Thursday, May 30, 2013

என்ன ஆனது திருநங்கைகள் நலவாரியம்?

தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தத் திட்டமாக இருந்தாலும் அது அடுத்த கட்சி ஆட்சிக்கு வரும் வரைதான் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. இதற்கு திருநங்கைகள் நலவாரியமும் விதிவிலக்கல்ல. கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டதால் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது வாரியம். ஆரம்பத்தில் மிகவேகமாக செயல்பட்ட வாரியம் இப்போது என்ன செய்கிறதென்றே தெரியவில்லை. 

2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி நலவாரியம் அமைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.  ஆண்டுதோறும் ஏப்ரல் 15 அன்று திருநங்கைகள் தினம் கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. திருநங்கைகள் நலவாரியத்தில் மொத்தம் 23 பேர். அதில் 9 பேர் திருநங்கைகள்; மற்றவர்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள். இந்த நலவாரிய உறுப்பினர்களின் பதவிக்காலம் 2011ம் ஆண்டு வரை இருந்தது.  ‘’வாரியத்தின் கூட்டம் 2011க்குப் பிறகு நடக்கவில்லை. புதிய உறுப்பினர்கள் நியமனமும் நடைபெறவில்லை’’ என்கிறார் பிரியாபாபு. இந்த நலவாரியம் திருநங்கைகளுக்கென்று தனியாக சில திட்டங்களை செயல்படுத்துவது, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மக்களுக்கான திட்டங்களில் திருநங்கைகளையும் இணைப்பது என்று இரண்டு வழிகளில் செயல்பட்டது. திருநங்கைகள் சுயதொழில் தொடங்க 20,00 வரை கடனுதவி, தையல் எந்திரங்கள் வழங்குதல், சிகிச்சைக்காகவோ, பாலின மாற்று அறுவை சிகிச்சைக்காகவோ சென்னைக்கு வரும் திருநங்கைகள் தங்குவதற்கான தற்காலிக விடுதி, திருநங்கைகளுக்கென அடையாள அட்டை ஆகியவை திருநங்கைகளுக்கான திட்டங்கள். 

திருநஙகைகளுக்கான இலவச நிலப் பட்டா வழங்குதல், வீடு வழங்கும் திட்டம், சுய உதவிக் குழுக்கள் உருவாக்குதல், கல்வி, வேலைவாய்ப்பு, காப்பீட்டுத் திட்டம், ரேஷன் அட்டை மூலம் எல்லோரையும்போல ரேஷன் பொருட்களைப் பெறுதல், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல் என்று பல திட்டங்கள் நலவாரியத்தின் மூலம் செயல்படத் துவங்கின. ‘’திருநங்கைகள் நலவாரியத்தின் முக்கிய பங்களிப்பாக நான் நினைப்பது மருத்துவமனையில் இலவசமாக பாலின மாற்று சிகிச்சை செய்துகொள்ளும் திட்டம்தான்.’’ என்கிறார் பிரியாபாபு. முதலில் சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி போன்ற குறிப்பிட்ட மருத்துவமனைகளில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அரசுக்கு இவ்விஷயத்தில் ஆர்வம் இருந்த அளவுக்கு தொடக்கத்தில்  நம் மருத்துவர்களுக்கு இதில் அனுபவமில்லை என்கிறார்கள் திருநங்கைகள். ‘’எனக்கு சென்னை அரசுப் பொது மருத்துவமனையில்தான் அறுவை சிகிச்சை நடந்தது. இதில் அனுபவம் உள்ள மருத்துவர்கள் இல்லாததால், ஒரு திருநங்கையின் வாழ்வில் அறுவை சிகிச்சை சரியாகச் செய்யவில்லை என்றால் அவ்வளவுதான். அறுவை சிகிச்சைக்குப் பின்னால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன என்பது குறித்தெல்லாம் எதுவுமே சொல்லவில்லை. ஒரு திருநங்கைக்கு சரியாக செய்யாமல் மீண்டும் மீண்டும் 3 முறை செய்தார்கள். அவர்கள் கற்றுக்கொள்ள நாங்கள்  நான்கைந்து பேர் பரிசோதனை எலிகளாக்கப்பட்டோம். இப்போது சென்னை அரசு பொது மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்வதில்லை. கீழ்ப்பாக்கத்தில் மட்டுமே செய்கிறார்கள். எங்களுக்கு நிகழ்ந்தது போல் இப்போது நடப்பதில்லை. அது வரையில் பரவாயில்லை’’ என்கிறார் ஒரு திருநங்கை. 

திருநங்கைகளுக்கு வீடுகொடுக்கும் திட்டம் நன்றாகவே செயல்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஊருக்கு வெளியில்தான் ஒதுக்குபுறமாக வீடுகள் ஒதுக்கப்பட்டன. இந்தக் குறை இருந்தாலும் ஒரு திருநங்கைக்கு இருப்பிடம் என்பது மிகவும் அவசியம். வீட்டை விட்டு, குடும்பத்தை விட்டு வெளியேறிய திருநங்கைகளுக்கு சொந்தமாக ஒரு வீடு என்பதே மிகப்பாதுகாப்பானது என்கிற வகையில் அதை அனைவருமே ஆதரித்தனர்.

‘’நானும் லிவிங் ஸ்மைல் வித்யாவும் நலவாரியத்தை ஒரு லேப் டாப் வாங்கிக் கேட்டு அணுகினோம். நாங்கள் படித்திருக்கிறோம் என்பதால் அது பல வகையிலும் எங்களுக்கு உதவும் என்று நம்பினேம். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அலைக்கழித்தார்கள். இறுதியில் லேப் டாப்புக்கு பணம் தர முடியாது. 20,000 ரூபாய் கடனுதவி வாங்கிக்கொள்ளுங்கள். அதையும் நான்கு திருநங்கைகள் சமமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்றார்கள். ஏதாவது சுயதொழில் செய்து பிழைத்துக்கொள்ளுங்கள் என்றார்கள். இது போதும் உங்களுக்கு என்கிற தொனிதான் அரசு அதிகாரிகளிடம் தென்பட்டது. வாடிக்கையான தையல் மெஷின் போன்ற உதவிகள் வழங்குவது போன்றவற்றை மட்டுமே செய்தார்கள். ஆனாலும் இந்த அளவுக்காவது நலவாரியம் செயல்பட்டதே என்று நாங்கள் சந்தோஷப்பட்டோம்’’  என்கிறார் ஏஞ்சல் கிளாடி.

ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவையெல்லாம் நல வாரியம் அமைப்பதற்கு முன்பே திருநங்கைகளுக்குக் கிடைத்திருந்தாலும், மேலும் ஒழுங்குப்படுத்தப்பட்டது நலவாரியம் அமைக்கப்பட்டபின்புதான். மற்ற நாடுகளில் திருநங்கைகள் எந்த பாலின அடையாளத்தை விரும்புகிறார்களோ அதன்படியே மாற்றிக்கொள்ளலாம். அதாவது பாலின அறுவை சிகிச்சை முடிந்தவுடன், ‘பெண்’ என்று தனது எல்லா சான்றிதழையும் மாற்றிக்கொள்ளலாம். இதன்மூலம் பணியிடங்களில், வேலைவாய்ப்பில், கல்வி நிறுவனங்களில் என்று எங்குமே அவர்கள் பாகுபாட்டை எதிர்கொள்வதில்லை. ஆனால் இந்தியாவில் அறுவைசிகிச்சை செய்துகொண்டபின் பெயரை மாற்றிக்கொண்டாலும் பிறப்புச் சான்றிதழ் உட்பட எல்லா சான்றிதழ்களையும் மாற்றுவதில் பல சிக்கல்கள் உள்ளன. ’’இதனால் ஒரு சான்றிதழில் பழைய ஆண் அடையாளத்திலும், வேறொரு சான்றிதழில் புதிய அடையாளத்திலும் நாங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறோம். இதனால் அரசு அலுவலக நடைமுறைகளில் ஏகக் குழப்பங்கள். எங்கே சென்றாலும் திருநங்கை என்கிற அடையாளத்துடனேயே வாழ வேண்டியிருக்கிறது. பெண்ணாக நாங்கள் பார்க்கப்படுவதில்லை. இதுபோன்ற சிக்கல்களுக்கெல்லாம் நலவாரியம் ஒரு தீர்வு தரும் என்று நம்பினோம். ஆனால் இப்படி கிடப்பில் போடப்பட்டிருப்பதைப் பார்த்தால் கவலையாக இருக்கிறது’’ என்கிறார் ஒரு திருநங்கை. எல்லா திருநங்கைகளும் பெண் என்கிற அடையாளத்தை விரும்புவதில்லை. ஒரு சிலர் மூன்றாம பாலினமாகப் பார்க்கப்படவேண்டும் என்கிற கருத்தை முன்வைக்கிறார்கள். 

‘’அடையாள அட்டை போன்றவற்றை வழங்குவதோ அல்லது திருநங்கைகளுக்கான தொண்டு நிறுவனத்துக்கு நிதியுதவி வழங்குவதையோவிட நலவாரியம் என்பது திருநங்கைகளின் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கும் ஒரு கரமாக செயல்படவேண்டும். பாலியல்ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொள்வது, குடும்பச் சிக்கல்களை எதிர்கொள்வது, கல்வி - வேலைவாய்ப்பில் சம உரிமை போன்றவற்றுக்கு நலவாரியம் முன்னுரிமை கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.’நலவாரியம் திருநங்கைகளுக்கு மட்டுமானதாக இல்லாமல், திருநம்பிகளுக்கானதாகவும் இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். திருநங்கைகளைவிட திருநம்பிகளுக்குத்தான் சிக்கல்கள் அதிகம். ஆகவே அவர்களையும் இந்த நலவாரியத்தில் இணைத்துக்கொண்டு, திருநங்கைகள் நலவாரியம் என்ற பெயரில் இல்லாமல் பாலின சிறுபான்மையினர் நலவாரியம் என்கிற பெயரில் விரைவில் மீண்டும் செயல்பட துவங்கவேண்டும்; இதற்கு தமிழக முதல்வர் ஆவன செய்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’’ என்கிறார் லிவிங் ஸ்மைல் வித்யா.

சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதியை தொடர்பு கொண்ட போது  ''திருநங்கைகள் மீது அக்கறையுள்ள அரசு இது.  திண்டுக்கல் அருகே முதன் முதலாக திருநங்கை ஒருவருக்கு அரசு வேலை வழங்கியிருக்கிறோம் திருநங்கை களுக்கு பென்ஷன் வழங்குகிறோம். குழுக் களாக உள்ள அவர்களை ஒன்றிணைக்க வேண்டும். புதிய உறுப்பினர்களைக் கொ ண்டு நலவாரியத்தைப் புதுப்பிக்க இருக்கிறோம். அதற்கான முயற்சியில் இருக்கிறது அரசு''  என்றார்.

நலவாரியத்தின் முக்கிய திட்டமான சென்னையில் திருநங்கைகளுக்கான தற்காலிக விடுதி இப்போது செயல்படுவதில்லை. சென்னை கோட்டை அருகே இருந்த அந்த விடுதி பலருக்கு உதவியாக இருந்தது. அதுபோலவே 20,000 கடனுதவியும் இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இப்படி நலவாரியத்தின் செயல்பாடுகள் நின்று இப்போது கோமா நிலையில் இருக்கும் திருநங்கைகள் நலவாரியம் மீண்டும் செயல்படவேண்டும் என்பது பாலின சிறுபான்மையினராகிய அவர்களின் எதிர்ப்பார்ப்பு. நிறைவேற்றுமா தமிழக அரசு?

நன்றி : இந்தியா டுடே

Monday, May 27, 2013

மறைக்கப்படுகிறதா தலித் மாணவர்களுக்கான அரசாணை?


மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 2012 ஜனவரி 9 அன்று ஒர் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையின்படி தமிழகத்தில் அனைத்து விதமான படிப்புகளுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 100% கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது. தமிழக அரசு இந்தச் செய்தியை சரியான முறையில் பிரசாரம் செய்யாத காரணத்தால், விஷயம் தெரியாத பல மாணவர்கள் சென்ற கல்வியாண்டில் பணத்தைக் கட்டினார்கள். பலர் பணம் கட்ட முடியாமல் உயர்கல்வியை கைவிட்டனர். தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறை வெளியிட்ட அந்த அரசாணைப்படி சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் அனைத்து படிப்புகளுக்கும், அரசு ஒதுக்கீடு செய்த இடங்களில் பயிலும் ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்களிடம் பெறப்பட்ட தொகை முழுவதையும் 2011-~12 கல்வி ஆண்டில் இருந்து திருப்பிச் செலுத்த வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.

