருத்தத்துக்கு உரியது. அவர்கள் ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாக உள்ளவர்கள்!'' என்று தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார் 'லிவிங் ஸ்மைல்’ வித்யா.
இவரின் 'நான் சரவணன் வித்யா’, ரேவதியின் 'உணர்வும் உருவமும்’, ப்ரியாபாபுவின் 'மூன்றாம் பாலின் முகம்’ ஆகிய மூன்று நூல்கள் குறித்து பேராசிரியை சந்திரா தன் கருத்துக்களைப் பதிவு செய்தார்.

நிகழ்ச்சி முடிந்த பிறகும் 'லிவிங் ஸ்மைல்’ வித்யா மேடையில் வாசித்த அவரது கவிதை மட்டும் செவிகளில் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.

'அப்போது நான்
முழுக்கை சட்டையும், கால் சராயும்
அணிவது வழக்கம்
அப்போது நான்
மாதம் ஒருமுறையென
சீராக முடிதிருத்தி வந்தேன்
அப்போது நான்
ஆண்களுடன்
பள்ளியில்தான் படித்தேன்
இருந்தாலும் அவர்கள்
கிண்டல் செய்தார்கள்
நான் ஆணில்லை என
இப்போது நான்
புடவை கட்டி
ஒத்தசடை பின்னி
பூ முடிந்து
பாந்தமாக வளைய வந்தாலும்
அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்களாம்
'நான் பெண் இல்லை’என்று.!’


Saturday, August 06, 2011

கன்னித் தீவு கதையா கல்வி?


சிந்துபாத் கதை, 1001 அரேபிய இரவுகள் கதை என்று பலப் பல கதைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது, ஜெயலலிதா முடக்கிய சமச்சீர்க் கல்விக் கதை. 'இதோ வருது... அதோ வருது’ என்று எதிர்பார்த்து, புத்தகங்களுக்காக மாணவர்கள் காத்திருப்பதுதான் மிச்சம்!

ஜூலை 29 அன்று, மாணவர்களைப் போராட்டத்துக்கு அழைத்தது தி.மு.க. ஆங்காங்கே பள்ளிகளின் முன் போராட்டம் நடத்தி, சிலர் கைதானார்கள். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுவிடுவார்களோ என்கிற பயத்தில், அ.தி.மு.க. அரசு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தது. பள்ளிகளைக் கண்காணிக்க, காவல் துறையினர் வேறு. இந்தப் போராட்டத்துக்கு எதிராக, மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் சென்னையில் போட்டி போராட்டம் நடத்தினார்கள்.
தி.மு.க-வின் போராட்டத்துக்குக் கிடைத்த ஆதரவை வைத்து சமச்சீர்க் கல்விக்கு ஆதரவு இல்லை என்று எண்ணிவிட முடியாது. அ.தி.மு.க. ஆட்சியில், தி.மு.க. அழைப்பு விடுத்த போராட்டத்தில் கலந்துகொண்டால் கதி என்னவாகும் என்பது தெரியாதா என்ன?

ஆரம்பத்தில் இருந்தே சமச்சீர்க் கல்வி கேட்டுப் போராட்டங்களை நடத்திவரும் இந்திய மாணவர் சங்கம், தி.மு.க. அழைப்பு விடுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. சங்கத்தின் மாநிலச் செயலர் கனகராஜிடம் காரணம் கேட்டபோது, ''தி.மு.க. தனது ஆட்சிக் காலத்தில், இந்த விஷயத்தில் ஒழுங்காக நடந்து இருந்தால் இவ்வளவு பிரச்னைகளுக்கே இடம் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளிலேயே இந்தத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி இருக்கலாம். நிறைய அவகாசம் இருந்தது. அந்த நேரத்தை எல்லாம் வீணடித்தது தி.மு.க. அரசு. 2009 ஜூலையில் சமச்சீர்க் கல்வி கேட்டுப் போராடிய எங்கள் தோழர்கள் மீது தடியடி நடத்தியது தி.மு.க. அரசு. மறு நாள் சட்டமன்றத்தில் கலைஞர், 'சமச்சீர்க் கல்வியை உடனே கொண்டுவர முடியாது. யாரையும் பாதிக்காமல்தான் சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும். பொறுமை காக்க வேண்டும்’ என்று பேசினார். யாரையும் பாதிக்காமல் என்றால், தனியார் பள்ளிகளுக்கு எந்தப் பாதிப்பும் வராமல்தான் சமச்சீர்க் கல்வியைக் கொண்டுவர வேண்டும் என்றுதானே பொருள்?
ஆக, எல்லாக் குளறுபடிகளையும் செய்து விட்டு, இன்றைக்கு அரசியல் ஆதாயத்துக் காக... சமச்சீர்க் கல்விக்காகப் போராடுகிறோம் வாருங்கள் என்று தி.மு.க. சொன்னால் நாங்கள் எப்படி இணைந்துகொள்வது?' என்றார் கனகராஜ்.

இது ஒருபுறமிருக்க, உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, புத்தகங்களை வழங்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் மேலும் கால அவகாசம் கேட்க, மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இப்படி இழுத்தடித்துக்கொண்டே இருப்பது கல்வித் துறையில் அனைவருக்கும் அலுப்பையும் ஆயாசத்தையும் தோற்றுவித்து இருக்கிறது. அரசு வழக்கறிஞர் திடீரென்று, 'தமிழக அரசுக்குச் சரியான ஆலோசனை சொல்ல யாரும் இல்லை. அதனால்தான் சமச்சீர்க் கல்விச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துவிட்டது. அதனால், நீதிமன்றத்தின் நேரமும் வீணாகிவிட்டது'' என்று பல்டி அடித்தது இன்னும் பயங்கரம்.

ஆனால், இப்படி ஸேம் சைடு கோல் அடிப்பதன் காரணத்தை சமச்சீர்க் கல்வியைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் பேராசிரியர் அ.மார்க்ஸிடம் கேட்டபோது, 'சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் விவாதித்துக் கொண்டுவரப்பட்ட சமச்சீர்க் கல்விக்கான சட்டத்தில் எந்த விவாதமும் இன்றி அ.தி.மு.க. அரசு திருத்தம் கொண்டுவந்ததை, சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே கண்டித்து உள்ளது. சமச்சீர்க் கல்வி வழக்கைப் பொறுத்தவரை, இதுவரை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் அளித்து வந்த தீர்ப்புகள் அத்தனையிலுமே சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அடிப்படையாக இருக்கிறது.


இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தில் இருந்து தப்பிக்கவே தமிழக அரசு வழக்கறிஞரை இப்படிப் பேசவைத்து ஒரு நடைமுறைத் தந்திரத்தைக் கையாண்டு இருக்கிறது தமிழக அரசு. இதற்கிடையே தமிழக அரசு சமச்சீர்க் கல்வியின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி பார்த்தால், இப்போது முடக்கிவைக்கப்பட்டுள்ள சமச்சீர்க் கல்விப் பாடப் புத்தகங்கள் தவிர, இதில் அங்கீகரிக்கப்பட்டுள்ள புத்தகங் களை வாங்கி மெட்ரிக் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்குக் கொடுக்கலாம். ஒரு வகையில் இதைக் கேள்வி கேட்கவும் முடியாது. ஏனென்றால், பொதுப் பாடத் திட்டத்தின் கீழ்தான் இந்தப் பாடப் புத்தகங்களும் வருகின்றன. அதாவது, பாடத் திட்டம் பொது. ஆனால், பாடப் புத்தகம் பொது கிடையாது. அப்படி என்றால், அரசுப் பள்ளிகளில் 
ஒரு பாடப் புத்தகமும், மெட்ரிக் பள்ளிகளில் ஒரு பாடப் புத்தகமும் வைக்க அரசே வழி வகுத்துக் கொடுக்கிறது. எப்படியோ ஒரு வகையில் மாணவர்களை இரண்டு வகையினராகப் பிரித்துவிட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது' என்கிறார் அ.மார்க்ஸ்.


