Tuesday, March 30, 2010

தேசியவாதம் - இந்தியா மற்றும் இலங்கை உதாரணங்களினூடாக ஒரு அலசல்

எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ஆற்றிய உரை

(தமிழில் : கவின் மலர்)

தொன்மையான தேசங்களானாலும் புதிதாக தோன்றிய தேசங்களானாலும் தாங்கள் விரும்பியபடியெல்லாம் அரசியல் வடிவத்தைப் பெற்றிருக்கின்றன. எப்போதுமே எல்லைக்கோடுகளும், பிரச்சனைக்குரிய விரிவாக்கங்களும் நாடுகளில் உண்டு. எங்கே எல்லைக் கோடுகளும், பிரச்சனைக்குரிய விரிவாக்கங்களும் இல்லையோ அங்கே வேறுவிதமான சிக்கல்களும் தோன்ற வாய்ப்புண்டு. இணைத்துக் கொள்ளுதல், பிரிந்துபோதல், ஒன்றுபடுதல் என பல வகைகளில் தேசங்களின் எல்லைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அவை எல்லாவற்றையுமே தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகள்தான் என நிறுவ முயல்கின்றன. இதன்மூலம் மனம் போன போக்கில் தங்கள் நாடுகளின் வரைபடங்களை உருவாக்கி கொண்டதை மறைக்கின்றன. தங்கள் விருப்பத்திற்கும் உண்மையான அதிகார எல்லைக்கும் இடையேயான ஒப்பிட இயலாத வேறுபாடுதான் கற்பனாவாத தேசத்தைக் குறிக்கிறது.  இந்த உடோபிய தேசத்தை நிலைநாட்ட முயற்சிப்பது என்றுமே மாயையாகவும் அத்தனை எளிதாக புலப்படாத வன்முறை திட்டமாகவே இருக்கும்.

இந்த விஷயம் பற்றிப் பேசத் துவங்குவதற்கு முன் இந்தியா மற்றும் இலங்கை தொடர்பான இரண்டு செய்திகளைக் கூற விழைகிறேன். தேசத்திற்கான தீராத தாகத்தையும் தேசம் என்னும் வடிவத்தின் வன்முறையையும், இவ்விரு செய்திகளைக் கொண்டு நன்றாக விளங்கிக் கொள்ளலாம்.

இந்தியா தொடர்பானதை முதலில் பார்ப்போம். புதிதாக விடுதலை பெற்ற ஒரு நாட்டின் கதை இது. தங்கள் தேசத்தைப் பற்றிய எதிர்பார்ப்போடும் ஏக்கத்தோடும் எதிர்வரும் சவால்களோடும் போராடிக் கொண்டிருந்த ஒரு தேசத்தின் கதை இது. 1960இல் இந்தியா இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்று பதின்மூன்று ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில் மாநில கல்வி அமைச்சர்களின் மாநாடு நடந்தது. அந்த மாநாடு  தேசிய ஒருமைப்பாட்டிற்காக ஒரு குழு அமைக்கப்படவேண்டும் என பரிந்துரைத்தது. அந்தக் குழுவிற்கு ‘உணர்வுரீதியான ஒருமைப்பாட்டிற்கான குழு’ என்று பெயரிடப்பட்டது. கல்வியின் மூலம் உணர்வு ரீதியான தேச ஒருமைப்பாட்டை வளர்ப்பது எப்படி என்று ஆராய வேண்டும் என்பதே அக்குழுவிற்கு இடப்பட்ட கட்டளை.

இந்தக் கட்டளையை, இந்திய தேசம் என்று ஒன்று அதுவரை இல்லை என்பதையும், அதற்குப்பிறகு  தான் அப்படி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதன் ஒப்புகையாகவும் கொள்ளலாம்.

எப்படி ஒரு ஒருமைப்பாட்டுணர்வை அல்லது ஓரினத்தன்மையை உருவாக்குவது? இதுவே அந்தக் குழுவின் முன் விடைதேட வேண்டிய கேள்வியாக நின்றது. தேசங்கள் நிர்ணயிக்கப்பட்டவை என்று சொல்லப்பட்டாலும், இந்தக் கேள்வி அவை அப்படி அல்ல என்று பறைசாற்றுகின்றது. ஒரு தேசமாக உருவாவதற்கான சாத்தியங்கள் இருப்பதை சுட்டிக்காட்டி அந்தக் குழு கீழ்கண்டவாறு பிரகடனம் செய்கிறது.

“தேசியம் ஒரு மனோரீதியான வலுவான அடித்தளத்தைக் கொண்டது. ஒரே மாதிரியான அனுபவங்களைக் கொண்டிருக்கும் மக்களைச் சார்ந்தது. அவ்வனுபவங்களை ஒரே மாதிரியான கண்ணோட்டத்தில் அம்மக்கள் அணுக வேண்டும் என்பதே மிக முக்கியம். ஒரு அரசியல் நிகழ்வு  அல்லது வேறு ஒரு நிகழ்வு வெவ்வேறு குழுக்களுக்கு வெவ்வேறு அர்த்தத்தைக் கொடுக்கிறது என்றால் அந்த மக்கள் ஒருமைப்பாடில்லாமலும் கருத்து வேறுபாடுகளோடும்தான் தொடர்ந்து இருக்கமுடியும்.’’

கிடைக்கப்பெறும் அனுபவங்கள் எல்லோருக்கும் ஒரேமாதிரியானதாக இருப்பதும், அந்த அனுபவங்களினால் கிடைக்கும் புரிதலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒன்று போல இருப்பதும் ‘நாடு’ அல்லது ‘தேசம்’ என்பதற்கான அடிப்படை கோட்பாடாகக் கொள்ளலாம். ‘ஒன்று போல சிந்தி!.’ எனச் சொல்லலாம். தேசிய அடுக்கில், வேறுபாடு என்பதற்கு இடமே கிடையாது. இந்தியாவில் தேசிய கீதத்தை எந்த வகையில் பாட வேண்டும் என்று ஒருமைப்பாட்டுக் குழு பரிந்துரைத்தது. தேசியகீதத்தைப் பாடுவதில் ஒரு ஒழுங்கு இருக்கவேண்டும்; ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பாடக் கூடாதென பரிந்துரைத்தது. “முழுமையாக ஒரே மாதிரி தேசியகீதத்தை பாட வழி செய்யும் விதத்தில் அகில இந்திய வானொலியில் பதிவு செய்யப்பட்ட தேசிய கீதத்தையே வாய்ப்பாட்டாக பாடுவதானாலும் இசைக்கருவியால் இசைப்பதானாலும் பின்பற்ற வேண்டும்’’ என்றது குழு. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் சீரான தன்மை என்பதே இங்கு தேசிய ஒருமைப்பாட்டைக் குறிக்கிறது.

ஆக தேசம் என்பதற்கு ஓரினத்தன்மையும் ஒருமித்த தன்மையும்தான் அடிப்படை என்ற கருத்தை வலியுறுத்தியது குழு. அதனால் வேறுபாடுகளை தேசிய உருவாக்கத்திற்கான இடையூறாகவே மீண்டும் மீண்டும் குழு குறிப்பிட்டது. ஆகவே மற்றவரிடையே காணப்படும் பூகோள அடையாளம், சாதிய அடையாளம், மற்றும் மத அடையாளம் குறித்து திரும்பத் திரும்ப குழு பேசியது. இவ்வகை அடையாளங்கள் ஒரு புதிய இந்திய தேசத்தை உருவாக்குவதற்கான தடைக்கற்கள் என்றது. இந்த அடையாளங்களில், தேச உருவாக்கத்திற்கு பூகோள அடையாளம் எப்படி தடையாக இருக்கிறது என்பதை நான் கூறுகிறேன்.

உணர்வால் இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பதில் ஒருமைப்பாட்டுக் குழு முனைப்போடு இருந்த அதே சமயத்தில், தமிழ் பேசும் தென்பகுதி வேறு ஒரு அரசியலைப் பேசியது. இந்திய தேசியவாதிகள் விரும்பிய உணர்வை இந்தியா என்ற நாடு அவர்களுக்குத் தரவில்லை. அதன் அரசியல் எதிர்காலம் ‘திராவிட நாடு’ என்று சொல்லப்படும் தன் சொந்த தேசத்தில் உள்ளது என்ற நிலைப்பாட்டில் இருந்தது. இவ்வகை தனி அடையாளத்தை மறுதலிக்கும் வண்ணம், வடக்கு மற்றும் தென்பகுதிகள் எப்படி முற்காலத்தில் இணைந்திருந்தன என்பதை விளக்கும் வரலாற்றை உருவாக்கி முன்வைத்தது ஒருமைப்பாட்டுக் குழு.

“தென்பகுதியில் இன்றும் வணங்கப்படும் அகத்திய முனிவர் வடபகுதியிலிருந்துதான் விந்திய மலை வழியாக தென் பகுதிக்குச் சென்று, அங்கேயே தங்கிவிட்டவர். உபநிடதங்கள் வடக்கில் தோன்றியிருந்தாலும் அந்த வேதத்தத்துவங்களை கேரளாவின் சங்கராச்சாரியார்தான் உலகிற்கு வெளிச்சமிட்டு காண்பித்தவர் என்பது யாருக்குத்தான் தெரியாது? ராமர் மற்றும் கிருஷ்ணர் தொடர்பான அயோத்தி, மதுரா, பிருந்தாவனம் எல்லாம் வடபகுதியில் இருந்தாலும், ராமர் தென்பகுதி வழியாக இலங்கையை அடைந்தார் என்பது இந்துக்களின் நினைவில் அழுத்தமாக பதிந்துள்ளது அது மட்டுமல்லாமல் வழிபாட்டுக்கு உகந்த புனித தலங்களான காஞ்சியும் ராமேஸ்வரமும் இவைகளுக்கு நிகரான முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன.’’

புராணமும், வரலாறும் கலந்த இந்தக் கலவையை (அவ்வப்போது புராணத்தையே வரலாறு என்றும்) நம்புவதை உண்மை என்று வைத்துக்கொண்டாலும் துரதிஷ்டவசமாக, குழுவிற்கும், இந்திய நாட்டிற்கும் அவை ஒரே வகையான அனுபவங்களையோ அல்லது புரிதலையோ தரவில்லை. ராமனின் தென்னோக்கிய பயணத்தை எடுத்துக் கொள்வோம். தெற்குப் பகுதியில் உள்ளவர்களுக்கு இதிலே மாற்றுக்கருத்து உண்டு. செலிக் ஹாரிசன் இப்படிக் கூறுகிறார்.

“இந்துக்களின் புராணங்களை கேள்வி கேட்பதே திராவிடத்தின் அடிப்படையான வாதம். ஆரியர் அநீதியை நிலைநாட்ட இராமாயணமே பெருமையாகக் கொண்டாடப்பட்டு முன்வைக்கப்பட்டது. சீதையை கவர்ந்து சென்ற ராவணனைத் தேடி ராமனின் தென்னோக்கிய பயணம் என்பது, பூர்வகுடிகளாக இருந்த திராவிடர்களை வெற்றி கொள்ள வந்த ஆரியர்களின் முன்னேற்றத்தைக் குறிக்கும் குறியீட்டுக் கதை என்பதே திராவிட பிரச்சாரமாக இருக்கிறது.

தென்னகக் காடுகளில் ராமன் எதிர்த்துப் போரிடும் வானரப் படைகளை பார்ப்பனரல்லாத நிறைய தமிழர்கள் திராவிடர்களாகவே பார்க்கின்றனர். ஆகவே இந்த இதிகாசம் ஒரு இனத்தையே அவமானப்படுத்துகிறது.’’

வடக்கிற்கும் தெற்கிற்கும் முன்னர் இருந்த பிரச்சனைகளை புறந்தள்ளி விட்டுத்தான் இருபகுதிகளுக்குமான தோழமை உணர்வை வளர்க்க ஒருமைப்பாட்டுக்குழு எண்ணியது. அப்படி புறந்தள்ளுவது ஒரு நொடியேனும் தேசஒற்றுமையை மீட்க உதவும். ஆனால் புறந்தள்ளப்பட்ட பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கவே செய்யும்.

