Wednesday, July 03, 2013

வெற்றி யார் பக்கம்?

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பது தொடர்பான பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. 5 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பது என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளதற்கு நெய்வேலி நிலக்கரி நிறுவன தொழிலாளர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வரும் ஜூலை 3ல் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தொழிலாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன. நெய்வேலியில் வேலை நிறுத்தம் நடந்தால், மின்சாரத் தேவைகளுக்கு நெய்வேலியை நம்பியிருக்கும் தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்படும். ஏற்கனவே மின்வெட்டின் பிடியில் சிக்கித்தவிக்கும் தமிழ்நாடு மேலும் பாதிப்புக்குள்ளாகும். இது தமிழக அரசுக்கு நெருக்கடியாக மாறும் என்கிற சூழலில்தான் தமிழக அரசு என்.எல்.சி.யின் ஐந்து சதவிகித பங்குகளை தானே வாங்கிக்கொள்வதாக அறிவித்திருக்கிறது. 

தனியாருக்கு விற்கநேர்ந்தால் தொழிலாளர்களிடையே அமைதியின்மை ஏற்படும் என்றும் அதன்காரணமாக உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். தனியாருக்கு விற்பதை பிரதான கட்சிகள் அனைத்தும் எதிர்க்கின்றன. தி.மு.க., ம.தி.மு.க. இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் என்று அனைத்து கட்சிகளும் தனியாருக்கு விற்கும் இந்த முடிவை எதிர்க்கும் சூழலில் அரசின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

தமிழக அரசு மே 23 அன்று மத்திய அரசுகு எழுதிய கடிதத்தில் தனியாருக்கு விற்கும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கோரிதற்கு, மத்திய அரசிடமிருந்து மறுபரிசீலனை செய்ய இயலாது என்று பதில் கடிதம் வந்ததாக ஜெயலலிதா தன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு என்.எல்.சியின் பங்குகளை தனியாருக்கு விற்பதற்கான அனுமதியை அளித்தது. அதன்பின் மீண்டும் தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனாலும் பலன் இல்லை. இந்நிலையில்தான் தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் என்கிற அஸ்திரத்தை எய்திருக்கின்றன. இதனால் தமிழக அரசு கவலைகொண்டிருக்கிறது என்பது ஜெயலலிதாவின் அறிக்கையிலிருந்து புரிந்துகொள்ளமுடிகிறது. 

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற கொள்கைகளுக்கு எப்போதும் எதிராக இருக்கக்கூடிய இடதுசாரி கட்சிகள் இம்முடிவை கடுமையாக எதிர்க்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இந்தியாடுடேயிடம் பேசியபோது ‘’தானே 5 சதவிகித பங்குகளை வாங்கிக்கொள்வதாகக் கூறும் தமிழக அரசின் அறிக்கைகூட  பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்றுதான் தொடங்குகிறது. எங்கள் முதல் நோக்கம், என்.எல்.சி.யின் பங்குகள் தனியாருக்குப் போகக் கூடாது என்பது. என்.எல்.சி. பொதுத்துறை நிறுவனம் மட்டுமல்ல, லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமும் கூட. ஆகவே லாபத்தில் இயங்கும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டிய அவசியம் என்ன?  5,70,000 கோடி ரூபாய் முதலாளிகளுக்கு வரிச்சலுகை கொடுத்துவிட்டு, என்.எல்.சி.பங்குகளை தனியாருக்குக் கொடுப்பதை நாங்கள் கண்டிக்கிறோம்.  ஒரு உடனடி தீர்வாக வேண்டுமானால் மாநில அரசு பங்குகளை வாங்கிக்கொள்ளும் முயற்சியை ஒப்புக்கொள்ளலாம். ஆனால் தொலைநோக்கில் இது சரியான தீர்வாகாது.’’ என்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழக அரசே 5 சதவிகித பங்குகளை வாங்கும் முடிவை வரவேற்கிறது.

ஏற்கனவே சில ஆண்டுகளாக5 சதவிகித பங்குகளை விற்பதன் மூலம் அரசுக்கு 466 கோடி ரூபாய் கிடைக்கும். நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கவே தனியாருக்கு பங்குகளை விற்க முடிவை எடுத்ததாக மத்திய அரசு கூறுகிறது. இது மத்திய அரசுக்கு ஒரு பெரிய தொகை அல்ல என்பது தொழிலாளர்களின் வாதமாக இருக்கிறது. செபி என்றழைக்கப்படும் இந்திய பங்குச் சந்தை வாரிய விதிமுறைகளின்படி என்.எல்.சியின்  மேலும் 5 சதவீத பங்குகளை பொதுப் பங்குகளாக விற்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி. சுரேந்தர் மோகன் இந்தியா டுடேயிடம் தெரிவித்தார். பொதுத்துறை நிறுவனங்களின் 10 சதவீத பங்கு பொதுப்பங்குகளாக இருக்க வேண்டும் என்பது செபியின் விதிமுறை. ஆனால், இப்போது என்.எல்.சியின் 6.54 சதவீத பங்குகள் மட்டுமே பொதுப் பங்குகளாக உள்ளது. எனவே, அந்த 10 சதவீதத்தை எட்டும் வகையில் மேலும் 5 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் அவர். ’’இம்முடிவை மேற்கொள்ளாவிட்டால் செபியின் பட்டியலில் இடம்பெற முடியாமல் போய்விடும் என்கிற அச்சத்தின் காரணமாகவே இந்த முடிவை எடுக்க நேர்ந்தது. தமிழக அரசே பங்குகளை வாங்கிக்கொள்வது தொடர்பாக பிரதமர்தான் முடிவெடுக்க வேண்டும்’’ என்கிறார் சுரேந்திர மோகன்.