அரசு இந்த அரசாணை குறித்து போதிய அளவில் விளம்பரம் செய்யவில்லை. கல்விக்கட்டணம், டியூஷன்கட்டணம், விளையாட்டு, மாணவர் சங்கம், நூலகம், பத்திரிகைகள், மருத்துவப் பரிசோதனை போன்ற கட்டணங்களும் இதில் அடங்கும். சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும் இவை பொருந்தும். இரண்டு லட்ச ரூபாய் வரை வருமான வரம்புள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இந்த அரசாணை பொருந்தும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டிய தலித் மாணவர்களில் பலருக்கு இந்த அரசாணை குறித்து தெரியவில்லை. ஏனெனில் செய்தித் தாள்கள் மூலமாகவோ, பிற ஊடகங்கள் மூலமாகவோ தமிழக உயர்கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை என்று எந்தத் துறையுமே பொதுமக்களிடம் இந்த விஷயத்தைக் கொண்டு சேர்க்கவில்லை.

2011-12 கல்வி ஆண்டில் இருந்து இது நடைமுறைப்படுத்தப்படும் என்று ஆணையில் இருக்கிறது. அப்படியென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறியியல், மரு த்துவம், தொழிற்கல்வி, கலை மற்றும் அறிவியல் துறையில் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கும் இந்த ஆணை பொருந்துகிறது. ஆனால் கல்வி நிறுவனங்களில் அரசு ஆணை விஷயம் தெரியாததால், மாணவர்கள் கட்டணம் செலுத்த சென்ற ஆண்டு நிர்பந்திக்கப்பட்டார்கள். பொறி யியல் மற்றும் மருத்துவம் போன்ற தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் சிலர் கட்ட ணம் கட்ட இயலாத நிலையில், இடை நீக்கம் செய்யப்படும் சூழலும் உருவானது. 

“2012 ஜூலை மாதத்தில் நாங்கள் இது குறித்து   கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதன்பிறகு ஊடகங்களில் ஓரளவுக்கு செய்தி வெளியானது. ஆனாலும் முழுமையான பலன் கிடைக்கவில்லை. மதுரையைச் சுற்றியுள்ள 30 கல்லூரிகள் அரசாணை தங்களுக்கு வரவில்லை  என்கின்றன. அந்த கல்லூரிகளை அழைத்து மே 22 அன்று விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தினோம்” என்கிறார் துடி இயக்கத்தைச் சேர்ந்த பாரதிபிரபு.

அரசாணை 6  மேம்படுத்தப்பட்டு  1.9. 2012 அன்று சில திருத்தங்களுடன் அரசாணை 92 வெளியிடப்பட்டது. இதன்படி  அரசாணை 92 நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்று கண்காணிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நியமிக்கப்படவில்லை.  கல்வியாளர் பேராசியர் பிரபா கல்விமணி ’’மக்கள் கல்வி கூட்டமைப்பு சார்பாக மே 16 அன்று விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் இந்த அரசாணையை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை எதிர்க்க ஊர் ஊராகச் சென்று கூட்டம் நடத்தவிருக்கிறோம். அப்போது இந்த அரசாணை குறித்தும் பேசி மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் திட்டம் இருக்கிறது.கடந்த ஆண்டு போல் ஆகிவிடாமல், இந்த ஆண்டாவது முழுமையாக விஷயம் மாணவர்களையும் பெற்றோரையும் சென்றடைய வேண்டும்” என்கிறார். எது எதற்கோ அரசுப் பணத்தை செலவிடுகிறது அரசு. ஈராண்டு சாதனைகளைப் பட்டியல் இடும் விளம்பரச் செலவில் கொஞ்சம் இதற்கும் செலவிட்டு இந்த அரசாணை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.  

நன்றி : இந்தியா டுடே         

Monday, May 20, 2013

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் - தகுமா?


’’1952ல் லஷ்மணசாமி முதலியார் கமிஷன் அளித்த அறிக்கைதான் தாய்மொழிவழிக் கல்வியை அங்கீகரித்தது. ஆங்கிலேயர் வகுத்திருந்த சட்டங்களின்படி ஆங்கிலவழிக் கல்விக்கு மட்டுமே அனுமதி இருந்தது. தாய்மொழிவழிக் கல்வி என்கிற உரிமையை போராடித்தான் பெற்றோம். இந்தப் போராட்ட வரலாறை தூக்கியெறிந்து தமிழக அரசு திடீரென்று ஆங்கில வழிக் கல்வியை அரசுப் பள்ளிகள் துவங்கவிருப்பதாக அறிவித்திருப்பது மிகத் தவறு.’’ என்கிறார் கல்வியாளர் இரா. நடராசன்.

தமிழக அரசின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த தமிழகத்தில் ஆங்கிலவழிக்கல்விக்கு எதிர்ப்பு என்பது இயல்பான ஒன்றுதான். மும்மொழிக் கொள்கையை எதிர்த்து இருமொழிக்கொள்கை வந்தாலும், அந்த இருமொழிகளில் ஒன்றாக வேண்டுமானால் ஆங்கிலத்தை அனுமதிக்கலாமேயொழிய, ஒரே மொழியாக ஆங்கிலத்தை அனுமதிப்பதை திராவிட, தமிழ் தேசிய அமைப்புகள் வரவேற்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றன. இன்னொரு பக்கம், உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்ற மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஏற்ப, நவீன அடிமைகளை உருவாக்க கல்வி மற்றும் மொழிக் கொள்கைகள் வார்க்கப்படுகின்றன என்றும் அந்தக் கொள்கைகளை எதிர்ப்பதற்கு மாறாக, இவ்வாறு அரசுப்பள்ளிகளிலேயே ஆங்கிலப் பயிற்றுமொழியைத் திணிப்பது என்பது அவற்றின் முன் சரணடைகிற செயலாகவே இருக்கிறது என்றும் எதிர்காலத் தமிழ்த்தலைமுறைகளை சுயசிந்தனையற்ற கூட்டமாக மாற்றுகிற இந்த முடிவை எதிர்ப்பதாகவும் இடதுசாரி முகாமின் குரலாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கூறுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களில் 19,000 பேருக்கும் மேற்பட்டோர் வென்றனர். அவர்களில் வெறும் 5 பேர் மட்டுமே அரசுப் பள்ளியில் வேலை வேண்டாம் என்று விருப்பம் தெரிவித்தவர்கள். மற்ற அனைவருமே அரசுப் பள்ளிகளில்தான் வேலை செய்ய விரும்புகிறார்கள். தகுதித் தேர்வில் வென்றவர்கள் அரசுப் பள்ளிகளில்தான் பணியாற்றுகிறார்கள். ‘’அப்படியெனில் தகுதித் தேர்வில் வெல்லாதவர்கள்தான் தனியார் பள்ளிகளில் பணியாற்றுகிறார்கள். காவிரி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதை மிக முக்கியமான விஷயமாக சட்டமன்றத்தில் பேசிய முதல்வருக்கு, தகுதித் தேர்வில் வென்றவர்கள் பணியாற்றுவது அரசுப் பள்ளிகளில்தான் என்று பெருமையாக ஏன் அறிவிக்கவில்லை? அப்படியெல்லாம் அறிவித்தால் மக்களுக்கு அரசுப் பள்ளிகளின்மீது ஓரளவுக்கேனும் நம்பிக்கை ஏற்படும். ஆனால் அரசோ மறைமுகமாக தனியார் பள்ளிகளைத்தான் ஊக்குவிக்கிறது’’ என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு

ஒரு மொழியாக ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதை நம் கல்வியாளர்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அதுவே பயிற்றுமொழி என்பதில்தான் சிக்கல் தொடங்குகிறது. மொழியறிவு என்னும் சொல்லே தவறான ஒன்று. மொழிப்புலமைதான் இருக்கமுடியும். அரசுப் பள்ளிகளில் பயின்றவர்கள் பெரும் ஆராய்ச்சியாளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் வந்த வரலாறு உண்டு. மெக்காலே கல்விமுறை மனப்பாடத்தை போதிக்கிறது. மனனம் செய்து தேர்வில் வெற்றிபெறும் மதிப்பெண் முறையில் ஆங்கிலவழிக் கல்வி பயிலும் மாணவர்களில் எத்தனை பேர் புரிந்துகொண்டு படிக்கிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி. 

‘’தாய்மொழியில் கல்வி கற்காத ஒரு சமூகத்திலிருந்து பாரதி, தாகூர் போன்ற மொழியாளுமை நிறைந்தவர்கள் கிடைக்கமாட்டார்கள். தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழியானால், சிந்திப்பது வேறுமொழியில் என்றாகிவிட்டால் அது ஒரு சமூகத்துக்கு எவ்வளவு பெரிய பின்னடைவு! அறிவியல்பூர்வமாகவும் தாய்மொழியில் பாடங்கள் கற்கும் குழந்தையின் புரிதல் இன்னும் மேம்பட்டதாகவே இருக்கும்’’ என்கிறார் இரா.நடராசன்.

இந்தியாவின் முதல் கல்விக்குழு, கோத்தாரி குழு, யஷ்பால் குழு,  2005 தேசிய கல்வித் திட்டம், இந்திய அரசு பிறப்பித்த 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம், சமச்சீர்க் கல்வி குறித்து ஆய்வு செய்தளித்த முத்துக்குமரன் குழு என்று எல்லாமுமே தாய்மொழி வழி கல்வியையே வலியுறுத்துகின்றன. ஆகவே தொடக்கக் கல்வியில் ஆங்கிலத்தை பயிற்றுமொழியாக்குவதை கல்வியாளர்கள் எதிர்க்கிறார்கள். மேலும், அரசுப் பள்ளிகளில் பயிலும் தமிழவழி மாணவர்களுக்கும், ஆங்கிலவழி மாணவர்களுக்குமிடையே பாகுபாடுகள் தோன்றக்கூடிய வாய்ப்புள்ளது. இது சம உரிமை மற்றும் சமூக நீதிக்கே உலைவைப்பதாகவும் மாறிவிடக்கூடிய அபாயமும் உண்டு. அரசின் தன் முடிவை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று கூறி சிதம்பரத்தில், தமிழக மாணவர் முன்னணி போராட்டம் நடத்தியது.

அரசின் இந்த அறிவிப்பை வரவேற்பதாகக் கூறுகிறார் உளவியலாளர் பிருந்தா ஜெயராமன். ‘’ஒரு மொழியை கற்றுக்கொள்ள குழந்தைப் பருவத்தைவிட சிறந்த பருவம் வேறு இல்லை. குழந்தைப் பருவத்தில் நான்கைந்து மொழிகளைக் கூட இயல்பாக கற்றுக்கொள்ள முடியும். நம் ஊரில் மேற்படிப்பு எல்லாமே ஆங்கிலத்திலுள்ள சூழலில் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழில் கற்றுவிட்டு திடீரென்று ஆங்கிலத்தில் கற்க மாணவர்கள் கஷ்ட்பபடுகின்றனர். இந்த சிரமம் இனி இல்லை. அத்துடன் மாறிவரும் தொழில்நுட்ப யுகத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே புதிய விஷயங்களுக்கான நூல்கள் வருகின்றன. இந்திய மொழிகளின் ஆராய்ச்சிக்காகவெல்லாம் பணம் ஒதுக்குவதில்லை. ஆகவே சிறு வயதில் இருந்தே ஆங்கிலத்தில் கற்றுக்கொள்வது பின்னாளில் பலனளிக்கும். ‘’ என்கிறார்.

உயர்கல்வி நூல்கள் எதுவும் தமிழில் இல்லை. தஞ்சாவூரைச் சேர்ந்த மருத்துவர் ஜெயராமன் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு தமிழ் மீது கொண்ட அளவற்ற பற்று காரணமாக தமிழில் எம்.பி.பி.எஸ். பாடங்களை மொழிபெயர்த்தார். தனது எம்.டி. தேர்வையும் தமிழிலேயே எழுதினார். ஆனால் தமிழில் தேர்வெழுதியதால் அவருக்கு எம்.டி. பட்டம் மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து ஜெயராமன் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அவர் உருவாக்கிய எம்.பி.பி.எஸ். பாடத்திட்டத்தின் மொழியாக்கமும் அரசின் அங்கீகாரத்துக்காக காத்திருக்கிறது. ஜெயராமனைப் போல எத்தனையோ வல்லுநர்கள் , சட்டம், மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் இருப்பார்கள். அவர்களைக் கொண்ட குழு ஒன்றை அழைத்து உயர்கல்வி முழுவதையும் தமிழில் உருவாக்குவதுதான் அறிவியல்பூர்வமான அணுகுமுறையாக இருக்கும். ஆனால் அதைவிட்டுவிட்டு அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலத்தைப் புகுத்துவது சிக்கலானது. தமிழக தொடக்கப்பள்ளிகளில் ஓராசிரியர், ஈராசிரியர் முறை உள்ளது. அவர் ஒருபோதும் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவராக இருக்கப்போவதில்லை. ஒரு கணித ஆசிரியரையோ, அறிவியல் ஆசிரியரையோ ஒரு பள்ளிக்குப் போட்டுவிட்டு அவரேதான் எல்லா பாடங்களையும் நடத்துவதையும் நாம் பார்க்கிறோம். அப்படி இருக்கையில் ஆங்கிலவழிக் கல்வி கொண்டுவருவது ஓராசிரியர் ஈராசிரியர் பள்ளிகளில் சிக்கலை உருவாக்கும். ஆசிரியர் - மாணவர் விகிதாசாரம் 1:20 என்று உலகெங்கும் உள்ளது போல் இல்லாவிட்டாலும் 1:40 என்று கூட இல்லை. தமிழகத்தில் 1:80 ஆக உள்ளது. ஆகவே ஒவ்வொரு குழந்தைக்கும் கூடுதல் கவனம் கொடுக்கவேண்டி இருக்கும். ஆனால் ஆசிரியர் எண்ணிக்கை அதற்கு உதவாது. இது போன்ற சிக்கல்களுக்கு அரசு என்ன செய்யப்போகிறது என்பது கேள்விக்குறி.

