Wednesday, March 19, 2014

இலங்கை-போர்க்குற்ற வியாபாரம்

இலங்கையிலிருந்து வரும் ஒவ்வொரு போர்க்குற்ற விடியோவும் காண்போர் மனதை உலுக்குவதாக உள்ளன. அண்மையில் வெளியான போர்க்குற்றங்கள் குறித்த விடியோ பதிவுகளில் சேனல் 4 வெளியிட்ட விடியோவை குறித்து கேலம் மெக்கரே தான் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் கொடூரமான மனதை உலுக்கிய விடியோ இதுதான் என்கிறார். 

இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த காட்சிகளில் குண்டுபோடுதல், ஷெல்லடித்தல், அவற்றால் குழந்தைகள் பயந்து அலறி ஒடுதல் என பார்ப்பவரின் கண்களை ஈரமாக்கும் காட்சிகள் இல்லாத விடியோக்கள் இல்லை. அத்தனையும் ஈழ மக்களின் பாடுகளையும் துயரங்களையும் சொல்பவைதான். சில மாதங்களுக்கு முன் வெளியான பாலச்சந்திரனின் படக்காட்சி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு ரொட்டித்துண்டுடன் அமர்ந்திருக்கும் அச்சிறுவனின் முகத்துடன் ஒரு படம். அடுத்த படத்தில் அவன் 6 துப்பாக்கி குண்டுகள் நெஞ்சில் துளைக்க விழுந்துகிடக்கும் படம். இப்படம் தமிழ்நாட்டில் பெரும் கிளர்ச்சியை உண்டுபண்ணியது. தமிழ்நாட்டு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பின் தமிழ்நாடு அத்தகைய போராட்டத்தை அப்போதுதான் பார்த்தது. 

அதன்பின் வெளியானது இசைப்ரியா குறித்த் காணொளி. இசைப்ரியாவின் உயிரற்ற உடலுக்கு நேர்ந்த கதியை அப்படமே சொன்னது. மார்ச் 9 அன்று வெளியான இன்னொரு விடியோ காட்சியில் பெண் போராளி ஒருவர் இறந்துகிடக்க, அவரது பிறப்புறுப்பில் துப்பாக்கியைச் செலுத்தி மகிழ்ச்சியாக ஆரவாரக் கூச்சலிடும் சிங்கள ராணுவ வீரர் ஒருவரைப் பார்த்து அதிர்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும்? போரில் இறந்த உடல்களை என்ன செய்யவேண்டும், எப்படி கையாளவேண்டும் என்பதற்கு நடைமுறைகள் உள்ளன. ஆனால் இலங்கை ராணுவம் அவற்றில் எதையும் கடைபிடிக்கவில்லை என்பதை இக்காணொளி காட்சி தெளிவாக நிரூபிக்கிறது. ‘இறந்த பெண்ணின் உடலையே இப்படிச் செய்கிறார்கள் என்றால், உயிருடன் பிடிபடும் பெண்களை என்னவெல்லாம் செய்வார்கள் என்று யோசித்துப் பாருங்கள்” என்கிறார் ஐரோப்பாவில் வசிக்கும் ஈழத்தமிழர் ஒருவர். சேனல் 4 தொலைக்காட்சி இங்கிலாந்து நாட்டின் விதிகளுக்குட்பட்டு பல காட்சிகளை வெட்டி, சில காட்சிகளில் உடலை மறைத்தே ஒளிபரப்பியது. ஆனால் அதன் அசல் வீடியோ மின்னஞ்சலில் பரவியுள்ளது. 

இப்படி அவ்வபோது வெளியாகும் போர்க்குற்றங்கள் குறித்த விடியோக்கள் சேனல் 4 தொலைக்காட்சிக்கு வந்தடைகின்றன. இக்காட்சிகள் கொண்ட விடியோ கோப்பை பெறுவதற்கான முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவை புலம் பெயர் தமிழர்கள் பலரும் இம்முயற்சியில் ஆங்காங்கே ஈடுபடுகின்றனர். அவர்களில் சிலரிடம் பேசியபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

”எங்களுக்கு இது போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்கள் என்பதால் எப்பாடுபட்டாவது இவற்றை சேகரித்து சர்வதேச சமூகத்தின் முன்னால் காண்பித்து நியாயம் கேட்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆகவே கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில்தான் இவற்றை சேகரிக்கிறோம்” என்றார். இத்தகைய ஆவணங்கள் முழுதும் ராணுவ வீரர்களின் செல்போனில் படம்பிடிக்கப்பட்டவை. ”அவர்கள் அப்போது புலிகள் இயக்கத்தை வெல்வோமென்று கனவில் நினைத்துப் பார்க்காதவர்கள். ஆகவே அந்த வெற்றியை அவர்கள் வெறிக்கூச்சலிட்டுக் கொண்டாடினார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் அவர்களுடைய அத்தனை நடவடிக்கைகளும் அமைந்தன. கொண்டாட்டத்தை படம்பிடிக்கும் நோக்கில்தான் புகைப்படங்கள் எடுப்பது, செல்போன்களில் படம் பிடிப்பது என்று எல்லாவற்றையும் செய்தனர். பின்னாளில் செல்போனை சர்வீஸ் செய்ய சேவை மையங்களுக்குச் செல்கையில் அங்கே இந்தப் படங்கள் எடுக்கப்பட்டு வெளியே வந்தன. ஆனால் இப்போது அது ராணுவவீரர்களிடையே ஒரு வியாபாரமாகவே ஆகிவிட்டது” என்கிறார் இன்னொரு புலம்பெயர் தமிழர். 

ஒரு குறிப்பிட்ட விடியோ காட்சியை பேரம் பேசி புலம் பெயர் தமிழர்களிடம் விற்கிறார்கள் சிங்கள ராணுவ வீரர்கள். ஒரு சிலர் நடப்பவை வெளியே தெரியவேண்டுமென்ற நோக்கில் அவர்களாகவே முன்வந்தும் கொடுப்பதாக முன்னதாக கேலம் மெக்கரே தன் பேட்டியொன்றின் குறிப்பிட்டிருந்தார். அப்படியான வெகு சிலர் போக பலருக்கு இதில் கை நிறைய பணம் கிடைக்கிறது. இலங்கை அரசிடம் மாட்டிக்கொள்ளாமல், அடையாளத்தை மறைத்து இத்தகைய காட்சிகளை வழங்குவதில் அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து இருப்பதால் அதிக பணம் கேட்கின்றனர். “அங்குள்ள ராணுவ வீரர்கள் இப்படி பணம் பண்ணும் வேலைகளில் இறங்கியுள்ளனர். ஆனால் அது எங்களுக்குச் சாதகமாகவே உள்ளது. அதனால் போர்க்குற்றங்கள் குறித்த மேலும் பல சாட்சியங்கள் கிடைக்கின்றன. ஒரு காணொளி என்பது போர்க்குற்றமாகப் பார்க்கப்படும். இப்படியான பல காணொளிகள் கிடைக்கப்பெறுகின்றன. ஆகவே இது ஒரு இனப்படுகொலை என்று நிறுவதற்கு இவை பயன்படும். பல லட்சம் கொடுத்துத்தான் நாங்கள் இப்படங்களை பெறுகிறோம். இதில் கொடூரம் என்னவென்றால் இழைத்த குற்றத்துக்கு ஏற்றவாறு ராணுவ வீரர்கள் அந்தப் படத்துக்கான தொகையை நிர்ணயிப்பார்கள்” என்கிறார் இப்படியான ஒரு படத்தை பேரம் பேசி வாங்கி உலகுக்கு அளித்த ஈழத்தைச் சேர்ந்த புலம்பெயர்தமிழர் ஒருவர். 

சரி. இதற்கான தொகை எப்படி வருகிறது? “புலிகள் இயக்கம் இருந்தபோது புலம்பெயர் தமிழர்களிடம் இதற்கான தொகை என்று கேட்டால் உடனே கிடைத்துவிடும். ஆனால் இப்போது பணம் திரட்டுவது என்பது கடினமான ஒன்றாக மாறிவிட்டது. ஆகவே ஆர்வமுள்ளவர்கள், இலங்கை அரசை சர்வதேசத்தின் முன் குற்றவாளி என நிரூபிக்க முழு வேகத்துடன் செயல்படும் பல்வேறு இயக்கங்கள் தனிநபர்கள் என்று வேலை செய்து தனிநபர்களிடம் சென்று விஷயத்தைச் சொல்லி உதவி கேட்போம். ஆனால் இடையில் நாங்கள் பேசுவதில்லை. எவர் பணம் தர ஒப்புக்கொள்கிறாரோ அவரையே அந்தக் காணொளியை வைத்திருக்கும் ராணுவவீரரிடம் பேசவைத்து அதைப் பெறுவோம். இடையில் பணத்தை நாங்கள் தொடுவதில்லை. அதில் தெளிவாக இருக்கிறோம். ஏனெனில் இதில் நம்பகத்தன்மை மிகவும் முக்கியம். பணம் கொடுப்பவர் எங்களை நம்பவேண்டும். காணொளியைத் தருபவரும் நம்பவேண்டும். ஏனென்றால் தெரிந்தே மிகப்பெரும் ஆபத்தான செயலில் ஈடுபடுகிறார்கள். ஆகவே இலங்கை அரசிடம் மாட்டிக்கொள்ளாத வகையில் நம்பகத்தன்மை எங்கள் மீது வந்தபின்பே எங்களிடம் பேசுவார்கள். எனவே இது எங்களுக்கும் பெரிய சவாலான வேலை. எங்கள் நோக்கம் இலங்கை அரசை குற்றவாளிக்கூண்டில் ஏற்றவேண்டும். அதற்காக எந்த விலையைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத ஒரு புலம்பெயர் தமிழர்..

இலங்கை ராணுவ வீரர்களின்  இத்தகைய காணொளிகளை வெளியே கசியவிட்டது பணத்துக்காகவே என்பது உச்சகட்டக் கொடூரம். இத்தகைய பணத்தாசை ஏதோ ஒரு வகையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உதவுவதால் சந்தோஷப்படுவதா அல்லது செய்வதையும் செய்துவிட்டு இப்படி அதையே விற்கும் ராணுவ வீரர்களுக்காக கோபப்படுவதா என்று தெரியாத இரட்டை நிலையில்தான் இன்றைக்கு ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் இருக்கிறார்கள்.   

No comments:

Post a Comment