சமூக
நீதியில் முன்னோடி மாநிலம் என்று பெயர்பெற்ற தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக நடக்கும்
சம்பவங்கள் சமூக நீதிக்கு பங்கம் வந்துவிடுமோ என்ற ஐயத்தை சமூக இயக்கங்களுக்கு
தோற்றுவித்துள்ளது. சென்னையில் செயல்படவிருக்கும் பல்நோக்கு சிறப்பு
மருத்துவமனைக்கான பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்கிற தமிழக அரசின்
அறிவிப்பு சமூக நீதிக்கான போராட்டங்கள் பல நடந்த தமிழக மண்ணில் அதிருப்தியை
உருவாக்கியுள்ளது.
அரசின்
அறிவிப்பையடுத்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர்
கருணாநிதியும் அறிவிப்பினை எதிர்த்து அறிக்கை வெளியிட்டார். பாட்டாளி மக்கள்
கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி
போன்ற அமைப்புகள் இந்த அறிவிப்பை எதிர்க்கின்றன. திராவிடர் கழகம் பெரியார் திடலில்
இதுதொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டமொன்றைக் கூட்டி விவாதித்தது. ஜனவரி 13 அன்று
பெரியார் திடலில் பொதுக்கூட்டம் ஒன்றும் சமூக நீதியை வலியுறுத்தி நடந்தது.
தி.மு.க. ஜனவரி 21 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. இத்தனை எதிர்ப்புகள்
வந்தாலும் முதல்வர் ஜெயலலிதா இவ்விஷயத்தில் அசைந்துகொடுக்க மறுக்கிறார்.
சென்னையில்
பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கான பணிகளுக்கான விளம்பரத்தை வெளியிட்ட தமிழக அரசு
அவ்விளம்பரத்தில் 4 விஷயங்களைத் தெரிவித்திருந்தது. 1. இட ஒதுக்கீடு முறை
பின்பற்றப்படாது 2.ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் நியமிக்கப்படுவர் 3.
இந்தியா முழுவதுமிருந்து மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம். 4. ஓய்வு பெற்றவர்களும்
விண்ணப்பிக்கலாம். அத்துடன் அவர்களுக்கான ஊதியமும் இப்போதிருப்பதைவிட பன்மடங்கு
உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. தி.மு.க. தலைவரின் எதிர்ப்பு
அறிக்கை வந்தவுடன் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட விளக்க அறிக்கையில் உச்ச
நீதிமன்றத்தின் தீர்ப்பினை சுட்டிக்காட்டியிருந்தார். ”இந்திய அரசுக்கு எதிராக
எய்ம்ஸ் பேராசிரியர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனது
18.7.2013 தீர்ப்பில், பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனை, பொறியியல் மற்றும் இதர
அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பதவிகளில் இட ஒதுக்கீட்டினை பின்பற்றுவது சரியாக
இருக்காது என்று இந்திரா சஹானி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மாற்ற இயலாது என்று
தெரிவித்துள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு
மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினையும், நடைமுறையில் உள்ள விதியினையும்
முன்மாதிரியையும் கருத்தில்கொண்டே விளம்பரம் வெளியிடப்பட்டது” என ஜெயலலிதா
தெரிவித்திருந்தார்.
“தமிழக
அரசு சுட்டிக்காட்டியுள்ள வரிகள் கருத்துரை ஆலோசனைகளேதவிர தீர்ப்பு அல்ல; முதல்வர்
குறிப்பிடும் தீர்ப்புக்குப் பின் அதே ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை ஒப்பந்த
அடிப்படையில் பேராசிரியர் பதவிகளுக்கான விளம்பரத்தில் இட ஒதுக்கீடு
அளிக்கப்பட்டுள்ளது. தீர்ப்புக்குப் பின் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்
செப்டம்பர் 12 2013 அன்று ஓர் ஆணை பிறப்பித்தது. நாடாளுமன்றத்தில்
எதிர்க்கட்சிகளின் விவாதங்களை அடுத்து உச்ச நீதிமன்றத்தின் கருத்து ஒருபக்கம்
இருந்தாலும் புதிய நியமனங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றவேண்டும் என ஆணை
பிறப்பித்தது.” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகிறார். முதல்வர்
ஜெயலலிதா தன் அறிக்கையில் ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்யப்படுபவர்களுக்கு இட
ஒதுக்கீடு பொருந்தாது என்று கூறியிருந்தார். இதை மறுத்த திராவிடர் கழகம் ஆதாரமாக
16.11.2013 அன்று ரிஷிகேஷ் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணி நியமன ஆணையில் ஒப்பந்த
நியமனமாக இருந்தாலும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அதற்கான
ஆதாரத்தையும் பத்திரிகைகளுக்கு வெளியிட விஷயம் சூடுபிடித்தது.
