Friday, May 21, 2010

உங்கள் நினைவஞ்சலிகள் தறபோது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிப்பதற்காக வருந்துகிறோம்

உங்கள் நினைவஞ்சலிகள் தறபோது  ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதற்காக வருந்துகிறோம். இப்போதைய சூழலில் எங்கள் வலி, நம்பிக்கை இரண்டுமே உங்கள் இரங்கலை எதிர்த்து நிற்கின்றன. எங்களுக்கு வழங்கப்பட்டதும் மறுக்கப்பட்டதுமான, எங்களுக்கு தேவைப்படுவதும், தேவைப்படாததுமான உஙகளின் இரங்கல் செய்திகளை எக்காரணத்தை முன்னிட்டும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஏனெனில் நடந்தவற்றையோ, நடக்கவிருப்பவற்றையோ அவை எதுவும் செய்யப்போவதில்லை.
எங்களின் இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் விளக்கவல்ல ஆற்றல் இரஙகலுக்குக் கிடையாததால், ‘நினைவஞ்சலிஎன்ற சொல் எங்களுக்கு அதிர்ச்சியை ஊட்டுகிறது.
வெளிச்சத்தில் நாங்கள் எங்கள் இல்லஙக்ளை விட்டு வெளியேறினோம்;  இருளில் எங்கள் இல்லங்களிலிருந்து மறைந்து போனோம்; வாழ்க்கைப் பாதை மாறுமென்ற நம்பிக்கையில் எங்கள் குடும்பங்களை விட்டு தூர வெளியேறி ஆயுதங்களை நோக்கி நடந்தோம்; தற்போது பூமியில் நாங்களே கண்டறிய முடியாத இடங்களுக்குள் எங்கள் உடல்கள் நுழைந்ததால் வெடித்துச் சிதறி துகள் துகளாய் எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறோம். இங்கே நாங்கள் செத்துக்கொண்டும், உயிரோடும்  இருப்பதால் உஙகள் தொண்டைக்குழிக்குள் பேயாக சிக்கிக்கொண்டு வெளிப்படாமலிருக்கும் உஙகள் இரங்கல் வார்த்தைகளுக்குப் பின்னும் நாங்கள் வாழ்வோம்.
விரும்பியும் விரும்பாமலும் அடுத்தவர்களின் போர்களில் நாங்களும் இணைந்தோம்; நாங்கள் செல்ல வேண்டிய பாதை மிக அருகிலிருந்த போதும் அடுத்தவர்களின் பாதையில் முன்னேறி நடந்தோம்; நாங்கள் உதிரிகளாய் இருந்தோம்; முக்கியமானவர்களாய் இருந்தோம்; நாஙகள் நண்பர்களாய் இருந்தோம்; பகைவர்களாய் இருந்தோம்; நாஙகள் பிரச்சினைக்குரியவர்களாய் இருந்தோம்; எண்ணிக்கையிலடஙகாதவர்களாய் இருந்தோம்; இச்சிறிய நாட்டில் நாங்கள் உங்களிடமிருந்து வெகுதொலைவாய் உணர்ந்தோம்; இச்சிறிய உலகில் நாங்கள் உங்களிடமிருந்து வெகுதொலைவாய் உணர்ந்தோம்; உங்கள் மக்கள் நாங்கள்; உங்கள் மக்களல்லாதவரும் நாங்கள்.
நீங்கள் எங்களை நினைவுகூர்வீர்கள் என்று உங்களுக்காக காத்திருக்க முடியாது
நாங்கள் அழிந்தோம்; வாழ்ந்தோம்; அழிவதற்கும் வாழ்வதற்கும் நாங்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள், அழிவதற்கும் வாழ்வதற்கும் அதிகமானோரும் நாங்கள். எங்களில் சிலருக்கு குறைவான பணமும், குறைவான உணவும் இருந்தது; எங்களுக்கு பிள்ளைகள் இருந்தனர்; விரும்பியும் விரும்பாமலும் எங்கள் பிள்ளைகளை இழந்தோம்; எங்கள் கரங்களிலிருந்து அவர்கள் கிழித்து எடுத்துச்செல்லப்பட்டார்கள்; அவர்கள் எங்களோடிருக்க நாங்கள் போராடினோம்; அவர்களைக் காப்பாற்ற எஙகளிடமிருந்து பிரித்து எறிந்தோம்; அவர்களை நோக்கிய துப்பாக்கிக் குண்டுகளை எங்கள் உடலில் தாங்கி அவர்களுக்கு முன்பாக மரித்துப்போக எண்ணி அவர்களை எங்களின் பிடிக்குள் வைத்திருந்தோம்.
எங்களில் சிலர் மரித்தோம்;  ஆனால் எங்களில் சிலர் வாழ்ந்தோம்;  எந்த பிள்ளைகளை காப்பாற்ற நாங்கள் போராடினோமோ அவர்களின் காலத்திற்குப்பிறகும் அந்த நினைவுகள் எங்களுடன் வாழ்ந்தது..


போர் எனப்படும் இந்த ரத்தவெள்ளத்திலிருந்து வெளியேறும் வேகத்தில் எங்கள் செவிகள் நிலத்தில் வீழ்ந்துவிட்டன. எனவே உங்கள் இரங்கலை நாங்கள் செவிமடுக்க முடியாது. எங்கள் இருத்தல் நிமித்தம், எங்கள் விழிகளையும் மூடிக்கொள்ள நேர்ந்ததால் உங்களுக்குள் என்னவிருக்கிறது என்பதயும் காண இயலவில்லை.  பசியினாலும் கோபத்தாலும் எங்கள் வாயையும் மூடிக்கொண்டோம். எங்கள் குடும்பஙகளைப்பற்றி, நண்பர்களைப்பற்றி, தோழர்களைப்பற்றி, எங்களை வேட்டையாடிய, எங்களோடு ஓடிவந்த, எஙகளோடு மடிந்த தலைவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரிந்திருந்தது; தெரியாமலுமிருந்தது.
எல்லா திசைகளுக்கும் நாங்கள் முகங்கொடுத்தோம். எங்களில் சிலர் வாழ்ந்தோம். இன்னும் நாங்கள் இருக்கிறோம். உங்கள் இரங்கல் செய்திகள்  தறபோது  ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதற்கு வருந்துகிறோம்.
ஆங்கில மூலம் - வி.வி.கணேசநாதன்  http://vasugi.com/bio.html
தமிழில் : கவின் மலர்


Tuesday, May 18, 2010

பெண்கள் முன்னேற்றத்தில் அம்பேத்கரின் பங்கு

'

