Wednesday, October 20, 2010

வன்மம் உருவாகும் காலம்

அலுவலக வேலையாக தி.நகரில் உள்ள ஜவுளிக்க்டைகளுக்குச் செல்ல வேண்டி இருந்தது. அன்றைக்கு காலையில் வந்து பனகல் பார்க் அருகில் உள்ள புது சரவணாஸ் கடைக்கு எதிரே பாலத்தின் கீழ் உள்ள பார்க்கிங் பகுதியில் என் டிவிஎஸ் சாம்பை நிறுத்தச் சென்றபோது எங்குமே இடமில்லை. தீபாவளி கூட்டம் களை கட்டியிருந்தது. இரண்டு கார்கள் நின்று கொண்டிருந்தன. அவற்றிற்கு இடையே சிறிய இடைவெளி இருந்தது. அதில் கொண்டு சென்று என் வண்டியை நிறுத்தினேன். 


ஒரு காருக்குள்ளிருந்த ஓட்டுனர் இருக்கையிலிருந்தவர் அதட்டலாக “இப்படி வண்டியை போட்டால் நான் எப்படி இறங்குவது?” என்றார். நான் “அந்தப்பக்கமாக இறங்குங்கள். எனக்கு வேறு இடமில்லை வைக்க” என்றேன். அவரோ “இப்படி ஈஸியாக இறங்குறதுக்கு பதிலா அந்தப்பக்கம் போய் இறங்கணுமா?” எனறார். “இதெல்லாம் சின்ன அட்ஜஸ்ட்மென்ட் தானே. எனக்கு வைக்க இடமில்லை. கொஞ்ச நேரத்தில் வந்து எடுத்து விடுவேன்” என்றேன். “எடுக்க முடியுமா முடியாதா?” என்று மிரட்டினார். எனக்கு கோபம் தலைக்கேறியது. “எடுக்க முடியாது. இங்கேதான் வைப்பேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். பின்னால் சன்னமாக “வரும்போது பாரு உன் வண்டியை” என்று முணுமுணுத்தது காதில் விழுந்தது. நான் பாட்டுக்கு நடந்து சென்று மக்கள் திரளோடு கலந்து என் வேலையில் கரைந்து போனேன். 

எல்லாம் முடிந்து வந்து பார்த்தபோது என் வண்டி வைத்த இடத்தில் இல்லை. இரண்டு கார்களையும் காணவில்லை. பகீரென்றது. “இதென்ன கொடுமை? அந்த வண்டியை திருடிச் சென்றவன் என்ன பாடு படுவானோ” என்று நினைத்தவாறே தேடினேன். சற்று தூரத்தில் தென்பட்டது என் வண்டி. அப்பாடா என்றிருந்தது. ஆனால் என் வண்டிக்கு இருபுறமும் நிறைய வண்டிகள். யாராவது வந்து ஒரு வண்டியையாவது எடுத்தாலொழிய என் வண்டி வெளியேற இடம் கிடையாது. எரிச்சலோடு காத்திருந்தேன். 

யாரோ வந்து ஒரு வண்டியை எடுத்து வழி உண்டாக்க, வண்டியை தள்ளினேன். முன் சக்கரத்தில் சுத்தமாக காற்றுஇல்லை. பிடுங்கிவிடப்பட்டிருந்தது. பஞ்சரா என்றும் சந்தேகம் வந்தது. நொந்துகொண்டே வெளியே எடுத்து ஸ்டாண்ட் போட்டு ஸ்டார்ட் செய்தபோது ஸ்டார்ட் ஆகவில்லை.” பெட்ரோலை திற்ந்து விட்டு காலி செய்திருக்கிறார் அந்த பழிவாங்கும் புலி என்று புரிந்தது. நல்லவேளை எதிரிலேயே பங்க் இருந்ததால் தள்ளிக்கொண்டே சென்று பெட்ரோல் போட்டுவிட்டு காற்றடித்தேன். ஸ்டார்ட் செய்ய.. மீண்டும் ஸ்டார்ட் ஆகவில்லை. என்னவென்று காற்று அடித்தவரிடம் கேட்டபோது குனிந்து பார்த்துவிட்டு சொன்னார் “பிளக்கை கழட்டியிருக்காங்க யாரோ” என்றார். இப்போது என்ன செய்வது? கையைப் பிசைந்தேன்.

அவரே வெட்டப்பட்டிருந்த கேபிளை இழுத்து சொருகி ஏதேதோ செய்து ஸ்டார்ட் செய்து கொடுத்தார். “எவன் செஞ்சானோ அவன் நல்லாயிருக்க மாட்டான்” என்று சபித்தார். நான் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வண்டியில் அலுவல்கம் சென்றேன். ஏதோ வித்தியாசமாய் உணர்ந்தேன் வண்டி ஓட்டுகையில். என்னவென்று பிடிபடவில்லை.  அதன் பின் அலுவலகம் சென்று வேலையில் மூழ்கிப்போனேன்.

மாலையில் வந்து மீண்டும் வண்டியை எடுத்து வீடு வந்து சேர்ந்ததும் மீண்டும் வண்டியை மறந்துபோனேன். மறுநால் காலை வண்டியை எடுத்தபோது கிளெட்ச் கையோடு உடைந்து விழுந்தது. உடனே வெளியே போயாக வேண்டும். அப்படியே போட்டுவிட்டு மூக்கால் அழுதுகொண்டே 80 ரூபாயைக் கொடுத்து ஆட்டோவில் வந்தேன். அன்றைக்கு பூராவும் மனதே சரியில்லை. ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை விடுமுறையாதலால் ஒரு மெக்கானிக் க்டையும் இல்லை. இரண்டு நாள் வரை பேருந்திலும் ஆட்டோவிலும் பயணம் தொடர்ந்தது. திட்டமிட்ட வாழ்க்கையில் கையிலிருந்த காசு போவது அலுப்பையும் சோர்வையும் ஒருசேர ஊட்டின.  திங்களன்று காத்திருந்து காலையில் 9 மணிக்கெல்லாம் சென்று கடையில் கொடுத்த போது சாயங்காலம் தான் கிடைக்கும் என்றார் கடைக்காரர். அன்றும் பஸ், ஆட்டோ, யுவகிருஷ்ணா - பாரதிதம்பி வண்டியின் ஓசி பில்லியன் என்று பயணித்தேன். கையிருப்பாய் இருந்த காசு போகும் எரிச்சலைவிட அந்த காரில் அமர்ந்திருந்தவரின் எரிச்சல் என்னை மிகவும் சோர்வூட்டியது. இன்றுதான் வண்டியை மீண்டும் காலையில் எடுத்தேன். வேறு ஏதாவது கழன்று விழுமோ என்கிற பயத்திலேயே ஓட்டினேன். நல்லவேளை ஒன்றும் ஆகவில்லை.