முன்பு
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்துக்கு மேல் போகக் கூடாது
என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக, 1980 முதலே தமிழ்நாட்டில்
நடைமுறையிலிருக்கும் 69% இட ஒதுக்கீட்டுக்கு பங்கம் வந்துவிடாமல் காப்பதற்காக
அதுவரை அரசு ஆணையாக மட்டுமிருந்த இடஒதுக்கீடு சட்டமன்றத்தைக் கூட்டி முதல்முறையாக அரசியல் சட்ட 31 -சி பிரிவின்படி
சட்டமாக்கப்பட்டது. 1992 மண்டல் ஆணைக்கு முன்பிருந்தே செயல்படும் வகையில் அரசியல்
76வது சட்டத் திருத்தமாக 9 வது அட்டவணைப் பாதுகாப்புடன் நாடாளுமன்றத்தில்
எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டு, நரசிம்மராவ் காலத்தில், அப்போதைய குடியரசுத்
தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் ஒப்புதல் பெறப்பட்டது. இதனை எதிர்த்துப் போடப்பட்ட
வழக்கும்கூட தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் காரணமாகவே அப்போது ‘சமூக நீதிகாத்த
வீராங்கனை’ என்று அப்போது கி.வீரமணி ஜெயலலிதாவை அடைமொழியிட்டு அழைத்தார். அந்த
அடைமொழியை இன்றளவும் அதிமுக பயன்படுத்துகிறது. ஆனால் இப்போது அதே ஜெயலலிதாதான் இட ஒதுக்கீடு
கிடையாது என்கிறார்.
பாட்டாளி
மக்கள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு “உச்ச நீதிமன்றத் தீர்ப்பை
புரிந்துகொள்ளாமல் செயல்படுகிறது தமிழக அரசு. பா.ம.க., தி.மு.க. போன்ற கட்சிகள்
குற்றம்சாட்டியபின் பெயருக்கு முதல்வர் மறுப்பு தெரிவித்துள்ளார். அவரது பதில்
அர்த்தமற்றது.விஞ்ஞானிகள் போன்ற ஆராய்ச்சி தேவைப்படும் பதவிகளுக்குத்தான் திறமை
அடிப்படையில் நியமனம் என்பதால் இட ஒதுக்கீடு தேவையில்லை என உச்ச நீதிமன்றம்
தெரிவித்துள்ளது. மருத்துவமனை உயர் அலுவலர் பதவி நியமனத்துக்கு இது பொருந்தாது.
புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் இட ஒதுக்கீட்டு முறை உள்ளது. அங்கு முடியும்போது
இங்கு மட்டும் ஏன் முடியாது? சமூக நீதியில் அக்கறை உள்ளதாக கூறும் முதல்வர்
உண்மையிலேயே அக்கறை இருந்தால் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தவேண்டும்” என்று
இந்தியா டுடேயிடம் தெரிவித்தார்.
பல்நோக்கு
மருத்துவமனை மக்களின் வரிப்பணத்தில் கட்டப்படுவதால் அதில் இட ஒதுக்கீட்டை மறுப்பது
சட்டவிரோதம் என்கிறது திராவிடர் கழகம். ”சில சிறப்புத் தகுதியுள்ள்
மருத்துவமனைகளில் இட ஒதுக்கீடு தருவது விரும்பத்தக்கதல்ல என்று கருதலாம்” என்று
வெறும் கருத்துரையாக சொன்னதை சிரமமேற்கொண்டு நிறைவேற்றும் தமிழக அரசு அதிலேயே
அடுத்தப் பகுதியாக இதை மத்திய அரசுதான் தீர்மானிக்கவேண்டும் என்று கூறியதை ஏன்
கவனத்தில் கொள்ளவில்லை என்றும் கேட்கிறது.
