Friday, April 25, 2014

கனவு நனவு ஆனது

அந்த அரங்கில் திருநங்கைகள் நிரம்பி வழிகிறார்கள். கேக் வெட்டிக் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு ஏப்ரல் 15 திருநங்கைகள் தினம் அவர்களுடைய மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது. சந்தோஷத்தில் முகம் மலர்ந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து பரிமாறிக்கொண்ட அவர்கள் முகத்தில் கொடிய வரலாற்றை ஒரு நாளில் தாண்டிய நிம்மதியும் ஆயாசமும் தெரிந்தன. எத்தனை போராட்டங்களுப் பின்னான வெற்றி இது என பேசிப்பேசித் தீர்க்கிறார்கள்.

மாற்று பாலினத்தவரை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை தமிழ்நாட்டிலுள்ள மாற்று பாலினத்தோர் வரவேற்கிறார்கள். ஏப்ரல் 15 திருநங்கையர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் திருநங்கைகளுக்கான நலவாரியம் ஏற்படுத்தப்பட்டு ஏப்ரல் 15ம் நாள் ஆண்டுதோறும் திருநங்கைகள் தினம் கொண்டாடப்படும் என்கிற அறிவிப்பு வெளியானது. அந்த நாளில் இந்தத் தீர்ப்பு வெளியானதில் கூடுதல் மகிழ்ச்சி என்கின்றனர் திருநங்கைகள். ஆனாலும் தமிழகத்துக்கு வெளியே அந்தத் தேதிக்கு சிறப்பொன்றுமில்லை என்பதால் அந்த நாளில் தீர்ப்பு வந்தது யதேச்சயானதே.

ஆண், பெண் மட்டுமல்லாது மூன்றாம் பாலினம் என்பதையும் அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசை மாற்றுபாலினத்தவருக்கான வேலைவாய்ப்பும் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்ற வசதிகளைப் பெறுவதையும் உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. “மாற்று பாலினத்தவரை மூன்றாம் பாலினமாக அங்கீகரிப்பது என்பது சமூகரீதியானதோ மருத்துவரீதியானதோ அல்ல; மாறாக அது மனித உரிமை சார்ந்த ஒன்று” என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கும் வரிகள் மிகவும் முக்கியமானவை. அத்துடன் சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் பின் தங்கியவர்களாக அவர்களைக் கருதி கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கவேண்டுமெனவும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம். திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கக்கோரி தேசிய சட்டப் பணிகள் ஆணையக்குழு தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

பொதுவாக திருநங்கைகள் என்று எடுத்துக்கொண்டால் தங்களை மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்கவேண்டும் என்கிற கோரிக்கையும் உண்டு. பெண்களாக அங்கீகரிக்கவேண்டும் என்கிற கோரிக்கையும் உண்டு. அவரவர் சொந்த விருப்பத்தின்பேரிலும் விழைவின்பேரிலும் எந்த பாலின அடையாளத்தை விரும்புகிறார்களோ அந்த அடையாளத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்கிறது தீர்ப்பு. அதாவது ஆணாகப் பிறந்த ஒருவர் பெண்ணாக உணர்ந்தால் அவரை பெண்ணாக அங்கீகரிப்பதும், ஆணாக பிறந்த ஒருவர் பெண்ணாக உணர்ந்தால் அவரை பெண்ணாக அங்கீகரிப்பதும் வேண்டும் என்கிறது தீர்ப்பு. ஆகவே இத்தீர்ப்பு திருநங்கையர், திருநம்பிகள்(பெண்ணாகப் பிறந்து ஆண்களாக மாறுபாடு அடைபவர்கள்) ஆகியோருக்கும் சாதகமானதொரு தீர்ப்பு என்கின்றானர் மாற்றுபாலினத்தவர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14,15 மற்றும் 16ன் படி பாலின அடையாளத்தை மறுத்தல் பாகுபாடு காண்பிக்கப்பட்டதான குற்றம் என்றாகும். பாலின அடையாளத்தை அங்கீகரிக்க மாற்றுப் பாலின அறுவைசிகிச்சை மேற்கொண்டிருக்கவேண்டும் என்பது கட்டாயமில்லை. தனிநபர்கள் தங்கள் பாலியல் அடையாளத்தை விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யும்போது அது அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி பாதுகாப்பு உண்டு. இத்தகைய விஷயங்களை உள்ளடக்கி மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் பல அறிவுறுத்தல்களை செய்துள்ளது.