ஒவ்வொரு களப்பணியாளரும் சமூகத் தொண்டரும் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு நடக்கிறார். சாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் களப்பணியாளரை சாதி ஒழிப்புக்காக காலமெல்லாம் தொண்டாற்றினார் என்று போற்றுகிறோம். இதுவே பெண்ணிய சிந்தனையாளராக இருக்கும் ஒருவரை பெண்ணியவாதி என்கிறோம். ஒருவர் வளர்ந்த விதம், பெற்ற அனுபவங்கள், பாதித்த விஷயங்கள் – இவற்றிலிருந்து, தான் எதை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை முடிவு செய்கிறார். அம்பேத்கர் சாதிஒழிப்பு போருக்கு முன்னுரிமை கொடுத்தார். அதனால் அவர் சாதி ஒழிப்பு போராளியாக அறியப்பட்டார். பெரியார் சாதி ஒழுப்போடு சேர்த்து பெண்ணுரிமைக்கும் அதிக முக்கியத்துவம் அளித்தார். அதனால் அவர் பெண்ணியவாதியாக அறியப்படுகிறார். அம்பேத்கரின் தொகுக்கப்பட்ட எழுத்துக்களினூடாகத் தேடி அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகளை கண்டெடுக்க வேண்டும். ஏனெனில் ஒரு தனி அஜெண்டாவாக பெண்ணியத்தை வைத்துக் கொள்ளவில்லை. இயல்பாகவே அவருக்கு எல்லாவற்றையும் விட சாதி ஒழிப்பும், ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலையும்தான் முக்கியமானதாக இருந்திருக்க முடியும். அப்படித்தான் இருந்தது. பெரியார், அம்பேத்கர் இருவரின் எழுத்துக்களையும் வாசித்தவர்களுக்கும் தெரியும் பெண்ணியவாதக் கருத்துக்களும் பெண் மையக் கருத்துக்களும் யாரிடம் மேலோங்கி இருந்தன என்பது.

அம்பேத்கரின் மக்கள் விளிம்புநிலை மக்கள். அவர்களுக்கான போராட்டமே பெரிதாய் இருக்கும்போது பெண்ணியம் குறித்த சிந்தனை இயல்பாகவே இரண்டாம்பட்சமாகிவிடுவது இயற்கையே. இந்நிலையில் “அண்ணலின் பெண்ணியச் சிந்தனைகள்” என்று அரச.முருகுபாண்டியன் தொகுத்தளித்துள்ள நூலின் அணிந்துரையில் “”பெரியாரின் 'பெண் ஏன் அடிமையானாள்?' நூலில் உள்ள கருத்துக்கள் அம்பேத்கரின் பெண்ணிய சிந்தனைகளை மையமிட்டவைஎன அரங்க மல்லிகா குறிப்பிடுகிறார். இதனை அம்பேத்கரே கூட ஒப்புக்கொள்ள மாட்டார். ஏனெனில் ’’பெண் ஏன் அடிமையானாள்?’’ நூலில் காணப்படும் தீவிர கருத்துக்கள் போல அம்பேத்கர் எங்கும் குறிப்பிடவில்லை. அவருக்கான பாதை வேறு என்பதில் அவர் தெளிவாக இருந்தார். தன் சாதி ஒழிப்பு நடவடிக்கைகளினூடாக பெண்ணியத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில் அம்பேத்கர் செயல்பட்டார். பார்ப்பனியத்தைப் பற்றிச் சொல்லும்போது பெண்களை பார்ப்பனியம் எவ்வாறு அடிமைப்படுத்தி வைத்துள்ளது என்று விளக்குகிறார். பெரியார் பெண்கள் படும் இன்னல்கள் குறித்துப் பேசுகையில் அவர்களின் துயரங்களுக்கு பார்ப்பனியமும் ஒரு காரணமாக இருக்கிறது என்று மனுஸ்மிருதியை காரணம் கூறுகிறார். இருவருமே மனுவை எதிர்க்கிறார்கள். ஆனால் பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகள் அம்பேத்கரின் கருத்துக்கள மையமிட்டவை என்ற கருத்து ஒருபோதும் ஏற்கத்தக்கதல்ல. அரங்க மல்லிகாவின் இந்தக் கருத்தில் நூலாசிரியர் அரச.முருகுபாண்டியன் முரண்படுவாரேயானால், தனது முன்னுரையில் அவர் அதனைக் குறிப்பிட்டிருக்க் வேண்டும். ஆனால் அவ்வாறு குறிப்பிடாதது அவரும் இந்தக் கருத்திற்கு உடன்படுகிறாரோ என்ற ஐயத்தை தோற்றுவிக்கிறது.

பெரியாரை தலித்துகளுக்கெதிராக நிறுத்தும் போக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பெரியாரிஸ்டுகளும், அம்பேத்கரிஸ்டுகளும், இடதுசாரிகளும் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணமிது. இணைவதற்கான புள்ளியை நோக்கி நகரத் தொடங்க வேண்டும். மூன்று தரப்பினருக்குமான பொது எதிரியின் தரப்பு மிக பலம் வாய்ந்ததாக இருக்கும்போது ஒற்றுமை மிகவும் அவசியம். பெரியாரை முன்வைத்து இடதுசாரிகளுக்கும், பெரியாரிஸ்டுகளுக்கும் இடையே ஆண்டாண்டு காலமாக இருக்கும் முரண்பாடுகளும், அதே பெரியாரை முன்வைத்து அம்பேத்காரிஸ்டுகளுக்கும், பெரியாரிஸ்டுகளுக்கும் இருக்கும் கருத்துமோதல்களும் களையப்பட வேண்டும். பெரியார் என்ற ஆளுமையின் கருத்துக்கள் இந்தியா போன்ற சாதிய அடுக்குகள் நிறைந்த, பெண்ணை அடிமைப்படுத்துகிற சமூகம் இருக்கும் வரை எப்போதும் எந்தக்காலத்திலும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும்.

“அண்ணலின் பெண்ணிய சிந்தனைகள்” என்று நூலின் தலைப்பு இருக்கிறது. ”அம்பேத்கரின் பெண்ணிய சிந்தனைகள்” என்று இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நூலின் பெயரைக் கேட்பவர்கள், ”அண்ணல்” என்றால் காந்தி என்று பொதுபுத்தியில் ஏற்கனவே ஏற்றப்பட்டிருக்கும்போது ஒரு சாதாரண வாசகன் இந்நூலை காந்தி குறித்த நூலாகவே எண்ணிக்கொள்ள சாத்தியமுண்டு.