வர்க்க பேதமும் வர்ண பேதமும் ஏதோ ஒரு விதத்தில் தொடர வேண்டும் என்பதுதான் அரசின் ஆசையா?
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றே இப்போதைக்கு இந்த பேதம் களையும் அருமருந்து என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். தீர்ப்பு மருந்தாக அமையுமா அல்லது மேலும் மாணவர்களைச் சிக்கலுக்கு உள்ளாக்குமா என்பதே இப்போதைய கேள்வி!

Thursday, July 28, 2011

குழந்தைகள் அடம்பிடிக்கலாம்...அம்மா?


கடந்த தி.மு.க. ஆட்சியில் சமச்சீர்க் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டபோது,  'ஆசிரியர்-மாணவர் விகிதம், பள்ளிக் கட்டடம், உள்கட்ட மைப்பு வசதிகள் உள்ளிட்ட எல்லாமே சமமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது சமச்சீர்க் கல்வி. இதைப் பொதுப் பாடத்திட்டம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, சமச்சீர்க் கல்வி என்று சொல்லக் கூடாது. அனைத்து வசதிகளை யும் அரசு செய்துவிட்டு, முழுமையான சமச்சீர்க் கல்வியை அமல்படுத்த வேண்டும்’ என்று தொடக்கத்தில் கல்வியாளர்கள் குரல் எழுப்பினர். அதன் பின்னர், 'சமச்சீர்க் கல்விக்கான முதல் படி’ என்ற வகையில், இந்தத் திட்டத்துக்குத் தங்கள் ஆதரவை வழங்கினர்.

ஆனால், இப்போதைய அ.தி.மு.க. அரசு இந்த முதல் படியையே நிறுத்திவிட்ட காரணத்தால் சமச்சீர்க் கல்விக்கான மற்ற வசதிகளையும் கேட்டு கோரிக்கை வைத்தால், அவையெல்லாம் நிறைவேறும் சாத்தியமே இல்லை என்ற கசக்கும் உண்மை தெளிவா கத் தெரிகிறது. சமச்சீர்க் கல்வியை நிறுத்தி வைக்கும் சட்டத் திருத்தம் முதல் சுப்ரீம் கோர்ட் அப்பீல் வரை தொடர்ச்சியாக அ.தி.மு.க. அரசு மாணவர்களுக்குத் துரோகம் இழைத்தே வந்திருக்கிறது.




ஜெயலலிதாவின் பிடிவாதக் குணம் மாறவே இல்லை என்பதற்குச் சாட்சி இந்த சமச்சீர்க் கல்வி விவகாரம். 'அவர் மாறிவிட்டார்; திருந்திவிட்டார்’ என்று கட்டியம் கூறியவர்களின் முகத்தில் கரியைப் பூசிவிட்டார் ஜெயலலிதா.  டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், வைகோ, நெடுமாறன், ஜி.ராமகிருஷ்ணன், தா.பாண்டியன், கி.வீரமணி போன்ற தலைவர்களும், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உட்பட பல அமைப்புகளும் கேட்டுக்கொண்ட பின்னும், மேல்முறையீட்டுக்குச் சென்றது தமிழக அரசு. ஆனால், உச்ச நீதிமன்றமோ தமிழக அரசின் முகத்தில் கரி பூசிவிட்டது. அதே சமயத்தில், தி.மு.க-வினர் மீது நில அபகரிப்பு வழக்குகள் போடப்படுவதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டம் அறிவித்த தி.மு.க., மாணவர் நலனில் அக்கறை இருந்தால், தனது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஒரு நல்ல திட்டத் துக்குச் சமாதி கட்டப்படுவதை எதிர்த்துப் போராட்டம் அறிவித்து இருக்க வேண்டாமா?

இதுநாள் வரை இது குறித்து ஆசிரியர் சங்கங்கள் காத்து வந்த மௌனத்தைக் கலைத்து, சமச்சீர்க் கல்வியை வலியுறுத்தி யும், முத்துக்குமரன் கமிட்டியின் 109 பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரியும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவித்தது.

ஆகஸ்ட் 2 வரை புத்தகங்கள் வழங்க காலக்கெடுவை நீட்டித்து இருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆனால், இன்னமும் ஒரு பள்ளியில்கூட பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டதாகத் தகவல் இல்லை. இது குறித்து ஆசிரியர்களிடம் பேசியபோது, ''புத்தகம் எப்போது வரும் என்று எதுவுமே தெரியவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்கவும்கூட எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. அரசுக்கு எதிரான ஆள் என்ற முத்திரை விழுந்துவிட்டால், டிரான்ஸ்ஃபர் மாதிரி ஏதாவது நடவடிக்கை எடுக்குமோ அரசு என்கிற பயம் எல்லோருக்கும் இருக்கிறது. சமச்சீர்க் கல்வி பற்றி மாணவர்களிடம் பேசக் கூடாது என்று அரசு சுற்றறிக்கை அனுப்பி இருப்பதால், நீதிமன்ற உத்தரவை மாணவர்களிடமோ மற்றவர்களிடமோ சந்தோஷமாகப் பகிர்ந்து கொள்ளக்கூட முடியவில்லை. ஆசிரியர்கள் மத்தியில் அறிவிக்கப்படாத ஒரு எமர்ஜென்சி காலச் சூழல் நிலவுகிறது. ஆட்சியாளர்களின் விருப்பங்களையும் கொள்கை களையும் பள்ளிக்கூடத்தில் பின்பற்றும் இழிநிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டு விட்டது'' என்று வேதனைப்பட்டார் ஓர் ஆசிரியர்.

கூடுமானவரையில் புத்தகங்கள் வழங்குவதைக் கால தாமதம் செய்கிறது அரசு. உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி இந்நேரம் அனைத்துப் புத்தகங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், ஆகஸ்ட் 2 வரை புத்தகங்கள் வழங்க உச்ச நீதிமன்றம் காலக்கெடுவை நீட்டித்து உள்ளது. ஏன் அரசு இன்னும் புத்தகங்கள் வழங்கும் பணியைத் தொடங்கவில்லை?

''இணையத்தில் இருந்து சமச்சீர்க் கல்வி புத்தகங்களை முன்பே பதிவிறக்கம் செய்து வைத்து இருக்கிறோம். ஆனாலும், உத்தரவு வரும் வரை பாடம் நடத்த முடியாது என்பதால், குழப்பத்துடன் காத்திருக்கிறோம்'' என்கிறார்கள் சில ஆசிரியர்கள். இதற்கிடையே ஏற்கெனவே அச்சிடக் கொடுத்த பழைய பாடப் புத்தகங்களுக்கான ஆர்டரை அரசு இன்னும் ரத்து செய்யவில்லை. அச்சடிக்கும் வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

www.textbooksonline.tn.nic.in என்கிற அரசு இணையதளத்தில் இருந்த சமச்சீர்க் கல்வி நூல்களை இப்போது காணவில்லை. ஏற்கெனவே சமச்சீர்க் கல்வி அமலில் இருக்கும் 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கான நூல்களையும் சேர்த்து நீக்கி இருக்கிறது அரசு. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, சமச்சீர்க் கல்விக்கு உச்ச நீதிமன்றத் தின் இறுதித் தீர்ப்பில் தடை வாங்கி விடலாம் என்று அரசு எதிர்பார்க்கிறதோ என்பது ஆசிரியர்களின் அச்சமாக இருக் கிறது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், ''உடனடியாகப் புத்தகங்களை வழங்காவிட்டால், இது நாள் வரை
பொறுமையாக இருந்ததுபோல இனியும் இருக்க மாட்டோம்'' என்று அரசை எச்சரித்து உள்ளது. விருத்தாசலம் அருகே பள்ளி மாணவர்கள் அரசைக் கண்டித்து வகுப்புகளைப் புறக் கணித்துப் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். உச்சகட்டமாக, நீதிமன்ற உத்தரவை அவமதித்த தாக தமிழக அரசுக்கு வக்கீல் நோட்டீஸும் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்தப் பிரச்னைகள் ஒருபுறம் இருக்க... தமிழக அரசு செய்த இன்னொரு காரியமும் மிகுந்த கண்டனத்துக்கு உரியது. சென்னை உயர் நீதிமன்ற விசாரணையின் போது நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை தவிர, ஒவ்வொரு உறுப்பினரும் தனித் தனியே கொடுத்த கருத்துகளையும் சமர்ப் பிக்க வேண்டும் என்று ஆணை யிட்டது நீதிமன்றம். அதன்படி சமர்ப்பிக்கப்பட்ட தனித் தனி அறிக்கைகளையும், இறுதி அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தனர் நீதிபதிகள்.