திருநங்கையர் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான பிரியா பாபு இந்தியா டுடேயிடம் தன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். “இந்தத் தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சிக்கும் வரவேற்புக்கும் உரிய தீர்ப்பு. புதிய நம்பிக்கையை எங்கள் மத்தியில் விதைத்திருக்கிறது. எங்களுக்கு யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் இருந்தோம். இனிமேல் எங்கள் பிரச்சனைகளை சட்டரீதியாக அணுக முடியும். தினம் தினம் புழுங்கிக்கொண்டிருக்கும் பல திருநங்கைகள் சமூகத்துக்கு பயந்து வெளியே தெரியாமல் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இந்த சட்ட அங்கீகாரத்துக்குப் பின்னால், வெளிப்படையாக வருவார்கள்.” என்கிறார்.

உண்மைதான். பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான பால் மாறுபாட்டை அங்கீகரிப்பதில்லை. சமூகம் இவர்களை அங்கீகரிக்க மறுப்பதால், தங்கள் பிள்ளைகளுக்கு நேர்ந்ததை ஓர் அவமானமென கருதி ஒதுக்கி வைப்பதையும் வீட்டைவிட்டு வெளியேற்றுவதை கட்டாயமாக திருமணம் செய்துவைப்பதையும் உட்பட பல தவறுகளைச் செய்கின்றனர். இந்த சட்ட அங்கீகாரம் ஒரு வகையில் இத்தகைய தவறுகளை குறைக்கவே செய்யும் என்கிறார் பிரியா பாபு.

திருநங்கைகள் தங்களுக்கு சரியான வேலை கிடைக்காமல் கடை கேட்பதில் (கடைகளில் பணம் கேட்பது) இறங்கிவிடுகிறார்கள். ஒரு சிலர் வேறு வழியின்றி பாலியல் தொழிலில் இறங்கிவிடுவதும் உண்டு. இத்தீர்ப்புக்குப் பின் கிடைத்துள்ள சமூக அங்கீகாரம் நிறுவனங்களின் நிர்வாகிகளின் மனதில் மாற்றங்களை ஏற்படுத்துமானால, அவர்களுக்கான பணி வாய்ப்புகள் அதிகரிக்கும் நிலை வரும். அப்போது கடை கேட்பது, பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்றவை பெருமளவில் குறையும். இதனால் இவர்களின் பொருளாதார நிலை மேம்படும். பெற்றோரும் இவர்களை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கான பக்குவத்தை இத்தீர்ப்பு இப்போதில்லாவிட்டாலும் சிறிது தாமதமாகவேனும் கொண்டு வரும் சாத்தியமுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

”திருநங்கைகளுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதால், காவல்துறை மற்றும் அதிகாரிகளால் இந்திய குற்றவியல் சட்டத்தின் சமபாலின உறவு தொடர்பான 377ஆவது பிரிவு அவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. அவர்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து உரிய சலுகைகள், வேலை வாய்ப்பு, கல்வி உள்ளிட்டவற்றில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மருத்துவரீதியாக அவர்களை பாலின சோதனைக்கு உட்படுத்து வது சட்ட விரோதம். தன்பாலின சேர்க்கையாளர்கள், இருபாலின சேர்க்கையாளர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. மூன்றாம் பாலினத்தவரின் பிரச்சினைகளை கவனிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அவர்களது பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். அவற்றை மத்திய, மாநில அரசுகள் ஆறு மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்ட மாற்றுப்பாலினத்தவருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர் ஐந்து பேர். பானு, லிவிங் ஸ்மைல் வித்யா, செல்வம், செல்வி, சொப்னா ஆகியோர் தொடர்ந்துள்ள வழக்கு குறித்து உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் மாற்றுப்பாலினத்தவரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (ஓபிசி) சேர்த்து இட ஒதுக்கீடு வழங்கவேண்டுமென கூறியுள்ளது. ஆனால் இவர்கள் தங்களை விளிம்பு நிலையிலுள்ள ஒடுக்கப்பட்ட சமூகமாக பாவித்து 3 சதவிகித இட ஒதுக்கீடு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வழங்கப்படவேண்டுமென கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கின்மீது இரு முறை விசாரணை நடந்துமுடிந்திருக்கிறது. இனி கோடை விடுமுறை முடிந்துதான் அடுத்த விசாரணை தொடங்கும் “எங்களுக்கு ஒரு நல்ல தீர்ப்பை சட்டம் வழங்குமென்று நாங்கள் நம்புகிறோம்” என்கிறார் வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான பானு.

