Friday, May 30, 2014

கோச்சடையான்

இந்தியாவின் முதல்  பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட அனிமேஷன் படம் என்கிற பெருமையுடன் வெளிவந்திருக்கிறது கோச்சடையான்.  இந்தியாவுக்கும் தமிழுக்கும் புதிய விஷயம் என்கிற வகையில் அதன் இயக்குநர் சௌந்தர்யாவுக்கு வாழ்த்துகளை முதலில் சொல்லலாம். 

கோச்சடையானின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரஜினியே கோலோச்சுகிறார். முதலில் பாத்திரங்களின் விழிகளில் உயிர்ப்பு இல்லாமல் இருப்பதால் சிறிதுநேரத்துக்கு படத்தின் உருவங்களை நெருக்கமாக உணரமுடியாமல் அந்நியப்பட்டு, பின் மெதுவாக அனிமேஷன் உருவங்கள் மறைந்துபோய் நிஜமான ரஜினி, நாசர் என்று நம்பத் தொடங்குகிறோம். இந்த நம்பிக்கையைக் கொண்டுவருவதில் பெரும்பங்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய கே.எஸ்.ரவிக்குமாரையே சாரும். ஆனால் உருவங்களின் ஒற்றுமை எனப்பார்த்தால் ரஜினிக்கும் நாசருக்கும் பொருந்துவதுபோல  தீபிகா படுகோனே, சண்முகராஜா, ஜாக்கி ஷெராஃப், சரத்குமார் போன்றோரின் உருவங்களும்கூட சரியாக திரையில் வரவில்லை என்கிற எண்ணமே எழுகிறது.  தொண்ணூறுகளின் சரத்குமாரை வார்த்தெடுத்தார்களோ என்கிற சந்தேகம் வருகிறது. 

ஒரு படத்தின் திகிலைக் கூட்டும் வகையிலும் மர்மங்கள் அவிழாமலும் பார்த்துக்கொள்ளவேண்டிய திரைக்கதை அதில் சறுக்கியிருக்கிறது. படத்தின் தொடக்கத்திலேயே சிறுவயது ரஜினியான ராணா கோட்டைப்பட்டினத்திலிருந்து கலிங்கபுரிக்கு வந்துசேர்வதாகக் காண்பிப்பதாலேயே வரப்போகும் காட்சிகளில் ரஜினி என்ன செய்யப்போகிறார் என்பதை யூகிக்க முடிகிறது. கோட்ட்டைப்பட்டினம் வீரர்களை அவர்கள் நாட்டின்மீதே படையெடுக்க பயன்படுத்தும் திட்டம்போடும்போதே அதில் ஏதோ இருக்கிறது என்று தெரிகிறது. அப்புறம் ‘மீண்டும் ஒரு கோச்சடையானா?’ என நாசர் கேட்கும் காட்சியும், ‘நான் இருக்கும்வரை மன்னரை யாரும் கொல்ல முடியாது’ என ரஜினி சொல்லும் வசனமும் அப்படியே பின் நிகழ்வதை கட்டியம் கூறுகின்றன. மன்னரைக் கொல்லும் ரஜினியின் முயற்சிகளும் எளிதில் யூகிக்கக்கூடியவையாக இருப்பதே சுவாரஸ்யத்தைக் குறைக்கின்றன. ஆங்காங்கே பல ஓட்டைகள் உண்டு. சிறுவயதிலிருந்தே ரஜினிக்கும் தீபிகாவுக்கும் பழக்கம் உண்டு எனும்போது ராணா ரஜினியின் தந்தை கோச்சடையானுக்கு அளித்த மரண தண்டனையை ஊரே பார்த்தபோது தீபிகாவுக்குத் தெரியாதா என்ன? ரஜினி புதிதாக சொல்வதுபோல் ஃபிளாஷ் பேக்கை தீபிகாவுக்குச் சொல்கிறார். இதில் தீபிகா பால்யத்தில் நிகழ்ந்ததைக்கூட நன்றாக நினைவில் வைத்திருப்பவர் என்று வசனம் வேறு வருகிறது. அப்புறம் கோச்சடையானின் மகன் என்று தெரிந்தும் தளபதியாக ராணா ரஜினியை .நாசர் வைத்துக்கொள்வது, கோச்சடையான் கலிங்கபுரிக்கு விஷமுறிவு மருந்து நாடி வருகையில் வீரர்களின் உடல்மொழியில் தெரியும் நாடகத்தனம் என சில பிரச்சனைகள் உண்டு. ஆனாலும் ரஜினியின் ஆளுமையான குரலும், அவர் உச்சரிக்கும் வசனங்களும், பிரமாதமான நாசரின் பின்னணிக் குரலும், நாகேஷை மீண்டும் திரையில் கொண்டுவந்திருப்பதும் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.

காட்சியமைப்பில் உள்ள கோளாறுகளை ஏ.ஆர்.ரஹ்மானின் இசை சரிசெய்கிறது. பாடல்களாகட்டும் பின்னணி இசையாகட்டும் ரஹ்மான் மிக நிறைவாகவே தன் பங்கை ஆற்றியிருக்கிறார். நீண்ட நாட்கள் கழித்து எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் ஒலிக்கிறது. ஷோபனாவும் ரஜினியும் ஆடுவதாக வரும் அந்த ருத்ரதாண்டவம் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக சில வசனங்கள் ஈர்க்கின்றன ‘கோச்சடையான் தனிமனிதன் அல்ல; அவன் ஒரு நாடு”, ”மண்ணை ஆள்பவன் மன்னன் அல்ல; மக்களின் மனங்களை ஆள்பவனே மன்னன்” என்பது போன்ற வசனங்களில் கே.எஸ்.ரவிக்குமார் தனித்துத் தெரிகிறார். திடீரென்று காரல் மார்க்ஸின் ‘மாற்றம் ஒன்றே மாறாதது” போன்ற வசனங்களும் வருகின்றன.   ரசூல் பூக்குட்டியின் சவுண்ட் இன் ஜினியரிங் படத்தின் இன்னொரு சிறப்பம்சம். அதுபோலவே ராஜீவ் மேனனில் ஒளிப்பதிவும். படத்தொகுப்பு செய்த ஆண்டனி இரண்டாம் பாதியில் போர்க்காட்சிகளை கொஞ்சம் வெட்டியிருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும். 

ஒரு மாயாஜாலக் கதையாகவும் இல்லாமல், வரலாற்றுக் கதையாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடையே பயணிக்கிறது கதை. குழந்தைகளுக்கு பிடிக்கக்கூடும். பெரும்பொருட்செலவில் எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களின் தரத்துடன் கோச்சடையானை ஒருபோதும் ஒப்பிட முடியாது என்றாலும், இனி இந்தியாவில் இதுபோன்ற முயற்சிகளுக்கு முன்னோடியாக கோச்சடையான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Thursday, May 29, 2014

ஆதாமின் மகன் அபு - ஒரு பார்வை


ஆதாமிண்டே மகன் அபு - மலையாளத் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பு இது. ஹஜ் பயணம் செல்ல விரும்பும் அபுவும் அவரது மனைவி ஆயிஷாவும் அதற்காக படும் பாடுகள்தான் கதை என்று ஒற்றைவரியில் சொல்லிவிட முடியாத படம் இது. ஏனெனில் படம் இறுதியில் சொல்லும் சேதி சக உயிர்கள்மீதான நேசம் எல்லாவற்றையும்விட முக்கியம் என்பதே.

மலையாளத்தில் வெளியான ’ஆதாமிண்டே மகன் அபு’ தமிழ்நாட்டில் இப்போது தமிழ் பேசுகிறார். ஓர் இஸ்லாமியக் குடும்பத்தின் பின்னணியில் நகரும் படத்தின் மிகச் சிறப்பான அம்சம் பாத்திரங்களுக்கேற்ற நடிகர்களின் தேர்வுதான். அபுவாக வரும் சலீம் குமாரின் நடிப்பு மனதைக் கரைத்து நெகிழ்த்துகிறது. பள்ளிவாசலின் தொழுகை ஒலியுடன் தொடங்கும் படத்தில் இஸ்லாத்தின் கூறுகள் படம் நெடுக விரவியிருக்கின்றன. அதிகம் அறியப்படாத கேரள இஸ்லாமியர்களின் பண்பாடு படத்தை நகர்த்திச் செல்கிறது. 

ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்வையாளர்கள் மனதில் பதிய வைப்பதற்காக முதல்பாதி முழுவதையும் எடுத்துக்கொள்கிறார் இயக்குநர். ஆகவே முதல்பாதி மிக மெதுவாகவே நகர்கிறது. இரண்டாம் பாதியில் படம் நம்மை கட்டிப்போடுகிறது. கோவிந்தன் வாத்தியாரைப் பார்க்கப் போகும் அபுவிடம் ‘இறைவன் முன்னால் மனிதன் சுயநலவாதியாகத்தான் இருந்துவிடுகிறான். ஆனாலும் மெக்காவில் எங்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று கேட்கும் இடத்தில் நெகிழ்ந்துதான் போகிறது மனம். அதுபோலவே மரவேலைகள் செய்யும் ஜான்சன் உளுத்த மரமாகி விட்டது பலாமரம் என்றாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற சொன்னபடி முழு பணத்தையும் தருவதும், நாணயம் முக்கியம் என்று அதை வாங்க மறுத்து ஹஜ் பயணத்தையே கைவிடும் அபுவையும் போன்ற மனிதர்களைக் காண்பது அபூர்வமாகத்தான் இருக்கிறது. தன் கையிலிருந்து ஐம்பதாயிரம் எடுத்துவந்து பயணத்துக்காகத் தரும் கோவிந்தன், ஹஜ் செல்வை ஏற்றுக்கொள்ள முன்வரும் அக்பர் டிராவல்ஸ் உரிமையாளர் போன்ற மனிதர்களை திரையில்தான் பார்க்கமுடியுமோ என்கிற ஏக்கம் தோன்றுவதைத் தடுப்பதற்கில்லை. 

தமிழ்ப் பதிப்பில் சவுண்ட் இன்ஜினியரிங்கில் குறைபாடுகள் தெரிகின்றன. தொலைவில் பேசுபவர்களும் அருகில் பேசுபவர்களும் ஒரே ஒலியளவில் பேசுகின்றனர். அத்துடன் மொழிமாற்றப் படங்களுக்கு வழக்கமாக குரல் கொடுப்பவர்களின் அதே குரல்களை பயன்படுத்தாமல் புதிய குரல்களைப் பேசவைத்திருந்தால் படத்தின் பலம் இன்னும் கூடியிருக்கும். ஐசக்கின் பின்னணி இசை பேச வேண்டிய இடத்தில் பேசி, மௌனிக்கவேண்டிய தருணங்களில் மௌனிக்கிறது. மது அம்பாட்டின் ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு பாத்திரமாகவே வருகிறது.

அத்தர் விற்பவர், தேநீர்க் கடை நடத்துபவர், குடை வியாபாரி, டிராவல்ஸ் உரிமையாளர், ஆசிரியர், மரக்கடை வியாபாரி, வீட்டிலேயே பால்வியாபாரம் செய்யும் பெண், ஹஜ்ரத், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர், சைக்கிளில் பால் விற்பவர் என்று பலவிதமான தொழில்கள் செய்யும் சாமான்ய மனிதர்கள் படம் முழுவதும் நிறைந்திருக்கிறார்கள். “நான் இறந்தபிறகு நீ வந்திருந்தால் என் மன்னிப்பு கிடைக்காமல் நீ திரும்பியிருப்பாய் அல்லவா?’ என்று சுலைமான் கேட்கும் இடமும், ‘அவர்களுக்கு டீ வாங்கித்தரும் வாய்ப்பு இனியொரு முறை எனக்குக் கிடைக்காமல் போகலாம்” என்று அபு தேநீருக்குக் காசு தரும் இடமும், ‘அத்தர் விற்கப் போகும் நான் நீ தனியா இருப்பாய் என்றுதானே மூணே நாளில் திரும்பி வருவேன்’ என்று அபு ஆயிஷாவிடம் உரைக்கும்போதும் தெரியும் அந்த வயோதிகத் தம்பதிகளுக்கிடையிலான அன்பும் நமக்குச் சொல்லும் சேதி ஏராளம். 

படம் முழுவதும் பொங்கும் மனித நேயமும், வேறுபாடுகள் கடந்த சக மனிதர்கள்மீதான பேரன்பும் நிஜ வாழ்க்கையில் நாம் பார்க்கும் அனுபவிக்கும், கேள்விப்படும் அத்தனை பாகுபாடுகளையும் ஒருகணம் மறந்து கனவுலகில் சஞ்சரிக்க வைத்து நெகிழ்த்துவது படத்தின் வெற்றி. 