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி இல்லையென்பதால் மக்கள் ஆர்வமாய் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதில்லை என்பதாலேயே இந்த முடிவுக்கு வந்திருப்பதாக அரசு கூறுவதை மறுக்கிறார்  பிரின்ஸ் கஜேந்திரபாபு. ’’அரசே ஒருவிதத்தில் அரசுப்பள்ளிகள் தரமற்றவை என்று ஒத்துக்கொள்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்டத்தில் முதல் 10 இடம் பிடிக்கும் ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களை அரசே 28,000 வரை செலவு செய்து ‘உயர்கல்வி தரும் உயர்கல்வி நிறுவனம்’ ஒன்றில் படிக்கவைக்கிறது. பெரும்பாலும் தனியார் பள்ளிகளில்தான் படிக்கவைக்கப்படுகிறார்கள். இது மறைமுகமாக அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி இல்லை என்பதை அரசே ஒப்புக்கொள்வதுதான். அரசே இப்படி இருந்தால் மக்களும் தனியார் பள்ளிகளைத்தானே தேடிப் போவார்கள். ஆங்கில மீடியம் இல்லாததால்தான் மக்கள் அரசுப் பள்ளிகளை நாடவில்லை என்பது உண்மையல்ல. தரமில்லாததால் வரவில்லை என்பதுதான் உண்மை. அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவேண்டும். பள்ளிகளில் தேவையான ஆசிரியர்கள் இல்லை. கட்டமைப்பு வசதிகள் இல்லை. கழிப்பறை இல்லை, அப்படியே இருந்தாலும் அதைத் துப்புரவு செய்ய ஏற்பாடுகள் இல்லை,  நல்ல கட்டடம் இல்லை. ஆனால் இவற்றையெல்லாம் மேம்படுத்தாமல் ஆங்கிலவழிக் கல்வி என்று அறிவித்தால் யாரும் வரமாட்டார்கள். வெறுமனே தமிழன்னைக்கு 100 கோடி ரூபாய்க்கு சிலை வைப்பதற்கு பதில் அந்தத் தொகையில் இவற்றை செய்யட்டும் முதலில்’’ என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.


நன்றி : இந்தியா டுடே






Monday, May 13, 2013

கூடங்குளம் - ஊழல் குற்றச்சாட்டால் கேள்விக்குள்ளாகும் பாதுகாப்பு


மே 14 அன்று கன்னியாகுமரி - தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் ஒரு வேலை நிறுத்தம் செய்கின்றனர். ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. கூடங்குளம், செட்டிக்குளம் போன்ற பகுதிகளில் கடையடைப்பும் நடத்தப்படுகின்றன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையொட்டி அணு உலை செயல்படத் தொடங்கிவிடுமோ என்கிற பதட்டம் அப்பகுதி மக்களிடையே உள்ளது. கூடங்குளம் அணு உலை இயங்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு பல மட்டங்களிலும் பேசுபொருளாகி இருக்கிறது. போராட்டக்குழு தலைவரான சுப. உதயகுமார் ’’இன்னும் தீவிரமாக சுற்றுவட்டார கிராமங்களுக்குச் சென்று பிரசாரம் செய்யவிருக்கிறோம். அப்போது நாங்கள் கைதுசெய்யப்படலாம். அதற்கும் தயாராகத்தான் இருக்கிறோம். எல்லாவற்றையும் மீறி அணு உலை இயங்கத் தொடங்குமென்றால், தெருவில் இறங்கி போராட்டம் நடத்துவோம்’’ என்கிறார்.

கூடங்குளம் அணு மின் நிலைய திட்டத்துக்கு 1989ல் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டிருக்கிறது.  அந்த அனுமதிக் கடிதம், முதலில் 500 மெகாவாட்ஸ் திறனுள்ள 4 அணு உலைகளை அமைகக்விருப்பதாகவே தொடங்குகிறது. அதே கடிதத்தில் பிற்பகுதியில் 1,000 மெகாவாட்ஸ் திறன் கொண்ட 2 அணு உலைகளை அமைக்கவிருப்பதாக எழுதப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் எத்தனை அணு உலைகள் அமைக்கப்படவிருக்கின்றன என்பதில் அரசுக்கே தெளிவில்லை என்பது விளங்குகிறது. அணு உலையை குளிர்விக்க பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் எடுத்துவருவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தது அரசு. ஆனால் பேச்சிப்பாறை பகுதியில் உள்ள மக்களுக்கான தண்ணீர்த் தேவை, அணையின் கொள்ளளவு, நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள மழையின் அளவு ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போதுதான் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது சாத்தியமில்லை என்கிற உண்மை 2004ல் உறைக்கிறது அரசுக்கு.  அதன்பிறகுதான் கடல் நீரில் இருந்து உப்பை பிரித்தெடுத்து அந்தத் தண்ணீரை பயன்படுத்தப்போவதாக திட்டத்தை மாற்றுகிறது அரசு. அரசு விதிகளின்படி, அறிவித்த திட்டத்தில் ஏதாவது மாறுதல் இருந்தால் மீண்டும் ஒரு முறை சுற்றுச்சூழல் அனுமதியும், பொதுமக்கள் கருத்துக் கேட்பும் நடத்தப்பட வேண்டும். ஆனால் இவற்றை அரசு செய்யவில்லை. ஆகவே இப்போதிருக்கும் சூற்றுச்சூழல் அனுமதி செல்லாது என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் ஜி.சுந்தர்ராஜன் வழக்கு தொடர்ந்தார்.
புகுஷிமாவுக்குப் பிறகு பிரதமர் நியமித்த குழு, பாதுகாப்பு தொடர்பான 17 பரிந்துரைகளை நிறைவேற்றாமல் அணு உலையில் எந்த செயல்பாடும் கூடாது என்று கூறியிருக்கிறது. இந்த 17 பரிந்துரைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு அளித்த இந்திய அணுசக்திக் கழகம் 17 பரிந்துரைகளை நிறைவேற்றாமல் செயல்பாட்டில் இறங்கமாட்டோம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தது. ஆனால் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இடைப்பட்ட காலத்தில் எரிபொருள் நிரப்ப உத்தரவிட்டுவிட்டது. எரிபொருள் நிரப்பியபின் தண்ணீரை ஊற்றி செயல்பாட்டைத் தொடங்குவதற்குப் கிரிடிக்காலிட்டி (Criticality) என்று பெயர்.  இதனையடுத்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மீண்டும் ஒரு வழக்கு போட்டது. ''17 பரிந்துரைகளில் 6 பரிந்துரைகளை நிறைவேற்றி விட்டோம். மீதமுள்ளவை அதீத பாதுகாப்பு சார்ந்தது (Abundant Safety) என்றது அரசு. ’’உலகமெங்கும் அணு உலை குறித்த விழிப்புணர்வு வந்துவிட்ட சூழலில், அங்கு வசிப்பவர்கள் தலித்துகளாகவும் மீனவர்களாகவும் இருப்பதால் அவர்களுக்கு அதீத பாதுகாப்பு தேவையில்லையென அரசே நினைத்துவிட்டது போலிருக்கிறது’’ என்கிறார் மனுதாரர் ஜி.சுந்தர்ராஜன். ‘’அமைச்சர்களுக்கு மட்டும் இசட், இசட்+ என்று பாதுகாப்பை வலுப்படுத்திக்கொண்டே போகிறீர்களே...! சாதாரண மகக்ள் என்றால் அத்தனை இளக்காரமா?’’ என்று உயர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘நாங்கள் தொழில்நுட்பக்குழு அல்ல’ என்று கூறிவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். ’’17 பரிந்துரைகளையும் நிறைவேற்றியபின் செயல்பாடு தொடங்கும் என்று உறுதி அளித்துவிட்டு 6 முடிந்தவுடன் எரிபொருளை நிரப்புவது சரியா என்று விசாரிக்க தொழில்நுட்பக் குழுவாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை” என்பது பூவுலகின் நண்பர்கள் தரப்பின் வாதமாக இருந்தாலும், அதை மறுத்துவிட்டது உயர் நீதிமன்றம். அதன்பின்னரே உச்ச நீதிமன்றத்தை நாடியது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு. ‘எத்தனை ஆயிரம் கோடி செலவழித்திருந்தாலும் மக்களின் பாதுகாப்பே முக்கியம்’ என்று உச்ச நீதிமன்றம் விசாரணையின்போது கருத்து தெரிவித்தது. டிசம்பர் 3 வரை விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இப்போது வெளிவந்திருக்கிறது. 5 அமைப்புகள் இணைந்து அணு உலையின் ஒவ்வொரு பாகத்தையும் ஆராய்ந்து அதன் தரம் குறித்து அறிக்கை அளித்தபின்னரே அணு உலை இயக்கபப்டவேண்டும் என்று கூறியிருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆனாலும் சுற்றுப்புற மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சியை அரசு அளிக்காமல் இருப்பது தொடர்பான எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை இந்தத் தீர்ப்பு

‘’இந்தத் தீர்ப்பு துரதிஷ்டவசமான தீர்ப்பு என்றாலும் 15 நிபந்தனைகளுடன் தான் அணு உலை திறக்கப்படவேண்டும் என்று கூறியிருக்கிறது உச்ச நீதிமன்றம். ரஷ்ய நிறுவனமான ஜியோபோடால்ஸ்க்கிடமிருந்து பெறப்பட்ட எந்திர பாகங்கள்தான் கூடங்குளம் அணு உலைக்கு வாங்கப்பட்டிருக்கின்றன. தரம்குறைந்த பாகங்களை அயல்நாடுகளுக்கு அனுப்பிய குற்றத்தின் கீழ் அந்நிறுவனத்தின் இயக்குநர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஆனால் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே புதிதாக் ஒரு வழக்குபோடுவதா அல்லது மறுசீராய்வு மனு போடுவதா என்று அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நாங்கள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம்’’ என்கிறார் ஜி.சுந்தர்ராஜன். 

ஜியோபோடால்ஸ்க் என்கிற ரஷ்ய நிறுவனம், ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்டு, மற்ற நாடுகளில் நிர்மாணிக்கப்படுகிற அணுஉலைகளுக்கு நீராவி இயந்திரங்களையும் முக்கிய அணு உலை பாகங்களையும் தயாரித்து விற்பனை செய்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும் இந்த நிறுவனம்தான் எந்திரபாகங்களை அனுப்பியது. இந்நிலையில் திருட்டுத்தனம், ஏமாற்றுதல், ஊழல்,  போன்ற குற்றங்களுக்காக ரஷ்ய உளவு நிறுவனம் ஜியோ போடால்ஸ்க் நிறுவனத்தின் இயக்குநர் .செர்கை ஷுடோவ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  பல்கேரியா, ஈரான், உக்ரேனியாவில் கிடைக்கும் தரமற்ற, விலை குறைந்த இரும்புத் தகடுகளினால் தயாரிக்கப்பட்ட எந்திரங்களை சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் கட்டப்பட்டுள்ள அணு உலைகளுக்கு விற்றதாக ஜியோ போடால்ஸ்க்  மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு உலையில் 4 வால்வுகள் பழுதடைந்ததாக அரசுத் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. அதை சீர் செய்தவுடன் உற்பத்தி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.  