அம்பேத்கரின் பெண்ணிய சிந்தனைகளுக்குள் போவதற்கு முன் ஆதிகாலத்தில் தாய்வழி சமூகமாக இருந்து, பின்னாளில் மாற்றம் பெற்று பெண்ணை இழிவாகப் பார்க்கும் இலை உருவானது குறித்து சுருக்கமாக ஒரு வரலாற்றுப் பார்வையை முன்வைக்கிறார் நூலாசிரியர் அரச.முருகுபாண்டியன். பெண்களின் மீது கற்பு என்ற சுமை ஏற்றப்பட்ட வரலாற்றையும் பதிவு செய்கிறார்.“எல்லா இயக்கங்களும் (பிஜேபி முதல் இடதுசாரிகள் வரை) பெண் பற்றிய புனைவுகளைக் கேள்வி கேட்பதாய் இல்லை....இந்நிலையில் சமூகம் கட்டமைத்திருக்கிற எல்லாப் புனிதங்களையும் கேள்விக்குபடுத்தும் பெண்ணிய இயக்கங்களே முக்கியமான தேவையாகும்” என்கிறார் நூலாசிரியர். வாசிப்பவர்களுக்கு இயல்பாகவே இரண்டு கேள்விகள் எழுகின்றன.

1) இந்நூலை “பெண்ணுரிமை, மண்ணுரிமை, த்மிழ்தேசத் தன்னுரிமை, தலித் உரிமை, தமிழ் உரிமை என அனுதினமும் களமாடிவரும்” தொல்.திருமாவளவனுக்கு சமர்ப்பிக்கிறார். இந்த சமர்ப்பணத்தையும், நூலாசிரியர் நூலின் உள்ளே கூறும் கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. குஷ்பு தமிழ்நாட்டுப் பெண்களின் கற்பு குறித்து முரண்பட்ட கருத்துக்களைக் கூறினார் என்று கூறி சினந்து தொல்.திருமாவளவன் கட்சியினர் நடத்திய கூத்துகள நினைவுக்கு வருகின்றன. இவற்றில் நூலாசிரியருக்கு உடன்பாடு உண்டா இல்லையா?

2) எல்லாப் புனிதங்களையும் கேள்விக்குட்படுத்தும் பெண்ணிய இயக்கங்களே முக்கியமான தேவை என்றால்.. பெண்ணிய இயக்கங்கள் மட்டும் எல்லாப் புனிதங்களையும் கேள்விக்குட்படுத்தினால் போதும்.  ஆண்கள் இருக்கும் மற்ற இயக்கங்கள் எல்லாம் பெண்களை புனிதப்படுத்தி..அடிமைப்படுத்தி வைத்திருக்கலாமா? பெண் குறித்த புனிதக் கருத்தாடல்களை உடைப்பதற்கு பெண்கள் மட்டுமே முயன்றால் போதுமானதாக இருக்குமா என்ன?

திவான் ஜெர்மனிதாஸ் எழுதிய 'மகாராஜா' நூலிலிருந்து கிடைத்த தகவலான, பத்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் யோனியை மருத்துவரை வைத்து அறுத்துக் கிழித்து அதன்பின் புணர்ச்சியில் ஈடுபட்ட வன்கொடுமைகளும் நிகழ்ந்திருக்கிறது போன்ற சில முக்கியமான விஷயங்களை நூலினிடையே தெரிவிக்கிறார் நூலாசிரியர். அது போலவே மாதவிலக்கினால் வர இயலாத தேவதாசிப் பெண்களுக்கு அண்ணந்தாள் பூட்டும் கொடுமையையும் பதிவு செய்கிறார். பௌத்தம், சமணம், கிறித்தவம், இசுலாம், இந்து சமயம் சமயங்கள் முன்நிறுத்தும் பெண்களின் நிலை குறித்து சுருக்கமாக நூல் பேசுகிறது. மனுஸ்மிருதியில் பெண்கள் குறித்து கூறப்பட்டுள்ளதை அம்பேத்கர் தன் ”பார்ப்பனியத்தின் வெற்றி' யில் குறிப்பிடுகிறார். அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட இந்து விதவை மறுமணச்சட்டம், இந்துப் பெண்கள் சொத்துரிமைச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம், இந்துத் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் போன்ற அனைத்தும் பெண் விடுதலையை எதிர்நோக்கிய கூர்மையான கருத்துக்களைக் கொண்டிருந்தன என நூல் எடுத்துக்காட்டுகிறது.

பதேரிப்பிரபுக்களிடம் கைம்பெண் மறுமணம் வழக்கத்தில் இருந்தது. இவ்வழக்கம் பார்ப்பனர்களிடம் இல்லை என்பதால் அப்படி இருந்தால்தான் உயர்ந்தவர்களாக ஒத்துக்கொள்ளப்படுவோம் என்ற நினைப்பில் அவ்வழக்கத்தைத் துறந்த பதேரிப்பிரபுக்கள் குறித்து அம்பேத்கர் குறிப்பிடும்போது இளையராஜா நினைவுக்கு வருகிறார். பெண்களை சாராயம் காய்ச்சுவோராகவும், கசாப்புக்காரர்களாகவும் பணிபுரிவதை அம்பேத்கர் வரவேற்கிறார். பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்கிறார். பெண்களை மெல்லிடையாளாக பார்க்கும் சமூகத்தில் அம்பேத்கர் மாறுபட்டு நிற்கிறார்.

மகப்பேறு நல உதவி மசோதா மூலம் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டுவருகிறார் அம்பேத்கர். இது அம்பேத்கர் பெண்கள் மீது கொண்ட அக்கறையை நமக்கு பறைசாற்றுகின்றது. இது போல ஆங்காங்கே பெண்களுக்கு தன்னால் இயன்றவரை போராடிப் பெற்றுத்தருகிறார் அம்பேத்கர். ஆனால் இதை எவ்வாறு பெண்ணிய சிந்தனை என்று கூற முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. ”அம்பேத்கர் பார்வையில் பெண்கள்” அல்லது “பெண்கள் முன்னேற்றத்தில் அம்பேத்கரின் பங்கு” என்று இந்நூலின் தலைப்பு அமைந்திருக்குமானால் இது போன்ற தகவல்கள் நூலில் இடம்பெறுவது பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் பெண்ணியம் என்பதன் பொருள் ஆழமானது. நூலை வாசித்து முடிக்கும்போது இவ்வளவுதான் அம்பேத்கர் பெண்ணியம் குறித்துப் பேசியிருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. அம்பேத்கரின் களப்பணி வேறு தளத்தில் இருந்ததால் அது தொடர்பான பணியில் எங்கெல்லாம் பெண்கள் விடுதலையை முன்னெடுக்க முடியுமோ, அங்கெல்லாம் முன்னெடுத்தார். அதனால் திரும்ப திரும்ப சாதி ஒழிப்பு, மகப்பேறு நல உதவி மசோதா, இந்து சட்ட மசோதா இவற்றின் மூலமாக மட்டுமே அம்பேத்கரின் பெண்மையச் சிந்தனைகளை எடுத்துக்கூற விழைகிறார் நூலாசிரியர்.

