Friday, March 07, 2014

சென்னை மண்ணின் பாடகன்

ட்டாயிரம் கடனைப் பட்டு செத்துட்டான் - அவனுக்குப்
பத்தாயிரம் வெடியை வாங்கிவெடிக்கிறான்

குரலெடுத்துப் பாடுகிறார் கானா பாலா. வெகு சாதாரணமான வார்த்தைகள். ஆனால் கானா பாலா பாடும்போது காந்தம்போல் இழுக்கின்றன. ஜீன்ஸ் அணிந்துகொண்டு காதில் மூன்று கடுக்கண்களுடன் மைக் பிடித்து பாலா பாடத் தொடங்கினால் கூட்டம் சேர்ந்துவிடுகிறது. இன்றைக்கு தமிழ் சினிமாவில் அவர் பாடல் இல்லாத படமே இல்லை எனும் அளவுக்கு ஆகிவிட்டிருக்கிறார். பல படங்களின் விளம்பரத்துக்கு இவருடைய பாடல்கள்தான் பயன்படுகின்றன. 


“இசையமைப்பாளருக்காக படம் ஓடியிருக்கு தமிழ்நாட்டில். ஆனால் ஒரு பாடகருக்காக தியேட்டருக்குப் போய் மக்கள் பார்க்கறது கஷ்டம். ஒரு தியேட்டரில் நூறு பேர் என் பாட்டுக்காகப் போறாங்க. இதைப் பெரிய விஷயமா நினைக்கிறேன். வேற பாடகருக்கு இந்தப் பெருமை இல்லை. என்ன...நான் சொல்றது சரிதானே?”  புருவங்களை உயர்த்தியவாறு கேட்கிறார் பாலா.  ஒவ்வொரு வாக்கியத்துக்கு இடையிலும் ட்ரேட் மார்க் போல ‘என்ன..நான் சொல்றது சரிதானே?’ என்கிறார். வெகுளிச் சிரிப்பு, வாய் நிறைய பாட்டு, மனம் நிறைய சந்தோஷம், இதுதான் பாலா. ”படிக்கிறப்போ ஃபுட்பால், கேரம் ப்ளேயர். ஆனா அதுக்கெல்லாம் என்னை வீட்ல விடலை. படிப்புத்தான் முக்கியம். படின்னு சொல்லிட்டாங்க. விட்டிருந்தா கேரம்ல உலகப்புகழ் பெற்றிருப்பேன்” என்கிறார். 

‘அப்பா எம்.ஆர்.எஃப்ல ஃபையர் மேன். அம்மா வீட்டோட இருந்தாங்க. பொறந்தது இங்கதான். புளியந்தோப்பு-கன்னிகாபுரம். இதைவிட்டு கோடி ரூவா குடுத்தாலும் வரமாட்டேன். சூட்டிங், ரெக்கார்டிங் எல்லாம் இங்கிருந்துதான். அரைமணி நேரத்துல போயிடலாம்” எனும் பாலா வாங்கிய காரை விற்றுவிட்டார். இருசக்கர வாகனம் அல்லது பேருந்தில் பயணம் செய்கிறார். “இப்போ பலபேர் அடையாளம் கண்டு பேசுறாங்க. அப்போ சந்தோஷமாத்தான் இருக்கு. மக்கள்ட்ட பேசுறதைவிட வேறென்ன சந்தோசம். சும்மா கார் கதவை சாத்திக்கிட்டு உள்ள உட்கார்ந்து போறதுல என்ன இருக்கு?” என்கிறார்.