உலகெங்கும் திருநங்கைகள் குறித்த புரிதல் வெகுவாக முன்னேற்றமடைந்திருக்கும் சூழலில் பாலின சிறுபான்மையினரான இவர்களுடைய நெடுங்கால போராட்ட வரலாற்றுப் பாதையில் இத்தீர்ப்பு ஒரு முக்கியமான மைல்கல். ஒரு முற்போக்கான சமுதாயத்தை நிறுவும் பாதையில் இத்தீர்ப்பு சக்கரமாக சுழன்று முன்னேற்றும் என்பதில் மாற்றுப் பாலினத்தோர் மகிழ்ச்சியில் உல்ளனர். ஒப்பீட்டளவில் தமிழகத்தில் இதுகுறித்த விழிப்புணர்வு அதிகம் என்கிற வகையில் தமிழ்நாடு பிற பகுதிகளைவிட இத்தீர்ப்புக்க்குப் பின் கூடுதலாக அரவணைக்குமென எதிர்ப்பார்க்கின்றனர்.

(நன்றி: இந்தியா டுடே)

Tuesday, April 22, 2014

வெற்றி வாய்க்குமா?


தமிழகத்தில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடும் இந்தத் தேர்தலை அக்கட்சிகள் மிக முக்கியமானதாகக் கருதுகின்றன. கட்சியின் தொண்டர்களிடம் மிகப்பெரிய உற்சாகம் காணப்படுவதை தேர்தல் களத்தில் காண முடிகிறது. பல ஆண்டுகளாகவே இடதுசாரிகள் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கட்சிகளுடன் இணைந்தே தேர்தலை சந்தித்திருக்கின்றன. இந்த முறை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அலட்சியப் போக்கு அவர்களை தனித்து முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளியது. தொங்கு நாடாளுமன்றம் அல்லது மாநிலக் கட்சிகளின் பங்கு அதிகமாக உள்ள நாடாளுமன்றம் அமையும்பட்சத்தில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலும்கூட அதற்கான மதிப்பு என்பது தனி. 

சி.பி.ஐ(எம்) 9 தொகுதிகளிலும், சி.பி.ஐ. 9 தொகுதிகளிலும் என இடதுசாரிகள் 18 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறார்கள். வெற்றிவாய்ப்பு குறித்து கேட்கும்போது திண்டுக்கல் எம்.எல்.ஏ.வான பாலபாரதி “முன்பு ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து வாக்கு சேகரிக்கச் செல்லும்போது இருந்ததற்கும் இப்போது எங்களுக்குக் கிடைக்கும் வரவேற்புக்கும் வித்தியாசம் உள்ளது. மிகுந்த உற்சாகமாக வரவேற்கிறார்கள்.” என்கிறார்.

நாகப்பட்டினம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பழனிச்சாமி போட்டியிடுகிறார். இத்தொகுதியை கைப்பற்றுவது என்பது கம்யூனிஸ்ட்டுகளின் கௌரவப் பிரச்சனை. ஏனெனில் நாகை தொகுதிக்குட்பட்ட பல கிராமங்களில் செங்கொடி இயக்கம் வேரூன்றி விவசாயிகளுடன் இணைந்து வேலைசெய்த இடம். சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்) ஆகிய இரு கட்சிகளுமே முழுமூச்சுடன் நாகையை எப்படியாவது தி.மு.க.வின் ஏ.கே.எஸ். விஜயனிடமிருந்து கைப்பற்ற முனைகின்றனர். பொதுத் தொகுதியான விருதுநகரில் வைகோவை எதிர்த்துப் போட்டியிடுகிறார் தலித் வேட்பாளரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளருமான சாமுவேல்ராஜன். இத்தொகுதியில் புதிய தமிழகம், ஆதி தமிழர் பேரவை ஆகியவை தி.மு.க. கூட்டணியை ஆதரித்தாலும் பல கிராமங்களில் சாமுவேலுக்கு வாக்களிப்பதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை சுட்டிக்காட்டுகிறார்கள் இடதுசாரிகள். சாமுவேலின் களப்பணி அவருக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறார்கள். 

“எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எங்கள் தரப்பு அரசியலை, மோடி ஒரு மாயை என்பதை கட்சிப் பிரச்சாரத்தில் மிகத் திவிரமாக மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறோம். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து பேசினோம். கூட்டணிக் கட்சிகளை நம்ப வைத்து இறுதிநேரத்தில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு அவற்றை ஏமாற்றியதைக் குறித்து எடுத்துச் சொல்கிறோம். நாங்கள் வெல்வோம்” என்கிறார் சி;பி.ஐ. கட்சியின் மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு. 

வடசென்னையில் போட்டியிடும் உ.வாசுகியின் வெற்றிக்காக இடதுசாரிகள் கடுமையான தேர்தல் வேலைகளைச் செய்கின்றனர். மயிலாடுதுறை தொகுதியில் சி.பி.ஐ (எம்.எல்) கட்சி போட்டியிடுகிறது. எல்லோரும் வியப்படையும்வண்ணம், இரண்டு இடதுசாரி கட்சிகளும் அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்கிறார்கள்.இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் இடதுசாரிகள் மத்தியில் உற்சாகமும் உத்வேகமும் இருந்தாலும் இவையெல்லாம் வாக்குகளை சேகரித்துக் கொடுக்குமா என்பது கேள்விக்குறி. ஒரு பிரச்சனை என்றால் மக்கள் பெரிய கட்சிகளிடம் செல்வதில்லை.கருத்தியல்ரீதியில் செயல்படும் கட்சிகளையே நம்புகின்றனர். ஆனால் அந்த நம்பிக்கை, ஊழலற்ற நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை போன்ற தகுதிகளைவைத்துத்தான் நம் மக்கள் வாக்களிக்கிறார்களா என்பது மிகப்பெரிய கேள்வி. பணத்துக்கு மயங்கும் , புகழைக்கண்டு, செல்வாக்கைக்கண்டு பிரமித்து பயப்படும் , ஆய்ந்தறியத் தெரியாதவர்கள் என்று வாக்காளர்கள் மிகத் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். சமூகத்தை இப்படி வைத்துக்கொண்டு இடதுசாரிகளுக்கு வாக்களிக்க வைப்பதென்பது இயலாத காரியம். பலருக்கு இந்த உண்மை தெரிந்தே உள்ளது “தனித்து நின்றோம். இத்தனை வாக்குகளைப் பெற்றோம்” என்கிற சுய பரிசீலனைக்கு இவை நிச்சயம் உதவும். மற்றபடி வெற்றிபெறுவோம் என்றெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை” என்கிறார் இடதுசாரியான ஒரு களப்பணியாளர். ஆக, 2014 பொதுத்தேர்தல் தமிழக இடதுசாரிகளுக்கு பிற கட்சிகளுடனான பலப்பரீட்சை அல்ல், அசலான சுய பலத்தை அறியும் பரீட்சை.

(நன்றி : இந்தியா டுடே)