மூன்று காரணங்களுக்காக தமிழக அரசு என்.எல்.சி.யின் பங்குகளை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ளக்கூடாது என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கூறுகிறார்கள். 1. அது சட்ட வரம்பிற்கு உட்பட்டதாக இருப்பினும், செபியின் நோக்கமே வர்த்தகத்தில் பங்குகளுக்கான சந்தையை அதிகப்படுத்துவதுதான் எனும்போது, தமிழக அரசு வாங்கிவிட்டால் அதற்கு சாத்தியமில்லை. 2. இதை முன்னுதாரணமாக வைத்து பல மாநிலங்களும் இதுபோன்ற சூழல் எழும்போது இதையே செய்வார்கள். 3. தமிழக அரசு 466 கோடி செலவு செய்து பங்குகளை வாங்கவேண்டும். மாநிலத்தின் நிதி நிலைமை மோசமாக இருக்கையில் தமிழக அரசு இதற்காக செலவு செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும்.

ஆனால் சி.பி.ஐ(எம்) கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனோ ‘’செபியின் முடிவுகள் ஒன்றும் தன்னிச்சையானதல்ல. செபி அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்ட ஒரு அமைப்பு. அரசு நினைத்தால் விதிகளை மாற்ற முடியும். அதுவே ஒரு விதியை உருவாக்கி, அந்த விதியை மீறாமல் இருக்க நான் பங்குகளை விற்கிறேன் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. ஆகவே செபியின் விதியை மாற்ற வேண்டும்’’ என்கிறார்

சென்ற திமுக ஆட்சியின்போதும், 22-6-2006 அன்று நெய்வேலி பங்குகளில் 10 சதவிகிதத்தை விற்பனை செய்யும் முடிவினை மத்திய அரசு அறிவித்தது. தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்தனர். அனைத்து அரசியல் கட்சிகளும் அந்த முடிவை எதிர்த்தவுடன் அரசு எடுத்த முடிவில் பின்வாங்கியது. இந்த முறையும் அதே ஒற்றுமையை கடைபிடித்து அரசை பின்வாங்க வைக்கமுடியும் என்று நம்புகிறார் என்.எல்.சி. - சி.ஐ.டி.யு. தொழிற்சங்கச் செயலாளர் வேல்முருகன். ‘’தனியாருக்கு பங்குகளை விற்பது தொடர்பாக தொழிலாளர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பு இருக்கிறது. தமிழக அரசே பங்குகளை வாங்கிக்கொள்ளவேண்டும் என்கிற கருத்திலும் எங்களுக்கு உடன்பாடில்லை. என்.எல்.சி.யின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படுவதும், தமிழக அரசுக்கு விற்கப்படுவதும் ஒன்றுதான். ஐயாயிரம் கோடிக்கும் அதிகமாக தனியார் முதலாளிகளிடம் வரிச்சலுகை அறிவித்துவிட்டு, வெறும் 466 கோடி ரூபாயை வைத்துக்கொண்டு நாங்கள் மக்களுக்கு சேவை செய்வோம் என்று சொல்லும் மத்திய அரசை எதிர்க்க வேண்டாமா? ஏன் முதலாளிகளிடம் வரிவசூல் செய்து அந்தப் பணத்தில் மக்கள் சேவை செய்யவேண்டியதுதானே? மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால் ஜூலை 3 அன்று காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்கும்’’ என்கிறார்.

பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றுவது என்பது தொழிலாளர்களின் பணிப்பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடியது. தனியாருக்கு பங்குகளை விற்பனை செய்வது என்பது என்.எல்.சி. நிறுவனத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கையின் முதல்படியாக இருக்கக்கூடும் என்கிற அச்சம் தொழிலாளர்களிடையே நிலவுகிறது. இதை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் ஆபத்து என்பதில் தொழிற்சங்கங்கள் உறுதியுடன் இருக்கின்றன. தனியார் மயமானால் உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்க நேரிடும். பொதுத்துறை ஒன்று தனியார்மயமானால் பொருளாதார இழப்பு மக்களுக்குத்தான். அத்துடன் சமூக நீதி என்கிற கோட்பாடு அடிபட்டுவிடும் என்று பெரியாரிய இயக்கங்கள் அஞ்சுகின்றன.  தனியார்மயமானால் அங்கே வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. எனவே சமூக நீதிக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தல் என்கிறது திராவிடர் கழகம்.

நவரத்னங்கள் என்றழைக்கப்படும் ஒன்பது பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கமாட்டோம் என்று தொழிலாளர்கள் ஒருபுறமும், மத்திய அரசு இன்னொரு புறமும் உள்ளன. இந்தப் போட்டியில் வெல்லப்போவது அரசா தொழிலாளர்களா என்பதை நாடு உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது.

(இந்தியா டுடேவுக்கு எழுதிய கட்டுரை)

1 comment: