Sunday, September 26, 2010

ஏன் டீச்சர் என்னை பெயிலாக்கினீங்க?

ன் இங்கே வேலை செய்ய வந்தே? படிக்கலையா நீ?”

இந்தக் கேள்வியை கோவில்பட்டி போன்ற நகரங்களைச் சுற்றியுள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளிலோ, காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள நெசவுத் தொழிற்சாலைகளிலோ அல்லது வேறு எங்குமோ பணிபுரியும் சிறுவர்களிடம் கேட்டுப்பாருஙகள் அவர்கள் சொல்லும் பதில் இதுவாகத்தானிருக்கும்.

”பெயிலாயிட்டேன். அதனால் மேல படிக்கலை. வீட்டுல வேற கஷ்டம். அதனால தான்”

“உனக்கு படிப்பு ஏறாது. மாடு மேய்க்கத்தான் லாயக்கு” போன்ற ஆசிரியரின் வசவுகள், பள்ளி ஆண்டுத்தேர்வில் சரியாக மதிப்பெண்கள் பெறவில்லையெனில் தோல்வியடைவதால் உண்டாகும் அழுத்தம், கூடப்படித்தவர்கள் மேல்வகுப்பிலிருக்க, தான் மட்டும் கீழ்வகுப்பிலிருந்தவர்களோடு படிக்க வேண்டிய அவமானம், பெற்றோரின் திட்டு இவற்றையெல்லாம் விட பள்ளிக்குச் செல்லாமலிருப்பது மேல் என்ற எண்ணமே மாணவர்களிடத்தில் தோன்றுவது இயற்கை. பிஞ்சுக் குழந்தைகளின் மனங்களில் தோல்வியினால் உண்டாகும் தாழ்வு மனப்பான்மையை நம் தேர்வு முறை வளர்க்கிறது. வறுமையான குடும்பத்திலிருந்து வரும் பிள்ளைகளின் பெற்றோருக்கு பெயிலாகும் பிள்ளையை படிக்க வைத்து என்ன பயன் என்கிற உணர்வு எல்லாமும் சேர்ந்து குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்குகின்றன.

இந்தப் பின்னணியில், எட்டாம்வகுப்பு வரையில் எந்த மாணவரையும் பெயிலாக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்த அறிவிப்பு குறித்து கல்வியாளர் ச.மாடசாமியின் கருத்தையறிய அவரை அணுகினோம்.

“வரவேற்கத்தக்க அறிவிப்பு இது. இந்திய வகுப்பறையில் கற்பிக்கும் முறையே தேர்வில் வெற்றி பெறுவதை நோக்கியதாக இருக்கிறது. பாஸ் பண்ணுவதற்கும், மதிப்பெண் எடுப்பதற்குமாகவே பாடங்கள் கற்பிக்கப்படுகிறதேயன்றி கற்றுக்கொடுக்கும் நோக்கில் இல்லை. அதனாலேயே பெயிலாகும் குழந்தைகளுக்கு அடியும் திட்டும் கிடைகின்றன. ஒரு முதல் ரேங்க் மாணவன் கூட வகுப்பிற்கு பயத்துடன் தான் செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேர்வு என்பதே முதலில் மாணவர்களுக்கு பாதுகாப்பின்மையையும், பயத்தையும் உருவாக்குகின்றது. பெயிலாகும் சிறுமிகளை பள்ளியை விட்டு நிறுத்தி வீட்டுவேலைக்கு, சித்தாள் வேலைக்கு அனுப்புவது தான் கிராமப்புறங்களில் நடக்கிறது. பெயிலாகும் பையன்கள்  பின்னாளில் கிரிமனல்களாகவே கூட ஆகிவிடும் வாய்ப்பிருக்கிறது. இவற்றிற்கெல்லாம் இந்த அறிவிப்பு ஒரு முடிவு கட்டும்”  என்கிறார்.

இதற்கு நேர்மாறான பார்வையும் இருக்கிறது. மாணவர்களுக்கு படிப்பின் மேல் ஆர்வம் குறைந்துவிடும். படித்தாலும், படிக்காவிட்டாலும் தான் தேர்ச்சி பெற்றுவிடுவோம் என்ற தெரிந்துவிட்டால் படிப்பில் ஆர்வம் குறைந்துவிடும் என்று ஒரு அச்சமும் நிலவுகிறது. அதன் காரணமாகவே இந்த அறிவிப்பை எதிர்க்கிறவர்களும் இருக்கிறார்கள். இது குறித்து ஆசிரியர்கள் என்ன நினைக்கிறார்கள்.?