*********

ஆதாமிண்டே மகன் அபு மலையாளப்படத்தின் தமிழ்ப்பதிப்பான ஆதாமின் மகன் அபு படத்தின் பிரத்யேகக் காட்சி முடிந்து வெளியே வருகிறார் அதன் இயக்குநர் சலீம் அகமது. ஒலிபெருக்கி முன் நின்று பேசும் டி.ராஜேந்தர் கண்களில் கண்ணீர். திடீரென்று ‘அல்லா’ என்று குரலெடுத்துப் பாடுகிறார். அப்படியொரு பாதிப்பை பார்வையாளர் மத்தியில் ஏற்படுத்திய படத்தின் கதைக்களம் உட்பட பல விஷயங்களை எப்படி தேர்வு செய்தார் சலீம்?

“டிராவல்ஸ் அண்ட் டூரிசம் படிப்பில் டிப்ளமோ பெற்றவன் என்பதால் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினேன். அப்போது ஏராளமான மனிதர்களை சந்தித்திருக்கிறேன். ஒரு முறை விமானத்தில் ஒரு தம்பதியிடம் பேசியபோது மாடுகளை விற்று அவர்கள் ஹஜ் பயணத்துக்கு வந்திருப்பதைச் சொன்னார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும். இப்படத்தில் காணப்படும் எல்லாமே நிஜத்தில் மனிதர்களுக்கு நிகழ்ந்தவைதான். அந்த அனுபவத்தில்தான் இந்தப் படத்தை எடுத்தேன்’ என்கிறார் சலீம்

சலீமுக்கு கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மாத்தனூர் தான் சொந்த ஊர். பள்ளிப்படிப்பு அங்கேயே முடித்தார். பி.காம். பட்டதாரி. சிறுவயதிலிருந்தே நாடகங்கள் போடுவது , மிமிக்ரி செய்வது என்று கலைஞராகவேதான் தன் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் சலீம். “ஆயிரம் மேடைகள் ஏறியிருப்பேன்’ என்கிறார்.  திருச்சூர் நாடகப் பள்ளியில் மாஸ்டர் ஆஃப் தியேட்டர் ஆர்ட்ஸ் பட்டம் பெற்றவர். பின் சூர்யா தொலைக்காட்சி சேனலில் பணியாற்றினார்.

2011ல் வெளியான ஆதாமிண்டே மகன் அபு படம் பல தரப்பிலும் விருதுகளைக் குவித்தது. அந்த ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டபோது சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த பின்னணி இசை ஆகியவற்றுக்கான விருதுகளைப் பெற்றது. அந்த ஆண்டு ஆஸ்கருக்காக இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஒரே படமும் இதுவே. அரபு மற்றும் துருக்கி மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட முதல் மலையாளப்படமும் இதுவே. 

இப்படத்தில் ஹஜ் செல்லும் பயணிகளுக்கான வகுப்பு ஒரு காட்சியில் வரும். கேரளாவில் பல இடங்களில் ஹஜ் வகுப்புகளில் இத்திரைப்படம் போட்டுக் காண்பிக்கப்படுகிறது என்கிறார் சலீம். இஸ்லாம் சமூகத்தில் சிலர் சினிமாவை ஹராம் என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுண்டு. ஆனால் சலீமுக்கு அப்படியான எதிர்ப்பு எதுவும் இல்லை. “ஹராம் என்று சினிமாவை ஏன் சொல்கிறார்கள். அதிலுள்ள தவறான அம்சங்களால்தான். ஆனால் நான் அப்படியான ஒரு காட்சியையும் வைக்கவில்லையே” என்கிறார் சலீம். 

சலீமுடன் பணியாற்றிய மது அம்பாட் இந்தியா டுடேயிடம் “  இது ஒரு பட்ஜெட் படம்.  நான் படங்கள் அதிகம் ஒப்புக்கொள்வதில்லை. அவர் எனக்கு கதைசொன்ன விதத்திலேயே நான் மிகவும் கவரப்பட்டேன். தரமான ஒளிப்பதிவுக்கான எல்லா சாத்தியங்களும் நிறைந்த படமாக இப்படம் இருக்குமெனவும் நான் நம்பினேன். அதன்படியே இப்படம் விருது பெற்றுத் தந்துவிட்டது. நானும் சலீமும் ஈருடல் ஓருயிர் போலாகிவிட்டோம் ” என்கிறார்.

ஆதாமின் மகன் அபு படத்தின் பின்னணி இசை அமைத்த ஐசக் தாமஸ் சலீமுடன் பணியாற்றிய அனுபவத்தை சிலாகிக்கிறார். “எனக்கு அவர் முழு சுதந்திரம் தந்தார். எங்கே இசை தேவை, எங்கே வேண்டாம் என நானே முடிவு செய்ய அனுமதித்தார். ஒரு படத்தில் இயக்குநர்தான் தெரியவேண்டும். துருத்திக்கொண்டு இசையமைப்பாளரோ அல்லது வேறு ஒரு தொழில்நுட்பக் கலைஞரோ தெரியக்கூடாது என்று நினைப்பேன். அப்படித்தான் இந்தப் படத்தில் பணியாற்றினேன். எந்த பின்னணி இசை, சத்தம், பாடல்கள் என்று எதுவுமே இல்லாமல் படத்தைப் பார்த்தபோதே இப்படம் பல்வேறு விருதுகளைக் குவிக்கப்போகிறது என்று சொன்னேன். அது உண்மையாகிவிட்டது” என்கிறார்.

சலீமின் இரண்டாவது படம் குஞ்சனத்திண்டே கடா. மம்முட்டி நடித்த அப்படம் ஆகஸ்ட் 2013ல் வெளியானது. இவருடைய அடுத்த படத்திற்கான திட்டமிடுதலில் ஈடுபட்டிருக்கிறார். துபாய் சென்று வாழும் ஏராளமான கேரளாக்காரர்களின் பாடுகள் இங்கு பதிவு செய்யப்படாதது. துபாய் வாழ்க்கையை மையமாகக் கொண்டுதான் அடுத்தப் படத்தின் கதை அமையும் என்கிறார் சலீம். “நானும் சலீமும் 1967ல் முதன்முதலில் கேரளாவிலிருந்து துபாய்க்கு படகு மூலம் சென்ற ஒருவரை சந்தித்துப் பேசினோம். அன்றிலிருந்து இன்றுவரை துபாயிலிருந்து வரும் பணம்தான் ஏராளமான கேரளாக்காரர்களை வாழவைக்கிறது. அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட சலீமின் அடுத்தப் படம் ‘பத்தே மாரி’ அடுத்த ஆண்டு வெளியாகும். அதிலும் நான் தான் ஒளிப்பதிவாளர்” என்கிறார் மது அம்பாட்.

Wednesday, May 14, 2014

காஞ்சி சங்கர மடத்தில் முறைகேடுகள்

சங்கர மடத்துக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. இந்த முறை சங்கரமடம் சிக்கியிருப்பது ஊழல் முறைகேடு குற்றச்சாட்டில். சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு இம்முறைகேடுகள் விசாரிக்கப்படவேண்டும் என்கிறது. 

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் தொடர்ந்த பொதுநல வழக்கில்தான் இப்படியொரு தீர்ப்பு வந்திருக்கிறது. பொதுவாக பொதுமக்களுக்கு சேவை செய்யும் அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக பணம் பெறும்போது, அந்தப் பணத்தை அளிக்கு நன்கொடையாளர்களின் அந்தப் பணத்துக்கு வரிவிலக்கு உண்டு.  வருமான வரிச்சட்டத்தின்  80ஜி பிரிவின்படி வரிவிலக்கு அளிக்கப்படும். ஆனால் சட்டம் மிகத் தெளிவாகவே மதம் தொடர்புடைய எந்த அறக்கட்டளைக்கோ, மதம் பரப்பும் அறக்கட்டளைக்கோ அளிக்கப்படும் நிதிக்கு அப்படியான வரிவிலக்கு கூடாது என்கிறது. ஆனால் சங்கர மடத்தின் ஆளுகைக்குட்பட்ட சில அறக்கட்டளைகள் மதத்தைப் பரப்புவதற்கும் வேதங்களை பரப்புவதற்கும், பார்ப்பன சமுதாயத்தைச் சேர்ந்த அர்ச்சகர்களுக்கான நலத்திட்டங்களுக்கும், கோயில் கட்டுவதற்கும், சிலைகளை நிறுவதற்கும் என முற்றிலும் மதம் தொடர்பான விஷயங்களுக்காக மட்டுமே நிதியைச் செலவிடும் இந்த அறக்கட்டளைகள் பொதுமக்களிடமிருந்து நிதியைப் பெறுகின்றன. அந்த நிதி மதம் தொடர்பான விஷயங்களுக்கு பயன்படுத்தபப்டுகின்றது. ஆகவே அரசுக்கு கோடிக்கணக்கில் ஆண்டுதோறும் இழப்பு ஏற்படுகிறது. எனவே சட்டவிரோதமாகவும் முறைகேடாகவும் பெறப்படும் இந்தப் பணத்துக்கு வரிவிலக்கு அளிக்கக் கூடாது என்றும் இந்த அறக்கட்டளைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இதற்குத் துணைபோன வருமான வரித்துறை மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கோரியும் சரவணன் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில் அளித்த தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றம் வருமான வரித்துறை (வரிவிலக்கு) இயக்குனர் ஜெனரலை 80ஜி கீழ் அளிக்கப்பட்ட வரிவிலக்குகளை சரிபார்க்குமாறும், தவறாக பயன்படுத்தப்பட்டிருக்குமாயின் , மக்கள் சேவை தவிர பிற விஷயங்களுக்கு நிதி செலவிடப்பட்டிருக்குமானால், அந்த அறக்கட்டளைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் தீர்ப்பளித்தது. 

ஒவ்வொரு அறக்கட்டளையாகவே பார்க்கலாம். 

சென்னை அபிராமபுரத்திலுள்ள ஸ்ரீ சங்கர பக்த ஜன சபா அறக்கட்டளை 2012 பிப்ரவரி 28 அன்று தேசிய நாளிதழ்களில் ஒரு விளம்பரம் வெளியிட்டது. அதில் வெளிப்படையாகவே ஒரு சிலையை நிறுவுகையில் அதற்கு தங்கத்தில் உள்ளும் புறமும் அலங்கரிக்கவேண்டும் என்பதற்காக நன்கொடைகள் கேட்கப்பட்ட்ருந்தது அறக்கட்டளையின் கணக்குப்படியே அதற்கு ஆகும் செலவு 225 லட்சம்.  அத்துடன் பொதுமக்களுக்கான அந்த விளம்பரத்தில் இதற்கு பொதுமக்கள் நிதி அளித்தால் அந்தத்தொகைக்க்க் 1961 வருமான வரிச் சட்டத்தின் 80ஜி பிரிவின் கீழ வரிவிலக்கு உண்டு என்றும் அறிவித்திருந்தது. இன்னும் ஒரு படி மேலே போய் தங்கமாகப் பெறப்படும் நன்கொடைகளுக்கும் 80ஜி வரிவிலக்கு உண்டு என்றது அந்த விளம்பரம். 

80ஜியின் விளக்கம் 3 இவ்வாறு சொல்கிறது: “மக்களின் சேவையைத் தவிர வேறெதற்காகவும், அது முழுமையாகவோ அல்லது குறைந்த அளவோ கூட மத இயல்புகொண்டதாக அச்சேவை இருக்குமாயின் வரிவிலக்கு கிடையாது”

இதன்படி பார்த்தால், இந்த அறக்கட்டளை மதம் தொடர்புடைய ஒரு சிலையை நிறுவி அலங்கரிப்பதில் பொதுமக்கள் சேவை துளியும் இல்லை. அத்துடன் இது மதத்துடன் தொடர்புடையது. எனவே இது முற்றிலும் தவறு என்கிறார் சரவணன்

அத்துடன் 80ஜியின் 5வது பிரிவு சொல்வது இது: ”பணமாகப் பெறப்படும் தொகைக்கு மட்டுமே வரிவிலக்கு. பொருளாகப் பெறப்பட்டால் வரிவிலக்கு கிடையாது”

ஆனால் விளம்பரமோ தங்கமாகப் பெற்றாலும் வரிவிலக்கு உண்டு என்று சொல்கிறது.