வடக்கு தெற்கு பகுதிகளின் ஒருமைப்பாட்டிற்கு குழு பல வகைகளில் செயல்பட்டது. இவர்களால் சொல்லப்பட்ட கதைகள் ஒற்றுமையை மீறி பகுதிகளுக்கிடையே அடுக்குகளை உருவாக்கியது. மேல் அடுக்கில் வடபகுதியும் கீழ் அடுக்கில் தென்பகுதியும் இருந்தன. ஒருமைப்பாட்டிற்காக இவர்கள் கூறிய அகத்தியர், உபநிடதங்கள், ராமர் பற்றி அனைத்துமே வடக்கில் இருந்து தென்பகுதிக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக இருந்தன. தெற்கின் வேலை அவைகளை அப்படியே ஏற்றுக் கொள்வதாகவே இருந்தது. பரிமாற்றம் போல முதல் பார்வையில் தெரிந்தவையெல்லாம் உற்று நோக்கினால் ஒருவழிப்பட்டதாய் இருந்தது. ஆக, ஒற்றுமைக்காக சொல்லப்பட்டவையே வேறுபாடுகளை மேல்கீழ் நிலைகளை உருவாக்கின.

“யாருக்குத்தான் தெரியாது?’’ என்று குழு கூறியது. கடைசியில் “இந்துக்களின் நினைவில் அழுத்தமாகப் பதிந்துள்ளது’’ என்று முடிகையில், குட்டு வெளிப்பட்டு விடுகிறது. பலவகை மதத்தார் இங்கே வாழ்கையில் இந்து மதத்தைச் சாராத பிற மதத்தினருக்கு இக்குழு காட்டும் ஒருமைப்பாட்டுணர்வில் என்ன பங்கு என்ற கேள்வி எழுகிறது. அவர்களுக்கு வேறு பல விஷயங்கள் நினைவில் அழுத்தமாகப் பதிந்திருக்கும். அந்தப் பதிவுகள் அங்கீகாரத்தைப் பெறும் அளவு தகுதியற்றவை என்றே கருதப்படுகிறது. ஒருமைப்பாட்டிற்கான அழைப்பு இவர்களுக்கு இல்லை என்பதையே இது காட்டுகிறது. ஆனாலும் உணர்வு ரீதியான ஒருமைப்பாட்டிற்காக இவ்வகை கதைகளையே அந்தக்குழு எடுத்தாண்டது. தேசத்தை உருவாக்கும் வேலை வேலைக்காகவில்லை.

தேச ஒருமைப்பாட்டிற்கான இது போன்ற அறைகூவல்கள் அப்போதைய சமகால வாழ்வியல் உண்மைகளோடு பொருந்தவில்லை. இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் பேசப்படும் வெவ்வேறு மொழிகளை கையாள்வதில் குழுவுக்கு சிக்கல் இருந்தது. “இந்தியாவில் பேசப்படும மொழிகளில் எந்த மொழியை பொதுவான தொடர்புக்கான மொழியாக பள்ளிகளில் கற்றுக் கொடுப்பது? எந்த மொழியை இம்மண்ணின் மொழியாக நினைத்து தகவல் பரிமாற்றத்திறகான பொது மொழியாக்குவது? இந்த கேள்விகள் இன்னமும் இருக்கினறன’’ என்றது குழு. தேசத்தின் உத்தேசமான ஒருமைத் தன்மையையும் ஓரின தன்மைக்கான தாகத்தையும் குறிக்கிறது “மண்ணின் மொழி’’ என்ற பதம். “இந்தி மொழி இந்தியாவில் பெரும்பகுதி மக்களால் பேசப்படும் மொழி. அதோடு, மற்ற பல மொழிகளும் இந்தியோடு பிணைக்கப்பட்டிருக்கின்றன. அப்படியே இந்தி மொழியும் அவைகளோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இந்தியை இந்தியாவின் பொதுமொழியாக்கினால் நாட்டு மக்களை நெருங்கி வரச்செய்து, ஒருமைப்பாட்டிற்கு உதவும்’’ என்றது குழு என்னதான் பெரும்பான்மை மக்கள் பேசுவதால் ஒரு மொழியை தேசியமொழியாக்க முடிவு செய்தாலும், நிறைய பணிகளை தேசம் செய்ய வேண்டி இருந்தது. இந்தி பேசாத பகுதிகளில் மக்களை இந்தி கற்க செய்வது குதிரைக் கொம்பாக இருந்தது. தேசம் கட்டும் வேலை முடிவடைவதாகத் தெரியவில்லை.

தேசம் என்னும் வடிவத்தின் ஒருமைத்தன்மையையும், அது உருவாக்கிய மாறாத எதிர்பார்ப்பும் பற்றி இவ்வளவு நேரம் கூறினேன். இனி... அப்படிப்பட்ட எதிர்பார்ப்பின் விளைவுகளைப் பற்றிப் பார்க்கலாம். இலங்கையை எடுத்துக்காட்டாக வைத்துக் கொள்ளலாம்.

1981, மே மாதம் 31ஆம் தேதி இரவு... இலங்கையின் வடபகுதியில் உள்ள தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாணம் நகர், தேசியவாத வஞ்சகத்தின் மிக மோசமான ஒரு கொடுமையைக் கண்டது. இலங்கை காவல்துறையால் யாழ்ப்பாண நூலகம் தாக்குதலுக்கு ஆளாகி தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. மறுநாள் காலை அந்த இடத்திற்கு நேரில் சென்று பார்த்தவர்களில் ஏ.வி.ஜே. சந்திரகாந்தனும் ஒருவர்.
கொதிப்போடு அவர் இப்படி எழுதுகிறார்.

“ஜூன் 1981, 1ஆம் திகதி, காலை 8 மணி அளவில் நூலக வளாகத்தின் நுழைவாயிலுக்கு வெகு அருகில் நின்று கொண்டிருந்தேன். என்னைப்போலவே பல்வேறு தொழில்புரியும், பெரியவர்கள், சிறியவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான தமிழர்கள் அங்கே அதிர்ச்சியோடு, நம்ப முடியாமலும், செய்வதறியாமலும் நிர்க்கதியாக நூலகக் கட்டிடத்திலிருந்து வெளியேறும் புகையையும், நூலகத்தின் உள்ளே இருந்த விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை தன் கோர நாக்குகளால் தின்று தீர்த்த தீ ஜூவாலையின் மிச்சமாக கனன்று கொண்டிருந்த தீக்கங்குகளையும் பார்த்தவாறு நின்றிருந்தோம். நூலகத்திற்கு தீ வைத்த சிங்கள ரிசர்வ் காவல்துறையினரோ சில நூறு அடி தொலைவில் யாழ்ப்பாண ஸ்டேடியத்தின் வெவிலியனில் அமர்ந்து எரிந்த நூலகத்தைப் பார்த்தவாறே இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.”

இந்த கோர சம்பவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அவர் மேலும் இப்படிக் கூறுகிறார்:

“இந்நூலகம் தமிழர்களின் கலாச்சாரப் பெருமையை பறைசாற்றுவதாக இருந்தாலும், அங்கே சிங்களம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலுமுள்ள அரிய நூல்களையும் ஓலைச்சுவடிகளையும் கொண்டிருந்தது. தமிழர், சிங்களர், இசுலாமியர் ஆகியோருக்கு படிப்பதற்கும் ஆய்வுக்குமான ஒரு பொது புனிதத்தலமாக விளங்கியது. முன்பொரு காலத்தில் காணப்பட்ட இன ஒற்றுமைக்கான அடையாளச் சின்னமாக திகழ்ந்து வந்தது யாழ்ப்பாண நூலகம்.

அதன் சுவர்களுக்கு நடுவே சிங்கள பௌத்தத்தில் தீவிரமான அனகரிகா தர்மபாலாவும் தமிழக இந்து சீர்திருத்தவாதி ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரும் தங்கள் எழுத்துக்கள் மூலம் நல்லிணக்கத்தோடு அருகருகே வாழ்ந்திருந்தனர். எத்தனையோ எழுத்தாளர்களும், அரசியல்வாதிகளும், மத மறுமலர்ச்சியாளர்களும், சட்டத்தை உருவாக்கியவர்களும் தமிழ் கூட்டாட்சியாளர்களும் சிங்கள தேசியவாதிகளும், அவர்கள் எவ்வளவோ கடுமையாக தங்கள் வாழ்நாளில் முரண்பட்டிருந்தாலும் கூட, நூலகத்தில் அழகாக, சீராக அமைக்கப்பட்ட தேக்குமர அலமாரிகளில் மட்டும் தான் அமைதியாய் சாந்தமாய் இருந்தனர். ஆனால் இப்போது... அவர்களோடு சேர்த்து நல்லிணக்கத்திற்கான குறைந்தபட்ச நம்பிக்கையும் சாம்பலாக்கப்பட்டு விட்டன.’’

சந்திரகாந்தனின் பதிவில் தெரியும் திரிபுகளில் ஒரு சிலருக்கு மாறுபாடு இருக்கலாம். உதாரணமாக ஆறுமுக நாவலர் சமூக சீர்திருத்தவாதி என எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் அல்ல. வெகு சிலரால் அவர் சைவப் பிரிவைச் சேர்நத்வராகத்தான் பார்க்கப்பட்டிருக்கிறார். ஆனாலும் சந்திரகாந்தனின் பதிவிலுள்ள முக்கியத்துவத்தையும், குறியீட்டு உள்நோக்கத்தையும் கணக்கில் கொள்ளாமல் இருக்க இயலாது. கடந்த காலத்தில் எழுப்பப்பட்ட பல்வேறு குரல்களின் பிரதிநிதித்துவமாகவும் எதிர்காலப் பார்வையாகவும் வேற்றுமைகளுக்கும் இடமளிக்கும் ஒரு மாகாணமாகவும் நூலகம் திகழ்ந்தது. ஒருமித்த தன்மைக்கு பதிலாக முரண்கூறுகளைக் கொண்ட ஒரு முழுமையடையாத தேசத்தையே இவ்வேறுபாடுகள் காட்டுகின்றன. ஆகவே தேசியவாத தாகத்திற்கு இந்த வேறுபாடுகளும் அடிப்படையாய் அமைகின்றன. தேசம் ஓரினத்தன்மையை அடைவதற்காக ஆறுமுக நாவலரோடு ஒன்றாய் நிற்கும் அனகரிகா தர்மபாலா போன்ற தன்பக்க நண்பர்களையே கூட இழக்கத் தயங்காது.

II

இவ்விரு கதைகளுமே நமக்கு ஒரு விஷயத்தை புரிய வைக்கின்றன. எப்போதுமே ஓரினத்தன்மைக்கான ஆசையுமாய், அதே சமயத்தில், நிஜத்தில் இருந்து கொண்டிருக்கும் வேறுபாடுகளுமாய் தேசியவாதத்தில் ஒரு ஊசலாட்டம் இருந்து கொண்டே இருக்கின்றது. இதற்குத் தீர்வு என்று எதுவுமில்லை. இந்நிலையில் தேசவடிவத்தின் தவிர்க்க இயலாததும் அதனோடு ஒன்றாகிப் போனதுமான வன்முறையைப் பற்றிப் பார்ப்போம்.

தேசம் என்பது எல்லோருக்கும் பொதுவானதாகக் கூறப்பட்டாலும், அது ஒரு சார்பானதாகவே இருக்கும். அதுவே அதன் தன்மை. அதாவது தேசத்தைக் கட்டும் முயற்சியில் அனைத்துப் பகுதிகளுக்குமான பிரதிநிதி என்று ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் காட்டிக்கொள்ளும். இந்தியாவை எடுத்துக் கொண்டால், இந்தி மாநிலங்களே இந்தியாவின் இதயமாக முன்வைக்கப்படுகிறது. ஆகவே இந்தி மொழியே மண்ணின் மொழியாக தேசிய பெருமையாக முன்வைக்கப்படுகிறது. இலங்கையிலும்  இதே நிலைதான். சிங்கள ஒருமைப்பாட்டாளர்கள் என்று கார்த்திகேசு சிவதம்பியால் வர்ணிக்கப்படுபவர்களைப் பற்றி அவர் இப்படி எழுதுகிறார். “இலங்கையின் கலாச்சாரத்தை பேசுகையில் அவர்கள் பிற சமூகங்களின் வரலாற்றை மறுதலிப்பது மட்டுமல்லமல், பிற சமூகத்தினரையோ, அவர்களின் பண்பாட்டையோ, கலாச்சாரத்தையோ அவர்களின் வாழ்முறைகளையோ இலங்கையின் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொள்வதில்லை. இலங்கையின் இசை, நடனம் அல்லது இலக்கியம் என்ற பேச்சு வரும்போதெல்லாம் அது சிங்கள இசை, நடனம், இலக்கியம் என்றானது. அதில் தமிழ் இசைக்கோ, நடனத்திற்கோ, இலக்கியத்திற்கோ இடமில்லை’’ என்கிறார். இந்த வகை பிரதிநிதித்துவங்கள்.. அது இந்தியாவில் இந்தி மொழியாகட்டும் அல்லது இலங்கையின் சிங்கள மொழியாகட்டும் இவை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சுருக்கமாக ஒரு சார்பாக தேசத்தைக் கட்டும் வேலையில் இறங்கினால் அது எப்போதுமே பாதுகாப்பற்றது. ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் விடுபட்டுப் போனவர்களின் எதிர்ப்பு வெளிப்படும்.

