Monday, March 03, 2014

கேள்விக்குறியாகும் பெண்கள் உரிமை

சிறுசேரியில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்திலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் உள்ளது அந்த புதர்மண்டிய இடம். அந்தப் புதரின் மறைவில் 9 நாட்கள் கழித்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உமா மகேஸ்வரியின் உடலை சில விலங்குகள் சிதைத்த அடையாளம் இருந்ததாய் காவல்துறை கூறுகிறது. அந்த விலங்குகளுக்கு முன்பாகவே சில மனிதர்கள் உமா மகேஸ்வரியின்மீது பாலியல் வன்முறை செய்து கத்தியால் குத்திக் கொன்றிருக்கிறார்கள். அந்தப் புதர் மண்டிய இடத்தில் பகலிலேயே நடப்பது எதுவும் தெரியாத அளவு அடர்த்தியுடன் உள்ளது. இரவு பத்து மணிக்கு என்றால் யாருக்கும் எதுவும் தெரிய சாத்தியமில்லை. தெரு விளக்குகள் ஏதுமற்ற அச்சாலையில் அந்தி மங்கியபின் பெண்கள் யாரும் செல்ல மாட்டோம் என்கிறார் சிப்காட் வளாகத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர்.

உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட செய்தி வெளியானதும் தகவல் தொழில்நுட்பத் துறையினர் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. சமூக ஊடகங்கள் எல்லோரும் தங்கள் கவலையை பகிர்ந்துகொண்டனர். நாளிதழ்கள் செய்திகள் வெளியிட்டன. முன்னெப்போதுமில்லாத வகையில் ஆளில்லாத விமானம் மூலம் சான்றுகளை சேகரித்தது சிபிசிஐடி. ஆங்காங்கே எல்லோரும் இதுகுறித்தே பேசினார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த 500 பேர் சிப்காட் வாயிலில் கூடி பதாகைகளை ஏந்தியபடி, கோரிக்கை தட்டிகளைப் பிடித்தபடி முழக்கமிட்டனர். கொலைக்கு கண்டனம் தெரிவித்தும் பெண்களின் பாதுகாப்புக்கான கோரிக்கைகளை முன்னெடுக்கக் கோரியும் நடந்த இந்த ஆர்ப்பட்டத்தை சேவ் தமிழ்ஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இரண்டு நாட்கள் விசாரணைக்குப் பின் குற்றவாளிகளைப் பிடித்துவிட்டதாகவும் காவல்துறை அறிவித்திருக்கிறது.

சேவ் தமிழ்ஸ் அமைப்பைச் சேர்ந்தவரும் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவருமான பரிமளாவிடம் பேசியபோது.டி. துறையில் பல ஷிப்டுகளாக பணி செய்ய வேண்டியிருக்கும். உதாரணமாக அமெரிக்க நிறுவனங்களுக்கு பணியாற்றுகையில் அவர்களில் நேரப்படி இரவு பத்து மணி முதல் காலை 6 மணி வரை பணியாற்றவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. நம் ஊரில் இரவில் வெளியில் வரும் பெண்கள் குறித்த கண்ணோட்டம் மிகவும் பிற்போக்கானதாக இருக்கையில் இந்தத் துறைக்கு வரும் பெண்கள் முதலில் இத்துறைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக்கொள்ள சிரமப்படுகிறார்கள். அதன்பின் அவர்கள் இரவுநேரப்பணிக்கும்டீம் அவுட்போன்றவற்றுக்கும் தங்களை பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்என்கிறார். இரவு அவர்களைப் பொறுத்தவரை மிகவும் பழகியதாக மாறிவிடுகிறது. ஆனால் இச்சமூகத்துக்கு இரவில் வெளியேவரும் பெண்கள் குறித்த பார்வை மாறவில்லை. ஆகவே .டி.துறை பெண்கள் பணி முடிந்து வீட்டுக்குச் செல்ல முறையான வாகன வசதிகளை ஏற்பாடு செய்துதரவேண்டியது நிறுவனத்தின் கடமையாகிறது. இந்தச் சம்பவத்துக்குப் பின் டி.சி.எஸ். நிறுவனம் பெண் ஊழியர்கள் காலை எட்டரை மணீயிலிருந்து மாலை ஐந்தரை மணிக்குள் மட்டுமே வேலை செய்யவேண்டும் என்றும் ஐந்தரை மணிக்குப்பின் வேலை செய்யும் பெண்கள் மறுநாள் அதற்கான காரணத்தை எழுத்துபூர்வமாக தரவேண்டுமென்றும் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு வகையில் பெண்களை உற்பத்தியிலிருந்தும் உழைப்பிலிருந்தும் வெளியே வைக்கும் நடவடிக்கை. எனலாம். பத்து மணிக்கு மேல் வெளியே செல்லும் பெண்களுக்கு முறையான வாகன வசதி செய்வதுதான் சரியானதாக இருக்க முடியும்.