“எங்களுக்கு இதில் உடன்பாடு இல்லை. ஒரு ஓட்டப்பந்தயம் வைத்துவிட்டு அதில் கடைசியாய் வந்தாலும் முதலாவதாக வந்ததற்கு சமம் என்று சொல்லி பரிசு கொடுத்தால் ஆற்றலை வீணாக்கி யார் தான் ஓடவேண்டும் என்று நினைப்பார்கள்? மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை வைத்து ஏ,பி,சி,டி என கிரேடு கொடுக்கலாம். பாஸானாலும், தான் வாங்கிய கிரேடை வைத்து தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை மாணவருக்கு உணர்ந்து கொண்டு தன்னை வளர்த்துக்கொள்ள வசதியாக இருக்கும்” என்கிறார் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.இளமாறன்.

நம் கல்விமுறை, தேர்வு முறை எல்லாமே மாணவர்களை பயமுறுத்துகின்றன. ஆனால் இப்போது பின்பற்றப்படும் முறைகளை அப்படியே வைத்துக்கொண்டு இந்த அறிவிப்பை மட்டும் வெளியிடுவதால் என்ன பலன் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.

“மேலைநாடுகளில் பாஸ் செய்வதற்கு 80 மதிப்பெண்கள் எடுத்தாக வேண்டும். பெரும்பாலும் யாரும் அங்கு பெயிலாவதில்லை. ஆனால் இங்கே வெறும் 35 மதிப்பெண்கள் மட்டுமே பாஸ் செய்ய எடுக்க வேண்டிய நிலையில், மாணவர்கள் 25 எடுத்தாலே எப்படியாவது அவர்களுக்கு 35 போட்டு பாஸ் போட்டு விடுகிறார்கள். அப்படியும் கூட மாணவர்கள் பெயில் ஆகிறார்கள் என்றால் பிரச்சனை எங்கேயிருக்கிறது? ஓராண்டு முழுக்க கற்கும் கல்வியை ஒரு மூன்று மணி நேரத்தில் எழுதி அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.  அப்படியென்றால் நம் கல்வித்திட்டத்திலேயே ஓட்டை இருக்கிறது என்று பொருள். பாடநூல் சுமையை அவர்களுக்குக் குறைக்கவில்லை. கற்பித்தல் முறை எளிதாக்கப்படவில்லை. தேர்வு முறை மாற்றியமைக்கப்படவில்லை. “participative learning” என்று சொல்லக்கூடிய பங்கேற்பு கற்றலை மாண்வர்களிடையே உருவாக்கவில்லை. இந்த சீர்திருத்தங்களையெல்லாம் செய்யாமல் வெறுமனே அவர்களை பெயிலாக்காமல் பாஸ் போட்டுவிடவேண்டுமென்றால் மாணவர்களை முட்டாள்களாகவே வைப்பதற்கான வழிதானிது. அறியாமையோடு மாணவர்களை நாம் மேல்வகுப்புக்கு அனுப்புவோம்.” என்கிறார் கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்.