பெண்ணியவாதிகளின் மேல் நூலாசிரியர் இன்னொரு குற்றச்சாட்டையும் வைக்கிறார். பால் வேறுபாடுகள் நிறைந்த நுண் அரசியலை வர்க்க/இன அடிப்படையில் பார்க்கும் பார்வை பெண்ணியவாதிகளுக்கு கூர்மையாக உள்ளதென்றும், சாதியப்பார்வை இல்லையென்றும் கூறுகிறார். எல்லா பெண்ணியவாதிகளும் அப்படித்தான் இருக்கிறார்களா? தலித் பெண்ணியம் குறித்த புரிதல்கள் பெருகியுள்ள வேளையில் பொத்தாம் பொதுவாக அனைத்து பெண்ணியவாதிகளின் மேல் இப்படி ஒரு குற்றச்சாட்டு வைப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்?

அம்பேத்கரின் இந்து சட்ட மசோதாவில் மிதாஷரா முறையைத் தவிர்த்து தயபாகா முறையை பின்பற்றவேண்டுமென்கிறார் அம்பேத்கர். மிதாஷரா சட்டப்படி ஆண் வர்ரிசுகளுக்கே முன்னுரிமை. தயபாகாவில் இரு பாலின வாரிசுகளுக்கும் சம உரிமை உண்டு. அதுபோலவே மணமக்கள் கண்டிப்பாக ஒரே சாதியைச் சார்ந்தவராகவோ, உட்பிரிவைச் சார்ந்தவராகவோ இருக்க வேண்டும் என்ற விதியையும் புதிய இந்து சட்ட மசோதாவில் நீக்குகிறார். பெரும் எதிர்பார்ப்புடன் முற்போக்கான பல கருத்துக்களுடன் இந்த மசோதாவை நிறைவேற்ற ஆவலோடு காத்திருந்தபோது நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேறற முடியாத நிலை ஏற்படுகிறது. ஆகவே அமைச்சரவையிலிருந்து விலகுகிறார் அம்பேத்கர். இப்படி பல செய்திகள் நூலில் இடம்பெறுகின்றன.

அம்பேத்கரின் மொழியில் இந்நூல் அமையவில்லை. நூலாசிரியரின் மொழியிலேயே உள்ளது நூல். இது ஒரு வகையில் புதிய முயற்சி. ஆனால் அம்பேத்கரின் அத்தனை தொகுதிகளையும் வாசித்து அதிலிருந்து பெண்மையச் சிந்தனைகளைத் தேடி எடுப்பது சிரமமான காரியம் தான். அவற்றை பிழிந்து சாறெடுத்துக் வாசிக்கக் கொடுத்த அரச.முருகுபாண்டியனின் உழைப்பு பாராட்டப்படவேண்டியது.

'தலித் முரசு' இதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்

Tuesday, May 11, 2010

குழந்தைப் போராளி

துள்ளி விளையாடவேண்டிய வயதில் கையில் துப்பாக்கியோடு போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு குழந்தைப் போராளியின் சுயசரிதைதான் குழந்தைப் போராளி என்னும் இந்நூல்.


1976 இல் உகாண்டாவில்  துற்சி இனத்தில் பிறந்த சைனா கெய்ரஸி என்ற பெண் குழந்தை தன் வீட்டிலும் வெளியிலும் துன்புறுத்தப்பட்டு குழந்தைப் போராளியாய் கட்டாயமாய் ராணுவத்தில் இணைக்கப்பட்டபின் எண்ணிலடங்கா கொடுமைகளை அனுபவித்தாள். சைனாவின் மனநிலை பிறழ்ந்த நிலையில் சிகிச்சைக்கு மனநல மருத்துவரிடம் செல்லும்போது அவர் சைனாவின் நினைவுக்கு எட்டியவரை அவரது சிறுவயது ஞாபகங்கள் முதல் தற்போதைய நிலை வரை எல்லாவற்றையும் எழுதச் சொன்னபோது சைனா எழுதியவையே ‘குழந்தைப் போராளி என்ற நூலாக வெளிவந்துள்ளது.

குழந்தைப் பருவம் என்பது மனித வாழ்வின் முக்கியமான ஒரு பருவம். அந்தப் பருவத்து சந்தோஷங்களை இழந்த சைனாவின் வாழ்வில் ஏற்பட்ட புயல்களைக் கடந்து, தனது மனநலத்தையே விலையாகக் கொடுத்து சிகிச்சை பெற்று இன்று எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து ஒரு புதுவாழ்க்கையை வாழ்கிறார் சைனா.

"ஓரு சிறிய குருவினுடையதைப் போன்ற
அவர்களின் அழகிய காலையின்
பாதைகளின் குறுக்காய் வீசப்படும்
ஓவ்வொரு குருதி தோய்நத
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும்
காரணமாய் எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்."

- 21 வயதிலேயே மாண்டுபோன இலங்கையைச் சேர்ந்த சிவரமணியின் கவிதை இது..

மனநல மருத்துவத்தின் ஒரு பகுதியாக தனது கதையை எழுதியதால் உண்மையாக நடந்தவற்றை அப்படியே சைனா எழுதியிருக்கிறார். பலர் இவரை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியுள்ளனர். ராணுவத்திலும் படைத்தளபதி போன்ற உயர் அதிகாரிகள் செய்த வன்புணர்ச்சி கொடூரத்தை இவர் வெளியில் சொல்வதால்தான் தெரிகிறது. இல்லாவிட்டால் ஒரு ராணுவ அமைப்பிற்குள் நடப்பது எப்படி வெளியில் தெரியும்?

உகண்டாவில் 'இடி அமீன்' காலத்திற்குப் பின்னான. மில்ரன் ஒபாடேயின் காலகட்டம் அது. புன்னகை பூக்கும் குழந்தைகளின் முகங்களை எதிராளிகளை சந்திக்கும் போர்முனையில், கேடயம் போல் முன்வரிசையில் நிற்க வைத்துப் போரிட வைப்பதற்கான காரணம் குழந்தைப் போராளிகள்தான் எதிர்த்துப் பேசமாட்டார்கள் என்பதுதான் காரணம் என்கிறார் சைனா.