ஜியோ போடால்ஸ்க் கம்பெனியில் தயாரிக்கப்பட்ட  உதிரி பாகங்களால் இந்தியா, பல்கேரியா, ஈரான், சீனா போன்ற நாடுகளில் கட்டப்பட்டுவருகிற அனைத்து உலைகளும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளன. இந்த குற்றச்சாட்டுக்குப் பின் ரஷ்யாவிடம் அனைத்து பாகங்களின் தரச்சான்றிதழ்களைக் கேட்டிருக்கிறது பல்கேரியா.  சீனா 3000 கேள்விகள் கொண்ட பட்டியலை தயாரித்து அனுப்பி விளக்கம் கேட்டிருக்கிறது. இதுபோன்ற எந்த முயற்சியையும் இந்தியா செய்யவில்லை. ஷியோ போடால்ஸ்க் கம்பெனி விற்பனை செய்த தரங்குறைந்த இயந்திரப்பாகங்களின் தரம் குறித்து ஆய்வு செய்யவில்லை எனில், மிகப் பெரிய பேரிடரை இந்தியா சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் ஆர்மீனியன் தலைநகரில் செயல்படும் பெல்லோனா ஃபவுண்டேஷன் அமைப்பும்,  இந்திய மக்கள்தான் இதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ரஷ்ய சுற்றுச்சூழல் நிறுவனமான இகோ டிபென்ஸ் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.  ‘’ஊழல் செய்து தரம் குறைந்த பாகஙக்ளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அணு உலை எங்களை அச்சுறுத்துகிறது. அதை மூடும் வரை நாங்கள் ஒய மாட்டோம்’’ என்கிறார் இடிந்தகரை சுந்தரி.

ஜியோ போடால்ஸ்க் போன்றே இசர்ஷோர்கி சவோடி என்கிற ரஷ்ய நிறுவனம், 2002ல் கூடங்குளம் அணுஉலைக்கு தேவையான கொதிகலன்களை வடிவமைக்க முறைப்படியான ஒப்பந்தம் போடும் முன்பே, கூடங்குளம் அணுஉலைகளுக்கு தேவையான இரண்டு அணுஉலை கொதிகலன்களையும் தயாரிக்க தொடங்கிவிட்டதாக அதன் பொது இயக்குனர் யோவ்ஜெனி செர்கிவ், அந்த கொதிகலன்களை ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் தூத்துக்குடி  துறைமுகத்திற்கு கடல் வழியாக அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் தெரிவித்தார். கூடங்குளம் அணுஉலை கட்டப்படுவதற்கு தேவையான கொதிகலன்களை உறுதியாக இந்தியா தங்களிடம் தான் வாங்கும் என்ற நம்பிக்கை கிடைத்துவிட்ட காரணத்தால் அவற்றை முன்னதாகவே தயாரிக்கத் தொடங்கிவிட்டதாக அந்த வழியனுப்பும் நிகழ்விலே 2004 நவம்பர் மாதத்தில் தெரிவித்துள்ளதாக ரஷ்யாவில் வெளிவரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது. இன்ஃபார்ம்டெக் நிறுவனத்தின் இயக்குநர் அலெக்ஸாண்டர் முராக் ரஷ்ய அணு உலைகளுக்கு தரம் குறைந்த அளவீட்டுக் கருவிகள் வழங்கியதில் முறைகேடுகள் செய்ததற்காக 3 ஆண்டுகள் சிறைக்கு அனுப்பட்டிருக்கிறார்

ஏப்ரல் 19,2013 தேதியிட்ட கடிதம் எண் NPCIL/VSB/CPIO/2574/KKNPP/2013/737 ல் அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் ஜியோ போடால்ஸ்க், இன்ஃபார்ம்டெக், இசர்ஷோர்கி சவோடி ஆகிய நிறுவனங்களிடமிருந்துதான் கூடங்குளம் அணு உலையின் முக்கியமான பாகங்கள் அனைத்தும் பெறப்பட்டதாக ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தரோ தனது rediff.com நேர்காணலில் ‘’நாங்கள் ரஷ்யாவிடமிருந்து மட்டுமில்லை, தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, செக் குடியரசு, ஸ்ளோவாகியா மற்றும் பல நாடுகளிலிருந்தும் பாகங்களை இறக்குமதி செய்திருக்கிறோம். ஆகவே இது முழுக்க முழுக்க ரஷ்ய அணு உலை என்று கூற முடியாது’’ என்று கூறியிருக்கிறார். ‘’இதுவரை ரஷ்ய அணு உலை என்று கூறிவந்தவர்கள் இப்போது அப்படி கூற முடியாது என்று சொலவதன் மூலம் ஊழல்வாதிகளை மறைக்கப் பார்ப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது’’ என்கிறது அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம்.

‘’கூடங்குளம் அணு உலை தொடர்பான  ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு. அந்த இசர்ஷோர்கி சவோடி நிறுவனம் தயாரித்த அணுஉலைக் கொதிகலனில்தான் வெடிப்புகள், வெல்டுகள் இருப்பதாக, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் வல்லுனர் குழு சுட்டிக்காட்டிய பிறகு இந்திய அணுசக்திக் கழகம் இறுதியாக ஒப்புக்கொண்டுள்ளது. வெல்டிங் செய்யப்படாமல் இருந்தால்தான் அது பாதுகாப்பான அணுஉலை. இல்லையெனில் இது வேதி வினை புரியும் போது மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும் தற்போது, கூடங்குளம் அணுஉலைகளுக்கு கூடுதலாக மேலும் 4000 கோடி செலவிடப் பட்டுள்ளதாக அணுசக்திக் கழகம் சொல்லுகிறது. அணு உலைகள் இயக்கப்படும் நிலையில் இருக்கும் போது, ஏன் கூடுதலான செலவு என்று மக்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும். தரமற்ற பாகங்களை மீண்டும் மீண்டும் கொள்முதல் செய்வதால் கூடுதல் செலவாகிறதா அல்லது நடந்த ஊழல் பேரங்களை மறைக்க மேலும் கையூட்டு கொடுக்கப்படுகிறதா? என்று காங்கிரசு அரசு விளக்க வேண்டும்.’’ என்கிறார் புஷ்பராயன்.

இது குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமியை தொடர்புகொண்டபோது ‘’தரமில்லாத பொருள் எதையும் இந்தியா வாங்கவில்லை. முதலில் இந்திய விஞஞானிகள் ரஷ்யாவுக்குச் சென்று உற்பத்தி செய்யுமிடத்திலேயே பொருட்களை பார்வையிட்டு தரம் சரியாய் இருக்கிறதா என்று பார்த்தார்கள். அதன் பின் ஏற்றுமதி செய்யும் தருவாயில் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள விஞ்ஞானியின் தரச் சான்றிதழ் பெற்று, இந்தியாவுக்கு வந்திறங்கியதும் அணுசக்தி கழகத்தின் விஞ்ஞானிகள் குழு ஒரு தரச்சான்றிதழ் வழங்கும். பின் ஹைட்ரோ சோதனை நடத்தப்பட்டு அதிலும் தரம் சோதிக்கபப்டும். ஆகவே தரம் குறித்து எந்த சந்தேகமும் தேவையில்லை. அங்கே ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதற்கும் தரத்துக்கும் தொடர்பே இல்லை. 'மே மாத இறுதியில் அணு உலை செயல்படத் தொடங்கும் என்பது உறுதி. அணு உலை கட்டுப்பாட்டு வரியம் அதன் செயல்பாடுகளை நேர்த்தியாக கண்காணித்து வருகிறது. மின் உற்பத்தி துவங்கப்படவேண்டும் என்பது முக்கியம். போராடும் மக்கள் யார் சொல்லியும் கேட்க மாட்டேன் என்கிறார்கள். போராடுபவர்களுக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. மத்திய மாநில அரசுகளின் விஞ்ஞானிகள் குழு அளித்த அறிக்கைகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்களின் போராட்டம் இல்லையென்றால் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே மின் உற்பத்தி தொடங்கி இருக்கும். அரசுக்கு இதனால் 1,464 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.’’ என்றார்.

அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் முன்னாள் தலைவர் கோபால கிருஷ்ணன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிய கட்டுரையில் ’’கூடங்குளத்தில் இரண்டு அணுஉலைகளின் பல்வேறு பகுதிகலில் ஷியோ போடால்ஸ்க்  நிறுவனத்தின் பாகங்கள், குறிப்பாக அணுஉலை கொதிகலன் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றால் தற்போது எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருப்பது போன்று தோன்றலாம். ஆனால், அணுஉலை இயங்கத் தொடங்கும் போது தான், அந்த தரமற்ற பாகங்கள் தன்னுடைய உண்மையான முகத்தை காட்டும். மக்களின் பாதுகாப்பிற்கு அவைகள் உறுதியாக பெரிய கேடு விளைவிக்கும்.’’ என்கிறார்.

’’அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர். எஸ். சுந்தர் திடீரென்று இப்போது ரஷ்யாவில் இருந்து பாகங்கள் பெறப்பட்டாலும், அதை நாங்களேதான் நிர்மாணித்தோம் என்று அணு உலைக்கு சான்றிதழ் அளிக்கிறார். கோபாலகிருஷ்ணன் வெளிப்படையாக தரமற்ற பாகங்கள் குறித்து கட்டுரை எழுதிய பிறகு அவசரம் அவசரமாக இப்படிச் சொல்லவேண்டிய அவசியம் என்ன? யாரையோ காப்பாற்ற எண்ணுகிறதா அரசுத் தரப்பு? ஆதாரங்களுடன் குற்றம்சாட்டும்போது, தரத்தை மீண்டும் சோதித்துப் பார்ப்பதில் என்ன பிரச்சனை? மடியில் கனமில்லாவிட்டால் எதற்கு வழியில் பயம்?’’ என்கிறார் சுப.உதய்குமார்.

அண்மையில் rediff.com தளத்துக்காக அதன் பத்திரிகையாளர் வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தரை சந்திக்க அணு மின் நிலைய வாயில் வரை வந்தபின்னும், அவரை உள்ளே அனுமதிக்காமல் அங்கிருந்து வேறிடத்துக்கு அழைத்துச் சென்று பேட்டி தந்திருக்கிறார். அந்த நேர்க்காணலில் ‘’ஏன் என்னை அனுமதிக்கவில்லை?’’ என்கிற கேள்விக்கு ‘’நாங்கள் பத்திரிகையாளர்களை அனுமதிப்பதில்லை’’ என்று பதில அளித்திருக்கிறார். 

‘’ஏன் ஊடகங்களை உள்ளே விடுவதில்லை? எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. செயல்படாத அணு உலையை செயல்பட்டதாகக் காட்ட அரசு அவசரம் அவசரமாக ஏதோ செய்கிறது. ஒருநாளாவது நாங்கள் அணு உலையை செயல்படுத்தினோம் என்று யாருக்கோ நிறுவ நினைக்கிறார்கள். அதன்மூலம் ஊழலை மூடி மறைக்கிறதோ என்றும் எங்களுக்கு சந்தேகம் உண்டு. முதல் அணு உலை செயல்படுவதில்லை. இரண்டாவது அணு உலையை தொடங்கப்போவதாக அரசு சொல்கிற்து. தொடங்கும் நாளன்று பத்திரிகையாளர்கள், சுதந்திரமான விஞ்ஞானிகள் என்று எல்லொரையும் உள்ளே அனுமதித்து எல்லோரையும் சாட்சியாக வைத்துத் தொடங்கட்டுமே பார்க்கலாம்’’ என்கிறார் சுப. உதயகுமார்.

ஒரு நிபுணர் குழு இதன் தரத்தை ஆராய்ந்து விசாரணை மேற்கொள்ளவேண்டும். அநதக் குழுவில் அணுசக்தித் துறை, இந்திய அணுசக்திக் கழகம், அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குறைவாகவும், நாட்டின் மற்ற நிறுவனங்களில் உள்ள விஞ்ஞானிகள் அதிகமாகவும் இடம்பெற்றிருக்கவேண்டும். அக்குழுவின் அறிக்கை வெளிவரும்வரை அணு உலை செயல்படக்கூடாது’’ என்று கோபாலகிருஷ்ணன் கூறியிருப்பதை புறந்தள்ள முடியாது. இதுவே போராடும் மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது. மின் உற்பத்தியை விட இந்தக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவதே அரசின் முன் உள்ள முதல் கடமை.

நன்றி : இந்தியா டுடே

Tuesday, May 07, 2013

மரக்காணம் - சாதிய வன்முறை


கிழக்கு கடற்கரை சாலையில் சென்னைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையே உள்ளது மரக்காணம். சாலையில் ஒரு பக்கம் உப்பளங்கள். மறு பக்கமோ கண்ணீர் கடலாக காட்சியளிக்கிறது இப்போது. மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர்களின் குடும்பவிழாவுக்கு வந்தவர்களால், மரக்காணம் கட்டையன் தெருவில் உள்ள குடும்பங்கள் இன்று குடியிருப்புகளையும், உடமைகளையும் இழந்து நிற்கின்றன. பல்வேறு ஊர்களிலிருந்து சித்திரை முழுநிலவு விழாவுக்கு வந்தவர்கள் வழிநெடுக ஆடிய தாண்டவத்தையும் செய்த அட்டகாசங்களையும் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் காண முடிந்தது.