”இது அரசாங்கத்தின் ஏமாற்று வேலை” என்கிறார் தனியார் பள்ளியில் தாளாளராக இருக்கும் பிரின்ஸ் கஜேந்திர பாபு. “எட்டாம் வகுப்பு வரை எல்லோரையும் தேர்ச்சியடையச் செய்துவிட்டால் 9ஆம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களால சமாளிக்க முடியுமா? அந்த நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யாமல் இந்த அறிவிப்பினை மட்டும் வெளியிடுவது எப்படி சரியானதாக இருக்கும்? எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் ஐ.டி.ஐ படிக்கலாம். அதற்கு எந்த மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்துக் கணக்கிடுவது.? இப்பொது 250 மாணவர்கள் இருந்தால்தான் ஒரு தலைமையாசிரியர் இருக்கிறார் ஒரு உடற்பயிற்சி ஆசிரியர் இருக்கிறார். கிராமப்புறஙகளில் 250 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகள் இருக்கின்றன. அவற்றின் கதி? தொடக்கப்பள்ளிகளில் ஓவியத்திற்கும் பாட்டிற்கும் ஆசிரியர்கள் கிடையாது. தொடக்கப்பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு ஓவியமும் பாட்டும் வேண்டாமா? அதுதானே கற்றுக்கொள்ளும் வயது. இப்படி மாணவர்களுக்கு தேவையான எதையுமே செய்யாமல் இந்த அறிவிப்பினை மட்டும் அரசு வெளியிடுவது மேம்போக்காக பார்த்தால் முற்போக்காகத் தெரிந்தாலும், உள்ளூரப் பார்த்தால் இது அரசின் ஏமாற்று வேலை. நம் தேர்வு முறை மதிப்பெண்ணை ஒட்டியதாக இல்லாமல் திறன் மதிப்பீட்டைக் கொண்டதாக இருக்க வேண்டும். இந்த சீர்திருத்தங்களை எல்லாம் செய்துவிட்டு அதன்பின் இந்த முடிவுக்கு வருவதே பொருத்தமானதாக இருக்கும்” என்கிறார் ப்ரின்ஸ்.

சரி! திறன் மதிப்பீட்டு அடிப்படையில் மாற்று தேர்வு முறைகளை எப்படியெல்லாம் செயல்படுத்தலாம்?

மாணவர்களை ஓபன் புக் எக்ஸாம் முறையில் தேர்வெழுத வைக்கலாம். இதன் மூலம் தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். ஆனால் இந்த முறையில் மாணவர்கள் மிக எளிதாக காப்பி அடித்துவிடுவார்கள் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் கல்வியாளர் மாடசாமியோ “சிந்து சமவெளி நாகரிகம் குறித்த கேள்வி என்றால் அது குறித்த மாணவரது உணர்வுகளையும் புரிதலையும் கேள்வியாக்காமல் வெறுமனே எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது; அங்கு கண்டுபிடிக்கப்ப்ட்ட மண்பானை எந்த நிறத்தில் இருந்தது; செங்கல்லின் நீளம் அகலம் எவ்வளவு என்பது போன்ற தகவல் அடிப்படையிலான கேள்விகளை ஏன் கேட்கிறீர்கள்? புரிதல் அடிப்படையில் கேள்வி கேட்டால் பாடப்புத்தகத்தை திறந்து  வைத்துக்கொண்டிருந்தாலும், மாணவருக்கு என்ன புரிந்ததோ அதைத்தான் எழுதமுடியும். ஆக தேர்வு முறை மாற வேண்டியிருக்கிறது. எந்த மாணவனுக்கு நினைவாற்றல் அதிகமோ அந்த மாணவனே ஜெயிக்க முடிகிறது. விடைகளை நோக்கி மாணவர்களை நாம் துரத்துகிறோம். உணர்வுகளை உள்வாங்குபவனுக்கு இத்தேர்வு முறையில் இடமில்லை. கற்பனைத்திறனும், படைப்பற்றலும் கொண்டு பன்முகத்தன்மையோடுள்ள மாணவர்களை நாம் இழக்கிறோம். மாணவர்கள்   மட்டுமல்ல் எத்தனையோ பன்முகத்தன்மையுள்ள ஆசிரியர்களையும் நாம் இழக்கிறோம். பள்ளியில் நடக்கும் விழாக்களில் ஒரு ஆசிரியர் ஒரு பாட்டு பாடினால் அதை கைதட்டி மாணவர்கள் வரவேற்பார்கள். பாடப்புத்தகத்தோடு கையில் பிரம்போடு மட்டுமே பார்த்த ஆசிரியரை மாணவர்கள் வேறு மாதிரி பார்ப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுகிறது. இந்த ஆசிரியர்களும் கூட மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்பவர்களாகவே மாறிவிடுகின்றனர். எவ்வளவு கலாசார விரயம்?”  என்று ஆதங்கப்படுகிறார்.