சென்னை மாநகரத்தின் புறக்கணிக்கப்பட்ட பகுதியான வடசென்னைதான் கானா அதிகம் புழங்கும் இடம். சிறுவயதிலிருந்தே கானா பாடுவதில், பாட்டு கட்டுவதில் தனித்திறமையுடன் இருந்த கானா பாலா என்கிற பாலமுருகன் ஒரு வழக்கறிஞர். சென்னை ப்ரெஸிடென்சியின் பி.எஸ்சி. தாவரவியல் முடித்தபின் மதுரை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று நீதித்துறையில் இருந்தாலும், தன் தனி அடையாளமான கானாவை விடவில்லை பாலா. ஏராளமான பக்திப்பாடல் குறுந்தகடுகளை வெளியிட்டிருக்கும் பாலா 22 ஆண்டுகளாக வேளாங்கண்ணிக்கு நடைபயணம் செல்கிறார். “மாதா பாடல்களில் என்னளவுக்கு யாரும் பாடியிருக்கமாட்டாங்க. இஸ்லாமிய பாட்டு, இந்துப் பாட்டு எந்தப் பாட்டு பாடச் சொன்னாலும் பாடத் தயாரா இருக்கேன்” என்கிறார். 

’அட்டக்கத்தி’ படத்தில் பாலா பாடிய ‘நடுக்கடலுல’ மற்றும் ‘ஆடிப் போனா ஆவணி’ ஆகிய பாடல்கள்தான் பாலாவை மக்களுக்கு அடையாளம் காட்டின. அதன்பின் வரிசையாய் படங்கள். வெற்றிமாறன் தயாரித்த ‘உதயம் என்.எச்’ படத்தில் ‘ஓரக்கண்ணால’ பாடலை அவரே எழுதி பாடி நடிக்கவும் செய்தார். ’சூது கவ்வும்’ படத்தின் ‘காசு பணம் துட்டு’ ஒலிக்காத வீடுகளே இல்லை எனலாம். பாலா புகழின் உச்சியில் இருக்கிறார். ஆனாலும் எளிமையாய் இருக்கிறார். “சினிமாவில் நான் ஜெயிப்பேன்னு பல வருஷத்துக்கு முன்னாலயே தெரியும். டிவில பாட்டு பாடி அது மூலமாக வரலை நான். எந்தப் பின்னணியும் கிடையாது. கேள்விஞானத்தில் சொந்தத் திறமையால்தான் பாடுறேன். திறமையாளன் ஜெயிச்சுத்தானே ஆகணும்? எனக்கு.இன்னும் எல்லா இசையமைப்பாளர்கிட்டேயும் பாடணும். அட்டக்கத்தி மூலம் ரஞ்சித் ஒரு ப்ரேக் கொடுத்தார். எழுதும் திறமையை அங்கீகரிச்சு ஓரக்கண்ணால பாட்டு எழுத வாய்ப்பு தந்தது வெற்றிமாறன் சார்” என்று இருவரையும் நினைவுகூர்கிறார்.

அட்டக்கத்தி இயக்குநர் பா.ரஞ்சித் “அவர் தலித் செயல்பாடுகளில் ஈடுபடுபவர் என்கிற முறையில்தான் முதலில் அறிமுகமானார். பூவைமூர்த்தியின் கொள்கை விளக்கப் பாடல்கள் பாடுவார். எங்க ஏரியாவில் அவரைத் தெரியாதவர்களே கிடையாது.. எங்க ஊர் கோயில் திருவிழாவுக்குப் பாட வந்தபோது முதலில் அவர் பாடி கேட்டேன் . நலல் திறமை. கானா மட்டுமில்லை. கிளாசிக்கல் பாடலையும் ரிதம் பிடிச்சுப் பாடக்கூடிய அசாத்திய தனித்திறமை உண்டு. எங்க அண்ணனும் வழக்கறிஞர். அவரும் வழக்கறிஞர். ரெண்டுபேரும் நல்ல நண்பர்கள். அந்த அடிப்படையில் அவரைப் பாடக் கூப்பிட்டேன். ரொம்பப் பிடிச்சிருச்சி. அப்படித்தான் அந்த ரெண்டு பாட்டும் படத்தில் வந்தது. என் அடுத்த படத்திலும் பாலா அண்ணனுக்காகவே ஒரு ஜாலியான பாட்டும் ஒரு சாவு கானாவும் வச்சிருக்கேன்” என்கிறார். 