''நிபுணர் குழு அறிக்கை, ஒவ்வொரு உறுப்பினரின் கருத்தையும் பிரதிபலிக்க வில்லை. சமச்சீர்ப் பாடத்தில் பல திருத் தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், அதைப் படிப்படியாகச் செய்ய வேண்டும் என்றும் நிபுணர் குழுவில் ஒரு சிலர் கூறி உள்ளனர். ஆனாலும், சமச்சீர்க் கல்வியை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று அவர்கள் ஒட்டுமொத்தமாகக் கருதவில்லை. அதோடு, பழைய 2004-ம் ஆண்டு பாடத் திட்டங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் கூறவில்லை. ஆனால், அறிக் கையோ தமிழக அரசு எடுத்துள்ள நிலையைத் தான் பிரதிபலிக்கிறது. அதுமட்டுமல்ல, வரைவு அறிக்கை முதல் இறுதி அறிக்கை வரை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபீதாதான் முடிவு எடுத்து உள்ளார். சமச்சீர்க் கல்வித் திட்டம் சிறப்பானது என்றும், அது தேவையானது என்றும் நிபுணர் குழுவின் பெண் உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கிறார். அவரது முழு கருத்தும் எங்களிடம் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையில் இடம்பெறவில்லை. சமச்சீர்க் கல்வியின் ஆக்கபூர்வமான விஷயங்களையும் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். ஆனால், இவையெல்லாம் இல்லா மல் அரசின் கருத்து மட்டுமே இறுதி அறிக்கையாக வந்திருக்கிறது'' என்று தனது 81 பக்க தீர்ப்பில் கூறியிருக்கிறது நீதிமன்றம்.

ஆக, நிபுணர் குழு, உறுப்பினர்களின் கருத்துகளைப் பிரதிபலிக்காமல், தன் இஷ்டத்துக்கு ஓர் அறிக்கையைத் தயார் செய்திருக்கிறது அரசு. இது மக்களையும் நீதிமன்றத்தையுமேகூட ஏமாற்றும் வேலை. நேர்மையற்ற இந்தச் செயலை நீதிமன்றம் மன்னித்தாலும், மக்கள் மன்றம் மன்னிக்கப் போவது இல்லை!

நன்றி : ஆனந்த விகடன்

Friday, July 22, 2011

மீண்டும் தேர்தல் வரும்!


தமிழ்நாடே எதிர்பார்த்துக் காத்திருந்த சமச்சீர்க் கல்வி வழக்குத் தீர்ப்பு ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் வந்தது. ஜூலை 18 அன்று காலையில் இருந்தே தீர்ப்பு அளிக்கப்படவிருந்த உயர் நீதிமன்ற அறையில் நிற்க இடம் இல்லாத அளவுக்குக் கூட்டம். வழக்கறிஞர்களும், பொதுமக்களும், பத்திரிகையாளர்களுமாக நிரம்பியது ஹால். நீதிபதிகள் இக்பால், சிவஞானம் அடங்கிய பெஞ்ச்சின் தீர்ப்பு விவரம்...  

 

 தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சமச்சீர்க் கல்வி சட்டத் திருத்தம் செல்லாது!
 உடனடியாக இந்த ஆண்டே 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சமச்சீர்க் கல்விக்கான பொதுப் பாடத் திட்டம் நடைமுறைக்கு வர வேண்டும்!
 ஜூலை 22-க்குள் பொதுப் பாட நூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்!
 பழைய பாடத்திட்ட நூல்களை மாணவர்களுக்கு வழங்கத் தடை!
 வேறு ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டும் எனில், ஒரு குழுவை அமைத்து மூன்று மாதங்களுக்குள் அந்தத் திருத்தங்களைத் துணைப் பாடத்திட்டமாக பள்ளிகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
 அரசு நியமித்த குழுவின் அறிக்கை நிராகரிக்கப்படுகிறது.

ஒரு கோடியே 38 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர். 22-ம் தேதிக்குள் பாடப் புத்தகங்களை வழங்குவது சாத்தியம் இல்லை என்றும், 28-ம் தேதி வரை கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். தமிழக அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது.

தீர்ப்புக்கு முதல் நாள் உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்வில், முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்வதாக இருந்தது.  தி.மு.க. வழக்கறிஞர்கள் சிலர் அவரது வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால், முதல்வர் வரவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், சமச்சீர் வழக்கு தீர்ப்பின் திசை எப்படி இருக்கும் என்ற யூகத்தின் அடிப்படையிலேயே அவர் தனது வருகையைத் தவிர்த்தார் என்று ஒரு தகவல்.

சமச்சீர்க் கல்விக்கான பொது மேடை என்கிற அமைப்பை ஏற்படுத்தி, பல ஆண்டுகளாகப் போராடி வரும் பிரின்ஸ் கஜேந்திர பாபு, ''இது மிகத் தெளிவான தீர்ப்பு. சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளைக் களைய வேண்டியே சமச்சீர்க் கல்வி வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. எந்தத் தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல், எல்லா மாணவர்களும் படிக்க இந்தத் தீர்ப்பு வழிவகை செய்யும்!'' என்றார்.

தீர்ப்பு வெளியானதும், 'அப்பாடா... ஒரு வழியாக நமக்கு ஒரு விடிவுகாலம் பிறந்ததே!’ என்ற மகிழ்ச்சி  ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும். கூடவே, 'மறுபடியும் அப்பீல் பண்ணாம இருக்கணுமே அரசாங்கம்!’ என்று கவலை. அதற்கேற்றாற்போல சிறிது நேரத்திலேயே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறது என்ற தகவல் வந்து, மீண்டும் பதற்றப் பரபரப்பை உண்டாக்கியது.

கல்வியாளர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள்?

பேராசிரியர் வசந்திதேவி, ''அரசு நல்லெண்ணத்தோடு இந்த விஷயத்தை இதோடு விட்டுவிட்டால் பரவாயில்லை. ஏற்கெனவே, மாணவர்களுக்கு இரண்டு மாதங்கள் வரை கால விரயம் ஏற்பட்டு இருப்பதை உணர்ந்து, அரசு செயல்பட வேண்டும்.
அரசுக்கு மூன்று மாத காலம் அவகாசம் அளித்து இருக்கிறது உயர் நீதிமன்றம். எவை எல்லாம் வேண்டாமோ அவற்றை நீக்கிவிட வேண்டியதுதானே?'' என்கிறார்.

கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபால், ''இது குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டு உண்மையான அக்கறையோடு வழங்கப்பட்ட தீர்ப்பு. இந்தத் தீர்ப்புக்குப் பின்னால் 40 ஆண்டு காலப் போராட்ட வரலாறு இருக்கிறது. இது ஏதோ இன்று நேற்று எழுந்த கோரிக்கை அல்ல. இது மக்களின் கோரிக்கை. இதை எந்தத் தனி மனிதருக்குமானது என்று கருதுவது தவறு. இது மக்களுடைய திட்டம். மக்களுக்குக் கிடைத்த வெற்றி. அரசு இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதுதான் நல்ல மரபாக இருக்கும்!'' என்கிறார்.
இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுமானால், தங்களைக் கேட்காமல் தீர்ப்பு வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யவிருப்பதாக சமச்சீர்க் கல்வி வழக்கைத் தொடர்ந்த மனுதாரர்கள் கூறி இருக்கின்றனர்.

தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், மாணவர்கள் கதி அதோகதிதான்! மீண்டும் வழக்கு, மீண்டும் தடை, மீண்டும் பிரச்னை, மீண்டும்... மீண்டும் என்று தொடர்ந்தால்...
ஐந்து ஆண்டுகளில் மீண்டும் தேர்தல் வரும்!

Monday, July 18, 2011

கிராமப்புற மாணவர்கள் என்றால் இளக்காரமா?

சமச்சீர்க் கல்வி நூல்களை ஆராய உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு உருவாக்கிய குழு, தனது அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டது. விசாரணையின்போது தலைமை நீதிபதி இக்பால் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போது, நீதிமன்ற உத்தரவை மீறி பாடப் புத்தகங்களைத் தமிழக அரசு அச்சடித்து வருவது குறித்து விளக்கம் கேட்டார். இதற்குப் பதில் அளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி.பி.ராவ், ''சமச்சீர்க் கல்வி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு விட்டன. மாணவர்களின் நலன் கருதி ஒரு மாற்று ஏற்பாடாகத்தான் பழைய பாடத் திட்டத்தின்படி புத்தகங்கள் அச்சிடப் படுகின்றன. அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தால், இந்தப் புத்தகங்களைப் பயன் படுத்திக்கொள்வோம். இல்லாவிட்டால், சமச்சீர்க் கல்விப் பாடப் புத்தகங்களைப் பயன்படுத்திக்கொள்வோம்!'' என்று 'பொறுப்பாக’ப் பதில் சொல்லி இருக்கிறார். இவர்கள் இங்கி-பிங்கி-பாங்கி போட்டு விளையாடுவதற்கு, மக்களின் வரிப் பணம் கோடி கோடியாகச் செலவாகிறது.

500-க்கும் மேற்பட்ட பக்கங்களைக்கொண்ட இந்தக் குழுவின் அறிக்கை என்ன சொல்கிறது? 'மாணவர்களின் சிந்தனையை வளர்க்கும் வகையில் சமச்சீர்க் கல்வி இல்லை!’ என்கிறது. முன்பு தரம் இல்லை என்றவர்கள் இப்போது, 'பாடச் சுமை அதிகம். சில பாடங்கள் மெட்ரிக் பாடத் திட்ட அளவுக்குச் சுமையுடன் இருக்கின்றன. ஆகவே, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியாது!’ என்கிறது அறிக்கை. கிராமப்புற மாணவர்களை இளக்காரமாகப் பார்க்கும் போக்கையே, இது எதிரொலிக்கிறது. இந்தியாவின் உச்ச பதவிகளை வகித்த, வகிக்கும் பலர் கிராமப்புறங்களில் படித்து வந்தவர்களே என்கிற உண்மையை உரக்கச் சொல்ல வேண்டி இருக்கிறது!
மின்னல் வேகத்தில் தயாராகி இருக்கும் 

இந்த அறிக்கைக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திராவிடர் கழகத்தின் மாணவர் அணி, மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகள் அறிக்கையை எரிக்கும் போராட்டம் நடத்தினர். இத்தனைக் களேபரங்களுக்கு நடுவில் சமச்சீர்க் கல்வியைக் கொண்டுவந்த தி.மு.க. தலைமை மௌனம் காக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி இது குறித்து அறிக்கை வெளியிட்டதோடு சரி. முந்தைய தி.மு.க. ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்து சமச்சீர்க் கல்விக்கு வழிசெய்து கொடுத்த தங்கம் தென்னரசுவிடம் இது குறித்துப் பேசியபோது...

''முதலில் இந்த அறிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும். தமிழ் நாட்டில் 85 சதவிகித மாணவர்கள் தமிழ் வழியில் அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பயில்பவர் கள். இவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர்கூட அரசு நியமித்த குழுவில் இல்லை. தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர்கூட குழுவில் இல்லை. உண்மையான கல்வியாளர்களும் இல்லை. தமிழே தெரியாதவர்கள் எப்படித் தமிழ் வழிப் புத்தகங்களைப் படித்து, அதன் தரம் குறித்து கருத்து சொல்ல முடியும்? ழிசிணிஸிஜி யில் இருந்துகூட தமிழ் அறிந்த ஒருவரைக் குழுவில் சேர்க்கவில்லை அரசு. இந்த அறிக்கை எப்படி நியாயமானதாக இருக்கும்? நான்கு நாட்கள் மட்டுமே கூடி, இரண்டு நாட்கள் மட்டுமே விவாதித்து, இவ்வளவு குறுகிய காலத்துக்குள் எப்படி இவர்களால் அத்தனை புத்தகங்களையும் படித்து அதன் தரம் பற்றி கருத்து கூற இயலும்?
இது ஒரு பக்கம் என்றால், உச்ச நீதிமன்றம் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு இப்போது இருக்கும் சமச்சீர்க் கல்வி நூல்கள் அப்படியே தொடர வேண்டும் என்றது. ஆனால், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அந்த நூலில் சில பகுதிகளைக் கிழிக்கிறார்கள். மறைக்கிறார்கள். இது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?'' என்று கேட்கிறார்.

''தி.மு.க. தலைவரின் துதி பாடும் பகுதிகள் இருப்பதாகவும், அதைத்தான் கிழிப்பதாகவும் அரசு கூறுகிறதே?''

''கலைஞரின் செம்மொழிப் பாடல் இருக்கிறது. அதில் அவர் குறித்த துதியா இருக்கிறது? அப்படியே அது இருக்கக் கூடாது என்றாலும் கலைஞர் சொன்னதுபோல், அதை எடுத்துவிட்டுப் பயன்படுத்த வேண்டியதுதானே?

இதே அ.தி.மு.க. அரசு ஆளுநர் உரையில், திருக்குறளை அரபு, சீன, ஆங்கில மொழி யில் மொழியாக்கம் செய்யப்போவதாகச் சொன்னது. ஆனால், வள்ளுவரின் படத்தைப் பாட நூல்களிலேயே மறைக்கிறார்கள். லாட காந்தம், சட்ட காந்தம் பற்றி ஒரு பாடம். இதில் சட்ட காந்தத்துக்குக் காலங்காலமாக சிவப்பு வண்ணம் தான் பூசப்பட்டு வந்தது. இது அறிவியல் உண்மை. இதில் கறுப்பு-சிவப்பு நிறம் என்பது தி.மு.க. என்று முத்திரை குத்தி, அதைக் கிழிக்கச் சொல்லி இருக்கிறார்கள். இந்த அரசுக்கு அடிப்படை அறிவியல் அறிவு கூட இல்லைபோல! சூரிய கிரகணம் குறித்த பாடத்தில் சூரியன் படம்தானே வரும்? அதையும் மறைத்தாயிற்று!

இது இப்படி என்றால், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 10-ம் வகுப்பில் திராவிட இயக்க வரலாறு, நீதிக் கட்சியின் தோற்றம், பெரியார், மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் போன்றவர்கள் குறித்து வரும் பாடம் ஆட்சேபகரமான பகுதி என்கிறார்கள். இதில் இருந்து சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளைச் சமன் செய்யும் சமச்சீர்க் கல்வியைக் கொண்டுவந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதோடு, அதைக் கொண்டுவந்த நல்ல பெயரையும் கலைஞர் பெற்றுவிடக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்!'' என்று பொங்கிப் பொருமுகிறார் தங்கம் தென்னரசு.