அது ஏன் மாணவர்கள் மூன்று மணிநேரம் மட்டும்தான் தேர்வெழுதவேண்டும்? இறுதி 5 நிமிடத்தில் தேர்வுக்கூட கண்காணிப்பாளர் “பேப்பரைக் கட்டி விட்டு எழுது” என்று அவசரப்படுத்தி, அந்த பரபரப்பில் தெரிந்த விடையும் மறந்து போகும் மாணவர்கள் இருக்கிறார்கள். “எல்லா மாணவர்களும் ஒரே வேகத்தில் எழுதுபவர்கள் என்று சொல்ல முடியாது. அப்படி இருக்கையில் எப்படி எல்லோருக்கும் பொதுவாக மூன்று மணி நேரம் என்று வைக்க முடியும்? எத்தனையோ மாணவர்கள் பதட்டத்தில் மாற்றி மாற்றிக் கட்டி விடைத்தாள் திருத்தப்படும்போது மொத்தமாக மதிப்பெண்கள் பறிபோகும் அபாயமிருக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுத முடியாதவர்களுக்கு மேலும் சிறிது நேரம் கொடுக்கலாமே? அதோடு ஒரே நாளில்தான் அந்தத் தேர்வை எழுதவேண்டிய அவசியமும் இல்லை. ஒரு தேர்வை மூன்று நாட்களுக்கு நடத்துங்கள் என்கிறார்கள் வல்லுநர்கள். ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் என்று கூட பிரித்துக்கொள்ளலாம் ” என்கிறார் ச.மாடசாமி.

மேலைநாடுகளில் பின்பற்றப்படும் “collaborative testing” எனப்படும் 2 மாணவர்கள் சேர்ந்து ஒரு தேர்வை எழுதும் முறையை இங்கு கொண்டு வந்தாலென்ன? சேர்ந்து எழுதும் தேர்வில் இருவருக்கும் ஒரே மதிப்பெண்கள் வழங்கப்படும். அப்படியென்றால் ஒரு மாணவன் மட்டுமே படித்துவிட்டு வரும் வாய்ப்பிருக்கிறதே? “முதலில் மாணவர்களை நம்பவேண்டும். பிலிப் ஜிம்பார்டோ என்ற உளவியலாளர் ஒரு வகுப்பில் 40 % மாணவர்களை இந்தக் கூட்டுத்தேர்வு முறையிலும், 60% மாணவர்களை தனித்தேர்வு முறையிலும் பயில வைத்து ஆய்வு செய்ததில் கூட்டுத்தேர்வு முறை மாணவர்களே பாடங்களை நன்றாகப் புரிந்து வைத்து புத்திசாலிகளாக   இருந்தனர்.”  என்கிறார் ச. மாடசாமி.

தேசிய பாடத்திட்ட அமைப்பு 2005ல் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர் என அனைத்துத் தரப்பினரையும் ஆய்வு செய்து ஒரு அறிக்கை சமர்ப்பித்தது. பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பைத் தவிர மற்ற வகுப்புகளுக்கு தேர்வுகள் நடத்தப்படுவது என்பதே கூடாது என்றது அவ்வறிக்கை. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நகர்புறத்தில் உள்ள பெற்றோரும் கூட இதே கருத்தைத்தான் கூறியிருக்கின்றனர்.

சற்று கவனித்து நோக்கினால் வகுப்பறையில் நடக்கும் சித்திரவதைகள், குழந்தைகளுக்குக் கிடைக்கும் பிரம்படிகள், தண்டனைகள் எல்லாமே மதிப்பெண்களை நோக்கிய கரடு முரடான பாதையில் பயணிக்க வேண்டிய நிர்பந்தத்தில் குழந்தைகள் இருப்பதாலும், அவர்களை அந்த இலக்கை நோக்கி உந்தித்தள்ளவேண்டியவர்களாய் ஆசிரியர்கள் இருப்பதாலும் தான் நடக்கின்றன. எனவே மதிப்பெண் அடிப்படையிலான நம் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வந்தாலொழிய முழுமையான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க முடியாது. ஆனாலும் கூட அரசின் இந்த அறிவிப்பு ஒருவகையில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் தேர்வு குறித்த அச்சத்தைப் போக்கி அவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் என்பதில் நாம் மகிழ்ச்சி கொள்ளலாம்.

*****************************
  
அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கலைக்கோட்டுதயம். அவருடைய மகன் பிரபாகரன் பயிலும் டான்போஸ்கோ பள்ளி அச்சிறுவனை 6ஆம் வகுப்பில் பெயிலாக்கியதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.. இன்று மீண்டும் பிரபாகரன் அதே பள்ளியில் 7ஆம் வகுப்பு படிப்பது அவ்வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் தான். இதுகுறித்து கலைக்கோட்டுதயம் என்ன சொல்கிறார்?
  
