அந்தச் சிறுமியை நினைவிருக்கிறதா? சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கு அருகேயுள்ள சென்றாம்பாளையத்தில் 5 பேரால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பத்து வயது சிறுமி மறைந்து வெகுநாட்கள் ஆகிவிடவில்லை. பிப்ரவரி 14 அன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அந்த 5ம் வகுப்புச் சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு வன்புணர்வு செய்ததில் அவள் இறந்துவிட அவளை மரத்தில் தொங்கவிட்டுச் சென்றது. விசாரணையில் 5 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
பெற்ற குழந்தையை கொடூரமான நிலையில் இழந்து நிற்கும் அவளுடைய குடும்பத்துக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. ஊரில் யாரும் இவர்களுடன் பேச்சுவார்த்தையில் இல்லை என்பதால் ஊரைவிட்டு வெளியேறி விட்டதாகக் கூறுகிறார் சிறுமியின் தந்தையும் தறித் தொழிலாளியுமான பரமசிவம். அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாத அக்குடும்பம் சொந்த ஊரில் வாழ வழியின்றி வேறொரு ஊரில் உள்ள உறவினர் வீட்டில் தற்போது தங்கியிருக்கிறது. சிறுமியுடன் கூடப் பிறந்த தங்கையும் அண்ணனும் உள்ளனர். இருவரும் சென்றாம்பாளையத்தில் உள்ள பள்ளியில் படிக்கின்றனர். “ஊரை விட்டு விலக்கி வைத்ததுபோல யாரும் எங்களுடன் பேசுவதில்லை. பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்குச் செல்ல பயப்படுகிறார்கள். அங்கே போனால் கூட படிப்பவர்களும் பேசுவதில்லையாம். சின்னவள் ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள். அதே பள்ளிக்கூடத்தில் தன்னுடன் படித்த அக்காவைக் குறித்து பள்ளியில் மற்றவர்கள் கேட்டுக்கொண்டே இருப்பதால் பள்ளிக்கூடத்துக்குப் போவதில்லை. பையனும் இதே காரணத்துக்காக போகவில்லை. இருவரும் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் ஊரைவிட்டு வெளியேறிவிட்டோம். பரீட்சை மட்டும் இந்த ஆண்டு எழுதவைத்து வேற பள்ளிக்கூடத்தில் சேர்க்கவேண்டும்” என்கிறார் தாய் பழனியம்மாள்.
சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்த 5 பேரும் அதே ஊரைச் சேர்ந்தவர்கள். ”காவல்துறைக்குப் போனது பலபேருக்குப் பிடிக்கவில்லை. கைது செய்யப்பட்டிருப்பவர்களின் குடும்பத்தினர் எங்களை ஏறெடுத்துப் பார்க்காமல் கட்ந்துபோய்விடுகிறார்கள். ஆனால் ஊருக்குள் பலர் சொந்த சாதிக்காரர்களை நாங்கள் காட்டிக்கொடுத்ததாக புகார் சொல்லுகின்றனர். இத்தனை பெரிய இழப்பை சந்தித்திருக்கிறோம். ஆனால் ஊரில் ஒருவர் என்னவென்று கேட்பதில்லை. துக்கத்துக்கு வெளியூரிலிருந்து வந்தவர்களெல்லாம் போய்விட்டபின்னால் அனாதை போல அந்த ஊரில் நான்கு பேரும் இருந்தோம். பேச்சுவார்த்தையே இல்லை. அங்கிருக்கமுடியவில்லை. அதனால் என் வேறொரு ஊரில் எங்கள் சின்ன மாமியர் வீட்டில் இருக்கிறோம்.” என்று கூறும் பரமசிவத்துக்கு மீண்டும் சென்றாம்பாளையம் செல்வது குறித்து யோசிக்கவே முடியவில்லை என்கிறார். தும்பல் என்ற அருகிலுள்ள கிராமத்திற்குச் செல்ல முடிவெடுத்திருப்பதாகக் கூறினார். சென்றாம்பாளையத்தில் வீட்டிலேயே தறி வைத்திருக்கிறார். “அதை தும்பலுக்கு எடுத்துவந்து பொருத்த ஒன்றரை லட்சம் செலவாகும். அவ்வளவு பணம் இல்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. கூலிவேலைக்குப் போயாவது குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும்” என்கிறார்.
பாலியல் வன்கொடுமைக்கு பிள்ளையை பறிகொடுத்துவிட்டு சொந்த ஊர் மக்களின் புறக்கணிப்பையும் தாங்கிக்கொள்ள முடியாமல் ஊரைவிட்டு வெளியேறும் அவல நிலைக்கு இன்று ஒரு குடும்பம் தள்ளப்பட்டிருக்கிறது. இவர்களுக்குத் ஆதரவாக உள்ள வழக்கறிஞர் ரத்தினம் “புதிய விசைத்தறி அமைக்க பரமசிவத்துக்கு வட்டியில்லாத கடன் வழங்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும். முதல்வர் அறிவித்த 3 லட்ச ரூபாயை உடனடியாக அக்குடும்பத்துக்கு வழங்கவேண்டும். முக்கியமாக அவரக்ளுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும். பிள்ளைகளின் படிப்பைத் தொடர அரசு உதவவேண்டும்” என்றார்.
(நன்றி : இந்தியா டுடே)
எவ்வளவு கொடுமை. மக்களும் மாறினால் நல்லாருக்கும்.
ReplyDelete