அரசு நியமித்த குழுவின் அறிக்கை குறித்து கல்வியாளர்களின் கருத்தறிய பேராசிரியர் கல்யாணியிடம் (பிரபா கல்விமணி) பேசினேன். ''இத்தனை அவசரமாக, குறுகிய காலத்தில் 40 நூல்களை வாசித்து அறிக்கை தருவது எல்லாம் சாத்தியமா என்று உச்ச நீதிமன்றம் யோசித்திருக்க வேண்டும். தமிழக அரசுக்கு இந்த வாய்ப்பு ஏதுவாக அமைந்துவிட்டது. அதன் விருப்பப்படி தனக்கு வேண்டியவர்களை நியமித்துக்கொண்டது. அந்தக் குழுதான் இப்போது நூல்கள் சரி இல்லை என்கிறது. ஒவ்வொரு நூலும் ஒரு குழுவால் எழுதப்பட்டது. ஒரு வாதத்துக்காக நூல்கள் சரியில்லை என்று வைத்துக்கொண்டாலுமே, 40 குழுக்களுமே சரி இல்லாமலா பாடம் எழுதி இருக்கும்?'' என்று கேள்வி எழுப்புகிறார்.

இதற்கிடையில், அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 'சமச்சீர்க் கல்வி குறித்து பள்ளி வளாகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மாணவர்களிடையே பேசக் கூடாது!’ என்று ஆணையிட்டு, அதில் ஆசிரியர்கள் கையெழுத்திடப் பணிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. சென்னையில் ஒரு பள்ளியில் ஆசிரியர்கள் கையெழுத்திட மறுத்துள்ளனர். சென்னையிலேயே இன்னொரு பள்ளியில் திரு வள்ளுவர் படத்தின் மேல் ஸ்டிக்கர் ஒட்ட மாட்டோம் என்று ஆசிரியர்கள் மறுத்து விட்டதாகவும் தகவல். இப்படி ஆங்காங்கே எதிர்ப்புகள் இருந்தாலும், ஆசிரியர் சங்கங்கள் வாய் திறக்காமல் இருப்பது வியப்பூட்டுவதாக இருக்கிறது.

தமிழக அரசைக் கண்டித்து சென்னை யில் கல்வியாளர்கள் நடத்திய கூட்டத்தில், ''ஊதிய உயர்வுக்காக மட்டும்தான் போராட் டம் நடத்த வேண்டுமா? இது கல்வியின் உயிர் நாடிப் பிரச்னை இல்லையா? இதற்கு தெருவில் இறங்கிப் போராடாவிட்டால், வரலாறு மன்னிக்காது!'' என்றார்கள்.  
ஆனால், பேராசிரியர் கல்யாணியோ இந்த மௌனத்துக்கு இப்படி விளக்கம் கொடுக்கிறார்...

''ஏற்கெனவே, எஸ்மா, டெஸ்மா சட்டம் பாய்ச்சி, ஒரு லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பியவர் ஜெயலலிதா. அதனால், இயல்பாக ஆசிரியர்களுக்கு அச்சம் இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதே ஆசிரியர்கள் தி.மு.க. ஆட்சியில் செயல் வழிக் கற்றல் முறை கொண்டுவந்தபோது, அதை எதிர்த்துப் போராடினார்கள். பிறகு, கல்வியாளர்கள் அந்தத் திட்டத்தின் நன்மைகளை எடுத்துரைத்த பின் புரிந்துªகாண்டனர். அப்போது, அவர்களுக்கு அரசின் முடிவை எதிர்ப்பதற்கு உரிய ஜனநாயக உரிமை இருந்தது!'' என்கிறார்.
எது எப்படியோ, அறிக்கை, கண்டனம், போராட்டம், வழக்கு என அனைத்துக்கும் நடுவே தமிழ்நாட்டு மாணவர்கள் திசை அறியாது தடுமாறுவதுதான் வேதனை!

***************

எனக்கு இல்லையா கல்வி?

'கல்விக் களத்தில் தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?’ என்ற தலைப்பில் மனித உரிமைக் கல்வி நிறுவனம் சென்னையில் ஜூலை 9 அன்று ஒரு கலந்தாய்வரங்கம் நடத்தியது. தமிழக அரசின் மீதான கண்டனம் வலுவாக கூட்டத்தில் வெளிப்பட்டது. கல்வியாளர்கள் வசந்திதேவி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், பிரின்ஸ் கஜேந்திரபாபு, பிரபா.கல்விமணி, பேரா.ச.மாடசாமி, புனித பாண்டியன், பேரா.சரஸ்வதி, பெ.மணியரசன், ஹென்றி டிபேன், பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், பாரதி கிருஷ்ணகுமார் உட்பட பலர் உரையாற்றினர். கூட்டத்தில் வெளியிடப்பட்ட பிரகடனம் இப்படிச் சொல்கிறது - 'குழு அறிக்கையில் உள்ள குறைபாடு களைச் சுட்டிக்காட்ட மற்றொரு அறிக்கை தயாரிக்க வேண்டியிருக்கும். குழுவுக்கு விதிக்கப்பட்ட முக்கிய ஆணை - முந்தைய பாடத்திட்டத்தைவிட சமச்சீர்த் திட்டம் சிறந்ததா எனபதைக் கண்டறிவதுதான். ஆனால், அதைப்பற்றிய கருத்துக்கள் எவையும் சொல்லப்படவில்லை. கிராமப்புறக் குழந்தைகளின் கற்கும் திறன் குறித்தும் கேள்வி எழுப்புகிறது அறிக்கை. அவர்களை இழிவுபடுத்தும் இந்த வர்க்க கண்ணோட்டம் ஒரு ஜனநாயக நாட்டின் அடிப்படை களையே தாக்குவதாகும். மெட்ரிக் பள்ளிகளின் கோரிக்கைகளை மட்டுமே ஏற்று, சமச்சீர்க் கல்வியை ஆதரித்த பல குரல்கள் அறிக்கையுடன் இணைக்கப் படவில்லை. நூல்கள் குறித்து ஆராய்வதுதான் குழுவுக்கு இடப்பட்ட பணி. ஆனால், அதையும் தாண்டி சமச்சீர்க் கல்விக்கு, பொதுப் பாடத்திட்டமே தேவை இல்லை என்று குழு பரிந்துரைப்பது கண்டனதுக்கு உரியது!’ என்கிறது அந்தப் பிரகடனம்.

பெ.மணியரசன், ''இது வல்லுநர் குழு அல்ல... கொல்லுநர் குழு. ஆம்! இத்தனை மாணவர்களை வாட்டி வதைத்துக் கொல்லும் குழுவை இப்படித்தான் அழைக்க வேண்டும்!'' என்றார்.

கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபால் பேசுகையில், ''இந்துத்வா கொள்கைதான் பழைய பாடத்திட்டத்தில் திணிக்கப்பட்டது. அதைத்தான் மீண்டும் கொண்டுவரத் துடிக்கிறது அரசு!'' என்றார். பேராசிரியர் மாடசாமி ''விவரம் அறியாத வயதில் குலக் கல்விக்கு எதிரான கோபத்தைப் பலரது முகங்களில் பார்த்திருக்கிறேன். அது போன்றதொரு கோபம் இன்றைக்கு ஆசிரியர்கள் - மாணவர்கள் மத்தியில் நீறுபூத்த நெருப்பாக இருப்பதைப் பார்க்கிறேன். இந்தக் கோபம் ஆட்சியாளர்களைச் சும்மா விடாது!'' என்றார்.

'தலித் முரசு’ ஆசிரியர் புனிதபாண்டியன் பேசும்போது, ''எதற்காக மறைத்து மறைத்துப் பேச வேண்டும்? பார்ப்பனீயம்தான் சமச்சீர்க் கல்வியைத் தடை செய்யக் காரணம் என்று வெளிப்படையாகச் சொல்லிவிடலாமே?'' என்றபோது, கூட்டத்தில் இருந்து ஒருவர் வெளிநடப்பு செய்தார்.