வழக்கறிஞர் கீதா ராமசேஷன்தொழிலாளர் சட்டத்தின்படி ஒரு விபத்து நடந்தால் அது வேலை நேரத்தில் பணியிடத்தில் நடந்தால் மட்டுமல்ல, வேலைக்கு வரும்போதோ வேலை விட்டுப்போகும்போதோ நடந்தால் கூட அதற்கு பணியாற்றும் நிறுவனம் பொறுப்பேற்கவேண்டும். அதன்படி பார்த்தால் உமா வேலைவிட்டு வரும்போது கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுவும் பணிநேரம் என்றுதான் கருதவேண்டும். ஆனால் ஒரு கொலைக்கு நிறுவனத்தை மட்டும் பொறுப்பாக்க முடியாது. கொலையாளிகள், இச்சமூகம், தெருவிளக்குகள் போடாத நிர்வாகம் என்று எல்லோருக்கும் கூட்டுப்பொறுப்புள்ளது அந்தப் பகுதி ஆண்களுக்கும் பாதுகாப்பில்லாத பகுதியே. சில காலம் முன்பு ஒரு மென்பொருள் ஊழியரை கடத்திக்கொண்டு போய் அவருடைய உடலை தடா அருகே கண்டெடுத்தார்கள். இப்படி யாருக்கும் பாதுகாப்பில்லாத இடமாகவே அத்தகைய பகுதிகள் உள்ளன.” என்கிறார்.

பலருக்கும் பெண்களுக்கு மிகவும்  பாதுகாப்பான துறை என்று நம்பிய .டி. துறையில் உமாவுக்கு நேர்ந்ததைப் பார்க்கையில் இன்னும் சமூகத்தின் கீழ் அடுக்குகளில் பணியாற்றுபவர்களின் பாதுகாப்பு எப்படியிருக்கும் என்கிற அச்சம் வருவதாக மென்பொருள் துறையில் பணியாற்றும் பெண் ஒருவர் கூறுகிறார். சிப்காட் வளாகத்தில் இரவு நேரத்தில் பேருந்துகள் அதிகம் வருவதில்லை. இரவு 6 மணிக்கு மேல் ஷேர் ஆட்டோக்கள் உள்ளேவரக்கூடாது என்று எழுதப்படாத விதி உள்ளது. ஆகவே அவர்கள் வருவதில்லை. 6 மணிக்குமேல் அங்கு ஆட்டோரிக்‌ஷாக்களும் பேருந்துகளும் மட்டுமே உண்டு. பொது போக்குவரத்தை அதிகப்படுத்துவது இத்தகைய குற்றங்களை தடுக்க இன்னொரு வழியாக இருக்கும். பல்லாயிரக்கணக்கானோர் வந்துபோகும் பகுதியில் கூப்பிடுதூரத்தில் ஒரு காவல்நிலையம் அமைக்கலாம் என்று சிப்காட் வளாகத்தில் பணிபுரியும் பெண்கள் யோசனை கூறுகிறார்கள். சென்னை மாநகரத்தில் விடாமல் ரோந்துவரும் காவல்துறையினர் போல இத்தகைய புறநகர் பகுதிகளிலும் இரவுநேர ரோந்துப் பணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டால் குற்றங்களை தடுக்கலாம். ”அலுவலகத்துக்கு அருகிலேயே இருப்பதால் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் குடிவந்துவிடுகின்றனர். சில பெண்கள் விடுதிகளும் உருவாகிவிடுகின்றன. ஆனால் மிகக் குறைந்த தொலைவுக்கு வாகன வசதி கேட்கவேண்டாம் என்று சில பெண்கள் நடந்தோ அல்லது இருசக்கரவாகனத்திலோ கும்மிருட்டில் செல்லும் நிலை இருக்கிறது. அப்போது ஆண்கள் அவர்களை கேலிபேசுவதும் ஈவ் டீஸிங் செய்வதும் அதிகமாக இருப்பதாக பெண்கள் புகார் தெரிவித்தனர். தெருவிளக்குகளை முறையாக போடுவது முதல்படியாக இருக்கும்என்கிறார் பரிமளா.

