Wednesday, July 18, 2012

குடும்ப வன்முறை...குமுறும் பெண்மை

படங்கள் : ஆ.வின்செண்ட் பால்

மாலினிக்கு 20 வயது. திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் கர்ப்பிணி ஆனாள். பேறுகாலக் கவனம் செலுத்த வேண்டிய கணவனோ இன்னொரு பெண்ணைவீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தத் தொடங்கினார். கர்ப்பக் காலத்தில் சத்தான காய்கறிகள், உணவு வகை களைச் சாப்பிடவேண்டிய மாலினிக்கு, ஒரு டம்ளர் பால்கூடத் தரப்படவில்லை. செலவுக்குப் பணமும் தராமல் தேவைகளையும் கவனிக்கவில்லை. மாலினியின் நிலைமை என்ன ஆகும்?  
 வேலைக்குச் செல்லும் கீதா பகல் முழுக்க அலுவலகத்தில் வேலை பார்த்துவிட்டு, வீட்டுக்கு வந்த பின் ஓய்வைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியாது. வீட்டு வேலைகள் மலையெனக் குவிந்துகிடக்கும். கணவர் வருவதற்குள் வீட்டைச் சுத்தப்படுத்தவில்லை என்றால் கன்னத்தில் பொளேரென விழும் அறையில் தொடங்கி, சுவரில் தலையை மோதி உடைக்கும் அளவுக்குக் கொடுமை இருக்கும். கீதாவுக்கு எப்போதுதான் விடிவுக்காலம்?
மிதுனாவின் கணவன் காதலித்த பெண்ணை விட்டுவிட்டு, வீட்டாரின் நிர்பந்தத்துக்காக மிதுனாவைக் கட்டிக்கொண்டார். இதனால், மிதுனாவிடம் பட்டும்படாமலும்தான் நடந்துகொள்வார். ஆசையோ, பாசமோ, நேசமோ காட்டாமல், 'என்ன’ என்றால் 'என்ன’ என்பதோடு உரையாடல் நின்றுபோகும். கணவனுக்கு உடல் தேவை அழுத்தும் நள்ளிரவுகளில் மட்டும் சில நிமிடங்கள் மிதுனா விட்டம் நோக்கியாக வேண்டும். ஒரு வசவு, ஓர் அதட்டல்கூட இல்லாத அந்த வாழ்க்கையின் கொடூரத்தை மிதுனாவால் மட்டுமே உணர முடியும். மிதுனாவின் வாழ்க்கை?
நான்கு சுவர்களுக்குள் இப்படிப் பெண்களுக்கு எதிராகத் தினம் தினம் அரங்கேறிக்கொண்டு இருக்கும் வன்முறைக்குத் தீர்வுதான் என்ன?  
சராசரியாக வாழும் பெண்களுக்கு மட்டும்தான் இந்த நிலை என்றில்லை. சமூகத்தில் முற்போக்கான பெண்களுக்கு உதாரணங்களாகச் சொல்லப்படுவோரும்கூட குடும்ப வன்முறையில் இருந்து தப்பிக்க முடிவது இல்லை என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஆங்கில எழுத்தாளர் மீனா கந்தசாமி. தான் காதலித்து மணந்த கணவன் சார்லஸ் அன்றனி என்கிற தர்மராஜா தன்னை அடித்துத் துன்புறுத்தத் தொடங்கியபோது, அதில் இருந்து தப்பிக்க வழியின்றித் தவித்திருக்கிறார் மீனா. ஒருகட்டத்தில் யாருடனும் பேசக் கூடாது, தொடர்புகொள்ளக் கூடாது என்று கட்டுப்படுத்தப்பட்டதோடு, அவருடைய மின்னஞ்சல் தொடர்புகளை அழித்தல், ஃபேஸ்புக் கணக்கை முடக்குதல், செல்போனில் உள்ள அனைத்து எண்களையும் அழித்தல் என்று அடையாள வன்முறையும் தொடங்கி இருக்கிறது. மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார் மீனா கந்தசாமி. ஒரு கட்டத்தில் தன் கணவருக்கு ஏற்கெனவே திருமணமான செய்தியை அறிந்தபோது, அவரை விட்டு வந்திருக்கிறார் மீனா கந்தசாமி.
இப்படி எல்லாத் தரப்புப் பெண் களையும் விட்டுவைக்காத இந்த குடும்ப வன்முறைக்கு என்ன காரணம்?