கூட்டத்தில் பாரதி கிருஷ்ணகுமாரின் 'எனக்கு இல்லையா கல்வி?’ ஆவணப் படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. சரியான நேரத்தில் வெளிவந்திருக்கும் சரியான படம் என்று கல்வியாளர்கள் பாராட்டினர்.

ஏற்புரை நிகழ்த்திய பாரதி கிருஷ்ணகுமார், ''தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும். தனியார் பள்ளிக்கூடங்கள் பெருகிய பின்னர்தான் நாட்டில் முதியோர் இல்லங்களும் அநாதை இல்லங்களும் பெருகின. திண்ணைப் பள்ளிக் கூடங்கள் என்கிற பெயரில் முன்பு தனியார் பள்ளிகளுக்கு அடிகோலியவர்கள்தான் இன்றைக்கு கல்வியைத் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள். நான் எடுத்த படங்களிலேயே துயரமான படம் 'எனக்கு இல்லையா கல்வி?’ படம்தான். இதற்கு முன் 44 உயிர்கள் கொல்லப்பட்ட கீழ்வெண்மணி கொடூரத்தை வைத்து 'ராமையாவின் குடிசை’ படமும் 94 பிஞ்சு உயிர்கள் கொல்லப்பட்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்தை வைத்து 'என்று தணியும்’ படமும் எடுத்து இருக்கிறேன். ஆனால், தமிழ்நாட்டில் வாழ்வா சாவா என்று தெரியாமல், கல்வி கிடைக்காமல் தினம் தினம் செத்துக்கொண்டு இருக்கும் கோடிக் கணக்கான குழந்தைகளின் துயரம் இந்தப் படம்!'' என்று நெக்குருகினார்.

நன்றி : ஆனந்த விகடன்
படங்கள் : வின்செண்ட்பால், சொ.பாலசுப்பிரமணியன்

Saturday, July 09, 2011

சமச்சீர் கல்வி தடை... சாதி உணர்வு காரணமா?

தமிழ்நாட்டில் எந்த ஒரு விஷயமும் ஒரு மாதத்துக்கு மேல் செய்திகளில் அடிபடாது. ஆனால், சமச்சீர்க் கல்வி விவகாரம்... இதில் விதிவிலக்கு. சமச்சீர்க் கல்வி குறித்த விவாதங்களும் விவகாரங்களும் தொடர்கின்றன.

 சமச்சீர்க் கல்விப் பாட நூல்களில் ஆட்சேபகரமானவை என்று கூறி, சில பகுதிகளின் மேல் ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து வருகிறது தமிழக அரசு. தமிழ்ப் பாட நூலில் இலக்கியம் இருட்டடிப்பு செய்யப்படுவதாக, இலக்கியவாதிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளரும், அறிவொளி இயக்கம் மூலம் கிராமங்கள்தோறும் மக்களுக்குக் கல்வி கற்றுத் தந்தவரும், எழுத்தாளருமான ச.தமிழ்ச்செல்வனிடம் உரையாடியதில் இருந்து...


''தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே கல்வி குறித்து  விசாலமான பார்வை இல்லை. ஆனால், முந்தையஆட்சி யின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மட்டும் இதுகுறித்து ஆழ்ந்த அக்கறையும் தெளிவும்கொண்டு இருந்தார். அதன் காரணமாகவே, இந்த அளவுக்காவது சமச்சீர்க் கல்வி வாய்ப்பு சாத்தியமாகி இருக்கிறது. இப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு கல்வி குறித்த பார்வை என்ன என்பதை, சமச்சீர்க் கல்வி நூல்களை ஆய்வு செய்ய அவர் உருவாக்கி உள்ள குழுவை வைத்தே அளவிட முடியும். சமச்சீர்க் கல்வி நூலில் இடம்பெற்றுள்ள கவிஞர் அப்துல் ரகுமானின் மிகப் பிரபல வரிகள் இவை -


'வேலிக்கு வெளியே
தலை நீட்டிய
என் கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே...
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்?’


விடுதலை உணர்வின் வீரியம் உரைக்கும் அற்புத வரிகள் இவை. இவற்றை ஸ்டிக்கர்கொண்டு மறைக்கிறார்கள். அவர் தி.மு.க. சார்பானவர் என்று கருதி, அப்படிச் செய்து இருக்கிறார்கள். பாவேந்தர் பாரதிதாசனையும் விட்டுவைக்கவில்லை இந்த அரசு. அவரு டைய ஆத்திசூடியையும் மறைத்தாயிற்று. அவர் திராவிட இயக்க முன்னோடிக் கவிஞர். அ.தி.மு.க. என்கிற ஆளும் கட்சியின் பெயரில் 'திராவிட’ என்கிற சொல் இருக் கிறது. ஆனால், கட்சியின் பெயர் அளவில் மட்டுமே திராவிடம் இருக்கிறது. புரட்சிக் கவிஞருக்கே இந்தக் கதியா?

தைப் பொங்கல் குறித்தான பாடத்தையும் நீக்கி இருக்கிறது அரசு. தைத் திருநாளை தி.மு.க. அரசு தமிழ்ப் புத்தாண்டு தினமாக அறிவித்ததால் இந்த நீக்கம். தமிழர்கள், காலங்காலமாகக் கொண்டாடி வரும் பண் பாட்டை, இப்படி ஸ்டிக்கர் ஒட்டி மறைத்துவிட முடியுமா என்ன?
சமச்சீர்க் கல்வி விவகாரத்தை, ஓர் ஆரிய - திராவிடக் கருத்தியல் போராட்டமாகவே நாங்கள்  பார்க்கிறோம். இது ஏதோ தி.மு.க.கொண்டு வந்தது, அதை அ.தி.மு.க. நிறுத்திவைக்கிறது என்று புரிந்துகொள்ளக் கூடாது. ஏன் சில பகுதி களை ஒட்டி மறைக்கிறோம் என்று மக்களுக்கு அரசு இன்னமும் விளக்கம் சொல்லவில்லை.
கருத்தியல் சூழலில் இந்த மாதிரியான ஒரு நிலை இருப்பது ஆபத்தானது. ஏகலைவன்காலத் தில் இருந்தே ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கப் பட்டு வந்த கல்வி, இப்போதும் சமூகத்தின் படி நிலையில் கீழே இருப்பவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்கிற எண்ணமே, அரசு செய்யும் இந்தக் குழப்படிகளுக்குக் காரணம். உண்மையான சமச்சீர்க் கல்வியின் முதல் படிதான் இந்த நூல்கள். அப்படியும் வெறுமனே 10 சதவிகித சமச்சீர்க் கல்வி மட்டுமே பாட நூல்கள் மூலம் நிறைவேற்றப் பட்டு இருந்தது. ஆனால், இந்த 10 சதவிகிதத் தையே அனுமதிக்கவில்லை என்றால், 'தரமான கல்வியை அளிப்போம்’ என்று சொல்லிய இந்த அரசின் மேல் நம்பிக்கை இழக்க வேண்டி இருக்கிறது. இங்கு நிகழ்வது ஒரு தத்துவப் போராட்டமே!’’

சென்ற ஆண்டு சமச்சீர்க் கல்விப் புத்தகங்கள் வெளியானபோது, இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன், பெரியார் தொடர்பான பாடம் அதில் இடம் பெற்றதற்குக் கண்டனம் தெரிவித் ததை நாம் மறந்துவிட முடியாது. வேறு எவற்றை எல்லாம் ஸ்டிக்கர்கொண்டு மறைத்து இருக்கிறது அரசு?

’’'சிரிப்பதா... அழுவதா?’ என்கிற தலைப்பில் ஒரு தாத்தா சிரிப்பதுபோன்ற படம் இருக்கிறது. அதை மறைத்து இருக்கிறது அரசு. அதைப் பார்த்தால், முன்னாள் முதல்வர் கருணாநிதிபோல்கூட இல்லை. தாத்தாவே பாடப் புத்தகத்தில் இருக்கக் கூடாதா என்ன?'' என்கிறார் ச.தமிழ்ச்செல்வன்.