மனிதர்களில் இத்தனை வன்மம் நிறைந்தவர்களும் உண்டா? அதிர்ச்சியாகவும் ஆயாசமாகவும், கோபமாகவும், எர்ச்சலாகவும், வேதனையாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. என் பணம் தீர்ந்ததைவிட இத்தனை வன்மம் கொண்டு தண்டிக்கும் அளவிலான எந்தத் தவறையும் நான் செய்யவில்லை என்கிற் நினைவு என்னைத் துரத்துகிறது. சகிப்புத்தன்மையும், சகமனிதரிடம் காட்டும் அன்பும் குறைந்து வன்மம்,குரோதம்,விரோதம் எல்லாம் எவ்வளவு பெரியதாய் இருக்கின்றன?

இதனால் எனக்கு தண்டனை காலம் மூன்று நாட்கள்.

என் வண்டியை சேதப்படுத்த எடுத்துக்கொண்ட காலம் சில நிமிடங்களே இருக்கும்.

எங்களுக்குள்ளான வாக்குவாதம் நடந்த நேரம் சில நொடிகளே!.

ஆனால் அவருக்கு இந்த வன்மத்தை தூண்டியதற்கான உந்துதல் ஒரு நொடிக்கும் குறைவானதாய்த்தனே இருந்திருக்கும்!

ஒரு கேள்வி மண்டையைக் குடைகிற்து.

”இதுவும் கடந்துபோகும்” என்று அந்த நொடியை அவரால் ஏன் கடக்க முடியவில்லை?

Friday, October 15, 2010

கரம்சேடு படுகொலைதான் அம்பேத்கரை எங்களுடன் இணைத்தது

இந்தியா முழுவதும் அறியப்பட்ட சிந்தனையாளர். சாதி ஒழிப்பிற்கான சமரில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர். ஆந்திராவில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த இவர், "நான் இந்து அல்ல' என்று அறிவித்தவர். கல்வி மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த காஞ்சா அய்லைய்யா, இன்று உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை தலைவர். சாதி எதிர்ப்பு குறித்து பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவர், பார்ப்பனிய சமூக அமைப்பால் கடும் பாதிப்புகளை சந்திக்கும் தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக அறிவார்ந்த தளத்தில் இடையறாது குரல் கொடுத்து வருகிறார். அதிகார வர்க்கத்திற்கும், ஆதிக்க சாதிகளுக்கும் உறைக்கும் வண்ணம் ஆங்கில பத்திரிகைகளில் சமூக நீதிக் கட்டுரைகளை எழுதி வரும் அய்லைய்யா, தலித்துகள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிரான பிரச்சாரத்தை, கடந்த 25 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். இவருடைய Why I am not a Hindu, God as a political philosopher, Buffalo Nationalism ஆகிய நூல்கள் பல பதிப்புகளைக் கண்டிருக்கின்றன. "நான் ஏன் இந்து அல்ல' என்ற இவருடைய புகழ்பெற்ற நூல், தலித் - பெரும்பான்மை மக்கள் பார்வையில் இந்து மதத்தை கடும் விமர்சனத்திற்குள்ளாக்கியது. இந்நூல் தமிழிலும் வெளிவந்துள்ளது. "பாம்செப்' அமைப்பின் ஆவணப்படம் ஒன்றுக்காக எடுக்கப்பட்ட இந்நேர்காணல், அவர்களுடைய அனுமதியுடன் "தலித் முரசில்' வெளியிடப்படுகிறது.

சந்திப்பு : டாக்டர் பி.டி. சத்யபால், ஆர்.ஆர். சீனிவாசன்
தமிழில் : கவின் மலர்





உங்கள் பின்னணி குறித்து தெரிந்து கொள்ளலாமா?சொந்த ஊர், கல்வி பின்புலம் போன்றவை குறித்து கூற முடியுமா?

அது ஒரு சுவாரஸ்யமான கதை. நான், ஆந்திர மாநிலம், வாரங்கல் மாவட்டத்திலுள்ள பாப்பையாபேட்டை என்கிற சிறிய கிராமத்தில் பிறந்தேன். எங்கள் ஊர் ஓர் உள்ளடங்கிய கிராமம். நான் பிறந்தபோது, எங்கள் ஊரில் பள்ளிக்கூடம் கிடையாது. 50 களின் பிற்பகுதியில்தான் ஓர் ஓராசிரியர் பள்ளி செயல்படத் தொடங்கியது. ஆனாலும் கூட நானோ, என்னுடைய சகோதரரோ, சகோதரியோ பள்ளிக்குச் செல்லவில்லை. ஏனெனில், "குருமாக்கள்' என்றழைக்கப்படும் இடையர் சாதியைச் சேர்ந்தவர்கள் நாங்கள். எங்கள் சாதியில் பிறந்த குழந்தைகளை கல்வி கற்க பள்ளிக்கு அனுப்பினால், சரஸ்வதி அவர்களை கொன்று விடுவாள் என்ற தீவிரமான நம்பிக்கை இருந்தது. என் பெற்றோரும் அப்படியே நம்பினார்கள். அதனால் என் பாட்டி எங்களை பள்ளிக்கு அனுப்பக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். ஆனால், எங்கள் ஊரில் உள்ள பள்ளிக்கு அப்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் ஆசிரியராக வந்திருந்ததால், எங்கள் அம்மா எங்களை பள்ளிக்கு அனுப்ப விரும்பினார். அதன் பிறகு நாங்கள் பள்ளி செல்லத் தொடங்கினோம். அங்கு நான் அய்ந்தாம் வகுப்பு வரை படித்தேன். அதன் பிறகு அருகில் உள்ள சற்று பெரிய கிராமமான குண்டூரில் ஆறாம் வகுப்பு படிக்கச் சென்றேன். அங்குதான் என் சகோதரர்களுடன் நான் சமைத்து உண்ணப் பழகினேன். அங்கே ஒரு நிலப்பிரபு இருந்தார். அவர்தான் சீட்டு அளித்து, ஒவ்வொரு மாணவரையும் பள்ளியில் அனுமதிப்பார்.

எனக்கு நிக்கர், கால்சட்டை போன்ற உடைகளை அணிந்து பழக்கமில்லை. வேட்டி அணிந்துதான் நான் பள்ளிக்குச் சென்றேன். அந்த நிலப்பிரபு எனக்கு "ஸ்கவுட்' சீருடையையும், ஷûக்களையும் கொடுத்தார். ஒருநாள் அவர் "ஸ்கவுட்' மாணவர்களை மேற்பார்வையிட வந்தார். அன்று பார்த்து நான் தாமதமாக வந்து சேர்ந்தேன். பள்ளி உதவியாளரிடம் என்னை அழைத்து வரச் சொன்னார். ஒரு மரத்தடியில் அவர் நின்று கொண்டிருந்தார். நான் அங்கு சென்றேன். “ஏன் தாமதமாக வந்தாய்?'' என்றார். “சமைத்துவிட்டு வரவேண்டியிருந்ததால் தாமதமாகிவிட்டது'' என்றேன். “தாமதமாக வருபவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது'' என்ற அவர், உதவியாளரிடம் என் "ஸ்கவுட்' உடையையும் ஷûக்களையும் கழற்றுமாறு உத்தரவிட்டார். உதவியாளரும் அவ்வாறே செய்ய நான் அதிர்ந்து போனேன். அழத்தொடங்கினேன். நிலப்பிரபுத்துவத்தின் விதிகளால் முதன்முதலில் நான் தண்டிக்கப்பட்ட அனுபவம் அது.