“என் மகனை பெயிலாக்கியதும் நான் சென்று பள்ளி நிர்வாகத்திடம் பேசினேன். என் மகனின் மனநிலை பாதிக்கும் என்று சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை. அவனோ அதே பள்ளிக்குப் போக மாட்டேன் என்றான். என்னை வேறு பள்ளியில் சேருங்கள் என்றான். பாஸ் போட்டுத் தாருங்கள். நான் வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்கிறேன் என்று நிர்வாகத்திடம் கேட்டேன். அதற்கும் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் வழக்கு தொடர்ந்தேன்.

கடந்த 2009-ம் ஆண்டு, மத்திய அரசு  14 வயது வரையிலான குழந்தைகளுக்கு (8-ம் வகுப்பு வரை) இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டம் 1.4.2010 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த சட்டத்தை துரதிருஷ்டவசமாக இங்குள்ள மெட்ரிக் பள்ளிகள் முனைப்போடு அமல்படுத்தவில்லை. மார்க் குறைவு, வருகைப் பதிவு குறைவு, படிப்பில் மந்தநிலை ஆகிய காரணங்களைக் கூறி ஆயிரக்கணக்கான குழந்தைகளை பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகள் பெயிலாக்கிவிடுகின்றன.இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் 16-ம் பிரிவின் படி, 8-ம் வகுப்பு வரை எந்தக் குழந்தையையும் பெயிலாக்கவோ, பள்ளியை விட்டு வெளியேற்றவோ கூடாது. இந்த சட்டத்தை மீறும் வகையில் டான்பாஸ்கோ மெட்ரிக் பள்ளி எனது மகனை பெயிலாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது என்று கூறி வழக்கு தொடர்ந்தேன். நல்ல தீர்ப்பு கிடைத்த்து. தமிழ்நாடு அரசு எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்க்க்கூடாது என்று உத்தரவிட்டிருப்பதை மனமார வரவேகிறேன்.

- கவின் மலர்

நன்றி : புதிய தலைமுறை கல்வி

2 comments:

  1. வருந்தத்தக்க சூழ்நிலை.

    ReplyDelete
  2. தற்பொழுது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் பொழுது தற்சமயம் கல்வியில் ஒரு புரட்சி ஏற்பட்டுவருவது கண்கூடாக தெரிகின்றது.
    இது இன்னும் சிறப்பாக அமையவேண்டுமானால் தங்களது பதிவில் முதல் பத்தியில் இருப்பதுபோன்று "மாடுமேய்க்கத்தான் லாயக்கு" என்று சொல்லும் ஆசிரியர்களை குறைந்தது ஒரு மாதத்திற்காவது மாடுமேய்க்க அனுப்ப வேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகளின் அருமை அவர்களுக்குத்தெரியும். மேலும் தனது வகுப்பில் எத்தனை சதவீத குழந்தைள் பெயிலாகின்றார்களோ அத்தனை சதவீத சம்பளத்தை அடுத்த ஆண்டு குறைத்துக் கொடுக்க வேண்டும். யாரும் தனது ஊதியத்தைக் குறைக்க அனுமதிக்க மாட்டார்கள். அப்பொழுதுதான் பாடத்திட்டத்திலும் கற்பிக்கும் முறையிலும் புரட்சி நடக்கும். காரணம் பெரும்பாளான அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் போதிப்பதே கிடையாது. மாணவர்களை வீசிவிடச்செய்து அந்த காற்றில் சுகமாக உறங்கும் ஆசிரியர்களை நான் பார்த்திருக்கின்றேன், காலண்டர் அட்டையால் வீசி உறங்கச்செய்திருக்கிறேன். இப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு பரிச்சைமுறை இரத்து ஒரு கொண்டாட்டமாகவே அமையும். எனவே பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வதைவிட முதலில் மாற்றத்தை ஆசிரியர் பகுதியிலிருந்து ஆரம்பித்தால் நன்றாக இருக்கும். அனைத்திற்கும் மேலாக கல்வியென்பது அனைவருக்கும் இலவசமாகவே கிடைக்க வேண்டும்.

    ReplyDelete