''சமூக மதிப்பீடுகளில் இருந்து தான் குடும்ப வன்முறை தோன்றுகிறது. ஆண்கள் பெண்களைவிட அதிக விஷயங்கள் தெரிந்தவர்கள் என்றும், பலசாலிகள் என்றும் கருத்து இருக்கிறது. பெண்களின் குறைகளைச் சுட்டிக்காட்டி, அவர்களை அடித்துத் துன்புறுத்தி அவர் களை நல்வழிப்படுத்தும் உரிமையும் கடமையும் ஆண்களுக்கு இருப்ப தாக இந்தச் சமூகம் நம்புகிறது. மனைவியை அடிக்கும் எந்தக் கணவனும் அதைத் தவறு என்று நினைப்பது இல்லை. 'என் மனைவி தவறு செய்கிறாள். நான் அவளைத் திருத்துகிறேன்’ என்றே அடிக்கும் ஒவ்வொரு கணவனும் நினைக் கிறான். வன்முறையின் கொடூரம் என்ன என்றால், அது உரையாட லைத் தடை செய்கிறது. பெண் களுக்குள் நம்பிக்கை இன்மையை விதைக்கிறது. வீட்டில் வளர்க்கும் விலங்குகளான நாய் அல்லது பூனைக்கு ஒப்பானவளாக ஒரு பெண்ணைத் தரமிறக்குகிறது'' என்கிறார் மீனா கந்தசாமி.
பெரும்பாலான பெண்கள் வீட்டுக்குள் நடக்கும் வன்முறையை வெளியில் சொல்வது இல்லை. அது ஒரு சாதாரண விஷயம் என்றே சிறு வயது முதல் போதிக்கப்பட்டு இருக்கிறது. கணவர் மீதோ, கணவர் வீட்டார் மீதோ காவல் துறையில் புகார் அளித்தால், அது கௌரவக் குறைச்சலாகிவிடும் என்று பெண்கள் கருதுவதே பல ஆண்களின் கேடயம். அப்படியானால், பாதிக்கப்படும் பெண்களுக்கு என்னதான் நிவாரணம்?
'விவகாரத்து வேண்டாம்; ஆனால், இந்தக் கொடுமைகளை என்னால் சகித்துக்கொள்ள முடியாது’ எனும் பெண்களுக்கானதே குடும்ப வன் முறைத் தடுப்புச் சட்டம். இந்தச் சட்டத்தின்படி காவல் துறைக்குச் செல்ல வேண்டியது இல்லை. இந்தச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தால், மாவட்டம்தோறும் உள்ள பாதுகாப்பு அதிகாரி ஒருவரிடம் முறையிடலாம். பெரும்பாலும் பெண்கள்தான் அந்தப் பொறுப்பில் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரை அழைத்து கவுன்சிலிங் செய்வதுதான் அவர்களின் முதல் பணி. இந்தச் சட்டத்தின் கீழ் கணவர் மீது வழக்கு தொடுக்கலாம். வழக்கறிஞர் வைத்து வாதாட வசதியற்ற பெண்களுக்கு இலவச வழக்கறிஞர் சேவை யும் அளிக்கப்படுகிறது.
''வன்கொடுமைக்கு ஆளாக்கும் ஒரு மனிதனோடு வாழ இந்தச் சட்டம் நிர்பந்திக்கிறதா? ஏன் அந்தப் பெண் கணவனை விவாகரத்து செய்யவிடாமல் குடும்பத்துக்குள்ளேயே இந்தச் சட்டம் சமரசம் செய்துவைக்க முயல்கிறது?'' என்கிற கேள்வியோடு வழக்கறிஞர் அஜிதாவை அணுகியபோது, ''பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பணியிடத்திலோ, பொது இடத்திலோ நடந்தால் அவற்றுக்கான சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், வீட்டுக்குள் நடப்பவற்றுக்கு மட்டுமே அப்படியானதொரு சட்டம் இல்லாமல் இருந்தது. அதனால், கேட்பார் யாரும் அற்ற நிலை இருந்தது. அதை இந்தச் சட்டம் மாற்றி அமைத்துஉள்ளது. அவ்வளவு எளிதாக குடும்ப பந்தத்தைவிட்டு நம் சகோதரிகள் பிரிந்து வர விரும்புவது இல்லை. சச்சரவுகளுக்குச் சமரசம் கண்டு குடும்பத்துக்குள்ளேயே வாழ விரும்புபவர்களுக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பு வழங்குகிறது'' என்றார்.