மகாபலிபுரம் அடையார் ஆனந்தபவன் ஹோட்டல் வாசலில் திருமாவளவன், ரெட்டைமலை சீனிவாசன், அம்பேத்கர் ஆகியோரின் படங்களுக்கு கரிபூசப்பட்டிருக்கிறது. இதைத்தான் ஜெயலலிதா சட்டமன்றத்தில் ‘தேசிய தலைவர்களின் படங்கள் அவமதிக்கப்பட்டுள்ளன’’ என்று குறிப்பிட்டார். புரட்சி பாரதம், விடுதலை சிறுத்தைகள் போன்ற தலித் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு, கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டுள்ளன. மகாபலிபுரம் கடற்கரை கோயிலின்மீது ஏறி நின்றுகொண்டு அங்கும் கொடிநாட்டியவர்களின் மேல் தொல்பொருள்துறையின் வழக்கு பாய்ந்திருக்கிறது. பிரதான சாலையில் ஆங்காங்கே மரங்களின் உச்சிகளில் வன்னியர் சங்கக் கொடியும் பா.ம.க.வின் கொடியும் பறக்கின்றன. மரங்கள் பாவம். வழக்கு போட ஆளில்லை.

உச்சகட்டமாக குடியிருப்புகளின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தர்மபுரி பாணியில் தலித் மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வேலையைச் செய்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மரக்காணம் மக்களுக்கு, இதே பா.ம.க.வால் பாதிக்கப்பட்ட தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனி மக்கள் இரண்டு வண்டிகளில் திரண்டுவந்து பத்தாயிரம் ரூபாய் தொகையை அளித்ததை மரக்காணம் பகுதி பக்கள் நெகிழ்வுடன் தெரிவித்தார்கள்.  அடிபட்டவர்களுக்குத்தானே அதன் வலி புரியும்!

ஏப்ரல் 30 அன்று ஊர் எல்லையில் வந்த வைகோவை காவல்துறை உள்ளே விடாமல் அவர் திரும்பச் சென்றார். பிரதான சாலையில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. நான் அங்கு சென்றபோது சாலையோரங்களில் கிடந்த மதுபாட்டில்களை காவல்துறையினர் அப்புறப்படுத்திக்கொண்டிருந்தனர்.எரிக்கப்பட்ட வீடுகள் உள்ள கட்டையன் தெருவுக்கும் கிழக்கு கடற்கரை சாலைக்கும் இடையே 300 மீட்டருக்கு மரங்களும் புதர்களுமாக உள்ளன. 7 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அருகில் உள்ள உப்பளங்களில் வேலை செய்யும் கூலி தொழிலாளர்கள். வாயுக்கும் வயிற்றுக்கும் இடையே அல்லாடும் வாழ்க்கை கொண்டவர்கள். இவர்கள் சந்தித்த வன்முறையின் குரூரம் இவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அரசு மூன்று வேளையும் உணவளிக்கிறது. ஆனால் வெட்டவெளியில்தான் படுத்துறங்குகிறார்கள். அரசு நிவாரணத் தொகை அளித்திருக்கிறது. பாடப்புத்தகங்கள், சான்றிதழ்கள், ஆவணங்கள் என்று எதுவும் மிஞ்சவில்லை.

உப்பளத்தில் வேலைசெய்யும் அஞ்சலை - நாராயணசாமி தம்பதியினர் ‘’மெயின் ரோட்டில் இளநி குடிச்சிட்டு இருந்தாங்க. அங்கங்க வண்டிங்களை நிறுத்தி வைச்சிருந்தாங்க. திடீர்னு கொஞ்சம்பேர் வந்து இந்த புதருங்களுக்கு நடுவுல உட்கார்ந்து குடிச்சாங்க. அப்பவே ஏதாச்சும் நடக்கும்னு நாங்க பயந்தோம். நினைச்ச மாதிரியே நடந்துடுச்சு. எல்லாம் போச்சு. கண்ணெதுக்கே வீடு எரியுது. கால் பவுன் நகை, முப்பதாயிரம் பணம் சேர்த்து வச்சிருந்தோம். பித்தளை பாத்திரங்க, அண்டா தவளை... எல்லாம் போச்சு’’ என்கிறார்கள். இவர்கள் வீட்டுக்கு அருகிலேயே  சிறிய அங்காளம்மன் கோயில் உள்ளது. அந்தக் கோயிலைப் பார்த்துக்கொண்டு பக்கத்திலேயே ஒரு பெட்டிக்கடையும் நடத்தி வருகிறார் செல்லியம்மா. கடையில் உள்ள பொருட்கள், கோயிலில் உள்ள சிலைகள் என்று எதுவும் மிச்சமில்லை.  ‘’எங்க ஊரு பொம்பளைப் புள்ளைங்களையெல்லாம் அசிங்கமா பேசுனாங்க..சாதிப்பேர் சொல்லித் திட்டி, அவங்க பேசுனதை சொல்லவே கூசுது’’ என்றார்.

தர்மபுரியில் நடந்ததுபோலவே இங்கும் பீரோ, அலமாரிகள் போன்றவற்றில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து, அதன்பின்னரே கொளுத்தி இருக்கிறார்கள். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுத்தான் வீடுகள் கொளுத்தப்பட்டிருக்கின்றன. ஊர்மக்களின் தற்போதைய ஒரே கவலை கலைவாணன் குறித்துத்தான். ‘எரிக்கும்போது உதவிக்கு ஆளுங்களைக் கூப்பிட்டாருன்னு சொல்லி, ‘கூப்பிடுவியா கூப்பிடுவியான்னு கேட்டு அவர் நாக்கை இழுத்துவச்சு அறுத்துட்டாங்க. அவர் நாக்கில் மட்டும் 18 தையல் இருக்கு. தலையில் பட்ட அடியும் சேர்த்தா 48 தையல். சிறுமூளையில் பாதிப்புன்னூ டாக்டருங்க சொல்றாங்க’’ என்கிறார் ஆறுமுகம். இத்தனைக்கும் கலைவாணனின் வீட்டை எரிக்கவில்லை. அடுத்த வீடு எரிகிறதென்று கூக்குரலிட்டவரால் இனி ஒழுங்காக பேச முடியுமா என்று தெரியவில்லை. இந்த நிலையிலும் தட்டுத்தடுமாறி நடந்தவற்றை விவரிக்க முயன்றார். பேசவேண்டாம் என்றபோதும் சைகையில் நடந்தவற்றை கூறினார். 

வீட்டை பறிகொடுத்த இன்னொரு தம்பதி முருகன் - நதினா. இவர்களுக்கு  5 பெண்கள். ‘’கத்தி, மஞ்ச கலர் டீசர்ட் போட்டுட்டு வந்தாங்க. ஒரே ஆர்ப்பாட்டம். எல்லாரும் குடிச்சிருந்தாங்க’’ என்கிறார் நதினா. வேலு - மல்லிகா தம்பதியின் வீடும் கரியாகிவிட்டது.  ‘’மரக்காணம் தான் சுத்துவட்டரத்துல உள்ள எஸ்.சி. கிராமங்களுக்கு தாய் கிராமம். 2002லயே மஞ்சள் நீராட்டு விழா ஒண்ணு நடந்துச்சு. அப்போ ஜெமினி படம் வந்த புதுசு. ‘ஓ போடு’ பாட்டைப் பாடி எங்க ஊர் பொண்ணுங்களை கிண்டல் பண்ணினதுல பிரச்சனையாகிடுச்சு. அதுலேர்ந்தே பிரச்சனை பண்ண சமயம் பார்த்த்துக்கிட்டு இருந்தாங்க’’ என்கிறார் தயாளன். அங்கம்மாளின் மகளுக்கு அடுத்த மாதம் திருமணம். அதற்காக வாங்கி வைத்த சீர் சாமான்கள் கருகின. ஒரு மாடும் பெட்ரோல் குண்டு வீச்சில் இறந்தது. நன்றாக காய்க்கும் பலா மரத்தில் பலாப்பழங்கள் கருகி தொங்குகின்றன. மரத்தையும் விட்டுவைக்கவில்லை பசுமைத் தாயகம் நடத்துபவர்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் அருகேயுள்ள மரங்களும் சேர்ந்தே கருகி இருக்கின்றன. தலித் குடியிருப்புகள் முடிந்து, வன்னியர் குடியிருப்புகள் தொடங்கும் இடம்வரை சரியாக பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. ’’அதெப்படிங்க சரியா வந்தவங்களுக்கு எங்க வீடுங்க இத்தோட முடிஞ்சு அவங்க வீடுங்க தொடங்குதுன்னு தெரியும். அப்ப ஏற்கனவே திட்டம் போட்டிருக்காங்கதானே?’’ என்று கேட்கிறார் கிளியம்மாள்.

மரக்காணத்திலிருண்டு 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கூனிமேடு. இங்கே மசூதிக்குள் புகுந்து இஸ்லாமியர்களை தாக்கி இருக்கிறது கலவரக் கும்பல். கழிக்குப்பத்திலும் இரண்டு தலித்துகளின் வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. தர்ப்பூசணி கடை அடித்து நொறுக்கப்பட்டது. ‘’மரக்காணத்துல பிரச்சனைங்கிறதால, வண்டிங்களையெல்லாம் வழில நிறுத்திட்டங்க. எங்க ஊர்கிட்ட நிறைய வன்னியருங்க வண்டி நின்னுச்சு. திருமாவளவன் படம் போட்ட பேனர் ரோட்டுகிட்ட இருந்துச்சு. ‘உங்களுக்கெல்லாம் பேனர் கேட்குதான்னு’ சாதிப் பேர் சொல்லித் திட்டி பேனரைக் கிழிச்சாங்க. கும்பலா ஓடிவந்து தண்ணித் தொட்டி பைப்பை உடைச்சாங்க. சமுதாய நலக்கூடத்து ஜன்னலையெல்லாம் அடிச்சு நொறுக்கினாங்க. இதெல்லாம் பார்க்கவே பயமா இருந்துச்சு. பொம்பளைங்களைப் பார்த்து அசிங்கமா பேசினாங்க. அசிங்கமா ஆபாசமா டான்ஸ் ஆடினாங்க’’ என்று திகிலுடன் காஞ்சனா சொன்னவற்றை அச்சில் ஏற்ற முடியாது. காஞ்சனா - பார்த்திபன் தம்பதியின் வீட்டுக்கு முன் அவர்கள் கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகள் உடைந்து கிடந்தன. அருகிலேயே உள்ள இன்னொரு வீடும் எரிக்கப்பட்டது. இல்லாத வீட்டின் வாசலில் அடுப்பு மூட்டி காவல்துறையினருக்கு தேநீர் தயாரித்தவாறே கூறுகிறார் காஞ்சனா. ‘பாவம். எங்கேர்ந்தோ வந்து எங்களுக்காக வெயில்ல காவலுக்கு இருக்காங்க. நம்மளால முடிஞ்சது ஒருவாய் டீதான்’’ என்றவர்,  திடீரென்று மௌனமாகி பின் கேட்கிறார். ‘’பறையரா பொறந்தது எங்க தப்பா?’’ இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும்? 

அன்றாடம் இப்படியான கேள்விகளை தலித்துகள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ராமதாஸ்களின் காதுகளுக்குத்தான் எட்டுவதில்லை. எட்டினாலும் காதில் விழாததுபோல் நடிக்கவும் அவர்களால் முடிகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செம்பூர் அருகேயுள்ள அத்திப்பாக்கத்தில் ஏப்ரல் 29 அன்று தலித் மக்களின் வீடுகளை நோக்கி பெட்ரோல் குண்டுகளுடனும், பீர்பாட்டில்களுடனும் திரண்டுவந்தவர்கள் காவல்துறையும் ஊடகங்களும் வந்தவுடன் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகத் தெரிவிக்கிறார் அத்திப்பாக்கத்தைச் சேர்ந்த கவிஞர். கு.உமாதேவி. சென்ற ஆண்டு மகாபலிபுரம் கூட்டத்தில் காடுவெட்டி குரு பேசியதன் விளைவாகத்தான் தர்மபுரி வன்முறை. இந்த ஆண்டும் அப்படியாகக்கூடாது என்பதற்காகவே கூட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மகாபலிபுரம் கிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு ஏற்கனவே மனு அளித்திருக்கிறார். இந்திய மக்கள் மன்றத்தின் தலைவர் வராகி பா.ம.க.வின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.இன்றைக்கு சிறையில் பா.ம.க.வினர். ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், காடுவெட்டி குரு, ஜி.கே.மணி போன்ற முன்னணி தலைவர்கள் அனைவரும் சிறைக்குச் சென்றவுடன், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மீண்டும் கலவரங்கள் வெடித்தன. விழுப்புரம் அருகே பாலத்துக்கு வெடிகுண்டு வைப்பது வரை சென்றிருக்கிறது. 320 பேருந்துக்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக இரவுநேர பேருந்துக்கள் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் சிரமத்துக்குள்ளானார்கள். 