பலவற்றின் பிரதிநிதியாக ஒன்றை மட்டும் நிறுவ முயலும்போது பல்வேறு விளைவுகள் ஏற்படும். “ஜனநாயகம் சாத்தியமாயிருக்கிறது என்றால், அங்கே ஒருமைக்குத் தேவைப்படும் அமைப்பும், தேவைப்படும்  உள்ளடக்கமும் இல்லை என்று அர்த்தம். தங்களை பெரும்பான்மையினராகக் காட்டிக்கொள்ள பல்வேறு குழுக்களும் தங்கள் தனித்துவத்தை இழக்க போட்டியிடுகின்றன என்று அர்த்தம். சொல்லப்போனால் ஜனநாயகத்தின் மிக முக்கியமான அம்சமே பல்வேறு அடையாளங்களுக்கிடையேயான போட்டியே, ஆனால் இது தேசத்தைக் கட்டுவதில் சிக்கலை உண்டாக்கும். ஏனெனில் தேசம் என்பதன் அடிப்படையே ஒரே தன்மையும், ஓரினத்தன்மையுமே. இலங்கை தமிழர்கள் சிங்களர்களாக மாறவேண்டும் என இலங்கை அரசு எதிர்பார்க்கிறது’’ என்கிறார் சிவதம்பி.

சிவதம்பி கூறுவது சரியே. இலங்கை அரசாங்கம் ஓரளவிற்கு இதை சாதித்துமிருக்கிறது. உதாரணமாக 1983 தமிழர்களுக்கெதிரான கலவரங்களில் தப்பித்து நியூஸிலாந்துக்கு புலம் பெயர்ந்த கமலாவை எடுத்துக் கொள்வோம்.

நியூஸிலாந்தில் ஒருமுறை அவர்கள் ஒரு கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். கமலாவின் மகள் அவரை “அம்மா’’ என்றழைக்க, அவளுடைய அண்ணனோ, “வீட்டிற்கு வெளியே ‘அம்மா’ என்று அழைக்காதே. ’அம்மி’ என்றுதான் அம்மாவைக் கூப்பிட வேண்டும் என நான் ஏற்கனவே உனக்குச் சொல்லி இருக்கிறேன்’’ என்றான். ஆக அவன், தாயைக் குறிக்கும் சிங்களச் சொல்லை ஏற்றுக் கொண்டான். அந்த சொல் மட்டுமல்ல சிங்களர்களின் பல வழிமுறைகளையும் அவன் ஏற்றுக் கொண்டுள்ளான். ஏனெனில் அப்போது தான் தமிழனாய் இருப்பதால் உண்டாகும் மோசமான விளைவுகளிலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

வன்முறை மீதான அச்சமே கமலாவின் குடும்பத்தை சிங்கள வழிமுறைகளை ஏற்றுக் கொள்ளத் தூண்டியது. அதுவும் பொது இடத்தில் மட்டுமே! தன்னை சிங்களத்தனமாக பாசாங்காகக் காட்டிக் கொள்வதால், அதை ஏற்றுக் கொண்டதாக அர்த்தமல்ல. மாறாக அவனின் தமிழ் தன்மையை மேலும் இது வலியுறுத்துவதாகவே இருக்கிறது. ஆக மறைவான வன்முறையைக் கொண்டதாக இருந்தாலும் ஓரினத்தன்மையான ஒரு கற்பனாவாத தேசத்திற்கான ஆசை இருந்து கொண்டே இருக்கிறது. “இழப்புகளின் விளிம்பில்தான் எப்போதும் தேசம் இருக்கிறது’’ என்று வில்லியம் கான்னாலியின் அற்புதமான கூற்று ஒன்று இருக்கிறது.
.
எப்போதுமே இழப்புகளின் விளிம்பிலேயே தேசம் இருப்பதால், தன்னை மீண்டும் மீண்டும் ஸ்திரப்படுத்திக் கொள்ளவே விழைகிறது. ஆனால் எதிர்மறையாக இப்படி மீண்டும் மீண்டும் ஸ்திரப்படுத்துவதற்கும் கூட தேசிய இனம் தவிர்த்த ‘மற்றவை’ தேவைப்படுகிறது. இந்து தேசத்திற்கு இஸ்லாமியர்கள் போல, சிங்களதேசத்திற்கு தமிழர்கள்போல ‘மற்றவை’ தேவைப்படுகிறது. “தேசத்திற்கும், மற்ற தேசியவாத இனப்பிரிவுகளுக்கிடையேயான சிக்கல்கள் இவை இரண்டின் வளர்ச்சிக்கும் பாதகமாகவே அமையும்’’ என சங்கரன் கிருஷ்ணா கூறியதுபோல் தேச வடிவம் மற்ற இனங்களோடு பிணைக்கப்பட்டிருந்தாலும், பெறப்படாமலேயே இருக்கும் ஓரினத்தன்மையை விரும்புகிறது. தேச வடிவம் அதன் ஒருமைத்தன்மையை தக்க வைக்க இரண்டு வகை குறுக்கீடுகளைச் செய்கிறது.

வில்லியம் கான்னாலி கூறியபடி முதல் வகை தேசியவாத குறுக்கீட்டை ஒத்துப்போகும் உத்தி எனலாம். அதாவது தேசவடிவம் தனக்கு அடங்க மறுக்கும் குழுக்களோடு ஒத்துப்போவது போல் கருத்து தெரிவித்து அதன் ஒருமைத்தன்மையை நிலைநாட்டும் உத்தி. அதனால்தான் இநதியாவில் ஒருமைப்பாட்டுக்குழு இந்தியை தேசிய மொழியாக்கும்படி வற்புறுத்துவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. தங்களுக்கு இதனால் நன்மையில்லாமல் போனாலும் இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொண்ட இந்தி பேசாத மக்களை போற்றவும் செய்கிறது. “ஒரு நல்ல பொது நோக்கிற்காக இந்தி பேசாத நிறைய மக்கள் தங்கள் சொந்த விருப்பங்களை விட்டுக்கொடுத்து இந்தியை தேசியமொழியாக ஏற்றுக் கொள்வது நல்ல அறிகுறி. இந்தியை தாய்மொழியாய்க் கொண்டவர்களுக்கு ஏற்படும் நன்மைகளோடு ஒப்பிடுகையில் இந்தி பேசாத மக்களுக்கு இதனால் நன்மைகள் விளையப் போவதில்லை; சிரமங்களே அதிகம் என்ற போதிலும் அவர்கள் மனமுவந்து இந்தியை ஏற்றுக் கொள்கிறார்கள்’’ என்று ஏற்றுக் கொண்ட மக்களை புகழ்கிறது ஒருமைப்பாட்டுக் குழு அறிக்கை. 1983இல் ஜெயவர்த்தனே கொண்டு வந்த இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில 6ஆவது திருத்தத்தில் இதே போன்ற யுத்தி கையாளப்பட்டது. இலங்கை பாராளுமன்றத்திலும், பொது அலுவல்களிலும் இருக்கும் தமிழ் உறுப்பினர்களையும் “ஒன்றுபட்ட இலங்கை’’க்காக உறுதிமொழி ஏற்கச் சொன்னது. சுருக்கமாகச் சொல்வதானால் தேசிய வரிசையில் இந்தியாவின் தமிழ் மக்கள் இந்தி பேசும் மக்களாகவும், இலங்கையின் தமிழ் மக்கள் இலங்கை சிங்கள மக்களாகவும் மாற நிர்பந்திக்கப்படுகிறார்கள். இந்த ஒத்துப்போகும் யுக்தியால் கிடைக்கும் வெற்றிக்கு அடிப்படையாக சுயவெறுப்பும், தேசியவாத வன்முறையுமே இருக்கின்றன. வில்லியம் கன்னாலி தனது குறிப்பில் “ஒரு பக்கம் பார்த்தால் இப்படி ஒத்துப்போகும் உத்தி மிக வாஞ்சையானதாகத் தெரியும். ஆனால் மறுபக்கம் பார்க்கையில் வலிநிறைந்த வஞ்சகமான அதேசமயம் சட்டரீதியான பிரித்தாளும் சூழ்ச்சியாகவும் தெரியும்’’ எனக் கூறுவது உண்மையே.

இந்த ஒத்துப்போகும் உத்தி வேலைக்காகாத போது (பெரும்பாலான சமயங்களில் அப்படித்தான்) தண்டனைகள் மிகுந்த, வன்முறையாலே தேசத்தோடு ஒத்துப்போகாத சக்திகளை அடக்கி அதன் இறையாண்மையை தேசம் நிலைநாட்டும். தமிழர் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கில் இலங்கை அரசின் வன்முறையும், வடகிழக்கு இந்தியாவிலும் காஷ்மீரிலும் இந்திய அரசின் வன்முறையும் இவற்றிற்கு உதாரணங்கள்.

இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், இப்படிப்பட்ட அரசு சார்ந்த வன்முறைகள் வன்முறையாகப் பார்க்கப்படுவதில்லை. ஏனெனில் தேசவடிவத்தின் ஒரே அரசியல் ஏற்பாடாக இவ்வன்முறையை தேசத்தின் இயல்பு என ஏற்றுக் கொண்டிருக்கிறது. உலகம். ஆனால் அது இயல்பு அல்ல. திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. சமீபத்தில் இலங்கையின் ‘தி சண்டே டைம்ஸ்’ பத்திரிகையின் தலையங்கம் இதற்கொரு எடுத்துக்காட்டு. கொழும்பு விமான நிலையத்தின் மீதான வான்வழித் தாக்குதல் பற்றிக் குறிப்பிடுகையில் “இரண்டாம் உலகப் போரில், ஏப்ரல் 5, 1942 அன்று இலங்கை மேல் மோசமான வான்வழித்தாக்குதல் நடந்தது. அதன் பின்னர் கடந்த ஞாயிறு இரவு அது போன்றதொரு தாக்குதல் நிகழ்ந்துள்ளது’’ என்கிறது. “தி சன்டே டைம்ஸ்’’ பத்திரிகை கொண்டிருக்கும் சிறந்த தேசிய பாரம்பரியத்தின் உதவியோடு வரலாற்றை தவறாக்குகிறது. அந்த பத்திரிகையின் பார்வையில், இலங்கை அரசால் தமிழர் பகுதிகளான கிழக்கு மாகாணத்தில் மீண்டும் மீண்டும் நடத்தப்படும் குண்டு வீச்சுகள் எல்லாம் கண்ணில் படவே இல்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தேசத்தின் பெயரால் நடத்தப்படும் அரசாங்கத்தின் வன்முறை என்பது வன்முறையல்ல மாறாக தேசத்தை நிர்மாணிப்பதில் அதிகாரம் கொண்டவர்களின் அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கை என்றாகிறது.

சுருக்கமாகச் சொன்னால் தேச வடிவத்தின் இந்த முரண்பட்ட தன்மை, ஓரினத்தன்மைக்கான ஆசையின் காரணமாக எழுந்ததாக இருந்தாலும், ஒன்றிணைக்க வேண்டிய வேறுபாடுகளைக் கொண்டதாகவே இன்னும் இருக்கிறது. ஆகவே பழிவாங்கும் பாதையில் தேசம் செல்வது தவிர்க்க முடியாததாகிறது. இதனால்தான் அர்ஜுன் அப்பாதுரை இப்படிக் கூறுகிறார்.