உமாமகேஸ்வரியின் தந்தை பாலசுப்பிரமணியிடம் பேசியபோது, “பெற்ற பெண்ணை இழந்து நிற்கிறோம். குற்றவாளிகளை விரைந்துபிடித்த காவல்துறைக்கு நன்றி. இதைத் தவிர வேறு என்ன பேசுவது என்று தெரியவில்லைஎன்றார் வேதனையுடன். இச்சம்பவத்தைக் காரணமாகக் காட்டி பெண்களின் உரிமைகளை முடக்கிவிடும் அபாயமும் இன்றைக்கு எழுந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறார் எழுத்தாளர் .கீதா. “பெண்களின் பாதுகாப்புக்கான  எந்த நடவடிக்கையும் அவளுடைய வேலை செய்யும் உரிமையையும், அவளது சுதந்திரத்தையும், எங்கும் செல்லும் உரிமையையும் மறுத்து விடக்கூடாதுஅவர்கள் வெளியிடங்களுக்குச் செல்ல அதிக கட்டுப்பாடுகள் விதிப்பதும், அவர்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள நிர்பந்திப்பதும் கூடாது. இதற்கு பதிலாக பொறுப்புணர்வுடன் கூடிய, அரசியல் சட்டம் அனுமதித்துள்ள பெண்களுக்கும், ஆண்களுக்குமான பாதுகாப்பே இப்போதைய தேவைஎன்கிறார்..தில்லி நிர்பயாவின் கொலைக்குப்பின் எப்படி பெண்கள் இரவு நேரத்தில் வெளியே செல்வது குறித்து சர்ச்சை எழுந்ததோ அதுபோலவே இப்போதும் எழுந்துள்ளது. இரவு நேரத்தில் ஒரு பெண் வெளியே போவது என்பது அசட்டுத்துணிச்சல் இல்லை. உமா மகேஸ்வரிக்கு படித்துமுடித்தவுடன் வீட்டைவிட்டு தொலைவில் வந்து ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி சம்பாதித்து சொந்தக்காலில் நிற்கும் துணிவு இருந்தது. இரவு பத்து மணிக்கு மேல் தைரியமாக ஆளரவற்ற இருட்டான சாலையில் நடந்துசெல்லும் தைரியம் இருந்தது. இந்தத் துணிச்சலின் பின்னால் இருந்தது நமக்கு ஒன்றும் ஆகிவிடாது என்கிற இச்சமூகத்தின் மீதான நம்பிக்கை. அந்த நம்பிக்கையை சிதைத்திருக்கிறது இச்சமூகம் என்பது வேதனை தரும் உண்மை

(நன்றி: இந்தியா டுடே)

2 comments:

  1. Anonymous4:03 pm

    Why don't you release them

    ReplyDelete
  2. Anonymous4:04 pm

    After few years most of the TAMILARKAL will say release them. But i can say u release them Now

    ReplyDelete