இந்தச் சட்டத்தின்படி புகார் அளிக்கப்பட்டால் யாரையும் கைதுசெய்ய சட்டத்தில் இடம் இல்லை. காவல் நிலையத்தில் புகார் அளித்தால், எப்படி எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்யப்படுகிறதோ,  அதைப் போலவே இந்தச் சட்டத்தின்படி புகார் அளித்தால் டி.ஐ.ஆர் (Domestic Incident Report) பதிவுசெய்யப்படும். அந்தப் புகாரின் அடிப்படையில், மாவட் டப் பாதுகாப்பு அதிகாரி புகாருக்கு உள்ளான நபரை அழைத்துப் பேசுவார்.
''இந்தச் சட்டம், 'புகுந்த வீட்டார்’ என்ப தற்குப் பதிலாக 'பகிர்ந்துகொள்ளப்பட்ட மண வீடு’ (Shared Householders) என்று அழகான பதத்தைக் கையாள்கிறது'' என்கிறார் அஜிதா. இந்தச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட பெண்ணை ஓர் ஆணோ அல்லது அவரைச் சார்ந்தவர்களோ வீட்டில் இருந்து வெளியேற்ற முடியாது. திருமண வாழ்வில் அவளுக்குக் கணவன் வீட்டில் வாழ முழு உரிமை உண்டு. இதற்கு 'குடியிருப்பு உத்தரவு’ என்று ஓர் உத்தரவைப் பாதுகாப்பு அதிகாரி பிறப்பிப்பார். அவளுக்கு வேண்டிய பாதுகாப்பை வழங்க வேண்டியது வீட்டா ரின் கடமை. இதற்கான பாதுகாப்பு உத்தரவையும் தனியாகப் பாதுகாப்பு அதிகாரி பிறப்பிப்பார். இந்தப் பாதுகாப்பு உத்தரவை மீறினால் 20,000 அபராதமும்  ஓராண்டு சிறைத் தண்டனையும் உண்டு.
''கணவன் மீதோ, கணவன் வீட்டார் மீதோ புகார் அளித்தால் குடும்பம் சிதைந்துவிடும். வாழ்க்கை போய்விடும் என்று பல பெண்கள் அஞ்சுகிறார்கள். அப்படி பயப்படத் தேவை இல்லை. உண்மையில் குடும் பத்தில் நிகழும் சிக்கல்களைத் தீர்த்துவைத்து, வன்முறையில் இருந்து பெண்களைக் காக்கிறது இந்தச் சட்டம்'' என்று தைரியம் அளிக்கிறார் அஜிதா.
1098 என்ற தொலைபேசி எண்ணில் குடும்ப வன்முறை தொடர்பான புகாரை அளிக்கலாம். ''பெண்களிடமே இந்த எண்குறித்து போதிய விழிப்பு உணர்வு இல்லை. 'புள்ளிராஜா’ விளம்பரம் மூலம் எய்ட்ஸ் குறித்த விழிப்பு உணர்வைப் பரவலாக்கிய முயற்சிபோல, இந்தச் சட்டம் குறித்தும் அப்படியான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்'' என்கிறார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மகளிர் சட்ட உதவி மையச் செயலாளர் ஜான்சி.
இந்தச் சட்டம் குறித்த மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் ஜான்சி. ''திருமணமான பெண்கள் மட்டுமல்ல; பெற்றோரோடு வாழும் பெண்களும்கூட வீட்டு வன்முறைக்கு ஆளாக்கப்பட்டால், புகார் அளிக்கலாம். பெண் காதலிப்பது பிடிக்காமல் தாங்கள் பார்த்த மாப்பிள்ளை யைத் திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்துவார்கள். அந்தப் பெண் மறுக்கும் பட்சத்தில் அறைக்குள் பூட்டிவைப்பது, அடித்துத் துன்புறுத்துவது, 'குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வோம்’ என்று எமோஷனல் பிளாக்மெயில் செய்வது போன்ற சித்ரவதைகளுக்கும் இந்தச் சட்டத்தின் மூலம் நிவாரணம் பெறலாம்'' என்று கூடுதல் தகவலுடன் முடிக்கிறார்.  
முகம் தெரியாத தோழி ஒருத்தி எழுதிய வலி மிகுந்த வரிகள் குடும்ப வன்முறையின் கோர முகத்தை உரத்துச் சொல்கின்றன...