‘சிறியவைகளின் பால் உள்ள அச்சம்’ முக்கியத்துவம் பெறுகிறது என்கிறார். சிறுபான்மை பெரும்பான்மை பற்றி கூறும்போது அவர் இப்படிக் கூறுகிறார்.
“எண்ணிக்கையில் சிறுபான்மையினராக உள்ளவர்கள் கறைபடியாத தேசத்தின் மாசுமருவற்ற ஒரே தேசிய இனம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் பெரும்பான்மையோரின் நிலைக்கும் தங்களது நிலைக்குமான சின்ன இடைவெளியை சுட்டிக்காட்டும்போது பெரும்பான்மை இனம் சிறுபான்மையினத்தை சூறையாடி அழிக்கும் அளவிற்குச் செல்கிறது. இந்த சமஉரிமையற்ற தன்மை பெரும்பான்மையினரை சிறுபான்மையினர் மீதான வன்முறையாளர்களாக மாற்றுகிறது.’’
ஆக, சிறுபான்மையினர் தேசத்திற்கு அச்சுறுத்தலாக இருக்க வேண்டுமென்பதில்லை. தேசத்தில் அவர்களுடைய இருப்பே பெரும்பான்மையினருக்கு பிரச்சனையாக இருக்கிறது.

ஒரு இனத்தையே முற்றிலுமாக ஒழித்து அழித்துவிட்டாலும் கூட (மிக மிக அரிதானதும், சாத்தியமில்லாததும்) அது ஒரு முழுமையான குறைபாடற்ற மாசுபடாத தேசியத்தை உருவாக்கி விடாது. ஏனெனில் இதுபோன்ற சிறுபான்மை அடையாளங்கள் இன்னும் தேசத்தில் உள்ளனவா என்பதை அறுதியிட்டுக் கூறமுடியாது. அவர்கள் இன்னும் கேள்வி கேட்கத் தொடங்கவில்லை என வேண்டுமானால் கூறலாம். எப்போது வேண்டுமானாலும் சம உரிமைக்காகப் போராடத் துவங்கலாம். அதனால்தான் தேசவடிவத்தின் தீவிர ஆதரவாளராகிய எர்னஸ்ட் ரேனன்கூட இப்படிக் கூறுகிறார்.

“தேசத்தின் இருத்தல் என்பது அன்றாடக் கருத்துக்கணிப்புக்கு உட்பட்டது’’ என்கிறார். இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் சமீபமாகக் கொண்டாடப்படும் ‘காதலர் தினம்’ கூட தேசத்திற்கு எதிரானது என்று கூறப்பட்டு அதுவே கூட வன்முறைக்கு வித்திடலாம். ஏனெனில் இந்து தேசியவாதிகள் காதலர் தினக் கொண்டாட்டங்கள் இந்தியாவிற்கு எதிரானவை; அவை அந்நியக் கலாச்சாரம் என தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்கள். ஆக அந்நிய கலாச்சாரம் தேசக்கலாச்சாரத்திற்கும்,அதன் முழுமைக்கும் குறுக்கே நிற்கிறது. ஆகவே தேசங்கள் எப்போதும் இழப்பின் விளிம்பில் நிற்கத் தயாரில்லை. ஆகவே அவை வன்முறையாய் மாறுகின்றன.

III

தேசத்தைக் கட்டும் வேலையை நாம் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பரீட்சித்துப் பாத்துக்கொண்டே இருக்கிறோம்.  நம் காலத்தில் சாத்தியமான அரசியல் ஏற்பாடாக தேச வடிவத்தை உருவாக்குவது என்பது நடக்காத காரியம்.  தேச வடிவத்திற்கு அப்பாற்பட்டு ஒரு புதிய பன்முகத்தன்மையுள்ள அரசியல் வடிவம் நாம் கனவு காணும் அரசியலுக்குத் தேவைப்படுகிறது.  இந்த அளவில் கூறமுடிந்த என்னால் அந்த புதிய அரசியல் வடிவம் எப்படி இருக்கும் என்பதை அறுதியிட்டு கூறமுடியவில்லை.  அது எதிர்காலத்தின் அதிகார எல்லைக்குட்பட்டது.  ஆனால் கடந்த காலங்களில் தேசியவாதத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை வைத்துக் கொண்டு வருங்காலத்தில் புதிய அரசியல் ஏற்பாடு எப்படி இருக்கும் என ஓரளவுக்கு கணிக்க முடிகிறது.

தேசியவாதத்தை விமர்சனம் செய்த ரவீந்திரநாத் தாகூரையும் பெரியார் ஈ.வெ.ராமசாமியையும் பற்றி சற்று பார்க்கலாம்.  இவர்களில் தாகூரின் கவிதை தேசிய கீதமாயிற்று.  இருபதாம் நூற்றாண்டில் தமிழ் பேசிய தென்னக மக்களின் அரசியல் பொது புத்தியில் தீவிரமான மாற்றங்களைக் கொண்டு வந்தவர்  பெரியார்.  எல்லைகளற்ற தேசம் பற்றிய கற்பனைக்குப் பின்னர் எழும்பிய ஒழுக்கம் சார்ந்ததாகவே இவர்களின் விமர்சனங்கள் இருந்தன.

தாகூர், பெரியார் இருவருமே தேசியத்திற்கு தங்கள் பங்கை ஆற்றி இருந்திருக்கின்றனர்.  1905இல் ஏற்பட்ட வங்கப்பிரிவினைக்குப் பின் தாகூர் சுதேசி இயக்கத்தை பிரச்சாரம் செய்து அந்நியப்பொருட்களை நிராகரித்தார்.  பெரியார் 1920ல் காங்கிர கட்சியில் இணைந்தார்.  5 வருடங்களுக்குப் பின்னர் 1925 இல் கட்சியில் இருந்து வெளியேறினார்.  தமிழகத்தில் ஒத்துழையாமை இயக்கத்தை வலுப்படுத்தியதில் சிறந்த பங்காற்றினார் பெரியார்.  முதலாம் உலகப் போரில் ஏற்பட்ட பேரழிவும், சூறையாடலும் தாகூரை தேசியவாதத்திற்கு எதிரானவராக ஆக்கியது.  பெரியார் தேசியவாதத்தை ஒரு கட்டத்தில் கைவிட்டார்.  அதன்பின் ஒரு போதும் தேசியவாதத்திற்கு ஆதரவாக அவர் இல்லை.  தேசிய ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் என காரணம் கூறி இந்திய தேசிய காங்கிர சாதிய ஒடுக்குமுறையை கேள்வி கேட்க மறுத்தது.  இதனால் பெரியார் தேசியவாதத்தைக் கைவிட்டார்.  முழுதாக உருவாகிவிட்ட தேசமானாலும் சரி, அல்லது உருவாகிக் கொண்டிருக்கும் தேசமானாலும் சரி, வேறுபாடுகளை எப்படி கையாள்கிறது என்பதே தாகூர், பெரியார் இருவரின் கவலையாக இருந்தது.   தேசியவாதத்தின்பால் எந்த மயக்கமும் கொண்டிராத தாகூரின் தன்மை ஏறக்குறைய நிபந்தனையற்றது.

“மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே, மயக்கம் கொள்ளச் செய்யும் சக்தி தேசம் என்ற கருத்தாக்கமே.  தேசத்தின் நீதி பிறழ்வு பட்டாலும் கூட அதைப் பற்றி அறியாமல், மிக மோசமான முறையில், தன்னலத்தோடு கூடிய தேசத்தின் நிகழ்ச்சிநிரலை நடத்துவது என்று தேச வெளிச்சத்தின் பிடியில் இருக்கும் மக்கள் முடிவு செய்ய நேரும்” என்கிறார் தாகூர்.  ஆக தேசியவாதம் மயக்கும் திறன் கொண்டது; தன்னலமே அதற்கு அடிப்படை. தேசியவாதத்தினால் நன்மை ஏதுமில்லை என தாகூர் நினைத்திருப்பாரேயானால் அதற்கு தேசியவாதத்தின் அதிகார கேட்கையே காரணமாய் இருந்திருக்கும்.  எந்த தேசியவாதத் திட்டத்திகும் அதிகார வேட்கையே மையமாக இருக்கும்.  “தேசியவாதம் அதிகாரத்தின் நிறுவனத்தை உருவாக்குகிறது.  அது ஆன்மீக தத்துவார்த்தத்தை உருவாக்குவதில்லை.  தான் தேடுகிற இரையையும் தன்னகத்தே வைத்துக்கொண்டிருக்கும் உயிரினங்களின் கலவை போல தேசியவாதம் திகழ்கிறது” என்கிறார் தாகூர்.   தேச வடிவத்தை விடுதலையின் சின்னமாக அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.  காலனியாதிக்கத்தில் இருந்து தேசத்தை மீட்டெடுக்கும் சுதந்திர வேட்கையைக் கூட இதற்கு போதுமானதில்லை என்றார்.  “இன்றைய காலகட்டத்தில் அரசியல் சுதந்திரம் பெற்றவர்கள் எல்லோரும் விடுதலை பெற்றுவிடவில்லை என்பதை நாம் மறக்கக் கூடாது.  அவர்கள் அதிகாரமிகுந்தவர்கள்.  அவ்வளவுதான்!  சுதந்திரம் என்ற புனைவின் கீழ் ‘பெரிய பெரிய அடிமை நிறுவனங்களை’ அவர்களுக்குள்ளே இருந்த சுதந்திரத்திற்கான கட்டற்ற ஆவல் உருவாக்கியது”.   ‘பெரிய அடிமை நிறுவனங்கள்’ என அவர் குறிப்பிடுவது தேசத்தின் அரசு மற்றும் அதன் நடைமுறைகளையே என  நான் நினைக்கிறேன்.

கவிஞரின் உணர்ச்சி வசப்படும் தன்மையிலில்லாது மக்களின் மனிதராக இருந்த பெரியார் ‘ஆன்மிக தத்துவார்த்தத்தைப்’ பற்றிப் பேசவில்லை.  தீவிர பகுத்தறிவாளராக இருந்ததால் ‘ஆன்மிகம்’ அவருக்கு ஒத்துவராத ஒன்றாக இருந்திருக்கக்கூடும்.  சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகள் எவ்வாறு தேசத்தின் அதிகார இயக்கவியலை புரிந்து கொண்டனவோ அதைப்போலவே பெரியாரும் வெளிப்படுத்தினார்.   சுயாட்சி அல்லது சுயராஜ்யம் என்ற இந்திய தேசியவாதிகளின் கோரிக்கையை பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.

“பார்ப்பனர்களின் சுயராஜ்யம் பறையர்களுக்கு உண்டா?  பூனையின் சுயராஜ்யம் எலிக்கு உண்டா?  நிலச்சுவான்தார்களின் சுயராஜ்யம் குடியானவர்களுக்கு -  விவசாயிகளுக்கு உண்டா? உடைமையாளர்களின் சுயராஜ்யம் தொழிலாளிகளுக்கு உண்டா?” என்கிறார்.  சுருக்கமாகச் சொல்வதானால் பெரியாரின் இந்தக் கேள்வி ரவீந்திரநாத் தாகூர் கூறிய விடுதலை என்ற புனைவின் கீழ் அடிமைகளாக இருப்பது என்பதையே உணர்த்துகிறது.

பெரியாரின் கேள்விகளைப் பார்ப்போம்.  அதிகாரத்தில் உள்ள அல்லது அதிகாரத்தில் இல்லாத பல்வேறு வகைப்பட்ட அடையாளங்கள் தேச வெளிக்குள் இருக்கிறதென்பதால், தேசத்தின் ஒருமைத்தன்மை, ஓரினத்தன்மை ஆகியவற்றை முதலாவதாக கேள்விக்குள்ளாக்குகிறார்.  இரண்டாதாக தேசத்தின் சுயாட்சி என்பது சாத்தியமற்ற அரசியல் திட்டம் என்றார்.   ஏனெனில் எண்ணற்ற படிநிலைகளும், அதிகார மட்டத்திற்கும் கீழ் மட்டத்திற்கும் இடையேயான  உறவுகளும் இருப்பதால் சுயாட்சி சாத்தியமற்றது என்கிறார்.  மூன்றாவதாக அதிகார மையங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் போட்டியிடுவதற்கான வெளியை உருவாக்குவதற்கான வகையில், அரசியல் வடிவம் இருக்க வேண்டும் என்றார்.

வரலாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளை மட்டுமே தேச அதிகாரத்திற்கான அடிப்படை என தேசியவாதம் கொண்டாடுகிறது.  அதே வேளையில், தாகூரும், பெரியாரும் தேசம் என்ற சுமையை விட்டு விடுதலையாகி நின்று, தேசத்தின் குறுகிய எல்லைகளின் வரம்புகளை மீற எத்தனித்தனர்.  அவர்கள் இருவருமே பரந்த இவ்வுலகின் அறிவுசார் மற்றும் அரசியல்சார்ந்த விஷயங்களை தேச எல்லைக்கப்பால் தேடினர்.  அவர்களைப் பொறுத்தவரை எல்லைகள் ஒரு பொருட்டல்ல.  ஆனால் கருத்துக்களை பொருட்படுத்தினர்.  காலனியாதிக்க எதிர்ப்புணர்வோடு மக்கள் ஒன்று திரண்டிருந்த சமயத்தில் இந்தியாவில் காலனி ஆதிக்கம் குறித்து தாகூர் இப்படி எழுதுகிறார்.  “, மேற்கின் ஆற்றலுக்கும், மேற்கின் நாடுகளுக்கும் இடையே இந்தியாவில் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்” என்கிறார்.  அவரைப் பொருத்தவரை மேற்கின் ஆற்றலை ஒத்துக்கொள்கிறார்.  ஆனால் மேலை நாடுகளை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்.  அதைப் போலவே “ஆட்சியாளர்கள் கடவுளுக்கு சமம்; மக்கள் ஆட்சியாளர்களின் ஆதிக்கத்திற்கு அடங்கி நடக்க வேண்டும் என்பது ‘இந்து இந்தியா’ வின் நம்பிக்கை. ஆட்சியாளர்கள் மக்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்.  ஆட்சியாளர்கள் மக்களின் வேலைக்காரர்கள் என பாடம் சொல்லிக் கொடுத்தது ‘ஆங்கிலேயரின் இந்தியா’” என்கிறார் பெரியார்.  தாகூரைப் போலவே அவரும் இந்தியா மீதான ஆங்கிலேயர்களின் பேராசைகள் தோல்வியுற்றதைக் குறிப்பிடுகிறார்.  “இந்தியாவில் அவர்களின் ஆட்சியை என்றென்றைக்குமாக நிலைநாட்டுவதிலும் இந்தியாவின் வளங்களை சூறையாடி அவர்களுடையதாக்கிக் கொள்வதிலும்” அவர்களுடைய தோல்வி பற்றி பெரியார் குறிப்பிடுகிறார்.  ‘திராவிடர்’ என்ற சொல்லுக்கான பொருளை பரந்ததாகக் குறிப்பிடுகிறார்.  எந்த விதத்தில் ஒடுக்கப்படும் மக்களாக இருந்தாலும், அவர்கள் இந்த தேசத்தின் எல்லைக்குட்படாதவர்களாக இருந்தாலும், அவனோ அவளோ சமத்துவத்தின் பக்கம் நின்றால் அவர்களும் திராவிடர்களே என்கிறார்.  “பிறப்பின் அடிப்படையில் ஒருபோதும் ஏற்றத்தாழ்வு இல்லை என்று ஒத்துக்கொள்ளும்,  ஏற்றத்தாழ்வை எல்லா வகையிலும் நடைமுறையில் எதிர்க்கும் ஒருவன் ஜப்பானியனாக இருந்தாலும் அவனை திராவிடனாக நாம் ஒத்துக் கொள்ள முடியும்” என்கிறார்.

இரண்டு கடினமான சிந்தனைவாதிகளின் தேசியவாதம் குறித்து சுருக்கமான, அதேசமயம் பலவகையிலும் எந்த வண்ணமும் பூசப்படாத சாராம்சம் இது.  ஆனால் இது நமக்கு தேசவடிவத்தைக் தாண்டிய அரசியல் குறித்து குறைந்தது இரண்டு முன்னுரைகளைத் தருகிறது.  முதலாவதாக, சமூகத்தின் பல வேறுபாடுகள் உள்ளதை சுட்டிக்காட்டி ஒத்துக்கொண்டு, பல்வேறு சக்திகளும் எப்போதுமே போட்டியிடும் ஒரு தளமாக, அரசியல் இருக்க வேண்டும்.  இரண்டாவதாக எல்லைகளுக்குள் அடங்காத கற்பனையாகவும், தேச வடிவத்தின் எல்லைகளைக் கடந்து எல்லா சாத்தியங்களும், கூட்டணிகளும் முரண்பாடுகளும் கொண்ட இவ்வுலகை ஆரத்தழுவிக் கொண்டதாகவும் தேசத்திற்கப்பாலான அரசியல் இருக்க வேண்டும்.  இவ்விரு கருத்துக்களுக்கும் உள்ள உள்ளார்ந்த ஆற்றலை விளங்கிக் கொள்ள வேண்டுமானால் தேசமே நமது ஒரே அரசியல் வடிவம் என்ற நம்பிக்கையை முதலில் கைவிட வேண்டும்.

தாகூரை மீண்டும் நினைவுகூர்ந்து முடிக்கலாம் என எண்ணுகிறேன்.  தேசியவாதத்தின் மீதான அவரது முரண்பாட்டையும், அதன் பின்னே செல்பவர்களைப் பற்றியும் இப்படி எழுதுகிறார்.

“தேசத்தை வழிபடுவது என்பது கடவுளின் மீதும், மனிதத்தின் மீதும் வைத்திருக்கும் பயபக்தியை விட மேலானது என குழந்தைப் பருவத்திலிருந்தே எனக்கு கற்பிக்கப்பட்டது.  நான் அந்த கற்பிதத்தை உடைதெறிந்து வளர்ந்துவிட்டதாக நம்புகிறேன்.  தேசமே ‘மனிதத்துவத்தின் குறிக்கோள்களை’ விட உயர்ந்தது என்று தங்களுக்கு கற்பிக்கப்பட்டதற்கு எதிராக போராடி என் நாட்டு மக்கள் தங்களுக்கான இந்தியாவை படைப்பார்கள் என்பதே என்னுடைய திடமான முடிவு”.

“மனிதத்துவத்தின் குறிக்கோள்கள்” - ஆம் பன்மையில் தான் சொல்லவேண்டும்.  அதன்மூலமே மனிதத்துவத்தை ஒருமைப்படுத்துவதைத் தவிர்க்க முடியும்.  இங்கிருந்துதான் தேச வடிவத்திற்கும், அதன் வன்முறைக்கும் அப்பாற்பட்ட ஒரு கனவை, காணத் தொடங்க வேண்டும்.

Friday, March 26, 2010

ஆயிஷா



(நன்றி: புதிய தலைமுறை)

யிஷா ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் விற்று சாதனை படைத்த நூல் இது.

இந்தியாவின் பள்ளிக்கூடங்கள் அறிவாளிகளை உருவாக்குவதில்லை. நல்ல மதிப்பெண் பெறுபவர்களை மட்டுமே உருவாக்குகிறது. இந்த உண்மையை முகத்தில் அறைவது போல் சொல்கிறது இரா.நடராசனின் ‘ஆயிஷா நூல்.

அன்பும் அறிவும் ததும்பும் சிறுமி ஆயிஷா ஆயிஷாவின் சின்ன மண்டைக்குள் எத்தனை கேள்விகள்? எத்தனை சிந்த்னைகள்? இந்தச் சின்னப்பெண் வகுப்பில் எழுப்பும் கேள்விகளுக்கு விடையளிக்க இயலாமல் தவிக்கும் ஆசிரியைகள் அவளை தங்கள் பிரம்புக்குத் தீனியாக்குகின்றனர். .

கேள்வி கேட்கும் மாணவர்களை பெரும்பாலும் ஆசிரியர்களுக்குப் பிடிப்பதில்லை. அதிலும் பதில் சொல்ல இயலாத அளவுக்கு அந்தக் கேள்வி  புத்திசாலித்தனமாக இருந்தால்.. கேள்வி கேட்ட மாணவர் ம்றுமுறை கேள்வி கேட்காத அளவிற்கு தண்டனைதானே விடையாகக் கிடைக்கும்? ஆயிஷாவுக்கும் அதுவே நேர்கிறது.

அப்படி இருந்த ஆசிரியைகள் மத்தியில் ஒரே ஒரு ஆசிரியை ஆயிஷாவுக்கு செவிசாய்ப்பவராக இருக்கிறார். ஆயிஷாவின் அறிவியல் அறிவும், கேள்விகளும் செக்குமாடாய் உழன்று கொண்டிருந்த அவரின் வாழ்வில் புதிய ஒளியை ஏற்றுகின்றன. அவருடைய பார்வையிலேயே கதை தொடங்கி விரிகிறது.

“இத்தனை வருடத்தில் பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் என்ன பெரிதாக மாறிவிட்டது? காலையில் எழுந்து பல் துலக்குவதை உற்சாகத்தோடவா செய்கிறோம்? எப்போதாவது புதிய பிரஷ் அல்லது பேஸ்ட்! இங்கே அதுவும் இல்லை. அதே ஓம்ஸ் விதி. ஒரெ செல் பிரிதல். புதிதாகத் தெரிந்து கொள்ளும் ஆர்வமற்று ஓர் இயந்திரமாய் கிரீச்சிட்டுக் கொண்டிருந்த என்னை என் முகத்தில் கேள்விகளால் ஓங்கி அறைந்தாள் ஆயிஷா என்கிறார் அவளது ஆசிரியை.

எல்லா மாணவர்களுக்கும் எண்கள் தரப்பட்டுள்ளன. வகுப்பு, வரிசை எண், தேர்வு எண், பெற்றெடுக்கும் மதிபெண்கள், எங்கும்  எண்கள், எண்களே பள்ளிகளை ஆள்கின்றன.


பிள்ளைகளின் தனித்திறன்களை உணர்ந்துகொள்ளாமல் அவர்களை மந்தை போல் பாவிக்கும் மனப்பான்மை, அவர்களின் தனித்துவம் தெரியாமல் எண்களால் அவர்களின் பால்யம் கடந்து போவதை இதைவிட அழகாக விளக்க முடியுமா என்ன?

ஆயிஷா கேட்கும் கேள்விகள் மிக அறிவார்த்தமானவை. அவற்றுள் ஒன்று இதோ:

“ஒரு மெழுகுவர்த்தியில் ஒளி அதிகமாகவும் வெப்பம் குறைவாகவும் உள்ளது. ஆனால் ஒரு அடுப்பில் எரியும் நெருப்பில் ஒளி குறைவாகவும், வெப்பம் அதிகமாயும் இருக்குதே. ஏன் மிஸ்?

நியூட்டன் அறிவியல் சோதனைகள் நடத்த ஆரம்பித்த்போது அவருக்கு வயது பன்னிரண்டு என்பது போன்ற பல தகவல்கள் ஆயிஷாவின் வார்த்தைகள் வழியாகவே வாசிக்கும் நமக்கும் வந்து சேர்கிறது.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த ஆயிஷாவை அவள் விரும்பிய விஞ்ஞானமே தத்தெடுத்துக்கொள்கிறது. அறிவியலின் த்த்துப்பிள்ளையாயும் வரலாற்றின் செல்லப்பிள்ளையாகவும் வளர்கிறாள் ஆயிஷா. அவள் நேசிக்கும் அறிவியலின் துணை கொண்டு அவள் தன்னை தன்னை அடிக்கும் ஆசிரியைகளின் பிரம்படிகளிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முனைகையில் வாசகரின் நெஞ்சம் பதைபதைத்துப் போகிறது.

ஆயிஷா மெக்காலே கல்விமுறைக்கு சாட்டையடி... மாற்றத்தின் முதல் படி..


நாலாசிரியர்       : இரா. நடராசன்

நூல் வெளியீடு     : பாரதி புத்தகாலய்ம்
                    7, இளங்கோ சாலை,
                    தேனாம்பேட்டை,
                    சென்னை -600 018
                    தொலைபேசி : 044 - 24332924

விலை             : ரூ. 10/-
                                

Tuesday, March 23, 2010

வீடு....


நன்றி : உயிர் மெய் சிறப்பிதழ் (2009-2010)

நாற்புறமும் சுவர்கள்தான்
ஆனாலும் நீ வெறும் சுவரல்ல!
உணர்வுகளின் கோர நர்த்தனத்தில்
நான் திக்குமுக்காடியபோது
அக்கறையாக அனுதாபமாக
அவ்வபோது இளக்காரமாக
என்னை ஆற்றுப்படுத்தியது
நீ மட்டும்தான்!