ராமதாஸ் சிறைக்குச் சென்றபின் அன்புமணி ராமதாஸ் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அவருடைய இலக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிதான் என்பதை தெளிவாகவே குறிப்பிட்டார் அன்புமணி.  பத்திரிகையாளர்களிடமிருந்து சராமரியாக கேள்விகள் வந்து விழுந்தன. வேறு வழியின்றி அப்போது காடுவெட்டி குரு மூத்த அரசியல்வாதிகளை மரியாதைக் குறைவாகப் பேசியதும், மகாபலிபுரம் கடற்கரை கோயிலின் மீது ஏறி பா.ம.க.கொடியை நாட்டியதும் தவறு என்று ஒப்புக்கொண்டார். ஆனால் தலித் மக்கள் குடிசைகளை தாங்களே எரித்துக்கொண்டார்கள் என்றார். தர்மபுரியிலும் ராமதாஸ் இதையே சொன்னார். மரக்காணத்தில் அன்புமணி இதையே கூறுகிறார். ஆனால் மக்கள் நம்பத் தயாராக இல்லை. பெட்ரோல் குண்டு வீசி, ஊரைக் கொளுத்தி, வன்முறையில் இறங்கும் கட்சி என்று பெயர் பெற்றாகிவிட்டது. மரம் வெட்டினால் பசுமைத்தாயகம் அமைப்பை உருவாக்கி பிராயச்சித்தமோ பாவமன்னிப்போ கேட்கலாம். மனிதர்களை வெட்டினால்?

நன்றி : இந்தியா டுடே







Thursday, May 02, 2013

கடல் மேல் தொடரும் துயரம் - தமிழக மீனவர்கள் Vs இலங்கை கடற்படை



‘’கோடியக்கரைக்கு பக்கத்துல மீன் பிடிச்சுக்கிட்டு இருந்தோம்அப்போ விடியக்காலை 3 மணி இருக்கும். திடீர்னு வந்துச்சு அந்த போட். என் மேல் நீளமான அரிவாளை வீசினாங்க..அடிபட்டு தண்ணிக்குள்ள விழுந்துட்டேன்என்ன நடக்குதுன்னு சுதாரிக்கிறதுக்குள்ளே அடுத்த ஆள் மேல அடி. வரிசையா அடிச்சாங்க. போட்ல இருந்த ஒரு லட்சம் ரூபாய்க்கு மீன், வலைன்னு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. நாங்க போட்ல மயங்கி விழுந்துட்டோம். வேற போட்ல வந்தவங்கதான் எங்களை கரைக்குக் கொண்டு வந்து ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க. என் விரல் துண்டாகிடுச்சு. இப்போ ஒட்ட வச்சுருக்காங்க’’ என்று காண்பிக்கிறார் பொன்னுசாமி.

மீன்கள், வலைகள் மட்டுமல்லாது, திசை கட்டும் ஜி.பி.எஸ். கருவியையும் சிங்கள கடற்படை எடுத்துக்கொண்டு போய்விட்டதாகத் தெரிவிக்கிறார் கண்ணையன். ‘’ஜி.பி.எஸ். இருந்தா நாங்க நம்ம எல்லையிலதான் மீன்பிடிச்சோம்ங்கிறது தெரிஞ்சுபோயிடுமில்லையா? அதனால அதை எடுத்துட்டுப் போயிட்டாங்க’’ என்கிறார். இந்த நால்வரில் கண்ணையனும் சசிகுமாரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடலுக்குச் சென்றுவிட்டு வந்தால் மட்டுமே வீட்டில் சாப்பாடு. இருவருமே முழு சிகிச்சை முடிந்து எழ 6 மாதங்கள் வரை ஆகும் என்பதால் என்ன செய்வது என்று புரியாமல் நிற்கிறது குடும்பம். ‘’ராமேஸ்வரம் பக்கத்துல துப்பாக்கியால சுடுறது மாதிரி சுட்டிருந்தா இன்னைக்கு எங்க வீட்டுல ரெண்டு உயிர் போயிருக்கும். ஆனா மறுபடி இந்தக் கையால வெயிட் தூக்க முடியுமா..வேலைக்குப் போக முடியுமான்னு தெரியலைதஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ்ல வச்சுப் பார்த்தோம். சரியாகலை. அதனால் ப்ரைவேட்ல வச்சு பார்த்து செலவுதான் ஆச்சு. அரசாங்கம் எதுவும் செய்யலை’’ என்கிறார் கண்ணையனின் மனைவி மடத்தம்மா. தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகே வந்து பார்த்தார் என்கின்றனர் பாதிக்கப்பட்ட மீனவர்கள். ’’மாணவர் போராட்டம் இங்கே முழு வேகத்துல நடந்ததைப் பார்த்து சிங்களக்காரனுக்கு கோபம் வந்து எங்க மேல பாயுறான்’’ என்கிறார் பொன்னுசாமியின் மகன் வீராசாமி. இவரும் கடல்தொழில் செய்பவர்தான். கண்ணையன்(45), சசிகுமார்(21), பொன்னுசாமி(50), செல்வகுமார்(21) ஆகிய நம்பியார் நகர் மீனவர்கள் தோப்புத்துறை தாண்டி மார்ச் 20 அன்று மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டார்கள்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் முனுசாமியை தொடர்புகொண்டபோது ‘’இப்போது 45 நாட்கள் கடல் தொழிலுக்கு விடுமுறை என்பதால், இதை பயன்படுத்தி, பாதுகாப்பாக மீன் பிடிப்பது எப்படி என்று லைஃப் ஜாக்கெட் உடுத்துவது, ஜி.பி.எஸ். பயன்படுத்துவது, எல்லை தாண்டாமல் இருப்பது வரை எல்லாவற்றையும் குறித்த புரிதலை ஏற்படுத்தவிருக்கிறோம். சிகிச்சையைப் பொறுத்தவரை அரசு செலவிலேயே மீனவர்கள் சிகிச்சை பெறலாம். மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்  மூலம் 20 லட்சம் செலவாகும் அறுவை சிகிச்சைகளைக் கூட இலவசமாக செய்துகொள்ளலாம்.’’ என்றார்.

நாகப்பட்டினம், காரைக்கால் பகுதியை ஒட்டிய மீனவ கிராமங்களில் பயமும் சோகமும் அப்பிக் கிடக்கின்றன. வேறு தொழில் கைவசம் இல்லாத நிலையில் கடலை மட்டுமே நம்பி வாழும் மீனவர்களின் வாழ்க்கை நிரந்தரமின்றி, உயிருக்கு உத்தரவாதமின்றி இருக்கிறது. கடலுக்குள் சென்றால் எப்போதுவேண்டுமானாலும் இலங்கை கடற்படை தாக்கலாம் என்கிற நிலையில் தன் குடும்பத்தைக் காப்பாற்றச் செல்லும் ஒவ்வொரு மீனவனுக்கும் காற்றில் ஆடும் படகைப்போல வாழ்க்கை தள்ளாடுகிறது. நாகையை ஒட்டிய கடற்கரைப் பகுதிக்குச் சென்றபோது, ஓர் அசாதாரண சூழல் நிலவுவதை உணரமுடிந்தது. இப்போது இலங்கை கடற்படை துப்பாக்கிக்கு பதில் வீச்சரிவாள், பெட்ரோல் குண்டுகள், கத்தி, இரும்பு மற்றும் ஸ்டீல் ராடுகள் போன்ற ஆயுதங்களை கையில் எடுத்திருக்கிறது . இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் சில மீனவர்களை சந்தித்தேன். கொதிப்புடன் பேசுகிறார்கள். மறுநொடி கண்ணீர் விடுகிறார்கள்.

 மீனவ கிராமமான வானவன்மாதேவியில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற காளிமுத்து, ரவிச்சந்திரன், கலைமணி, ரங்கையன் ஆகிய 4 பேரையும் இலங்கை கடற்படை தாக்கியிருக்கிறது. ‘’விடியக்காலை 4 மணி இருக்கும், இலங்கை நேவி வந்துச்சுஅதுல ரெண்டு பேர் யூனிபார்ம்ல இருந்தாங்க. மத்தவங்க சாதாரண டிரஸ்ல இருந்தாங்கபெரிய கம்பி ராடால என் இடுப்பில் குத்தினாங்க. நான் கத்தினேன். இடுப்புல சரியான அடி. சுருண்டு போட்ல விழுந்து கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சினேன். கேக்கலையே..எல்லாரையும் அடிச்சாங்க..சிங்களத்துல பேசினாங்க.. பாதி இங்கிலீஷ்ல பேசினாங்க. கொஞ்சம் கொஞ்சம் புரிஞ்சது. அடிவாங்குறதுக்கு பாஷை புரியாட்டிதான் என்ன..எங்ககிட்ட இருந்ததெல்லாம் அப்பிக்கிட்டு போயிட்டாங்க. அரை மயக்கத்துல கரைக்கு வந்து சேர்ந்தோம். ஆஸ்பத்திரில சேர்த்தாங்க. கலெக்டர் வந்து பார்த்தாரு.’’ என்றவாறே இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்ட காயத்தை முதுகில் காண்பித்தார் கலைமணி. வெள்ளப்பள்ளத்திலும் இதுபோன்றே 4 மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அரிவாள் கொண்டு தாக்கபப்ட்டிருக்கிறார்கள். இந்தத் தாக்குதல்களை அடுத்து முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதினார். ‘’18.8.2012 அன்று வெள்ளப்பள்ளம் பகுதி அருகே ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது டி146 எனும் படகில் அந்த இடத்திற்கு வந்த இலங்கை கடற்படையினரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கியதோடு அல்லாமல் அவர்களுடைய ஐஸ் பெட்டிகள், உணவு மற்றும் இதர மீன்பிடி உபகரணங்களை பறித்துச் சென்று கடலில் வீசியுள்ளனர். மீனவர்களின் மீன்வலைகளையும் அவர்கள் அறுத்தெறிந்துள்ளனர். ராமையா என்பவரின் மகன் குப்பு சாமி எனும் ஒரு மீனவர் படுகாய மடைந்துள்ளார். அவரது வலது மணிகட்டில் கத்தியால் வெட்டப்பட்டுள்ளது. மேலும் 7 மீனவர்கள் ரப்பர் கம்பால் அடிக்கப்பட்டு பலத்த காயமடைந்துள்ளனர்வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிப்பதில் ஈடுபடும் தமிழகத்தை சேர்ந்த ஏழை அப்பாவி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறி நடந்து கொண்டு வருவதற்கான மற்றொரு உதாரணமாக இது அமைந்துள்ளது. இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தடையில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதை வேதனையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்திய அரசு, இந்தப் பிரச்சனையை மென்மையாக கையாளுவதால்  துணிவு பெற்றுள்ள இலங்கை  ராணுவமானது இந்திய மீனவர்களை தாக்குவதையும், சித்ரவதை செய்வதையும் எந்தவித அச்சமும் இன்றி மேற்கொண்டு வருகிறது. இரு நாட்டு தூதரக அதிகாரிகள் அளவிலான கூட்டத்தின் போது வெளியிடப்படும் மீனவர்கள் மீதான தாக்குதல் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது எனும் அறிவிப்புகள் காகித அளவிலேயே இருக்கின்றன. மேலும் இலங்கை கடற்படை இதனை மீறுவதிலேயே கவனம் செலுத்தி ராஜாங்க அளவிலான பேச்சுக்களை நகைப்புக்கு இடமாக்கி வருகிறது.’’ என்கிறது கடிதம்