Wednesday, April 16, 2014

உத்தபுரத்தில் மீண்டும் பதற்றம்


உத்தபுரத்தில் சாதிய பிரச்சனைகள் வருவது புதிதல்ல. தீண்டாமைச் சுவர் எழுப்பி தலித் மக்களையும் ஆதிக்க சாதியினரையும் பிரித்த பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்த அதே ஊரில் உள்ள் முத்தாலம்மன் கோயிலை பூட்டி அந்த ஊர் சாதி இந்துக்களான பிள்ளைமார் சமூகத்தினர் சாவியை எடுத்துக்கொண்டு ஊரைவிட்டு வெளியேறிவிட பிரச்சனை பெரிதாகி இருக்கிறது. பல ஆண்டுகளாகவே தலித் மக்களுக்கு உத்தபுரம் முத்தாலம்மன் கோயிலுக்குள் நுழைய தடை இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆலய நுழைவு போராட்டம் நடத்தியபோது இரு சமூகத்துக்கிடையே பேச்சுவார்த்தை நடந்து ஓர் ஒப்பந்தம் போடப்பட்டதென்றும் அந்த ஒப்பந்தத்தை இப்போது சாதி இந்துக்கள் மீறிவிட்டதாக தலித் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உத்தபுரம் தலித் மக்கள் தரப்பில் இந்தியா டுடேயிடம் பேசிய சங்கரலிங்கம்ஆர்.டி.., டி.எஸ்.பி முன்னிலையில் திருவிழாவை இரு சமூகத்தினரும் இணைந்து நடத்துவது என 2012ல் ஒப்பந்தம் போட்டோம். ஆனால் அவர்கள் தரப்பில் தன்னிச்சையாக முடிவெடுத்து ஏப்ரல் 8,9 தேதிகளில் நடத்துவதென்று முடிவு செய்தனர். அதை அறிந்த நாங்கள் எங்களை கோயிலில் நுழைந்து வழிபட அனுமதிக்கவேண்டும் என்றோம். இதற்கான பேச்சுவார்த்தை உத்தபுரம் காவல்நிலையத்தில் நடந்துகொண்டிருந்தபோதே ஆண்களும் பெண்களுமாக கும்பலாக வந்த அவர்கள் கற்களை வீசி எறிந்து தாக்கினர். வெளியே வந்தபோது என்னை சாதிப்பெயர் சொல்லித் திட்டி தாக்க வந்தனர். அன்றைக்கு மட்டும் போலீஸ் இல்லாவிட்டால் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கும்என்கிறார்.

இந்தப் பிரச்சனையடுத்து கோயிலைப் பூட்டிவிட்டு சாவியையும் எடுத்துக்கொண்டு ஆண்களில் பெரும்பான்மையானோர் ஊரைவிட்டு வெளியேறிவிட்டனர். பெண்கள் மட்டுமே ஊரில் உள்ளனர். காவல் நிலையத்தில் நடந்த தாக்குதலில் தாசில்தாரின் வாகனமும், ஒரு பெண் கான்ஸ்டபிளும் தாக்கப்பட்டதாக டி.எஸ்.பி. சிவக்குமார் இந்தியா டுடேயிடம் தெரிவித்தார். ”திருவிழா காலத்தில் மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் தலித் மக்களை கோயிலுக்குள் அனுமதிக்கவேண்டும் என்கிறது அரசியல் அமைப்புச் சட்டம். ஆனால் திருவிழாவின்போதும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை..பி.கோ. பிரிவு 307ன் கீழும், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தற்காகவும் முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளது. அன்றைக்குப் பிரச்சனையில் ஈடுபட்டதில் பல பெண்களும் இருப்பதால் அவர்களை கைது செய்வதில் நடைமுறை சிக்கல்களும் உள்ளன.” என்கிறார் டி.எஸ்.பி.

பதற்றம் நிறைந்த சூழலில் தேர்தல் வேறு வருவதால், உத்தபுரம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.



Tuesday, April 08, 2014

மற்றவை

(புதுதில்லியில் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த நிடோ கொல்லப்பட்டபோது எழுதப்பட்ட கவிதை இது)

The other
-Easterine Kaire, Nagaland

என் கால்களால் நடந்து பார்
ஒரு வாரம், ஒரு நாள், ஒரு சில மணிகள்
அந்நொடிகள் நீண்டவையென உணர்வாய்.
தோலை எரிக்கும் முறைத்த பார்வைகளை
உணர்வாய் உன் பின்னால்.
கேலியும் புறம்பேச்சுகளும்
இருளாய் உன்மீது கவிழும்
துர்செய்தி தாங்கிவரும் பறவைபோல்.

நேற்று கொன்றனர்
ஓர் இளைஞனை
வித்தியாசமாய் தென்பட்டதால்.
அவன் என்போன்ற
தோற்றம் கொண்டிருந்தவன் அல்லவா?

என் கால்களால்
நடந்து பார்த்து உணர்
அவனையொத்த தோலுடன் இருப்பதும்
அவனையொத்த விழிகளுடன் பார்ப்பதும்
எப்படி உள்ளதென உணர்வாய்

என் கால்களால் நடந்து பார்
ஒரு வாரம், ஒரு நாள், ஒரு சில மணிகள்
உணர்..அனுபவித்துப் பார்
அந்த அச்சம், அந்த நடுக்கம்,
அந்தப் பீதி
இவ்வாறுதானிருக்கும் மற்றவையாக இருப்பது

(தமிழில் : கவின் மலர்)
(நன்றி : இந்தியா டுடே)