என் மகிழ்ச்சி... பொங்கிப் பிரவாகமெடுத்து...
அழகிய வண்ணப்பூச்சாக... உன் சுவர்களில்...!
என் கண்ணீர்... மழைநாளின் ஈரமாக
உன் சுவற்று கசியலாய்...!
என் கோபம்... கோடையில் அனலாய் தகித்திருக்கிறது உன்னில்..!
என் பைத்தியக்காரத்தனம்... உன் அழகிய வண்ணப்பூச்சின் இடையே..
தெறிப்பாய்... சுவரின் நடுவே..!
என் விரக்தியின் உச்சக்கட்ட எண்ணங்கள்...
உன் விட்டம் பூராவும் நிறைந்திருக்கின்றன...
என் உயிரைத் தாங்கிப் பிடித்தவாறு...!
என் மனதின் விசாலம்... உன் வாசலாய்..!
அவ்வபோது என்னுள் தோன்றும் வெறுமை...
உன் குழாய்களில்..!
எங்கிருந்தாலும் இவ்வுலகை நோக்கும் என் கவனம்...
உன் சாளரங்களாய்..!
என் மன அழுக்குகள்.. உன் சமையலறையின்
எண்ணை பிசுபிசுப்பாய்..!
என் நினைவலைகள்...
உன் பரணாக..!
என் மன இறுக்கம்... அவ்வபோது
காற்றை மறுத்த உன் புழுக்கமாய்..!
என் மன அதிர்வுகள் கூட...
பூகம்ப நடுக்கமாய்..!

அதிர்ச்சியை தாங்காமல் நொறுங்கும் என் மனதாய்..
ஒரு குண்டுவீச்சில் நீ தரைமட்டமாய்..!

இப்போது...
எவருமற்ற என் தனிமை.. உன் வெற்றிடமாய்..!

- கவின் மலர்

Saturday, March 20, 2010

தனிமையில் ஒரு நெடும்பயணம்



(நன்றி : புதிய தலைமுறை)

ரு நாளைக்கு எத்தனை கிலோமீட்டர் நாம் நடப்போம்? இரண்டு? மூன்று? சரி! நாம் நடப்பது நம் உடல்நலத்திற்காக! பழங்குடியின மலைவாழ் மக்கள் நலனுக்காக நடப்பவரைப் பார்த்திருக்கிறீர்களா? அதுவும் 18 ஆண்டுகளாக!

கிரண்.என்.மஸ்கி தன் சொந்த ஊரான கோவாவிலிருந்து தன் நடைபயணத்தை பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் 1991 ஜூன் மாதம் 5ம் தேதி துவக்கினார். இன்று வரை நடந்துகொண்டே இருக்கிறார். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பயணம் செய்தபின் இதோ இப்போது தமிழ்நாட்டில் தனது பயணத்தை கன்னியாகுமரியில் முடித்துவிட்டு கோவா சென்று கொண்டிருக்கிறார். இந்த நெடிய பயணத்தின் நோக்கம்தான் என்ன?

“நான் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் உள்ள மலைவாழ் பழங்குடியின மக்களை சந்திக்கிறேன். அவர்களோடு மாதக்கணக்கில் த்ங்கியிருந்து அவர்களது பிரச்சனைகளை கேட்டறிந்து என்னாலான உதவிகளை நான் செய்கிறேன். அரசாங்கத் தரப்பில் அவர்கள் சார்பில் யாரை சந்திக்க வேண்டுமோ அவர்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயற்சிகள் செய்கிறேன்.என்கிறார் கிரண்.

42 வயதாகிறது. மெல்லிய உருவம். சரியாய் சாப்பிடாமல் நெடுநாள் பசியில் வாடியத்ன் பலனாய் கண்களின் கீழ் கருவளையம். கையில் ஒரு படுக்கை.மூன்று மாற்று உடுப்புகள் அவர் சந்தித்த அதிகாரிகள் அளித்த கடிதங்கள், கோப்புகள், மலைவாழ் மக்கள் குறித்த தகவல்கள் கொண்ட குறிப்புகள் அடங்கிய ஒரு பை. இவையே கிரண்.என்.மஸ்கியின் அடையாளங்கள். இப்படி ஒரு பயணம் செய்ய வேண்டும் என்று ஏன் தோன்றியது?

“நான் 8ஆம் வகுப்பு பயிலும்போது அஸ்ஸாமைச் சேர்ந்த ஒரு சைக்கிள் பயணியை சந்தித்தேன். அவர் தேச ஒற்றுமையை வலியுறுத்தி பயணம் மேற்கொண்டிருந்தார். அதுதான் முதல் பொறி. ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக ஏதாவது செய்தாக வேண்டுமென்ற துடிப்பு எனக்கிருந்த்து. மலைவாழ் மக்களும் நரிக்குறவர்களும் மிகவும் பின் த்ங்கிய நிலையில் இருக்கின்றனர். அவர்களின் நலனுக்காக என் பயணம் அமைய வேண்டும் என்று விரும்பினேன். அதன்படி பத்தாயிரம் ரூபாய் பணத்துடனும் ஒரு கேமிராவுடனும் புறப்பட்டேன். என் பெற்றோர் உட்பட அனைவரும் என்னை ஒரு மனநோயாளியைப் பார்ப்பது போல் பார்த்தனர். ஏனிந்த வேண்டாத வேலை என்பதே அனைவரின் எண்ணமாக இருந்த்து. ஆனாலும் நான் தீர்மானமாய் இருந்தேன். என் பயணம் ஏதாவதொரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்று எண்ணினேன்.  ஒவ்வொரு மாநிலத்திற்குச் செல்லும்போதும் அந்த மாநிலத்தின் மாவட்டங்கள், அவற்றின் தாலுகாக்கள், ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள மலைவாழ் பழங்குடி மக்கள், நரிக்குறவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்துக் கொள்வேன். எனக்கு தாலுகா அளவில் உள்ள தாசில்தார், பிடிஓ போன்ற அதிகாரிகள் உதவுகிறார்கள். அவர்க்ளுடைய உதவி கிடைக்காத இடங்களில் வனத்துறையினர் எனக்கு உதவுவார்கள்என்கிறார் கிரண்.

சரி! அரசு தரப்பில் இவருக்கு எப்படி உதவிகள் கிடைக்கின்றன? இவர் சொல் எடுபடுகிற்தா? ஒரு சாமானியனாக இருந்துகொண்டு இவர் சொல்வதை அரசு எந்திரம் காது கொடுத்து கேட்கிறதா? இவரது மனுக்களும் கோரிக்கைகளும் எந்தளவு வெற்றி பெறுகின்றன?
“ஐம்பது சதவிகித வெற்றி என்று சொல்லலாம். நூறு சதவிகித வெற்றி என சொல்ல முடியாது.என்னால் முடிந்த வரை என் மக்களுக்கு நான் செய்திருக்கிறேன்.என்கிறார் கிரண் நேர்மையாக.

கொன்கனியை தாய்மொழியாக்க் கொண்ட கிரணுக்கு ஆங்கிலம், இந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, அஸ்ஸாமி, கன்னடம் ஆகிய மொழிகள் தெரிந்திருக்கின்றன. தமிழ கொஞ்சம் புரிகிறது. பேசத் தெரியவில்லை. மொழி தனக்கு தடையாக ஒருபோதும் இருந்ததில்லை என்கிறார் கிரண்.

கிரண் இரவுகளில் பயணம் செய்வதில்லை. பகலில் மட்டுமே பயணிக்கிறார். இரவில் சிறிய நகரத்தில் ஏதாவதொரு நடுத்தர விடுதியில் தங்குவது போல தனது பயணத்திட்ட்த்தை வகுத்துக்கொள்கிறார். பெரும்பாலும் நகரத்தில் தங்குவதை கிரண் விரும்புவதில்லை. கிராமங்களில் தங்குகிறார். மலைவாழ் மக்களும் நரிக்குறவர்களும் இருக்கும் இடங்களுக்குச் சென்றுவிட்டால் அங்கேயே ஐக்கியமாகிவிடுகிறார். அவர்கள் தரும் உணவை உண்கிறார். நகரங்களைவிட இந்த மனிதர்களின் இருப்பிடம் ஆயிரம் மடங்கு மேல். அஸ்ஸாமில் ஒரே ஒரு முறை காட்டுப்பகுதியில் நடந்தபோது மிருகங்களிடம் சிக்கி தப்பித்தேன் பீகாரில் ஐந்து முறையும் உத்தரப் பிரதேசத்தில் இரண்டு முறையும் கொள்ளையர்களிடம் சிக்கினேன். என் உடைமைகள் அனைத்தும் பறிபோயின.என்கிறார் கிரண்.

பின் எப்படி தன் பயணத்தை தொடர்ந்தார் கிரண்?

“நல்லவர்கள் எங்கும் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு உதவுகிறார்கள். பயணத்தைத் தொடங்கும்போது என் கையிலிருந்த பத்தாயிரம் ரூபாய் தீர்ந்தபின் இன்று வரை நான் சந்திக்கும் மனிதர்கள் எனக்கு உதவுகிறார்கள். அவர்கள் கொடுக்கும் பணத்தில்தான் நான் என் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறேன்என்று சிரிக்கிறார் கிரண். ஒரு மணிநேரத்திற்கு 5.5 கிலோமீட்டரிலிருந்து 8 கிலோமீட்டர் வேகம் வரை நடக்கிறார். அதன்பின் ஒரு தேனீர். பின் திரும்ப நடை. இப்படித்தான் பதினெட்டு வருடங்களாக தனது நெடும்பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறார் கிரண். அரிசி, காய்கறிகள், மீன் இவற்றை விரும்பி உண்ணும் இவருக்கு தினமும் நடப்பதால் ஒருபோதும் எந்த நோயும் வந்த்தில்லை.

மலைவாழ்மக்களின் கல்வித்தரம், அவர்களின் வாழ்க்கைதரம், அடிப்படை தேவைகள், சாலை வசதிகள், குடிநீர் வசதி என எது அவர்களுக்கு கிடைக்காமலிருந்தாலும் அவர்களுக்காக அரசின் உதவியை நாடி பெற்றுத்தருகிறார். குறிப்பாக பெண்களை பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்பதை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிறார். மிக அதிக காலமாக சட்டிஸ்கரில் உள்ள பஸ்டர் மலைப்பகுதியில் எட்டுமாதங்களும் 20 நாட்களும் தங்கியிருந்திருக்கிறார் கிரண்.

தனது பயணத்தில் இதுவரை ஒரு அரசியல்வாதியைக் கூட கிரண் சந்திக்கவில்லை என்பது மிகப்பெரிய விஷயம். அரசியல்வாதிகளின் பொய் வாக்குறுதிகளை நம்புவதில்லை கிரண். எங்கு சென்றாலும் அரசு அதிகாரிகளை மட்டுமே சந்திக்கிறார். அவர்களிடமே மனு கொடுக்கிறார். பேசுகிறார். தன்னால் முடிந்த உதவிகளை பெற்றுத் தருகிறார். இந்தியா முழுவதிலும் பயணித்திருக்கும் கிரண் தமிழ்நாடு குறித்து என்ன கூறுகிறார்?

“ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டில் உள்ளது போன்ற சலுகைகள் வேறு மாநிலத்தில் இல்லை. இதன் காரணமாக மலைவாழ் மக்களிடையே படிப்பறிவு அதிகரித்திருக்கிறது .நீலகிரியில் உள்ள தோடர்கள், இருளர்கள், படுகர்கள் இனத்தாரிடையே நன்கு கல்வி கற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல நீங்கள் பார்க்க முடியாது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் மலைவாழ் மக்களின் நலனுக்காக பல திட்டங்களை கொண்டு வருகிறார்கள். ஆனால் ஏட்டளவில் அவை நின்று விடுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமே ஓரளவிற்கு அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மிக அதிக அளவில் என்.ஜி.ஓக்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. கடலூர், சிவகங்கை போன்ற ஊர்களில் நரிக்குறவர்களுக்கென்று தொண்டு நிறுவனங்கள் இருந்தன. நரிக்குறவர்கள் பேருந்து நிலையங்களிலும் மற்ற மக்கள் கூடும் இடங்களிலும் ஊசிபாசி விற்றுக் கொண்டிருந்தவர்கள். அவர்களுக்கு கல்வி தருகிறோம் என்று அவர்களை அழைத்து 90 நாட்கள் மட்டும் வைத்திருந்துவிட்டு அவர்களை விரட்டிவிட்ட கதைகளையும் மக்கள் என்னிடம் விவரித்தார்கள். என்கிறார் கிரண்.