காரைக்கால் பகுதி மீனவர்களையும் விட்டுவைக்கவில்லை இலங்கை ராணுவம்கிளிஞ்சல் மேடு கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், வீரப்பன், சக்திநாதன், செல்வம், ராஜ், வேதநாயகம், வீரபாகு ஆகிய 7 பேர் ஏப்ரல் 12 அன்று மீன்பிடிக்கச் சென்றனர்.  ’’கோடியக்கரை பக்கத்துல இருந்தோம். நாங்க. சின்ன போட்ல  சிங்களம் பேசுறவங்க வந்தாங்க. எங்ககிட்ட சாப்பாடு கேட்டாங்க. சாப்பாடுதானே? ஒருத்தருக்கொருத்தர் கொடுத்துக்குறதுதான்னு கொடுத்தோம். வாங்கிட்டுப் போனாங்க. ஆனா எங்கள வேவு பார்க்க வந்தாங்கன்னு அப்புறமாத்தான் தெரிஞ்சுது. ராத்திரி 11 மணி இருக்கும். திடீர்னு வெளிச்சம் வந்துச்சு. எங்க முகத்துல டார்ச் அடிச்சுக்கிட்டே எங்களை விரட்டி வந்து  நீட்ட அரிவாளால வெட்டினாங்க. அவங்க போட்லேர்ந்தே எங்களை வெட்டுற அளவுக்கு நீளமான அரிவாள் அது. நாங்க கீழே விழுந்துட்டோம். வலியில துடிச்சோம். எங்க போட்ல இருந்ததையெல்லாம் எடுத்துக்கிட்டு பெட்ரோல் பாம் போட்டுட்டு போயிட்டாங்க  போட் பத்திக்கிச்சு. தண்ணி ஊத்தி அதை அணைக்க படாதபாடு பட்டோம். போன்ல விஷயத்தை சொன்னோம். ஒருவழியா காரைக்காலுக்கு வந்து சேர்ந்தப்போ எவ்வளவு பேர் எங்களை வரவேற்க கூடி நின்னாங்க தெரியுமா?பத்திரிகைக்காரங்க..சொந்தக்காரங்க..அக்கம்பக்கத்து கிராமம்னு அவ்வளவு பேர் நின்னாங்க.அவங்களையெலலம் பார்த்ததும் எல்லாரும் அழுதோம்.பேச்சே வரலை..’’ என்று தழுதழுத்தவர் சில நொடிகளில் சுதாரித்து ஆவேசமாகஅடிவாங்கத்தான் நாங்க பொறந்தோமா..சொல்லுங்க?’’ என்று கேட்கிறார் அப்போதுதான் காரைக்கால் அரசு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய ரமேஷ். வேதநாயகம், வீரபாகு இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கோடரி கொண்டு தாக்கியதில் சத்தியநாதனுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மீனவர்கள் மீது மார்ச் மாதம் மட்டும் இருமுறை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரு முறை துப்பாக்கியால் சுட்டதில் செண்பகம் என்ற மீனவர் படுகாயம் அடைந்தார். ஏப்ரல் 3 அன்று  காரைக்கால்மேட்டை சேர்ந்த 4 மீனவர்கள், பட்டினச்சேரியை சேர்ந்த 22 மீனவர்கள்நள்ளிரவு 1.30 மணியளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 8 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்,  26 பேரையும் 5 படகுகளுடன் பிடித்துச் சென்று இலங்கை சிறையில் அடைத்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்துவது போக, ஆயுதங்களைக் கொண்டு மீனவர்களை மிரட்டுகிறது இலங்கை கடற்படை. காரைக்கால் மேடு பகுதியைச் சார்ந்த மீனவர்களிடம் பேசியபோது ‘’இப்போ..இந்த நேரம் இதே காரைக்காலுக்கு கிழக்கால எத்தனை சிங்களப் படகுங்க மீன்பிடிச்சுக்கிட்டு இருக்கும்னு எங்களுக்குத்தான் தெரியும். ஒரிஸா வரைக்கும் அவங்க சுதந்திரமா வந்து மீன்பிடிக்கிறாங்கமுந்தாநேத்துகூட வேளாங்கண்ணி பக்கத்துல சிங்கள போட் ஒண்ணு பார்த்தோம். நம்ம நேவி இவங்களை கண்டுக்குறதில்லை. அப்படியே ஒண்ணு ரெண்டு போட்டை பிடிச்சாலும் அவங்கள பத்திரமா கொண்டு போய் ஜெயில்ல வச்சு முறையாத்தான் நடத்துறாங்க. அவங்கள மாதிரி மனுஷத்தன்மையே இல்லாம நடந்துக்குறது கிடையாது. ஆனா நம்ம எல்லைக்குள்ள வந்து நம்ம போட்டையே கொள்ளையடிச்சு நம்மளையே அடிக்கிறாங்க’’ என்று கொதிக்கிறார்கள். காரைக்காலைச் சேர்ந்த சில மீனவர்களை இலங்கை கடற்படை சுற்றிவளைக்க, இந்திய கடற்படை சரியான நேரத்தில் அங்கே வர அவர்களை மீட்டுக்கொண்டுவந்த செய்தியும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

ஏப்ரல் 23 அன்று புதுச்சேரி முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து தாக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. ஆனால் இலங்கை சிறையில் இருக்கும் 26 மீனவர்களின் குடும்பங்களும் நிவாரணத்தொகையைப் பெற மறுத்துவிட்டன. ’’.இலங்கையில் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் ஜாமீனில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி உறுதியளித்தார். ஆனால் அனைவரும் 19-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். அப்பொழுதும் அவர்களை மீட்க மத்தியமாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தற்பொழுது மேலும் ஒரு வாரகாலத்திற்கு அவர்களது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுவிட்டது. அரசின் நிவாரணத்தொகை எங்களுக்கு வேண்டாம். எங்கள் மீனவர்களை மீட்டுத்தந்தால் போதும்’’ என்றனர் அவர்கள்.

‘’ராமேஸ்வரம் மீனவர்களுக்கு வேறு வழியில்லை. அவர்களுக்கான கடற்பரப்பு மிகச் சிறியது. ஆகவே எல்லை தாண்டினால்தான் அவர்களுக்கு சோறு. ஆனால் எங்களுக்கு அப்படி இல்லை. ஆகவே நாங்கள் எல்லை தாண்டுவது இல்லை. ஆனால் நம் எல்லைக்கு வந்து இலங்கை கடற்படை எங்களை அடிப்பதை மத்திய மாநில அரசாங்கங்கள் வேடிக்கை பார்க்கின்றன’’ என்பதே நாகப்பட்டினம் பகுதி மீனவர்களின் குரலாக இருக்கிறது.

ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கும் நாகப்பட்டினம் பகுதி மீனவர்களுக்கும் உள்ள பிரச்சனைகள் வெவ்வேறானவை என்பது அவர்களிடம் பேசும்போது தெளிவாகத் தெரிகிறது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த வரதராஜனை சந்தித்தபோது ‘’1983ல் இலங்கையில் நடந்த ஜூலை கலவரத்துக்குப் பிறகுதான் இந்தப் பிரச்சனை தொடங்கியது. முதன்முதலில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர் ஏறக்காட்டைச் சேர்ந்த முனியசாமி என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள்.. ஆனால் அதற்கு முன்பே பாம்பனில் அந்தோணிதான் முதல் பலி. இங்கிருந்து 18 கடல்மைல் தொலைவில்தான் இலங்கையின் தலைமன்னார் இருக்கிறது. கச்சத்தீவு 13 கடல் மைல்கள்தான். 20 ஆண்டுகளுக்கு முன்னால் கச்சத்தீவுக்குச் செல்ல 3 மணிநேரத்துக்கு மேலாகும். இப்போது ஒரு மணி நேரத்தில் செல்கிறோம். அந்தளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. மீன்பிடி முறையிலும் நவீன தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. ஆனால் இந்த தொழில்நுட்பத்துக்கு ஈடுகொடுக்கும் மீன்வளம் இந்தப் பகுதியில் இல்லை.’’ என்கிறார்.

இலங்கை கடற்படையிடம் சிக்கிவிட்டால் வயர்லெஸ் கருவிகள், ஜிபிஎஸ், எக்கோ சவுண்டர், வலைகள் போன்ற எல்லாவற்றையும் கொள்ளையடித்துவிடுவது தொடர்கதையாகி விட்டது. 2009ல் விடுதலைப் புலிகளை போரில் வெல்லும் வரை தொடர்ந்த இந்த அட்டூழியங்கள் அதன்பின் சிறிதுகாலம் நின்றிருந்ததென்றும், பின் மீண்டும் தொடர்வதாகவும் தெரிவிக்கின்றனர் மீனவர்கள். ‘’தனி ஈழம் அமைவதுதான் ஒரே வழி. இலங்கை தமிழ் மீனவர்களுக்கும் எங்களுக்கும் தொழில் போட்டி இருந்தாலும், தமிழனுக்குத் தமிழன் நாங்க பார்த்துப்போம். இப்படி சிங்களவர்கள் மாதிரி மனுஷத்தன்மை இல்லாம நிச்சயமா தமிழர்கள் நடந்துக்க மாட்டாங்க’’ என்கிறார் வரதராஜன்.

முதல் 3 கடல்மைல்களுக்கு நாட்டுப்படகுகள் மட்டுமே மீன்பிடிக்கவேண்டும் என்கிற நடைமுறை இருக்கிறது. அதன்பின் 6 கடல்மைல்களுக்கு பாறைகள் மிகுந்திருப்பதால் வலைகள் அறுபட்டுவிடும் என்பதால் விசைப் படகுகள் இந்தப் பகுதியில் மீன்பிடிக்க முடியாது. 9வது கடல்மைலில் இருந்துதான் மீன்பிடிக்கத் தொடங்க வேண்டும். ஆனால் 11 கடல்மைல்கள் வரைதான் இந்திய எல்லை. ஆகவே அதற்குள் மட்டுமே மீன்பிடிக்கவேண்டும் என்பதற்கான எந்த சாத்தியமும் இல்லை. எல்லையை கடந்தால்தான் தொழில்நடத்த முடியும் என்கிற நிர்பந்தம். குறுகிய பரப்பளவு என்பதால் சர்வதேச கடல் எல்லை என்பதெல்லாம் இங்கே இல்லை. இந்திய எல்லை முடிந்தவுடன் இலங்கை எல்லை தொடங்குகிறது.

முதல் 3 கடல்மைல்களுக்கு இங்கே விசைப்படகுகளுக்கு அனுமதி இல்லை. ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களுக்குள் இந்த விதிமுறையை கடைபிடிக்கின்றனர்அத்துடன் வாரத்தில் 3 நாட்கள் விசைப்படகு மீனவர்களும், 3 நாட்கள் நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்கச் செல்வார்கள்.இருக்கும் மிகக்குறுகிய பரப்பளவில் எல்லோருக்கும் மீன் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

இலங்கை மீனவர்களிடம் நம் மீனவர்களிடம் இருப்பதுபோன்ற நவீன தொழில்நுட்பம் இல்லை. அவர்கள் பாரம்பரிய முறையிலேயே இன்னமும் மீன்பிடிக்கின்றனர். ஆகவே நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீன்பிடிக்கும் நம் மீனவர்களைக் கண்டு அவர்களுக்கு பயம் வருவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். கன்னியாகுமரி, மங்களூர், போன்ற பகுதிகளில் உள்ள மீனவர்கள் பயன்படுத்தும் இரட்டை மடி வலை, சுருக்கு வலை போன்றவற்றை ராமேஸ்வரம் மீனவர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடாது என்று சொல்வது எப்படி சரி எனக் கேட்கிறார்கள் இவர்கள். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பத்து நாட்கள்கூட சேர்ந்தாற்போல மீன்பிடிக்கச் செல்வது வழக்கம். ஆனால் குறுகிய கடல்பகுதி என்பதால் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை.

’’இலங்கை நேவியின் கெடுபிடி அதிகமானவுடன், மீன்வளத்துறை அதிகாரிகள் எங்ககிட்டஉங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் வித்தியாசம் தெரியாம இலங்கை நேவி உங்களை சுட்டுடும். அதனால் அவங்க கேட்டா காண்பிக்க .டி.கார்டு தர்றோம். ஒவ்வொரு முறை மீன்பிடிக்க போகும்போதும் எங்க கிட்ட சொல்லிட்டு பதிவுபண்ணிட்டு, யாரை தொழிலுக்கு கூட்டிட்டுப் போறோம்னு பதிஞ்சிட்டுப் போகணும்னு சொன்னாங்க அதிகாரிங்க. முதல்ல எதிர்த்தாலும் நமக்கும் பாதுகாப்புதானேன்னு ஒப்புக்கிட்டோம். ஆனால் அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. .டி. கார்டையெல்லாம் யார் மதிக்கிறாங்க. பார்த்தவுடனேயே சுடுறாங்க. இப்ப நாகப்பட்டினம் மீனவர்களை ஆயுதம் வச்சு அடிக்கிறாங்க’’ என்கிறார் தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்கத்தின் மாவட்டச் செய்லாளர் சேசுராஜா.

இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாகவே பார்க்கிறது. விடுதலைப் புலிகள் இருந்தவரை சுடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த கடற்படை இப்போதும் அதைத் தொடர்வது இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையின் தொடர்ச்சி என்கிறார்கள் ராமேஸ்வரம் மீனவர்கள். ‘’அப்போ அடிச்சாங்க..இப்பவும் அடிக்கிறாங்கன்னா என்ன அர்த்தம்? தமிழன்னு ஒருத்தன் இருக்கக்கூடாதுன்னு நெனைக்குறாங்களா?’’ என்கிறார் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜெரோம். தகாத வார்த்தைகளைப் பேசுவதையும் இலங்கை கடற்படை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. ‘’சொல்லவே முடியாத வாய்கூசுற வார்த்தைகள், சித்திரவதைகள், ஊசியால் குத்துறது, பச்சை மீனை திங்க வைக்கிறது, மசாலாபொடியை கரைச்சுக் குடிக்க வைக்கிறது, ஊசியால் குத்துறது, நிர்வாணப்படுத்துவது, தேசியக்கொடியை இடுப்பில் கட்டச் சொல்வதுன்னு எல்லாத்தையும் எங்க மீனவர்கள் அனுபவிக்கிறாங்க’’என்கிறார் சேசுராஜா. இதுபோன்ற நடவடிக்கைகள் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறுவது என்பதை மனதில் வைத்து மனித உரிமை அமைப்புகள் இந்த விஷயத்தை கையிலெடுக்கவேண்டிய கட்டாயத் தேவை இருக்கிறது.

2004ல் குண்டடிப்பட்டு இறந்த ராமுவின் வீட்டுக்குச் சென்றபோது அவருடைய புதல்வர்கள் திவ்யாவும் இருளேஸ்வரனும் வரவேற்றனர். ‘’அம்மாதான் கட்டடவேலைக்குப் போறாங்க இப்போ. நான் பத்தாவது படிக்கிறேன். அண்ணன் பன்னிரண்டாவது படிக்கிறான்’’ என்று சொல்லிக்கொண்டே அதிவேகமாக சிற்பிகளை நரம்பில் கோர்த்து மாலையாக்கி அழகு பொருள் செய்கிறாள் திவ்யா. ‘’ஒருநாளைக்கு இதுமாதிரி பத்து செய்வா. ஒண்ணு செஞ்சு குடுத்தா கடையில ஆறு ரூபா குடுப்பாங்க’’ என்கிறான் இருளேஸ்வரன். இப்படித்தான் வாழ்கின்றன குண்டடிப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்கள்.

மார்ச் 13 அன்று கடலுக்குச் சென்ற 19 ராமேஸ்வரம் மீனவர்களை கைதுசெய்து சிறைபிடித்தது இலங்கை. விடுதலை செய்யப்பட்டு முதல்நாள்தான் ராமேஸ்வரம் வந்து சேர்ந்த சூசையை சந்தித்தபோது ‘’இழுவை போட்ல மீன் பிடிச்சிட்டிருந்தோம். திடுப்னு வந்து .தலைமன்னார் துறைமுகத்துக்குப் பிடிச்சிட்டுப் போனாங்க. மன்னார் கோர்ட்ல எங்களை ஒப்படைச்சுட்டாங்க. 14 நாள் ரிமாண்ட் பண்ணினாங்க. வவுனியா ஜெயில்ல 5 நாள் இருந்தோம். அப்புறம் அநுராதபுரம் ஜெயிலுக்கு மாத்தினாங்க. நம்ம கமுதியிலேர்ந்து அங்கே விமானத்துல போய் ஜவுளி வியாபாரம் பண்ணுற ஒருத்தரைப் பார்த்தேன். அவரையும் காரணமே இல்லாம ஜெயில்ல புடிச்சுப் போட்டுட்டதா சொல்லி வருத்தப்பட்டார். கடலூர் எம்.எல்.. கே.எஸ்.அழகிரி எங்ககிட்ட போன்ல பேசினார். இங்கேர்ந்து ஆறுமுகம் தொண்டைமானுக்கு போன்பண்ணி எங்கள வந்து பார்க்க ஏற்பாடு பண்ணினார். ஆறுமுகம் தொண்டைமான், செந்தில் தொண்டைமான் ரெண்டுபேரும் வந்து பார்த்தாங்க. எங்களுக்குத் தேவையான பொருளெல்லாம் வாங்கிட்டு வந்தாங்க. அவங்க முயற்சியிலதான் எங்களுக்கு விடுதலை கிடைச்சுது. ஆனா கிட்டத்தட்ட 500 கிலோ மீன் போயிடுச்சு. நீதிபதி அதைத் தரணும்னு தீர்ப்பு சொன்னார். ஆனா நேவி தரலை’’ என்றார்.

அவ்வபோது கச்சத்தீவை மீட்போம் என்று தமிழக முதல்வர் குரல் கொடுக்கிறார். கச்சத்தீவை மீட்டால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு வருமா என்கிற கேள்வியை முன்வைத்தபோது ‘’இல்லை. கச்சத்தீவை பயன்படுத்துவது நாங்க மட்டும்தான். ஆனால் நாகப்பட்டினம் மீனவர்களையும் இலங்கை நேவி தாக்குவதைப் பார்க்கிறோம்.அதனால் கச்சத்தீவை மீட்டாலும் ஒரு பயனும் இல்லை’’ என்கிறார் ஜெரோம்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபாலை தொடர்புகொண்டபோது ‘’குண்டடிபட்டு இறந்தவங்களுக்கு 5 லட்சம் ரூபாய், குழந்தைகளின் பட்டப்படிப்பு, மேற்படிப்பு போன்றவற்றை அரசே ஏற்றுக்கொள்கிறது. இது அந்நிய நாடு தொடர்பான பிரச்சனை. இதனால் நான் கருத்து சொல்ல முடியாது. அம்மா கடிதம் எழுதியிருக்காங்க.’’ என்று முடித்துக்கொண்டார்.

‘’489 பேர் துப்பாக்கிச்சூட்டுல இறந்துருக்காங்க. 800 பேருக்கு கைகால்கள்ல அடி, 135 பேர் காணாமப் போயிருக்காங்க. 250 படகுகள் சிறைபிடிக்கப்பட்டிருக்கு. சிறை பிடிச்ச படகுகளை சேதப்படுத்தித்தான் அனுப்புவாங்க. என்னோட படகு ஒரு வருஷம் அங்கே கிடந்துச்சு. அப்புறம்தான் மீட்டுட்டு வந்தேன். பத்து லட்சம் செலவாச்சு. கொழும்புல ரெண்டு தடவை ரெண்டு நாட்டு மீனவர்களை வைச்சு பேச்சுவார்த்தை நடந்துச்சு. ஞாயிற்றுக்கிழமை அவங்க மீன்பிடிக்கமாட்டாங்க. அந்த 52 நாளோட கூட ஒரு 20 நாள்...வருஷத்துல 72 நாள் மட்டும் நாங்க அவங்க எல்லையில் மீன்பிடிச்சுக்கிறோம்னு கேட்டோம். ஒருமுறை சென்னையில வச்சு நடந்துச்சு. அதுலயும் ஒரு முடிவும் வரலை. நூத்துக்கணக்கான வருஷமா பாரம்பரியமா நாங்க மீன்பிடிக்கிறோம்நாங்க அங்க போறதும் அந்த மீனவர்கள் இங்க வர்றதும் காலங்காலமா நடக்குது. மாமன் மச்சான் மாதிரிதான் எங்க உறவு. 83க்குப் பிறகு என்னமோ புதுசா சட்டம் போட்டா எப்படி? 1974ல் இந்திரா காந்தி - பண்டாரநாயகா ஒப்பந்தம் குடியரசுத் தலைவர் முன்னிலையில் கையெழுத்தாச்சு. அதில் ரெண்டு நாட்டு மீனவர்களும் எல்லைதாண்டி மீன்பிடிக்கலாம்னு  ஒப்பந்தமாச்சு. அதுக்குப் பின்னால 1976ல் கழிச்சு ரெண்டு அரசுச் செயலாளர்களும் கூடி எல்லை தாண்டக்கூடாதுன்னு ஒரு ஒப்பந்தம் போடுறாங்க. ரெண்டு பிரதமர் குடியரசுத்தலைவர் போட்ட ஒரு ஒப்பந்தம் பெரிசா? ரெண்டு அரசுச் செயலாளர்கள் சேர்ந்து போட்ட ஒப்பந்தம் பெரிசா?’’ என்று கேள்வி எழுப்பும் சேசுராஜா ‘’பாரம்பரிய உரிமைன்னெல்லாம் கேட்டா ஒண்ணும் கிடைக்காது போலிருக்கு. அதனால் இப்போ கவர்மெண்ட்ல ஆழ்கடல் மீன்பிடிப்புக்குப் போகச் சொல்றாங்க. எங்களுக்கு அதுல பழக்கமே இல்லை. பத்துநாள் வரை கடலுக்குள்ள இருக்கணும். எங்களுக்கு அது புதுசு. பயிற்சி குடுக்குறதா கவர்மெண்ட் சொல்லுது. அப்படி ஆழ்கடல் மீன்பிடிப்புக்குப் போனா நாங்க இலங்கைப் பக்கம் போகமாட்டோம். இந்தியப் பெருங்கடல் பக்கம்தான் போவோம். அப்போ இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வரும்னு அரசு சொல்லுது..ஆனாலும் பழக்கமில்லாத ஒரு தொழிலுக்கு போக பயமாத்தான் இருக்கு.’’என்கிறார் சேசுராஜா

உயிரழப்புகளையும் பிரச்சனைகளையும் தவிர்க்க ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மீனவர்களை அரசு பழக்கலாம். ஆனால் பத்து நாட்கள் ஆழ்கடலில் தங்குமளவுக்கு வசதியான விசைப்படகு உரிமையாளர்கள் மட்டுமே மீன்பிடித் தொழிலில் இருப்பார்கள். எஞ்சியவர்களின் நிலை கேள்விக்குறியே. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.நந்தகுமாரை இந்தியா டுடே தொடர்புகொண்டபோது ‘’இப்பிரச்சனை குறித்து நிர்வாகம் தீவிர கவனம் செலுத்துகிறது. இந்த விடுமுறை காலத்துக்குள் ஒரு தீர்வு நிச்சயம் எட்டப்பட்டுவிடும். இரண்டு மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் மீனவர்களுடன் நடத்தியாகிவிட்டது. இலங்கையுடனான பிரச்சனையை தவிர்ப்பதற்கான அத்தனை வழிகளையும் ஆராய்கிறோம். அந்தத் திட்டங்களை இப்போது வெளியில் சொல்ல இயலாது. காத்திருங்கள்’’ என்கிறார் நந்தகுமார்.

எப்படி ஆதிவாசிகள் மலைகளையும் வனங்களையும் பாதுகாக்கிறார்களோ அப்படியே மீனவர்கள் கடல்வளத்தைக் காக்கும் பழங்குடிகள். அவர்களுடைய மீன்பிடி உரிமை என்பது மீனவ சமுதாயம் தோன்றிய காலந்தொட்டு இருந்துவருவது. இயற்கை தந்த வளங்கள் மனிதர்களுக்குப் பொதுவானவை. நாட்டு எல்லைகள் அண்மையில்தான் வகுக்கப்பட்டன. ஆனால் மீனவர்களின் மீன்பிடி உரிமை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்புடையது. இப்போதும்கூட தாய்லாந்தில் இருந்து வந்து வங்காள விரிகுடா பகுதியில் மீன்பிடிப்பதும் நடக்கிறது. அதனை எந்த நாடும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அங்கெல்லாம் எல்லை கடக்கும் பிரச்சனை இல்லை. எந்த இருநாடுகளுக்கு இடையே பிரச்சனை இருக்கின்றனவோ அங்கே மீனவர்களை பணயம் வைப்பது நடக்கிறது. இந்தியாவும் இலங்கையும் நட்புநாடுகள் என்று பறைசாற்றிக்கொண்டாலும்கூட, தமிழ்நாட்டை நட்பாக இலங்கை பார்க்கவில்லை என்பதிலிருந்துதான் பிரச்சனை தொடங்குகிறது. இனவெறியின் இன்னொரு வடிவமாகவே இலங்கை இப்படி நடந்துகொள்கிறது என்கிற உண்மையை வெறுமனே எல்லை தாண்டுகிறார்கள் என்கிற காரணத்தை வைத்து மறைத்துவிட முடியாது. மீனவர்களின் பாரம்பரிய உரிமையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டி இருக்கிறது. நிலத்தில் அகப்பட்ட இடங்களை சுருட்டிக்கொண்டு உரிமைகொண்டாடும் ரியல் எஸ்டேட் முதலாளிகள் போல நாடுகள் மாறுவது சரியல்ல. மீனவர்களின் பாரம்பரிய உரிமை காக்கப்படும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு தீர்வுகள் எட்டப்படவேண்டும். ஏனெனில் எல்லைதாண்டுவது மட்டுமல்ல பிரச்சனை என்பது எல்லைக்குள் மீன்பிடிக்கும் நாகப்பட்டினம்-காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.