தி.மு.க. அரசு அச்சடித்த சமச்சீர்க் கல்விப் பாட நூல்கள் தரமற்றவையாக இருப்பதாக, தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. 'சமூக நீதி என்கிற பெயரில் தரமற்ற பாடத் திட்டத்தை மாணவர்கள் மீது திணிக்க மனுதாரர்கள் முயற்சி மேற்கொள்கின்றனர்’ என்றும் கூறி இருக்கிறது.
உண்மையில் அரசு சொல்வதுபோல, சமச்சீர்க் கல்விப் பாடப் புத்தகங்கள் தரமற்றவையா?

''இல்லவே இல்லை! தேசியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் (NCERT) புத்த கங்களைவிட தரமானவை!'' என்கிறது தமிழ்நாடு அறிவி யல் இயக்கம். இந்த இயக்கம்  அண்மையில் ஒரு கள ஆய்வு மேற்கொண்டு, சமச்சீர்க் கல்விப் புத்தகங்களின் தரம் குறித்து அறிக்கை அளித்து இருக்கிறது. இந்த ஆய்வில் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்றனர். ''மெட்ரிகுலேஷன் பள்ளி நூல்களுக்கும், NCERT பாட நூல்களுக்கும் சற்றும் தரத்தில் குறையாமல் இருப்பதோடு, சில பாடங்களில் குறிப்பாக, 10-ம் வகுப்பு கணித, அறிவியல் பாடங்கள் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தைவிட மேம்பட்டே இருக்கின்றன. மாணவர்களை மையப் படுத்தி பாட நூல்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. மதிப்பீட்டு முறைகள் நவீன அறிவியல் அணுகுமுறையில் உருவாக்கப்பட்டு உள்ளன. கேள்விகளும்கூட சிந்தித்து விடை அளிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டு உள்ளன. பாட நூல் வடிவமைப்பு மேம்பட்டு உள்ளது!'' என்கிறது அந்த அறிக்கை.

அண்மையில், இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அறிவியல் இயக்க நிர்வாகிகள், ''ஒன்றாம், ஆறாம் வகுப்புப் பாட நூல்கள் சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட போது, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இதன் தரம் குறித்துக் குறை கூறவில்லை. ஓர் ஆண்டு கழித்து இப்போது குறை கூறுவது ஏன்? நிறுத்திவைத்துள்ள பாடப் புத்தகங் களை மக்களின் கண்களுக்குக் காட்டாமலேயே, அவற்றைத் தரம் இல்லை என்று அரசு சொல்கிறது. அவை வெளியிடப்பட்ட பின் அரசு தடை செய்து இருந்தால், மக்களிடம் இருந்து மிகப் பெரிய எதிர்ப்பை அரசு சந்தித்து இருக்கும்!'' என்கிறார்கள்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், ''மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சமச்சீர்க் கல்வியை எதிர்ப்பதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. அவர்களுக்கு வியாபார நோக்கம் இருக்கிறது. ஆனால், அரசு எதிர்ப்பதன் பின்னணியை நாம் யோசிக்க வேண்டும்!'' என்று சிந்தனையைத் தூண்டுகிறார்.

''நம் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்ட வரலாறு தவறான வரலாறு. சமச்சீர்க் கல்வி அவற்றை எல்லாம் சரிசெய்து, நிஜமான வரலாற்றை மாணவர்களுக்கு வழங்கி இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்துத்வா சக்திகள்தான் சமச்சீர்க் கல்வியை எதிர்த்து வந்திருக்கின்றன. இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சோ என்று பலரும் எதிர்க் கின்றனர். கிராமப்புறங்களில் பாடம் நடத்திக்கொண்டு இருந்த ஆசிரியரும்கூட இந்த சமச்சீர்க் கல்வி புத்தகம் எழுதியதில் பங்கேற்று இருக்கிறார். இது உண்மையிலேயே பாராட்டுக்கு உரிய விஷயம். வெறுமனே நகரங்களில் படிக்கும் மாணவர் களுக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மட்டுமே உருவாக்கியவை அல்ல இந்தப் புத்தகங்கள். பெரும்பாலான மெட்ரிகுலேஷன் பள்ளிகள், எப்போதுமே 10-ம் வகுப்புப் பாடத்தை ஒன்பதாம்  வகுப்பிலேயே நடத்தத் தொடங்கிவிடும். அப்படி கோடை விடுமுறையிலேயே இணையத்தில் இருந்து சமச்சீர்க் கல்வி நூல்களைப் பதிவிறக்கம் செய்து நடத்தத் தொடங்கிவிட்ட மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களே, நூல்கள் மிகத் தரமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்'' என்கிறார்.

தமிழ்நாடு அரசு நியமித்த சமச்சீர்க் கல்விக் குழு, இந்நேரம், தனது அறிக்கையை நீதிமன்றத்தில் அளித்து இருக்கும். உயர் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து, மிகச் சில நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும். 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்பது, தேர்தல் முடிவுகள் வரும்போது மட்டும் அரசியல் கட்சிகள் சொல்வது.

ஆனால், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, மக்களின் தீர்ப்பை எதிரொலிக்குமா?

நன்றி : - ஆனந்த விகடன்

Tuesday, July 05, 2011

சமச்சீர் கல்விதான் எங்களுக்கு வேண்டும்!

சமச்சீர் கல்வி - தமிழ்நாட்டின் பெரும் குழப்பம்! உச்ச நீதிமன்ற உத்தரவின்படி குழு அமைக்கச் சொன்னால் அதில் கல்விநிறுவனங்களை நடத்தும் முதலாளிகளையெல்லாம் கல்வியாளர்கள் என்கிற பெயரில் உறுப்பினர்களாக போட்டு தமிழக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவையே கேலிக்கூத்தாக்கியது. மூன்று வாரம் கழித்து இறுதித் தீர்ப்பு...அது வரை பிள்ளைகள் பள்ளியில் என்னதான் செய்கிறார்கள்?

மாணவர்களுக்கு என்னென்ன சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று அரசு இந்த மூன்று வாரத்திற்கு மட்டும் பாடத்திட்டம் அனுப்பியிருக்கிறது. செயல்வழிகற்றல் மூலம் பொதுவான பாடங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.  சில பள்ளிகளுக்குச் சென்று பார்த்தபோது ஆசிரியர்கள் நாட்களை வீணாக்காமல் மாணவர்களுக்கு பொதுவான பாடங்களை நடத்திக்கொண்டிருந்தனர். தமிழ் மற்றும் ஆங்கிலப்பாடங்களில் பொது இலக்கணம், அடிப்படைக் கணக்கு, சமூக அறிவியலில் வரைபடங்களை வைத்து பாடங்கள், அறிவியலில் சில சின்னச் சின்ன பரிசோதனைகள் என்று சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தனர். 

பத்தாம் வகுப்பில் என்ன நடக்கிறதென்று எட்டிப் பார்த்தபோது, “ஹேப்பி பர்த்டே டூ யூ” பாடிக்கொண்டிருந்தார்கள். மெழுகுவர்த்தியைக் கொளுத்தி அந்தத் தீயில் ஒரு காகிதத்தைக் காட்டி அது கரிய நிறமாக மாறி எரிவதைக் காட்டிவிட்டு, கார்பன் உள்ள பொருட்களெல்லாம் எரியும் போது கரிய நிறத்தில் மாறும் என்கிற சின்ன பரிசோதனையை செய்துகாட்டிவிட்டு மெழுகுவர்த்தியை அணைத்தபோதுதான் இந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாட்டு. ஆசிரியை முகம் கொள்ளா சிரிப்போடு அதே பரிசோதனையை மாணவர்களையும் செய்யச் சொன்னார். ஆர்வத்தோடு வந்து ஒவ்வொருவராக செய்து பார்த்தார்கள். 