சென்னை கோட்டூர் கார்டன் பகுதியிலுள்ள காஞ்சி மூதூர் அர்ச்சகர்கள் நல அறக்கட்டளை பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த அர்ச்சகர்களுக்கென உருவாக்கப்பட்ட ஒன்று. கிராமப்புறங்களில் உள்ள அர்ச்சகர்களுக்கு நிதியுதவி அளிப்பது இதன் முதல் இலக்கு. ஒரு குறிப்பிட்ட மதத்தின், அதிலும் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த அர்ச்சகர்களுக்கென்று இந்த நிதி செலவிடப்படுகிறது. இதுவும் சட்டவிரோதமே. 

”இப்படியொரு வாதம் முன்வைக்கப்பட்டது. தலித் மக்களுக்கு செலவு செய்யப்படும் தொகைக்கு எப்படி வரிவிலக்கு அளிக்கப்படுகிறதோ அதன்படிதான் இதுவும். அது சாதி அடிப்படையில்தானே? அதுபோல அர்ச்சர்கர்களுக்கான நலத்திட்டங்களும் சாதி அடிப்படையில்தான் என ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. எஸ்.சி./எஸ்.டி.யினர் மத்தியில் செயல்படும் அறக்கட்டளைகளுக்கு இது பொருந்தாது. 80ஜி பிரிவு மிகத் தெளிவாகவே சொல்கிறது. ஒடுக்கப்பட்டுள்ள எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை சாதி அடிப்படையிலானது என்று பார்க்கக் கூடாது என்று கூறி அதற்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருக்கிறது.” என்கிறார் வழக்கறிஞர் சரவணன்.

சென்னை கோபாலபுரத்திலிருந்து இயங்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாலஷ்மி மாத்ருபூதேர்வரர் அறக்கட்டளை 80ஜி தவறாக பயன்படுத்தப்படுவதற்கு மிகச் சிறந்த உதாரணம்.  இந்த அறக்கட்டளை உருவாக்கபப்ட்டதே ஒரு சாதியைச் சேர்ந்த மதத்தலைவர் ஒருவருக்கு கோயில் கட்டுவதற்காக மட்டுமே. அதுபோலவே கோவையில் இயங்கும் ஸ்ரீ ஜகத்குரு அறக்கட்டளையும் கேரளாவின் பாலக்காட்டில் இயங்கும் வேத ரக்‌ஷ்ன சமிதியும் இந்து மத வேதங்களைப் பரப்புவதற்காக ஏற்படுத்தப்பட்டவை என்பதால் இவை முற்றிலுமாக மதம் தொடர்பானவை.

மேற்கூறிய அத்தனை அறக்கட்டளைகளுமே காஞ்சி சங்கரமடத்துடையவை. இவை அனைத்துக்கும் அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு 80ஜி வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. அத்தனை அறக்கட்டளைகளுக்குமான இணையதளங்களில் நோக்கம் மிகத்தெளிவாகவே மதச்சார்புடையதாகவே வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

“அப்பர் கேஞ்சஸ் சுகர் மில்ஸ் லிமிடெட் எதிர் வருமான வரி இயக்குநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பில்  சேவை என்பதில் மத நோக்கம் அறவே வராது என்றும் பெறப்படும் நிதி பணமாக மட்டுமே இருக்கவேண்டுமென்றும் கூறியிருக்கிறது.  மெலும் ஈஸ்ட் இந்தியா இண்டஸ்ட்ரீஸ் (மெட்ராஸ்) பிரைவேட் லிமிடெட் வழக்கில் ‘ஓர் அறக்கட்டளையின் அனைத்து நோக்கங்களும் மக்கள் சேவையாக இருக்கவேண்டும். ஒரே ஒரு நோக்கம் வேறாக இருந்தாலும் வரிவிலக்குக்கு தகுதியில்லை’ என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருப்பதை என் மனுவில் சுட்டிக்காட்டினேன்.” என்கிறார் சரவணன்

இதில் அதிர்ச்சி என்னவெனில் இந்த வருமான வரிவிலக்குகளை வருமான வரித்துறை எப்படி வழங்கியது என்பதுதான். இந்த முறைகேட்டுக்கு துறையிலுள்ள அதிகாரிகளும் துணைபோயிருக்கிறார்கள் என்று நீதிமன்ற வாதங்களில் முன்வைக்கப்பட்டதையடுத்தே இப்படியொரு தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. “இத்தீர்ப்பு தவறு நடந்ததை ஒப்புக்கொண்டிருக்கிறது என்கிற வகையில் வரவேற்கப்படவேண்டிய தீர்ப்புதான். ஆனால் குறிப்பாக இந்த ஐந்து அறக்கட்டளைகளை சுட்டிக்காட்டி நான் வழக்கு தொடர்ந்திருந்தாலும் தீர்ப்பில் பொதுவாக இப்படி முறைகேடுகளில் ஈடுபடும் அனைத்து அறக்கட்டளைகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. ஆகவே எங்களை குறிப்பாகச் சொல்லவில்லை என்று அவர்கள் தப்பித்துக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. ” என்கிறார் சரவணன்.

மக்களிடமிருந்து?வரிவிலக்கு பெறலாம் என்கிற முன்னறிவிப்புடன் பெறப்படும் திட்டங்கள் பெரும்பாலும் நிதியை அள்ளித்தர வல்லவை. ஏனெனில் நம் மக்களும் நிதியாண்டு இறுதியான மார் மாதத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை எப்பாடுபட்டாவது குறைக்கவேண்டும் என்ற உந்துதலுடன் ஊதியத்தின் ஒரு பகுதிக்கு வரி செலுத்தத் தேவையில்லை என்பதால் உற்சாகமாக நன்கொடை  அளிக்க முன்வருகிறார்கள்.

இப்பிரச்சனையில் விளக்கம் கேட்க சங்கர மடத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டும் விளக்கம் பெற முடியவில்லை. முறைகேடுகளில் ஈடுபடும் எல்லா அறக்கட்டளைகள் மிதும் நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதே சமூக அக்கறை கொண்டவர்களின் எதிர்ப்பார்ப்பு.

(நன்றி: இந்தியா டுடே)

Friday, April 25, 2014

கனவு நனவு ஆனது

அந்த அரங்கில் திருநங்கைகள் நிரம்பி வழிகிறார்கள். கேக் வெட்டிக் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு ஏப்ரல் 15 திருநங்கைகள் தினம் அவர்களுடைய மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது. சந்தோஷத்தில் முகம் மலர்ந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து பரிமாறிக்கொண்ட அவர்கள் முகத்தில் கொடிய வரலாற்றை ஒரு நாளில் தாண்டிய நிம்மதியும் ஆயாசமும் தெரிந்தன. எத்தனை போராட்டங்களுப் பின்னான வெற்றி இது என பேசிப்பேசித் தீர்க்கிறார்கள்.

மாற்று பாலினத்தவரை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை தமிழ்நாட்டிலுள்ள மாற்று பாலினத்தோர் வரவேற்கிறார்கள். ஏப்ரல் 15 திருநங்கையர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் திருநங்கைகளுக்கான நலவாரியம் ஏற்படுத்தப்பட்டு ஏப்ரல் 15ம் நாள் ஆண்டுதோறும் திருநங்கைகள் தினம் கொண்டாடப்படும் என்கிற அறிவிப்பு வெளியானது. அந்த நாளில் இந்தத் தீர்ப்பு வெளியானதில் கூடுதல் மகிழ்ச்சி என்கின்றனர் திருநங்கைகள். ஆனாலும் தமிழகத்துக்கு வெளியே அந்தத் தேதிக்கு சிறப்பொன்றுமில்லை என்பதால் அந்த நாளில் தீர்ப்பு வந்தது யதேச்சயானதே.

ஆண், பெண் மட்டுமல்லாது மூன்றாம் பாலினம் என்பதையும் அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசை மாற்றுபாலினத்தவருக்கான வேலைவாய்ப்பும் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்ற வசதிகளைப் பெறுவதையும் உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. “மாற்று பாலினத்தவரை மூன்றாம் பாலினமாக அங்கீகரிப்பது என்பது சமூகரீதியானதோ மருத்துவரீதியானதோ அல்ல; மாறாக அது மனித உரிமை சார்ந்த ஒன்று” என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கும் வரிகள் மிகவும் முக்கியமானவை. அத்துடன் சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் பின் தங்கியவர்களாக அவர்களைக் கருதி கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கவேண்டுமெனவும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம். திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கக்கோரி தேசிய சட்டப் பணிகள் ஆணையக்குழு தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

பொதுவாக திருநங்கைகள் என்று எடுத்துக்கொண்டால் தங்களை மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்கவேண்டும் என்கிற கோரிக்கையும் உண்டு. பெண்களாக அங்கீகரிக்கவேண்டும் என்கிற கோரிக்கையும் உண்டு. அவரவர் சொந்த விருப்பத்தின்பேரிலும் விழைவின்பேரிலும் எந்த பாலின அடையாளத்தை விரும்புகிறார்களோ அந்த அடையாளத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்கிறது தீர்ப்பு. அதாவது ஆணாகப் பிறந்த ஒருவர் பெண்ணாக உணர்ந்தால் அவரை பெண்ணாக அங்கீகரிப்பதும், ஆணாக பிறந்த ஒருவர் பெண்ணாக உணர்ந்தால் அவரை பெண்ணாக அங்கீகரிப்பதும் வேண்டும் என்கிறது தீர்ப்பு. ஆகவே இத்தீர்ப்பு திருநங்கையர், திருநம்பிகள்(பெண்ணாகப் பிறந்து ஆண்களாக மாறுபாடு அடைபவர்கள்) ஆகியோருக்கும் சாதகமானதொரு தீர்ப்பு என்கின்றானர் மாற்றுபாலினத்தவர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14,15 மற்றும் 16ன் படி பாலின அடையாளத்தை மறுத்தல் பாகுபாடு காண்பிக்கப்பட்டதான குற்றம் என்றாகும். பாலின அடையாளத்தை அங்கீகரிக்க மாற்றுப் பாலின அறுவைசிகிச்சை மேற்கொண்டிருக்கவேண்டும் என்பது கட்டாயமில்லை. தனிநபர்கள் தங்கள் பாலியல் அடையாளத்தை விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யும்போது அது அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி பாதுகாப்பு உண்டு. இத்தகைய விஷயங்களை உள்ளடக்கி மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் பல அறிவுறுத்தல்களை செய்துள்ளது.

திருநங்கையர் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான பிரியா பாபு இந்தியா டுடேயிடம் தன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். “இந்தத் தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சிக்கும் வரவேற்புக்கும் உரிய தீர்ப்பு. புதிய நம்பிக்கையை எங்கள் மத்தியில் விதைத்திருக்கிறது. எங்களுக்கு யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் இருந்தோம். இனிமேல் எங்கள் பிரச்சனைகளை சட்டரீதியாக அணுக முடியும். தினம் தினம் புழுங்கிக்கொண்டிருக்கும் பல திருநங்கைகள் சமூகத்துக்கு பயந்து வெளியே தெரியாமல் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இந்த சட்ட அங்கீகாரத்துக்குப் பின்னால், வெளிப்படையாக வருவார்கள்.” என்கிறார்.

உண்மைதான். பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான பால் மாறுபாட்டை அங்கீகரிப்பதில்லை. சமூகம் இவர்களை அங்கீகரிக்க மறுப்பதால், தங்கள் பிள்ளைகளுக்கு நேர்ந்ததை ஓர் அவமானமென கருதி ஒதுக்கி வைப்பதையும் வீட்டைவிட்டு வெளியேற்றுவதை கட்டாயமாக திருமணம் செய்துவைப்பதையும் உட்பட பல தவறுகளைச் செய்கின்றனர். இந்த சட்ட அங்கீகாரம் ஒரு வகையில் இத்தகைய தவறுகளை குறைக்கவே செய்யும் என்கிறார் பிரியா பாபு.

