Thursday, February 10, 2011

பிம்பங்களின் பிடியில்


நேற்று யதேச்சையாய் பார்க்க நேர்ந்த ஒரு புகைப்படம் என்னை இப்போது வரை அலைக்கழித்து கலங்கடிக்கிறது. நடிகை சாவித்ரியின் இறுதிகாலத்தில் எடுக்கப்பட்ட படம் அது. அதிர்ந்து போனேன். கொஞ்சம் பருமனான உடல்வாகு கொண்டவராக மனதில் பதிந்திருந்த பிம்பதத்தை குலைத்துப்போட்டது அப்படம். கைகால்களெல்லாம் குச்சி குச்சியாக கன்னங்கள் ஒட்டிப்போய் சுயநினைவிழந்து படுக்கையில் கிடக்கிறார். அய்யோ! நெஞ்சு பதறியது. அருகில் ஜெமினி கணேசன் இன்னுமிருவர் இருக்கின்றனர் அப்படத்தில்.

இனி சாவித்ரி என்ற பெயரை நினைத்தால் எனக்கு பாசமலர் சாவித்ரியின் நினைவு வரப்போவதில்லை. இந்த சாவித்ரி தான் வருவார். அப்புகைப்படத்தை பார்க்காமலிருந்திருக்கலாம். அந்த முகம் மனக்கண்ணில் வந்து வந்து அதிர்ச்சியூட்டுகிறது.எல்லையில்லா வேதனை அடைந்தேன். நவராத்திரியில் சிவாஜியோடு நடித்த தெருக்கூத்து காட்சி முதல் பல காட்சிகள் மனக்கண்ணில் தோன்றி அலைக்கழித்தன.

மனிதர்கள் பிம்பங்களின் அடிமைகள் என்பது மீண்டும் எனக்கு நிரூபணமானது. பிம்பங்களுக்கு நேரும் ஒரு சிறு இடையூறைக் கூட மனம் தாங்கமாட்டேனென்கிறது. இந்த பிம்பங்கள் உடைபடும்போது அதனை தாங்கிக்கொள்வது அத்தனை எளிதாக இருப்பதில்லை. அதிலும் நாம் நேசிக்கும் சிலரது இயலாமையையோ அல்லது வேதனையையோ கண்கொண்டு காணச் சகியா மனநிலையில் வாழ்கிறோம். இது அநேகமாக அனைவருக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. 

இதனாலேயே இன்றைக்கு டி.எம்.சவுந்தர்ராஜன், எம்.எஸ்.விஸ்வநாதன், பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா, எஸ்.ஜானகி போன்ற நான் மிகவும் நேசிக்கும் கலைஞர்கள் தங்கள் பாட்டையே மிகச் சிரமப்பட்டு பாடும்போது மனம் கனத்துபோகிறது. அய்யோ! இவர்கள் பாடாமல் இருக்கலாமே என்று மனம் அங்கலாய்க்கும். ஆனால் அவர்கள் ஒருபோதும் பாடாமல் இருப்பதில்லை. பாடகருக்கு பாடாமல் இருப்பது சிரமமே. இயலாவிடினும் இரண்டு வரியாவது பாடினால்தான் ஆத்ம திருப்தி அவர்களுக்கு. அது உயிரின் வாதை. இசை ரசிகர்களுக்கோ வேதனையின் உச்சம்.

உயிர்மையில் மலேசியா வாசுதேவன் குறித்து ஷாஜி எழுதிய கட்டுரையை( http://musicshaji.blogspot.com/2010/08/blog-post_16.html) வாசித்துமுடித்தபோது தாரைதாரையாய் கண்ணில் நீர் வழிந்து கொண்டிருந்தது எனக்கு. இனி மலேசியா வாசுதேவனால் ஒரு வரி கூட பாட முடியாது என்கிற உண்மையை மனம் ஒப்புக்கொள்ள மறுத்தது. அவரும் மனிதர் தான். அவருக்கும் நோய் வரும். இப்படியான சிக்க்லகள் வரலாம் என்றெல்லாம் ஒப்புக்கொள்ள மறுக்கும் அறிவை எந்தக் குப்பைக்கூடையில் தூக்கியெறிய? இந்தக் கட்டுரையை வாசித்தவர்களெல்லோரும் ஒரு சொட்டு கண்ணீராவது விட்டதைக் கண்டேன்.

விஜய், ரஜினி போன்றவர்கள் மசாலா தவிர வேறு படங்களில் தங்களுக்கிருக்கும் இமேஜை மீறி வித்தியாசமாக நடித்தால் ஏற்றுக்கொள்ள மறுக்கும் சராசரி ரசிக மனநிலையில் இருக்கிறோமோ என்கிற சந்தேகம் வந்ததெனக்கு. ஆனால் யோசித்ததில் அப்படி ஒப்பிடுவது தவறென்று படுகிறது.

பிம்பங்களுக்கு மனிதர்கள் ஆட்பட்டிருந்தாலும், சாவித்ரி விஷயத்திலோ, மலேசியா வாசுதேவன் விஷயத்திலோ ஒப்புக்கொள்ள மறுத்து வேதனைப்படுகிறோம் என்பது அக்கலைஞர்களின் கலையை நாம் எந்தளவு நேசித்தோம் என்பதன் வெளிப்பாடு.  தான் நேசிக்கும் கலைஞர்களுக்கு ஒன்று என்றால் துடித்துப்போவது வெறும் ரசிக மனநிலை என்று புறந்தள்ள முடியவில்லை. அதன் பின்னால அடிநாதமாய் இயங்கிக்கொண்டிருப்பது மனிதநேயம். ஆம்! மனிதநேயம்தான். அது நமக்குப் பிடித்த கலைஞர்களாகவோ அல்லது வேறு யாராகவோ இருக்கையில் இன்னும் கூடுதலாய் வேதனைப்படுகிறோம்.

பிம்பங்களின் பிடியிலிருந்தாலும் மனிதநேயத்தில் தானே இயங்குகிறது இவ்வுலகம்!

3 comments:

  1. நீங்கள் ஐடி வேலையை விட்டுவிட்டு பத்திரிகைத்துறைக்கு வந்திருந்ததைப்பற்றி எழுதியிருந்த கட்டுரையின்மூலமாக உங்கள் வலைப்பூ வந்தடைந்தேன். இயல்பான, அழகான எழுத்து உங்களுடையது. பயணம் சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. @விந்தை மனிதன்
    மிக்க் நன்றி தோழரே!

    ReplyDelete
  3. //இனி சாவித்ரி என்ற பெயரை நினைத்தால் எனக்கு பாசமலர் சாவித்ரியின் நினைவு வரப்போவதில்லை. இந்த சாவித்ரி தான் வருவார். அப்புகைப்படத்தை பார்க்காமலிருந்திருக்கலாம். அந்த முகம் மனக்கண்ணில் வந்து வந்து அதிர்ச்சியூட்டுகிறது//

    ReplyDelete