தான் பெண்ணாகப் பிறந்ததால் தன் பெற்றோர்களுக்குள் நிகழும் சண்டை பற்றிக் குறிப்பிடுகையில் “நான் ஆண் குழந்தையாய் பிறந்திருந்தால் என் அம்மாவும், அப்பாவும் பிரிந்திருக்க மாட்டார்கள் என்று சைனா சொல்லும்போது உகாண்டாவாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும் பெண்குழந்தைகள் பிரச்சனைக்குரியவர்களாக உலகெங்கும் மாற்றப்பட்டுள்ளனர் என்று புரிகிறது.

யுத்த பூமியில் இருந்து தப்பி வந்த சைனா, ராணுவத் தலைவனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் : மேதகு முசேவென்! நீ உருவாக்கிவிட்ட ஆயிரமாயிரம் குழந்தைப் போராளிகளில் ஒருத்தியான சைனா கெய்ரெற்சி பேசுகிறேன். என்னைக் கண்ணாடியில் பார்க்கும்போது, அங்கே உனது முகம்தான் எனக்குத் தெரிகிறது. எனது கனவுகளில் நீ எனது துப்பாக்கியை ஏந்தியபடியே என்னிடம் வருகிறாய். எனது கனவுகளில் இன்றும் உனது வசீகரக் குரல் கேட்கிறது. உனது அழகிய வசனங்கள் உனக்காக என்னை ரத்தம் சிந்த வைத்தன. நான் உனது விளையாட்டை விதிமுறைகளை அறியாமலேயே விளையாடினேன். அப்போது உனது முகம் ஒளிர, ஒளிர எனது ஆன்மா இருண்டு கொண்டே போயிற்று. நீ என் கைகளில் திணித்த துப்பாக்கியின் கனம் என்னை நிலைகுலைய வைத்தது''  என்று இன்னும் நீளும் இந்தக் கடிதத்தையும், புத்தகம் முழுமையும் படிக்கும் போது இத்தனை வலிகளையும் ரணங்களையும் தாங்கிக்கொண்டு அந்தச் சின்னப்பெண் வாழ்ந்து இன்று எல்லாவற்றிலிருந்தும் மீண்டு தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருப்பதை எண்ணி பிரமிக்கத்தான் வேண்டி இருக்கிறது.

நூல் வெளியீடு : கருப்பு பிரதிகள்,
                               B-55, பப்பு மஸ்தான் தர்கா,
                 லாயிட்ஸ் சாலை,
                 சென்னை 600 005

விலை         : ரூ. 180.00

ஆசிரியர்       : சைனா கெய்ரஸி

மொழியாக்கம்  : தேவா

நன்றி : புதிய தலைமுறை

Tuesday, May 04, 2010

சினிமாவின் இலக்கியம்


ரு கதாநாயகன்-அவன் செய்யும் சாகசங்கள், வில்லனை வெற்றி கொள்வது, அவ்வபோது கதாநாயகியோடு டூயட் பாடுவது - இப்படி படங்களாகப் பார்த்து அலுத்துப் போயிருக்கும் மனங்களுக்கு அரிதாக ஆங்காங்கே மாற்று சினிமா எடுக்கும் சிலர் மட்டுமே நம்பிக்கையூட்டுகின்றனர். இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய ஃபியூச்சர் ஃபிலிம் என்று சொல்லக்கூடிய முழு நீள திரைப்படங்களுக்கு மத்தியில் சத்தமில்லாமல் சில தனிநபர்களின் முயற்சியில் குறும்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
                          ராஜாங்கத்தின் முடிவு.....

ஒரு சின்ன சம்பவத்தை வைத்துக்கொண்டு இரண்டு நிமிடங்களில் கூட நம் மனதைக் கவரும் வகையில் குறும்படமாக எடுக்கும் ஆற்றல் நம்மவர்களுக்கு இருக்கிறது. சிலர் இதில் முழுநீள திரைப்படம் எடுக்க மாட்டேன் என்று இருப்பவர்களும் உண்டு. வாய்ப்பு கிடைக்காமல் எடுக்காமல் இருப்பவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிலர் கோடம்பாக்கத்தில் அடியெடுத்து வைக்கும் கனவுகளோடு தயாரிப்பாளர்களுக்கு தங்கள் திறமையை நிரூபிப்பதற்காக விசிட்டிங் கார்டுக்காக குறும்படம் எடுக்கிறார்கள். இத்தகைய குறும்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வரவே வராது. தயாரிப்பாளர்களோடு முடங்கி விடுபவை. ஆனால் மக்களுக்காக எடுக்கப்படும் குறும்படங்கள் இன்று கவனிக்கப்படும் வகையில் உள்ளன. ஒரு கையடக்க கேமிரா இருந்தால் போதும். எளிதாக குறும்படம் எடுத்துவிடலாம். இப்போதெல்லாம் செல்போனில் கூட குறும்படங்கள் எடுக்கப்படுகின்றன. செல்போன் குறும்படங்களுக்கென்று தனியாக போட்டியே இப்போதெல்லாம் நடக்கிறது.

குறும்படங்கள் திரையரங்கங்களுக்கு வருவதில்லை. பின் எப்படித்தான் மக்களைச் சென்றடைகின்றன? பெரும்பாலும் டிவிடிக்கள், சிடிக்கள் மூலமாகத்தான். குறும்படங்களை எல்லோரும் பார்ப்பதில்லை. குறும்படங்களுக்கான மார்க்கெட் மிகவும் குறைவு. மசாலா படங்களை விரும்புபவர்கள் பெரும்பாலும் இத்தகைய குறும்படங்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. பத்திரிகையில் அவ்வபோது வெளியாகும் விமர்சனங்கள், குறிப்புகள் இவை மட்டுமே வெகுமக்களுக்கு குறும்படங்கள் சென்றடையும் வழியாக இருக்கிறது. இதைவிட்டால் வாய்மொழி மூலம் செய்தி பரவினால் உண்டு. இயக்கம் சார்ந்து செயல்படுபவர்களுக்கு ஓரளவிற்கு ஒரு குறிப்பிட்ட பகுதியினரை தங்கள் குறும்படங்கள் சென்றடைந்து விடுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

மார்க்கெட் குறைவு என்றாலும் கூட குறும்படங்களின் வரவு சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஒரு குறும்படத்தில் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோருமே தொழிற்முறை கலைஞர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் சில குறும்படங்கள் அமெச்சூர்த்தனத்தோடு இருப்பதை தவிர்க்க முடியாது. ஆனால் அப்படி எடுக்கப்படும் படங்களில் கூட சில சமயங்களில் நல்ல மெசேஜ் இருக்கும். நிறைய செலவு செய்து எடுக்கப்படும் குறும்படங்களும் இருக்கின்றன. கதையோடு கூடிய படங்கள், ஆவணப்படங்கள் என்று வகைவகையாக குறும்படங்கள் வருகின்றன.