தேனி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின்போது ஒரு விபத்தில் சிக்கி தன் சிகிச்சைக்காக ஏராளமாக செலவு செய்ய நேர்ந்தபோது உத்தமபாளையம் தாசில்தாரும், அந்தப் பகுதி மக்களும் தனக்கு உதவியதை நன்றியோடு நினைவு கூர்கிறார் கிரண்.
“நான் இயற்கையில் காதலன். இயற்கையை பாழ்படுத்துவதில் இன்றைய நவீன சமூகம் முன்னிலையில் இருக்கிறது. இச்சூழலில் காடுகளையும் அவற்றின் வளங்களையும் காப்பாற்றிக் கொண்டிருப்பது பழங்குடி மக்களே. இதுவே நான் அவர்களை அதிகம் நேசிக்க காரணம்என்கிறார் கிரண்.

கையில் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமலிருந்தாலும் மாறாத புன்னகையோடும் நம்பிக்கையோடும் இருக்கும் கிரண் விடும் சவாலை எதிர்கொள்ள எந்த இந்திய குடிமகனாலும் முடியுமா என்பது சந்தேகமே! என் அளவிற்கு இந்தியாவின் மூலைமுடுக்குகளிலெல்லாம் பயணம் செய்த ஒரு மனிதர் இருக்க முடியாது. என்னால் சவால் விட்டு சொல்ல முடியும்எனும் கிரண் அதே பெருமையோடு புன்னகை மாறாமல் சொல்கிறார்.. இந்த வயதிலேயே என் தாய்நாட்டை நான் யாரை விடவும் மிக நெருக்கமாகக் கண்டிருக்கிறேன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.


கிரண் இந்திய நாட்டின் மலைப்பகுதிகள் குறித்த அரிய தகவல்களை தன்னகத்தே வைத்திருக்கிறார். அவர் பகிர்ந்துகொண்ட ஏராளமான தகவல்களில் சில இதோ:

“என் அனுபவத்தில் சிக்கிம் மாநிலமே மிகவும் அமைதியான மாநிலம். மக்கள் இரவுகளில் கூட த்ங்கள் வீடுகளைப் பூட்டுவதில்லை. அந்த்ளவு திருட்டு போன்ற விஷயங்கள் அங்கே குறைவு. பாஞ்சாபிலும், ஹரியானாவிலும் மலைவாழ் மக்களும் காடுகளும் கிடையாது. மிசோரமும் மேகாலயாவும் பெண்க்ளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் மாநிலங்களாக இருக்கின்றன. ஆனால் ஆண்களும் பெண்களும் சம்மானவர்களாக இருப்பது கேரளாவில் மட்டுமே. மலைவாழ் மக்கள் சமூகத்தைப் பொறுத்தவரை பெண் தான் அந்த சமூகத்தின் முதுகெலும்பே.

ஆந்திரப்பிரதேசத்தின் கர்னூல் மாவட்ட்த்தில் சென்சியூ என்றழைக்கப்படும் பழங்குடியினர் சமூகத்தில் ஏதாவதொரு குற்றம் புரிந்து சிறைக்குச் சென்று வந்த இளைஞர்கள் மட்டுமே திருமணம் செய்து கொள்ள தகுதியானவர்கள். அவர்களை மட்டுமே பெண்கள் மணம் செய்துகொள்கின்ற்னர் கர்நாடகாவில் ஆக்கிபீக்கி என்ற மலைவாழ் சமூகத்தினர் குழந்தை பிறந்தபிறகு முதலில் தந்தையின் மனதில் தோன்றும் எந்த ஒரு சொல்லையும் தங்கள் குழந்தைகளுக்கு பெயராக வைப்பார்கள். போஸ்ட் ஆபீஸ், எக்ஸ்பிரஸ் என்று வித்தியாசமான பெயர்களெல்லாம் கூட இச்சமூகத்தில் காணப்படும்.

அந்தமான் நிகோபர் தீவுகளில் கற்கால மனிதர்கள் போன்ற மனிதர்கள் இன்னும் வாழ்கிறார்கள். சுனாமியின்போது அவர்களில் ஒருவர் கூட இறக்கவில்லை. எல்லோருமே தப்பித்தார்கள். ஏனெனில் அவர்களுக்கு பறவைகளின் பாஷை புரியும். அவற்றின் குறிப்பறிந்து முன்பே அவர்கள் தப்பிவிட்டனர். அருணாச்சலப்பிரதேசத்தில் ஆபாதானி என்றழைக்கப்படும் ஒரு வகையான பழங்குடியினர் இருக்கிறார்கள். அவர்கள் எந்த மத்த்தையும் சார்ந்தவர்களில்லை. மனித ஜாதி ஒன்று மட்டுமே அவர்கள் அறிந்த ஜாதி. சூரியனையும் சந்திரனையும் மட்டுமே வழிபடுகிறார்கள். என் இறுதிக்காலத்தில் அந்த மக்களோடு சென்று என்னை நான் மதமற்றவனாக்கிக்கொள்ள ஆசைப்படுகிறேன்

ஹேட்ஸ் ஆஃப் டு யூ கிரண்!!!