நர்சிம் பேட்டை என்கிற ஊரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்வதற்காகச் சென்றேன். பள்ளியின் தலைமை ஆசிரியர் என்னை எட்டாம் வகுப்பில் அனுமதித்து, சீட்டு ஒன்றைக் கொடுத்து வகுப்பாசிரியரிடம் கொடுக்கச் சொன்னார். நான் வகுப்பிற்குச் சென்று அவரிடம் ஒப்படைத்துவிட்டு நின்றேன். அவர் சீட்டைப் பார்த்தார், என்னையும் பார்த்தார். “இங்கே பார்! இந்த அய்லைய்யா, மல்øலய்யா, பொன்னய்யாக்களுக்கெல்லாம் என் வகுப்பில் இடமில்லை. உங்களுக்கெல்லாம் படிக்கவோ, எழுதவோ வராது. என் வகுப்பில் நீங்களெல்லாம் ஒரு சுமையாக இருப்பீர்கள். தலைமையாசிரியர் எதற்காக இவர்களையெல்லாம் என் தலையில் கட்டுகிறார்?'' என்று அலுத்துக் கொண்டார்.

நானோ கைகளைக் கட்டியவாறு அங்கேயே நின்று கொண்டிருந்தேன். அவரோ “நீ என் வகுப்பிற்குப் பொருத்தமானவனாய் இருப்பாய் என்று எனக்குத் தோன்றவில்லை'' என்றார். நான் மிகுந்த துயரத்துடன் வகுப்பிற்குள் நுழைந்தேன். அவர் எங்களுக்கு இந்தி ஆசிரியர். அடுத்த மூன்றாவது மாதத்தில் காலாண்டுத் தேர்வு முடிந்து விடைத்தாள்களை கொடுக்கும்போது, என் விடைத்தாளை கையில் வைத்துக் கொண்டு என்னைப் பார்த்தார். “ஓ! நீ நிறைய மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாய்! வகுப்பில் முதலாவதாக வந்திருக்கிறாய்! உன்னைப் போன்ற ஒருவன் வகுப்பில் முதல் மாணவனாய் வருவான் என்று நான் எதிர்பார்க்கவில்லை'' என்றார்.

நிலப்பிரபுத்துவமும் சாதியமும் எப்படியெல்லாம் வேலை செய்கின்றன என்பதன் எடுத்துக்காட்டுகளாக இந்நிகழ்வுகளை கொள்ளலாம். அதன்பிறகு 1969 ஆம் அண்டு நான் பதினோறாம் வகுப்பு பயிலும்போது, தெலுங்கானா கிளர்ச்சி நடந்த நேரம் அது. ஒட்டுமொத்த மாணவர்களும் காப்பியடித்தார்கள். அப்படியும் நான் பள்ளியில் முதல் மாணவனாக வந்தேன். கணக்குப் பாடத்தில் மாணவர்கள் காப்பியடிப்பதற்காக வெளியேயிருந்து வந்த விடைகளை நான் எழுதவில்லை. ஏனெனில், அவை தவறானவையாக இருந்தன. ஆகவே, நான் சொந்தமாக என் விடைகளை எழுதினேன். கணக்கில் 96 சதவிகித மதிப்பெண்கள் பெற்றேன் என்று நினைக்கிறேன்.

கல்லூரிப் படிப்பை எங்கு பயின்றீர்கள்?

என் தாயின் மறைவிற்குப் பிறகு என் சகோதரர், தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். என் தந்தை மிகவும் வெள்ளந்தியான மனிதர். என் சகோதரர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். அவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும்போதே திருமணமாகிவிட்டது. அவர் என்னை பி.யூ.சி. பயில, வாரங்கலிலுள்ள கல்லூரியில் சேர்த்தார். அதுவரை தெலுங்கு வழிக்கல்வியில் படித்த நான், முதன்முறையாக ஆங்கிலவழிக் கல்விக்கு மாறினேன். நான் மூன்றாம் வகுப்பில் தேர்வாகியிருந்ததால், மருத்துவப் படிப்பில் என்னால் சேர முடியவில்லை. நான் சேர்ந்ததோ உயிரியல் தொடர்பான படிப்பு. அதை ஆங்கிலத்தில் படிப்பதென்பது சற்றுக் கடினமாக இருந்தது. ஆகவே, பி.ஏ. ஆங்கில இலக்கியத்தை எடுத்துப் படித்தேன்.ஆங்கிலம், வரலாறு, அரசியல் விஞ்ஞானம் ஆகியவற்றை பாடமாகக் கொண்டு, என் பி.ஏ. பட்டப் படிப்பை முடித்தேன்.

அரசியல் ஈடுபாடு எப்போதிலிருந்து வந்தது?

எனக்கு அரசியல் விஞ்ஞானம் பாடத்தில்தான் மிகுந்த ஆர்வமிருந்தது. ஏனெனில், அப்போது தெலுங்கானா பகுதி முழுவதும் கம்யூனிஸ்ட் இயக்கம் பரவியிருந்தது. தனித்தெலுங்கானாவிற்கான போராட்டங்களும் வலுவாக இருந்த நேரமது. எங்களுக்கு ஒரு முஸ்லிம் ஆசிரியர் இருந்தார். மிகத் தீவிரமான அரசியல் சிந்தனையாளர் அவர். அவர் காரல் மார்க்ஸை வழிகாட்டியாகக் கொண்டவர். நான் அவர்பால் ஈர்க்கப்பட்டேன். முதலாண்டிலிருந்தே தீவிரமாக வாசிக்கத் தொடங்கினேன். அப்போது கட்டுரைப் போட்டிகள், விவாதங்கள் போன்றவற்றில் பங்கெடுப்பவனாயிருந்தேன். எங்களுக்கு ஹர்கோபால் அப்போது ஆசிரியராக இருந்தார். அவரை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர்தான் நிறைய போட்டிகள் நடத்துவார். முதல் ஆண்டில் நான் நிறைய போட்டிகளில் பங்கெடுத்தேன். “உனக்கு நல்ல சிந்தனைகள் இருக்கின்றன. ஆனால் மொழி உனக்கு கைகூடி வரவில்லை'' என்றார் அவர். அதனால் முதல் ஆண்டிலேயே ஆங்கிலத்தில் படிக்கவும் கற்றுக் கொள்ளவும் தொடங்கினேன்.