திருநங்கைகள் தங்களுக்கு சரியான வேலை கிடைக்காமல் கடை கேட்பதில் (கடைகளில் பணம் கேட்பது) இறங்கிவிடுகிறார்கள். ஒரு சிலர் வேறு வழியின்றி பாலியல் தொழிலில் இறங்கிவிடுவதும் உண்டு. இத்தீர்ப்புக்குப் பின் கிடைத்துள்ள சமூக அங்கீகாரம் நிறுவனங்களின் நிர்வாகிகளின் மனதில் மாற்றங்களை ஏற்படுத்துமானால, அவர்களுக்கான பணி வாய்ப்புகள் அதிகரிக்கும் நிலை வரும். அப்போது கடை கேட்பது, பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்றவை பெருமளவில் குறையும். இதனால் இவர்களின் பொருளாதார நிலை மேம்படும். பெற்றோரும் இவர்களை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கான பக்குவத்தை இத்தீர்ப்பு இப்போதில்லாவிட்டாலும் சிறிது தாமதமாகவேனும் கொண்டு வரும் சாத்தியமுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

”திருநங்கைகளுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதால், காவல்துறை மற்றும் அதிகாரிகளால் இந்திய குற்றவியல் சட்டத்தின் சமபாலின உறவு தொடர்பான 377ஆவது பிரிவு அவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. அவர்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து உரிய சலுகைகள், வேலை வாய்ப்பு, கல்வி உள்ளிட்டவற்றில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மருத்துவரீதியாக அவர்களை பாலின சோதனைக்கு உட்படுத்து வது சட்ட விரோதம். தன்பாலின சேர்க்கையாளர்கள், இருபாலின சேர்க்கையாளர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. மூன்றாம் பாலினத்தவரின் பிரச்சினைகளை கவனிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அவர்களது பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். அவற்றை மத்திய, மாநில அரசுகள் ஆறு மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்ட மாற்றுப்பாலினத்தவருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர் ஐந்து பேர். பானு, லிவிங் ஸ்மைல் வித்யா, செல்வம், செல்வி, சொப்னா ஆகியோர் தொடர்ந்துள்ள வழக்கு குறித்து உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் மாற்றுப்பாலினத்தவரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (ஓபிசி) சேர்த்து இட ஒதுக்கீடு வழங்கவேண்டுமென கூறியுள்ளது. ஆனால் இவர்கள் தங்களை விளிம்பு நிலையிலுள்ள ஒடுக்கப்பட்ட சமூகமாக பாவித்து 3 சதவிகித இட ஒதுக்கீடு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வழங்கப்படவேண்டுமென கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கின்மீது இரு முறை விசாரணை நடந்துமுடிந்திருக்கிறது. இனி கோடை விடுமுறை முடிந்துதான் அடுத்த விசாரணை தொடங்கும் “எங்களுக்கு ஒரு நல்ல தீர்ப்பை சட்டம் வழங்குமென்று நாங்கள் நம்புகிறோம்” என்கிறார் வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான பானு.

உலகெங்கும் திருநங்கைகள் குறித்த புரிதல் வெகுவாக முன்னேற்றமடைந்திருக்கும் சூழலில் பாலின சிறுபான்மையினரான இவர்களுடைய நெடுங்கால போராட்ட வரலாற்றுப் பாதையில் இத்தீர்ப்பு ஒரு முக்கியமான மைல்கல். ஒரு முற்போக்கான சமுதாயத்தை நிறுவும் பாதையில் இத்தீர்ப்பு சக்கரமாக சுழன்று முன்னேற்றும் என்பதில் மாற்றுப் பாலினத்தோர் மகிழ்ச்சியில் உல்ளனர். ஒப்பீட்டளவில் தமிழகத்தில் இதுகுறித்த விழிப்புணர்வு அதிகம் என்கிற வகையில் தமிழ்நாடு பிற பகுதிகளைவிட இத்தீர்ப்புக்க்குப் பின் கூடுதலாக அரவணைக்குமென எதிர்ப்பார்க்கின்றனர்.

(நன்றி: இந்தியா டுடே)

Tuesday, April 22, 2014

வெற்றி வாய்க்குமா?


தமிழகத்தில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடும் இந்தத் தேர்தலை அக்கட்சிகள் மிக முக்கியமானதாகக் கருதுகின்றன. கட்சியின் தொண்டர்களிடம் மிகப்பெரிய உற்சாகம் காணப்படுவதை தேர்தல் களத்தில் காண முடிகிறது. பல ஆண்டுகளாகவே இடதுசாரிகள் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கட்சிகளுடன் இணைந்தே தேர்தலை சந்தித்திருக்கின்றன. இந்த முறை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அலட்சியப் போக்கு அவர்களை தனித்து முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளியது. தொங்கு நாடாளுமன்றம் அல்லது மாநிலக் கட்சிகளின் பங்கு அதிகமாக உள்ள நாடாளுமன்றம் அமையும்பட்சத்தில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலும்கூட அதற்கான மதிப்பு என்பது தனி. 

சி.பி.ஐ(எம்) 9 தொகுதிகளிலும், சி.பி.ஐ. 9 தொகுதிகளிலும் என இடதுசாரிகள் 18 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறார்கள். வெற்றிவாய்ப்பு குறித்து கேட்கும்போது திண்டுக்கல் எம்.எல்.ஏ.வான பாலபாரதி “முன்பு ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து வாக்கு சேகரிக்கச் செல்லும்போது இருந்ததற்கும் இப்போது எங்களுக்குக் கிடைக்கும் வரவேற்புக்கும் வித்தியாசம் உள்ளது. மிகுந்த உற்சாகமாக வரவேற்கிறார்கள்.” என்கிறார்.

நாகப்பட்டினம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பழனிச்சாமி போட்டியிடுகிறார். இத்தொகுதியை கைப்பற்றுவது என்பது கம்யூனிஸ்ட்டுகளின் கௌரவப் பிரச்சனை. ஏனெனில் நாகை தொகுதிக்குட்பட்ட பல கிராமங்களில் செங்கொடி இயக்கம் வேரூன்றி விவசாயிகளுடன் இணைந்து வேலைசெய்த இடம். சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்) ஆகிய இரு கட்சிகளுமே முழுமூச்சுடன் நாகையை எப்படியாவது தி.மு.க.வின் ஏ.கே.எஸ். விஜயனிடமிருந்து கைப்பற்ற முனைகின்றனர். பொதுத் தொகுதியான விருதுநகரில் வைகோவை எதிர்த்துப் போட்டியிடுகிறார் தலித் வேட்பாளரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளருமான சாமுவேல்ராஜன். இத்தொகுதியில் புதிய தமிழகம், ஆதி தமிழர் பேரவை ஆகியவை தி.மு.க. கூட்டணியை ஆதரித்தாலும் பல கிராமங்களில் சாமுவேலுக்கு வாக்களிப்பதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை சுட்டிக்காட்டுகிறார்கள் இடதுசாரிகள். சாமுவேலின் களப்பணி அவருக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறார்கள். 

“எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எங்கள் தரப்பு அரசியலை, மோடி ஒரு மாயை என்பதை கட்சிப் பிரச்சாரத்தில் மிகத் திவிரமாக மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறோம். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து பேசினோம். கூட்டணிக் கட்சிகளை நம்ப வைத்து இறுதிநேரத்தில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு அவற்றை ஏமாற்றியதைக் குறித்து எடுத்துச் சொல்கிறோம். நாங்கள் வெல்வோம்” என்கிறார் சி;பி.ஐ. கட்சியின் மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு. 

வடசென்னையில் போட்டியிடும் உ.வாசுகியின் வெற்றிக்காக இடதுசாரிகள் கடுமையான தேர்தல் வேலைகளைச் செய்கின்றனர். மயிலாடுதுறை தொகுதியில் சி.பி.ஐ (எம்.எல்) கட்சி போட்டியிடுகிறது. எல்லோரும் வியப்படையும்வண்ணம், இரண்டு இடதுசாரி கட்சிகளும் அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்கிறார்கள்.இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் இடதுசாரிகள் மத்தியில் உற்சாகமும் உத்வேகமும் இருந்தாலும் இவையெல்லாம் வாக்குகளை சேகரித்துக் கொடுக்குமா என்பது கேள்விக்குறி. ஒரு பிரச்சனை என்றால் மக்கள் பெரிய கட்சிகளிடம் செல்வதில்லை.கருத்தியல்ரீதியில் செயல்படும் கட்சிகளையே நம்புகின்றனர். ஆனால் அந்த நம்பிக்கை, ஊழலற்ற நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை போன்ற தகுதிகளைவைத்துத்தான் நம் மக்கள் வாக்களிக்கிறார்களா என்பது மிகப்பெரிய கேள்வி. பணத்துக்கு மயங்கும் , புகழைக்கண்டு, செல்வாக்கைக்கண்டு பிரமித்து பயப்படும் , ஆய்ந்தறியத் தெரியாதவர்கள் என்று வாக்காளர்கள் மிகத் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். சமூகத்தை இப்படி வைத்துக்கொண்டு இடதுசாரிகளுக்கு வாக்களிக்க வைப்பதென்பது இயலாத காரியம். பலருக்கு இந்த உண்மை தெரிந்தே உள்ளது “தனித்து நின்றோம். இத்தனை வாக்குகளைப் பெற்றோம்” என்கிற சுய பரிசீலனைக்கு இவை நிச்சயம் உதவும். மற்றபடி வெற்றிபெறுவோம் என்றெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை” என்கிறார் இடதுசாரியான ஒரு களப்பணியாளர். ஆக, 2014 பொதுத்தேர்தல் தமிழக இடதுசாரிகளுக்கு பிற கட்சிகளுடனான பலப்பரீட்சை அல்ல், அசலான சுய பலத்தை அறியும் பரீட்சை.

(நன்றி : இந்தியா டுடே)

Wednesday, April 16, 2014

உத்தபுரத்தில் மீண்டும் பதற்றம்


உத்தபுரத்தில் சாதிய பிரச்சனைகள் வருவது புதிதல்ல. தீண்டாமைச் சுவர் எழுப்பி தலித் மக்களையும் ஆதிக்க சாதியினரையும் பிரித்த பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்த அதே ஊரில் உள்ள் முத்தாலம்மன் கோயிலை பூட்டி அந்த ஊர் சாதி இந்துக்களான பிள்ளைமார் சமூகத்தினர் சாவியை எடுத்துக்கொண்டு ஊரைவிட்டு வெளியேறிவிட பிரச்சனை பெரிதாகி இருக்கிறது. பல ஆண்டுகளாகவே தலித் மக்களுக்கு உத்தபுரம் முத்தாலம்மன் கோயிலுக்குள் நுழைய தடை இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆலய நுழைவு போராட்டம் நடத்தியபோது இரு சமூகத்துக்கிடையே பேச்சுவார்த்தை நடந்து ஓர் ஒப்பந்தம் போடப்பட்டதென்றும் அந்த ஒப்பந்தத்தை இப்போது சாதி இந்துக்கள் மீறிவிட்டதாக தலித் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உத்தபுரம் தலித் மக்கள் தரப்பில் இந்தியா டுடேயிடம் பேசிய சங்கரலிங்கம் “ஆர்.டி.ஓ., டி.எஸ்.பி முன்னிலையில் திருவிழாவை இரு சமூகத்தினரும் இணைந்து நடத்துவது என 2012ல் ஒப்பந்தம் போட்டோம். ஆனால் அவர்கள் தரப்பில் தன்னிச்சையாக முடிவெடுத்து ஏப்ரல் 8,9 தேதிகளில் நடத்துவதென்று முடிவு செய்தனர். அதை அறிந்த நாங்கள் எங்களை கோயிலில் நுழைந்து வழிபட அனுமதிக்கவேண்டும் என்றோம். இதற்கான பேச்சுவார்த்தை உத்தபுரம் காவல்நிலையத்தில் நடந்துகொண்டிருந்தபோதே ஆண்களும் பெண்களுமாக கும்பலாக வந்த அவர்கள் கற்களை வீசி எறிந்து தாக்கினர். வெளியே வந்தபோது என்னை சாதிப்பெயர் சொல்லித் திட்டி தாக்க வந்தனர். அன்றைக்கு மட்டும் போலீஸ் இல்லாவிட்டால் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கும்” என்கிறார்.

இந்தப் பிரச்சனையடுத்து கோயிலைப் பூட்டிவிட்டு சாவியையும் எடுத்துக்கொண்டு ஆண்களில் பெரும்பான்மையானோர் ஊரைவிட்டு வெளியேறிவிட்டனர். பெண்கள் மட்டுமே ஊரில் உள்ளனர். காவல் நிலையத்தில் நடந்த தாக்குதலில் தாசில்தாரின் வாகனமும், ஒரு பெண் கான்ஸ்டபிளும் தாக்கப்பட்டதாக டி.எஸ்.பி. சிவக்குமார் இந்தியா டுடேயிடம் தெரிவித்தார். ”திருவிழா காலத்தில் மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் தலித் மக்களை கோயிலுக்குள் அனுமதிக்கவேண்டும் என்கிறது அரசியல் அமைப்புச் சட்டம். ஆனால் திருவிழாவின்போதும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.இ.பி.கோ. பிரிவு 307ன் கீழும், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தற்காகவும் முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளது. அன்றைக்குப் பிரச்சனையில் ஈடுபட்டதில் பல பெண்களும் இருப்பதால் அவர்களை கைது செய்வதில் நடைமுறை சிக்கல்களும் உள்ளன.” என்கிறார் டி.எஸ்.பி.

