Tuesday, May 11, 2010

குழந்தைப் போராளி

துள்ளி விளையாடவேண்டிய வயதில் கையில் துப்பாக்கியோடு போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு குழந்தைப் போராளியின் சுயசரிதைதான் குழந்தைப் போராளி என்னும் இந்நூல்.


1976 இல் உகாண்டாவில்  துற்சி இனத்தில் பிறந்த சைனா கெய்ரஸி என்ற பெண் குழந்தை தன் வீட்டிலும் வெளியிலும் துன்புறுத்தப்பட்டு குழந்தைப் போராளியாய் கட்டாயமாய் ராணுவத்தில் இணைக்கப்பட்டபின் எண்ணிலடங்கா கொடுமைகளை அனுபவித்தாள். சைனாவின் மனநிலை பிறழ்ந்த நிலையில் சிகிச்சைக்கு மனநல மருத்துவரிடம் செல்லும்போது அவர் சைனாவின் நினைவுக்கு எட்டியவரை அவரது சிறுவயது ஞாபகங்கள் முதல் தற்போதைய நிலை வரை எல்லாவற்றையும் எழுதச் சொன்னபோது சைனா எழுதியவையே ‘குழந்தைப் போராளி என்ற நூலாக வெளிவந்துள்ளது.

குழந்தைப் பருவம் என்பது மனித வாழ்வின் முக்கியமான ஒரு பருவம். அந்தப் பருவத்து சந்தோஷங்களை இழந்த சைனாவின் வாழ்வில் ஏற்பட்ட புயல்களைக் கடந்து, தனது மனநலத்தையே விலையாகக் கொடுத்து சிகிச்சை பெற்று இன்று எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து ஒரு புதுவாழ்க்கையை வாழ்கிறார் சைனா.

"ஓரு சிறிய குருவினுடையதைப் போன்ற
அவர்களின் அழகிய காலையின்
பாதைகளின் குறுக்காய் வீசப்படும்
ஓவ்வொரு குருதி தோய்நத
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும்
காரணமாய் எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்."

- 21 வயதிலேயே மாண்டுபோன இலங்கையைச் சேர்ந்த சிவரமணியின் கவிதை இது..

மனநல மருத்துவத்தின் ஒரு பகுதியாக தனது கதையை எழுதியதால் உண்மையாக நடந்தவற்றை அப்படியே சைனா எழுதியிருக்கிறார். பலர் இவரை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியுள்ளனர். ராணுவத்திலும் படைத்தளபதி போன்ற உயர் அதிகாரிகள் செய்த வன்புணர்ச்சி கொடூரத்தை இவர் வெளியில் சொல்வதால்தான் தெரிகிறது. இல்லாவிட்டால் ஒரு ராணுவ அமைப்பிற்குள் நடப்பது எப்படி வெளியில் தெரியும்?

உகண்டாவில் 'இடி அமீன்' காலத்திற்குப் பின்னான. மில்ரன் ஒபாடேயின் காலகட்டம் அது. புன்னகை பூக்கும் குழந்தைகளின் முகங்களை எதிராளிகளை சந்திக்கும் போர்முனையில், கேடயம் போல் முன்வரிசையில் நிற்க வைத்துப் போரிட வைப்பதற்கான காரணம் குழந்தைப் போராளிகள்தான் எதிர்த்துப் பேசமாட்டார்கள் என்பதுதான் காரணம் என்கிறார் சைனா.

தான் பெண்ணாகப் பிறந்ததால் தன் பெற்றோர்களுக்குள் நிகழும் சண்டை பற்றிக் குறிப்பிடுகையில் “நான் ஆண் குழந்தையாய் பிறந்திருந்தால் என் அம்மாவும், அப்பாவும் பிரிந்திருக்க மாட்டார்கள் என்று சைனா சொல்லும்போது உகாண்டாவாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும் பெண்குழந்தைகள் பிரச்சனைக்குரியவர்களாக உலகெங்கும் மாற்றப்பட்டுள்ளனர் என்று புரிகிறது.

யுத்த பூமியில் இருந்து தப்பி வந்த சைனா, ராணுவத் தலைவனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் : மேதகு முசேவென்! நீ உருவாக்கிவிட்ட ஆயிரமாயிரம் குழந்தைப் போராளிகளில் ஒருத்தியான சைனா கெய்ரெற்சி பேசுகிறேன். என்னைக் கண்ணாடியில் பார்க்கும்போது, அங்கே உனது முகம்தான் எனக்குத் தெரிகிறது. எனது கனவுகளில் நீ எனது துப்பாக்கியை ஏந்தியபடியே என்னிடம் வருகிறாய். எனது கனவுகளில் இன்றும் உனது வசீகரக் குரல் கேட்கிறது. உனது அழகிய வசனங்கள் உனக்காக என்னை ரத்தம் சிந்த வைத்தன. நான் உனது விளையாட்டை விதிமுறைகளை அறியாமலேயே விளையாடினேன். அப்போது உனது முகம் ஒளிர, ஒளிர எனது ஆன்மா இருண்டு கொண்டே போயிற்று. நீ என் கைகளில் திணித்த துப்பாக்கியின் கனம் என்னை நிலைகுலைய வைத்தது''  என்று இன்னும் நீளும் இந்தக் கடிதத்தையும், புத்தகம் முழுமையும் படிக்கும் போது இத்தனை வலிகளையும் ரணங்களையும் தாங்கிக்கொண்டு அந்தச் சின்னப்பெண் வாழ்ந்து இன்று எல்லாவற்றிலிருந்தும் மீண்டு தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருப்பதை எண்ணி பிரமிக்கத்தான் வேண்டி இருக்கிறது.

நூல் வெளியீடு : கருப்பு பிரதிகள்,
                               B-55, பப்பு மஸ்தான் தர்கா,
                 லாயிட்ஸ் சாலை,
                 சென்னை 600 005

விலை         : ரூ. 180.00

ஆசிரியர்       : சைனா கெய்ரஸி

மொழியாக்கம்  : தேவா

நன்றி : புதிய தலைமுறை

1 comment:

  1. "உனது அழகிய வசனங்கள் உனக்காக என்னை ரத்தம் சிந்த வைத்தன"

    கண்கலங்க வைக்கின்றது இந்த வார்த்தை. தீவிரவாத அமைப்புகளிலுள்ள ஒவ்வொருவரும் இந்த வார்த்தையைக் கேட்க வேண்டும். நிச்சயம் தீவிரவாதத்திற்கும், சாதிய, பிரிவினைவாத அரசியல்வாதத்திற்கும் விமோச்சனம் கிடைக்கும்.

    ReplyDelete