"மாற்று தேடுபவர்களும், காட்சி ஊடகத்தின் உண்மையான போதையை உணர்ந்தவர்களும், இலக்கியம் தொடர்பானவர்களும், சமூக அக்கறையுள்ளவர்களும் குறும்படம் எடுக்க வருகிறார்கள்.ஆனால் அதையே தொழிலாக இன்றுள்ள சூழலில் வைத்துக்கொள்ள முடியாது. முன்பெல்லாம் ஒரு குறும்படம் எடுக்க எண்பதாயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை செலவு செய்வார்கள். இப்போது ஐயாயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் இருந்தால் போதும். செலவு குறைந்தது குறும்படங்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஒரு காரணமாக இருந்தாலும் சிடிக்கள் டிவிடிக்கள் கொண்ட இந்த டிஜிட்டல் யுகம் ஒரு முக்கியமான காரணம்.ஆரம்பத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்காக குறும்படங்கள் இயக்க ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை எழுபதுக்கும் மேற்பட்ட குறும்படங்களும் ஆவணப்படங்களும் எடுத்து விட்டேன். இந்த பதினைந்து ஆண்டுகளில் விஞ்ஞான வளர்ச்சியினால் இந்த துறையில் மிகப் பெரிய மாற்றம் உண்டாகி இருக்கிறது என்கிறார் எல்.வி.பிரசாத் அகடமியில் வகுப்பெடுக்கும் எம்.சிவகுமார்.

இந்தக் குறும்படங்கள் தயாரிப்பு செலவுக்கான பணம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால் முக்கால்வாசி பேர் கையிலிருந்துதான் பணம் போடுகின்றனர். பிறரிடம் நன்கொடை பெற்றும் சில படங்கள் தயாரிக்கப்படுகின்றன. என்னுடைய நண்பர்கள் எனக்கு உதவுகிறார்கள். இப்போது நிறைய பேர் படம் எடுக்கிறார்கள். ஆனால் சமூகத்தை தத்துவார்த்தமாக புரிந்து கொண்டு, மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போக்கு இல்லாமல் வரும் குறும்படங்கள் திருப்தியளிப்பதில்லை. திருவண்ணாமலையைச் சேர்ந்த அமுதா இயக்கிய ‘திருகாணி என்ற படமும் கர்ணமோட்சம் என்கிற படமும் நான் ச்மீபத்தில் பார்த்த்வைகளில் மிக முக்கியமான படங்கள்என்கிறார் அருள் எழிலன்.

சரி! செலவு செய்து குறும்படம் எடுத்து போட்ட முதலுக்கு லாபம் கிடைக்கிறதா என்று பார்த்தால் அதுவும் கூட பெரிதாகச் சொல்ல முடியாதுதான். நல்ல படம் என்று தெரிந்துவிட்டால் அதிலும் திருட்டு சிடி வந்து விடுகிறது. அப்புறம் எங்கே லாபம் கிடைப்பது? ஆனால் குறும்படம் எடுப்பவர்கள் பணத்திற்காக பெரும்பாலும் எடுப்பதில்லை என்பதால் தங்கள் படைப்பு அதிகம் பேரைச் சென்றடையட்டும் என்று எண்ணி விட்டுவிடுகின்றனர். இத்தனை சிரமப்பட்டு குறும்படம் எடுக்கும் காரணம் என்ன?

சினிமா மேல் ஒரு ஈர்ப்பு இருப்பவர்கள் தங்கள் சினிமா மோகத்தை தீர்த்துக் கொள்ள இத்துறைக்கு வருகிறார்கள். சில உதவி இயக்குநர்களும் தங்கள் முதல் படத்திற்குமுன் சிறிய அளவில் செய்து பார்க்கவேண்டும் என்ற தகிப்பு இருப்பதால் குறும்படம் எடுக்கிறார்கள். சிலர் தங்கள் கலைதாகத்தை தணித்துக் கொள்ள படம் எடுக்கின்றனர். நிறைய என்.ஜி.ஓ.க்களும் இன்று குறும்படங்கள் எடுக்கின்றன. எனக்குத் தெரிந்து எச்.ஐ.வி. குறித்து மட்டும் 500 படங்களுக்கும் மேல் வந்திருக்கும்.சினிமாவில் செய்ய முடியாத விஷயங்க்ளை இங்கே நாம் செய்யலாம். சினிமா கேமிராவை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்ல முடியாது. அப்படி சினிமா கேமிரா பார்க்க முடியாத இடங்களை கையடக்க கேமிரா மூலம் பார்க்கவேண்டும். என்னளவில் நான் ஒரு பரிசோதனை முயற்சியாகவே என் படங்களை எடுத்தேன் என்கிறார் அஜயன்பாலா.


2002 ம் ஆண்டு சென்னையில் முதன்முறையாக “சிலம்பு 2002என்ற பெயரில் மூன்று நாட்கள் குறும்படவிழாவை நடத்தினார் அஜயன் பாலா. “நான் அப்போது மூன்று நாட்கள் என்று அறிவித்து விட்டேன். 54 குறும்படங்கள் தேவைப்பட்டன. ஆனால் அவற்றை தேடிப் பிடிப்பதற்கு சிரமப்பட்டேன். இப்போது நிலைமை அப்படி அல்ல. ஏராளமான குறும்படங்கள் வருகின்றனஎன்கிறார் அஜயன்பாலா.
அஜயன் பாலா

சினிமா என்பது விஞ்ஞானம் திறந்து வைத்த மூன்றாவது கண். அது அநீதிகளை சுட்டுப் பொசுக்குவதற்காக மட்டுமே திறக்கவேண்டும். அவற்றைக் கண்டு கண்ணடிக்கக் கூடாது. வணிகப் படங்கள் வியாபாரரீதியாக வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அநீதிகளைச் சொல்வதில் குறும்படங்கள் சாதித்திருக்கின்றன. இவற்றின் வரவு அதிகரித்திருப்பது ஆரோக்கியமானது, வரவேற்கத்தக்கது. என் படங்கள் அனைத்தும் என் 17 ஆண்டு கால வங்கிப் பணியில் நான் சம்பாதித்ததைக் கொண்டு தயாரித்தவை. தற்போது சமச்சீர் கல்வி குறித்த படம் ஒன்றையும், ராமையாவின் குடிசையின் இரண்டையும் உருவாக்கும் பணியில் இருக்கிறேன். என்கிறார் பாரதி கிருஷ்ணகுமாரின் “ராமையாவின் குடிசைஆயிரம் பிரதிகளுக்கு மேல் விறபனையாகியிருக்கிறது.

புதியவர்களும் இளைஞர்களும் மட்டும்தான் குறும்படங்கள் எடுக்க வேண்டுமா என்ன? பாலுமகேந்திரா போன்றவர்களும் தொலைக்காட்சிக்காக நிறைய குறும்படங்கள் எடுத்திருக்கின்றனர். பாலுமகேந்திராவின் பெயர் பரிச்சயமும், திறமையும் காரணமாக குறும்படங்கள் பார்க்காத ஒரு சாதாரண ரசிகனும் பாலுமகேந்திராவின் ஆறு குறும்படங்கள் சிடியை வாங்கிச் செல்வதை பார்க்கமுடிகிறது. சந்தோஷ் சிவன் ‘மல்லி ‘தி டெர்ரரிஸ்ட் போன்ற சற்று நீண்ட மாற்றுபடங்களை எடுக்கிறார்.

பெண்களை இந்த துறையில் எப்படி பார்க்கிறார்கள்?

தொடக்கத்தில் ஒரு டீமாக பணியாற்றும்போது பெண் தலைமைக்கு சற்று சிக்கல்கள் இருக்கும்தான். ஆனால் உங்களை நிரூபித்து விட்டால் அதன்பின் பெண் என்பது சாதகமான விஷயமாக இருக்கும். பெண்கள், குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை குறும்படங்களாக்கும்போது ஆணை விட பெண்ணிடம் அதிக நம்பிக்கை வைத்து தங்கள் பிரச்சனைகளை சொல்வார்கள்என்கிறார் லீனா மணிமேகலை.

மீப காலமாக குறும்படங்கள் தொடர்பான பயிற்சி முகாம்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. அரசியல் இயக்கங்களும், பண்பாட்டுத்தளத்தில் செயல்படும் இயக்கங்களும் தங்கள் உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்களை நடத்துகின்றன. நிழல் சஞ்சிகையின் சார்பில் திருநாவுக்கரசு பயிற்சி முகாம்கள் நடத்துகிறார். சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே ஒருகாலத்தில் இருந்த பிலிம் சொஸைட்டிகள் இப்போது சிறிய நகரங்களுக்கும் பரவி விட்டன. மாற்று சினிமாவின்பால் ஈர்க்கப்படும் இளைஞர்கள் பலர் பிலிம் சொஸைட்டிகளில் உறுப்பினர்களாக ஆகிறார்கள். உலக சினிமா மட்டுமல்ல தமிழின் சிறந்த குறும்படங்களை அவர்களுக்கு பிலிம் சொஸைட்டிகள் அறிமுகப்படுத்துகின்றன. கருத்தரங்கங்களிலும் கூட ஒரு அமர்வாக இன்று குறும்படங்களை அறிமுகப்படுத்தி விமர்சனம் செய்கிறார்கள்

குறும்படங்கள் ஒருவகையில் ரசனையை வளர்க்கின்றன. வழக்கமான தமிழ்சினிமாவின் மசாலாத்தனங்களிலிருந்து விலகி ஒரு கலைப்படைப்பை படைக்க முடியும் என்று குறும்படங்கள் நிரூபித்திருக்கின்றன. அவற்றிற்கு ஒரு ஆரோக்கியமான சிந்தனையை வளர்த்தெடுக்கும் சக்தி இருக்கின்றது. முக்கியமாக சில குறும்படங்கள் வரலாற்று ஆவணங்களாகவும் மாறிவிட்டிருக்கின்றன. கீழ்வெண்மணி குறித்து விவரம் வேண்டுமா? பாரதி கிருஷ்ணகுமாரின் ராமையாவின் குடிசை பார்க்கலாம். கல்லுடைக்கும் தொழிலாளர்கள் குறித்த விவரம் வேண்டுமா? குட்டிரேவதியின் கல்மனிதர்கள் பார்க்கலாம். கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் பெண்கள் போன்ற வித்தியாசமான தொழில் புரியும் பெண்களை லீனா மணிமேகலையின் தேவதைகள் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். சாலைப்பணியாளர் குறித்த பதிவா? மாதவராஜின் இரவுகள் உடையும் இருக்கிறது. என் பெயர் பாலாறு என்கிற பாலாற்றைக் குறித்த காஞ்சனை சீனிவாசனின் படைப்பு இருக்கிறது. அற்புதமான காணொளி அனுபவத்தைத் தரும் அருள் எழிலனின் ஒரு ராஜாங்கத்தின் முடிவு- ஒரு தொலைபேசியும் ஒரு மனிதனும் மட்டுமே இப்படத்தில் திரையில் தோன்றுகிறார்கள்.

பனைமரமேறிப் பிழைக்கும் ஒரு கண்பார்வையற்றவரைக் குறித்த படம் 'அகவிழி'. ஒரு இளம்பெண் தன்னை அலங்கரித்துக் கொள்வதை ஒரு நிமடம் வரை காட்டிவிட்டு இறுதியில் அவள் தன் எல்லா அலங்காரங்களையும் பர்தா அணிந்து மறைத்துக்கொள்வதைக் காட்டுகிறது மறைபொருள். ஒரு சிறுமியின் அறிவியல் தாகத்தை தணிக்க இயலாமல் நம் கல்விமுறை அவளைக் கொல்வதை வலியோடு சொன்னது 'ஆயிஷா'. ஒரு தெருக்கூத்து கலைஞனின் வாழ்வைச் சொன்னது ஏழுமலை ஜமா. கொகோகோலா கம்பெனியால் குறைந்து போன நெல்லைச் சீமையின் தாமிரபரணி ஆற்றின் குறைந்து போன நீர்வளம் குறித்த கதிரின் மூழ்கும் நதி குறும்படம் தடை செய்யப்பட்டு பின்னர் தடையை மீறி திரையிடப்பட்டது. குறும்படங்களின் வீச்சு பெருகிவிட்டிருப்பதையே இந்தத் தடை காட்டுகிறது.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு சிற்றூரிலும்கூட குறும்படங்கள் அறிமுகமாகத் தொடங்கி இருக்கின்றன. மக்கள்தொலைக்காட்சியில் ஒரு குறிப்பிட்ட நேரம் குறும்படங்களுக்காகவென்றே ஒதுக்கப்பட்டிருப்பதோடு ஆண்டுதோறும் குறும்படப் போட்டியையும் வைத்து பரிசும் தருகின்றது.

ஆனால் இந்த குறும்படங்கள் எல்லாம் குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுழன்று அங்கேயே முடங்கி விடாமலிருக்க இங்கே எந்த ஏற்பாடும் இல்லை. திரைப்படங்களை பதிவு செய்வது போல குறும்படங்களை பதிவு செய்ய வேண்டியதில்லை என்பதால் ஆண்டுதோறும் வெளியாகும் குறும்படங்களின் எண்ணிக்கை தெரிவதில்லை. ஒரு அமைப்பு ஏற்படுத்தி குறும்படங்களைக் குறித்த பதிவு செய்யவேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை முயன்றேன். அன்றைக்கு மிகக்குறைந்த அளவு குறும்படங்களே வந்து கொண்டிருந்ததால் அந்த வேலை சற்று எளிதாக இருந்தது. ஆனாலும்கூட அதை தொடர முடியவில்லை இப்போது தமிழ்நாட்டில் மட்டும் ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து குறும்படங்கள் வெளியிடப்படுகின்றன. எனவே கணக்கிடுவது அத்தனை சுலபம் கிடையாது என்கிறார் எம்.சிவகுமார்.

“வெளிநாடுகளின் தயாரிக்கப்படும் குறும்படங்களுக்கு இருப்பது போல தமிழில் வெளியாகும் குறும்படங்களுக்கு உலக மார்க்கெட்டும் அங்கீகாரமும் இல்லை. இதற்கு சந்தையும் திரையரங்கங்களும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். சமூக நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டும் என்கிற தாகம் இருந்தால் ஆர்டீசியன் ஊற்று போல எல்லா தடைகளையும் மீறி குறும்படங்கள் வரும்என்று நம்பிக்கையூட்டுகிறார் பாரதி கிருஷ்ணகுமார்.

க்யூபா நாட்டில் அருகிலிருக்கும் அமெரிக்காவில் தொலைக்காட்சியான ‘வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ச்க்கைபோடு போட்டது. மக்கள் அந்த சேனலை பார்க்க ஆரம்பித்து விட்டால் ஆபத்து என்று யோசித்த ஃபிடல் காஸ்ட்ரோ ஒரே ஒரு விஷயம்தான் செய்தார். பிளார்பாரத்தில் கூட கிடைக்கும் அளவிற்கு கையடக்க கேமிராக்களை மலிவாக்கினார். குறும்படங்கள் நிறைய வர ஆரம்பித்தன. மக்களின் கவனம் திசை திரும்பியது. கலாசார படையெடுப்பை குறும்படங்கள் மூலம் தடுத்த முயற்சி இது.  ஜனரஞ்சக இதழ்களுக்கு மாற்றாக எப்படி சிற்றிதழ்கள் இருக்கின்றனவோ அதுபோலவே வணிக சினிமாவுக்கான ஒரு இலக்கியமே குறும்படங்கள் என்கிறார் அஜயன்பாலா.

மாற்றுபடங்கள் குறித்து வெகுகாலமாக வலியுறுத்திவரும் இயக்குநர் பாலு மகேந்திரா என்ன சொல்கிறார்?

குறும்படங்கள் அதிகமாக வருவது சந்தோஷமளிக்கிறது. இங்கே படிப்பறிவற்றவர்கள் அதிகம். யாருக்காக எழுத்தாளர்கள் எழுதுகிறார்களோ அது அவர்களைப் போய் சேராது. ஆகவே பேனாவை தூக்கியெறிந்துவிட்டு காமிராவை கையில் எடுங்கள் என்று ஒருமுறை முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் சொன்னேன். அதன்பிறகு அவர்கள் குறும்பட இயக்கம் தொடங்கி எழுச்சியாய் செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு நானும் ஒரு காரணம் என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இப்படி போகுமிடங்களிளெல்லாம் திரைமொழியின் மகத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன். விளம்பரப் படங்கள் கூட ஒரு வகையில் குறும்படங்கள்தான். விழிப்புணர்வை ஏற்படுத்த இன்று குறும்படங்கள் ஒரு காரணமாக இருக்கின்றன.

 குறும்படங்கள் எடுப்பவர்களுக்கு சினிமா பயிற்சியும், வாசிப்பும், இலக்கிய பரிச்சயமும் மிகவும் முக்கியம். நிறைய பேருக்கு இவை இல்லாததால் அவர்கள் எடுக்கும் படங்கள் முழுமை பெறுவதில்லை. நிறைய பயிற்சி வகுப்புகள் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு நடக்கின்றன. சினிமா குறித்து முழுமையாக இந்த மூன்று நாட்களில் கற்றுக் கொடுப்பது சாத்தியமில்லாதது. இத்தகைய முகாம்களில் சினிமா குறித்த ஒரு பரிச்சயமும் நம்பிக்கையும் கிடைக்கும். அவற்றை வைத்துக்கொண்டு மேலும் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டால் இத்துறையில் மிளிர முடியும். 

எனக்கு 40 வருட அனுபவமிருப்பதாலேயோ என்னவோ எடுக்கப்படும் குறும்படங்களில் பெரும்பாலானவை எனக்கு வருகின்றன. பெரும்பாலான குறும்படங்கள் தேறுவதில்லை. எப்படி ஒரு கிறுக்கலை கவிதை என்றோ, சிறுகதை என்றோ ஒத்துக்கொள்ள முடியாதோ அப்படித்தான் இதுவும். மொழிக்கு இலக்கணம் இருப்பது போல் சினிமா மொழிக்கும் இலக்கணம் இருக்கிறது. அதைக் கற்றுக்கொண்டு குறும்படங்கள் எடுத்தால் நன்றாக இருக்கும்.

 99 ல் நான் கதைநேரத்திற்காக 6 சிறுகதைகளை தேர்வு செய்து அவற்றை படங்களாக்கினேன். எனக்கு வாசிப்பு பழக்கமிருப்பதால்தான் அந்தக் கதைகளைப் படித்து அதில் ஏதோ ஒன்று என்னை பாதித்ததனால் அவற்றை படமாக்கினேன். ஜனரஞ்சக சினிமாவில் இருக்கும் என்னைச் சுற்றியுள்ள இளைஞர்களுக்கு நவீன இலக்கியப் பரிச்சயம் குறைவு. குறும்படம் எடுப்பவர்களாவது இலக்கியத்தோடு தங்களை நெருக்கமாக்கிக்கொள்ள வேண்டும். ஆகவேதான் நான் நடத்தும் பள்ளியில் உள்ள பிலிம் மேக்கிங் பயிற்சியில் தினமும் ஒரு சிறுகதையைப் படித்து அதன் சுருக்கத்தை எழுதச் சொல்கிறேன். அவர்களை நவீன இலக்கியத்தைப் படித்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறேன்.

நன்றி: புதிய தலைமுறை