Tuesday, March 16, 2010

வானவில் பள்ளி




லையில் முண்டாசு. கையில் ஒரு கயிறு. கயிற்றின் மறுமுனையில் ஒரு மாடு. அதன்மீது சேகரிக்கப்பட்ட பழைய துணிகள். தோளில் தொங்கும் ஒரு உறுமி. மற்றொரு கையில் குச்சி. குச்சியால் உறுமியில் உரசி சத்தம் எழுப்பிக்கொண்டே வீட்டுக்கு வீடு வந்து பழைய துணிகளை கேட்டு வாங்கிச் செல்லும் பூம்பூம்மாட்டுக்காரர். சத்தத்துக்கு ஏற்ப தலையை ஆட்டும் மாடு. அவர் பின்னாலேயே செல்லும் தெரு குழந்தைகள்..
பேருந்து நிலையங்களிலும், இன்ன பிற மக்கள் கூடும் இடங்களிலும் கையில் ஊசி, பாசி, மணிகள் போன்றவற்றை விற்றுக் கொண்டிருக்கும் பெண்கள், ஆங்காங்கே இருக்கும் அவர்களின் டெண்ட்கள், எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத பாஷை என நகர்புற நாகரிகத்திற்கு சற்றும் தொடர்பில்லாத நரிக்குறவர்கள்..
பூம்பூம்மாட்டுக்காரர் அல்லது நரிக்குறவர் சமுதாயத்தைச்
சேர்ந்த இவர்கள் நாடோடிகளாக
இருப்பதால் பள்ளிக்கூடம் பக்கம் போவது என்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இப்படி பூம்பூம்மாட்டுக்காரர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நிறைய பேர் உண்டு. 2004 டிசம்பர் 26 அன்று கோரத்தாண்டவமாடிய சுனாமிக்குப் பிறகு அவர்கள் வைத்திருந்த இரண்டு முன்று மாடுகளும் மாயமாகிவிட, அதன் பின் வாழ வழியின்றி தடுமாறி நின்றனர். அரசாங்கத்தின் நிவாரணப் பொருட்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அளித்த பல்வேறு உதவிகளும் இந்த சமுதாயத்தினருக்குக் கிடைக்கவில்லை.
சுனாமியில் நரிக்குறவர்கள், பூம்பூம்மாட்டுக்காரர்கள் நிறைய பேர் உயிரழந்தனர். அவர்களது குழந்தைகள் அனாதைகள் ஆயினர். இந்த குழந்தைகளின் எதிர்காலம்? பெற்றோர் இருந்தாலும் கூட வாழ்வாதாரத்தை இழந்து நின்றதால் செய்வதறியாது திகைத்து நின்றனர். தாங்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. தங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணியவர்களுக்கு ஆறுதலாக ஒரு அருமருந்தாக வந்தது “வாவில் ள்ளி
நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ளது சிக்கல். சிக்கல் என்பது ஊர் பெயர்தான். வேறு ஏதாவது நினைத்துக் கொள்ள வேண்டாம். தில்லானா மோனாம்பாளில் வரும் சிக்கல் சண்முகசுந்தரத்தின் ஊரான அதே சிக்கல்தான். அங்கே சிக்கல் சிங்காரவேலர் கோவில் நுழைவாயிலுக்கு எதிர்புறம், சாலையின் வலதுபுறம் திரும்பினால்... 20, வடக்குத்தெரு என்ற முகவரியில் இயங்குகிறது வானவில் உண்டு உறைவிடப் பள்ளி.
வாசலில் திண்ணை, நடுவில் முற்றம், நான்கு புறமும் தூண்கள், சமையலறை அதைக் கடந்து சென்றால் விசாலமான கொல்லைப்புறம். இப்படி நாகை மாவட்டத்தில் காணப்படும் பழைய வீடுகளைப் போலவே இருக்கிறது வானவில் பள்ளியும்.
உள்ளே நுழையும்போதே குழந்தைகளின் வெவ்வேறு குரல்கள் காதுகளில் மோதுகின்றன. “இது எப்டி செய்றது?- சந்தேகம் கேட்கும் ஒரு குரல். அக்கா! என்னை இவன் அடிச்சுட்டான் புகார் கூறும் ஒரு குரல். “நீங்க யாரு? ரேவதி அக்கா பிரெண்டா? கேள்வி கேட்கும் ஒரு குரல். கொஞ்சம் உற்றுக்கேட்டால் மட்டுமே அது தெலுங்கு அல்லது இந்தி என புரியும்படி பேசும் ஒரு குரல் இப்படி பல்வேறு குரல்கள் ஒலிக்கின்றன. அத்தனை குரல்களிலும் இனிமையும் மழலையும் பொங்குகின்றன.
முற்றத்திற்கு ஒருபுறம் மரப்பலகைகள் கொண்டு தடுப்பு ஏற்படுத்தி வகுப்பறைகள்! வானவில், நட்சத்திரம் என ரசனையாய் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு அழகான பெயர். ஒரு வகுப்பில் ஆசிரியர் வண்ண வண்ண அட்டைகளை வைத்து பாடம் சொல்லிக் கொடுக்க, அத்தனை ஆர்வத்தோடு குழந்தைகள் அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
குழந்தைகள் கைப்பட வரைந்த ஒவியங்கள், ஜமுக்கிகளையும், மணிகளையும் வைத்து அவர்களே செய்த சின்ன சின்ன உருவங்கள்.. வண்ணத்துப்பூச்சி, மயில் இப்படி...கண்களுக்கு விருந்தாக எல்லா வகுப்புகளிலும் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
முற்றத்தைக் கடந்து கொல்லைப்பக்கம் சென்றால் கண்களுக்கு குளுமையாய் ஒரு குளம்.... குளத்திற்கும் பள்ளிக்கும் இடைப்பட்ட சிறிய மைதானம் போன்ற இட்த்தில் நிறைய குழந்தைகள் அங்கே அமர்ந்தும் நடந்தும், ஓடிக்கொண்டும், ஹோஎன்று கத்திக்கொண்டும், கும்மாளமிட்டுக்கொண்டும் இருந்தனர். என்னைப் பார்த்ததும் ஒரு சிறுவன் வந்து “நீங்க தமிழா இங்கிலீஷா?என்றான்.
“தமிழ்தான். ஏன்?
“எனக்கு இங்கிலீஷ்ல பேசினா புரியாது. உங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதா?
“தெரியும். உன்கிட்ட தமிழ்லதான் பேசுவேன்.
“வோட்டு சரணம்
“அப்படின்னா?
“வோட்டு சரணம்
“புரியலையே கண்ணா!.அப்படின்னா என்ன?
அருகில் இருந்த இன்னொரு குழந்தை சொல்லிற்று. “அக்கா! அவன் உங்க பேரை இங்கிலீஷில் கேட்கிறான்
வாட் இஸ் யுவர் நேம் தான் அவனிடம் வோட்டு சரணம் ஆனது புரிந்தது.
அத்தனை குழந்தைகளின் கைகளிலும் களிமண். வானவில் இருக்கும் அதே சாலையில் உள்ள ஒரு குளத்திற்கு அருகில் சென்று களிமண் எடுத்து வருகிறார்கள். கையிலும் பாலிதீன் கவரிலும் பெரிய பையிலும் என்று அவரவர் சைசுக்கு தகுந்தாற்போல விதவிதமாய் களிமண் சேகரிப்பு நடக்கிறது. பள்ளியின் தலைமை ஆசிரியர் எழில் ஒரு கலைஞர். ஓவியம், களிமண் சிற்பம், கராத்தே என எல்லாவற்றையும் குழந்தைகளுக்கு கற்று தருகிறார். குழந்தைகளுக்கு இவர் “எலி அண்ணா”. அப்படித்தான் மழலையில் இவரை அழைக்கிறார்கள்.
எழில் மட்டுமல்ல, இங்கு பணிபுரியும் அனைவருமே இளைய தலைமுறையினர்தான். யார் எக்கேடு கெட்டால் என்ன நம் கதை நடந்தால் போதும் என்றுதான் இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுபவர்கள் ஒரு முறை வானவில் பள்ளிக்கு வந்தால் தங்கள் கருத்தை கட்டாயம் மாற்றிக் கொள்வார்கள். பள்ளிக்கு அருகிலேயே உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் அத்தனை பேரும் அங்கேயே தங்கி அர்ப்பணிப்போடு சமுதாய மாற்றமுடியும் என்ற நம்பிக்கையோடு இப்பள்ளியை நடத்துகிறார்கள். இளைய சமுதாயம் சமூக அக்கறையோடு இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது வானவில்.
செல்லூர், வாஞ்சூர் ஆகிய கிராமங்களிலிருந்து பள்ளி வேன் சென்று குழந்தைகளை அழைத்து வருகிறது. அங்கேதான் அரசு இவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறது. இந்த பள்ளியை நடத்தும் ரேவதிக்கு இந்த வீடுகளை பெற்றுத் தந்ததில் பங்கு உண்டு.
ரேவதி - சென்னையைச் சேர்ந்த இவர் சுனாமிக்குப் பிறகு நாகைக்கு வந்து இந்த பள்ளியை தொடங்கினார்.பத்திரிகையாளரான இவருக்கு குறும்பட இயக்குனர், களப்பணியாளர் என பல முகங்கள் உண்டு. நவீன நாடகங்களிலும் நடித்திருக்கிறார். வானவில் பள்ளிக் குழந்தைகளின் தேவதை. ரேவதி அக்கா! ரேவதி அக்கா!என்று குழந்தைகள் அவர் தோளின் மீதும் மடியின்மீதும் உரிமையோடு மேலேறிக்கொள்கிறார்கள்.
"நாகப்பட்டினத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருடன் இணைந்து சுனாமி நிவாரணப்பணிகள் செய்துகொண்டிருந்தேன். அப்போது கிராமம் கிராமமாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலைத் தயாரித்துக் கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் ஒரு முறை நாகை பஸ்ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தபோது ஒரு சிறுமி கையில் ஒரு குழந்தையோடு வந்து கையேந்தினாள். எனக்கு அது அதிர்ச்சியாகவே இருந்தது. ஏனென்றால் அப்போது ஏகப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வந்து குவிந்திருந்தன. முதல் இரண்டு நாட்கள் மக்களுக்கு சாப்பாட்டுக்கு சிரமங்கள் இருந்தாலும் அதன்பின் அப்படியான சூழல் இல்லை. அவளை அழைத்து விசாரித்தபோதுதான் அவள் பெயர் முருகம்மா என்றாள். அவள் நரிக்குறவர் இனச்சிறுமி என்பதும் அவர்கள் அனைவரும் சாப்பாட்டுக்குக் கூட கஷடப்படுகிறார்கள் என்பதும் புரிந்தது. அப்போதுதான் இந்த குழந்தைகளுக்காக ஒரு பள்ளி தொடங்கினால் என்ன என்று எண்ணம் தோன்றியது. அதன்பின்னர் நாங்கள் எடுத்த சர்வேபடி எந்தெந்த ஊர்களில் எத்தனை பேர் இப்படி எந்த நிவாரணமும் கிடைக்காமல் இருக்கி
றார்கள் என்று ஆராய்ந்தபோது பூம்பூம்மாட்டுக்காரர் மற்றும் நரிக்குறவர் சமுதாய மக்கள்தான் அதிக சிரமத்தில் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து அவர்களிடம் போய்ப் பேசி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பச் செய்தோம்.””என்று வானவில் உருவான கதையை பகிர்ந்து கொண்டார் ரேவதி.
ஒரு குழந்தையை அழைத்து ரேவதி பாட்டுப்பாட சொல்ல, “சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் கல்யாணமாம்என்று அழகாகப் பாடியது. தினமும் காலையில் அசெம்பிளி உண்டு. திருக்குறள் சொல்வது, பாட்டுக்கள் பாடுவது என்று வித்தியாசமான அசெம்பிளி. குருவி தலையில் பனங்காயா?என்று குருவிகளே பாடுவதைக் கேட்கையில் மனம் கனத்துத்தான் போகிறது.
“மனுசங்கடா! நாங்க மனுசங்கடா!
உன்னைப்போல அவனைப்போல
எட்டு சாண் உயரமுள்ள மனுசஙகடா!
டேய்....
நாங்க மனுசங்கடா!
என்று கவிஞர் இன்குலாபின் பாடலை கூட்டாக குரலெடுத்து பாடுகிறார்கள் குழந்தைகள். அந்த “டேய்... மட்டும் அடிக்க வருவது போல் உச்சத்தில் வருகிறது.
ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்... அம்மாவை வாங்க முடியுமா?” - பரிணாமனின் பாடல் மழலைகளின் குரலில் தேனாய் பாய்கிறது. இது போன்ற விதம் விதமான பாடல்கள்... குழந்தைகள் சளைக்காமல் பாடுகிறார்கள். பள்ளிக்கு வர அழும் குழந்தைகள் இருக்கும் நம் நாட்டில் இப்படி பாட்டு, ஓவியம், சிற்பம் என வித்தியாசமான பள்ளி.
இந்த குழந்தைகள் இங்கே விளையாட்டு முறையில் கல்வி கற்கிறார்கள். ஆனால் ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு ஆறாம் வகுப்புக்குச் செல்லும்போது சிரமப்பட நேருமே என்ற சந்தேகத்தைக் கேட்டபோது, “பள்ளி தொடங்கிய காலத்தில் மூன்று பேர்தான் ஆசிரியர்கள் இருந்தார்கள். அப்போது விளையாட்டுமுறையிலான கல்வி மட்டும்தான் அளித்தோம். இந்த சிக்கல் இருப்பதால் இப்போதெல்லாம் அதோடு சேர்த்து வழக்கமான முறையிலும் கற்றுக் கொடுக்கிறோம். அதுமட்டுமில்லாமல் இப்போதுதான் அரசாங்கக் கல்வியே செயல்வழிகற்றல் முறையில்தானே இருக்கிறது?என்கிறார் ரேவதி.
“குழந்தைகள் ஆர்வமாகத்தான் வருகிறார்கள். ஒரு சில பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பதில் பிச்சையெடுக்க அனுப்பினால் தினமும் நூறு ரூபாய் கிடைக்கும் என்று வயிற்றுப்பாட்டுக்கு அவ்வபோது திடீரென பத்து நாள் இருபது நாள் என குழந்தைகளை வெளியூர்களுக்கு அழைத்துச் சென்றுவிடுவதுண்டு. நாங்கள் போய் பார்த்து திரும்ப கூட்டிக்கொண்டு வருவோம். நானே சென்னை மெரீனா பீச்சில் பலமுறை எங்கள் பள்ளிக் குழந்தை பெற்றோரோடு பிச்சை எடுப்பதை பார்த்திருக்கிறேன். அப்படி சென்ற குழந்தையை சக குழந்தைகள் பிச்சை எடுக்கப் போயிட்டு வந்தியா என்று கேலி செய்யும்போது அந்த குழந்தையின் மனம் பாதிக்கப்படுகிறது. அதனால் அப்படி பிச்சை எடுக்கப் போவது சரியில்லை என்ற மனோபாவத்தை குழந்தைகளிடம் வளர்க்க வேண்டியிருக்கிறது. 106 குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையுமே பள்ளியிலேயே தங்கச் செய்தால் இதைத் தடுக்கலாம். ஆனால் பெற்றோரிடமிருந்து ஒரேயடியாக பிரிப்பதாக நினைத்துவிடக்கூடாது என்பதற்காக ஹாஸ்டல் கட்டாயமாக்கப்படவில்லை. 36 குழந்தைகள் மட்டும் ஹாஸ்டலில் இருக்கிறார்கள்.
இவர்களிடம் மிக சிறிய வயதிலேயே பெண்களை கல்யாணம் செய்து கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. 12 வயதில் திருமணம் செய்து 20 வயதில் நான்கைந்து குழந்தைகள் பெற்று உடல் சோர்ந்து போகிறார்கள். எங்களிடம் படித்த ஒரு பெண்குழந்தைக்கு இன்று திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது என்கிறார் ரேவதி.
ஐந்தாம் வகுப்பு வரை இங்கே தங்கி கல்வி கற்கும் குழந்தைகள் ஆறாம் வகுப்புக்கு வேறு பள்ளிக்கு சென்றபின் என்ன செய்வார்கள்?
“எங்கள் பள்ளி விடுதியிலேயெ தங்கிக் கொண்டு வேறு பள்ளிகளுக்குச் செல்லாம். அது போல எங்களிடம் பயின்று இன்று சிக்கல் உயர்நிலைப்பள்ளியிலும், பொரவச்சேரி நடுநிலைப்பள்ளியிலும் மேலே படிக்கும் பிள்ளைகள் பள்ளி விடுதியில் தங்கிப் பயில்கிறார்கள். பூம்பூம்மாட்டுக்காரர், நரிக்குறவர் சமூகங்களில் இதுவரை ஒரு பட்டதாரிகூட இல்லை. யாரும் பள்ளி இறுதி வகுப்புவரை வந்ததில்லை. இந்த பிள்ளைகள் அந்த குறையை போக்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறதுஎன்கிறார் ரேவதி.
பள்ளிக் கட்டிடம் இப்போதைக்கு வாடகைக்குத்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. விப்ரோ நிறுவனம் வானவில்லுக்கு ஒரு சொந்தக்கட்டிடம் கட்டித் தர முன்வந்து கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கிறது. இப்போதிருக்கும் பள்ளியிலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது புதுக் கட்டிடம். அங்கேயே குழந்தைகள் தங்குவதற்கு வசதியாக ஒரு விடுதியும் வளாகத்திற்குள்ளேயே கட்டிக்கொண்டிருக்கிறார்கள். வகுப்பறைகள் பாதி கட்டப்பட்ட நிலையில் நிதிவசதியின்றி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
குழந்தைகளுக்கு காலை உணவு, மதிய உணவு ஆகியவை கட்டாயம் பள்ளியில்தான். பள்ளியிலேயே இரவு தங்கும் பிள்ளைகளுக்கு இரவு உணவு வழங்கப்படுகிறது. குழந்தைகளை அவரவர் வீடுகளில் விடச் செல்லும்போது மளிகை பொருட்களை வேன் ஓட்டுனர் சாரதி (பெயரே சாரதிதான்) வாங்கி வந்து விடுகிறார். சிறிய அளவில் நிலம் வாங்கி அதில் காய்கறிகள், நெல் போன்றவற்றை பயிரிட்டிருக்கிறார்கள். மாடு ஒன்று சொந்தமாக உள்ளது. அதனால் குழந்தைகளின் உணவுக்குத் தேவையான பொருட்கள், பால் போன்றவற்றை கூடுமானவரை இவர்களே உற்பத்தி செய்துகொள்கிறார்கள். ஆனாலும் கூட அன்றாட தேவைகளுக்கான நிதி பற்றாக்குறையாகவே உள்ளது. அதுமட்டுமில்லாது வயல்களில் வேலை செய்பவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சம்பளம், தற்போதைய பள்ளிக் கட்டிட வாடகை, சமையல் செய்பவர்களுக்கான சம்பளம், குழந்தைகளுக்கான சீருடைச் செலவு இப்படி கணக்கெடுத்தால் செலவு எங்கேயோ போகிறது. சமாளிப்பது கஷ்டமாக இருந்தாலும் தொடர்ந்து பள்ளியை நம்பிக்கையோடு நத்திக்கொண்டிருக்கிறார் ரேவதி.
பள்ளியை விட்டுக் கிளம்பும்போது இங்கேயே இருங்க! இங்கேயே இருங்க என்று குழந்தைகள் சுற்றி சுற்றி வந்தது இன்னமும் நிழலாடுகின்றது. அவர்களின் சிரிக்கும் கண்களும் தயங்காத பேச்சும் இன்னும் கண்களை விட்டு அகல மறுக்கின்றன. நரிக்குறவர் மற்றும் பூம்பூம்மாட்டுக்காரர் சமுதாயத்தின் முதல் பட்டதாரியை பிற்காலத்தில் உருவானால் அதற்குக் காரணமாகவும், அந்த பட்டதாரியை பட்டை தீட்டிய இடமாகவும் இருக்கும் வாவில்.
நன்றி : புதிய தலைமுறை