“தமிழக
அரசு திட்டமிட்டு இட ஒதுக்கீட்டை புறக்கணிப்பதற்கான காரணங்களைத் தேடுகிறது. தமிழக
வரலாற்றில் இட ஒதுக்கீடு கொண்டுவரவே அத்தனை கட்சிகளும் இயக்கங்களும்
பாடுபட்டிருக்கின்றன. முதல் முறையாக ஜெயலலிதாதான் இட ஒதுக்கீடு வேண்டாம்
என்பதற்கான காரணங்களைத் தேடித் தேடிச் சொல்கிறார். ஆசிரியர் நியமனத்திலும்
இதையேதான் செய்தது தமிழக அரசு. தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும்
எட்டிப் பிடிக்கமுடியாத அளவில் கட் ஆஃப் மதிப்பெண்களை வைத்து அவர்களை அருகிலேயே
நெருங்கவிடாமல் செய்தது தமிழக அரசு. இப்போது மருத்துவமனை விவகாரத்திலும் இப்படியே
செயல்படுகிறது” என திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை
ராஜேந்திரன் குற்றம் சாட்டுகிறார். மேலும் ‘பல்நோக்கு சிறப்பு நிறுவனங்களில்’ இட
ஒதுக்கீடு தேவையில்லை என்றால், இட ஒதுக்கீட்டில் அக்கறை இருந்தால், தமிழக அரசு ஏன்
அந்தப் பெயரில் இதைத் தொடங்கவேண்டும்? வேறு பெயர் வைத்துவிட்டுப்
போகவேண்டியதுதானே?” என்கிறார்.
கருணாநிதி
தன் அறிக்கையில் “மருத்துவர்களுக்கு ஒன்றரை, இரண்டு மடங்கு ஊதியம் ஏன்?” என்று
கேட்டதற்கு பதிலளித்த ஜெயலலிதா “ஏன் ஏழை எளிய மக்களுக்கு நல்ல திறமையான
மருத்துவர்கள் கிடைக்கக்கூடாதா? தனியார் துறையில் பணிபுரியும் அவர்கள் இப்படி
ஊதியம் தந்தால்தான் வருவார்கள்” என்று கூறியது வேறு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
“அப்படியெனில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்தவர்கள் எல்லாம் திறமை
குறைந்தவர்களா? தனியார்துறையில்தான் திறமையானவர்கள் உள்ளனரா?” என்றும் கேட்கிறார்
கி.வீரமணி.
“இட
ஒதுக்கீடு அற்ற இப்படிப்பட்ட முயற்சிகள் மூலம் மருத்துவத்தை கார்ப்பரேட் போல மாற்ற
முயல்கிறது தமிழக அரசு. இதில் மக்களுக்கான அக்கறை இருக்காது. மேட்டிமைத்தனம்தான்
இருக்கும். படிப்படியாக இட ஒதுக்கீட்டை தமிழகத்திலிருந்து நீக்க கதவுகளைத்
திறந்துவிடுகிறது தமிழக அரசு. இதை வன்மையாகக் கண்டிக்கவேண்டும்” என்கிறார் விடுதலை
ராஜேந்திரன்.
“வழக்கறிஞர்
விஜயன் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் வெற்றிபெறவில்லை.
69% போக மீதம் 31 சதவிகிதமே உள்ளது பொதுப் பிரிவுக்கு என்று அவர் வாதிட்டபோது,
வேண்டுமானால் கூடுதலாக இடங்களை அதிகரித்துக்கொள்ளுங்கள் என்று தீர்ப்பு வந்தது. இப்படியெல்லாம்
காப்பாற்றப்பட்ட சமூக நீதிக்கு பங்கம் விளைவிப்பதை அனுமதிக்க முடியாது. இந்த
விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் முடிவெடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூறிவிட்டது
உச்ச நீதிமன்றம். மத்திய அரசு தெளிவாக இட ஒதுக்கீடு தேவை என்று கூறிவிட்டது.
இப்போது தமிழக அரசுதான் முடிவு செய்யும் இடத்தில் இருக்கிறது. வேண்டும் என்றும்
முடிவு செய்யலாம். வேண்டாம் என்று முடிவுசெய்யலாம் என்று இரண்டு வாய்ப்புகள்
அதன்முன் உள்ளன. சமூக நீதியில் உண்மையான அக்கறை இருந்தால் இட ஒதுக்கீடு வேண்டும்
என்றுதான் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்” என்கிறார் திராவிடர் கழகப் பொதுச்
செயலாளர் கலி. பூங்குன்றன்.
(நன்றி : இந்தியா டுடே)