மீண்டுமொரு முறை மதவாத இந்துத்துவ சக்திகள் ஒரு கலைப் படைப்பை தடுத்து நிறுத்தியிருக்கின்றன. ஓவியர் எம்.எஃப். ஹுசேன், குஜராத்தில் ஒவியர் சந்திரமோகனின் கண்காட்சி தாக்குதல் என்று கலைகள் மீதான இந்துத்துவாவின் தாக்குதல் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் நாட்டில் இது ஒன்றும் அதிசயமல்ல. ஆம். ஏவம் குழுவினரின் தயாரிப்பில் கார்த்திக் குமார் எழுதி நடித்துள்ள ’அலி ஜே’ என்கிற நாடகத்தை சென்னையில் நடத்த இந்துத்துவ சக்திகள் அனுமதிக்கவில்லை.
இந்நாடகம் மும்பையில் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் காவல்துறை பாதுகாப்புடன் பெங்களூரில் நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள அல்லயன்ஸ் பிரான்சைஸ் அரங்கத்தில் நிகழ்த்தப்படுவதாக இருந்த ‘அலி ஜே’ நாடகம் பாகிஸ்தான் பிரிவினையின் பின்னணியில் உருவாக்கப்பட்ட நாடகம். அலி ஜே என்பது முகமது அலி ஜின்னாவைக் குறிக்கிறது. அவரும் ஒரு பாத்திரமாக வருகிறார். இந்நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் எழுதிய கடிதத்தில் இந்து முன்னணியும், இந்து ஜன ஜாக்ரிதி சமிதியும் இந்நாடகத்தை நடத்தக்கூடாது என்று புகாரளித்துள்ளதாக தெரிவித்த காவல்துறை ஆணையர் இந்நாடகத்தை நடத்தவேண்டாம் என்றும் அறிவுறுத்தியதை அடுத்து நாடகம் நடத்தப்படவில்லை.
பத்திரிகையாளரும் பரீக்ஷா நாடகக்குழுவின் இயக்குநருமான ஞாநி “நான் தொடுத்த வழக்கில் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி எந்த நாடகத்துக்கும் காவல்துறை அனுமதி பெறவேண்டிய தேவையில்லை. ஆகவே இவர்கள் நாடகத்தை நடத்தியிருக்கலாம்” என்கிறார். இது குறித்து இந்தியா டுடேயிடம் பேசிய ஏவம் குழுவின் இயக்குநர் சுனில் விஷ்ணு “சென்னை காவல்துறை வாய்மொழியாக உத்தரவு போடுவது அதிர்ச்சியாக இருக்கிறது. நாங்கள் மிகுந்த மனவருத்தத்திலும் வேதனையிலும் இருக்கிறோம். சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விசாரித்தபோது தமிழ்நாடு காவல்துறை சட்டம் பிரிவு 41 படி சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் எதையும் நிறுத்த காவல்துறைக்கு அதிகாரம் உண்டு என்கிறார்கள். சட்டம் ஒழுங்குக்கு பிரச்சனை வரும் என்று தெரிந்தால் பாதுகாப்பு கொடுப்பது தானே முறை? ஆனால் நாடகத்தை நிறுத்துவது படைப்புரிமைக்கு எதிரான செயல். இது இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் நாடகம். தேச ஒற்றுமையை வலியுறுத்தும் நாடகம். இதில் எந்த மதத்துக்கும் விரோதமாக எதுவும் இல்லை” என்கிறார்.
மோடி பிரதமராகிவிட்டதுபோன்றே இந்துத்துவ சக்திகளின் செயல்பாடுகள் அண்மைக்காலமாக அமைந்துள்ளன. அண்மையில் சன் டிவியில் 17 ஆண்டுகாலமாக ‘நேருக்கு நேர்’ என்கிற அரசியல் விமர்சன நிகழ்ச்சியை நடத்திவந்த ஊடகவியலாளர் வீரபாண்டியனின் நிகழ்ச்சி 7 வாரங்களாக ஒளிபரப்பப்படவில்லை. காரணம் பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகள் காவல்துறையில் அவர்மீது அளித்த புகார்தான். அரங்க நிகழ்ச்சி ஒன்றில் மோடி குறித்து விமர்சனம் செய்ததால் அவர்குறித்து காவல்துறையில் புகாரளித்தன இந்து அமைப்புகள். சன் டிவி நிர்வாகத்துக்கும் அழுத்தம் தந்து நிகழ்ச்சியை நிறுத்தவைத்தனர். அவருடைய நிகழ்ச்சி நிறுத்தப்பட்டவுடனேயே களமிறங்கிய மதச்சார்பற்றோர் மாமன்றம் இந்துத்துவ சக்திகளின் செயலை பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடும் செயல் என்று கண்டித்து அறிக்கை தயாரித்து அனைத்து கட்சித் தலைவர்களிடமும் கையெழுத்து பெற்று வெளியிட்டது. ஆனாலும் அவருடைய நிகழ்ச்சி இப்போதுவரை ஒளிபரப்பாகவில்லை. இதுகுறித்து மதச்சார்பற்றோர் மாமன்றத்தைச் சேர்ந்த தேவநேயன் “அவர் நடத்தும் நிகழ்ச்சியில் எத்தனையோ இந்துத்துவவாதிகள் கலந்துகொண்டிருக்கிறார்களே?” என்று கேட்கிறார். இப்படி தொடர்ந்து தமிழ்நாட்டில் மோடியை ஆதரிக்கும் இந்துத்துவ சக்திகளால் மதச்சார்பின்மைக்கும் கருத்துரிமைக்கும் சிக்கல் ஏற்படுகிறது.
தமிழ்நாடு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டது என்கிறார் சுனில் கிருஷ்ணா. ஏனெனில் சென்னையைத் தொடர்ந்து பெங்களூரிலும் மார்ச் 12 அன்று நடத்துவதாக இருந்த காட்சியை சென்னை காவல்துறை பாணியில் பார்வையாளர்கள் எல்லோரும் வந்துவிட்ட நிலையில் பெங்களூர் காவல்துறை, நாடகம் மேடையேறக்கூடாது என்று சொல்லி முதல் நாள் நிகழ்ச்சியை நடத்தவிடவில்லை என்கிறார். இது நாடு முழுவதும் தொடரும் அபாயம் உள்ளதை சென்னையிலும் பெங்களூரிலும் நடந்துள்ள நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
(நன்றி :இந்தியா டுடே)
No comments:
Post a Comment