பதற்றம் நிறைந்த சூழலில் தேர்தல் வேறு வருவதால், உத்தபுரம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.



Tuesday, April 08, 2014

மற்றவை

(புதுதில்லியில் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த நிடோ கொல்லப்பட்டபோது எழுதப்பட்ட கவிதை இது)

The other
-Easterine Kaire, Nagaland

என் கால்களால் நடந்து பார்
ஒரு வாரம், ஒரு நாள், ஒரு சில மணிகள்
அந்நொடிகள் நீண்டவையென உணர்வாய்.
தோலை எரிக்கும் முறைத்த பார்வைகளை
உணர்வாய் உன் பின்னால்.
கேலியும் புறம்பேச்சுகளும்
இருளாய் உன்மீது கவிழும்
துர்செய்தி தாங்கிவரும் பறவைபோல்.

நேற்று கொன்றனர்
ஓர் இளைஞனை
வித்தியாசமாய் தென்பட்டதால்.
அவன் என்போன்ற
தோற்றம் கொண்டிருந்தவன் அல்லவா?

என் கால்களால்
நடந்து பார்த்து உணர்
அவனையொத்த தோலுடன் இருப்பதும்
அவனையொத்த விழிகளுடன் பார்ப்பதும்
எப்படி உள்ளதென உணர்வாய்

என் கால்களால் நடந்து பார்
ஒரு வாரம், ஒரு நாள், ஒரு சில மணிகள்
உணர்..அனுபவித்துப் பார்
அந்த அச்சம், அந்த நடுக்கம்,
அந்தப் பீதி
இவ்வாறுதானிருக்கும் மற்றவையாக இருப்பது

(தமிழில் : கவின் மலர்)
(நன்றி : இந்தியா டுடே)

Friday, March 28, 2014

கூட்டு வன்புணர்வுக்கு ஆளான சிறுமியின் குடும்பம் - ஊரைவிட்டு வெளியேறும் அவலம்

அந்தச் சிறுமியை நினைவிருக்கிறதா? சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கு அருகேயுள்ள சென்றாம்பாளையத்தில் 5 பேரால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பத்து வயது சிறுமி மறைந்து வெகுநாட்கள் ஆகிவிடவில்லை. பிப்ரவரி 14 அன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அந்த 5ம் வகுப்புச் சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு வன்புணர்வு செய்ததில் அவள் இறந்துவிட அவளை மரத்தில் தொங்கவிட்டுச் சென்றது. விசாரணையில் 5 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

பெற்ற குழந்தையை கொடூரமான நிலையில் இழந்து நிற்கும் அவளுடைய குடும்பத்துக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. ஊரில் யாரும் இவர்களுடன் பேச்சுவார்த்தையில் இல்லை என்பதால் ஊரைவிட்டு வெளியேறி விட்டதாகக் கூறுகிறார் சிறுமியின் தந்தையும் தறித் தொழிலாளியுமான பரமசிவம். அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாத அக்குடும்பம் சொந்த ஊரில் வாழ வழியின்றி வேறொரு ஊரில் உள்ள உறவினர் வீட்டில் தற்போது தங்கியிருக்கிறது. சிறுமியுடன் கூடப் பிறந்த தங்கையும் அண்ணனும் உள்ளனர். இருவரும் சென்றாம்பாளையத்தில் உள்ள பள்ளியில் படிக்கின்றனர். “ஊரை விட்டு விலக்கி வைத்ததுபோல யாரும் எங்களுடன் பேசுவதில்லை. பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்குச் செல்ல பயப்படுகிறார்கள். அங்கே போனால் கூட படிப்பவர்களும் பேசுவதில்லையாம். சின்னவள் ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள். அதே பள்ளிக்கூடத்தில் தன்னுடன் படித்த அக்காவைக் குறித்து பள்ளியில் மற்றவர்கள் கேட்டுக்கொண்டே இருப்பதால் பள்ளிக்கூடத்துக்குப் போவதில்லை. பையனும் இதே காரணத்துக்காக போகவில்லை. இருவரும் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் ஊரைவிட்டு வெளியேறிவிட்டோம். பரீட்சை மட்டும் இந்த ஆண்டு எழுதவைத்து வேற பள்ளிக்கூடத்தில் சேர்க்கவேண்டும்” என்கிறார் தாய் பழனியம்மாள்.

சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்த 5 பேரும் அதே ஊரைச் சேர்ந்தவர்கள். ”காவல்துறைக்குப் போனது பலபேருக்குப் பிடிக்கவில்லை. கைது செய்யப்பட்டிருப்பவர்களின் குடும்பத்தினர் எங்களை ஏறெடுத்துப் பார்க்காமல் கட்ந்துபோய்விடுகிறார்கள். ஆனால் ஊருக்குள் பலர் சொந்த சாதிக்காரர்களை நாங்கள் காட்டிக்கொடுத்ததாக புகார் சொல்லுகின்றனர்.  இத்தனை பெரிய இழப்பை சந்தித்திருக்கிறோம். ஆனால் ஊரில் ஒருவர் என்னவென்று கேட்பதில்லை. துக்கத்துக்கு வெளியூரிலிருந்து வந்தவர்களெல்லாம் போய்விட்டபின்னால் அனாதை போல அந்த ஊரில் நான்கு பேரும் இருந்தோம். பேச்சுவார்த்தையே இல்லை. அங்கிருக்கமுடியவில்லை. அதனால் என் வேறொரு ஊரில் எங்கள் சின்ன மாமியர் வீட்டில் இருக்கிறோம்.” என்று கூறும் பரமசிவத்துக்கு மீண்டும் சென்றாம்பாளையம் செல்வது குறித்து யோசிக்கவே முடியவில்லை என்கிறார். தும்பல் என்ற அருகிலுள்ள கிராமத்திற்குச் செல்ல முடிவெடுத்திருப்பதாகக் கூறினார். சென்றாம்பாளையத்தில் வீட்டிலேயே தறி வைத்திருக்கிறார். “அதை தும்பலுக்கு எடுத்துவந்து பொருத்த ஒன்றரை லட்சம் செலவாகும். அவ்வளவு பணம் இல்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. கூலிவேலைக்குப் போயாவது குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும்” என்கிறார்.

பாலியல் வன்கொடுமைக்கு பிள்ளையை பறிகொடுத்துவிட்டு சொந்த ஊர் மக்களின் புறக்கணிப்பையும் தாங்கிக்கொள்ள முடியாமல் ஊரைவிட்டு வெளியேறும் அவல நிலைக்கு இன்று ஒரு குடும்பம் தள்ளப்பட்டிருக்கிறது. இவர்களுக்குத் ஆதரவாக உள்ள வழக்கறிஞர் ரத்தினம் “புதிய விசைத்தறி அமைக்க பரமசிவத்துக்கு வட்டியில்லாத கடன் வழங்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும். முதல்வர் அறிவித்த 3 லட்ச ரூபாயை உடனடியாக அக்குடும்பத்துக்கு வழங்கவேண்டும். முக்கியமாக அவரக்ளுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும். பிள்ளைகளின் படிப்பைத் தொடர அரசு உதவவேண்டும்” என்றார்.

(நன்றி : இந்தியா டுடே)

Wednesday, March 19, 2014

இலங்கை-போர்க்குற்ற வியாபாரம்

இலங்கையிலிருந்து வரும் ஒவ்வொரு போர்க்குற்ற விடியோவும் காண்போர் மனதை உலுக்குவதாக உள்ளன. அண்மையில் வெளியான போர்க்குற்றங்கள் குறித்த விடியோ பதிவுகளில் சேனல் 4 வெளியிட்ட விடியோவை குறித்து கேலம் மெக்கரே தான் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் கொடூரமான மனதை உலுக்கிய விடியோ இதுதான் என்கிறார். 

இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த காட்சிகளில் குண்டுபோடுதல், ஷெல்லடித்தல், அவற்றால் குழந்தைகள் பயந்து அலறி ஒடுதல் என பார்ப்பவரின் கண்களை ஈரமாக்கும் காட்சிகள் இல்லாத விடியோக்கள் இல்லை. அத்தனையும் ஈழ மக்களின் பாடுகளையும் துயரங்களையும் சொல்பவைதான். சில மாதங்களுக்கு முன் வெளியான பாலச்சந்திரனின் படக்காட்சி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு ரொட்டித்துண்டுடன் அமர்ந்திருக்கும் அச்சிறுவனின் முகத்துடன் ஒரு படம். அடுத்த படத்தில் அவன் 6 துப்பாக்கி குண்டுகள் நெஞ்சில் துளைக்க விழுந்துகிடக்கும் படம். இப்படம் தமிழ்நாட்டில் பெரும் கிளர்ச்சியை உண்டுபண்ணியது. தமிழ்நாட்டு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பின் தமிழ்நாடு அத்தகைய போராட்டத்தை அப்போதுதான் பார்த்தது. 

அதன்பின் வெளியானது இசைப்ரியா குறித்த் காணொளி. இசைப்ரியாவின் உயிரற்ற உடலுக்கு நேர்ந்த கதியை அப்படமே சொன்னது. மார்ச் 9 அன்று வெளியான இன்னொரு விடியோ காட்சியில் பெண் போராளி ஒருவர் இறந்துகிடக்க, அவரது பிறப்புறுப்பில் துப்பாக்கியைச் செலுத்தி மகிழ்ச்சியாக ஆரவாரக் கூச்சலிடும் சிங்கள ராணுவ வீரர் ஒருவரைப் பார்த்து அதிர்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும்? போரில் இறந்த உடல்களை என்ன செய்யவேண்டும், எப்படி கையாளவேண்டும் என்பதற்கு நடைமுறைகள் உள்ளன. ஆனால் இலங்கை ராணுவம் அவற்றில் எதையும் கடைபிடிக்கவில்லை என்பதை இக்காணொளி காட்சி தெளிவாக நிரூபிக்கிறது. ‘இறந்த பெண்ணின் உடலையே இப்படிச் செய்கிறார்கள் என்றால், உயிருடன் பிடிபடும் பெண்களை என்னவெல்லாம் செய்வார்கள் என்று யோசித்துப் பாருங்கள்” என்கிறார் ஐரோப்பாவில் வசிக்கும் ஈழத்தமிழர் ஒருவர். சேனல் 4 தொலைக்காட்சி இங்கிலாந்து நாட்டின் விதிகளுக்குட்பட்டு பல காட்சிகளை வெட்டி, சில காட்சிகளில் உடலை மறைத்தே ஒளிபரப்பியது. ஆனால் அதன் அசல் வீடியோ மின்னஞ்சலில் பரவியுள்ளது. 

இப்படி அவ்வபோது வெளியாகும் போர்க்குற்றங்கள் குறித்த விடியோக்கள் சேனல் 4 தொலைக்காட்சிக்கு வந்தடைகின்றன. இக்காட்சிகள் கொண்ட விடியோ கோப்பை பெறுவதற்கான முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவை புலம் பெயர் தமிழர்கள் பலரும் இம்முயற்சியில் ஆங்காங்கே ஈடுபடுகின்றனர். அவர்களில் சிலரிடம் பேசியபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

”எங்களுக்கு இது போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்கள் என்பதால் எப்பாடுபட்டாவது இவற்றை சேகரித்து சர்வதேச சமூகத்தின் முன்னால் காண்பித்து நியாயம் கேட்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆகவே கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில்தான் இவற்றை சேகரிக்கிறோம்” என்றார். இத்தகைய ஆவணங்கள் முழுதும் ராணுவ வீரர்களின் செல்போனில் படம்பிடிக்கப்பட்டவை. ”அவர்கள் அப்போது புலிகள் இயக்கத்தை வெல்வோமென்று கனவில் நினைத்துப் பார்க்காதவர்கள். ஆகவே அந்த வெற்றியை அவர்கள் வெறிக்கூச்சலிட்டுக் கொண்டாடினார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் அவர்களுடைய அத்தனை நடவடிக்கைகளும் அமைந்தன. கொண்டாட்டத்தை படம்பிடிக்கும் நோக்கில்தான் புகைப்படங்கள் எடுப்பது, செல்போன்களில் படம் பிடிப்பது என்று எல்லாவற்றையும் செய்தனர். பின்னாளில் செல்போனை சர்வீஸ் செய்ய சேவை மையங்களுக்குச் செல்கையில் அங்கே இந்தப் படங்கள் எடுக்கப்பட்டு வெளியே வந்தன. ஆனால் இப்போது அது ராணுவவீரர்களிடையே ஒரு வியாபாரமாகவே ஆகிவிட்டது” என்கிறார் இன்னொரு புலம்பெயர் தமிழர். 