அதென்ன சாவு கானா? மரண வீட்டில் இரவுமுழுவதும் பாடும் கானா அது. “நான் கல்யாணத்திலும் பாடுவேன். சாவு வீட்டிலும் பாடுவேன். கல்யாணத்தைவிட சாவுவீட்டுக்குப் பாடப்போனால் பெரிய போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள் எனக்கு” எனும் பாலா இப்போதும் துக்க வீடுகளுக்கு கானா பாட செல்கிறார். 

’பீட்சா’ படத்தின் ‘நினைக்குதே’ ரிங் டோன் பாடல் இவர் பாடியதுதான் என்பதை பலர் நம்பவே இல்லை என்கிறார். பாலாவுக்கு மிகவும் பிடித்த கலைஞர் சந்திரபாபுதான். “டி.எம்.எஸ்ஸும் பிடிக்கும். சிவாஜி, எம்.ஜி.ஆர். ரெண்டுபேருக்கும் அவர் பாடுவது ஆச்சரியமா இருக்கும். ஆனால் சந்திரபாபுசார்தான் நமக்கு ஆசான். என்ன மாதிரி கலைஞன்! சில பாட்டுல அவர் ஸ்டைலை ஃபாலோ பண்ணியிருக்கேன். இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்; முகிலின் கண்ணீர் மழை எனச் சொல்வார்; இயற்கை அழுதால் உலகம் செழிக்கும் மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்” சன்னமாக உருக்கும் குரலில் பாடிக் காட்டுகிறார். திடீரென்று உற்சாகமாகி ‘குங்குமப்பூவே..குஞ்சுபுறாவே’ பாடுகிறார். “சென்னை மாதிரியான ஊர்ல வாணிபம் செய்ய கடல்வழியா பலர் வந்துபோனாங்க. கானாவை கவனிச்சா அதில் பாகிஸ்தான் கவாலியும் இலங்கையின் பைலாவும் கலந்த ரிதம் இருக்கும். வெள்ளைக்காரன் ஆட்சியிலதான் கானா உருவாக ஆரம்பிச்சது. அதனால ஆங்கில வார்த்தைகள் அதிகம் இருக்கும். சினிமா பாட்டு மெட்டிலும் கானா பாடுவதுண்டு. இப்போ சமூகம், அறிவுரை, நையாண்டி, அப்புறம் பெண்கள் பத்திப் பாடுறது இதுதான் கானா. பாடுறவங்க எல்லாம் ஆண்கள்தானே. அவங்களை அவங்களே தாழ்த்திப்பாங்களா? அதான் பொண்ணுங்களைப் பத்தியே இருக்கு எல்லா பாட்டும். வடசென்னையில் என்னையும் சேர்த்து 200 பேராவது கானா பாடகர்கள் இருப்பாங்க. கானாவில் அதிகமா உள்ளது ரெண்டு வகைதான். எதிராளியை கிண்டல் பண்ணுவது, பெண்களைப் பாடுவது” என்று கானாவின் வரலாற்றைச் சொல்கிறார் பாலா. 

இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமார் கானா பாலாவுடன் பணியாற்றுவது மிகவும் விருப்பமானது என்கிறார். “அவருக்கு ஏராளமான ரசிகர்கள். தன் வேலையை அவர் ரசித்து செய்கிறார். உச்சபட்ச திறமை இருக்கிறது. பாடுவது மட்டுமல்லாமல் பாட்டெழுதுவதிலும் மெட்டமைப்பதிலும் அவருக்கு இருக்கும் திறன் கண்டு வியக்கிறேன். தன் இதயத்தின் அடிஆழத்திலிருந்து அவருடைய கலை வெளிப்பாடு உள்ளது. இத்தனை இருந்தும் தலைக்கனம் இல்லாத மனிதர். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள். மிகச் சிறந்த நடிகராக திரையில் ஒளிர்வார்” என்று சிலாகிக்கிறார். அதற்கேற்றாற்போல் பாலாவும் இப்போது ஒரு மாதமாக நடனம் கற்றுக்கொண்டிருக்கிறார்.