இரண்டாம் மூன்றாம் ஆண்டுகளில் நான் போட்டிகளுக்குச் சென்றபோது, அனைத்துப் பரிசுகளும் எனக்கே கிடைத்தன. எங்கள் கல்லூரிக்கு எதிரில் இருந்த நூலகத்தில் நான் நிறைய நூல்களை வாசித்தேன். மிகத் தீவிரமாக ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டேன். அய்.ஏ.எஸ். தேர்வெழுத விரும்பினேன். ஏனெனில், ஆந்திராவின் முதல் தலித் தலைமைச் செயலாளரான காக்கி மாதவராவ், அப்போது வாரங்கல் மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக இருந்தார். அவருடைய அலுவலகம் எங்கள் கல்லூரிக்கு மிக அருகில்தானிருந்தது. அவர் குறித்த செய்திகளை ஆவலுடன் கேட்போம். அவர் எப்படி நிலச்சுவான்தார்களை கையாளுகிறார்; அவர் எப்படியெல்லாம் ஏழை மக்களுக்கு, விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு; துன்புறும் மக்களுக்கு உதவுகிறார் என்பது குறித்து நிறைய செய்திகள் எங்கள் காதுக்கு வரும். இதையெல்லாம் கேட்டு, கேட்டு எனக்கும் கலெக்டராக வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது.

அதன் பிறகு நான் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பயில வந்தேன். உஸ்மானியாவில் எப்போதுமே மாணவர்களிடையே அரசியல் இயக்கங்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். வலுவான தீவிர இடதுசாரி இயக்கம், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இருந்தது. நான் அதன் உறுப்பினராகச் சேர்ந்தேன். வாரங்கலில் இருக்கும்போது ஆங்கில நூல்கள் நிறைய படிப்பேன். ஆனால், ஆங்கிலத்தை எப்படிப் பேசுவது என்று கற்றுக்கொள்ள எனக்கு ஒரு வானொலி இல்லை. நாங்கள் நான்கைந்து பேர் ஒரு சின்ன அறையில் தங்கி, நாங்களே சமைத்து சாப்பிட்டு வந்தோம். அதிகாலையில் நான் பாத்திரம் கழுவுவேன். சமைக்கும் வேலையை என் நண்பர்களிடம் விட்டுவிட்டு, நான் நூலகத்திற்குச் சென்று படிப்பேன். திரும்ப வந்து சாப்பிட்டுவிட்டு வகுப்புக்குச் சென்றுவிடுவேன். மாலை வேளைகளில் சமூக நலத்துறை விடுதிக்குச் சென்று, அங்குள்ள வானொலிப் பெட்டியில் ஆங்கிலச் செய்திகள் கேட்பேன். அதிலிருந்துதான் ஆங்கில உச்சரிப்பை கற்றுக் கொண்டேன்.

இந்நிலையில்தான் எம்.ஏ. பயில்வதற்கு உஸ்மானியா பல்கலைக்கழகத்திற்கு வந்த நான், முற்போக்கு மாணவர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்தேன். அதன்பிறகு மார்க்சியத்தை தீவிரமாக கற்கத் தொடங்கினேன். அப்போது அம்பேத்கர் பற்றி நாங்கள் அறிந்திருக்கவில்லை. மகாத்மா புலே குறித்தும் நாங்கள் அறிந்திருக்கவில்லை. பி.ஏ. பயிலும்போது வகுப்பறையில் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மார்க்ஸை படித்திருக்கிறேன். எம்.ஏ. பயிலும்போதுதான் "கம்யூனிஸ்ட் அறிக்கை' வாசித்தேன். அப்போது இதுதான் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான பிரதி என்று தோன்றியது.

நான் இடையர் சாதியில் பிறந்தவன். ஒரு நிலச்சுவான்தாரால் உடைகளும், காலணிகளும் கழற்றப்பட்டவன். ஒரு ஆசிரியரால், “அய்லைய்யா, புல்லையா, மல்லைய்யாவெல்லாம் கல்வி கற்க முடியாது'' என்று இகழப்பட்டவன். ஆனால் கல்வியில் எனக்கொரு இடம் வேண்டும் என்பதற்காக போராடத் தொடங்கியவன். எனக்கு புரட்சி இன்றியமையாத தேவை என்று தோன்றியது. ஆகவே வாசிப்பு, போராட்டம் என்ற இரண்டு விஷயங்களையும் இணைத்துக் கொண்டு இயக்கத்தில் சேர்ந்தேன். சுவரொட்டி ஒட்டுவது, கூட்டங்களுக்குப் போவது என்று இயக்க வாழ்க்கை இருந்தது.

அந்த நேரத்தில்தான் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. ஒட்டுமொத்த தேசிய அரசியலும் எங்களிடையே தாக்கம் செலுத்த தொடங்கிய அந்த நேரத்தில், அவசரநிலை பிரகடனத்திற்கு எதிரான அரசியலின் பால் ஈர்ப்பு தோன்றியது. அப்போது "என்கவுன்டர்' என்ற பெயரில் முக்கியமானவர்கள் கொல்லப்பட்டனர். எங்கள் வளாகத்திலேயே மாணவர் தலைவர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏட்டளவில் அரசியலைப் பயின்றது மட்டுமல்லாது, நடைமுறை அரசியலிலும் இச்சம்பவங்களினால் ஈர்க்கப்பட்டேன். குடிமக்கள் சுதந்திரத்தில் கவனத்தை செலுத்தினேன். அதன்பிறகு "தர்மில நாகிரெட்டி' குழுவை வழிநடத்துபவர்களில் ஒருவராக இருந்தேன். அதன்பிறகு 1981இல் அதன் பொதுச்செயலாளர்களில் ஒருவராக ஆனேன். இதற்குப்பிறகு சிவில் உரிமைகள், ஜனநாயக உரிமைகள் தொடர்பான பிரச்சனையில் அதிக கவனம் செலுத்தினேன். அத்துடன் வாசிப்பதும், எழுதுவதும் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

அம்பேத்கரை எப்போது வாசிக்கத் தொடங்கினீர்கள்?

1985இல் காரம்செடு படுகொலை, ஒட்டுமொத்த ஆந்திராவில் முக்கியமானதொரு திருப்புமுனை. இக்கொலை எங்களின் அரசியல் புரிதலை மாற்றியது. அதோடு எங்களை நாங்களே மறு உருவாக்கம் செய்து கொள்ள வைத்தது. கரம்செடு கிராமத்தில் தலித்துகளாகிய மாதிகா சாதியைச் சேர்ந்த மக்கள், கம்மா சாதியைச் சேர்ந்த நிலப்பிரபுக்களால் கொல்லப்பட்டனர். இது, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிரச்சனைகளை உண்டாக்கியது. தீவிர இடதுசாரி இயக்கங்களையும் இது விட்டுவைக்கவில்லை. Oகஈகீ இன் தலைவர் என்ற முறையில், “மாதிகா தொழிலாளர்களை கொடூரமாக படுகொலை செய்த கம்மா நிலப்பிரபுக்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்'' என்று தலைப்பிட்டு ஓர் அறிக்கை வெளியிட்டேன். அனைத்து நாளிதழ்களிலும் அந்த அறிக்கை வெளிவந்தது. கம்மா இனத்தைச் சேர்ந்த எங்கள் இயக்கத்திலிருந்த தலைவர்கள் சிலர், கம்மா என்ற சாதிப் பெயரை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். “எப்படி மாதிகா தொழிலாளர்கள் என்று சொல்வீர்கள்? எப்படி கம்மா நிலப்பிரபுக்கள் என்று சொல்வீர்கள்? வெறுமனே தொழிலாளர்கள் என்றும், நிலப்பிரபுக்கள் என்றும் சொல்ல வேண்டியதுதானே?'' என்றார்கள். நான் அதை மறுத்து வாதிட்டேன். சாதிகளின் பெயர்களை கண்டிப்பாக குறிப்பிட வேண்டுமென்றேன். அவர்கள் கொலை செய்யப்பட்டது, முதலில் மாதிகாக்கள் என்பதால்தான். பிறகுதான் தொழிலாளர்கள் என்பது வருகிறது. அதனால் சாதிப்பெயர் இருக்க வேண்டும் என்று எங்களில் சிலர் நினைத்தோம். கரம்செடு தேசிய அளவில் பேசப்பட்ட பிரச்சனையானது. கரம்செடு இயக்கம் அம்பேத்கரை எங்கள் வாழ்வில் கொண்டு வந்து சேர்த்தது.