ஒரு குறிப்பிட்ட விடியோ காட்சியை பேரம் பேசி புலம் பெயர் தமிழர்களிடம் விற்கிறார்கள் சிங்கள ராணுவ வீரர்கள். ஒரு சிலர் நடப்பவை வெளியே தெரியவேண்டுமென்ற நோக்கில் அவர்களாகவே முன்வந்தும் கொடுப்பதாக முன்னதாக கேலம் மெக்கரே தன் பேட்டியொன்றின் குறிப்பிட்டிருந்தார். அப்படியான வெகு சிலர் போக பலருக்கு இதில் கை நிறைய பணம் கிடைக்கிறது. இலங்கை அரசிடம் மாட்டிக்கொள்ளாமல், அடையாளத்தை மறைத்து இத்தகைய காட்சிகளை வழங்குவதில் அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து இருப்பதால் அதிக பணம் கேட்கின்றனர். “அங்குள்ள ராணுவ வீரர்கள் இப்படி பணம் பண்ணும் வேலைகளில் இறங்கியுள்ளனர். ஆனால் அது எங்களுக்குச் சாதகமாகவே உள்ளது. அதனால் போர்க்குற்றங்கள் குறித்த மேலும் பல சாட்சியங்கள் கிடைக்கின்றன. ஒரு காணொளி என்பது போர்க்குற்றமாகப் பார்க்கப்படும். இப்படியான பல காணொளிகள் கிடைக்கப்பெறுகின்றன. ஆகவே இது ஒரு இனப்படுகொலை என்று நிறுவதற்கு இவை பயன்படும். பல லட்சம் கொடுத்துத்தான் நாங்கள் இப்படங்களை பெறுகிறோம். இதில் கொடூரம் என்னவென்றால் இழைத்த குற்றத்துக்கு ஏற்றவாறு ராணுவ வீரர்கள் அந்தப் படத்துக்கான தொகையை நிர்ணயிப்பார்கள்” என்கிறார் இப்படியான ஒரு படத்தை பேரம் பேசி வாங்கி உலகுக்கு அளித்த ஈழத்தைச் சேர்ந்த புலம்பெயர்தமிழர் ஒருவர். 

சரி. இதற்கான தொகை எப்படி வருகிறது? “புலிகள் இயக்கம் இருந்தபோது புலம்பெயர் தமிழர்களிடம் இதற்கான தொகை என்று கேட்டால் உடனே கிடைத்துவிடும். ஆனால் இப்போது பணம் திரட்டுவது என்பது கடினமான ஒன்றாக மாறிவிட்டது. ஆகவே ஆர்வமுள்ளவர்கள், இலங்கை அரசை சர்வதேசத்தின் முன் குற்றவாளி என நிரூபிக்க முழு வேகத்துடன் செயல்படும் பல்வேறு இயக்கங்கள் தனிநபர்கள் என்று வேலை செய்து தனிநபர்களிடம் சென்று விஷயத்தைச் சொல்லி உதவி கேட்போம். ஆனால் இடையில் நாங்கள் பேசுவதில்லை. எவர் பணம் தர ஒப்புக்கொள்கிறாரோ அவரையே அந்தக் காணொளியை வைத்திருக்கும் ராணுவவீரரிடம் பேசவைத்து அதைப் பெறுவோம். இடையில் பணத்தை நாங்கள் தொடுவதில்லை. அதில் தெளிவாக இருக்கிறோம். ஏனெனில் இதில் நம்பகத்தன்மை மிகவும் முக்கியம். பணம் கொடுப்பவர் எங்களை நம்பவேண்டும். காணொளியைத் தருபவரும் நம்பவேண்டும். ஏனென்றால் தெரிந்தே மிகப்பெரும் ஆபத்தான செயலில் ஈடுபடுகிறார்கள். ஆகவே இலங்கை அரசிடம் மாட்டிக்கொள்ளாத வகையில் நம்பகத்தன்மை எங்கள் மீது வந்தபின்பே எங்களிடம் பேசுவார்கள். எனவே இது எங்களுக்கும் பெரிய சவாலான வேலை. எங்கள் நோக்கம் இலங்கை அரசை குற்றவாளிக்கூண்டில் ஏற்றவேண்டும். அதற்காக எந்த விலையைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத ஒரு புலம்பெயர் தமிழர்..

இலங்கை ராணுவ வீரர்களின்  இத்தகைய காணொளிகளை வெளியே கசியவிட்டது பணத்துக்காகவே என்பது உச்சகட்டக் கொடூரம். இத்தகைய பணத்தாசை ஏதோ ஒரு வகையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உதவுவதால் சந்தோஷப்படுவதா அல்லது செய்வதையும் செய்துவிட்டு இப்படி அதையே விற்கும் ராணுவ வீரர்களுக்காக கோபப்படுவதா என்று தெரியாத இரட்டை நிலையில்தான் இன்றைக்கு ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் இருக்கிறார்கள்.   

Tuesday, March 18, 2014

நிறுத்தப்பட்ட நாடகம் - தமிழகத்தில் இந்துத்துவ அபாயம்

மீண்டுமொரு முறை மதவாத இந்துத்துவ சக்திகள் ஒரு கலைப் படைப்பை தடுத்து நிறுத்தியிருக்கின்றன. ஓவியர் எம்.எஃப். ஹுசேன், குஜராத்தில் ஒவியர் சந்திரமோகனின் கண்காட்சி தாக்குதல் என்று கலைகள் மீதான இந்துத்துவாவின் தாக்குதல் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் நாட்டில் இது ஒன்றும் அதிசயமல்ல. ஆம். ஏவம் குழுவினரின் தயாரிப்பில் கார்த்திக் குமார் எழுதி நடித்துள்ள ’அலி ஜே’ என்கிற நாடகத்தை சென்னையில் நடத்த இந்துத்துவ சக்திகள் அனுமதிக்கவில்லை. 



இந்நாடகம் மும்பையில் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் காவல்துறை பாதுகாப்புடன் பெங்களூரில் நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள அல்லயன்ஸ் பிரான்சைஸ் அரங்கத்தில் நிகழ்த்தப்படுவதாக இருந்த ‘அலி ஜே’ நாடகம் பாகிஸ்தான் பிரிவினையின் பின்னணியில் உருவாக்கப்பட்ட நாடகம். அலி ஜே என்பது முகமது அலி ஜின்னாவைக் குறிக்கிறது. அவரும் ஒரு பாத்திரமாக வருகிறார்.  இந்நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் எழுதிய கடிதத்தில் இந்து முன்னணியும், இந்து ஜன ஜாக்ரிதி சமிதியும் இந்நாடகத்தை நடத்தக்கூடாது என்று புகாரளித்துள்ளதாக தெரிவித்த காவல்துறை ஆணையர் இந்நாடகத்தை நடத்தவேண்டாம் என்றும் அறிவுறுத்தியதை அடுத்து நாடகம் நடத்தப்படவில்லை.

பத்திரிகையாளரும் பரீக்‌ஷா நாடகக்குழுவின் இயக்குநருமான ஞாநி “நான் தொடுத்த வழக்கில் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி எந்த நாடகத்துக்கும் காவல்துறை அனுமதி பெறவேண்டிய தேவையில்லை. ஆகவே இவர்கள் நாடகத்தை நடத்தியிருக்கலாம்” என்கிறார். இது குறித்து இந்தியா டுடேயிடம் பேசிய ஏவம் குழுவின் இயக்குநர் சுனில் விஷ்ணு “சென்னை காவல்துறை வாய்மொழியாக உத்தரவு போடுவது அதிர்ச்சியாக இருக்கிறது. நாங்கள் மிகுந்த மனவருத்தத்திலும் வேதனையிலும் இருக்கிறோம். சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விசாரித்தபோது தமிழ்நாடு காவல்துறை சட்டம் பிரிவு 41 படி சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் எதையும் நிறுத்த காவல்துறைக்கு அதிகாரம் உண்டு என்கிறார்கள். சட்டம் ஒழுங்குக்கு பிரச்சனை வரும் என்று தெரிந்தால் பாதுகாப்பு கொடுப்பது தானே முறை? ஆனால் நாடகத்தை நிறுத்துவது படைப்புரிமைக்கு எதிரான செயல். இது இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் நாடகம். தேச ஒற்றுமையை வலியுறுத்தும் நாடகம். இதில் எந்த மதத்துக்கும் விரோதமாக எதுவும் இல்லை” என்கிறார்.

மோடி பிரதமராகிவிட்டதுபோன்றே இந்துத்துவ சக்திகளின் செயல்பாடுகள் அண்மைக்காலமாக அமைந்துள்ளன. அண்மையில் சன் டிவியில் 17 ஆண்டுகாலமாக ‘நேருக்கு நேர்’ என்கிற அரசியல் விமர்சன நிகழ்ச்சியை நடத்திவந்த ஊடகவியலாளர் வீரபாண்டியனின் நிகழ்ச்சி 7 வாரங்களாக ஒளிபரப்பப்படவில்லை. காரணம் பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகள் காவல்துறையில் அவர்மீது அளித்த புகார்தான். அரங்க நிகழ்ச்சி ஒன்றில் மோடி குறித்து விமர்சனம் செய்ததால் அவர்குறித்து காவல்துறையில் புகாரளித்தன இந்து அமைப்புகள். சன் டிவி நிர்வாகத்துக்கும் அழுத்தம் தந்து நிகழ்ச்சியை நிறுத்தவைத்தனர். அவருடைய நிகழ்ச்சி நிறுத்தப்பட்டவுடனேயே களமிறங்கிய மதச்சார்பற்றோர் மாமன்றம் இந்துத்துவ சக்திகளின் செயலை பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடும் செயல் என்று கண்டித்து அறிக்கை தயாரித்து அனைத்து கட்சித் தலைவர்களிடமும் கையெழுத்து பெற்று வெளியிட்டது. ஆனாலும் அவருடைய நிகழ்ச்சி இப்போதுவரை ஒளிபரப்பாகவில்லை. இதுகுறித்து மதச்சார்பற்றோர் மாமன்றத்தைச் சேர்ந்த தேவநேயன் “அவர் நடத்தும் நிகழ்ச்சியில் எத்தனையோ இந்துத்துவவாதிகள் கலந்துகொண்டிருக்கிறார்களே?” என்று கேட்கிறார். இப்படி தொடர்ந்து தமிழ்நாட்டில் மோடியை ஆதரிக்கும் இந்துத்துவ சக்திகளால் மதச்சார்பின்மைக்கும் கருத்துரிமைக்கும் சிக்கல் ஏற்படுகிறது. 

தமிழ்நாடு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டது என்கிறார் சுனில் கிருஷ்ணா. ஏனெனில் சென்னையைத் தொடர்ந்து பெங்களூரிலும் மார்ச் 12 அன்று நடத்துவதாக இருந்த காட்சியை சென்னை காவல்துறை பாணியில் பார்வையாளர்கள் எல்லோரும் வந்துவிட்ட நிலையில் பெங்களூர் காவல்துறை, நாடகம் மேடையேறக்கூடாது என்று சொல்லி முதல் நாள் நிகழ்ச்சியை நடத்தவிடவில்லை என்கிறார். இது நாடு முழுவதும் தொடரும் அபாயம் உள்ளதை சென்னையிலும் பெங்களூரிலும் நடந்துள்ள நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

(நன்றி :இந்தியா டுடே)




Friday, March 07, 2014

சென்னை மண்ணின் பாடகன்

எட்டாயிரம் கடனைப் பட்டு செத்துட்டான் - அவனுக்குப்
பத்தாயிரம் வெடியை வாங்கிவெடிக்கிறான்

குரலெடுத்துப் பாடுகிறார் கானா பாலா. வெகு சாதாரணமான வார்த்தைகள். ஆனால் கானா பாலா பாடும்போது காந்தம்போல் இழுக்கின்றன. ஜீன்ஸ் அணிந்துகொண்டு காதில் மூன்று கடுக்கண்களுடன் மைக் பிடித்து பாலா பாடத் தொடங்கினால் கூட்டம் சேர்ந்துவிடுகிறது. இன்றைக்கு தமிழ் சினிமாவில் அவர் பாடல் இல்லாத படமே இல்லை எனும் அளவுக்கு ஆகிவிட்டிருக்கிறார். பல படங்களின் விளம்பரத்துக்கு இவருடைய பாடல்கள்தான் பயன்படுகின்றன. 