அடுத்த பரிசோதனையாக மாணவர்கள் வளைவாக ஒரு கோடு வரைய வேண்டும். அதன்பின் ஆளுக்கு ஒரு நூல் கொடுக்கப்பட்டது. அந்த நூலை வைத்து அந்த வளவை அளந்து அதன்பின் ஸ்கேலில் நூலை அளந்து வளைவின் நீளத்தைச் சொல்லவேண்டும். இப்படி சின்னச் சின்னதாக நிறைய பரிசோதனைகள், விளையாட்டுக்கள் என்று நேரம் செல்கிறது. ”என்ன செய்ய வேண்டுமென்பதற்கான சிலபஸ் மட்டும்தான் அரசு தந்தது. இந்த நூல், மெழுகுவர்த்தி வகையறாக்களையெல்லாம் நாங்களே வாங்கிக்கொள்ள வேண்டும்.” என்றனர் ஆசிரியர்கள். 

மாணவர்களிடம் “உங்களுக்கு சமச்சீர் கல்வி வேண்டுமா? வேண்டாமா?” என்று கேட்டபோது கோரஸாக “சமச்சீர் கல்விதான் வேண்டும்” என்று பதில் வந்தது. காரணம்? 
“அதுதான் ஈஸியா இருக்கும்!”  
“ஏழைங்க, பணக்காரங்க எல்லாரும் ஒரே மாதிரி படிப்போமில்லையா?”
“எங்க வீட்ல அதுதான் நல்லதுன்னு சொன்னாங்க”
“எங்க சார் அதுதான் நல்ல சிலபஸ்னு சொன்னார்”
“ஒண்ணாவது ஆறாவது புத்தகமெல்லாம் நல்லாருக்கு. ஈஸியா..! அதுமாதிரிதான் எங்களுக்கும் இருக்கும்னு நினைக்கிறேன். அதனால் சமச்சீர் கல்விதான் வேணும்”

- இப்படி விதவிதமான பதில்கள் கிடைத்தன. சரி. ஒருவேளை சமச்சீர் கல்வி கிடையாது என்ற நிலை வந்து விட்டால் இந்தப் பிள்ளைகளின் கதி? 

”நான் ஸ்கூலுக்கே வரமாட்டேன். பழைய சிலபஸ் கஷ்டம்” என்றாள் ஒரு மாணவி.
“அதெல்லாம் ஒத்துக்க மாட்டோம். சமச்சீர் கல்விதான் வேணும்னு கேட்போம்” என்று ஒரு மாணவன் சொல்ல, “அடேய்! நீ கேக்குறதுக்குள்ள முழுபரீட்சை வந்துடும்டா” என்று இன்னொருவன் சொல்ல “ஆமாம்ல?” என்று யோசிக்கிறான் மாணவன். “வேற வழியில்ல! படிச்சுத்தான் ஆகணும். பப்ளிக் எக்ஸாம் ஆச்சே?” என்கிறார்கள் சோகத்தோடு. கண்களில் பயமும் கலக்கமும் தெரிகிறது. இந்த மூன்று வாரம் பாடமில்லாமல் நிறைய செயல்முறை விளக்கங்கள் மூலம் கற்றுக்கொளவது மகிழ்ச்சியாக இருந்தாலும், மாணவர்களுக்கு மூன்று வாரத்துக்குப் பின் பாடத்திட்டத்தை விரைந்து முடிக்கவேண்டி வார இறுதி நாட்களிலும் பள்ளிக்கூடம் வைத்து தங்களை கொல்வார்களோ என்கிற பீதி நிலவுவது நன்றாகவே தெரிந்தது.  அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்படுவது பிஞ்சுக் குழந்தைகளாக இருப்பதைப் பார்க்க வேதனையும் கோபமுமே மிஞ்சுகிறது. இப்படி ஒரு பயத்தையும் பீதியையும் மாணவர்களிடையே உருவாக்கி அவர்களது மனநிம்மதியைக் கெடுத்ததற்கு எதைச் சொல்லி மன்னிப்பு கேட்கப்போகிறது தமிழக அரசு?

சில பெற்றோர், எப்படியும் சமச்சீர் கல்வி வராது என்கிற நம்பிக்கையில் பிள்ளைகளுக்கு பழைய பாடத்திட்டத்தின் பாடநூல்களை வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். பிள்ளைகளை மெட்ரிக் பள்ளியில் படிக்க வைக்கும் சில ஆசிரியர்களும் கூட சமச்சீர் கல்வியை எதிர்ப்பதை ஆசிரியர்கள் வேதனையோடு சுட்டிக்காட்டுகின்றனர். 

கருப்பு மார்க்கர் பேனா, பிளேடு சகிதம் பள்ளிகளுக்கு வந்து பாடப்புத்தகத்தில் உள்ள சில பக்கங்களை கிழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது நிறைய ஆசிரியர்களை கொதிப்படைய செய்திருக்கிறது. அய்யன் திருவள்ளுவரின் படத்தின் மேல் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதை ஆசிரியர்கள் வேதனையோடு தெரிவித்தனர். ஆட்சியாளர்களின் விருப்பப்படியெல்லாம் ஆசிரியர்கள் தங்கள் பணிக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு வேலையில் ஈடுபடுத்துவது எந்த விதத்தில் நியாயம்? பாடம் கற்றுக்கொடுப்பது தானே ஆசிரியர்களின் பணி? அ.தி.மு.க. அரசு விரும்பாததால், குறிப்பாகச் சொல்லப்போனால் முதல்வர் ஜெயலலிதா விரும்பாததால், கிழிப்பதற்கும் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கும் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்களுடைய நேரத்தையும் உழைப்பையும் வீண் செய்வது எந்த விதத்தில் நியாயம் என்பது பல ஆசிரியர்களின் கேள்வியாக இருக்கிறது. என்ன பதில் வைத்திருக்கிறது அரசு?

இதற்கிடையில் பழைய பாடத்திட்டத்தின் பாடங்களை அச்சடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதையெல்லாம் பார்க்கையில் சமச்சீர் கல்விக்கு முழுக்கு போடும் வகையிலேயே காரியங்கள் நடபப்தை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. கல்வியாளர்கள் இல்லாத ஒரு சமச்சீர் கல்விக்குழுவை உருவாக்கியிருக்கிறது அரசு. ம.தி.மு.க., பா.ம.க, சி.பி.ஐ(எம்), தமிழ்தேசப் பொதுவுடமைக் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் போன்றவை இந்த குழுவில் நியமிக்கப்பட்ட ‘கல்வியாளர்கள்’ குறித்த தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இந்திய மாணவர் சங்கத்தினர் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி கைதானார்கள். இப்படி பலரின் எதிர்ப்பை சம்பாதித்துள்ள இந்த சமச்சீர் கல்விக்குழுதான் ‘ஆராய்ந்து’ ஒரு அறிக்கையை தயார் செய்து கொடுக்கப் போகிறது. அதன்பின்னர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும். இந்த அறிக்கை எப்படி இருக்கப்போகிறது என்பதை குழுவில் உள்ளவர்களை வைத்தே முடிவு செய்து விடலாம். உண்மையான கல்வியாளர்கள் உச்சக்கட்ட கோபத்தில் இருப்பதை அவர்களுடன் உரையாடியபோது உணரமுடிந்தது. “பள்ளி முதலாளிகளெல்லாம் கல்வியாளர்கள் என்றால் இனி கல்வியாளர்கள் எல்லாம் தங்களை கல்வியாளர்கள் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப்பட வேண்டும்.” என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு. 

பொதுவாக ஒரு வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு வந்தபின் தான் குற்றவாளி யார் என்பதும் என்ன தண்டனை என்பதும் தெரிய வரும். ஆனால் இந்த சமச்சீர் கல்வி வழக்கு விசித்திரமானது. தீர்ப்புக்கு முன்னரே குற்றவாளியாய் நிற்கிறது தமிழக அரசு. 

ஆனால் தண்டனை மட்டும் மாணவர்களுக்கு! 

(நன்றி : ஆனந்த விகடன்)