அதன்பிறகு அம்பேத்கரை தீவிரமாக வாசிக்கத் தொடங்கினேன். தீவிர இடதுசாரி இயக்கமும் கூட அம்பேத்கரை ஒரு "பூர்ஷ்வா சிந்தனையாளர்' என்றும், "பிரிட்டிஷ் ஏகாதிபத்திய கையாள்' என்றும், கோட் சூட்டோடு தோற்றமளிப்பதால் அவர் ஒரு காலனியாதிக்க பண்பாட்டின் ஆதரவாளர் என்றுமே கூறியது. காந்தியின் அரைநிர்வாணத் தோற்றத்திற்காக காந்தியை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். காந்தி குறித்து நான் மறுபரிசீலனை செய்யத் தொடங்கினேன். அம்பேத்கர் குறித்த புரிதல் தொடர்பாக, நான் இயக்கத்திற்குள் பெரிய போராட்டமே நடத்தினேன். ஆனால் எனக்கும் கூட அம்பேத்கர் குறித்து உறுதியான ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை. ஏனெனில், நான் அப்போது அம்பேத்கரை முழுவதுமாக வாசித்திருக்கவில்லை. முழு கம்யூனிச இயக்கத்தின் விவாதங்களில் அவர் எங்குமே வரவில்லை. நான் அம்பேத்கரின் எழுத்துகளை வாசிக்கத் தொடங்கினேன். புலே குறித்தும் தெரிந்து கொண்டேன். இந்தப் பின்னணியில் தான் ஒரு கம்யூனிஸ்ட் களப்பணியாளருக்கான வாசிப்பிற்காக, தெலுங்கு மொழியில் ஓர் ஆவணத்தை இயக்கத்திற்காக தயாரித்தேன். "சாதி ஒழிப்பும், ஒரு மார்க்சியவாதியின் புரிதலும்' என்பது அதன் தலைப்பு. இந்த ஆவணத்தை தயாரிக்க, அம்பேத்கரின் "சாதி ஒழிப்பு' நூல் எனக்கு உதவியாக இருந்தது. இச்சிறு வெளியீடு, இயக்கத்திற்குள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இப்போது கூட அது தெலுங்கு மொழியில் கிடைக்கிறது. அப்போதிலிருந்துதான் ஒரு புதிய காஞ்சா அய்லைய்யா உருவாகத் தொடங்கியதாகக் கொள்ளலாம்.

- அடுத்த இதழிலும்

Tuesday, October 12, 2010

வகுப்பறை தண்டனைகள் தேவையா?

வகுப்பறையில் தண்டனைகள் தேவையா என்பது குறித்த விவாதத்திற்காக கல்வியாளர் வசந்திதேவியை நான் எடுத்த நேர்காணலின் மையக்கருத்துக்கள் இவை. 


வகுப்பறையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் அவர்களை உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ பாதிக்கின்றன. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். குழந்தைகளுக்கென்று தனிப்பட்ட உரிமைகள் இருக்கின்றன. எனவே இதை குழந்தை உரிமை மீறல் என்றும் கூறலாம்.

இந்தியாவில் தொடர்ந்து வகுப்பறைகளில் குரூரமான தண்டனைகளை அளிப்பது நடந்து வருகிறது. ஆனால் எப்போது விஷயம் பெரிதாகிறதோ, அப்போதுதான் வெளியுலகத்திற்கு தெரியவருகிறது. அதாவது குழந்தைக்கு கை, கால், கண் என உடலுறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலோ மட்டுமே பிரச்சினை வெளியே தெரிகிறது. குற்றம் செய்த ஆசிரியர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். இல்லாவிட்டால் பள்ளிநிர்வகமோ, பெற்றோரோ மற்றவர்களோ இதனை கண்டுகொள்வதில்லை. 2007இல் தமிழக அரசு இதற்கென்று சட்டம் போட்டும் பரவலாக இந்தப் பழக்கம் போகவில்லை.

குழந்தைகளுக்கு தரப்படும் தண்டனைகள் விதவிதமாக இருக்கின்றன. மாணவர்களை இருட்டறையில் குறிப்பிட்ட நேரத்திற்கு தனியாக விட்டுவிடுவது, அடிப்பது, இரட்டை சடை போட்டு வரவில்லை போன்ற அற்பக்காரணங்களுக்காகக் கூட அடித்து சித்திரவதை செய்வது, பீரோவில் பிள்ளைகளை அடைத்துவைப்பது, நல்ல வெயிலில் பிள்ளைகளை மண்டியிடச் செய்வது, மைதானத்தைச் சுற்றி ஓடச்சொல்வது இப்படி  நிறைய தண்டனைகள். இவற்றினால் உயிர் போன சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

வகுப்பறைகளில் வழங்கப்படும் தண்டனைகள் ஐ.நா.சபை வெளியிட்ட சித்திரவதை தடுப்புப் பிரகடனத்திற்கு எதிரானது. தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்துப் பள்ளிகளிலும் இந்தக் கொடுமை நடக்கிறது. வசதி படைத்தவர்கள் பயிலும் பணக்கார பள்ளிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