“இசையமைப்பாளருக்காக படம் ஓடியிருக்கு தமிழ்நாட்டில். ஆனால் ஒரு பாடகருக்காக தியேட்டருக்குப் போய் மக்கள் பார்க்கறது கஷ்டம். ஒரு தியேட்டரில் நூறு பேர் என் பாட்டுக்காகப் போறாங்க. இதைப் பெரிய விஷயமா நினைக்கிறேன். வேற பாடகருக்கு இந்தப் பெருமை இல்லை. என்ன...நான் சொல்றது சரிதானே?”  புருவங்களை உயர்த்தியவாறு கேட்கிறார் பாலா.  ஒவ்வொரு வாக்கியத்துக்கு இடையிலும் ட்ரேட் மார்க் போல ‘என்ன..நான் சொல்றது சரிதானே?’ என்கிறார். வெகுளிச் சிரிப்பு, வாய் நிறைய பாட்டு, மனம் நிறைய சந்தோஷம், இதுதான் பாலா. ”படிக்கிறப்போ ஃபுட்பால், கேரம் ப்ளேயர். ஆனா அதுக்கெல்லாம் என்னை வீட்ல விடலை. படிப்புத்தான் முக்கியம். படின்னு சொல்லிட்டாங்க. விட்டிருந்தா கேரம்ல உலகப்புகழ் பெற்றிருப்பேன்” என்கிறார். 

‘அப்பா எம்.ஆர்.எஃப்ல ஃபையர் மேன். அம்மா வீட்டோட இருந்தாங்க. பொறந்தது இங்கதான். புளியந்தோப்பு-கன்னிகாபுரம். இதைவிட்டு கோடி ரூவா குடுத்தாலும் வரமாட்டேன். சூட்டிங், ரெக்கார்டிங் எல்லாம் இங்கிருந்துதான். அரைமணி நேரத்துல போயிடலாம்” எனும் பாலா வாங்கிய காரை விற்றுவிட்டார். இருசக்கர வாகனம் அல்லது பேருந்தில் பயணம் செய்கிறார். “இப்போ பலபேர் அடையாளம் கண்டு பேசுறாங்க. அப்போ சந்தோஷமாத்தான் இருக்கு. மக்கள்ட்ட பேசுறதைவிட வேறென்ன சந்தோசம். சும்மா கார் கதவை சாத்திக்கிட்டு உள்ள உட்கார்ந்து போறதுல என்ன இருக்கு?” என்கிறார்.

சென்னை மாநகரத்தின் புறக்கணிக்கப்பட்ட பகுதியான வடசென்னைதான் கானா அதிகம் புழங்கும் இடம். சிறுவயதிலிருந்தே கானா பாடுவதில், பாட்டு கட்டுவதில் தனித்திறமையுடன் இருந்த கானா பாலா என்கிற பாலமுருகன் ஒரு வழக்கறிஞர். சென்னை ப்ரெஸிடென்சியின் பி.எஸ்சி. தாவரவியல் முடித்தபின் மதுரை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று நீதித்துறையில் இருந்தாலும், தன் தனி அடையாளமான கானாவை விடவில்லை பாலா. ஏராளமான பக்திப்பாடல் குறுந்தகடுகளை வெளியிட்டிருக்கும் பாலா 22 ஆண்டுகளாக வேளாங்கண்ணிக்கு நடைபயணம் செல்கிறார். “மாதா பாடல்களில் என்னளவுக்கு யாரும் பாடியிருக்கமாட்டாங்க. இஸ்லாமிய பாட்டு, இந்துப் பாட்டு எந்தப் பாட்டு பாடச் சொன்னாலும் பாடத் தயாரா இருக்கேன்” என்கிறார். 

’அட்டக்கத்தி’ படத்தில் பாலா பாடிய ‘நடுக்கடலுல’ மற்றும் ‘ஆடிப் போனா ஆவணி’ ஆகிய பாடல்கள்தான் பாலாவை மக்களுக்கு அடையாளம் காட்டின. அதன்பின் வரிசையாய் படங்கள். வெற்றிமாறன் தயாரித்த ‘உதயம் என்.எச்’ படத்தில் ‘ஓரக்கண்ணால’ பாடலை அவரே எழுதி பாடி நடிக்கவும் செய்தார். ’சூது கவ்வும்’ படத்தின் ‘காசு பணம் துட்டு’ ஒலிக்காத வீடுகளே இல்லை எனலாம். பாலா புகழின் உச்சியில் இருக்கிறார். ஆனாலும் எளிமையாய் இருக்கிறார். “சினிமாவில் நான் ஜெயிப்பேன்னு பல வருஷத்துக்கு முன்னாலயே தெரியும். டிவில பாட்டு பாடி அது மூலமாக வரலை நான். எந்தப் பின்னணியும் கிடையாது. கேள்விஞானத்தில் சொந்தத் திறமையால்தான் பாடுறேன். திறமையாளன் ஜெயிச்சுத்தானே ஆகணும்? எனக்கு.இன்னும் எல்லா இசையமைப்பாளர்கிட்டேயும் பாடணும். அட்டக்கத்தி மூலம் ரஞ்சித் ஒரு ப்ரேக் கொடுத்தார். எழுதும் திறமையை அங்கீகரிச்சு ஓரக்கண்ணால பாட்டு எழுத வாய்ப்பு தந்தது வெற்றிமாறன் சார்” என்று இருவரையும் நினைவுகூர்கிறார்.

அட்டக்கத்தி இயக்குநர் பா.ரஞ்சித் “அவர் தலித் செயல்பாடுகளில் ஈடுபடுபவர் என்கிற முறையில்தான் முதலில் அறிமுகமானார். பூவைமூர்த்தியின் கொள்கை விளக்கப் பாடல்கள் பாடுவார். எங்க ஏரியாவில் அவரைத் தெரியாதவர்களே கிடையாது.. எங்க ஊர் கோயில் திருவிழாவுக்குப் பாட வந்தபோது முதலில் அவர் பாடி கேட்டேன் . நலல் திறமை. கானா மட்டுமில்லை. கிளாசிக்கல் பாடலையும் ரிதம் பிடிச்சுப் பாடக்கூடிய அசாத்திய தனித்திறமை உண்டு. எங்க அண்ணனும் வழக்கறிஞர். அவரும் வழக்கறிஞர். ரெண்டுபேரும் நல்ல நண்பர்கள். அந்த அடிப்படையில் அவரைப் பாடக் கூப்பிட்டேன். ரொம்பப் பிடிச்சிருச்சி. அப்படித்தான் அந்த ரெண்டு பாட்டும் படத்தில் வந்தது. என் அடுத்த படத்திலும் பாலா அண்ணனுக்காகவே ஒரு ஜாலியான பாட்டும் ஒரு சாவு கானாவும் வச்சிருக்கேன்” என்கிறார். 

அதென்ன சாவு கானா? மரண வீட்டில் இரவுமுழுவதும் பாடும் கானா அது. “நான் கல்யாணத்திலும் பாடுவேன். சாவு வீட்டிலும் பாடுவேன். கல்யாணத்தைவிட சாவுவீட்டுக்குப் பாடப்போனால் பெரிய போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள் எனக்கு” எனும் பாலா இப்போதும் துக்க வீடுகளுக்கு கானா பாட செல்கிறார். 

’பீட்சா’ படத்தின் ‘நினைக்குதே’ ரிங் டோன் பாடல் இவர் பாடியதுதான் என்பதை பலர் நம்பவே இல்லை என்கிறார். பாலாவுக்கு மிகவும் பிடித்த கலைஞர் சந்திரபாபுதான். “டி.எம்.எஸ்ஸும் பிடிக்கும். சிவாஜி, எம்.ஜி.ஆர். ரெண்டுபேருக்கும் அவர் பாடுவது ஆச்சரியமா இருக்கும். ஆனால் சந்திரபாபுசார்தான் நமக்கு ஆசான். என்ன மாதிரி கலைஞன்! சில பாட்டுல அவர் ஸ்டைலை ஃபாலோ பண்ணியிருக்கேன். இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்; முகிலின் கண்ணீர் மழை எனச் சொல்வார்; இயற்கை அழுதால் உலகம் செழிக்கும் மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்” சன்னமாக உருக்கும் குரலில் பாடிக் காட்டுகிறார். திடீரென்று உற்சாகமாகி ‘குங்குமப்பூவே..குஞ்சுபுறாவே’ பாடுகிறார். “சென்னை மாதிரியான ஊர்ல வாணிபம் செய்ய கடல்வழியா பலர் வந்துபோனாங்க. கானாவை கவனிச்சா அதில் பாகிஸ்தான் கவாலியும் இலங்கையின் பைலாவும் கலந்த ரிதம் இருக்கும். வெள்ளைக்காரன் ஆட்சியிலதான் கானா உருவாக ஆரம்பிச்சது. அதனால ஆங்கில வார்த்தைகள் அதிகம் இருக்கும். சினிமா பாட்டு மெட்டிலும் கானா பாடுவதுண்டு. இப்போ சமூகம், அறிவுரை, நையாண்டி, அப்புறம் பெண்கள் பத்திப் பாடுறது இதுதான் கானா. பாடுறவங்க எல்லாம் ஆண்கள்தானே. அவங்களை அவங்களே தாழ்த்திப்பாங்களா? அதான் பொண்ணுங்களைப் பத்தியே இருக்கு எல்லா பாட்டும். வடசென்னையில் என்னையும் சேர்த்து 200 பேராவது கானா பாடகர்கள் இருப்பாங்க. கானாவில் அதிகமா உள்ளது ரெண்டு வகைதான். எதிராளியை கிண்டல் பண்ணுவது, பெண்களைப் பாடுவது” என்று கானாவின் வரலாற்றைச் சொல்கிறார் பாலா. 

இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமார் கானா பாலாவுடன் பணியாற்றுவது மிகவும் விருப்பமானது என்கிறார். “அவருக்கு ஏராளமான ரசிகர்கள். தன் வேலையை அவர் ரசித்து செய்கிறார். உச்சபட்ச திறமை இருக்கிறது. பாடுவது மட்டுமல்லாமல் பாட்டெழுதுவதிலும் மெட்டமைப்பதிலும் அவருக்கு இருக்கும் திறன் கண்டு வியக்கிறேன். தன் இதயத்தின் அடிஆழத்திலிருந்து அவருடைய கலை வெளிப்பாடு உள்ளது. இத்தனை இருந்தும் தலைக்கனம் இல்லாத மனிதர். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள். மிகச் சிறந்த நடிகராக திரையில் ஒளிர்வார்” என்று சிலாகிக்கிறார். அதற்கேற்றாற்போல் பாலாவும் இப்போது ஒரு மாதமாக நடனம் கற்றுக்கொண்டிருக்கிறார்.

ஹால் அலமாரி முழுதும் சட்டப் புத்தகங்கள், வாங்கிய விருதுகளும் கோப்பைகளுமாக இருக்கின்றன. அலமாரியில் நீலநிறத்தில் அம்பேத்கரின் நூல்தொகுதிகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. “அம்பேத்கரை வாசிக்கிறேன். எனக்கு பாட்டு, சினிமா எல்லாமே ரெண்டாம்பட்சம்தான். சமுதாயப் பணிதான் முதலில். இதை அம்பேத்கரிடம் கத்துக்கிட்டேன். ஒரு ஜவுளிக்கடை திறப்புக்குக் கூப்பிட்டால் எனக்கு பத்தாயிரம் தருவாங்க. நான் அந்தப் பத்தாயிரத்துக்கு பதிலாக எங்க ஊர்க்காரங்க பத்து பேருக்கு ஆயிரம் ரூபாய்க்கு இந்த வருஷம் முழுசும் எப்பவேணும்னாலும் துணி எடுத்துக்க அனுமதி கேட்பேன்.” என்று கூறும் பாலா உள்ளாட்சித் தேர்தலில் நின்றிருக்கிறார். “அவர் தேர்தலில் ஜெயிக்காததுகூட நல்லதுக்குத்தான். அதனால்தான் பாடகரா சினிமாவில் வரமுடிஞ்சது” என்கிறார் பாலாவின் மனைவி நதியா. ”தி.மு.க., அ.தி.மு.க. ரெண்டும் ஆளுங்கட்சியாக இருந்தபோதும் தோற்றிருக்கிறேன். அப்படின்னா நான் மக்கள்கூட இருக்கேன்னு அர்த்தம்” என்னும் பாலா யாருக்கேனும் கல்வி கற்க பணம் தேவைப்படுகிறது என்றால் தயங்காமல் உதவுகிறார். ’எஜுகேஷன் முக்கியம். அதான்” எனும் பாலா ஒவ்வோர் ஆண்டும் அச்சடித்து பகுதி மக்களுக்கு வழங்கும் நாட்காட்டியில் பாலா தன் இரு குழந்தைகளுடன் நிற்கும் படம். மேலே அம்பேத்கரின் “கற்பி, புரட்சிசெய், ஒன்றுசேர்’ வாக்கியம் காணப்படுகிறது. பாலாவின் இன்னொரு முகம் வித்தியாசமானது. பாலாவுக்கு அபிநயா, அபிமன்யூ என்று இரு குழந்தைகள். யூ.கே.ஜி. படிக்கும் அபிநயா இப்போதே நடனம் பாட்டு என்று திறமையாய் இருப்பதில் பெருமைப்படுகிறார். “பாட்டுல ரெண்டுபேரும் என்னை மிஞ்சிடுவாங்க” என்கிறார்.