'இன்று மலர்களைப் பெற்றேன். 
என் பிறந்த நாளுமல்ல... 
வேறெந்த விசேஷ நாளுமல்ல; 
எங்கள் முதல் வாக்குவாதம் நேற்றிரவு அரங்கேறியது. 
அவன் தன் தீ நாக்குகளால் என்னைப் பொசுக்கினான்; 
நான் அறிவேன் 
அவன் அதற்கு வருந்துகிறான் என்று
 இந்த மலர்களின் மூலம்.

இன்று மலர்களைப் பெற்றேன். 
எங்கள் மண நாளோ 
அல்லது 
வேறெந்த விசேஷ நாளுமோ அல்ல; 
நேற்றிரவு என் உடலைச் சுவரில் வீசி 
என் வலியைப் பிழிந்தான். 
நம்ப முடியாத ஒரு கொடூரக் கனவு போன்று இருந்தது. 
நான் அறிவேன் அவன் வருந்துகிறான்... 
இந்தப் பூக்கள் அவன் மனதைச் சொல்கின்றன;

இன்று மலர்களைப் பெற்றேன். 
இன்று அன்னையர் தினமோ 
அல்லது 
வேறெந்த விசேஷ நாளுமோ அல்ல; 
நேற்றிரவு அவன் கரங்கள் வன்மையாய் 
என்னை மீண்டும் தாக்கின 
முன்னெப்போதும் இல்லாதவகையில்... 
என்ன செய்வேன் அவனைப் பிரிந்து? 
பொருளாதாரமின்றி என் குழந்தைகளை 
எப்படிக் காப்பேன்?
நான் அஞ்சு கிறேன்... 
விலக எண்ணுகிறேன். 
ஆனால்... 
அவன் வருந்துகிறான்... 
நான் அறிவேன் 
இந்தப் பூக்கள்விடு தூது மூலம்.

இன்று மலர்களைப் பெற்றேன். 
இன்று விசேஷமான தினம். 
என் இறுதிச் சடங்குக்கான நாள். 
நேற்றிரவு அவன் கரங்களின் வன்முறையைத் தாங்காமல் 
என் உயிர் பிரிந்தது. 
நான் அவனைப் பிரியும் வலுவுள்ளவளாக இருந்திருந்தால்... 
இன்றைக்கு நான் மலர்களைப் பெற்றிருக்க மாட்டேன்!’

3 comments:

 1. அ. ஜெயபால்12:04 am

  இந்த கட்டுரை, எனக்கு டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அவருடைய கட்டுரைகளில் பயன்படுத்திய கீழ்க்கண்ட வாசகத்தை நினைவுபடுத்துகிறது.
  "எங்களுடைய எஜமானர்களாக இருப்பது உங்களுடைய நலன்களுக்கு உகந்ததாக இருக்கக் கூடும் -ஆனால்
  உங்களுடைய அடிமைகளாக இருப்பது
  எங்களுக்கு எவ்வாறு ஏற்புடையதாக இருக்கும்"
  - துசிடிடெஸ்

  ReplyDelete
 2. Anonymous9:22 am

  தங்களின் தளத்தை இதுவரைக் காலமும் அறியாது போய்விட்டேனே !!! அருமையான பதிவுகள் !!! நேரம் கிடைக்கும் போது பதிவுகளை ஆழ்ந்து படித்து கருத்துரைக்கின்றேன் . நன்றிகள் !

  ReplyDelete
 3. Anonymous6:25 am

  குடும்ப வன்முறை அண்மையக் காலங்களில் அதிகரித்தனவா அல்லது வெளியில் தெரிய ஆரம்பித்தனவா எனத் தெரியவில்லை .. ஆனால் இவற்றில் இருந்து விடுபட ஆண், பெண் இருசாராருக்கும் போதிய படிப்பினைகள் தேவைப்படுகின்றன .. பெண்கள் ஆண்களிடம் அடங்கியே போக வேண்டும் என்ற மனோபாவம் பெரும்பாலான இந்திய ஆண்களிடம் இருக்கவே செய்கின்றது, பலர் பெண்களை சொத்தாகவே கருதுகின்றார்கள் .. திருமணம் என்பது பெண் மீது ஆண் பெறும் உரிமை என்றக் கருத்தியலும் இருக்கின்றது ..

  ஆண், பெண் இருவருமே நண்பர்களாக பழகக் கற்றுக் கொள்ள வேண்டும் .. இருவருக்குமே சட்டங்களை சரியாக அறிந்துக் கொள்ள வேண்டும் ... !!! அதே போல ஒழிவு மறைவுகள் இன்றி மனம் விட்டு பேசவும், மூன்றாம் தரப்பினர் பெற்றோர் உட்பட தமது வாழ்க்கையில் தலையிடுவதை தடுக்கவும் முயல வேண்டும் ... !!!

  ReplyDelete