இதற்கு என்ன காரணம் என்றால் முதலில் ஒவ்வொரு குழந்தையும் தனிநபர் என நாம் நினைப்பதில்லை. அவர்களுக்கும் உரிமைகள் உண்டு என நாம் எண்ணுவதில்லை. நம் சமூகத்தில் 40 வயதானாலும் பிள்ளைகள் தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என நினைக்கும் பெற்றோர்களே அதிகம். அடித்தால் படிப்பு வரும் என்பதற்கு எந்த நிரூபணமும் இதுவரை கிடையாது. ‘அடியாத மாடு படியாது’ என்பார்கள். அப்படியென்றால் குழந்தைகள் மாடுகளா? மாடுகளைக் கூட அடிக்கலாமா? அது குற்றமில்லையா? அடித்தால்தான் படிப்பு வருமா? – இப்படி பல கேள்விகளை நாம் கேட்கமுடியும். நம் ஏழை பெற்றோர்கள் பிள்ளைகள் எப்ப்டியாவது படித்து முன்னேறினால் போதும் என நினைத்து பள்ளிக்கு வரும்போதே ஆசிரியர்களிடம் பிள்ளைகளை அடிப்பதற்கு லைசன்ஸ் வழங்கிவிடுகிறார்கள். வசதியானவர்கள் அவ்வளவு வெளிப்படையாகச் சொல்லாமல் ‘என்ன செய்தாவது படிக்க வையுங்கள்!’ என்கிறார்கள். ராசிபுரம், நாமக்கல் போன்ற இடங்களில் 11, 12 வகுப்புகளுக்கு மட்டுமென்று பள்ளிகள் இருக்கின்றனர். வேறெங்காவது இப்படி வெறும் 2 வகுப்புகளுக்கு மட்டும் நடத்தப்படும் பள்ளிகள் இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்தப் பள்ளிகளில் சமுதாயத்தின் உச்சாணிக்கொம்பில் உள்ளவர்களின் வீட்டுப் பிள்ளைகள்தான் பயில்கிறார்கள். அந்த இரண்டு ஆண்டுகளில் அந்தப் பிள்ளைகளின் பேச்சு, மூச்சு, சாப்பாடு, உறக்கம் எல்லாமே படிப்புத்தான். அவர்களை தீபாவளி, பொங்கல் என இரண்டே இரண்டு முறைதான் ஊருக்கு அனுப்புகிறார்கள். நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை அவர்கள் பெறவில்லையென்றால் அங்கே கொடுக்கும் தண்டனைகள் மிக மோசமானதாக இருக்கின்றன. இவையெல்லாம் ஐநா சபை  நிர்ணயித்த குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரானது.

2006ஆம் ஆண்டு துவக்கத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய ஒரு தீர்ப்பில் ’குழந்தைகளின் நன்மைக்குத்தான் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. ஆகவே பள்ளிகளில் தண்டனை இருக்க வேண்டும்’ எனக் கூறியது. இதை எங்களைப் போன்றவர்கள் கடுமையாக எதிர்த்தோம். அதன்பிறகுதான் தமிழ்நாடு அரசு இதற்கென தனிச்சட்டம் கொண்டு வந்தது.

பிள்ளைகளை ஏன் அடிக்கிறார்கள்? அவர்களை ஏன் தண்டிக்கிறார்கள் எனறு ஆராய்ந்தால் நம் கல்வி அமைப்பைத்தான் நாம் குற்றம் சொல்ல வேண்டிவரும். அத்தனை குறைகள் உள்ளன. பாடத்திட்டச் சுமை அதிகமாக இருக்கிறது. 1994இல் வெளியான யஷ்பால் கமிட்டி அறிக்கை சுமைகளில்லாமல் மாணவர்களை கற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்றது. ஆனால் குருவித்தலையில் பனங்காயை அல்ல நாம் பாறாங்கல்லையே வைக்கிறோம். அதன் பாரம் அழுத்துகிறது. நாம் எல்லாவற்றையும் உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளும் அமெரிக்காவில் இவ்வளவு பாடத்திட்டம் கிடையாது. இந்த விஷயத்தில் ஏன் நான் அமெரிக்காவை உதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது? அங்கிருந்து வந்த ஆசிரியர்கள் சிலர் நம் கல்விமுறையை கவனித்துவிட்டு “எங்கள் நாட்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நாங்கள் கற்றுத்தருபவற்றை நீங்கள் 7,8 வகுப்புகளிலேயே கற்றுத்தருகிறீர்கள். ஏன் இவ்வளவு சுமைகளைக் கொடுக்கிறீர்கள்?” என்று கேட்டுவிட்டுப் போனார்கள்.  இவ்வளவு சுமை ஏன் கொடுக்கப்படுகிறது என்று பார்த்தால் இவையெல்லாமே வசதி படைத்தவர்களின் தேவைக்காகவே முன்னெடுக்கப்படுகின்றன என்பது புரியும். பிள்ளைகளை பிறந்ததிலிருந்தே திட்டமிட்டு வளர்க்கிறார்கள். இந்த கோர்ஸுக்கு மவுசு அதிகம். நம் பிள்ளையை இதில் எப்படியாவது சேர்த்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்காகவே குழந்தைகளை தயார் செய்கிறார்கள். தனியாக டியூஷன் அனுப்புகிறார்கள். உலகத்திலேயே இந்த டியூஷன் முறை இங்கேதான் இருக்கிறதென்று நினைக்கிறேன். வேண்டுமானால் இந்தியாவின் சகோதர நாடு என்பதால் பாகிஸ்தானில் இருக்கலாம். இந்த டியூஷன் அனுப்பும் நேரத்தில் பிள்ளைகளை அவர்களுக்குப் பிடித்த விளையாட்டு, இசை, ஓவியம் இப்படி அவர்கள் என்ன இஷ்டப்படுகிறார்களோ அந்த வகுப்பிற்கு அனுப்பலாம். ஆனால் கட்டாயப்படுத்தி டியூஷனுக்கு அனுப்புகிறார்கள். ஏன் ஆசிரியர்கள் தனியாக டியூஷன் எடுக்கிறார்கள் என்று பார்த்தால் மீண்டும் பாடத்திட்ட சுமைதான் காரணமாக இருக்கிறது. வகுப்பு நேரத்திற்குள் எல்லா பாடங்களையும் எடுத்து முடிக்க முடியாது. அதனால் பிள்ளைகளுக்கும் சரியாகப் புரிவதில்லை. அதனால் தனியாக டியூஷன் செல்ல வேண்டிய கட்டாயத்தில் மாணவர்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் இலவசக்கல்வி என்பதே கேலிக்கூத்தாகிவிட்டது. வறுமையில் வாடும் குடும்பங்களின் நிலைதான் பரிதாபமாக இருக்கிறது.

குழந்தைகளின் வயதுக்கேற்ற பாடங்கள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதை தரமற்ற கல்வி என்றுதான் சொல்லவேண்டும். உலகளாவிய அளவில் போட்டி போடும் அளவிற்கு தன் பிள்ளை வரவேண்டும் என நினைக்கும் வசதிபடைத்த பெற்றோரின் கனவுகளுக்கேற்ப இங்கே பாடத்திட்டம் நிர்ணயிக்கப்படுவதால் எல்லா குழந்தைகளாலும் அவற்றை பின்பற்ற முடியாது. வறிய குழந்தைகளுக்கு வீட்டில் கற்றுக்கொடுக்க முடியாத கல்வியறிவு அற்றவர்களாக பெற்றோர் இருப்பார்கள். அல்லது படித்திருந்தாலும் நாள் முழுதும் உழைத்துவிட்டு வரும் அவர்களுக்கு பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித்தருவதற்கான சூழல் இருக்காது. தனியாக டியூஷன் அனுப்பவும் பணமிருக்காது. இப்படிப்பட்ட பிள்ளைகள் வகுப்பறையில் நன்றாகப் படிக்கவில்லை எனக் காரணம் கூறி தண்டிக்கப்படுகிறார்கள். நம் நாட்டில் 70% பிள்ளைகள் இப்படித்தான் அடி வாங்குகிறார்கள். உடலில் வாங்கும் அடியை விட நாவினால் சுட்ட வடுவிற்குத்தான் பாதிப்பு அதிகம். ‘நீ உருப்பட மாட்டே!, பாஸ் பண்ணமாட்டே!” போன்ற வசவு மொழிகள் பிள்ளைகளின் மனதை பெருமளவு பாதிக்கும்.

இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? மனிதாபிமானமுடைய கல்விச்சூழல் உருவாக வேண்டும். குழந்தைகளின் உரிமைகளை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். முக்கியமாக அவர்களுக்கும் உரிமைகள் உண்டு என குழந்தைகளுக்கு முதலில் புரிய வைக்க வேண்டும். அந்த உரிமைகளுக்கு பங்கம் நேருமானால் அதை எதிர்க்கும் துணிவை எல்லா குழந்தைகளுக்கும் ஊட்ட வேண்டும். ஒரு குழந்தையை வகுப்பறையில் அடித்தால் வகுப்பில் உள்ள அத்தனை குழந்தைகளும் அதை எதிர்க்கவேண்டும். அதற்கான வாழ்க்கைக் கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் முதலில் அளிக்கப்படவேண்டும். வகுப்பறை உறவுகள் அதிகார உறவுகளாக இருத்தல் கூடாது. ஆசிரியர் ஒரு சர்வாதிகாரியைப் போல குழந்தைகளிடம் நடந்துகொள்ளக்கூடாது. ஆசிரியரைச் சுற்றியே இப்போதைய கல்விமுறை இருப்பது மாற வேண்டும். வாயில்லா பூச்சிகளாக, குழந்தைகள் வகுப்பில் மிரண்டுபோய் அமர்ந்திருக்கும் அச்சுறுத்தும் சூழல் மாறவேண்டும். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமிடையே நிலவும் இறுக்கம் விலகி நெருக்கம் அதிகமாக வேண்டும். இப்போது நடைமுறைக்கு வந்திருக்கும் செயல்வழி கற்றல் முறையில் ‘ஆசிரியர்கள் நாற்காலியில் அமரக்கூடாது. குழந்தைகளோடுதான் அமரவேண்டும்’  போன்ற சில நல்ல விஷயங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.  ஆனாலும் இது நான்காம் வகுப்பு வரைதான் கடைபிடிக்கப்படுகின்றது. 5ஆம் வகுப்பு வந்தவுடன் வழக்கம்போல கையில் பிரம்பெடுத்து விடுகிறார்கள்.  மாணவர்களை அன்போடு அரவணைத்துச் செல்லும் போக்கு வேண்டும். தவறு செய்யும் மாணவர்களை  கவுன்சிலிங் முறையில் பேசி நல்வழிப்படுத்தவேண்டும். ஆசிரியர் தனக்கு வகுப்பறைக்கு  வெளியில் உள்ள கஷ்டங்களையெல்லாம் வந்து பிள்ளைகள் மேல் காட்டக்கூடாது. சில மாணவர்கள் தற்கொலை வரை கூட சென்று விடுகிறார்கள். இதையெல்லாம் தடுக்க சட்டம் போட்டாலும், இவற்றை கண்காணிக்கும் ஏற்பாடு இல்லை. தனியார் பள்ளிகளுக்கென்று ஒரு இயக்குநரை நியமித்தார்கள். அந்த அலுவலகத்தில் மிகக் குறைச்சலான அளவிற்கே ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களால் நிச்சயமாக தமிழ்நாடு முழுவதையும் கவனிக்க முடியாது. அரசுப் பள்ளிகளுக்கென்றால் மாட்டந்தோறும் கல்வி அலுவலர் இருக்கிறார். அப்படி ஒரு ஏற்பாடு தனியார் பள்ளிகளுக்குக் கிடையாது.

உலகில் மற்ற பகுதிகளில் 20 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதமே உள்ளது. இங்கே அனுமதிக்கப்பட்டதே 40 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதம். ஆனால் நடைமுறையில் 70 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதமே உள்ளது. ஆகவே ஆசிரியர் கண்டிப்பாக ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட முறையில் அக்கறை செலுத்த முடியாது. ஆகவே அதிகளவில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஒரு பள்ளியின் தரத்தை அந்தப் பள்ளியின் தேர்ச்சி விகிதத்தைக் அளவுகோலாகக் கொண்டு கணக்கிடக்கூடாது. ஏனெனில் சமூக ஏற்றத்தாழ்வு அதிகம் இருக்கிறது மேட்டுக்குடி மக்களின் பிள்ளைகள் பயிலும் பள்ளியின் விகிதமும் அரசு பள்ளியின் விகிதமும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?. ஆகவே தேர்ச்சி விகிதத்தை வைத்து பள்ளியின் தரத்தை நிர்ணயிக்கக் கூடாது. 

நன்றி : புதிய தலைமுறை

Sunday, October 10, 2010

பெண்ணின் வாழ்க்கையை குழந்தைப்பேறு புரட்டிப் போடுகிறது” - கிரண்பேடி நேர்காணல்

மயம் முதம் குமரி வரை, சராசரியாய் இல்லாமல், வித்தியாசமாக துணிச்சலாக ஒரு பெண் குழந்தையை வளர்க்க நினைப்பவர்கள் ரோல் மாடலாக தங்கள் குழந்தைக்கு கைநீட்டிக் காண்பிக்கும் பெண் - கிரண்பேடி. 1972ல் இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியானவர். திகார் சிறையின் கைதிகள் இப்போதெல்லாம் கம்பிகளை எண்ணுவதில்லை. கிரண்பேடி அங்கு செய்த சீர்திருத்தங்களைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். டென்னிஸ் போட்டியில் ஆசிய சாம்பியன் பட்டம் வென்றவர். அழகான அளவான பாய்கட். சுறுசுறுப்பான நடை. மடைதிறந்த வெள்ளம் போல் பேச்சு. ஒரு காவல்துறை அதிகாரிக்கேயுரிய கம்பீரமான குரல். 61 வயதா என்று மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கான மிடுக்கான தோற்றம். சமீபத்தில் சென்னை வந்திருந்த கிரண்பேடி ‘புதிய தலைமுறைக்காக அளித்த நேர்காணல்: 


உங்களுக்குப் பிறகு நிறைய எண்ணிக்கையில் பெண்கள் உங்கள் துறைக்கு வந்துவிட்டார்கள். பெண்கள் முன்னேற்றத்திற்கு இந்த எண்ணிக்கை உதவியாய் இருக்கிறதா? 

”நிச்சயமாக! ஆண்களை காவல்துறை சீருடையில் பார்த்தால் பெண்களுக்கு பயம் வரும். அதே சீருடையில் பெண்களைப் பார்த்தால் பாதுகாப்புணர்வு வரும். சீருடையில் எதுவுமில்லை. அதை அணியும் உடல்களில் இருக்கிறது எல்லாம். தங்களால் முடியாத ஏதோ ஒன்றை எவளோ ஒருத்தி செய்கிறாள் என்கிற உணர்வு ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படுகிறது. தன்னுடைய பிரதிநிதியாக ஒரு பெண் காவல்துறையில் இருக்கிறாள் என்பதே பாதுகாப்புணர்வை அதிகப்படுத்தும். அவளுக்கு ஒரு சிக்கலென்றால் எளிதில் அணுக முடியும். எந்த சீருடையை பார்த்து பெண்கள் பயந்தார்களோ அதே சீருடையை பெண்களே அணிய ஆரம்பிப்பது பெண்கள் முன்னேற்றத்தில் முக்கியமானது இல்லையா?”