பிளாட்டுல இருந்தாலும் பிளாட்பாரத்தில் படுத்தாலும்
லாஸ்டுல சேரும் இடம் ஆறு அடிடா
ரோட்டுல கண்ணைமூடி ஊர்வலம்தான் போகும்போது
உனக்கு யாருக்கும் கேட்காது ஒத்தை அடிடா

இன்னொரு பாட்டுக்கான கோரிக்கையில் பாட்டு வகையை மாற்றுகிறார்.

ஃபாலோ பண்ணிப் போவாதே நீ நில்லு
வேற பொண்ணைப் பார்த்து பரிசம் போடச் சொல்லு

(நன்றி: இந்தியா டுடே)

Monday, March 03, 2014

கேள்விக்குறியாகும் பெண்கள் உரிமை

சிறுசேரியில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்திலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் உள்ளது அந்த புதர்மண்டிய இடம். அந்தப் புதரின் மறைவில் 9 நாட்கள் கழித்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உமா மகேஸ்வரியின் உடலை சில விலங்குகள் சிதைத்த அடையாளம் இருந்ததாய் காவல்துறை கூறுகிறது. அந்த விலங்குகளுக்கு முன்பாகவே சில மனிதர்கள் உமா மகேஸ்வரியின்மீது பாலியல் வன்முறை செய்து கத்தியால் குத்திக் கொன்றிருக்கிறார்கள். அந்தப் புதர் மண்டிய இடத்தில் பகலிலேயே நடப்பது எதுவும் தெரியாத அளவு அடர்த்தியுடன் உள்ளது. இரவு பத்து மணிக்கு என்றால் யாருக்கும் எதுவும் தெரிய சாத்தியமில்லை. தெரு விளக்குகள் ஏதுமற்ற அச்சாலையில் அந்தி மங்கியபின் பெண்கள் யாரும் செல்ல மாட்டோம் என்கிறார் சிப்காட் வளாகத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர்.

உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட செய்தி வெளியானதும் தகவல் தொழில்நுட்பத் துறையினர் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. சமூக ஊடகங்கள் எல்லோரும் தங்கள் கவலையை பகிர்ந்துகொண்டனர். நாளிதழ்கள் செய்திகள் வெளியிட்டன. முன்னெப்போதுமில்லாத வகையில் ஆளில்லாத விமானம் மூலம் சான்றுகளை சேகரித்தது சிபிசிஐடி. ஆங்காங்கே எல்லோரும் இதுகுறித்தே பேசினார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த 500 பேர் சிப்காட் வாயிலில் கூடி பதாகைகளை ஏந்தியபடி, கோரிக்கை தட்டிகளைப் பிடித்தபடி முழக்கமிட்டனர். கொலைக்கு கண்டனம் தெரிவித்தும் பெண்களின் பாதுகாப்புக்கான கோரிக்கைகளை முன்னெடுக்கக் கோரியும் நடந்த இந்த ஆர்ப்பட்டத்தை சேவ் தமிழ்ஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இரண்டு நாட்கள் விசாரணைக்குப் பின் குற்றவாளிகளைப் பிடித்துவிட்டதாகவும் காவல்துறை அறிவித்திருக்கிறது.

சேவ் தமிழ்ஸ் அமைப்பைச் சேர்ந்தவரும் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவருமான பரிமளாவிடம் பேசியபோது “ஐ.டி. துறையில் பல ஷிப்டுகளாக பணி செய்ய வேண்டியிருக்கும். உதாரணமாக அமெரிக்க நிறுவனங்களுக்கு பணியாற்றுகையில் அவர்களில் நேரப்படி இரவு பத்து மணி முதல் காலை 6 மணி வரை பணியாற்றவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. நம் ஊரில் இரவில் வெளியில் வரும் பெண்கள் குறித்த கண்ணோட்டம் மிகவும் பிற்போக்கானதாக இருக்கையில் இந்தத் துறைக்கு வரும் பெண்கள் முதலில் இத்துறைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக்கொள்ள சிரமப்படுகிறார்கள். அதன்பின் அவர்கள் இரவுநேரப்பணிக்கும் ’டீம் அவுட்’ போன்றவற்றுக்கும் தங்களை பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்” என்கிறார். இரவு அவர்களைப் பொறுத்தவரை மிகவும் பழகியதாக மாறிவிடுகிறது. ஆனால் இச்சமூகத்துக்கு இரவில் வெளியேவரும் பெண்கள் குறித்த பார்வை மாறவில்லை. ஆகவே ஐ.டி.துறை பெண்கள் பணி முடிந்து வீட்டுக்குச் செல்ல முறையான வாகன வசதிகளை ஏற்பாடு செய்துதரவேண்டியது நிறுவனத்தின் கடமையாகிறது. இந்தச் சம்பவத்துக்குப் பின் டி.சி.எஸ். நிறுவனம் பெண் ஊழியர்கள் காலை எட்டரை மணீயிலிருந்து மாலை ஐந்தரை மணிக்குள் மட்டுமே வேலை செய்யவேண்டும் என்றும் ஐந்தரை மணிக்குப்பின் வேலை செய்யும் பெண்கள் மறுநாள் அதற்கான காரணத்தை எழுத்துபூர்வமாக தரவேண்டுமென்றும் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு வகையில் பெண்களை உற்பத்தியிலிருந்தும் உழைப்பிலிருந்தும் வெளியே வைக்கும் நடவடிக்கை. எனலாம். பத்து மணிக்கு மேல் வெளியே செல்லும் பெண்களுக்கு முறையான வாகன வசதி செய்வதுதான் சரியானதாக இருக்க முடியும்.

வழக்கறிஞர் கீதா ராமசேஷன் “தொழிலாளர் சட்டத்தின்படி ஒரு விபத்து நடந்தால் அது வேலை நேரத்தில் பணியிடத்தில் நடந்தால் மட்டுமல்ல, வேலைக்கு வரும்போதோ வேலை விட்டுப்போகும்போதோ நடந்தால் கூட அதற்கு பணியாற்றும் நிறுவனம் பொறுப்பேற்கவேண்டும். அதன்படி பார்த்தால் உமா வேலைவிட்டு வரும்போது கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுவும் பணிநேரம் என்றுதான் கருதவேண்டும். ஆனால் ஒரு கொலைக்கு நிறுவனத்தை மட்டும் பொறுப்பாக்க முடியாது. கொலையாளிகள், இச்சமூகம், தெருவிளக்குகள் போடாத நிர்வாகம் என்று எல்லோருக்கும் கூட்டுப்பொறுப்புள்ளது அந்தப் பகுதி ஆண்களுக்கும் பாதுகாப்பில்லாத பகுதியே. சில காலம் முன்பு ஒரு மென்பொருள் ஊழியரை கடத்திக்கொண்டு போய் அவருடைய உடலை தடா அருகே கண்டெடுத்தார்கள். இப்படி யாருக்கும் பாதுகாப்பில்லாத இடமாகவே அத்தகைய பகுதிகள் உள்ளன.” என்கிறார்.

பலருக்கும் பெண்களுக்கு மிகவும்  பாதுகாப்பான துறை என்று நம்பிய ஐ.டி. துறையில் உமாவுக்கு நேர்ந்ததைப் பார்க்கையில் இன்னும் சமூகத்தின் கீழ் அடுக்குகளில் பணியாற்றுபவர்களின் பாதுகாப்பு எப்படியிருக்கும் என்கிற அச்சம் வருவதாக மென்பொருள் துறையில் பணியாற்றும் பெண் ஒருவர் கூறுகிறார். சிப்காட் வளாகத்தில் இரவு நேரத்தில் பேருந்துகள் அதிகம் வருவதில்லை. இரவு 6 மணிக்கு மேல் ஷேர் ஆட்டோக்கள் உள்ளேவரக்கூடாது என்று எழுதப்படாத விதி உள்ளது. ஆகவே அவர்கள் வருவதில்லை. 6 மணிக்குமேல் அங்கு ஆட்டோரிக்‌ஷாக்களும் பேருந்துகளும் மட்டுமே உண்டு. பொது போக்குவரத்தை அதிகப்படுத்துவது இத்தகைய குற்றங்களை தடுக்க இன்னொரு வழியாக இருக்கும். பல்லாயிரக்கணக்கானோர் வந்துபோகும் பகுதியில் கூப்பிடுதூரத்தில் ஒரு காவல்நிலையம் அமைக்கலாம் என்று சிப்காட் வளாகத்தில் பணிபுரியும் பெண்கள் யோசனை கூறுகிறார்கள். சென்னை மாநகரத்தில் விடாமல் ரோந்துவரும் காவல்துறையினர் போல இத்தகைய புறநகர் பகுதிகளிலும் இரவுநேர ரோந்துப் பணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டால் குற்றங்களை தடுக்கலாம். ”அலுவலகத்துக்கு அருகிலேயே இருப்பதால் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் குடிவந்துவிடுகின்றனர். சில பெண்கள் விடுதிகளும் உருவாகிவிடுகின்றன. ஆனால் மிகக் குறைந்த தொலைவுக்கு வாகன வசதி கேட்கவேண்டாம் என்று சில பெண்கள் நடந்தோ அல்லது இருசக்கரவாகனத்திலோ கும்மிருட்டில் செல்லும் நிலை இருக்கிறது. அப்போது ஆண்கள் அவர்களை கேலிபேசுவதும் ஈவ் டீஸிங் செய்வதும் அதிகமாக இருப்பதாக பெண்கள் புகார் தெரிவித்தனர். தெருவிளக்குகளை முறையாக போடுவது முதல்படியாக இருக்கும்” என்கிறார் பரிமளா.

உமாமகேஸ்வரியின் தந்தை பாலசுப்பிரமணியிடம் பேசியபோது, “பெற்ற பெண்ணை இழந்து நிற்கிறோம். குற்றவாளிகளை விரைந்துபிடித்த காவல்துறைக்கு நன்றி. இதைத் தவிர வேறு என்ன பேசுவது என்று தெரியவில்லை” என்றார் வேதனையுடன். இச்சம்பவத்தைக் காரணமாகக் காட்டி பெண்களின் உரிமைகளை முடக்கிவிடும் அபாயமும் இன்றைக்கு எழுந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறார் எழுத்தாளர் வ.கீதா. “பெண்களின் பாதுகாப்புக்கான  எந்த நடவடிக்கையும் அவளுடைய வேலை செய்யும் உரிமையையும், அவளது சுதந்திரத்தையும், எங்கும் செல்லும் உரிமையையும் மறுத்து விடக்கூடாது.  அவர்கள் வெளியிடங்களுக்குச் செல்ல அதிக கட்டுப்பாடுகள் விதிப்பதும், அவர்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள நிர்பந்திப்பதும் கூடாது. இதற்கு பதிலாக பொறுப்புணர்வுடன் கூடிய, அரசியல் சட்டம் அனுமதித்துள்ள பெண்களுக்கும், ஆண்களுக்குமான பாதுகாப்பே இப்போதைய தேவை” என்கிறார்..தில்லி நிர்பயாவின் கொலைக்குப்பின் எப்படி பெண்கள் இரவு நேரத்தில் வெளியே செல்வது குறித்து சர்ச்சை எழுந்ததோ அதுபோலவே இப்போதும் எழுந்துள்ளது. இரவு நேரத்தில் ஒரு பெண் வெளியே போவது என்பது அசட்டுத்துணிச்சல் இல்லை. உமா மகேஸ்வரிக்கு படித்துமுடித்தவுடன் வீட்டைவிட்டு தொலைவில் வந்து ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி சம்பாதித்து சொந்தக்காலில் நிற்கும் துணிவு இருந்தது. இரவு பத்து மணிக்கு மேல் தைரியமாக ஆளரவற்ற இருட்டான சாலையில் நடந்துசெல்லும் தைரியம் இருந்தது. இந்தத் துணிச்சலின் பின்னால் இருந்தது நமக்கு ஒன்றும் ஆகிவிடாது என்கிற இச்சமூகத்தின் மீதான நம்பிக்கை. அந்த நம்பிக்கையை சிதைத்திருக்கிறது இச்சமூகம் என்பது வேதனை தரும் உண்மை. 

(நன்றி: இந்தியா டுடே)