ஹால் அலமாரி முழுதும் சட்டப் புத்தகங்கள், வாங்கிய விருதுகளும் கோப்பைகளுமாக இருக்கின்றன. அலமாரியில் நீலநிறத்தில் அம்பேத்கரின் நூல்தொகுதிகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. “அம்பேத்கரை வாசிக்கிறேன். எனக்கு பாட்டு, சினிமா எல்லாமே ரெண்டாம்பட்சம்தான். சமுதாயப் பணிதான் முதலில். இதை அம்பேத்கரிடம் கத்துக்கிட்டேன். ஒரு ஜவுளிக்கடை திறப்புக்குக் கூப்பிட்டால் எனக்கு பத்தாயிரம் தருவாங்க. நான் அந்தப் பத்தாயிரத்துக்கு பதிலாக எங்க ஊர்க்காரங்க பத்து பேருக்கு ஆயிரம் ரூபாய்க்கு இந்த வருஷம் முழுசும் எப்பவேணும்னாலும் துணி எடுத்துக்க அனுமதி கேட்பேன்.” என்று கூறும் பாலா உள்ளாட்சித் தேர்தலில் நின்றிருக்கிறார். “அவர் தேர்தலில் ஜெயிக்காததுகூட நல்லதுக்குத்தான். அதனால்தான் பாடகரா சினிமாவில் வரமுடிஞ்சது” என்கிறார் பாலாவின் மனைவி நதியா. ”தி.மு.க., அ.தி.மு.க. ரெண்டும் ஆளுங்கட்சியாக இருந்தபோதும் தோற்றிருக்கிறேன். அப்படின்னா நான் மக்கள்கூட இருக்கேன்னு அர்த்தம்” என்னும் பாலா யாருக்கேனும் கல்வி கற்க பணம் தேவைப்படுகிறது என்றால் தயங்காமல் உதவுகிறார். ’எஜுகேஷன் முக்கியம். அதான்” எனும் பாலா ஒவ்வோர் ஆண்டும் அச்சடித்து பகுதி மக்களுக்கு வழங்கும் நாட்காட்டியில் பாலா தன் இரு குழந்தைகளுடன் நிற்கும் படம். மேலே அம்பேத்கரின் “கற்பி, புரட்சிசெய், ஒன்றுசேர்’ வாக்கியம் காணப்படுகிறது. பாலாவின் இன்னொரு முகம் வித்தியாசமானது. பாலாவுக்கு அபிநயா, அபிமன்யூ என்று இரு குழந்தைகள். யூ.கே.ஜி. படிக்கும் அபிநயா இப்போதே நடனம் பாட்டு என்று திறமையாய் இருப்பதில் பெருமைப்படுகிறார். “பாட்டுல ரெண்டுபேரும் என்னை மிஞ்சிடுவாங்க” என்கிறார்.

பிளாட்டுல இருந்தாலும் பிளாட்பாரத்தில் படுத்தாலும்
லாஸ்டுல சேரும் இடம் ஆறு அடிடா
ரோட்டுல கண்ணைமூடி ஊர்வலம்தான் போகும்போது
உனக்கு யாருக்கும் கேட்காது ஒத்தை அடிடா

இன்னொரு பாட்டுக்கான கோரிக்கையில் பாட்டு வகையை மாற்றுகிறார்.

ஃபாலோ பண்ணிப் போவாதே நீ நில்லு
வேற பொண்ணைப் பார்த்து பரிசம் போடச் சொல்லு

(நன்றி: இந்தியா டுடே)

2 comments:

  1. பாலா அவர்களும் அவரின் இரு குழந்தைகளும் மேலும் சிறக்கட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கவின் மலர் .. நான் உங்களை நீயா நானா ல பார்த்துருக்கேன் , நன்றி கானா பாலா பற்றி கட்டுரை அருமை - கவி

    ReplyDelete