பெண்கள் முன்னேற்றத்திற்கு ஒரு பெண் ஆற்றக்கூடிய பங்கு என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்? 

”மூன்று விஷயங்களை வலியுறுத்துவேன் நான். முதலில் கல்வி கற்க வேண்டும். அதிலும் தொழிற்கல்வி கற்றல் மிக மிக அவசியம். அடுத்து திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கடுத்த நிலை தன் சொந்தக்காலில் நிற்கும் அளவிற்கு பொருளாதார சுதந்திரத்தோடு இருத்தல் அவசியம். இம்மூன்று விஷயங்களையும் விட முக்கியமான விஷயம் தனக்கு எப்போது வேண்டுமென்று தோன்றுகிறதோ அப்போதுதான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் குழந்தைப்பேறு ஒரு பெண்ணின் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. பிறரது வற்புறுத்தலுக்காக குழந்தை பெற்றுக்கொள்வதைத் தவிர்க்கவேண்டும். ஒரு குழந்தையை வளர்க்கும் பக்குவம் தனக்கு வந்திருக்கிறது என்ற நம்பிக்கை வந்தபின் மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை ஒவ்வொரு பெண்ணும் செய்தாலே பெண்விடுதலையில் தனக்கான பங்கை ஒவ்வொரு பெண்ணும் சிறப்பாக ஆற்றியதாகக் கொள்ளலாம்.”

ஆசிய டென்னிஸ் சாம்பியனான நீங்கள் விளையாட்டை விட்டு விட்டு காவல்துறை பணியை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? 

”டென்னிஸ் விளையாட்டில் வயதானால் சர்வீஸ் போட முடியாது. ஆனால் நான் தேர்ந்தெடுத்த துறையின் மூலம் வயதானாலும் மக்களுக்கு சர்வீஸ் செய்ய முடியுமே? நான் விளையாட்டை என்னுடைய கேரியராக என்றைக்கும் நினைத்ததில்லை. என்னை செழுமைப்படுத்திக்கொள்ள, இன்னும் வலிமையாக்கிக்கொள்ள, நான் கற்றுக்கொள்ளக்கூடிய வகுப்பறையாக விளையாட்டுத்துறையைப் பார்த்தேன். ஒருபோதும் அதை என் வாழ்க்கையாக ஆக்கிக்கொள்ள நினைக்கவில்லை. வாழ்க்கையில் தவறு செய்யக்கூடாது என விளையாட்டு கற்றுக்கொடுத்தது. என் உடல் வலிமையையும் மன வலிமையையும் அதிகப்படுத்தியது.”

ஐ.நா.சபையில் இந்தியாவின் பிரதிநிதியாகப் பணியாற்றியபோது எவ்வாறு உணர்ந்தீர்கள்? 

”என்னை மேலும் திறந்த மனதோடு செயல்பட பயிற்சியளித்தது அந்த அனுபவம். இந்தியாவிலேயே நாம் Unity in Diversity என்று சொல்வோம். ஆனால் அங்கு சென்றபின் தான் இதைவிட பெரிய வேறுபாடுகளும், பல்வேறு பண்பாடுகளையும் கொண்ட  உலக நாடுகளுடன் நல்லுறவு பேண கற்றுக்கொண்டேன். அது ஒரு அருமையான அனுபவம்.”

சிறைத்துறையில் பணியாற்றியபோது உங்கள் முயற்சிகளால் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான பொறி உங்களுக்கு எப்படி தோன்றியது? 

”நிச்சயமாக அது ஏதோ ஓவர்நைட்டில் தோன்றியது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் யோசித்து நடைமுறைப்படுத்தினேன். காவல்துறையில் நான் ஒரு காந்திய முன்மாதிரியை கொண்டு வந்தேன். திகார் சிறையில் 3C  மாடலைக் கொண்டு வந்தேன். C-Collective, C-corrective, C-Communicative என்று பொருள் கொள்ளலாம். உண்மையான, அமைதியான வழியில் கைதிகளின் மன்ங்களைத் திருப்புவது இச்சீர்திருத்தத்தில் முக்கியமானது. கைதிகளுக்கு சிறைக்குள்ளேயே வகுப்புகள் நடந்தன. ”

வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை விடுவது குறித்து நீங்கள் கடுமையாய் விமர்சனம் செய்திருந்தீர்களே? 

”ஆமாம். எதற்காக விடுமுறை விடவேண்டும்? ஓட்டு போட வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒவ்வொரு அலுவலகத்திலும், அது அரசு அலுவலகமாயிருந்தாலும் சரி, தனியார் அலுவலகமாயிருந்தாலும் சரி, வாக்குப்பதிவு தினத்தன்று கையில் மை இல்லாமல் பணிக்கு வருபவர்களை உள்ளே அனுமதிக்க்க்கூடாது. “First vote!, then come to office” என்பது கொள்கையாய் இருக்க வேண்டும். இப்படி செய்தால் வாக்குப்பதிவு சதவீதமும் அதிகமாகும்.  கிராமப்புறங்களைப் பற்றி பிரச்சனை இல்லை. இயல்பாகவே அவர்கள் விருப்பத்தோடு வந்து வாக்களிப்பார்கள். எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் வார இறுதி நாளிலோ, அல்லது வெள்ளி அல்லது திங்கட்கிழமையோ தேர்தலை வைத்தால், வார இறுதி நாட்களோடு சேர்த்துக்கொண்டு வெளியூர் போய்விடுவது நம்மவர்களின் வழக்கமாக இருக்கிறது. ஆக்வே வாரத்தின் மத்தியில் அதாவது புதன்கிழமையில் தேர்தல் நடத்த வேண்டும்.”

உங்களைப் பற்றிய ஆவணப்படம் “யெஸ், மேடம் சார்”  எப்போது எங்கள் பார்வைக்கு வரும்?

”இந்தியாவில் இப்போது டிரைலர் மட்டும்தான் நீஙக்ள் பார்த்திருப்பீர்கள். ஆஸ்திரேலியாவின் மேகன் டோன்மேன் உருவாக்கியிருக்கிறார் இந்தப் படத்தை இந்தியர்களின் பார்வைக்கு அனுப்புவது அவருடைய கையில் இருக்கிறது. விரைவில் வரும். இப்போதைக்கு டிரையிலர் மட்டும் பாருங்கள்”

என்று சிரித்தவாறே பவன் சௌத்ரியும் அவரும் இணைந்து எழுதிய“Broom Groom” நூலை கையில் வைத்துக்கொண்டு அவருடைய கையெழுத்துக்காய் வரிசையில் காத்துக்கொண்டிருக்கும் தனது வாசகர்களுக்கு ஆட்டோகிராப் போடுவதற்கு விரைந்தார்.

- கவின் மலர்

நன்றி: புதிய தலைமுறை